Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 1.1

ஆசை மீறும் நேரம்

          அத்தியாயம் 1

சாம்பவி தாமோதரன் மகள் செந்தமிழ்செல்வி. செந்தமிழ்செல்வி எட்டாம் வகுப்பு படிக்கும்போது கணவனை விட்டு பிரிந்துவிட்டார் சாம்பவி. செந்தமிழ்செல்விக்கு இளவரசன் என்ற ஓர் அண்ணனும் இருக்கிறான். இளவரசன் தாமோதரனோடு இருக்கிறான்.



Advertisement

சாம்பவி கணவனை விட்டு பிரிந்தபோது அன்னையோடு வந்த இளவரசனால், ஒரு மாதம் கூட அன்னை குடும்பத்தோடு இருக்க முடியவில்லை. தந்தையோடு இருக்க விருப்பம் தெரிவித்து சென்றுவிட்டான்.

அதன் பின்னே இரண்டு வருடங்கள் வரை அன்னையை தேடி வராதவன், மூன்றாவது வருடத்தில் தனது பிறந்த நாளன்று வந்தான்.

இரண்டு வருடங்களுக்கு பின்னே மகன் வந்தபோதும், மகனை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்வில் கட்டியணைக்க துடித்த கைகளை அடக்கினார். கண்ணீர் பெருகியது. அறைக்குள் சென்று அழுது கரைந்து பின்னே முகம் கழுவி மகனை காண வந்தார்.

Advertisement

மகனின் நலம் விசாரித்தவர், மகன் உண்ணக் கொடுக்க சமையலறை சென்றார். தானும் பின்னோடு வந்து திட்டில் அமர்ந்து கொண்டான். கணவனைப் பற்றியோ அங்கிருப்பவர்கள் பற்றியோ ஏதும் கேட்கவில்லை. கல்லூரி செல்லும் வயது ஆதலால் என்ன படிக்கிறாய்? எங்கு படிக்கிறாய்? என்று படிப்பை பற்றி மட்டுமே கேட்டார்.

Advertisement

இளவரசனும் அன்னை கேட்ட கேள்விக்கு பதிலளித்தபடி உண்டு கிளம்பிவிட்டான். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் செந்தமிழ்செல்வி தாமதமாகத்தான் வருவாள். தங்கை வந்ததும் பார்த்துவிட்டு நாளை செல் என்றார் கோரிக்கையாக.

இன்னொரு நாள் வருகிறேன் என்று இளவரசன் கிளம்பிவிட்டான்.

அதன்பின்னே இரண்டு வருடம் கழித்து மீண்டும் வந்தான். அப்பொழுதும் தங்கவில்லை. ஆனால் இம்முறை காத்திருந்து தங்கையை பார்த்து சென்றான். செந்தமிழ்செல்வி இளவரசனோடு அதிகம் ஒட்டவில்லை. எதோ விருந்தாளியிடம் பேசுவதை போல கேட்ட கேள்விக்கு பதிலளித்தாள்.

Advertisement

இளவரசன் சென்ற பின்னே, “அவன் என்ன பண்ணுவான்? ஆசையா உன்கிட்ட பேசினான்தானே? நல்லாதான் பேசுறது. வெட்டிவிட்டமாதிரி பேசுற” என்று பொங்கினார் சாம்பவி.

“பேச ஏதும் இல்லம்மா” என்று முடித்துக்கொண்டாள் செந்தமிழ்செல்வி.

தந்தை வீட்டிலிருக்கும்வரை அண்ணனோடு அத்தனை பேசுவாள் செந்தமிழ்செல்வி. இளவரசனும் தங்கையிடம் அன்பாகத்தான் இருப்பான். இருவரையும் எண்ணிப் பார்த்த சாம்பவிக்கு மனம் கணத்துப்போனது.

மகன் வந்து சென்று இரண்டு வருடமாகிறது. அவனின் எண்கூட சாம்பவியிடம் இல்லை. இளவரசனும் அன்னையோடு கைப்பேசியில் பேசியதில்லை. நேராக வந்தால்தான் பேசுவது.

