Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 8.2

முதல்ல பயந்தான். பயம் இருக்குனா வேண்டாம்னு சொன்னேன். பணத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை நாளுக்கு அவனுக்கு சம்பாதிச்சு கொடுக்குறது? பண்றேனு சொன்னான்.

மார்ட்டினோட அப்பா மாதிரி இவன் இருக்கமாட்டான். இப்போ வந்தவன் உனக்கு தலைவனா இருக்கிறதை விட அந்த இடத்தை நீ பிடிக்க ட்ரை பண்ணுனு சொன்னேன், அதை செயல்படுத்த ப்ளான், பண உதவினு எல்லாமும் செய்யிறேன், பதிலுக்கு என்னை இதுலயிருந்து விட்டுட்டா போதும்னு சொன்னேன். என்னால முடியுமானு சந்தோசமா கேட்டான். இப்போ செயல் படுத்திட்டும் இருக்கான்.

அவனோட ப்ளான் சக்ஸ்ஸ் ஆக இன்னும் கொஞ்சநாள்தான் இருக்கு. இனி என்னைப் பத்தி வெளில விசாரிக்காத செல்வா. தேவராஜ்னு ஒருத்தன் இதை பண்ணிட்டிருந்தானு நீயே காட்டிக்கொடுத்த மாதிரி ஆகிடும். என் உயிர் போனா பரவாயில்ல. உனக்கு பிரச்சனை ஆகிடப்போகுது” என்றான் கவலையாக.

“ஒரு தப்பை மறைக்க பல கிரிமினல் வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. எங்கையாவது தப்பாகிடுச்சுனா என்னாகுறது? லட்சம் லட்சமா அள்ளி கொடுத்திட்டிருக்கிங்க, நிம்மதி, சந்தோசம் கெடுத்து எவ்வளோ பணமிருந்தும் என்ன யூஸ்?” என்றான் கோபமாக.



Advertisement

“ஹம்… இவ்வளோ பணம் சம்பாதிக்கனும்னு நான் இந்த தொழிலுக்கு போகல, என் திறமை பணத்தை சேர்த்துச்சு. ஆனா என்ன செலவு செய்யனு தெரியல, தோணவும் இல்ல” என்றான் மிகுந்த வேதனையோடு.

மகன் உள்ளே போய் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியிருக்க, “தேவா, செல்வா” என்று உரக்க அழைத்தார் அமிர்தவள்ளி.

“வரேன்ம்மா” என்றவன், “இனியும் உள்ளயிருந்தா அம்மா மண்டை வெடிச்சிடும், மீதியை அப்புறம் பேசலாம்” என்று பொற்செல்வன் கதவை திறக்க, “இரண்டு நிமிஷத்துல வரேன், டீ போடுங்க” என்ற தேவராஜ், அமிர்தவள்ளி அகன்றதும், “எதோ பல டென்ஷன்ல இருக்கேனு சொன்னியே? அதுல முக்கியமான டென்ஷன் செல்விதான?” என்றான் இலகுவாக.

Advertisement

அவள் மீதுள்ள ஈர்ப்பை அண்ணன் கண்டுகொண்டாரோ என்று சந்தேகம் வந்தபோதும், “ஆமாம் செல்விதான். என்னோட பேசிட்டிருந்ததை வச்சு அவளைத்தான டார்கட் பண்ணியிருக்காங்க, அப்போ அவளைத்தான் கேர் பண்ணிக்கனும்” என்றான் தடுமாறாமல்.

Advertisement

“ஓ… அவ்வளோதானா?” என்றான் நம்பாத பார்வையோடு.

“என்ன? என்ன அவ்வளோதானா?” என இவன் முறைக்க, “இத்தனை என்ன வரும்போதே எனக்கு புரிஞ்சிடுச்சு. நீ அவ்வளோதான், முடிஞ்சிட்ட” என்றான் சிரிப்போடு.

“நீங்களா எதாவது யோசிச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது, ஒரு பொண்ணோட பர்மிஷன் இல்லாம அவளைப்பத்தி இப்படி யோசிக்கிறது தப்பு. நீங்களா எதாவது நினைச்சிட்டு எங்கையாவது உளறி வச்சிடாதிங்க. அது செல்வியோட ஃப்யூச்சரை பாதிக்கும்.

