Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 12.1

அத்தியாயம் 12

ஐந்து மாதங்கள் முடிந்திருந்த நிலையிலும், விவாகரத்து வேண்டாம் என்று தேவராஜ் சொல்வதாக தெரியவில்லை. எனவே தனது பெற்றோரிடத்திலும், நவீனாவின் பெற்றோரிடமும், விவாகரத்து என்பது சட்டத்திற்குத்தான். மனதிற்கு அல்ல. அண்ணன் நிச்சயம் அண்ணியோடு வாழ்வார் என்றிருக்கிறான் பொற்செல்வன்.

எனது மாமனார் மாமியாருக்கு தன் விவாகரத்தில் மிகுந்த வேதனைதான். பொற்செல்வனும் தனக்காக பெரும் சிரத்தை எடுக்கிறான், தேவேந்திரன் அவரின் மனைவி ராஜலஷ்மியும் என்னிடம் அன்பாகத்தான் பழகுவார்கள்.

கணவனை தவிர்த்து மற்ற அனைவரும் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். நியாயம் கேட்கிறேன் என்று அங்கு யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டாள் நவீனா.



Advertisement

கணவன் மீது இதுவரை பெற்றோரிடத்தில் எந்த குறையும் சொன்னதில்லை. விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் நிலையிலும் கூட தனக்குள் வேதனை கொண்டாளே அன்றி யாரிடமும் கணவனைப் பற்றி குறை கூறுவதில்லை.

விவாகரத்து ஆனாலும் கூட மகள் தேவராஜை தவிர்த்து வேறொருவனை நினைக்கக்கூட மாட்டாள் என்பது உறுதியாக தெரிய நவீனாவின் பெற்றோரும் பொற்செல்வனைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அமிர்தவள்ளி புருஷோத்தமனிற்கு பொற்செல்வன் சொல்லில் முன்பிருந்த நம்பிக்கை தற்போது இல்லை. கணவன் மனைவியாக வாழ்ந்தார்களோ இல்லையோ… ஒரே அறையில் இரண்டு வருடம் வசித்திருக்கிறார்கள். மனைவி என்ற உரிமை இருக்கும்போது வராத ஈர்ப்பா மனைவியை பிரிந்த பின்னே வரப்போகிறது?

Advertisement

தற்போதே மருமகள் முகத்தை பார்க்க இயலவில்லை, விவாகரத்திற்கு பின்னே எப்படி முகத்தில் விழிப்பது? என்ன சொல்லி மருமகளை தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பது?

Advertisement

இதில் மனைவியை பிரியப்போகிறோம் என்ற வருத்தம் தேவராஜிற்கு சிறிதும் இல்லை என்பதுதான் அமிர்தவள்ளி புருஷோத்தமனுக்கு பெரும் வேதனையை கொடுத்தது.

நவீனா இல்லாத அறை தேவராஜிற்கு வெறுமையாகத்தான் இருந்தது. ஆனால் யாரிடமும் அதை காட்டிக்கொள்ளவில்லை.

திருமண தினத்தன்று நவீனா முகத்திலுள்ள ஜொலிப்பையும், தோழிகளின் கிண்டலுக்கு அவள் வெக்கப்படுவதையும் பார்த்திருந்தவன், முதலிரவில் ஏமாந்துவிடக் கூடாதென ‘அப்பாம்மா சொன்னாங்கனுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், உன்னை எனக்கு பிடிக்க டைம் வேண்டும்‘ என்று மண்டபத்திலிருந்து வரும்போதே சொன்னான்.

Advertisement

அதில் நவீனா ஏமாறவில்லை. பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம், உடல்தேவைக்கு ஆசைப்படாமல் புரிந்துகொள்ள முயற்சிக்கும் கணவனை இன்னும்தான் பிடித்துப்போனது.

சம்மதம்போல் தலையசைத்து இதழ்பிரியா சிரிப்பை உதிர்த்தவளைப் பார்த்து தேவராஜ்தான் தடுமாறிப்போனான்.

மறைமுகமாக இவளை பிடிக்கவில்லை என்கிறோம், இதற்கும் சிரித்து வைக்கிறாள், இனி நேரடியாகத்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவன், திருமணம் முடிந்து ஒருமாதம் கழித்து, ‘உன்னை எனக்கு பிடிக்கும்னு தோணல’ என்றான்.

இந்த முறை கணவன் பேச்சில் நவீனாவின் முகம் வாடிப்போனது. தேவராஜ் மனைவியிடம் தானாக பேசியதில்லை. ‘ஊருக்கு செல்கிறேன், சாப்பிட கூப்பிடறாங்க’ என்ற நவீனாவின் அத்தியாவசிய பேச்சுகளுக்கு தலையசைப்பான் அவ்வளவே.