மகன் வந்து போனதை யாரிடமும் சொன்னதில்லை சாம்பவி. சொல்லக்கூடாதென்றில்லை, மகன் தந்தைக்கு தெரிந்து வந்தானோ? தெரியாமல் வந்தானோ? நாம் யாரிடமாவது சொல்லி அவனுக்கு பிரச்சனையாகிவிடக் கூடாதென்பதால் சொல்லவில்லை.

கணவனோடு மனஸ்தாபம் ஆகி பிறந்த வீட்டிற்கு வந்த பின்னே முதலில் மகளுக்கு ஆதரவாகத்தான் பேசினார்கள் சாம்பவியின் பெற்றோர். மகளுக்கு ஆறுதல் கூறி மருமகனிடம் மகளுக்கான குறைகளை சொல்லி, அதை களைந்து வாழ அறிவுருத்தலாம் என்று நினைத்தனர்.

ஆனால் சாம்பவியின் கணவனோ சமரசம் பேச இடம் கொடுக்கவில்லை. அதோடு நான் வந்து அழைத்துச் செல்லமாட்டேன், அவளாகத்தான் சென்றாள். அவளாகவே வரட்டும் என்றுவிட்டார்.

சாம்பவி வீட்டில் இருக்க பிடிக்காமல் மகன் தன் வீட்டிற்கு வந்ததை போல, மகளும் வந்துவிடுவாள், பின்னே வேறு வழியில்லாமல் சாம்பவியும் வந்துவிடுவாள் என்ற எண்ணத்திலிருந்தார் தாமோதரன்.

ஆனால் சாம்பவி செல்லவில்லை. குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், சமாளித்து வாழ்வதே வாழ்க்கை என்று சாம்பவியின் பெற்றோர் சாம்பவிக்கு அறிவுரை வழங்குவதும், அதை கிரகிக்க முடியாமல் சாம்பவி தவிப்பதும் செந்தமிழ்செல்விக்கு புரிய, தந்தை வீட்டிற்கு சென்றால் இப்படி இவர்களிடம் பேச்சு வாங்குவதை தவிர்க்கலாமே என்று தந்தையிடம் செல்ல அனுமதி கேட்டாள் அன்னையிடம்.

‘என்னால அங்க வேலை செய்ய முடியல செல்விம்மா’ என்றார் சாம்பவி.

அரண்மணை போன்ற தந்தை வீட்டில் பத்திற்கும் மேற்பட்ட பணியாட்கள் இருந்த போதும், அன்னைக்கு ஓய்வென்பதே கிடையாது, அதோடு அங்கும் அன்னையிடம் யாரும் கரிசனையாக பேசமாட்டார்கள் என்று செந்தமிழ்செல்வி அறிந்ததுதான். ஆனாலும் அன்னை சொன்ன விதத்தில் வேறு வலிகளும் இருக்கும் என்று தோன்றியது பதிமூன்று வயதிலேயே.

அன்று முதல் இன்று வரை தந்தை வீட்டிற்கு செல்ல கேட்டதில்லை செந்தமிழ்செல்வி. தந்தை வீட்டிலிருந்ததை விட, தனியே வந்த பின்னேதான் அன்னையோடு அதிக நேரம் இருக்கிறாள். தந்தையை காணும் ஆர்வமும் கூட நாள்கள் செல்ல செல்ல குறைந்துபோனது.

கணவனை விட்டு நிரந்தரமாக பிரிய வேண்டும் என்றெல்லாம் சாம்பவி நினைக்கவில்லை. அன்றையை நிகழ்வு மனதை உடைக்க செய்ய ஆத்திரம் என்பதை விட ஆதங்கத்தை தாள முடியாமல்தான் பிறந்த வீடு வந்திருந்தார்.

