பொற்செல்வன் மறுக்க, தம்பியை தனியே விட மனமில்லாமல் “நான் ஒருமுறை கால் பண்ணி பார்க்குறேன், நம்பர் சொல்லு” என்று தம்பியிடம் கேட்டு செல்விக்கு அழைத்தான் தேவராஜ்
தேவராஜ் எண் செல்வியிடம் இல்லை ஆதலால், “யாராக இருக்கும்” என்று முணகியபடி அழைப்பை ஏற்றாள்.
“நான் தேவராஜ் பேசுறேன்ம்மா”
“சார்… நீங்களா?”
“ம் நான்தாம்மா, சென்னை போகப்போறேனு உன் அம்மா சொன்னாங்க, போக வேண்டாம், வீட்டுக்கு வா”
“சார், நாளைக்கு ஆஃபிஸ் போகலைனா வேலை போய்டும்”
“பரவால்லம்மா, கிளம்பி வா, அந்த வேலை இல்லைனா வேற வேலை பார்த்துக்கலாம். எதனால போக வேண்டாம்னு சொல்றேனு நேர்ல சொல்றேன்”
செந்தமிழ்செல்வி அமைதியாக இருக்க, “யோசிக்க வேண்டாம் செல்வி, ப்ராப்லம் இருக்கிறதாலதான் வர சொல்றேன், வேற எதாவது யோசிச்சிட்டு சென்னை கிளம்பிடாத, அப்புறம் நானும் செல்வாவும் சென்னை வர வேண்டியிருக்கும்”
தேவராஜ் தன்னிடம் பேசுவதே உலக அதிசயம், வேலை போய்விடும் என்று சொல்லியும் வர சொல்கிறார் என்றால் நிச்சயம் பெரிய காரணம் இருக்கும் என்று நினைத்தபடி “சரிங்க சார், நான் வரேன்” என்று இணைப்பை துண்டித்து கிளம்பிய டாக்ஸியிலேயே பொள்ளாச்சி போக சொன்னாள்.
செல்வி வரும் வரை அங்கேயே காத்திருந்தனர் இருவரும். ஒரு மணநேரத்தில் செல்வி வந்தாள்.
டேக்ஸிக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பியவள் இருவரையும் பார்த்ததும், என்னவாக இருக்கும்? ஒரு மணி நேரமும் தனக்காக இங்கேயே காத்திருந்திருக்கிறார்களா? முக்கியமான காரணத்திற்காக்கத்தான் பொற்செல்வன் தனக்கு அழைப்பு விடுத்தானா? அழைப்பை தவிர்த்தற்கு வேறு திட்டுவானே என்று படபடக்கும் இதயத்தோடு நடந்து வந்தாள்.
ஒரு மணி நேரமாக பதட்டத்தில் இருந்த பொற்செல்வனின் முகம் செல்வியைப் பார்த்த பின்னேதான் ஆசுவாசமானது.
தேவராஜிடம் வந்தவள், “எதுக்காகங்க சார் வர சொன்னிங்க?” என்றாள் பதட்டத்தோடு.
“இப்போ காரணத்தை சொல்லுற நிலைமைல நான் இல்லம்மா, ஒன் ஆர் ட்டூ மன்ந்த்ஸ் வெளில எங்கேயும் வேலைக்கு போக வேண்டாம். ப்ராப்லம் சால்வ் ஆன பின்னாடி செல்வா நல்ல வேலையா பார்த்து தருவான்” என்றான் தேவராஜ்.
எதோ தலைபோகும் விசயம் போல என்று பதட்டத்தில் வந்தவளுக்கு, எல்லாம் பொற்செல்வன் வேலை. அவன் சொல்லி நான் கேட்காததால் அண்ணனிடம் சொல்லி தன்னை வரவழைத்திருக்கிறான் என்று கோபம் வர “நான் வேலைக்கு போறதால யாருக்கு சார் ப்ராப்லம்?” என்றாள் பொற்செல்வனைப் பார்த்தவாறு.
பொற்செல்வன் முறைக்க, “உனக்குத்தான்ம்மா ப்ராப்லம், அதனாலத்தான் வர சொன்னேன்” என்றான் தேவராஜ்.
“அஞ்சு வருசமா உங்க கம்பெனியில ஒர்க் பண்ணியிருக்கேன், உங்க வீட்டுக்கும் வந்துட்டு போய்ட்டிருக்கேன், ஆனா ஒரு நாள், ஒரு வார்த்தை நீங்க என்னோட பேசினதில்ல. ஏன்… என்னை பார்த்திருப்பிங்களானு கூட தெரியல. இன்னைக்குத்தான் என்னை பார்க்குறிங்க, பேசுறிங்க. எனக்கே தெரியாத என்னோட ப்ராப்லம் உங்களுக்கு எப்படி சார் தெரிஞ்சது?” என்றாள்.
