Skip to content
Post Views: 1,334
கேண்டீனில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. இருவருக்கும் காபி வாங்கிவந்த எழில் அவள் எதிரே அமர ஒரு நொடி அவனை ஏறிட்டவள் மீண்டும் தன் பார்வையை வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
“இந்த திமிருக்கு கொஞ்சமும் கொறச்சல் இல்ல..” அவள் செயலில் கடுப்புடன் முணுமுணுத்தவன் தொண்டையை செறுமிக் கொண்டு “காபி” என்று அவள் முன் ஒரு கோப்பையை நகர்த்த “எனக்கு வேண்டாம்..” என்றாள்.
Advertisement
“முன்னாடியே சொல்ல மாட்டியா.. நான் வாங்கீட்டு வந்துட்டேன்”
“என்ன கேட்டுட்டா போய் வாங்கினீங்க..??”
Advertisement
Advertisement
பதிலளில்லாதவன், “பிளீஸ் மலர்.. வாங்கீட்டேன் வேஸ்ட் பண்ணாத” என்று கூற, அவன் தன்மையாக பேசவும் மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை. எழிலின் பார்வை முழுவதும் மலரிடம் தான். அவளின் பார முகம் வேறு உள்ளத்தை உறுத்தியது. அவளின் முக சுணக்கத்தில் முதல் முறை தன் செயலை எண்ணி வருந்தினான்.
Advertisement
காபி பருகிக் கொண்டிருந்தவளுக்கு அவன் பார்வை குறுகுறுப்பை குடுக்க, “என்ன விஷயம் சொல்ல வந்தத சீக்கிரம் சொல்லுங்க சும்மா குறுகுறுனு பார்த்துட்டே இருக்காதீங்க” என்றாள்.
அதில் சற்று தடுமாறியவன், “சாரி… என்ன இருந்தாலும் நான் அப்படி மூஞ்சியில அடிச்ச மாதிரி…” என்று இழுக்க
“ஆக்சுவலி தேங்க்ஸ்..” என்றாள்.
எழில் புரியாமல் விழிக்க, “இல்ல நீங்க சொல்லலைனா இப்ப வர அவங்களுக்கு இடைஞ்சலா தான் நின்னுட்டு இருந்திருப்பேன்.. அதான்” என்று கூறி புன்னகைத்தாள். ஏனோ அந்த புன்னகையில் அத்தனை சங்கடமாக உணர்ந்தான் எழில்.
“ஃபீல் பண்றியா மலர்?..”
புன்னகை மாறாமல் மறுப்பாக தலையாட்டியவள் தன் உணர்வுகளை மூடி மறைக்கவெல்லாம் இல்லை.
“இல்லனு பொய் சொல்ல மாட்டேன் சீனியர்.. நீங்க டக்குன்னு அப்படி சொல்லவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு..” என்றாள்.
அவள் பதிலில் எழிலின் முகம் கலக்கமடைய மலருக்குள் அப்படி ஒரு சுவாரசியம். “என்ன எவ்ளோ கடுப்பேத்துன இன்னிக்கு இருக்கு உனக்கு” என நினைத்துக் கொண்டாள்.
“சாரி மலர்..” வீராப்பு பார்க்காமல் எழில் இறங்கி வர முறுக்கிக் கொண்டாள் மலர்விழி. சற்று முன் நன்றாக பேசியவள் மீண்டும் முகத்தை திருப்ப எழிலுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னாச்சு மலர்?” அவன் விளங்காமல் வினாவிட “பண்றதை பண்ணீட்டு என்னாச்சாமா?” என்று சத்தமாக முனகினாள்.
“அதான் சாரி கேட்டுட்டேன்ல.. இன்னும் என்ன?”
“சாரி கேட்டா போதுமா? ஹர்ட் ஆனாது என் ஹார்ட்டுங்க..”
“இப்போ நான் என்ன தான் செய்யனும்னு நினைக்கிற..” எழில் கெஞ்சும் தொனியில் கேட்டிட
“என்ன கேட்டா..” என்று தோளை குலுக்கியவள் அவனை கெஞ்சவிட்ட திருப்தியுடன் மறுபுறம் திரும்பி முகத்தை மூடிக் கொண்டு சிரிக்க, பார்த்துவிட்டான் எழில். சுள்ளென்று கோவம் தலைக்கேறியது.
