Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம்

அத்தியாயம் 5

தன்னை துன்புறுத்துபவனை கையாள, அன்னையின் அறிவுரைகளை ஆர்வத்தோடு கேட்க ஆயத்தமானாள் விஷாலினி. “விஷாலினி, இது உனக்கான அறிவுரை இல்ல. என் வாழ்க்கையில நடந்த உனக்கு தெரியாத சில சம்பவங்களைத்தான் சொல்லப்போறேன்” என்றார் மேகலை.

அன்னை ஒருவரை காதலித்ததாகவும், அவர் அன்னையிடம் பொய் சொல்லி பழகியதாகவும், அன்னை காதலித்தவரின் சுயரூபம் தெரிந்த பின்னே அன்னை அவரை விட்டு விலகிவிட்டதாகவும் தனது பாட்டி சொல்லி கேட்டிருக்கிறாள்.

இவையனைத்தும் தனக்கும் தெரியும் என அன்னைக்கு தெரிந்த போதும் வேற எதோ புது விசயம் சொல்ல விழைகிறார் என சரியென்பதாய் தலையசைத்தாள் விஷாலினி.



Advertisement

“நானும் உன் அப்பாவும் ஒரு வருசமா காதலிச்சோம். அவருக்கு அம்மா இல்லைனும், சித்தி வீட்டுல இருக்கிறதாவும் சொன்னார். சித்திக்கும் அவங்க அப்பாக்கும் பிறந்த இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. அவங்களுக்கு கல்யாணம் பண்ணாம நான் பண்ண முடியாது.

பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல, எனக்கும் அவங்க வழி சொந்தத்துல பொண்ணு பார்த்து வச்சிருக்காங்க. சித்தியை மீறி அப்பா ஒன்னும் செய்ய மாட்டார். கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சொன்னா அவங்க வீட்டுல ஏத்துப்பாங்க, ஒருவேளை ஏத்துக்கலனாலும் அவர் வீட்டை விட்டு என்னோட வந்திடறதாவும் வாக்கு கொடுத்தார்.

அப்போ எங்க வீட்டுல வந்து பேசுங்கனு சொன்னேன். பெரியவங்க வந்து பேசாம யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. எங்க வீட்டுல கண்டிப்பா வந்து பேசமாட்டாங்க. நம்ம கல்யாணமும் வாழ்க்கையும் இப்படித்தான் ஆரம்பிச்சாகனும், இல்லைனா நாம பிரியறதை தவிர வேற வழியில்லைனு சொன்னார்.

Advertisement

என் அப்பாம்மா, அண்ணனுங்களுக்கு தெரியாம கல்யாணம் செய்ய பயமாவும், துரோகம் பண்ற மாதிரியும் இருக்குனு சொன்னேன். காதலிச்சா இதெல்லாம் கடந்துதான் வந்தாகனும். அப்படிப் பார்த்தா நானும்தான என் அப்பாக்கு துரோகம் பண்ணப்போறேனு சொன்னார்.

Advertisement

எனக்கு மனசு இறங்கிடுச்சு. கோவில்ல கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னார். இல்ல எங்க வீட்டுல ஈஸியா பிரிச்சிடுவாங்க, ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு நான் சொன்னேன். அவரும் சம்மதிச்சார்.

ஒரு வாரம் கழிச்சு நாளைக்கு கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னார். கல்யாணத்துக்கப்புறம் எங்க இருக்கப்போறோம்னு கேட்டேன். வாடகைக்கு வீடெடுத்துட்டதா சொன்னார்.