செந்தமிழ்செல்வியின் பாவனையிலேயே அவளின் எண்ணம் புரிய, “நான்தான் எங்கண்ணன்கிட்ட இப்படி பேச சொன்னேன், இப்போ என்னாங்குற?” என்றான் பொற்செல்வன்.
செந்தமிழ்செல்வி நேரத்தைப் பார்த்தாள். மீண்டும் கிளம்பத்தான் நேரம் பார்க்கிறாள் என்றுணர்ந்து, “வேலைக்கெல்லாம் போக முடியாது. ஒழுங்கா வீட்டுக்கு போ” என்றான் கட்டளையாக.
“எனக்கு ஆர்டர் போட நீங்க யாரு? இந்த வேலையை விட்டா இன்னொரு வேலை கிடைக்கும்தான். ஆனா என்னோட இந்த மன்ந்த் சேலரி போச்சே, அதுக்கு என்ன பண்ணப்போறிங்க?”
“நான் தரேன்”
“நான் எதுக்கு உங்ககிட்ட பணம் வாங்கனும்? எனக்கு தேவையில்லை” என்று பொற்செல்வனிடம் சொல்லி, தேவராஜைப் பார்த்தாள்.
தொழில் விசயத்தில் பொற்செல்வன் குணம் அறிந்த தேவராஜிற்கு, இத்தனை தைரியமாக தம்பியிடம் பேசும் பெண் இவள் ஒருத்திதான் என்றும், இவளின் பேச்சிற்கு கோபம் கொள்ளாமல் அவளின் நலனிற்காக மட்டுமே முறைத்துக்கொண்டிருக்கும் தம்பியின் மனமும் நன்றாக புரிந்தது அண்ணனிற்கு.
“அன்னைக்கு ஹார்ஸ்ரைடிங்ல நான் இருந்தப்போ நீ என்னோட பேசிட்டிருந்தல்ல? அதை என்னோட எதிரிங்க கவனிச்சிட்டாங்க. என்னால உனக்கு ஏதும் ஆகிடக்கூடாதுனுதான் உன்னை வர சொல்றேன்.
தயவு செய்து புரிஞ்சுக்கோ. இரண்டு மூனு மாசம் மட்டும் வெளில போகாத. ப்ராப்லம் சால்வ் ஆன பின்ன உன் விசயத்துல தலையிடமாட்டேன்” என்றான் சற்று தன்மையாகவே.
சற்றே நிதானித்தாலும், “இல்ல… உங்களுக்கு அப்படிலாம் யாரும் எனிமீஸ் கிடையாது. நேர்மையான பிஸ்னஸ்மேன் நீங்க. எல்லாரையும் பேசியே கவுத்துடுவிங்க. நான் வெளில வேலைக்கு போறது உங்களுக்கு பிடிக்கல, அதனாலதான் இப்படி பண்றிங்க” என்றாள்.
“அண்ணா நீங்க போங்க, நான் இவகிட்ட பேசிட்டு வரேன்” என்றதும் குறுஞ்சிறிப்போடு காரை நோக்கி நடந்தான் தேவராஜ்.
இதற்கு பொற்செல்வன் பதில் சொல்லும் முன்னே “என் அண்ணியைப் பார்த்துக்க எனக்கு தெரியும், என் முன்னாடி வந்த அவ்வளோதானு சொன்னிங்க, இப்போ எதுக்கு வர வச்சிங்க?” என்றாள் ஆற்றாமையோடு.
செல்வியின் பேச்சு கோபத்தை கொடுத்தபோதும், கோபத்தை காட்டும் நேரம் இதுவல்ல, தான் தணிந்தால்தான் சென்னை போவதை நிறுத்துவாள் என்று, “அன்னைக்கு எதோ கோபத்துல பேசிட்டேன், சாரி” என்றான்.
பொற்செல்வன் தணிந்து பேசியதும் செல்விக்கு அழுகை வருவதுபோல் இருக்க, ‘மானங்கெட்டவளே… இவன் முன்னாடி அழுது வச்சிடாத’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு திரும்பி நின்றாள்.
