Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 19.2

“என்னடா பண்ணின பாப்பாவ? முகம் சோர்ந்திருக்கு” என்றான் தேவேந்திரன்.

“பாப்பாவா? அது யாரு?” என்றான் பொற்செல்வன்.

“இந்த வீட்டுல செல்விதான் சின்னப்பொண்ணு”

“நான் கூட ப்ரித்துவ சொல்றிங்கனு நினைச்சேன்” என்றான் சிரிப்போடு.



Advertisement

“இன்னும் கொஞ்ச நேரம் பேசனும்னு சொன்னேன் மாமா, அதுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டாரு” என்றாள்.

“மாமாவா? அது யாரு?” என செல்வன் வியக்க, “அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போவே சார் சொல்லக்கூடாது, மாமா சொல்லனும்னு சொல்லிக்கொடுத்தாங்க, அதனால மாமா சொல்றேன்” என்றாள்.

“அப்போ நானு” என தேவராஜ் கேட்க, “நீங்களும் மாமாதான்” என்றாள்.

Advertisement

அடுத்து பொற்செல்வன் கேட்பான் என எதிர்பார்த்தாள், ஆனால் பொற்செல்வன் கேட்கவில்லை. “செல்வி பாப்பாக்கு செல்வாகிட்ட நிறைய பேசனுமாம், செல்வா இங்கையே இருந்து பேசிட்டு வரட்டும், நாங்க கிளம்பறோம்” என்றான் தேவேந்திரன்.

Advertisement

“இன்னைக்கே கிளம்புறிங்களா? ராஜஸ்தான்ல சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்கு, ஜெசல்மீர், மவுண்ட்அபு ஹில்ஸ், உதய்பூர் பேலஸ், ஜெய்பூர் அரண்மனை எல்லாமும் ரொம்ப நல்லா இருக்கும், எதாவது ஒன்னாவது எக்ஸிபீரியன்ஸ் பண்ணிட்டு இரண்டு நாள் கழிச்சு போலாம்” என்றான் இளவரசன்.

“எல்லாமும் பார்த்த இடம்தான் இளவரசா, வேணும்னா தேவராஜிம் நவீனாவும் இருந்துட்டு வரட்டும். பத்து நாள்ல செம்மரம் வெட்ட வராங்க, அதுக்கான வேலைகளை பார்க்கனும், ப்ரித்துக்கு எக்ஸாம்ஸ் வருது, லீவ் போட முடியாது” என்றான் தேவேந்திரன்.

நவீனாவிற்கு கணவனோடு இருக்கும் ஆசையிருக்க, “நானும்தான் வேலைக்கு போறேன், என் முதலாளி லீவ் கொடுக்கமாட்டார்” என்றாள் சிரிப்போடு.

Advertisement

இளவரசன் பொற்செல்வனைப் பார்க்க, “என்னோட ரொட்டீன் ஒர்க் என்னனு செல்விக்கும் ஆன்ட்டிக்கும் நல்லா தெரியும்” என்றான்.

“நைட் செவன்க்குதானே ப்ளைட்? இன்னும் கொஞ்ச நேரம் இருங்க, லன்ச் சாப்பிட்டு போலாம்” என்றாள் செல்வி.

“இல்லடாம்மா, என்னோட சின்ன வயசு நண்பனை பார்க்கனும், இங்க வரேனு சொன்னதும் வீட்டுக்கு வர சொன்னான், நான் மட்டும்னா போயிருப்பேன், பசங்களுக்கு பிடிக்காதுன்றதால இன்னொரு நாளைக்கு வரேன்னு சொன்னேன், நீ வரலனா என்ன? நான் வந்து உன்னை பார்க்குறேனு ஏர்போர்ட்டுக்கு வரேனு சொல்லியிருக்கான்.

ஃபாரின்ல செட்டில் ஆகிட்டான். மூணு வாரத்துக்கு முன்னதான் இந்தியா வந்தான். கிட்டதட்ட நாற்பது வருசத்துக்கப்புறம் பார்க்கப்போறேன், இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும்” என்றார் புருஷோத்தமன்.

யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் செல்வி யோசிக்கவில்லை. “நீங்க இருங்க, ஈவ்னிங் கிளம்பிடுவிங்க” என்றாள் பொற்செல்வனிடம்.

தேவேந்திரனும் தேவராஜும் சிரிக்க அவர்களை கண்டுகொள்ளவில்லை. “எனக்கு உங்ககிட்ட நிறைய பேசனும்” என்றாள்.

