Skip to content
Post Views: 735
இன்னும் சில நாட்களில் செமஸ்டர் தேர்வுகள். இன்று விண்ணப்பித்து பரிட்சைக்கான பணத்தை கட்ட வேண்டும்.
எப்போது அன்பரசன் கடைக்கு கிளம்புவார் என காத்துக்கொண்டிருந்தான் தமிழ். அவர் புறப்பட்ட அடுத்த நிமிடம் அன்னையின் முன் ஆஜராகிவிட்டான்.
“அம்மா எக்ஸாம் ஃபீஸ்..” தமிழ் தயக்கத்துடன் தொடங்க “ஆமா நேத்தே சொன்னல..” என்ற கலைவாணி ஆயிரம் ரூபாவை எடுத்து நீட்டினார்.
“அம்மா மீதி..” அவன் இழுக்கவும் “நூறு ரூபா தானே நீயே வச்சுக்கோ” என்றார்.
Advertisement
அவரை கலவரமாக பார்த்தவன், “அரியர்க்கு..” என்க அவனை முறைத்துவிட்டு இருநூறு ரூபாயை எடுத்து நீட்டீனார்.
வாங்கிக் கொண்டவன் நகராமல் நிற்க “இன்னும் என்ன?” என மகனை பார்த்தார்.
“அஞ்சு அரியர்.. இந்த செம்ல ஆறு பேப்பர்.. பேப்பருக்கு நூத்தம்பது.. மொத்தம் ஆயிரத்தி அறுநூத்தம்பது ரூபா” அவன் சொல்லி முடிக்கவில்லை கையிலிருந்த தோசை கரண்டியில் மகனை அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
Advertisement
“எரும.. எரும.. வாய திறந்தா பொய்.. ரெண்டு ஆரியர்னு தான டா சொன்ன.. எங்கிருந்து வந்துச்சு மிச்ச மூனு.. அப்போ போன தடவ கிளியர் பண்ணல.. அப்படி தானே” என அடிக்க, “இந்த தடவ கண்டிப்பாக கிளியர் பண்ணீருவேன் ம்மா” அவரிடமிருந்து தப்பி ஓடினான்.
Advertisement
“இங்க வாடா.. எங்க ஓடுற.. காலையில உங்க அப்பா கிளம்புற வர நீ பம்மிக்கிட்டு இருக்கும் போதே நினைச்சேன் இப்படி ஏதாவது இருக்கும்னு.. சொல்லு எதுக்கு பொய் சொன்ன?” என அவனை இழுத்து வைத்து கேள்வி கேட்க “வேணும்னு சொல்லாம இல்ல ம்மா.. அன்னிக்கு நீ அப்பா முன்னாடி கேட்ட அதான்” என்றான்.
“அப்போ அதுக்கு அப்புறம் சொல்லிருக்கலாம்ல? ஏன் சொல்லல?”
“இதோ இதுக்கு தான் சொல்லல..” என்றான் அவர் அடிப்பதை குறிப்பிட்டு.
Advertisement
“அப்பறம் நீ பண்ண வேலைக்கு உன்ன கொஞ்சுவாங்களா..” என்றவர் “ஏன் டா தம்பி இப்படி பொறுப்பில்லாம இருக்க.. நீ இன்னும் குழந்தை இல்லை உனக்கும் இருவது வயசாச்சு.. எங்களுக்கும் வயசாகிட்டு வருது.. உங்க அப்பா பாவம்.. உங்களுக்கா தானே காலையில இருந்து ராத்திரி வர அங்க இங்கனு அலஞ்சு திருஞ்சுட்டு.. கடையில கால் கடுக்க நின்னு அத்தன கஷ்டப்படுறாரு.. இதையெல்லாம் நீ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?” ஒரு சராசரி தாயாக அறிவுரை வழங்கினார்.
தமிழ் பதில் ஏதும் பேசவில்லை. அவன் ஒன்றும் குழந்தை இல்லையே எல்லாம் புரியதான் செய்தது. தன் தவறை உணர்ந்து தலை குனிந்து நின்றான்.
“நான் இத்தன பேசுறேன் பதில் பேசுறியா நீ?” கலைவாணி அதட்ட அவருகே சென்று கையை பிடித்துக் கொண்டவன் “எனக்கு புரியுது ம்மா.. படிச்சுட்டு இருக்கேன்.. இந்த முறை கண்டிப்பா கிளியர் பண்ணீருவேன்” என்றான் நம்பிக்கையாக.
