Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 4.1

“நாயகி இந்த டிரஸ் இருக்குற பெட்டி எங்க வச்சிருக்க?”

ராஜரத்தினம் படியிலிருந்து இறங்கும் பொழுதே மனைவியை கேள்வி கேட்டுக்கொண்டே இறங்க, சோபாவில் உல்லாசமாக விசிலடித்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த மகனை பார்த்ததும் உடலில் இருந்த அழுப்பு கோவமாக மாறியது.

“பேருக்கு தான் பிள்ளைன்னு பெத்து வச்சிருக்கேன், ஆனா இது நாள் வர எனக்கு ஒரு செங்கல் தூக்க கூட உதவுனது இல்ல. என்ன புள்ளன்னு டி இவன நீ பெத்து போட்ருக்க? வயசான காலத்துல நான் இவ்ளோ வேலை பாக்குறேனே உதவி பண்ணலாம்னு கொஞ்சமாவது தோணுதா?”

தேவா அருகில் அமர்ந்து கைபேசியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த இஷாவிற்கு சுற்றி என்ன நடக்கின்றனதென்று கூட தெரியவில்லை.



Advertisement

தந்தையை உதாசீனப்படுத்தியவன், “ஏய் போய் உன் அய்யாக்கு ஹெல்ப் பண்ண வேண்டியது தான? பல்ல இளிச்சிட்டு ஒக்காந்துருக்க” தங்கையை தேவா அதட்ட, தந்தைக்கு கோவம் வந்தது.

“அவ கொழந்த அவளை ஏன்டா மெரட்டுற? தெண்டம்”

மீண்டும் மகனை பேச இவர்களை கடந்து சென்ற அன்னையை பார்த்து தேவா எதுவும் பேசாமல் இருந்தான்.

Advertisement

அதன் பிறகு பிள்ளைகள் இருவரையும் எதிர்பார்க்காமல் தம்பதிகள் இருவருமே அத்தனை பொருட்களையும் கீழே கொண்டு வந்து வைத்து காலை உணவை உண்ண உணவு மேஜை சென்றுவிட அவர்கள் வரும் முன்பு மொத்த பொருட்களையும் வாகனத்தில் ஏற்றியிருந்தான்.

Advertisement

உணவை முடித்து வந்த நாயகி தேவா வாகனத்தை லாக் செய்வதை பார்த்து, “டேய் நீ ஏன்டா எடுத்து வச்ச, ஒழுங்காவே வச்சிருக்க மாட்டியே”

பயத்திலே வந்து அவனிடமிருந்த சாவியை பறித்து மீண்டும் வாகனத்தை திறந்து, “பாரு எப்படி வச்சிருக்கனு, டோர திறந்த ஒடனே கீழ மலமலனு விழுகும்” என்றார் எரிச்சலாக.

“இப்ப தொறந்து பாத்துட்டு தான சொல்றிங்க? ஏன் விழுகல?”

Advertisement

கேள்வி கேட்ட மகனை முறைத்தவர், “பேசு, திமிரா பேசு, கொஞ்சம் சம்பாதிக்கிற அகம்பாவம் உனக்கு. உன் தாத்தா மட்டும் இல்லனா இந்த காசு உனக்கு இல்ல”

காரணமே இல்லாமல் அவனை பேசவும் எரிச்சலுற்றவன் தன்னுடைய அறைக்கு சென்று டூ வீலர் சாவியை எடுத்து தன்னுடைய பையை மட்டும் வாகனத்திலிருந்து எடுத்து சென்ற மகனை வீட்டினுள் அமர்ந்துகொண்டு பார்த்த பெற்றோர் இருவரும் அமைதியாக தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

மதுரை விட்டு ஹைவேஸ் பகுதியை அடைந்த தேவானந்த் வாகனத்தை நிறுத்தி ஹெல்மட்டை அவிழ்த்து சிறிது தூய்மையான காற்றை வாங்கிய பிறகே மனம் லேசானது.

சில நொடிகள் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு விக்னேஷ் எண்ணிற்கு அழைத்து லோக்கேஷன் அனுப்ப கூற, “இப்ப தானேடா சித்தப்பா கேட்டாங்க அவர்கிட்ட வாங்கிக்கோ”

“லோக்கேஷன் அனுப்புறத்துல உனக்கு எங்க வலிக்க போகுது? அந்த ஆள்கிட்ட எல்லாம் கேக்க முடியாது நீ அனுப்புறதா இருந்தா அனுப்பு இல்லனா நான் அப்டியே தாத்தா வீட்டுக்கு போறேன்”

கடுகடுத்தவன் மனநிலை சரியில்லை என்பதை உணர்த்த விக்னேஷ் உடனே அனுப்பி வைத்தான்.

அர்ஜுனன் குடும்பம் ராஜரத்தினம் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்க, நாயகிக்கு தான் அவர்களோடு ஒன்ற இயலாமல் தாமரை இலை தண்ணீராய் வளம் வந்தார்.