அதன் பின்னே தாமோதரனின் பேச்சு… அப்படி என்ன அங்கு சென்று வாழ வேண்டும் என்று நினைக்க வைத்தது. இங்கிருக்க முடியாதென்று இளவரசன் ஒரு மாதத்திலேயே கிளம்பிவிட, அதன் பின்னே சாம்பவிக்கான அறிவுரைகள் அதிகமானது.

மிகுந்த மன உளைச்சலில் சாம்பவி இருக்க, அன்றைய தேதியில் வந்த  செய்தித்தாளின் விளம்பரம் பார்த்து வேலைக்கு செல்ல முடிவெடுத்து விண்ணப்பித்தார்.

வேலையும் கிடைத்தது. இரண்டு மாதம் வேலை செய்த பின்னே பணியை தொடர விரும்பினால் சம்பளம் சேர்த்து தருகிறோம் என்றனர். தற்போது இவர்கள் கொடுக்கும் சம்பளமே இருவருக்கு போதுமானது என்ற நிலையில் இரண்டு மாதம் கழித்து மேலும் சம்பளத்தை உயர்த்தினால் மகளின் படிப்பிற்கும் போதுமானதாக இருக்கும் என்று வேலைக்கு செல்ல முடிவெடுத்ததை பெற்றோரிடம் சொன்னார்.

சம்மதித்திடுவார்களா என்ன? அங்கிருக்கும் வசதிக்கு இப்படி வேலை தேவைதானா? பெண்ணுக்கு இத்தனை வீம்பு ஆகாது, பொண்ணை பெத்துருக்க, உன் செயல்தான் அவளுக்கும் பழகும். ஒழுங்காக புகுந்த வீட்டிற்கு செல் என்று வசைபாடினர் பெற்றோர்.

யார் பேச்சையும் கேளாமல் வேலைக்கு கிளம்பிவிட்டார் சாம்பவி. இதை அறிந்த தாமோதரன் சாம்பவியின் பெற்றோரிடம் கத்தினார். சாம்பவி எதிர்பார்த்ததுதான் ஆகையால் அடுத்த வாரத்திலேயே வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்தில் வீடு பார்த்துக்கொண்டு மகளை அழைத்துச் சென்றுவிட்டார்.

மருமகன் கேட்டால் என் மகள் என் பேச்சையும் கேட்கவில்லை என்று சொல்லிவிடுங்கள். நான் அவரோடு வாழ வேண்டுமென்றால் இங்கே வந்து பார்க்க சொல்லுங்கள். என்று தான் இருக்கும் விலாசத்தை பெற்றோரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தார்.

ஆனால் அதன்பின்னே சாம்பவியின் பெற்றோரும் வரவில்லை. கணவன் வீட்டாரும் வரவில்லை. சாம்பவியின் பெற்றோர் அவ்வப்போது கைப்பேசியில் அழைத்து நலம் விசாரிப்பார்கள்.

இல்லையில்லை… அக்கறை என்ற பெயரில் அறிவுரை சொல்வார்கள். பொறுமையாக கேட்டுவிட்டு, நான் வேண்டும் என்ற அக்கறையோடு கணவன் அழைக்க வந்தால் செல்கிறேன் என்று முடித்துகொள்வார்.

ஆனால் தாமோதரன் வரவேயில்லை. சாம்பவியின் புகுந்த வீட்டில் செய்த வேலையை விட இங்கே வேலை செய்துகொண்டு மகளோடு வசிப்பது சாம்பவிக்கு மனநிம்மதியை கொடுத்தது.

இதோ… கணவனோடு பிரிந்து வந்து ஏழு வருடங்கள் முடிந்து எட்டவது வருடம் தொடங்கிவிட்டது. புகுந்த வீட்டை விட்டு வெறியேறிய பின்னே கணவன் குடும்பத்தில் நடந்த விசயங்கள் மிகுந்த மனவலியை கொடுத்தது.

இதனை பெற்றோரும் அறிந்தேயிருந்தனர். ஆனால் எல்லாம் உன்னால்தான். நீ கணவனோடு வாழாமல் வந்ததால்தான் என்று சாம்பவியைத்தான் சாடினார்கள்.