ஐந்து மாதத்திற்கு முன்னே விவாகரத்து வேண்டும் என்பதைத்தான் மனைவியின் முகம் பார்த்து சொன்னான்.

வார்த்தையை உதிர்த்த நொடியே அதிர்ந்து விழித்தவளின் கண்களில் தானாய் கொட்டியது கண்ணீர். மனம் வலித்தபோதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நான் கேட்குறேனு சொன்னா என் அப்பாம்மா ஒத்துக்கமாட்டாங்க, என்கிட்டயிருந்து டிவோர்ஸ் வேணும்னு நீ கேளு” என்றான்.

நவீனா எதோ சொல்லவர, “நீ டிவோர்ஸ்க்கு சம்மதிக்கலைனா தற்கொலை செய்துப்பேன்” என்று உறுதியாக சொன்னவனிடம் பேச்சற்றுப்போனாள்.

அவளின் வேதனையான முகத்தை காண சகிக்காமல் அன்று வெளியேறியவனுக்கு, இன்று நவினா இல்லாத அறை வெறுமையாகத்தான் இருந்தது.

அன்பாக என்றில்லை, இயல்பாகக்கூட ஓர் வார்த்தை பேசியதில்லை. பிடிக்கவில்லை என்று சொன்ன பின்பும், தான் பார்க்காத நேரம் தன்னை பார்ப்பது, விஷேச நாள்களில் தான் உடுத்தும் நிறத்திலேயே நவீனாவும் உடுத்துவது, அவளின் பிறந்தநாள் மட்டுமல்லாது தனது பிறந்த நாளிற்கும் புத்தாடை உடுத்திக்கொள்வது என்று நவீனாவின் நினைவுகள் தேவராஜிற்கு வேதனையை கொடுத்தது.

தன்னை மறந்து வேறொரு வாழ்வில் இணைந்து மகிழ்வோடு வாழ வேண்டும் என்று நினைத்தவனுக்கு தற்போது மனைவி அதனை செயல்படுத்துவாளா என்ற சந்தேகம் வந்தது.

மார்ட்டின்லூர்து இறந்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது, தான் பயந்தவாறு யாரும் தன்னை தேடி வரவில்லை. இனியும் வரமாட்டார்கள், இத்தனை நாள் வாழாமல் வாழ்ந்தது போல இனியும் இருக்க வேண்டாம்.

பிரச்சனைகள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், பழையதை நினைத்துக் கொண்டிருக்காமல் மனதிற்கு பிடித்ததை செய்யுங்கள் என்று பொற்செல்வனும் சொல்கிறான். ஆனால் தேவராஜால்தான் அப்படி வாழ முடியவில்லை.

நவீனாவின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறான். அவள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அவளுக்கான நல்ல வாழ்வென்பது தன்னோடுதான் என்று நவீனாவின் ஆசையை உணர்ந்தபோதும் ஏற்க மறுத்தான்.

பொற்செல்வனின் கம்பெனியில் வேலை பார்க்கிறாள் என்றும், அங்கே தங்களுக்கு சொந்தமான வீடுகளில் ஒன்றில்தான் வசிக்கிறாள் என்றும் அறிவான்.

சாம்பவி மேடம் வேலையை விட்டு நிற்கப்போகிறார்கள், சில மாதங்களுக்கு எனக்கு உதவியாக இருங்கள் என்ற பொற்செல்வனின் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் தேவராஜும் கம்பெனிக்கு வருகிறான். ஆனால் ஓர்நாள் கூட நவீனாவை பார்த்ததில்லை.

அன்று கோர்ட்டில் பார்த்ததுதான். முதல் முறை வந்தபோது தன்னை பார்த்ததுபோல, இரண்டாம் முறை வரும்போது பார்க்கவில்லை என்பதை அறிந்தவன் மனம் அன்று நிம்மதியாக உணர்ந்தது. ஆனால் இன்று…

தன்னோடான விவாகரத்திற்கு பின்னே விபரீத முடிவெடுப்பாளோ என்று ஏனோ மனம் பெரிதாய் அல்லாடுகிறது. சட்டப்படி விவாகரத்து ஆகும் முன்னே ஒருமுறை பேசுவோமா என்று கூட யோசித்தான். ஆனால் என்ன பேசுவது? தன்னை மறந்துவிடு என்றா… அல்லது மறுமணம் செய்துகொள் என்றா…

இரண்டில் எதை சொல்லவும் தைரியம் வரவில்லை தேவராஜிற்கு. நவீனாவோடு வாழ நினைக்கிறோமா? என்றும் கூட யோசித்தான். பின்னே, வேண்டாம் வேண்டாம், இனியாவது அவள் நன்றாக வாழட்டும், தான் போன பாதை சாதாரணமானது அல்ல.