காலை வந்த அவர்கள் குடும்பம் இரவு உணவை முடித்து தான் சென்றிருந்தது. அப்பொழுது அர்ஜுனனே மகன், மருமகளிடம் வந்து நிச்சயம் வீட்டிற்கு வர வேண்டும் என கூறியிருக்க இத்தனை நாட்கள் விடுப்பு கிடைக்காமல் இன்று தான் ராஜரத்தினம் குடும்பம் கிளம்பியது.

வீட்டிற்கு முதல் முறை செல்லும் பொழுது வெறும் கையேடு செல்ல விரும்பாமல் வீட்டினருக்கு பிடித்த பழங்கள், மதுரையில் எவை எல்லாம் ப்ரசித்தியோ அவை அனைத்தையும் வாங்கி, உடன் அனைவருக்கும் தேடி தேடி பார்த்து உடை எடுப்பதை பார்த்த நாயாகி அலுத்துக்கொண்டார்.

இன்று காலை கிளம்பும் பொழுது தான் தேவாவை கோபமூட்டி அவனை வீட்டை விட்டு ஓடவும் வைத்தது. தன்னுடைய வாகனத்தின் வேகத்தில் ஒரு மணி நேரத்தில் அர்ஜுனன் வீட்டின் தெருவில் நின்றிருந்தான்.

சரியான இடத்திற்கு வந்த தேவா எந்த வீடென தெரியாமல் குழம்பி நின்ற பொழுது குப்பை வாலியை எடுத்து வெளியில் வைக்க வந்த பைரவியை பார்த்து, “ஹலோ” என்றான் அவள் காதில் கேட்கவென அழைத்தான்.

பொதுவாகவே அந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காதென்பதால் அவன் அழைத்து பைரவிக்கு சற்று கூடுதலான சத்தத்தோடவே கேட்டு திரும்ப, அவன் அவளை தான் பார்த்து நின்றான்.

“அர்ஜுனன் வீடு எங்க?” என அவன் கேட்கவும் தான் அவனை நன்கு நோக்கினாள்.

சாதாரண ட்ராக் பாண்ட், ட்ஷிர்ட் தான், தோளில் ஒரு பை. எதுவும் பேசாமல் தனக்கு எதிரில் இருந்த வீட்டை பைரவி கை காட்டி வீட்டினுள் நுழைந்துவிட, அவளை முகத்தை சுளித்து பார்த்த தேவா, “சரியான சிடுமூஞ்சியால இருக்கு இந்த புள்ள”

முணுமுணுத்தவன் அந்த வீட்டை புருவத்தை சுளித்து பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டினுள் நுழையும் பொழுதே அவனை பார்த்துவிட்ட பார்வதிக்கு சொல்லிலடங்கா சந்தோசம், மகன் வராததை கூட கவனிக்காமல் பேரனுக்கு வேண்டிய அத்தனையையும் செய்ய, உடன் அவன் பெரியம்மா, அத்தைகள், அவர்கள் பிள்ளைகள் என அத்தனை வரவேற்பு.

இவர்கள் செய்வது அனைத்தையும் தூரத்தில் ஊஞ்சலில் அமர்ந்தே வேடிக்கை பார்த்த அர்ஜுனனுக்கு மனதில் சிறு நெருடல் கூட, இந்த சந்தோஷத்தையா இத்தனை வருடங்கள் பிரித்து வைத்திருந்தோமென.

“அய்யமா, இவ்ளோ கவனிக்கிறீங்களே, காலைல நான் சாப்பிடல யாராவது ஒருத்தர் அத பத்தி கேட்டீங்களா?” எனவும் பார்வதி சமையலறை சென்று உணவை எடுக்க போக, அவரை தடுத்தனர் பெண்கள்.

“ஏன் ம்மா பலச பிள்ளைக்கு போடணும்? அரை மணி நேரம் இரு தம்பி, உனக்கு நாங்க வித விதமா செஞ்சிடுறோம்” என்ற பூர்ணிமா, விக்னேஷிடம்,

“விக்கி ஆட்டுக்கறி எடுத்துட்டு வா” என்றார்.

“என்ன சனிக்கிழமை கறி சமைக்க மாட்டீங்கல்ல, இன்னைக்கு என்ன புதுசா?”

இளசுகளின் மனதிலிருந்ததை முந்தி கொண்டு நிவேதா கேட்க, “இனி எல்லாம் இப்டி தான் மாறிட்டே இருக்கும்” என சீதா சந்தோசமாக உள்ளே வர, அவருடனே வந்தான் சந்தோஷ், அவனுக்கு பின்னால் பைரவியும்.

முதலில் சந்தோஷ மட்டுமே கவனித்த தேவா, “மச்சா, நீ தான் சந்தோஷா? ஏன்டா அன்னைக்கு வீட்டுக்கு வரல” இருக்கையிலிருந்து எழுந்து வந்து சந்தோஷை நெருங்கிய பொழுது தான் அவனுக்கு பின்னால் வந்த பைரவியை கவனித்தான்.

‘இவ தான் அத்தையோட பொண்ணா? அதுனால தான் அய்யப்பா பேர கேட்டதும் அந்த பார்வை பத்தாளா, சிடுமூஞ்சி’ மொத்தமாய் பைரவியை தவிர்த்து சந்தோஷிடம் ஒன்றிவிட்டான் தேவா.