அடுத்த நாள் காலைல ஒரு இடத்துக்கு வர சொன்னார். நானும் போனேன். என்ன… இது ரிஜிஸ்தர் ஆபீஸ் மாதிரி தெரியலையேனு சொன்னேன். இது ரிஜிதர் ஆபீஸ் இல்லதான். ஆனா இவங்க அங்க வேலை பார்க்குறவங்க. ஆபீஸ்ல வச்சி செய்தா எப்படியாவது விசயம் வெளில போய்டும். கல்யாணம் முடிஞ்சிட்டா யாரும் ஒன்னும் பண்ண முடியாது, அதுக்காகத்தான் இப்படி ஏற்பாடு செய்தேனு சொன்னார்.

Advertisement

அவர் சொன்னதை அப்படியே நம்பினேன். மொத்தமா ஒரு ஏழெட்டு பேர் முன்னிலையில கையெழுத்து போட்டு, மாலை மாத்தி கல்யாணம் செய்துக்கிட்டோம். அன்னைக்கே அவர் பார்த்திருக்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்னார். இல்ல இன்னொரு நாள் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு நான் எங்க வீட்டுக்கு போய்ட்டேன்.

கல்யாணம் ஆனதுக்கான அறிகுறியா தாலி, மோதிரம், செயின் இப்படி ஏதும் என்கிட்ட இல்ல. அதனால வீட்டுல யாருக்கும் எந்த சந்தேகமும் வரல. இரண்டு நாள் கழிச்சு எங்கையாவது வெளில போவோம்னு சொன்னார்.

வெளில போனா வீட்டுல என்ன சொல்றதுனு பயம் எனக்கு. முடியாதுனு சொன்னேன். அப்பா, சித்தி, இரண்டு தங்கைனு இத்தனை பேர் இருந்தாலும் நான் அநாதை மாதிரிதான். மனசே சரியில்ல, சாயங்காலத்துக்குள்ள வீட்டுக்கு வந்திடலாம்னு கெஞ்சினார். முதல் முறையா காலேஜ் கட்டடிச்சுட்டு அவரோட வெளில போனேன்.

தியேட்டர் போனோம், என்னை தொட்டு பேசினார். முத்தம் கொடுத்தார். வீட்டுக்கு வந்த பின்ன அப்பாம்மா முகத்துல முழிக்க குற்றவுணர்வா இருந்துச்சு. என்ன நடந்தாலும் பரவாயில்லைனு கல்யாணம் ஆன விசயத்தை வீட்டுல சொல்லிட்டேன்.

ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க. ஆகாம என்ன செய்வாங்க? பதினெட்டு பொறந்து இரண்டு மாசம்தான் ஆகியிருந்தது. இவ்வளோ பெரிய துரோகம் பண்ணிட்டியேனு அம்மா ரொம்ப அடிச்சாங்க.

அப்பாவும் அண்ணாவும் ஏதும் சொல்லாம இருந்ததே எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. கொஞ்சம் நேரம் கழிச்சு, அடிச்சி என்னாகப்போகுதுனு எங்கம்மாவை தடுத்தார் அப்பா. யாரை கல்யாணம் செய்துக்கிட்ட? அவன் ஊர் எதுனு அண்ணன் விசாரிச்சார்.

சொந்த ஊர் காஞ்சிபுரம், இவர் சென்னையில வேலைல இருக்கார்னு சொன்னேன். வீட்டுக்கு வர வைக்க சொன்னாங்க, நானும் சொன்னேன், அவரும் அடுத்தநாள் வந்தார்.

பெரியவங்களை வர சொல்ல சொன்னார் அப்பா. ஜாதி மாத்தி கல்யாணத்துக்கு எங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க, என் தங்கைக்கு வரன் பார்த்திட்டிருக்காங்க, அவ கல்யாணம் முடிஞ்சதும் கண்டிப்பா மேகலை பத்தி அப்பாகிட்ட சொல்றேன்னு சொன்னார்.

உன் தங்கை கல்யாணம் முடியிற வரைக்கும் வெய்ட் பண்ண வேண்டியதுதான? உன் தங்கைக்கு முறைப்படி பார்ப்பிங்க, அடுத்த வீட்டு பொண்ணை திருட்டு கல்யாணம் செய்துக்குவியானு அண்ணன் அவரை திட்டினார்.