Advertisement

நமக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு, கண்டபடி யோசிக்கிறதை விட்டுட்டு கேர்ஃபுலா இருக்கப் பாருங்க” என்றான் கட்டளையாக.

தேவராஜ் அறையில் நவீனா இருப்பதால் தேவராஜ் பொற்செல்வன் அறைக்கே மீண்டும் சென்றான். சோபாவில் அமர்ந்த பொற்செல்வனுக்கு செந்தமிழ்செல்வியின் நினைவுதான். திருமணத்திற்கு செல்வி மறுத்தாளா? இல்லை சம்மதித்தாளா? இருக்கும் பிரச்சனையில் இவள் வேறு வதைக்கிறாள். என்று நொந்துகொண்டான்.

கணவனும் கொழுந்தனும் என்ன பேசியிருப்பார்கள்? என்ற ஆவலோடு பொற்செல்வனை பார்த்திருந்த நவீனாவிற்கு பொற்செல்வனின் வேதனையான முக பாவனையால் ஏமாற்றமே மிஞ்சியது.

“என்ன சொன்னான் செல்வா? விவாகரத்து வேண்டாம்னு சொன்னியா? நவீனா சின்ன பொண்ணு, வாழ்க்கை ரொம்ப பெருசுனு தெரியாம கேட்குறா, எல்லாம் போகப்போக சரியாகும்னு சொன்னியா?” என்று பரபரத்தார் அமிர்தவள்ளி.

அன்னையின் குரலில்தான் செல்வி மீதான கவனம் கலைத்து பொற்செல்வன் நிமிர, அந்த நேரம் பொற்செல்வன் அறையிலிருந்து தேவராஜ் வரவும் வேதனையான முகத்தோடு உள்ளே சென்றாள் நவீனா.

விவாகரத்துப் பற்றி நவீனாவிடம் பேசியதோடு சரி. இன்னும் தேவராஜிடம் யாரும் பேசியதில்லை. மகன் கேட்டிருந்தால் ஆயிரம் அறிவுரை சொல்லியிருப்பார் அமிர்தவள்ளி.

ஆனால் கேட்பது மருமகள் எனும்போது மகனிடம் என்ன பேச? என்று மொத்த குடும்பமும் தவித்திருந்தனர். ஆனால் இன்று அமிர்தவள்ளியால் பேசாமல் இருக்க முடியவில்லை.

தேவராஜிடம் “நீ செல்வா ரூமுக்கு போனதுலயிருந்து வெளில வர வரைக்கும் செல்வா ரூமையேதான்டா நவீனா பார்த்திட்டிருந்தா, அவ கண்லயிருந்த எதிர்பார்ப்பை பார்த்தா நவீனாவா உன்கிட்ட டிவோர்ஸ் கேட்டானு சந்தேகமா இருக்கு.

உனக்கு அவளை பிடிக்கலனு நினைச்சிகிட்டு விவாகரத்து கேட்குறானு நினைக்கிறேன் தேவா. மருமகளை கூட்டிகிட்டு எங்கையாவது போய்ட்டு வா. கண்டிப்பா மனசு மாறும். குறை சொல்ற மாதிரியா உனக்கு பொண்டாட்டி அமைஞ்சிருக்கா? இப்படி புள்ளையோட வாழாம இருந்து எதை சாதிக்கப்போற?” எனப் பொறிந்தார் அமிர்தவள்ளி.

ஏதும் பேசாமல் தேவராஜ் வெளியேற எத்தனிக்க, “நில்லுடா” என்று மகன் முன்னே போய் நின்றார்.

அமிர்தவள்ளி வந்த வேகத்தில் தடுமாறவே, சட்டென அன்னையை தாங்கினான் தேவராஜ். “உன் கவலைலயே உங்கப்பாக்கு உடம்பு முடியாம போச்சு. சின்ன வயசுல காசு தரலைன்றதுக்காக விவரம் வந்த பின்னாடியும் அவரோட பேசாம இருந்து வதைக்கிறியே, இது உனக்கு நியாயமா இருக்காடா?