“நான் அப்பாகூட போகப்போறதில்ல, எனக்கு வேற ஒர்க் இருக்கு, அதை பார்த்துட்டு ஏர்போர்ட் போகனும்”

“பொய் சொல்லாதிங்க”

முறைத்தவன் “கடை காலி பண்ணியாச்சு, செக்கியுரிட்டிதான் ஹெல்ப் பண்ணினார், அவருக்கு செட்டில்மண்ட் பண்ணனும், கடை ஓனர்கிட்ட அட்வான்ஸ் வாங்கனும், இன்னைக்கு பார்க்க வரேனு சொல்லியிருக்கேன்” என்றான்.

“இன்னைக்கு என்னைத்தானே பார்க்க வந்திங்க?” என்றவளுக்கு கண்கள் கலங்கவே, உள்ளே சென்றுவிட்டாள்.

“அப்பா நீங்க கிளம்புங்க, நான் அரைமணி நேரம் கழிச்சு வரேன்” என்றான்.

“மருமககிட்ட சொல்லிட்டுதான் கிளம்பனும், போய் கூட்டிட்டு வா” என்றார் புருஷோத்தமன்.

“செல்வி வெளில வா, அப்பாம்மா கிளம்புறாங்க” என்றான் அறைக்கு வெளியிலிருந்தபடி.

“உள்ள போய் சமாதானம் செய்து கூட்டிட்டு வாடா” என்றான் தேவேந்திரன்.

அறைக்குள் சென்றவன், “உன்கிட்ட சொல்லிட்டு போக வெய்ட் பண்ணிட்டிருக்காங்க, வா” என்றான்.

“நீங்க?”

“கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பறேன்”

செல்வி வெளியே வர, “கோவிச்சிட்டு உள்ள போனா ஒன்னும் கிடைக்காது, எதுனாலும் அடம்பிடிச்சி வாங்கனும்” என கிசுகிசுத்தாள் ராஜலஷ்மி.

“சீக்கிரம் கல்யாணம் வைக்க கேளும்மா, நிறைய கமிட்மண்ட் இருக்குனு அதையும் தள்ளி போட்டுடப்போறான்” என தேவேந்திரன் சொல்ல, பொற்செல்வன் சிரித்தான்.

பொற்செல்வன் சிரித்ததில் செல்வி சற்று இயல்பானாள். பின்னே அனைவரும் விடைபெற்றனர்.

“எனக்கு கால் வருது, பேசிட்டு வரேன்” என்று இளவரசன் தனதறைக்கு சென்றிட, சமையலறையை ஒழுங்குபடுத்த சென்றிருந்தார் சாம்பவி.

செல்வியின் அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்தவன், “என்ன பேசனும்?” என்றான்.

செல்வனருகே அமர்ந்தவள், “நானொன்னும் உங்க எம்ப்ளாய் கிடையாது” என்றாள்.

பொற்செல்வனுக்கு சிரிப்பு வர, “அதுக்கு?” என்றான்.

“யாராவது கட்டிக்கப்போற பொண்ணுகிட்ட பாஸ் மாதிரி பேசுவாங்களா?”

“நீ பேசனும்னு சொன்ன, அதுக்கு நான் என்ன பேசனும்னு கேட்டேன், இதுல என்ன தப்பிருக்கு?”

“தப்பில்லதான், எனக்கு என்ன பேசனு மறந்துடுச்சு, நீங்க பேசுங்க, நான் கேட்குறேன்”

செல்வி மனதில் என்ன இருக்கிறது என்று அறியும் வாய்ப்பாக, “ஒரு ஃப்ரண்டா என்னைப் பத்தி உனக்கு எல்லாமும் தெரியும், ஃப்ரண்ட்ஸ்க்குள்ள எக்ஸ்படேஷன் இருக்காது. ஆனா ஹஸ்பண்ட் அண்ட் வெய்ஃப் அப்படி இருக்க முடியாதில்ல? உன்னோட ஹஸ்பண்ட்கிட்ட நீ என்ன எதிர்பார்க்குற?”

‘ஹஸ்பண்ட்’ என்ற வார்த்தை புது விதமான உணர்வை கொடுக்க, “ஹஸ்பண்ட்கிட்ட ஹஸ்பண்ட் மோட்தான் எதிர்பார்ப்பாங்க” என்றாள் சன்னக்குரலில்.

“அடி…” என தலையில் குட்டியவன், “வேற ஒன்னும் வேண்டாமா?” என்றான்.