இவர் எதிர்த்தே பேசல. உன் பொண்ணு கண்டவனோடவும் தியேட்டர் தியேட்டரா சுத்திட்டிருக்கானு ஊர்காரங்க எங்களுக்கு சொல்றதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதை எங்க சொந்தங்களுக்கு தெரியப்படுத்தனும்.

பொண்ணை பெத்த நாங்க வலிய வந்து பேச முடியாது. ஒன்னு நீங்க உங்கப்பாகிட்ட பேசுங்க. இல்லைனா எங்க சொந்தங்கள் முன்ன கோவில்ல வச்சி சிம்பிளா கல்யாணம் முடிச்சிக்கலாம்னு அப்பா சொன்னார்.

இப்போதைக்கு என் வீட்டுல வரமாட்டாங்க. நீங்க சொன்னமாதிரியே கல்யாணம் செய்துக்கறேனு இவர் சம்மதிச்சார்.

அவங்க வீட்டுக்கு தெரியாம பண்றது என்னைக்கானாலும் அசிங்கம்னு அம்மா சொன்னாங்க. பெரியவங்க சம்மதம் வேணாம்னு சட்டப்படி கல்யாணம் செய்து ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டா உன் பொண்ணு. சொந்த பந்தங்களுக்கு தெரியப்படுத்தும் முன்ன வயித்துல உண்டாகிடுச்சுனா அது இதை விட அசிங்கம்னு அப்பா சொன்னார்.

எனக்கு அப்போவே செத்துடலாம் போல இருந்துச்சு. ஆனா பெத்தவங்களுக்கு துரோகம் செய்தா அவங்க சூழல் இப்படித்தான் பேச வைக்கும்னு அப்பாவோட கோபத்தை சகிச்சிக்கிட்டேன்.

மூனு மாசத்துக்குள்ள உங்க தங்கைக்கு கல்யாணம் செய்துவச்சிட்டு உங்கப்பாம்மாகிட்ட உங்க கல்யாணம் விசயத்தை சொல்லிடனும்னு அப்பா முடிவா சொன்னார். அவரும் சம்மதிச்சார். அடுத்தநாள் கோவில்ல வச்சி கல்யாணம் முடிச்சிட்டு, அம்மா வீட்டு பக்கத்துலயே வீடு பார்த்து தனிக்குடித்தனம் வச்சிட்டாங்க.

அப்பாம்மா சம்மதிச்சி கல்யாணம் செய்து வச்சிட்டாங்கனும், கல்யாணம் முடிஞ்சும் காலேஜ்க்கு போக சொல்றாரேனும் எனக்கு சந்தோசமாகிடுச்சு. வாரம் அஞ்சு நாள் இங்கயிருப்பார். சனிஞாயிறு அவங்க வீட்டுக்கு போய் வருவார். இப்படி மூனுமாசம் சந்தோசமா வாழ்ந்தோம்.

மூனு மாசம் முடிஞ்சதும் உங்கப்பாம்மாவை வர சொல்லுங்க, இல்லைனா நாங்க நேர்ல போய் பேசப்போறோம்னு அப்பா சொன்னார். தங்கைக்கு வரன் அமையல, இன்னும் இரண்டு மாசம் பொறுத்துக்கோங்கனு இவர் சொன்னார்.

இவர்கிட்ட சரினு சொல்லிட்டு எங்கப்பா அவர் ஊருக்கு போய் விசாரிக்க ஆரம்பிச்சார். அப்போதான் தெரிஞ்சது அவர் கொடுத்த அட்ரஸ் தப்புனு. அப்பாக்கும் அம்மாக்கும் பயமாகிடுச்சு. பெரியவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் வேணாம்னு சொன்னேனே? என் பேச்சை கேட்டிங்களானு அம்மா புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

சனி, ஞாயிறு முடிஞ்சு உங்கப்பா வந்ததும் தப்பான அட்ரஸ் எதுக்கு கொடுத்திங்கனு சண்டை போட்டார். இன்னைக்கே உங்கப்பாவை பார்த்தாகனும்னு பிடிவாதமா சொன்னார் என் அப்பா.