பிள்ளைங்க நல்லா இருக்கனும்னுதான எல்லா பெத்தவங்களும் நினைப்பாங்க? தேவேந்திரன், செல்வாகிட்டயும் கூட உன்கிட்ட இருந்த மாதிரியேதான கண்டிப்போட இருந்தார்? அவனுங்க இரண்டு பேரும் இப்படியாடா இருக்காங்க? நீயும் வாழாம, எங்களையும் நிம்மதியா இருக்க விடாம ஏண்டா இப்படி இருக்க?” என்றார் கண்ணீரோடு.

அன்னையின் கண்ணீருக்கு வேதனையடைந்தானே தவிர, ஆறுதலுக்காக கூட பதில் பேசவில்லை தேவராஜ். இத்தனை ஆண்டுகள் பொய்யாக இருந்தவனுக்கு, மனம் திருந்திய பின்னே அனைவரோடும் இணக்கமாக இருக்க ஆசைதான்.

ஆனால் அவனின் எதிர்காலம் என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் எதை பேசுவது? இப்படியே இருந்துவிட்டாலாவது எனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால் விரைவாக தேறி வருவார்கள்.

கசப்பு பக்கங்களை சொன்னால் இன்னமும் மனம் உடைந்துபோவார்கள். இத்தொழிலிருந்து விடுபடுவோமா? அல்லது உடலிலிருந்து தனது உயிர் விடுபடுமா என இன்னும் ஓரிரு மாதத்தில் தெரிந்துவிடும்.

நான் இறந்துபோனால் தன்மீதுள்ள வெறுப்பு இவர்களுக்கு மருந்தாக மாறும். ஒருவேளை பிரச்சனைகளிலிருந்து விடுபட்டால் குற்றவுணர்விலிருந்து வெளி வரவும், குடும்பத்தவர் நிம்மதிக்காகவாவது இயல்பாக இருக்கவும் முயற்சிக்கலாம் என்று நினைத்தபடி தனது அறையைப் பார்த்தவன்,

மனைவியிடமாவது உண்மையை சொல்லி, நான் உனக்கு தகுதியில்லாதவன், மறுமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்’ என்று எடுத்துரைக்க வேண்டுமென்ற  சிந்தனைகளோடு அமைதியாகவே நின்றிருந்தான் தேவராஜ்.

“எவ்வளோ கத்துறேன், பதில் சொல்றானா பாருடா, எப்படி இப்படி கல்நெஞ்சமானான்? என்ன சாபமோ… எத்தனை கடவுள்கிட்ட வேண்டியும் எனக்கு பொண்ணு பிறக்கல, இப்போ வாழ வந்த பிள்ளையை துரத்திவிட்டு இன்னும் எத்தனை ஜென்மத்துக்கு அனுபவிக்கப்போறோம்னு தெரியலையே.

ஒத்த வார்த்தை அதிர்ந்து பேசமாட்டா, இந்த இரண்டு வருசத்துல நீ மருமகளோட பேசி நான் பார்த்ததேயில்ல. நானா விசாரிச்சாலும் உன்னைப் பத்தி ஒருகுறையும் சொன்னதில்ல. இப்படிபட்ட பிள்ளைக்கு என்ன பதில் சொல்லப்போறேன்?

பொண்ணு பெத்திருந்தா அருமை தெரியும், பையனை பெத்தவங்களுக்கு என்ன தெரியும்னு ஊர்சனம் பேசுவாங்களே… அதைவிட முக்கியமா, மருமக அப்பாம்மாக்கு என்ன பதில் சொல்வேன்?

பொண்ணு கேட்டப்போவே நீங்க பெரிய இடம், உங்களவுக்கு எங்களால செய்ய முடியாதுனு சொன்னாங்க. ஏதும் செய்ய வேண்டாம், பொண்ணு மட்டும் போதும்னு கேட்டு உனக்கு கட்டி வச்சேன், இப்படி பாதில அத்து விடத்தான் அன்னைக்கு எங்களை சமாதானம் செய்து சம்மதம் வாங்குனிங்களானு கேட்டா என்னடா சொல்லுவேன்?