எத்தனை மாதங்கள் கழிந்தாலும் அதன் விளைவுகள் தன்னை தாக்கும், அந்த நேரம் இவளாவது தனது வாழ்வில் இல்லாமல் இருக்கட்டும் என்றுதான் மீண்டும் தோன்றியது.

இன்று பொற்செல்வன் வர சொல்லவில்லை, ஆனால் தேவராஜிற்கு வீட்டில் இருக்க முடியாமல் போகவே தயாராகி வெளியே வந்தான்.

வாயில்படி வரை சென்றவனிடம் “சாப்பிடலையா தேவா?” என்றார் அமிர்தவள்ளி.

பிறகுதான் உண்ணவில்லை என்ற நியாபகம் வர, பொற்செல்வனிடம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த ப்ரித்திகாவும் கண்களை நிறைக்க “ம் சாப்பிடறேன்ம்மா” என்று உள்ளே வந்தான்.

“பசிச்சா கேட்பாங்க, நீங்களா எதுக்கும்மா தொல்லை பண்றிங்க? சின்ன பிள்ளைங்களுக்கு போல சாப்பிடக்கூட நியாபகம் செய்யனுமா?” என அன்னையை முறைத்தான் பொற்செல்வன்.

பொற்செல்வன் பேசியதை கண்டுகொள்ளாமல் உண்ண அமர்ந்தவன், “குட்டிம்மா, வாங்க நான் ஊட்டி விடறேன்” என்றான்.

ப்ரித்திகாவோ மலங்க விழித்து பொற்செல்வனோடு ஒன்றினாள்.

உணவுகளை பரிமாறிய அமிர்தம், வழக்கத்திலில்லாமல் தேவராஜ் பேத்தியோடு பேசுவதை கணவனிடம் சொல்ல அறைக்குள் போனார்.

“புது ஆளுங்ககிட்ட என் பொண்ணு பேசமாட்டா” என்றான் பொற்செல்வன்.

“டேய்… அது என் பொண்ணும்தான்”

“அது உன் அப்பாவாடா?” என்றான் மகளிடம்.

சிறுமி பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள். தேவராஜின் முகமும் வாடிவிட, “முதல்ல பாப்பாகிட்ட பழகனும், அப்புறம் ஃப்ரண்ட்ஸ் ஆகனும், அப்புறம்தான் அப்பா ஆக முடியும், ஆமாம்தானேடா” என்றான்.

ஆமாம் என்பதாய் தலையசைத்த போதும், ப்ரித்திகாவிற்கு தேவாவிடம் நாட்டமில்லை எனப்புரிய, “அப்பா ஆன பின்னாடிதான் குட்டிம்மா டான்ஸ் சொல்லி கொடுப்பாங்க” என்றான்.

“டான்ஸ் சொல்லிக் கொடுப்பியா?” என தேவராஜ் கேட்க, “ம்ஹும்” என்றாள்.

“இவர் உன் அப்பா இல்லதான்டா, ஆனா என் அண்ணா. செல்வா அப்பாவோட அண்ணாக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கமாட்டியா?” என கேட்க, பிறகுதான் சொல்லித்தருவதாக சம்மதித்தாள் ப்ரித்திகா.

வாய்ப்பை நழுவ விடாமல் “இனி டான்ஸ் க்ளாஸ்க்கு என் அண்ணா கூட போறியா?” என்றான்.

குழந்தை பதில் சொல்லும் முன்னே “வேண்டாம் செல்வா” என்றான் தேவராஜ்.

தேவராஜ் முகத்திலிருந்த பயம், பொற்செல்வனுக்கு கோபத்தை உண்டாக்க, “அம்மாயி கூட இருடா, இப்போ வந்திடறேன்” என்று அனுப்பி வைத்து, “எத்தனை நாளுக்கு பயந்திட்டிருக்கப்போறிங்க? இதுக்கா இவ்வளோ ரிஸ்க் எடுத்தேன்?” என்றான் கடுப்போடு.

“ம்ப்ச்… செல்வா, சட்டுனு மாற முடியலடா, அதோட என்னால குட்டிம்மாக்கு எதாவது ஆகிட்டா அதை தாங்கவே முடியாது” என்றான்.

“அப்படி உங்களை தேடுறவனுக்கு குட்டிம்மா மட்டுமில்ல, நம்ம மொத்த குடும்பமும் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சிருந்தா இவ்வளோ நாள் விட்டு வச்சிருப்பாங்களா? பழசை மறந்து தொலைங்கண்ணா.

ஓரிடத்துல புதுசா எதையாவது நுழைக்கனும்னா அதுக்கான ஸ்பேஸ் வேணும், உங்களுக்குள்ள இருக்க பழைய விசயங்களை தூக்கிப்போட்டாத்தான் புது விசயங்கள் உள்ள போகும்” என்றான் ஏக கடுப்போடு.