இரண்டுமாசம் டைம் கொடுங்கனு உங்கப்பா சொன்னதையேதான் திரும்ப திரும்ப சொன்னார். எங்கப்பாவோட சந்தேகம் வலுவாகிடுச்சு. அவர் வேலை பார்க்குறேனு சொன்னதாவது உண்மையானு அடுத்தநாளே விசாரிக்க ஆரம்பிச்சார்.

அது உண்மைதான். அங்க இவரோட அட்ரஸை கேட்டு வாங்கிட்டு வந்தாங்க. இவர் பொய் சொன்னாருன்னு தெரிஞ்சதுலயிருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல, இரண்டு நாளா சாப்பாடே உள்ள இறங்கல. என் அம்மா கஞ்சியாவது குடினு பழையது கரைச்சி கொடுத்தாங்க. குடிச்சதும் வாந்தி வந்திடுச்சு.

அம்மா ரொம்ப பயந்துட்டாங்க. இரண்டு நாளா சாப்பிடாததுனால பிரட்டிட்டு வந்திருக்கும்னு அப்பா தைரியம் சொன்னார். ஆனா அம்மாக்கு சந்தேகம் போகல. ஹாஸ்பிட்டலுக்கு போய் செக் பண்ணினதுல அம்மா சந்தேகம் உறுதியானது. ம்… நீ வயித்துல வந்திட்ட.

குழந்தை உண்டான சந்தோசத்தை கூட முழுசா அனுபவிக்க முடியல. எதோ நெருடிட்டேயிருந்தது. உன் தங்கைக்கு கல்யாணம் முடிச்சிட்டு உங்கப்பா சித்திகிட்ட உண்மையை சொன்னதுக்கப்புறம் வீட்டுக்கு வாங்க. அதுவரைக்கும் வராதிங்கனு சொன்னேன்.

இங்க வரலைனா நான் செத்துடுவேன் அதுயிதுனு டைலாக் பேசினார். அதுக்கப்புறம் ஒருவாரம் அவரோட நான் பேச்சை குறைச்சிட்டேன். நாலுநாள் கழிச்சு அப்பாவும் அண்ணனும் அவரோட சொந்த ஊருக்கு போய் விசாரிச்சுட்டு வரதா கிளம்பிட்டிருந்தாங்க. இரண்டு கார்ல பத்து பேருக்கு பக்கம் வீட்டு முன்ன வந்திறங்கினாங்க.

அவங்களைப் பார்த்ததும் உங்கப்பா முகம் பதட்டமானது. அதைப்பார்த்து எனக்கு பதட்டமாகிடுச்சு. கல்யாண விசயம் தெரிஞ்சு சண்டை போட வந்திருப்பாங்கனு நினைச்சு, நாமளா சொல்லலாம்னு இருந்தோம், அவங்களே வந்துட்டாங்கனு என் அப்பா அண்ணாக்கு நிம்மதியாகிடுச்சு.

ஆனா அந்த நிம்மதி ஒரு செகண்ட் கூட நிலைக்கல. ஏன்னா… வந்தது உங்கப்பாவோட முதல் பொண்டாட்டியும், அவங்க குடும்பமும். நான் உள்பட யாருமே இதை எதிர்பார்க்கல” என்றதும் அதிர்ந்து விழித்தாள் விஷாலினி.