நாள்கள் செல்ல செல்ல அனைத்தையும் கடந்து வர பழகிக்கொண்டாரே அன்றி கணவனோடு வாழும் எண்ணம் மட்டும் வரவேயில்லை. செந்தமிழ்செல்வி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் தருவாயில் தந்தை வீட்டிற்கு செல்கிறாயா? அவர் உன்னை பெரிய கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பார் என்றார்.

அப்பொழுதும் தந்தையோடு செல்ல விரும்பவில்லை செந்தமிழ்செல்வி. பள்ளி விடுமுறை நாள்களில் மகளை தன்னோடு அழைத்து வந்திடுவார் சாம்பவி. எனவே அன்னையின் அத்தனை வேலைகளும் செல்விக்கு தெரியும்.

செந்தமிழ்செல்வி தற்போது பி.காம் பட்டதாரி. மேற்படிப்பு படிக்கவும் விருப்பமில்லை, வெளியில் சென்று வேலை பார்க்கவும் விருப்பமில்லை என்றுவிட்டாள்.

கல்லூரி நாள்களிலேயே பகுதிநேர வேலையாக கணக்கு வழக்குகள் பார்க்க அமிர்தவள்ளி புருஷோத்தமனின் நிர்வாகங்களில் ஒன்றான எ.பி இன்டஸ்ட்ரீஸில் பகுதி நேர வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் செந்தமிழ்செல்வி.

பள்ளி செல்லும் நாள்களிலேயே செந்தமிழ்செல்வியின் சுறுசுறுப்பும், எளிமையும் மிகவும் பிடித்துப்போனது அமிர்தவள்ளிக்கு.

பிடித்தம் எந்தளவிற்கு என்றால்… தனது குடும்பத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவிற்கு சாம்பவியையும் செந்தமிழ்செல்வியையும் அழைக்கும் அளவிற்கு பிடித்துப்போனது.

முதலாளி அழைத்து செல்லாமல் இருக்க முடியுமா? அத்தனை பிடித்தம் இல்லை என்றபோதும் அமிர்தவள்ளியின் பேத்தி ப்ரித்திகாவின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றனர். அங்கே சில அலங்காரங்களை மாற்றியமைக்க யோசனை சொன்னாள் செந்தமிழ்செல்வி.

“வந்த இடத்துல அதிகப்பிரசங்கித்தனம் பண்ணிட்டிருக்க” என்று சாம்பவி அதட்ட, செல்வி சொன்ன யோசனை அமிர்தவள்ளிக்கும் பிடிக்கவே அன்றைய நாளின் அலங்காரம் செல்வியின் விருப்பமாகிப்போனது. அதன்பின்னே வீட்டில் சிறு விஷேசம் என்றாலும் செந்தமிழ்செல்வியிடம் அபிமானம் கேட்பார் அமிர்தவள்ளி.

இப்படியாக ஆரம்பித்த பழக்கம்… தற்போது மகளிடம் பேசுவதைப் போன்று உரிமையாகிப்போனது. தனது அன்னைக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்பதாலும், வேலை செய்பவர்கள்தானே என்ற எள்ளல் இல்லாமலும் அமிர்தவள்ளி பழகும் பாங்கு செந்தமிழ்செல்விக்கும் பிடித்துப்போக, அமிர்தவள்ளி அழைக்கும் போதெல்லாம் வீட்டிற்கு வந்துபோவாள்.

புருஷோத்தமனுக்கு முன்புபோல் தொழில்களை கவனிக்க முடியாமல் போனது. குடும்பத்தொழில் செய்ய விருப்பமில்லை என்று அயல்நாட்டில் வேலையில் இருந்தவனை குடும்பத்தொழிலை கவனிக்க வற்புருத்தினர்.

இரண்டு பேர் இருக்காங்கள்லம்மா? நான் வேற பார்க்கனுமா? என்று சலித்துக்கொண்டான் பொற்செல்வன்.