இரண்டு வருசம் நம்ம வீட்டுல வாழ்ந்த பொண்ணை இனி யார் கட்டிக்குவா? உன்னோட விவாகரத்துக்கு அப்புறம் நவீனா வாழ்க்கை என்னாகும்? வயசான பெத்தவங்களுக்கு இப்படி பாரத்தை திணிக்கலாமா? வேணாம் தேவா. இந்த பாவத்தை செய்ய வேண்டாம். இன்னும் இரண்டொரு மாசம் கூட நல்லா யோசிச்சு மருமகளோட வாழப்பாரு தேவா” என கண்ணீரோடு கெஞ்சினார் அமிர்தவள்ளி.

உள்ளுக்குள் நொறுங்கிய போதும், மனைவியோடு சேர்த்து அன்னைக்கும் பொய் ஆறுதல் சொல்ல மனமில்லாமல் போக, யாரையும் நேர்கொண்டு காணாமல் கிளம்பியிருந்தான் தேவராஜ்.

“எப்படி போறான் பாரு செல்வா” என பொற்செல்வன் அருகே வந்தார் அமிர்தவள்ளி.

அன்னையை தன்னோடு அமர்த்திக்கொண்டவன், “ம்மா, கவலைப்படாதிங்க. அண்ணன் வாழ்க்கை கண்டிப்பா சரியாகும். சரி பண்ணாம நான் விடமாட்டேன்” என்றான் உறுதியாக.

“பேசுனியா செல்வா? என்கிட்டதான் ஏதும் சொல்லாம போறான், உன்கிட்டயாவது எதாவது சொன்னானா?” என ஆவலோடு வினவ, “பேசினேன்ம்மா, அண்ணி விசயத்துல இந்த நிமிஷம் வரை பிடிகொடுக்கமாடேங்குறார். ஆனா முன்ன மாதிரி இல்லாம என்கிட்ட கொஞ்சம் இயல்பா பேசுறார். கூடிய சீக்கிரம் சரி பண்ணிடுவேன்ற நம்பிக்கை இருக்கும்மா” என்றான்.

“நேத்தெல்லாம் நவீனா வீட்டுலயே இல்ல, விவாகரத்துக்கு ஏது அப்ளை பண்ண போனாளானு மனசு பக்கு பக்குனு இருக்கு செல்வா. உன் அண்ணிகிட்டயும் பேசு” என்றார் அமிர்தவள்ளி.

“அப்ளை பண்ணட்டும்மா. அப்ளை பண்றதை தள்ளி போட்டா அண்ணிக்குத்தான் பிரச்சனை. முடிஞ்சவரை டிவோர்ஸ் நடக்க விடாம பார்க்குறேன். என்னை மீறி எதாவது நடந்தாலும் அண்ணி வாழ்க்கையை சரி பண்ணாம விட மாட்டேன். நீங்க கவலைப்படாதிங்க”

“என்னவோ செல்வா, உன்னை நம்பித்தான் இருக்கேன். இரண்டு மூணு மாசத்துக்குள்ள இவங்க வாழ்க்கை சரியாகிட்டா, அடுத்து உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்கனும்” என புலம்பி, “டீ கேட்டுட்டு குடிக்காமலே போய்ட்டான். உனக்கு சாப்பிட எடுத்து வரவா?” என்றார்.

“வேண்டாம்மா, அர்ஜண்ட் வேலையிருக்கு, நான் பார்த்துட்டு வந்து சாப்பிடறேன்” என்று வெளியேறினான் பொற்செல்வன்.

*** *** *** *** ***

சாம்பவி மகளுக்கு வரன் பார்க்கிறாள் என்ற விசயம் தாமோதரனுக்கு தெரிய வர, “உன் அம்மா என்னை கேட்காம என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பாளா?” என்று மகனிடம் கத்தினார்.

அன்னை தன்னிடம் கூட சொல்லவில்லையே என்று இளவரசனுக்குமே வருத்தம் உண்டானது. ஆனாலும் தந்தையிடம் தனது வருத்தத்தை காண்பிக்காமல், “எனக்கானது எல்லாம் அம்மாவை கேட்டுத்தான் செய்திங்களாப்பா?” என்றவன், மேலும் ஒரு மணிநேரம் வரை தந்தையிடம் வாதம் செய்து, அன்னைக்கு அழைத்தபடி தனதறைக்குச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!