Skip to content
Post Views: 1,211
“இசை.. இப்போ மத்தவங்களுக்காக நாம எதுக்கு சண்ட போடுறோம்..” என்ற தமிழின் அதிருப்தியான பேச்சில் “உங்களுக்கும் அரவிந்துக்கும் அப்படி என்ன பிரச்சினை?” என நேரடியாகவே கேட்டாள் இசை.
“எங்களுக்குள்ள என்ன பிரச்சன? அதெல்லாம் ஒன்னுமில்ல” மழுப்பியவன் பிடிகுடுக்காமல் பேச இசையின் கோவம் அதிகரித்தது. இன்னும் எத்தனை நாள் இவன் சமாளிப்புகள்?
கடந்த வாரம் இசையை அழைத்த அரவிந்த், அவன் காதல் விவகாரத்தை தமிழிடம் கூறி உதவி கேட்குமாறு கூற சற்றும் யோசிக்காமல் மறுத்துவிட்டாள். “ப்ளீஸ் இசை.. என்னால கயல்ல அப்ரோச் பண்ணவே முடியல.. நீ தமிழ் கிட்ட ஹெல்ப் கேளேன்.. இப்போ விட்டா நான் கயல்ல வாழ்கை முழுக்க மிஸ் பண்ணிருவனோனு பயமா இருக்கு” என்று கெஞ்சியவன் எப்படியோ மூளை சலவை செய்து இறுதியில் அவளை சம்மதிக்க வைத்து விட்டான்.
அரவிந்த் சொன்னதை கேட்டு தமிழிடம் பேச நினைத்தவள் கடந்த வாரம் மெல்ல அரவிந்த்தை பற்றி பேச்சை எடுக்க தமிழ் நாசுக்காக பேச்சை மாற்றிவிட்டான். ஆரம்பத்தில் எதேச்சையாக நினைத்தவள் அடுத்தடுத்த நாட்களிலும் அவன் அதே போல பேச்சை மாற்றவும் கண்டுகொண்டாள்.
Advertisement
அப்படி என்ன பிரச்சினை இருவருக்குள்? அவளுக்கு புரியவில்லை. நேரில் இருவரும் இயல்பாக தான் பேசிக் கொள்வர். ஒருவேளை இருவருக்குள்ளும் ஏதாவது மனஸ்தாபமோ அதனால் தான் அரவிந்த் நேரடியாக அல்லாமல் தன்னை வைத்து தமிழை அணுக நினைக்கிறானோ என நினைத்தவள், “நீங்களும் ஃபிரண்ட்ஸ் தானே நீயே சீனியர் கிட்ட நேர கேட்கலாம்ல” என அரவிந்திடம் கேட்க “ஃபிரண்ட்ஸ் தான் இசை.. ஆனா உங்க அளவுக்கு நெருக்கம் இல்ல.. நீ ஜஸ்ட் இந்த மாதிரினு அவன் காதுல விஷயத்த போட்டு வை.. அப்பறம் நான் பேசிக்கிறேன்” என்றான். மேலும் அவனிடம் முறைமுகமாக பேசி போட்டு வாங்கியவளுக்கு அரவிந்த் எப்போதும் இருப்பது போல் தான் தெரிந்தது.
அப்போது பிரச்சனை தமிழிடம் தான். முதலில் அது என்னவென்று அறிந்து அதை தீர்த்து வைத்த பிறகே அரவிந்தின் காதல் விவகாரத்தை அவனிடம் பேச முடியும் என நினைத்தவள், நேற்று அரவிந்த்தை பற்றி பேச வழக்கம் போல் தமிழ் பேச்சை மாற்ற இசை நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
“இசை, நமக்குள்ள இருக்கிறத மட்டும் பேசு அடுத்தவங்கள பத்தி பேசாத.. நான் உங்கிட்ட எழில பத்தியோ கயல பத்தியோ பேசுறனா.. நீ ஏன் சும்மா சும்மா அரவிந்த் அரவிந்த்னு அவன பத்தியே பேசுற?” என்ற தமிழின் எரிச்சலான பேச்சில் கோபம் கொண்டவள், “இப்போ எதுக்கு கோவப்படுறீங்க? அரவிந்த் ஒன்னும் அடுத்தவன் இல்ல” என்றாள் அவனுக்கு குறையாத எரிச்சலுடன்.