“ஏய் என்ன? நல்லா கெஞ்சவிட்டு குதூகலப்படுறியோ..” அவன் கண்டுக் கொள்ளவும் வாய்விட்டு சத்தமாக சிரித்தாள்.
“சிரிக்காத மலர் செம கடுப்பாகுது..” எழில் கடுகடுக்க பாடுபட்டு தன் சிரிப்பை அடக்கியவள், “இட்ஸ் ரிவெஞ் டைம்..” என்று வில்லத்தனமாக புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
“ஏதோ என்னால நீ ஹர்ட் ஆகிட்டியேனு கொஞ்சம் இறங்கி வந்து பேசுனா ரொம்ப ஓவரா பண்ற”
“இவ்ளோ நாள் என்ன எப்படியெல்லாம் கடுப்பேத்துனீங்க இன்னிக்கு எனக்கு சான்ஸ் கிடைச்சது யூஸ் பண்ணிக்கிட்டேன்” அவள் அசட்டையாக சொல்ல
பல்லை கடித்தவன், “தேவையில்லாம என்கிட்ட வச்சுக்காத அப்புறம்..” என்று எச்சரிக்க “அப்புறம்.. ?? அப்புறம் என்ன பண்ணுவீங்க?” என்றாள் ஏகத்திற்கும் எள்ளலுடன்.
அவ்வளவு தான் எழிலின் பொறுமை பறந்துவிட்டது. மீண்டும் ஓர் சண்டை இருவரிடைரியே.
தமிழும் இசையும் கேண்டீன் வர இருவரும் மற்றவரை கண்டு கொள்ளாமல் அவரவர் தொலைபேசியில் மூள்கிப்போய் இருந்தனர்.
இவர்களை கண்டதும் எழில் இருவருக்கும் காபி வாங்க எழுந்து சென்றுவிட, தமிழ் எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
“உட்காருங்க சீனியர்..” மலர் இயல்பாக பேசி அவளருகே இருந்த நாற்காலியை நகர்த்த உள்ளம் உறுத்தியது.
அவளை சங்கடமாக பார்த்தவன், “சாரி மலர்.. உன்ன ஹர்ட் பண்ணும்னு பண்ணல.. நான் ஒன்னு செய்ய போய் அது வேற மாதிரி.. ஐம் ரியலி சாரி” என்று தடுமாற்றத்துடன் மன்னிப்பு கோர
“எனக்கு புரியுது சீனியர்.. நான் உங்கள தப்பா நினைக்கல..” என்றாள் சிறிய புன்னகையுடன்.
அதுவே அவனை மேலும் உறுத்த “சாரி மலர்” என்றான் மீண்டும்.
“ஐயோ.. போதும் சீனியர் எத்தன தடவ சொல்லுவீங்க.. என்ன ஒன்னு சுத்தி வளைக்காம நேரா எங்கிட்டயே சொல்லி இருக்கலாம்.. இருந்தாலும் பரவாயில்ல.. இனிமேல் நேரா என்கிட்டயே சொல்லுங்க” என்றவள் எழில் வரவும் அவனை கண்டுவிட்டு “ஹான் சொல்ல மறந்துட்டேன்.. இனி உங்க ஃபிரண்ட்ட தூது அனுப்புற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க” என்று கண்டனமாக கூற
தமிழின் தலையில் தட்டிய எழில், “தேவையா டா.. இதெல்லாம் எனக்கு தேவையா.. இவ லா பேசுற அளவுக்கு என்ன கொண்டு வந்து நிறுத்தீட்டல..” என்று அவனிடம் கத்த, இன்னிசைக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவள் சிரிக்கவும் “எதுக்கு டி சிரிக்கிற?” எரிந்து விழுந்த மலர் எழிலை முறைக்க வழக்கம் போல் அவளை இளக்காரமாய் ஒர் பார்வை பார்த்து வைத்தான்.
