Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 9.2

தானேவிலுள்ள (மும்பை) மருத்துவமணையில் இருந்தனர் தேவராஜும் பொற்செல்வனும். மூன்று நாள்கள் ஆகியும் இன்னும் கண்விழிக்கவில்லை தேவராஜ்.

தேவராஜ் விசயத்தில் தலையிட்ட அடுத்த மாதமே தான் நினைத்ததை போல அண்ணனை விடுவிப்பது சுலபமல்ல, தானாக எதையாவது செய்து பிரச்சனையில் முடிந்தால் அண்ணனின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று புரிய, தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் உதவி கேட்க முடிவெடுத்தான்.

இல்லீகல் பிஸ்னஸ்க்கெல்லாம் நாங்க உதவி பண்ணுவதில்லை என்றார்கள். தனது அடையாளத்தை சொல்லி “என் பிஸ்னஸை பார்க்கவே எனக்கு நேரம் போதவில்லை. இப்படி பிஸ்னஸ் பண்ணனும்ன்ற அவசியமும் எனக்கில்லை. மார்ட்டின்லூர்துவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக கேட்கிறேன்” என்றிருந்தான்.

பொற்செல்வனின் பின்புலமறிந்த பின்னேதான் சம்மதித்தார்கள்.



Advertisement

டிடெக்ட்டிவை அணுகியிருக்கிறேன் என்று தனது அண்ணனிடம் சொல்லவில்லை. மார்ட்டின்லூர்துவின் வரலாற்றை அறிந்துகொள்ள தனியார் நிறுவனம் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது.

மூன்று மாதங்கள் கழிந்த பின்னே, மார்டின்லூர்து கடத்தல் பண்றவன், என்று சிலரின் பெயர்களை சொல்லி இவர்களால் மார்டினுக்கு ஆபத்து வரப்போகிறது. இதற்கு மேல் இப்பணியை தொடர முடியாது என்றுவிட்டது துப்பறியும் நிறுவனம்.

துப்பறியும் நிறுவனம் அளித்த தகவலின் படி தேவராஜின் பெயர் இல்லை என்பது பெரும் நிம்மதி.

Advertisement

மார்ட்டின்லூர்துவை கொல்லப்போகிறார்கள் என்று முன்பே தேவராஜ் சொல்லியிருந்ததால், தனது அண்ணனிடம் பேசி மார்ட்டினை கொல்லப்போகும் நபரின் விபரம் அறிந்து, அவனை பின்தொடர பொற்செல்வன் இரண்டு பேரை நியமித்தான்.

Advertisement

அவர்களில் ஒருவனிடமிருந்து, இன்று தேதி பத்து, வருகிற இருபதாம் தேதி மார்ட்டினை கொல்லப்போகிறார்கள் என்று தகவல் கிடைத்தது பொற்செல்வனுக்கு.

மார்ட்டின்லூர்துவை டெல்லியில் வைத்து முடிக்கத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றறிந்த பொற்செல்வன், அண்ணனை அழைத்துக்கொண்டு மும்பை செல்ல திட்டமிட்டான்.

பிற்காலத்தில் பிரச்சனை வந்தால் அண்ணன் தன்னோடு சேர்ந்து தொழில் செய்கிறார் என்ற ஆதாரத்திற்காக, கடந்த ஐந்து மாதங்களாக தொழில் விசயமாக எங்கு வெளியூர் சென்றாலும் அண்ணனை அழைத்துக்கொண்டுதான் சென்றான் பொற்செல்வன்.

Advertisement

தம்பியின் தொழில் விசயத்தில் தலையிட பிடிக்கவில்லைதான். ஆகினும் வீட்டில் நவீனாவின் உயிர்பில்லாத முகத்தை பார்ப்பதற்கு தம்பியோடு வெளியில் செல்வது மேல் என்று பொற்செல்வனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவனோடே சுற்றிக்கொண்டிருந்தான்.

மும்பை கிளம்பவேண்டும் என்று சொன்னபோது, தேவராஜிற்கு சலிப்புதான். “பெங்களூர் போய் வந்து இரண்டு நாள்தான் ஆகுது, எனக்கு வெளில வர மூட் இல்லைடா” என்றான்.

“இன்னைக்கு கிளம்பியே ஆகனும். ஒரு மால் விலைக்கு வருது. இன்னைக்கு போகலைனா மால் கைவிட்டு போய்டும், எனக்கு தெரிஞ்ச சிங்கிட்ட சொல்லி வச்சிருந்தேன், நல்ல விசயமா போகும்போது சலிப்பா பேசக்கூடாது” என்று கட்டளைபோல் சொல்லி அழைத்துச் சென்றான்.