Advertisement
‘அடுத்தவன் இல்லனா.. அப்போ என்ன விட அவன் அவ்ளோ முக்கியமா போய்ட்டானா?’ என்று எண்ணியவன் பதிலளிக்க பிடிக்காமல் அமைதியாக இருக்க “உங்களுக்கு ஏன் சீனியர் அரவிந்த்த புடிக்கல?” என கேட்டாள்.
Advertisement
“நான் எப்போ அப்படி சொன்னேன்?”
“நீங்க சொல்லலைனாலும் உங்க நடவடிக்க அப்படி தான் இருக்கு”
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது இசை”
Advertisement
“என்ன புரியாது? நான் ஒன்னும் குழந்தை இல்ல.. எனக்கும் எல்லாம் தெரியும்” என குரல் உயர்த்தியவள் பின் “என்ன பிரச்சினை சொன்னா தானே தெரியும்.. எதுனாலும் நம்ம பேசி சரி பண்ணிக்கலாம்.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அரவிந்த் ரொம்ப ரொம்ப நல்ல பையன்” என்று தன்மையாக பேசி அவனுக்கு சான்றிதழ் வேறு வழங்கினாள். அவள் மனதுக்கு நெருக்கமான இருவருக்குள்ளும் உள்ள பிரச்சினையை எப்படியாவது தீர்த்து வைத்தே ஆக வேண்டும் என்ற தீவிரம் இசையிடம். ஆனால் அதன் வீரியத்தை தமிழ் உணரவில்லை.
“அதெல்லாம் வேண்டாம் இசை” அவன் மறுக்க “இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?” என்றாள் பிடிவாதமாக.
அதில் எரிச்சலானவன், “ம்ச்.. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா.. நான் சொல்லீட்டே இருக்கேன் திரும்ப திரும்ப அவன பத்தியே பேசிட்டு இருக்க.. இங்க பாரு இசை நம்மள பத்தி பேசுறதுனா மட்டும் பேசு தேவையில்லாதத பேசாத” என்று கோவத்தில் கத்திவிட்டான். விளையாட்டுக்கு கூட அதிர்ந்து பேசாதவனின் கோவத்தில் அவளையும் மீறி சட்டென கண்களை கலங்கிவிட “இனி பேச மாட்டேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள்.
இசையின் செயலில் அவன் அதிகபடியாக பேசி கோபப்பட்டது உரைக்க தன்னையே நொந்து கொண்டவன் அவளை தொடர்பு கொள்ள முயற்சிக்க, அவள் இவன் அழைப்பையும் ஏற்கவில்லை குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை.
இப்போதும் அவள் இத்தனை முறை கேட்டும் தமிழ் பதிலளிக்காமல் நிற்க எரிச்சலான இன்னிசை மலரின் அருகே சென்று நின்று கொண்டாள்.
“பேசீட்டியா?” தமிழின் அருகே வந்து நின்ற எழில் கேட்க “ம்ச் போடா.. என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப என்ன பிரச்சன? உங்களுக்கு ஏன் அரவிந்த்த புடிக்கலனு? அங்கேயே வந்து நிக்குறா” என்றான் சலிப்பாக.
“நல்ல சந்தர்ப்பம்.. பேசாம நான் உன்ன லவ் பண்றேன்.. எனக்கு அந்த அரவிந்த புடிக்கல.. நீ அவங்கூட பழகுறது சுத்தமா புடிக்கலனு.. ஓப்பனா அவகிட்ட சொல்லீரு”
“டேய் நீ என் காதலுக்கு சமாதி கட்டாம விட மாட்ட போல.. பேசுறது பழகுறது புடிக்கலனு சொல்ல நான் ஒன்னு டாக்சிகானவன் இல்ல டா.. எனக்கு அவ அவங்க அப்பாவ முக்கியமா நினைக்கிற அளவு என்னையும் நினைக்கணும் அவ்ளோ தான்.. மத்தபடி அரவிந்த், நீ, வேறயாராகட்டும் எனக்கு அடுத்த பிரையாரிட்டியா தான் இருக்கணும்”
“ஓஓ அப்படி..!!” விளம்பிய எழில் “ஆனா என்ன ஆனாலும் பிரபோஸ் மட்டும் பண்ண மாட்ட..?” என்று கேள்வியாலே துளைக்க அதற்கு பதிலளிக்க முடியாமல், “மொதல்ல அவள மலை இறக்கலாம் அப்பறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்” என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.