“உன்ன நம்புறேன்.. எப்படியாவது இந்த முறை ஒழுங்கா கிளியர் பண்ணிரு.. உங்க அப்பாவுக்கு மட்டும் உனக்கு அஞ்சு அரியர் இருக்கிறது தெரிஞ்சா அவ்ளோ தான் வீடே ரெண்டாயிரும்” என்று எச்சரித்தவர், “உன்ன யுனிவர்சிட்டி ரேங்க் டிஷ்டிங்ஷனா டா வாங்க சொன்னோம்? ஒரு இருவது இருவதஞ்சு மார்க் வாங்கி பாஸ் பண்ணி தொலையேன்” என்றார்.
“நீ இவ்ளோ அசிங்க படுத்துனதுக்கு அப்புறமும் நான் கிளியர் பண்ணலனா அது என் மானப்பிரச்சனை ம்மா.. இனி பாஸ் பண்ணீட்டு தான் மறுவேலை” என வீர வசனம் பேசியவன் அன்று கல்லூரி பேருந்தை தவறவிட்டு எழிலுடன் தான் கல்லூரி சென்றான்.
வந்ததும் முதல் வேளையாக பரிட்சைக்கு விண்ணப்பித்து பணத்தை செலுத்திவிட்டு தான் வகுப்புக்கு சென்றார்கள்.
அன்றைய நாள் என்றும் போல் இயல்பாக தான் சென்றது. இடைவேளையில் கயல் மதிய உணவிற்கு ஹாஸ்டல் சென்றுவிட இசையும் மலரும் லேப் இருப்பதால் வரவில்லை. நண்பர்கள் இருவரும் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தனர்.
“இனியன் அண்ணா..” எங்கோ கேட்ட குரலில் இருவரும் திரும்ப அவர்கள் முன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்றான் ஒருவன்.
“டேய் டேய் மெதுவா டா” தமிழ் அவனை நிதானப்படுத்த “யாரு டா இந்த புது கேரக்டர்?” என்று பார்த்தான் எழில்.
அவனுடன் கை குலுக்கி “ஹாய் ப்ரோ ஐம் மனோஹர்.. ஃபர்ஸ்ட் இயர் விஸ்காம்..” என தன்னை அறிமுக படுத்திக் கொண்டவன் “ஏன் ண்ணா இன்னிக்கு பஸ்ல வரல நீங்க வராம செம போர்” என தமிழிடம் திரும்பினான்.
“பஸ் மிஸ் பண்ணீட்டேன் டா” என புன்னகைத்தவன் ‘நானே தலையெழுத்தேனு அந்த பஸ்ல போய்டு இருக்கேன் இதுல இவன் வேற’ என மனதில் புலம்ப “என்ன ண்ணா பஞ்சுவலா இருக்க வேண்டாமா.. நாளைல இருந்து ஒழுங்கா நேரத்துக்கு வாங்க” என்று அவனுக்கு அறிவுரை வழங்கினான் மனோ.
“சரி டா” பதிலளித்த தமிழ் அவனை அங்கிருந்து கிளப்ப பார்க்க அவனோ எழிலுடன் கதை பேசிக் கொண்டு அவர்களுடன் ஒட்டி கொண்டான்.
“இங்க தான் இருக்கீங்களா சீனியர்.. எங்கெல்லாம் உங்கள தேடுறது” ஓட்டமும் நடையுமாக அவன் முன் வந்து நின்றாள் இன்னிசை.
“என்னாச்சு?” அவன் பதட்டமாக எழவும் அவன் முன்னே ஒரு ஃபையிலை (File) நீட்டினாள்.
“என்ன இசை இது?”
“நீங்களும் கயல் அக்காவும் ரொம்ப நாளா ரிவிஷனுக்கு தேடிட்டு இருந்தீங்கல.. அந்த கொஸ்டின் பேப்பர்ஸ்”.
“எப்படி இசை?” ஆச்சரியமாக கேட்டான். இரண்டு வாராங்களாக அவனும் கயலும் கேட்காத ஆட்களில்லை தேடாத வலைதளங்கள் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் இவளிடம் பேச்சு வாக்கில் பகிர இன்று வினாத்தாள்களுடன் வந்து நிற்கிறாள்.
“அதெல்லாம் சீக்ரெட் சீனியர்..” என கண் சிமிட்டி புன்னகைத்தவள், “நீங்க கேட்டதெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க” என்றாள்.