கடந்த ஐந்து மாதங்களாக தனது கணவன் கொழுந்தனோடு இணங்கியிருப்பதில் நவீனா மிகுந்த சந்தோசம் கொண்டிருந்தாள். விவாகரத்து வழக்கின் வாய்தா இன்னும் சில நாள்களில் வரவிருக்க, விவாகரத்து வேண்டாம் என்று சொல்வானோ? அல்லது சின்னவர் சொல்ல வைப்பாரோ என்று மிகவும் எதிர்பார்த்தாள் நவீனா.

ஆனால் ஏதும் நடக்கவில்லை. மும்பை கிளம்பவேண்டும் என்று சொன்னதும், “வர ரொம்ப நாளாகுமா? கேஸ் ஹியரிங் வருது, கோர்ட்டுக்கு போகனும்” என்றாள் பொற்செல்வனிடம்.

கணவனுக்கும் கேட்கும்படிதான் சொன்னாள். “அதுக்குள்ள வந்திடுவோம், செட்டில்மண்ட்க்கு உனக்கு என்ன வேணும்னு யோசிச்சிக்கோ” என்று நவீனாவைப் பாராமல், அவள் மனம் தன்னை வெறுக்கும்படி ஒட்டுதலில்லாமல் சொல்லி அவ்விடம் விட்டு சென்றான் தேவராஜ்.

நவீனா கொட்டிய கண்ணீரில் பொற்செல்வனுக்கு மனம் வலிக்கவே, “எதுக்கு அண்ணி அழறிங்க? இந்த நரகத்துலயிருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்க வேண்டிக்கோங்க” என்றவன்,

கலக்கத்தோடு அமர்ந்திருந்த தாய் தந்தையிடமும், “அண்ணி பொண்ணு மாதிரினுதான சொல்லுவிங்க? எப்படி பேசிட்டு போறார்னு பார்த்திங்கல்ல? இப்படி புருசனோட வாழ வேணாம்னு அண்ணிக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு எதுக்கு இப்படி அழறிங்க?” என்று கடுகடுத்து, “மும்பை போறோம்மா, வர ஒரு வாரம் ஆகும்” என்று கிளம்பினான்.

காருக்குள் அமர்ந்தவன், “அண்ணி பின்னாடி உங்களை சுத்த விடல… என் பேரு பொற்செல்வன் இல்ல” என்றான் தீப்பார்வையோடு.

தேவராஜ் “நல்ல பேரை மாத்துறதை விட்டுட்டு, நான் நல்லவன் இல்லைனு நவீனாக்கு புரிய வை.” என்றான் இலகுவாக.

மும்பை வந்த பின்னே இரண்டு நாள் எங்கேயும் செல்லவில்லை. நேற்றே மார்ட்டினை கொல்வதாக தகவல் வந்தது. அதனால்தான் ஒரு நாள் முன்பாக மும்பைக்கு வந்திருந்தான் பொற்செல்வன். ஆனால் இன்னும் மார்ட்டின் உயிரோடுதான் இருக்கிறான்.

இங்கே பொற்செல்வன் சந்திக்க வேண்டிய நபரிடம் பேசிய பின்னே, அண்ணனை அழைத்துக்கொண்டு சென்றான்.

தேவராஜ் “இருக்குற சொத்தை மெயின்டென் பண்றதே பெரிய விசயமா இருக்கு. இதுல மும்பைல மால் தேவையா?” என முறைத்தான் பொற்செல்வனை.

பொற்செல்வனுக்கும் இங்கே மால் வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை, டெல்லியில் மார்டினை கொல்லும் நேரத்தில் அண்ணன் மும்பையில் இருக்கவேண்டும் என்றெண்ணியே சென்றமாதம் வந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டான்.

இன்று சிங்கை சந்திக்க வேண்டிய நாள். நினைத்த காரியம் நடந்தேறும் வரை எதாவது பேசி வாய்ப்பினை நீட்டிக்க வேண்டும் என்று நினைத்தபடி அண்ணனை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

“உன் மூஞ்சே சரியில்லையே? என்னை வச்சு யாராவது உன்னை மிரட்டுறாங்களா செல்வா?” என்றான் தேவராஜ்.