தமிழின் விழிகள் இசையையே தொடர அதை உணர்ந்தாலும் சற்றும் மனமிறங்காமல் இறுகிய முகத்துடன் நின்றாள் இன்னிசை.
கடுப்பான தமிழ், “டேய் நீ மலர கூட்டீட்டு போ நான் இசை கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” என எழிலிடம் கூற “உனக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது..?” என்றான் அவன் எரிச்சலாக.
“ஏன் டா எனக்காக இத கூட பண்ண மாட்டியா?”
“மாட்டேன் டா.. அவ கூடலாம் மனுஷன் பேசுவானா.. என்னால முடியாது.. உனக்கு தேவைனா நீ உன் ஆள தனியா கூட்டீட்டு போய் பேசிக்கோ”
“ஆமா நான் கூப்பிட்டதும் வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பா..” முனங்கியவன் “எழிலு.. பிளீஸ் டா.. என் செல்லம்ல” என்று கன்னத்தை கிள்ளி கொஞ்சிட “சீ நாயே கைய எடு..” என அவன் கையை தட்டிவிட்டான் எழில்.
“அவன் அவன் ஃபிரண்டுக்காக என்னென்னவோ பண்றானுங்க.. நீ ஒரு சின்ன ஹெல்ப் பண்ணவே இவ்ளோ சலிச்சிக்கிற..” என்றவன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள கடுப்பான எழில் வேறுவழியின்றி, “யப்பா சாமி பண்ணி தொலைக்கிறேன்.. மூஞ்சிய மட்டும் அப்படி வைக்காத..” என ஒத்துக்கொண்டான்.
“தேங்க் யூ..” தமிழ் பல்லை காட்ட அவனை முறைத்தவனை “ஒழுங்கா பேசு.. ஏடாகூடமா பேசி உள்ளதையும் கெடுத்துக்காத” என அறிவுரை வழங்கிவிட்டு மலரின் முன் சென்று நிற்க எழிலை கண்டதும் புருவம் நெறித்தவள் கேள்வியாக அவனை நோக்கினாள்.
“கேண்டீன் போகணும் கொஞ்சம் கூட வா” அவன் அழைக்கவும் ஒரு நொடி அதிர்ந்தவள் பின் ‘தமிழ் இருக்கையில் தன்னை ஏன் அழைக்க வேண்டும்?’ என்று விளங்காமல் விழிக்க, அதுவரை அவனை கேள்வியாக பார்த்திருந்த இசை அவன் பின்னே வந்து நின்ற தமிழை கண்டதும் விளங்கிக் கொண்டாள்.
“காதுல விழுந்துச்சுல.. சீக்கிரம் வா” அதட்டியவன் அங்கிருந்து நகர அவன் தோரணையில் கடுப்பாகிவிட்டாள் மலர். “எவ்ளோ திமிரு.. பேச்சுக்கு கூட பொலைட்னஸ் (politeness) வருதா பாரு” என மனதில் அவனை கடிந்தவள் நகராமல் நிற்க தமிழை முறைத்தான் எழில்.
“உங்கிட்ட தானே பேசீட்டு இருக்கேன்..”
“ஹலோ மிஸ்டர்.. பேசுறதுக்கும் மிரட்டுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. அதென்ன என்கிட்ட பேசும் போது மட்டும் உங்க பேச்சில அப்படியொரு அதட்டல் அலட்சியம்” சண்டைக்கு தயாரானாள் மலர்வழி.
எழிலுக்கு தமிழை நாலு அரை விடும் அளவிற்கு எரிச்சல் எகிறியது. இதற்கு தான் அவன் மறுத்தான். அது என்னவோ தெரியவில்லை இருவருக்கும் உண்டான பேச்சுக்கள் எப்படி பட்டதாக இருந்தாலும் இறுதியில் சண்டையில் தான் முடிகிறது.
“சீனியர எதுக்கு முறைக்கிறீங்க? என்ன பாருங்க..”