தமிழ் வினாத்தாளை எல்லாம் சரிபார்க்க, “ஹாய் இன்னிசை.. எப்படி இருக்க?” என்றான் மனோஹர்.
“மனோ..” புன்னகையுடன் அவனை கண்டவள் “நான் நல்லா இருக்கேன்..நீ எப்படி இருக்க?” என்க வினாத்தாளை சரிப்பார்ப்பதை விட்டு விட்டு இது என்ன டா புது கதை என்று பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்.
இவன் பார்வையை உணர்ந்த மனோ, “நானும் இசையும் கிளாஸ் மேட்ஸ் அண்ணா” என கூற இசையும் “ஆமா சீனியர் நாங்க டென்த் வர ஒன்னா தான் படிச்சோம்..” என்றாள்.
“ஹோ அப்படியா..” இருவருக்கும் பொதுவாய் புன்னகைக்க அவர்கள் மேலும் மாறி மாறி நலம் விசாரித்துக் கொண்டனர்.
இசை அரவிந்திடம் பேசும் சகஜமான பேச்சுக்களெல்லாம் இவனிடம் இல்லை, வெகு நாட்கள் கழித்து காணும் நண்பரிடம் பேசும் வழக்கமான நல விசாரிப்புகள் தான். அதுவே தமிழுக்கு பொறுக்கவில்லை. “எனக்குனே வருவானுங்க.. இவளுக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸே இருக்க மாட்டாங்களா எல்லாம் ஆம்பள பசங்க தான்” என மனதில் புலம்பினான்.
மனோஹரிடம் பேசி முடித்து இவனிடம் வந்தவள், “எல்லாம் சரியா இருக்கா சீனியர்” என கேட்க சரியென தலையசத்தான்.
“அப்போ சரி.. எனக்கு லேப்க்கு நேரம் ஆச்சு” என்றவள் மூவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அவள் பின் தனியே சென்றான். “இசை தேங்க் யூ சோ மச்” தமிழ் மனதார கூற சட்டென அவனை முறைத்தவள் “எத்தன எப்பிசோட் ஆனாலும் டீலிங் மாறாது..” என்றாள் கடுப்பாக.
அவள் பேச்சில் சிரித்தவன் அவள் உயரத்திற்கு குனிந்து, “என்ன டீலிங் எனக்கு ஞாபகம் இல்லையே..” என்க அவனை முறைத்தவள் பதிலளிக்காமல் சென்றுவிட தமிழ் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
அவன் பார்வை உணர்ந்தவள் திரும்பி பார்க்க அவளை கண்டு புன்னகைத்தவன் இன்னும் நினைவில்லை என்பதாக சைகை காட்டினான். கடுப்பானவள் ஏதோ முணுமுணுத்து விட்டு சென்றுவிட்டாள்.
“என்னமோ திட்டீட்டு போறாளே.. என்னவா இருக்கும்? ஒருவேளை கெட்ட வார்த்தை எதுலையாது திட்டியிருப்பாளோ? ச்சே ச்சே இருக்காது நம்ம ஆளு ரொம்ப சாஃப்ட் அந்த அளவுக்கெல்லாம் இறங்க மாட்டா” இவன் யோசித்துக் கொண்டு நிற்க அவன் தோளில் தட்டிய எழில், “போதும் உங்க லவ் சீனு.. இப்போ கிளாசுக்கு நேரமாச்சு” என்றான்.
நண்பனை கண்டு அசடு வழிந்தவன், “டேய் மனோஹர்..” என பேச்சை மாற்ற “அவன் அப்பவே போயிட்டான்..” என்ற எழில் “எங்க இருந்து டா அவன புடிச்ச.. யாப்பா அவனுக்கு என் தம்பியே மேல்” என புலம்பிக் கொண்டே தமிழையும் இழுத்துக் கொண்டு வகுப்புக்கு சென்றான்.
இவர்கள் வந்த சற்று நேரத்தில் கயலும் வந்துவிட அவளிடம் இசை குடுத்த வினாத்தாள்களை எல்லாம் காட்டினான் தமிழ். அவளுக்கும் ஆச்சிரியம் அளவில்லா ஆனந்தம். அதிலிருக்கும் கேள்விகளை படித்தாலே போதும் தேர்ச்சி மட்டுமில்லை அதிக மதிப்பெண்களே பெறலாம். தமிழுக்கு மட்டுமன்றி இவர்கள் மூவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்ன தான் மதிப்பெண்கள் அனாவசியம் என்று கூறினாலும் நேர்காணலில் அதுவும் ஓர் முக்கிய வகிக்க தான் செய்கிறது.