“என்னைப் பார்த்தா பயப்படுற மாதிரி இருக்காண்ணா? இது பயம் இல்ல, யாருக்கும் பயப்படனும்ன்ற அவசியமும் எனக்கில்ல. சில விசயங்களை வேற மாதிரிதான் டீல் பண்ணியாகனும், இல்லைனா தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கிற மாதிரி ஆகும். சில விசயங்கள்லயிருந்து விலகிப்போனாதான் நம்ம வாழ்க்கைய நம்மளால வாழ முடியும்” என்றான் தீவிர பாவனையில்.

“சில விசயம், சில விசயம்னு சொல்ற, என்ன விசயம்னு தெளிவா சொல்லேன்டா”

“எதுக்கு உங்ககிட்ட சொல்லனும்? அண்ணி விசயத்துல உங்க இஷ்டப்படித்தான இருக்கிங்க?” என்றான் கோபமாக.

நவீனா மீதுள்ள பொற்செல்வனின் பாசம் தேவராஜிற்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. விவாகரத்திற்கு பின்னே அவளின் எதிர்காலத்தை வளமாக்கும் பொறுப்பை பொற்செல்வன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வலுவானது.

ஆனாலும் “எதுக்கு எதைடா சொல்ற?” என்று முறைக்க,

தேவராஜின் முறைப்பு பொறுப்பற்றதாய் தோன்ற, கோபம்தான் வந்தது பொற்செல்வனுக்கு. அண்ணனிடம் பேசாமல் அரைமணி நேர பயணம் செய்தவன், காரை நிறுத்தி, “இறங்குங்க” என்றான்.

பின்னே அந்த பெரிய மாலின் உள்ளே சென்று சிங்கை பார்த்தனர். ‘அமௌண்ட் ரொம்ப அதிகம்’ என்றான்.

தான் கேட்கும் விலைக்கு நிச்சயம் கொடுக்கமாட்டார்கள் என்று அறிந்தே சில லட்சங்கள் அல்ல, சில கோடிகள் குறைத்து கேட்டான்.

‘‘பார்ட்டிகிட்ட நீ கேட்குற விலையை சொன்னா ஒரு நிமிஷம் கூட யோசிக்காம என்னை கொன்னுடுவான்” என்று கடுப்போடுதான் சொன்னார் சிங்.

“சரிதான், அதுக்காக அவங்க சொல்ற விலைக்கே வாங்கனும்னு என்ன இருக்கு? அவருக்காக என்கிட்ட பேசுற மாதிரி, நான் சொல்ற ரேட்டை சொல்லி, ஒன் ஹார்ல அமௌண்ட் செட்டில் பண்ணிடுவாங்கனு எனக்காகவும் கொஞ்சம் பேசுங்க சிங்” என்றான்.

“இது நடக்குற விசயம் இல்ல, வேணும்னா இந்த அமெளண்ட்டுக்கு கேட்டுப்பார்க்கிறேன்” என்று அவர் ஓர் விலையை சொல்ல, “ம்ஹும், நான் சொன்ன ரேட்டுக்கு மேல சொன்னா நான் வாங்கமாட்டேன். பேசிட்டு கூப்பிடுங்க, இன்னும் இரண்டொரு நாள் இங்கதான் இருக்கப்போறேன்” என்று கிளம்பியவனுக்கு அழைப்பு வந்தது.

பேசியவன், ஒன்றரை நேர பயணத்திற்கு பின்னே ஓர் இடத்தில் காரை நிறுத்தி இறங்கினான்.

“இங்க யாரைப் பார்க்கப்போற?” என்றபடி இறங்கினான் தேவராஜ்.

பத்து வருடங்களுக்கு முன்னே இந்த ஏரியாவிற்கு தேவராஜ் ஒருமுறை வந்திருக்கிறான், அப்பொழுது சிறு உணவகமாக இருந்தது, கேமராக்கள் இருந்ததில்லை. தற்போது சற்றே முன்னேறி கணிசமான தங்கும் அறைகளும் கூடியிருந்தது.

இப்படி இடத்திற்கு தம்பி எதற்காக வரவேண்டும்? வேறு எதற்காகவோ இங்கு அழைத்து வந்திருக்கிறானா என்று பொற்செல்வனைப் பார்த்தான் யோசனையோடு.

“அண்ணே… டீ சாப்பிடுறிங்களா?” என்று பொற்செல்வனிடம் கேட்க, மும்பையில் தமிழன் இருக்கிறான்தான், ஆனா தம்பி தமிழனாகத்தான் இருப்பானு இவனுக்கு எப்படி தெரியும்? என்று ஆராய்ச்சியோடு பார்த்திருந்தான் தேவராஜ்.