“ஆரம்பிச்சுட்டா டா” உதட்டை குவித்து பெருமூச்சுவிட்டவன் “அம்மா தாயே.. அவங்க சண்டைய அவங்களே தனியா பேசி தீர்த்துக்கரங்களாம் நீ கொஞ்சம் வரியா” என்று நேரடியாகவே விஷயத்தை போட்டுடைத்தான்.
அதில் தமிழையும் இசையையும் சங்கடமாக ஏறிட்ட மலர், “எங்கிட்டயே சொல்லீருக்கலாமே..” என்றுவிட்டு எழிலுக்கு முன் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட இசைக்கு தான் கஷ்டமாக போனது.
“என்ன தான் சீனியர் உங்க பிரச்சனை? இப்போ எதுக்கு இப்படி பண்ணீங்க?” அவன் செயலில் அதிருப்தியுடன் கேட்க
“நான் வேணும்னு பண்ணல இசை.. நான் ஒன்னு செய்ய போய் அது வேற மாதிரி போயிருச்சு.. பிளீஸ் அப்படி பாக்காத..” என்றான் அவள் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்.
“எதுக்கு இப்படி பண்ணீங்க?”
“எனக்கு உங்கிட்ட தனியா பேசணும்..”
“கூப்டா நானே வர போறேன்.. எதுக்கு இந்த டிராமா?”
“அது.. நீ என் மேலே கோவமா இருந்த..” தயங்கியவன் அவள் முறைக்கவும் “சாரி இசை.. மலர ஹர்ட் பண்ணும்னு நான் நினைக்கல.. நான் ஒன்னு செய்ய போய் அது வேற மாதிரி…” என்று தன்னை விளக்க முயன்றான்.
அவனை கை நீட்டி தடுத்தவள்,
“என்ன பேசணும்?” என விஷயத்திற்கு வர “ஏன் உனக்கு தெரியாத?..” என எதிர் கேள்வி கேட்டான்.
தமிழின் பதிலில் சட்டென நிமிர்ந்தவள் அவன் விழிகளில் வழிந்த உணர்வுகள் புலப்படாமல் தடுமாற, “இசை..” என்றான் அழுத்தமாக. இதற்கு மேல் அவன் உணர்வுகளை மறைக்க முடியாது.
தமிழ் தீவிரமாகவும் தன் பிடிவாதத்தை விடுத்து அவனில் கவனமானாள்.
“இந்த நாள் என் வாழ்க்கையில ரொம்ப ஸ்பெஷல்..” என்று ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன் தன் கையிலிருந்த கோப்பையை வருடிவிட்டு “ஃப்ர்ஸ்ட் பிரைஸ்.. எனக்கு நினைவு தெரிஞ்சு இதுவர நான் வாங்குனதே இல்ல.. ஸ்டேஜ்ல வாங்கும் போது அந்த ஃபீல்.. எப்படி இருந்துச்சு தெரியுமா.. ஆனா அதை என்னால முழுசா அனுபவிக்க முடியல” புரிப்புடன் தொடங்கியவன் பேச்சில் அத்தனை ஏமாற்றம்.
“ரொம்ப ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணேன் இசை.. அன்னிக்கு ரெண்டாவது பிரைஸ் வாங்கினப்போவே அவ்ளோ சந்தோஷப்பட்டவ இன்னிக்கு அட்லீஸ்ட் ஆசையா ஓடி வந்து கை குலுக்குவனு.. ஆனா நீ..” குரல் கரகரக்க பேசியவன் “இத நான் உங்கிட்ட கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல.. இப்படி நீ அவாய்ட் பண்ற அளவுக்கு நான் என்ன பண்ணேன்னும் எனக்கு புரியல” என்றுவிட்டு அதற்கு மேல் பேச முடியாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டான். எத்தனை முயன்றும் அவள் ஒதுக்கத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.