பொற்செல்வன் அருகே வருவதுபோல் தோன்ற, இன்னும் இரண்டடி முன்னே சென்றவள், “உங்க அண்ணியைப் பத்தி நான் நினைக்கக்கூடாது. ஆனா நீங்க என் நல்லதைப் பத்தி நினைப்பிங்களா? உங்க பேச்சை கேட்கமாட்டேன். இந்த வேலை இல்லைனாலும் வேற வேலை தேடிப் போகத்தான் போறேன்” என்றாள்.
இவனின் திருமணம் முடியும் வரை தன்னை இங்கிருக்க வைக்க எண்ணுகிறான். அமிர்தவள்ளி ஆன்ட்டி தன்னை மகள் போல் பார்க்கிறார், மகன் திருமணத்தில் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார், சரிதான். ஆனால் தன்னிடத்தில் எப்படி நடந்துகொண்டான் என்பதை மனதில் வைத்து இவனல்லவா நான் வேண்டாம் என்று அன்னைக்கு எடுத்துரைக்க வேண்டும்.
“அன்னைக்கு நடந்ததுக்கு பலமுறை சாரி சொல்லிட்டேன். நம்ம பர்சனலை இதுல கொண்டு வராத செல்வி. நிஜமா பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. உனக்கு ஏதும் ஆகிடக்கூடாதுனுதான் வரவழைச்சேன். இரண்டு மாசம்னு இல்ல, அதுக்கு முன்னாடி ப்ராப்லம் சால்வ் ஆகிட்டா நானே சொல்றேன். நீ எங்கேன்னாலும் வேலைக்கு போ” என்றான் மீண்டும்.
உண்மையில் ஏதே பிரச்சனைதான் போலவே என்று நினைத்தபோதும், “நான் பேச வந்தப்போ குதிரைலயிருந்து கீழக்கூட இறங்கல. நானெதுக்கு நீங்க சொன்னா கேட்கனும்?” என்றாள்.
“அதான், என் எனிமீஸ் உன்னை” எனும்போதே “இந்த கதையெல்லாம் வேண்டாம். உண்மையை சொல்லுங்க” என்றாள்.
வெகு நாள்களுக்குப் பிறகு செல்வியோடு பேச்சை வளர்க்கும் ஆசை வர, “அது எங்க குடும்ப பர்சனல், முன்னனா சொல்லியிருப்பேன், நீதான் நாங்க வேணாம்னு வேற வேலைக்கு போய்ட்டல்ல, அதனால சொல்ல முடியாது” என்றான்.
“அப்போ நானும் இங்க இருக்க முடியாது”
“நல்லபடியா சொல்றேன், கேட்டா உனக்கு நல்லது. கேட்கலைனா எனக்கு நல்லது”
“கேட்கலைனா உங்களுக்கு நல்லதா?” என யோசனையோடு முணுமுணுக்க,
“ஆமாம் கேட்கலைனா எனக்குத்தான் நல்லது. நீ திரும்ப எங்கேயாவது போனா பின்னாடியே நான் வருவேன். ஆன்ட்டி பர்மிஷனோட வருவேன். அது எனக்கு நல்லதுதானே?”
செல்வியின் கண்கள் கலங்கவே, “ம்ச்ப்… சும்மா அழக்கூடாது. நீ இரண்டு மாசம் எங்கேயும் போகாம இருந்தா இந்த பிரச்சனைலாம் வராது” என்றான்.
“என்கிட்ட ரீசன் சொல்லமாட்டேங்கிறிங்க, வேலைக்கு போகலையானு அம்மா கேட்டா என்ன சொல்வேன்?”
“ஆன்ட்டிக்கிட்ட பேசிட்டேன், உன்னை ஏதும் சொல்லமாட்டாங்க”
ஏற்கனவே அம்மாக்கு நான் சென்னையில வேலைக்கு போறது பிடிக்கல, இதில் இவன் வேறு பர்மிஷன் கேட்டுவிட்டான், இனி நான் வேலைக்கு போன மாதிரிதான் என்று, “சரி நான் எங்கேயும் போகல, இப்போ நிம்மதியா?” என முறைத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.
அவள் பின்னாலே செல்லும் மனதை அடக்கி, அவளையே சற்று நேரம் பார்த்திருந்து சாம்பவிக்கு அழைத்து “நான் பேசிட்டேன் ஆன்ட்டி, நீங்க அவளை சமாதானம் பண்ணுங்க. கோபத்தோட வீட்டுக்கு வந்திட்டிருக்கா” என்று இணைப்பை துண்டித்து, ராகுலுக்கு அழைத்து சாம்பவி, செந்தமிழ்செல்வியின் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து அண்ணனோடு கிளம்பினான் பொற்செல்வன்.