(மார்ட்டின் காலைல இறந்தா பிரேக்பாஸ்ட் ஆச்சுனு சொல்லு, மதியம்னா லன்ச் ஆச்சுனு சொல்லு, ஈவ்னிங்க்கு மேல எப்போன்னாலும் டின்னர் ஆச்சுனு சொல்லு. என்று மும்பையில் தனக்கு தெரிந்தவனின் எண்ணை கொடுத்து, இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லிடு. அவன் என்கிட்ட நேர்ல வந்து சொல்லிடுவான்’ என்றிருந்தான்)

டீயை தலையசைப்பில் மறுத்தவன், “சாப்பிட என்ன இருக்கு?” என்றான்.

“பிரேக்பாஸ்ட் ஆச்சு” என்றதும், செல்வா என்ன கேட்கிறான்? இவன் என்ன சொல்கிறான்? எதோ பழகியவர்கள் போல பேசுகிறார்களே என்று தம்பி முகத்தை பார்க்க, பொற்செல்வன் முகம் அப்பட்டமான மகிழ்வை வெளிப்படுத்தியது.

மொபைல் அழைக்கவே, அன்னையின் நலம் விசாரித்தவன், “அண்ணனா? என்னோடதான் இருக்காங்க, இதோ கொடுக்குறேன் பேசுங்க” என்று தேவராஜிடம் மொபைலை கொடுத்து, தனக்கு தகவல் சொன்னவனோடு சற்று விலகிப்போய் சில நிமிடம் பேசி அவனை அனுப்பி வைத்து திரும்பினான்.

“டேய்…” என்று சத்தமாய் கத்திய பின்னே கீழே சரிந்தான் தேவராஜ்.

விபத்தா? யாரேனும் அண்ணனை குறி வைத்து தாக்கினார்களா என்று ஆராயவெல்லாம் பொற்செல்வனுக்கு நேரமில்லை, தலையில் இரத்தத்தை பார்த்ததும் தேவராஜை அள்ளிக்கொண்டு விரைந்தான் மருத்துவமணைக்கு.

இதோ விபத்து நடந்து மூன்று நாள்கள் ஆகிறது, தேவராஜ் இன்னும் கண் விழிக்கவில்லை. மார்ட்டின்லூர்து இறந்துவிட்டான் என்பது அண்ணனிற்கு பெரும் விடுதலை. ஆனால் அந்த நிம்மதி சில நொடி கூட நீடிக்கவில்லை.

நாளொன்றிற்கு நான்கைந்து முறையாவது வீட்டிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது. யாருக்கும் பதிலளிக்கவில்லை பொற்செல்வன். தேவராஜ் கண் விழித்த பின்னே பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறான்.

ராகுலிடமிருந்து பல அழைப்புகள் வந்திருக்கவே, அவனுக்கு அழைத்தான்.

‘‘செந்தமிழ்செல்வி வீட்டில் நடந்ததை சொல்லி, “தீவிரமா மாப்பிள்ளை பார்ப்பாங்க போல, செல்வியோட அண்ணனும் வந்திருந்தான். செல்வியை அடிச்சிருப்பாங்க போல. கன்னம் வீங்கியிருந்தது” என்றான்.

“என்ன சொல்ற ராகுல்?” என்றான் அதிர்வாக.

‘ஆன்ட்டி அடிக்கமாடாடங்க, அவ அண்ணன் அடிச்சிருப்பானோ? எத்தனை தைரியம் இருந்தா கை வைப்பான்? இடியட்’ என்று திட்டினான் மனதினுள்.

“மருந்து போட்டுக்கமாட்டேனு செல்வி அழற சத்தம் வெளில வரைக்கும் கேட்டது சார்”

மனம் அத்தனை பதைத்தபோதும், “அவங்க ஃபேமலி பிரச்சனைல நாம தலையிட முடியாது ராகுல். என் அண்ணன் விசயமா யாரும் அவங்களை தொல்லை பண்ணாம பார்த்துக்கோ” என்று இணைப்பை துண்டித்தவனுக்கு மனம் சமன்படவே இல்லை.

என்னதான் மகனாக இருந்தாலும், செல்வி எப்படி பேசியிருந்தாலும் அடிக்க அனுமதி கொடுக்கலாமா? என்று சாம்பவியையும், அடித்து துன்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பானா? என்று இளவரசனையும் திட்டிக்கொண்டிருந்தான் பொற்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!