இவர்கள் இருவரும் அடிக்கும் கூத்தில் தமிழுக்கு தான் மண்டை காய்ந்தது. நேற்றிலிருந்து அவனொன்று நினைக்க அதுவொன்று நடக்க என அனைத்தும் குளறுபடி. அத்துடன் அவனுக்கும் இசைக்குமான பிரச்சினையை இருவரும் தற்காலிகமாக தள்ளிப்போட்டுள்ளனரே தவிர இன்னும் முழுமையாக பேசி தீர்க்கவில்லையே.
இந்த சிந்தனைகளில் அமர்ந்திருந்தவனுக்கு ஏனோ இன்றைய நாளில் இனிமை முற்றிலும் பறிபோன உணர்வு.
“சீனியர்..” மலரின் அழைப்பில் தான் நடப்பிற்கு வந்தான்.
“என்ன சீனியர் ஏதோ யோசனையிலே இருக்கீங்க?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல மலர்..”
“உங்கள பார்த்த ஃப்ர்ஸ்ட் பிரைஸ் வாங்குன மாதிரி இல்ல.. எதையோ பறிக்குடுத்த மாதிரி இருக்கு..”
மலரின் கூற்றில் இசையின் முகம் வாடிவிட்டது. அவள் முகமாற்றத்தை கண்டவனோ “நான் எப்பவும் போல தான் இருக்கேன்..” என்று மலருக்கு பதிலளித்துவிட்டு இசையை இயல்பாக்கும் பொருட்டு அவளை கண்டு கண் சிமிட்டி புன்னகைத்தான்.
அதை புரிந்து கொண்டவளோ, சிறிய முகமாற்றத்தை வைத்தே தன் மனதை அறிந்து நடப்பவனை புரிந்து கொள்ளாமல் நோகடித்துவிட்டோமே என்று வருந்தினாள்.
“சரி நெக்ஸ்ட் என்ன பிளான்ஸ்…?” என்று மலர் மற்ற மூவரையும் ஆர்வமாக பார்க்க “வீட்டுக்கு போய் நல்லா இழுத்து போர்த்தீட்டு தூங்கறது தான்” விட்டேத்தியாக பதிலளித்தான் எழில்.
“அய்யே..” முகம் சுழித்தவள் “இவரு கிடக்காரு நீங்க சொல்லுங்க சீனியர்..” என்று அவனை உதாசினபடுத்திவிட்டு தமிழிடம் திரும்ப “நீயே சொல்லு மலர்” என்றான் அவன்.
யோசித்தவள் “மால் போய்டு அப்படியே ஏதாவது படத்துக்கு போய்டு வரலாமா?” என்று கேட்க தமிழ் இசையை பார்த்தான்.
அவள் சம்மதமாய் தலையசைக்கவும் “ஓ போலாமே..” என்றவனை நறுக்கென்று கிள்ளி வைத்தான் எழில்.
“ஆஆ.. ஏன் டா நாயே கிள்ளி வச்ச..” அவர்கள் இருவர் முன் கத்த முடியாமல் தமிழ் பல்லை கடிக்க
“என்ன போலாமே.. ஒழுங்கா கிளம்பு வீட்டுக்கு போலாம்” என்றான் எழில்.
“இப்போ வீட்டுக்கு போய் என்ன பண்ண போற?”
“நான் இல்ல ராசா நீ.. நீ தானே அரியர் கிளியர் பண்ணனும் படிக்கனும்னு போன வாரம் பில்டப் விட்ட.. வீட்டுக்கு போய் படிக்கிற வேலைய பாரு”
“நேரம் பார்த்து பழிவாங்கிரியோ?” கடுப்பாக முனங்கியவன் “இப்போ தான் டா கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கா.. அதுவும் இல்லாம அவ கூட இன்னிக்கு டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு ஓவரா ஆசைய வளர்த்துட்டேன்.. ப்ளீஸ் கொஞ்சம் கோஆபரேட் பண்ணு டா கண்ணு..” என்று எழிலை தாஜா செய்தான்.
“என்ன சீனியர் உங்க ஃபிரண்ட் வரலையா?” இருவரும் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ளவும் மலர் கேட்க
“இல்ல இல்ல சும்மா தான் பேசீட்டு இருந்தோம்.. அவன் வருவான்” என்றவன் கெஞ்சியே எழிலை சம்மதிக்க வைத்துவிட்டான்.