அவன் ஏமாற்றமான பேச்சை கேட்டு நின்றிருந்த இன்னிசைக்கோ மனதில் பெரும் குற்றவுணர்வு. தமிழ் இதுவரை நேற்றை போல் அவளிடம் கடுமையாக நடந்துக் கொண்டதே இல்லை. அவன் பேச்சிலும் அணுகலிலும் அத்தனை தன்மையிருக்கும். ஆனால் அவனின் நேற்றைய கடுமையும் கோவமும் இதுவரை அவள் காணாத ஒன்று. அத்துடன் தன்னிடம் எப்படி அவனால் கடுமையாய் நடந்து கொள்ள முடிகிறது? என்ற எண்ணமும் எழ, நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பதை போல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தாள். தமிழை சுற்றலில் விடும் எண்ணமே தவிர வருத்தவோ நோகடிக்கவோ நினைக்கவில்லை.
தமிழும் இசையிடம் கடுமையாக நடக்க நேரிடுமென நினைக்கவில்லை. அது அவனையும் மீறி அவன் இயலாமையால் விளைந்த வினை. அகமெல்லாம் அடங்காமல் காதல் கொட்டிக்கிடக்க, உள்ளத்தில் உணர்வுகள் இருந்தும் உரிமை கொண்டாட முடியாமல் நிற்பவனிடம் வார்த்தைக்கு வார்த்தை அரவிந்த்.. அரவிந்த்.. என்றால்? அவன் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? எல்லை தாண்டியதும் பொறுமை பறந்துவிட்டது.
தன்னை நிதானப்பதிக் கொண்டு நிமிர்ந்தவன் அவள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டதும் பதறிவிட்டான்.
“அச்சச்சோ இசை.. ஏன் அழற?”. அவள் கண்ணீரில் தன்னையே கடிந்து கொண்டவனுக்கு இதை தவிர அவளுக்கு தன்னை தன் உணர்வுகளை உணர்ந்த வேறு வழியும் தெரியவில்லை.
இசையின் ஒதுக்கம் அவனை எவ்வாறு, எந்த அளவுக்கு பாதிக்கும் என தமிழ் அவளுக்கு உணர்த்த நினைக்க அவளோ அவன் முதல் பரிசு பெற்ற தருணத்தின் மகிழ்ச்சியை முழுமையாய் அனுபவிக்க விடாமல் கெடுத்து அவனை காயப்படுத்திவிட்டதாக நினைத்தாள்.
“சாரி சீனியர்.. நான் உங்கள ஹர்ட் பண்ணும்னு நினைக்கல.. நீங்க நேத்து ஹார்ஷா பேசுனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அதான் அப்படி நடந்துக்கிட்டேன்.. உங்க டே வ ஸ்பாயில் பண்ணதுக்கு ஐம் ரியலி சாரி” இசை விசும்பலுடன் கூற “மொதல்ல கண்ண தொட இசை..” என்று அதட்டினான். காதல் கொண்ட மனம் அவள் கண்ணீரை கண்டதும் கரைந்து விட்டது.
“சாரி சீனியர்.. என் மேல ரொம்ப கோவமாமா..??”
“ஐயோ இசை.. அழுகைய நிறுத்து மொதல்ல..” மீண்டும் அதட்டியவன்,
“கோவமே இல்லனு பொய் சொல்ல மாட்டேன் இசை.. ஆனா அத விட நிறைய நிறைய வருத்தம் தான்.. கலந்துக்க மாட்டேன்னு சொன்னவன அவ்ளோ கன்வீன்ஸ் பண்ணி கலந்துக்க வச்சிட்டு இன்னிக்கு ஒரு விஷ் கூட பண்ணாம நின்னா எனக்கு எப்படி இருக்கும்… உனக்காக தான கலந்துக்கிட்டேன்” என தன்மையாகவே பேச அவள் அழுகை இன்னும் அதிகரித்தது. அதில் செய்வதறியாமல் சற்று தடுமாறி தான் போனான் தமிழ்.
பேசி பார்த்தவனுக்கு இறுதியில் தன்னையும் தன் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் மனநிலையும் பக்குவமும் அவளிடம் இல்லை என்ற உண்மை உரைக்க தன் முயற்சிகளை கைவிட்டு விட்டு அவளை சமாதானம் மட்டும் செய்தான்.
இசையின் அழுகை மட்டுப்பட்டிருக்க தமிழுக்கு உள்ளுக்குள் அவன் கையாலாக நிலையை நினைத்து தன் மீதே ஒரு வகை கோவம் எரிச்சல். ஏதும் பேசாமல் அவளுடன் கேண்டீன் சென்றான்.
error: Content is protected !!