பொற்செல்வனின் சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த அமிர்தம், “என்னாச்சு தேவா? ஏன் செல்வா இவ்வளோ கத்துற? ப்ரித்திகா பயந்துக்குறா பாரு” என்றவர் முகத்திலும் அவ்வளவு பயம்.

“ஒன்னுமில்லம்மா” என்று எழுந்தவனிடம் “சாப்பிடாம கிளம்புற?” என்றார்.

ஏதும் சொல்லாமல் கிளம்பினான் பொற்செல்வன். “கம்பெனிக்கு போய் சாப்பிட்டுக்குறோம், பேக் பண்ணி கொடுங்க” என்றான் தேவராஜ்.

இப்படியெல்லாம் செய்பவனல்ல தேவராஜ், மகிழ்வோடு பதார்த்தங்களை பையில் போட்டு கொடுக்க, வாங்கிக்கொண்டு கிளம்பினான் தேவராஜ்.

தேவராஜின் மாற்றம் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. ஆம்… கேட்டாலே பதில் சொல்லாதவன், இன்று பதில் சொன்னதோடு, பொற்செல்வனின் கோபத்திற்கு மதிப்பளித்து உணவையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னோடு செல்கிறான்.

தேவராஜை மாற்ற பொற்செல்வன் மிகுந்த சிரத்தை எடுக்கிறான் என்று அறிவார். என்ன செய்தாலும் தேவராஜ் மனம் மாறுவானா என்ற அமிர்தவள்ளியின் பயத்தையும் சந்தேகத்தையும் இன்றைய நிகழ்வு போக்கியிருந்தது.

தேவராஜ் அலுவலகம் வர, பொற்செல்வன் அங்கே இல்லை. ராகுலிடம் பொற்செல்வனை விசாரித்தான்.

“தோட்டத்துல இருக்கிறதா சொன்னார்” என்றான் ராகுல்.

அங்கே காரில் செல்ல முடியாதென்று தேவராஜ் யோசித்திருக்க, “நவீனா மேடம் இங்க வந்ததுலயிருந்து சார் பைக் இங்கதான் இருக்கு. பைக் சாவி தரட்டுங்களா சார்?”

“ம் கொடு” என்று வாங்கிக்கொண்டு கிளம்பினான் தோட்டத்திற்கு.

அரைமணி நேர பயணத்திற்கு பின்னே பொற்செல்வனை தேடிச் சென்றவன் கண்களில் பட்டது செந்தமிழ்செல்வி. தீவிர முகபாவனையோடு தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

செல்வி நவீனாவின் தோழி, இவளிடம் பேசினால் அவளின் மனநிலை தெரிய வரும் என நினைத்தபடி அவளருகே சென்று பைக்கை நிறுத்த, பைக் சத்தம் பொற்செல்வனுடயதாகிற்றே என அதிர்ந்து நிமிர்ந்தாள் செந்தமிழ்செல்வி.

தேவராஜை கண்டதும், வீட்டிலேயே யாரிடமும் பேசாதவன் தன்னருகே நிற்கிறான் என்று மேலும் அதிர்ந்தாள். இவரெல்லாம் மனுசனே கிடையாது. எப்படிபட்ட மனைவியை பிரிய நினைக்கிறார் என்று முகம் திருப்பினாள் வெறுப்போடு.

செந்தமிழ்செல்வி அறியா வண்ணம் பதினைந்து நிமிடங்களாக இவளைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறான் பொற்செல்வன். அண்ணனிடம் எதாவது கோபமாக பேசிடுவாளோ என்று தேவராஜிற்கு அழைத்தான்.

“எங்க இருக்க செல்வா? நானிங்க பன்னீர்ரோஜா தோட்டம் பக்கத்துல இருக்கேன்”

“நீங்க ஃபேக்ட்டரிக்கு வாங்க, நான் அங்கதான் இருக்கேன்”

“பேக்ட்டரில இருந்தா இங்கதான் இருக்கேனுதான சொல்லனும், நீ என்ன அங்கதான் இருக்கேனு சொல்ற? எங்கடா இருக்க? உண்மையை சொல்லு” என்றவன்

“என்மேல உள்ள கோபத்துக்கு நான் கால் பண்ணினாலும் அட்டண் பண்ணமாட்டேனு நினைச்சிட்டிருந்தேன், அதெப்படி நான் இங்க வந்ததும் கரெக்ட்டா கால் பண்ணின? ஸோ என்னை பார்த்திட்டுத்தான் கால் பண்ணியிருக்க, பக்கத்துலதான் இருக்க” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!