ஜொலிக்கும் முகத்தோடு வேறு ஏதும் வேண்டாம் என்பதாய் தலையசைக்க, “பேச்சு மாறமாட்டியே” என்றான்.

இவள் யோசனையோடு பார்க்க, “ஹம்… ப்ரண்ட்ஸா இருக்கும்போது பத்து நாள் கழிச்சு பார்த்தா அத்தனையும் ஒப்பிப்ப. இனியும் அதையே செய்தா சமாளிச்சிடுவேன்.

அதைவிட்டுட்டு ஏன் பத்து நாள் வரல, ஏன் ஃபோன் அட்டண் பண்ணல? என்னையும் கூட்டிட்டு போக வேண்டியதுதானே? ஒர்க் டைம்ல சாப்பிட நேரமாச்சுனு நச்சு பண்றதுனு… இதெல்லாம் பண்ணமாட்டியா?” என்றான்.

“ஆமாம்ல? கண்டிப்பா அதெல்லாம் பண்ணுவேன்” என்றாள்.

“அடிப்பாவி, என்னை பிஸ்னஸ் பண்ண விடமாட்ட போல”

“எவ்வளோ பிஸியா இருந்தாலும் வீட்டு நினைப்பு கண்டிப்பா இருக்கனும், உங்களை அப்படியே விட்டுட்டா எங்க வேல்யூ தெரியாம போய்டும்” என்றவள் முகத்தில் முன்பிருந்த ஜொலிப்பில்லை.

அவளின் தந்தையை நினைக்கிறாள் என்று அப்பட்டமாக தெரிய, “அதெப்படி இல்லாம போகும்? ஆனா எல்லா நேரமும் நினைச்சிட்டிருக்க முடியாதில்ல? நீயும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்” என்றான்.

“ஸோ… ஒய்ஃப்கிட்ட நீங்க அட்ஜஸ்ட்மண்ட்தான் எதிர்பார்க்குறிங்க. எப்படி அட்ஜஸ்ட் பண்ணனும்?” என்றாள் தீவிர பாவனையில்.

“ஹேய்.. செல்வி, ச்சில்” என அமர்ந்த நிலையிலேயே தோளோடு அணைத்தான்.

“நாம ஃப்ரண்ட்ஸா இருக்கும்போது ஜாலியா இருந்தோம்ல?” என்றாள் ஏக்கத்தோடு.

“இனியும் அப்படித்தான் இருப்போம், உனக்கு என்கிட்ட எதாவது குறைனா உரிமையா கேட்கனும், சண்டை போடனும். மனசுல வச்சிட்டிருக்கக்கூடாது” என்றான் கோரிக்கையாக.

“ம், அதெல்லாம் நிறைய சண்டை போடுவேன், என் அம்மா மாதிரி இருக்கமாட்டேன்” என்றாள்.

தந்தையோடு என்னை ஒப்பிடுகிறாள் என்று செல்விக்கான பிரச்சனையின் நுனியை பிடித்துவிட்டான். அவரோடு ஒப்பிடும் அளவிற்கு என்ன செய்துவிட்டேன் என்று யோசித்தவன்,

என்னை பிடிச்சிருந்தும் எதுக்கு அவாய்ட் பண்ணின? என்று கேட்க நினைத்தான். அப்படி கேட்டால் சண்டையில் முடியும் என்று, “என்னை அவாய்ட் பண்ணி எவ்வளோ கஷ்டப்பட வச்சிட்ட தெரியுமா?” என்றான்.

இவள் தவிப்பாக பார்க்க, “இப்படி பார்க்கக்கூடாது, என்மேல தப்பிருந்தா ஏண்டா இப்படி செய்தனு உரிமையா சண்டை போடனும், நீ சண்டை போட்டாத்தான் உன்கிட்ட எனக்கு பொண்டாட்டின்ற உரிமை வரும், இல்லைனா ஃப்ரண்டா மட்டும்தான் இருக்க முடியும்” என்றான்.

“இப்படி பேசாதிங்க, எனக்கு பயமாயிருக்கு”   என்றாள் உண்மையாக.

“எதுக்கு பயப்படற? உன் மனசுல உள்ளதை கேளுடீ, கேட்க பயந்துட்டு நீயும் கஷ்டப்பட்டுக்கிட்டு, என்னையும் கஷ்ட்டப்படுத்திட்டிருக்கிறதை விட, பேசி சால்வ் பண்ணிக்கிறது பெட்டர் செல்வி”

“பேசலாம், ஆனா இன்னைக்கு வேண்டாம்”

“கொஞ்சம் முன்னதான் நிறைய பேசனும்னு சொன்ன, இப்போ இன்னைக்கு பேச வேண்டாம்னு சொல்ற. நான் கிளம்பட்டுமா?”