நால்வரும் அருகே இருந்த மாலுக்கு சென்றனர். அங்கு வாரணம் ஆயிரம் திரைப்படம் மறு வெளியீடு (re-release) செய்திருக்க அதற்கு தான் செல்ல வேண்டும் என அடம் பிடித்தாள் மலர்விழி. எரிச்சலாகி விட்டான் எழில். பார்த்த திரைப்படத்தையே எத்தனை முறை பார்க்க? அவனுக்கு இதில் எல்லாம் பெரிதாக நாட்டம் இல்லை. சற்று கஞ்சனும் கூட.
“ஏன் இதுக்கு முன்ன நீ வாரணம் ஆயிரம் பார்த்ததே இல்லையா?”
“ஓ ஆயிரம் தடவ பார்த்திருக்கேன்.. இருந்தாலும் தியேட்டர்ல பாக்குற மாதிரி வருமா?”
“லூசு மாதிரி பேசாத.. பார்த்த படத்தையே எந்த மடையனாச்சும் காசு கொடுத்து திரும்பி பார்ப்பானா?”
“நான் பார்ப்பேன்..” என வாக்குவாதம் செய்தாள் மலர்.
இருவரும் சண்டையிட மெல்ல இசையிடம் வந்த தமிழ், “நீ சொல்லு இசை.. எந்த படத்துக்கு போலாம்?” என்று கேட்க “எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே சீனியர்” என்றாள் மழுப்பலாக.
“ம்ச்.. சும்மா சொல்லு” அவன் விடாப்பிடியாக கேட்கவும் அவனை ஆவலாய் நோக்கியவள், “வாரணம் ஆயிரம் போலாம் சீனியர்.. எனக்கு சூரியானா பயங்கிற இஷ்டம்” என்று கண்களை சுறுக்கி ஆசையாய் கோர மறுப்பான இவன்? பேசியே எழிலை சரிக்கட்டி வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டான்.
திரைப்படம் தொடங்க இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இருக்க பொழுதுபோக்கு விளையாட்டுகள் இருக்கும் இடத்திற்கு சென்றனர். பவுலிங் ஆலி ( bowling alley) முதல் பல நவீன விளையாட்டுக்கள் வரை இருக்க மலருக்கு ஓரே கொண்டாட்டம் தான். அனைத்திலும் ஆர்வமாக பங்கேற்றாள்.
தமிழும் எழிலும் கூட சுவாரசியமாக விளையாடினர். இன்னிசைக்கு தான் அடுத்தடுத்த ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்கவும் விளையாட்டுகள் சலிப்பு தட்டிவிட்டது.
“இது போர் அடிக்குது டி.. நீங்க முடிச்சுட்டு கால் பண்ணுங்க.. நான் அது வர கொஞ்சம் வின்டோ ஷாப்பிங் பண்றேன்” என்று மலரிடம் கூறிவிட்டு வந்துவிட்டாள்.
இசை இருக்கும் வரை விளையாட்டில் கவனமாய் இருந்தவன் அவள் சென்றவுடன் வேண்டும் என்றே ஆட்டத்தில் தோற்றுவிட்டு, “எனக்கும் போர் அடிக்கிது.. நான் வரல” என்க அவனை குறுகுறுவென பார்த்தான் எழில்.
நண்பன் கண்டுகொள்ளவும் தமிழ் அசடு வழிய, தலையில் அடித்துக் கொண்ட எழில் “போய் தொல” என்றதும் ஜாடை காட்டிவிட்டு இசையை தேடி வந்தான்.
அவன் வெளியே வர எதிரே புக் ஸ்டாலில் நின்றிருந்தாள் இன்னிசை. தமிழின் விழிகள் அவளை ரசனையுடன் வருடியது.
கல்லூரியில் வழக்கமான சுடிதாரிலே பார்த்து பழகியவனை ஜீன்ஸ் டீ ஷர்ட் சகிதம் இருந்தவள் மேலும் வசீகரித்தாள்.