“சூப்பர் டா.. இதை படிச்சாலே போதும் நீ பாஸ் மட்டும் இல்ல டிஸ்டின்க்ஷனே வாங்கலாம்” கயல் உற்சாகமாக சொல்ல “அய்யய்ய எனக்கு அதெல்லாம் வேண்டாம்.. எங்க அம்மாவே இன்னிக்கு தம்பி யுனிவர்சிட்டி ரேங்க் டிஷ்டிங்ஷன்ல வேண்டாம் ப்பா.. நீ ஒரு இருவது இருவதஞ்சு மார்க் வாங்கி பாஸ் மட்டும் பண்ணு போதும்னு சொல்லீட்டாங்க.. அதனால அதுக்கு மட்டும் எனக்கு சொல்லிக் குடு போதும்” என்றான் தமிழ்.
“அதானே.. நீ படிக்கிற படிப்புல திடுதிப்புன்னு டிஷ்டிங்ஷன்லா வாங்கிட்டா இந்த பூமி என்னத்துக்கு ஆகுறது” எழில் கலாய்க்க நண்பனை கடுப்பாக முறைத்தான் தமிழ்.
உணவு இடைவேளைக்கு பிறகு அன்று எந்த வகுப்புகளும் நடக்கவில்லை. அந்த இரண்டு மணி நேரத்தை வீணடிக்காமல் கயலின் உதவியோடு தமிழ் கொஞ்சம் படித்தான். வழக்கமாக புத்தகத்தை விரித்து வைத்து கொண்டு நேரத்தை கடத்துவது போல் அல்லாமல் முழுமனதோடு அவன் மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையாக படித்தான்.
“சரி தமிழ் இன்னிக்கு இது போதும்..” கல்லூரி நேரம் முடியவும் கயல் கூற “இல்ல கயல் இதுல இன்னும் வேற எதெல்லாம் படிக்கணும் சொல்லு.. நான் இன்னிக்கு முடிச்சிடுறேன்” என்றான் தமிழ். இத்தனை நேரம் ஒருமனதாக படித்துக் கொண்டிருந்தவனுக்கு தன்னால் அதில் ஆர்வம் வந்திருக்க முடிந்த அளவு இன்றே இந்த தலைப்பை முடித்துவிடலாம் என்று நினைத்தான்.
இவன் பேச்சிற்கு பதிலளிக்காமல் எழிலும் கயலும் உறைந்து போய் நிற்க “என்னாச்சு?” என்று இருவரையும் நோக்கினான்.
“நீயா டா பேசுற?” எழில் அதிர்ச்சியாக கேட்க “அதானே நீயா பேசுற?” அவனுக்கும் குறையாத அதிர்ச்சியுடன் கேட்டாள் கயல்விழி.
“என்ன ரெண்டு பேரும் கலாய்க்கிறீங்களா?” இவன் கடுப்பாக கேட்க “இல்ல நிஜமா தான் சொல்றோம்..” இருவரும் ஒருசேர கூறினர்.
“ரெண்டு மணி நேரத்துல இப்படி ஒரு மாற்றமா? எழிலுக்கு இன்னும் ஆச்சரியம் அடங்கவில்லை. தமிழின் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தான். “போதும் டா ரொம்ப கலாய்காதீங்க..” என அவன் கையை தட்டிவிட்டவன், “கொஞ்சம் சீக்கிரம் சொல்லு கயல் பஸு போயிரும்.. காலையிலே மிஸ் பண்ணீட்டேன்” என்றான் தீவிரமாக.
அவன் பேச்சிலும் செயலிலும் விளையாட்டில்லை. உண்மையாகவே படிக்க நினைக்கிறான் என்பது உரைக்க இருவரும் அவனை கலாய்ப்பதை கைவிட்டு முக்கிய வினாக்களை கூறினர்.
அதை ஒன்றுவிடாமல் குறித்துக் கொண்டவன் இன்று எப்படியும் இதை படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்கு புறப்பட அங்கு கல்லூரிலிருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு மகனை காண வீட்டிற்கு விரைந்தார் அன்பரசன்.
error: Content is protected !!