பொற்செல்வன் கோபமில்லாமல்தான் கேட்டான், கிளம்பறேன் என்றதும் செல்விக்கு கவலையானது. பொற்செல்வனின் கையைப் பிடித்தவள், “எனக்கு உங்களோட இன்னும் கொஞ்ச நேரமாவது இருக்கனும்” என்றாள் கெஞ்சலாக.

“ஃப்ரண்டாவும் இல்லாம, பொண்டாட்டியாவும் நினைக்க விடாம என்னை சித்திரவதை பண்ணாத செல்வி”

“பொண்டாட்டியா நினைக்க வேண்டாம்னு நான் சொன்னேனா?” என இவள் கலங்க, “செல்வி” என அலுத்துக்கொண்டாலும் அணைத்தும் கொண்டான்.

செல்வனின் அணைப்பு மனதிற்கு இதமாக இருக்க, செல்வனுக்கு வாகாக அவன்புறம் திரும்பினாள். “கதவு திறந்திருக்குடீ” என கிசுகிசுக்க, செல்வியிடம் பதிலேயில்லை.

சில நிமிடமில்லை, பத்து நிமிடங்களாகியும் செல்வியிடமிருந்து பதிலில்லை. “செல்வி” என தன்னிடமிருந்து பிரிக்க, “ம்ப்ச்” என்று இன்னும் இறுக்கிக்கொண்டாள்.

செல்வியின் முகத்தை பார்க்க, அதில் பெரும் தவிப்பிருந்தது. அன்று தன் வீட்டு தோட்டத்திலும் இப்படித்தான் கட்டிக்கொண்டாள். இப்படியே விட்டுச் சென்றாள் இன்னும் வருத்திக்கொள்வாள்.

செல்வி மனதில் இருட்டுப்பக்கம் உள்ளது. அதில் அவளின் தந்தை இருக்கிறார் என்று சற்று முன் ‘என் அம்மா போல இருக்கமாட்டேன்’ என்று சொன்னதில் புரிந்திருந்தான்.

தந்தை விசயத்தை பொறுத்தவரை செல்வியிடமிருந்து வார்த்தை வாங்குவது மிகக்கடினமான விசயம். வற்புறுத்தியும் வரவைக்க முடியாது. தானாகவும் சொல்லமாட்டாள்.

உன் செயலால் நான் கஷ்டப்படுகிறேன் என்பதை உணர்த்தினால் மட்டுமே வார்த்தை வர வாய்ப்பிருக்கிறது என்று, “என் உணர்வை மெண்ட்டலி ஆஃப் பண்ணிட்டு, ஃபிஸிக்கலி தூண்டிவிடற செல்வி” என்றான்.

பட்டென நிமிர்ந்து செல்வனின் முகம் பார்த்தாள். பொற்செல்வன் கண்களில் இருந்த வருத்தம் செல்வி மனதை வலிக்க செய்ய, “சாரி” என வருந்தினாள்.

“இப்படி உனக்குள்ள என்னை வச்சிக்கிட்டு சாரி சொன்னா போதுமா? என்னை விடனும்” என்றதும் செல்வி விலகி நிற்க, தனது இருப்பை மிகவும் எதிர்பார்க்கிறாள் என அறிந்தே “நான் கிளம்பறேன், டைமாகுது” என்றான்.

“நான் சாரி சொன்னா போதாது, ஆனா நீங்க கிஸ் பண்ணிட்டு ஈஸியா சாரி சொல்விங்க, அதுலயிருந்து நான் வெளில வரதுக்குள்ள வேற பொண்ணை பார்த்து நிச்சயமும் பண்ணுவிங்க, நான் எல்லாத்தையும் தாங்கிக்கனும்” என்றவளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்க, “ஹேய் செல்வி…” என இவன் அணைக்கப்போக,

தலை வின்னென்று வலித்தபோதும், அதனை அழுத்திப் பிடித்தபடி “வேண்டாம் போங்க உங்களுக்கு வேற வேலை இருக்கு, டைமாகுதுனு சொன்னிங்கதான? போங்க…” என கத்தினாள் வெளியில் கேட்கும்படி.

மகளின் கத்தலில் பதட்டத்தோடு அறைக்கருகே வந்து “செல்வி” என அழைக்க, “நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி” என்று கதவை சாற்றினான் பொற்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!