சற்று நேரம் தள்ளி நின்று ஆசை தீர சைட் அடித்தவன் புக் ஸ்டால் செல்ல, மேல் செல்ஃப்பில் இருந்த புத்தகத்தை எடுக்க முயற்சித்து கொண்டிருந்தாள் இசை. கால்விரல் நுனியில் நின்று எட்டியவளின் கைகள் புத்தகத்தை தொடக்கூடவில்லை.
‘குட்டச்சி!!’ செல்லமாய் அகத்தில் அலுத்துக் கொண்டவன் அவளை கண்டு சிரிக்க, அவன் சத்தத்தில் நிமர்ந்தவள் தமிழை கண்டதும் கடுப்பாகிவிட்டாள்.
“என்ன சிரிப்பு?” இசை முறைப்புடன் கேட்க மேலும் சத்தமாக சிரித்தான்.
“சீனியர்!” அவள் அதட்டவும் தன் சிரிப்பை நிறுத்தியவன் “தள்ளு” என்று அவளை நகர சொல்லிவிட்டு அவள் கேட்ட புத்தகத்தை எடுத்து தந்தான்.
“தேங்க்ஸ்!” புன்னகைத்தவள் “வந்துட்டீங்க.. கேம்ஸ் எதுவும் விளையாடுளையா?” என்று கேட்க “அங்க ரொம்ப போர்.. அதான் வந்துட்டேன்” என்றான்.
சரி என்றவள் மீண்டும் புத்தகங்களில் கவனமாகிவிட மெல்ல பேச்சை தொடங்கினான் தமிழ்.
“புக்ஸ் படிப்பியா இசை?”
“ம்ம் நிறையா படிப்பேன்..”
“ஓ அப்போ எந்த மாதிரி புக்ஸ் படிப்ப?” என்றதும் “நிறைய நாவல்.. செல்ஃப் ஹெல்ப் புக்ஸ்லாம் படிப்பேன்..” என்று ஆரம்பித்தவள் அவளுக்கு பிடித்த புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் குறித்து பேச தொடங்கிவிட தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘வாய வைச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா’ என தன்னையே கடிந்து கொண்டான்.
சற்று நேரம் அவள் பேச்சை கவனிப்பதை போல் பாசாங்கு காட்டியவனால் அதற்கு மேல் முடியவில்லை, முகம் தன்னால் அவன் சுவாரசியமின்மையை காட்டிவிட புரிந்து கொண்ட இசையும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டவள் அமைதியாக பில் போட செல்ல, கண்டுக்கொண்டாளோ என்று பதட்டத்துடனே அவள் பின் சென்றான்.
“என்னாச்சு இசை..?” தமிழ் மெல்ல இழுக்க அவனை ஓர் பார்வை பார்த்தவள் புத்தகத்திற்கு பணம் செலுத்திவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
“இசை..?!!?”
தமிழின் பதட்டத்தில் மேலும் அவனை பயமுறுத்தால் அவள் சிரித்துவிட “அடிப்பாவி.. ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன்” என்றான் சற்று நிம்மதியுடன்.
“நான் பேசுறது போர் அடிச்சா.. ஓவரா பிலேடு போடாதனு ஓப்பனா சொல்லுங்க..”
“நான் டெக்ஸ்ட் புக் படிக்கிறதே பெருசு.. நீயே புரிஞ்சுப்பனு நினைச்சேன்”
“அது சரி!” என்றாள் சிரிப்புடன்.
பேசிக் கொண்டே மாலை சுற்றி பார்த்தனர். நேற்று நடந்த சண்டையெல்லாம் மறந்து அந்நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டனர் இருவரும். வழக்கத்தை விட உற்சாகமாக காணப்பட்டாள் இன்னிசை. அது அவளின் செயல்களிலே தெரிந்தது. தமிழை வம்பிழுத்துக் கொண்டும் கலாய்த்துக் கொண்டும் இருந்தாள்.
முதலில் இசையின் இந்த பரிமானத்தில் வியந்தவனுக்கு மகிழ்ச்சியே. அவனருகே சவுகரியமாகவும் பாதுகாப்பாகவும் உணர்வும் தானே இத்தனை சேட்டைகள் செய்கிறாள்.
error: Content is protected !!