தேவேந்திரன் பார்க்கிறான். ஆனால் தேவராஜிற்கு குடும்பத்தின் மீதும் ஈடுபாடில்லை, குடும்பத்தொழில் மீதும் ஈடுபாடில்லை. தேவேந்திரன் ஒரு ஆளே அத்தனை பார்க்குறான், அவனால முடியல. நீயும் வந்துதான் ஆகனும்’ என்று முன்பு வற்புறுத்தியவர்கள் தற்போது கட்டளையிட்டனர்.

அப்பொழுதும் பொற்செல்வன் பிடிக்கவில்லை என்று சொல்ல, தேவராஜ் போக்கே சரியில்லடா, அவனுக்கு கல்யாணம் முடியற வரைக்குமாவது வா’ என்று அன்னை கெஞ்சிய பின்னேதான் அயல்நாட்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்தான் பொற்செல்வன்.

பொற்செல்வன் தொழிலை கவனிக்க ஆரம்பித்தபோது செந்தமிழ்செல்வி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை முடித்து விடுமுறையில் இருந்ததால் தினமும் அன்னையோடு வருவாள்.

புதிதாக தொழிலை கவனிக்க ஆரம்பித்த பொற்செல்வனிடம், ‘சாம்பவியின் புகுந்த வீடு, பிறந்த வீட்டின் நிலையை சொல்லி, ஐநூற்றிற்கும் மேற்பட்டோர் வேலை செய்யிறவங்க இருந்தாலும், வீடு வரைக்கும் வர அளவுக்கு பழக்கமானவர் சாம்பவி. ரொம்ப நல்லமாதிரி, பழைய கணக்கு வழக்குல எதாவது கேட்கனும்னா சாம்பவியை கேட்டு தெரிஞ்சுக்கோ’ என்றார் அமிர்தவள்ளி.

சாம்பவியை பார்க்க வரும்பொழுதெல்லாம் செல்வியும் உடன் இருப்பாள். செந்தமிழ்செல்வியின் துருதுருப்பும், சுறுசுறுப்பும் பிடித்துப்போக, ‘ஸ்கூல் லைஃப் எப்படி போனது?’ என்று பொற்செல்வன் ஒற்றைக் கேள்விதான் கேட்டான்.

பள்ளி நாள்களில் பிடித்த ஆசிரியர், பிடிக்காத ஆசிரியர், பிடித்த பாடம், பிடிக்காத பாடம், அதேபோல தோழிகள் என்று ஒரு மணிநேரத்திற்கு மேல் பேசினாள் செந்தமிழ்செல்வி.

பதினேழு வயது சிறுபிள்ளைதான்… ஒரு மணிநேரம் பேசியபோதும் தந்தை குடும்பத்தைப் பற்றி ஏதும் பேசாததும், எத்தனை வசதியாக வாழ்ந்த பிள்ளை, தற்போது இருக்கும் வசதி குறைவு பற்றி ஏதும் பேசாததும், பொற்செல்வனுக்கு வியப்பை கொடுத்ததோடு, அவளிலிருந்து சில விசயங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று பெருமையாக நினைத்தான்.

செந்தமிழ்செல்வி கல்லூரியில் சேர்ந்த பின்னே பகுதிநேர வேலைக்கு சேரும்போது தனக்கு உதவியாக வைத்துக்கொண்டான்.

பணியின் போது அனைவரிடமும் கண்டிப்போடு இருப்பவன், மெல்லமாக தலையில் குட்டுவது, கன்னத்தில் தட்டிக்கொடுப்பதென செல்வியிடம் மட்டும் தோழனைப் போல இருப்பான்.

சில வருடங்களுக்கு முன்னே கல்லூரி படிப்பிற்காக கூட வெளியில் செல்ல மறுத்தவள், தற்போது வேறிடத்தில் பணி வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்திருக்கிறாள். இன்னும் அன்னையிடமும் சொல்லவில்லை. அன்னையைப் போல் பழகும் அமிர்தவள்ளியிடமும் சொல்லவில்லை. வேலை கிடைத்தபின்னே சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!