என் அண்ணன் அப்பாக்கு பேச்சே வரல. அம்மாதான் இப்படி பண்ணிட்டியேடானு அவர் சட்டையை பிடிச்சி கேட்டாங்க. கல்யாணம் ஆனவனுக்கு பொண்ணை கூட்டி கொடுத்துட்டு நாடகம் ஆடுறிங்களானு அவரோட முதல் பொண்டாட்டி கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அவரோட மாமியார், தங்கைனு எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

பேச்சுனா பேச்சு… கொஞ்ச நஞ்சம் இல்ல. அவ்வளோ கேவலமா பேசினாங்க. என் அப்பாம்மாவும் அண்ணனும் தலைகுனிஞ்சி நின்னதை இப்போவும் என்னால மறக்க முடியல” என கண்ணீர் வடித்தார் மேகலை.

“எப்படிம்மா இப்படி ஏமாந்திங்க? முதல் பொண்டாட்டி இருக்கும்போது எப்படி கல்யாணத்தை ரிஜிஸ்தர் பண்ணுனிங்க? தாத்தா பாட்டி எப்படி இதை கண்டுபிடிக்கல?”

“எல்லாமே அவரோட ஃப்ரண்ட்ஸ் வச்சி பண்ணியிருக்காருனு அன்னைக்குத்தான் தெரிஞ்சது. ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு நான் சொல்லவும் அப்பாம்மா நம்பிட்டாங்க”

“பாவம்மா ஆயா” என்றாள் வருந்தியவளாக.

விஷாலினிக்கு அவளின் ஆயா மட்டுமே பரிட்சயம் ஆதலால் அவர்களின் அன்றைய நிலை நினைத்து வருந்தியவள், “என்னை பெத்தவரு என்னதான் சொன்னாரு?” என்றாள் இறுகிய முகத்தோடு.

“அவர் என்ன சொல்வார்? இரண்டு பக்கமும் திட்டு வாங்கிட்டு நின்னுட்டிருந்தார். நான் செய்த தப்புக்கு எல்லாரும் தலைகுனிஞ்சி நிற்கிறதை என்னால சகிக்க முடியல. இனி இவரோட கண்டிப்பா வாழக்கூடாதுனு என் மனசு தெளிவா சொன்னச்சு.

எல்லாரும் கத்திக்கிட்டே இருந்தாங்க. நான் அவர்கிட்ட போய், கிளம்புங்க. இனி என்னைக்கு என்னை பார்க்குறிங்களோ அன்னைக்குத்தான் என்னோட கடைசி நாளா இருக்கும்னு சொன்னேன்.

பதறினார்… எனக்கு அவ்வளோ ஆத்திரம் வந்துச்சு. ஆனா பேசினதெல்லாம் பொய்… அதை அப்படியே நம்பினது என்னோட முட்டாள்தனம்ன்றதால, அவரை மேற்கொண்டு ஏதும் சொல்லாம, அவர் பொண்டாட்டிக்கிட்ட போனேன்.

இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து வாழ நினைக்கிற பொண்ணு நானில்லனு, அவர் குடும்பத்தை பத்தி இதுக்கு முன்ன என்ன சொன்னாரோ அதை சொல்லி, இனி உன் புருசனுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்ல.

பறிபோனது என்னோட வாழ்க்கைத்தான். ஆனா முழுசா ஆராயாம அவரை கட்டிக்கிட்டது நான் செய்த மிகப்பெரிய தவறுன்றதால உங்களோட தரங்கெட்ட பேச்சை இவ்வளோ நேரம் சகிச்சிக்கிட்டேன். இனியும் எதாவது பேசுனிங்கனா கம்ப்ளைன்ட் கொடுத்து அவரை உள்ள வச்சிடுவேன்.

வாழ்க்கையே போய்டுச்சு, இதுக்கு மேல என்ன இருக்கு? கம்ப்ளைன்ட் கொடுக்குறதால எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அதையும் ஏத்துக்க தயாராயிருக்கேன்னு சொன்னேன். அந்த பொம்பளை என்ன நினைச்சாளோ… அமைதியா எல்லாரையும் அழைச்சிட்டு கிளம்பிட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!