சந்தோஷிற்கும் ஒரு முறை கூட பேசியிராத தேவாவின் இந்த உரிமை பேச்சு பிடித்துப்போக, அவனும் கூட்டத்தினரோடு இணைந்துகொண்டான். விக்கி அதற்குள் கறி எடுத்துவர, தேவாவின் குடும்பமே வந்திருந்தது.

தங்களை விட தங்கள் மகனுக்கு அங்கு கிடைத்த மரியாதையை கவனித்த ரத்தினம், “இவனுக்கு எதுக்கு கறி சோறு எல்லாம்? சும்மா இருந்தா எப்படிடா செமிக்கும்?” தேவாவை இளக்காரமாக பேச அதை எதையும் காதில் வாங்கவில்லை அவர் புதல்வன்.

“சாப்புடுற பிள்ளையை எதுவும் பேசாத ரத்தினம்” தந்தையின் மிரட்டலுக்கு பிறகே ரத்தினம் அமைதியானார்.

“பெரியம்மா பசிக்கிது” தானே சமையலறை சென்று தட்டை தேட, “தோ ரெடி, தேவா. நீ ஒக்காரு வர்றோம்” ஐந்து நிமிடத்தில் உணவு மேஜையில் மொத்த உணவும் அடுக்கப்பட, அந்த உணவிற்காகவே மீண்டும் ஒரு முறை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை ருசி பார்க்க ஆர்வப்பட்டு அமர்ந்தனர்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த பைரவியை சமையலறையிலிருந்து சீதா உணவருந்த அழைக்க, அனைவர் முன்பும் மறுக்க முடியாமல் மேஜையின் ஒரு ஓரத்தில் வந்தமர்ந்தாள்.

“அடடே ஈரல், சுவரொட்டி எல்லாம் கூட இருக்கு” தேவா வியக்க, பிரதாப்,

“இதுக்கே ஏன்டா இப்டி ஆச்சிரியப்படுற? மத்தியானம் கவனிப்ப மட்டும் பாரு” என்றார் அவன் தோளில் ஒரு தட்டு தட்டி.

“ம்ம்ஹ்ம் வேணாம், எனக்காக எதுவும் செய்ய வேணாம் பெரிப்பா. வெஃஜ் வைங்க நாளைக்கு பெருசா கவனிச்சிடுங்க”

நல்லவன் போல் பேசிய சகோதரனிடம், “நடிக்காதடா” இஷா காலை வார, “ஆஹ் பசிக்கிது பசிக்கிது” என பேச்சை மாற்றி உணவை பரிமாற வைத்தான்.

தேவா அருகே சந்தோஷ், விக்னேஷ் அமர, அவனுக்கு எதிரில் பேசவே நிவேதாவும், அவளுக்கு இரு பக்கமும் உதயநிலை, இந்து மித்ரா என அமர, கண்களுக்கு எதிரில் இரண்டு முறைப்பெண்களை வைத்து உணவுண்பதில் தேவாவிற்கும் அவ்வளவு துள்ளல் மனதினுள்.

“ம்மா எனக்கு ஈரல்”

நிவேதா அன்னையிடம் கேட்க, “நாளைக்கு சாப்பிடலாம், இன்னைக்கு கொஞ்சம் தான் கெடைச்சதாம்” என இருந்ததில் ஈஷாவிற்கு கொஞ்சம், தேவாவிற்கு மீதத்தை வைக்க முகம் சுருங்கியது பெண்ணுக்கு.

அவளின் வாட்டத்தை படித்தவன் தனுடையதில் இருந்ததை அப்படியே எடுத்து அவளுடைய தட்டிற்கு இடம் மாற்ற, நிவேதாவிற்கு கண்கள் விரிந்தது.

‘சாப்புடு’ கண்ணாலேயே பேசி உணவுண்ண நிவேதா சன்னமான சிரிப்போடு இரண்டு இட்லியை உள்ளே இறக்கினாள்.

“அத்தை மச்சானுக்கு இன்னொரு இட்லி” தேவாவின் தட்டில் உணவு காலியாகியிருப்பத்தை பார்த்து நிவேதா குரல் கொடுக்க அவளை சிரிப்போடு பார்த்தவன் மெச்சுதலான பார்வையாய் புருவம் உயர்த்தி கொடுக்க அவன் செய்கையில் நிவேதாவிற்கு இன்னும் சிரிப்பு.

தூரத்தில் அமர்ந்திருந்தாலும் பைரவி கண்களுக்கு மொத்த மேஜையும் தெரிந்தது. எதேச்சையாக சகோதரனை பார்க்க திரும்பிய பைரவி விழிகளுக்கு இவர்கள் இருவரின் சம்பாஷணையை பார்த்து விட்டு ஒன்றும் நடவாதது போல் கண்களை திருப்பிக்கொண்டாள்.

அன்னை வைத்த இரண்டு இட்லியில் ஒன்றை மட்டும் உண்டு எழுந்து செல்ல அவளை கவனித்த அர்ஜுனனுக்கு இருந்த இதமான மனநிலை மாறி மனதில் பாரம் ஏறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!