Skip to content
Post Views: 969
மறுநாள் கேண்டீனில்,
“இப்போ உங்க இரண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சினை..? நான் அந்த காம்பெட்டீஷன்ல கலந்துக்கனும் அவ்ளோ தான.. கலந்துக்கிறேன்” என அவனெதிரே இருந்த எழிலிடமும் இசையிடமும் பேசிக் கொண்டிருந்தான் தமிழ்.
Advertisement
இரண்டு நாட்கள் தான் அதற்கு மேல் அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை. இசையுடன் கூட இன்னும் பேசாமல் இருக்க முடியுமோ என்னவோ அவனுக்கு தெரியவில்லை, ஆனால் எழிலிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. காலையில் இருந்து அவனுடனே இருந்து கொண்டு எழில் அவனிடம் ஒதுக்கம் காட்டுவதும் அந்நியமாக பழகுவதும் அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவனே வந்து பேசிவிட்டான்.
தமிழின் பேச்சில் இசை எழிலை ஓரக்கண்ணில் பார்க்க “நான் தான் சொன்னேன்னே” என்பதை போல நமட்டு சிரிப்பு சிரித்தான் எழில்.
Advertisement
Advertisement
“என்ன இரண்டு பேருக்கும் உங்க பிளான் வர்க் அவுட் ஆயிருச்சுனு ஓரக்கண்ணுலயே பேசிக்கிறீங்களா?” தமிழ் கோவமாக கேட்க இருவரும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
அதில் இன்னும் எரிச்சலானவன், “அதான் நான் கலந்துக்கிறேன்னு சொல்லீட்டனே.. இப்பவும் என்ன ரெண்டு பேரும் சீன் போடுறீங்க?” என்றான் கடுப்பாக.
Advertisement
“இவ்ளோ சலிச்சுகிட்டு எல்லாம் யாரும் கலந்துக்க வேண்டாம்..” என எழில் கூற “யாரும் இங்க சலிச்சுகிட்டெல்லாம் கலந்துக்கல.. யோசிச்சு பாத்தேன்.. உங்களுக்காக ஒரு தடவ டிரை பண்ணலாம்னு தோனுச்சு.. அதான்” என குரலை தாழ்த்தி அவன் கெத்தை விட்டிக் கொடுக்காமல் பேசினான் தமிழ்.
இவன் இவ்வளவு இறங்கி வந்ததே பெரியது என நினைத்த எழில், “சரி வா அப்போ இப்போவே ரெஜிஸ்டர் பண்ணலாம்” என்க “டேய் இருடா.. அந்த ஹெச்.ஓ.டி கிட்ட பர்மிஷன் வாங்கிக்கலாம்.. இல்ல அப்பறம் போய் ஓ.டி கேட்டா என்ன கேட்டா ரெஜிஸ்டர் பண்ணீங்கனு அதுக்கு ஒரு திட்டு திட்டுவான்” என்று அனுபவத்தில் தமிழ் கூற சரியென்றான் எழில்.
இவ்வளவு நேரம் கடந்தும் இசை அவனுடன் பேசாததை அப்போது தான் கவனித்த தமிழ், “ஓய் அதான் கலந்துக்கறேன்னு சொல்லிட்டேனே இன்னும் என்ன?” என கேட்க எழிலை பார்த்தவள் அமைதியாக முகத்தை திருப்பிக் கொண்டாள். எழில் அண்ணனின் பேச்சைக் கடைப்பிடிக்கிறாளாம்.
எழிலை முறைத்த தமிழ் அவன் இருக்கையை அவள் பக்கமாக இழுத்து போட்டு அமர்ந்து, “சாரி இசை.. அன்னிக்கு நான் அப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி எழுந்திருச்சு போனது ரொம்ப தப்பு தான்.. அப்படி பண்ணியிருக்க கூடாது.. ஐ அம் ரியலி சாரி. அன்னிக்கு நீயும் இவனும் என்ன புரிஞ்சுக்கலங்கிற கோவத்துல ஏதோ தெரியாம பண்ணீட்டேன்.. சாரி” என்றவன் அவளை சமாதானம் செய்ய இசை எளிதில் மனமிறங்கவில்லை.
கெஞ்சலாக கண்களை சுருக்கியவன் “சரி இப்போ நான் என்ன பண்ணனும்?” என கேட்க அவன் பாவனையில் மெல்ல முறுவலித்தவள், “போய் ஹெச்.ஓ.டி ய பார்த்துட்டு வாங்க சீனியர்” என்க புன்னகைத்தவன் “ஜஸ்ட் டென் மினிட்ஸ்..” என எழிலையும் இழுத்துக் கொண்டு அவன் டிபார்ட்மெண்ட் ஓடினான்.
ஹெச் ஓ டி யிடம் வந்தவன் அவரிடம் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கேட்க அவ்வளவு சீக்கிரத்தில் குடுத்துவிடுவாரா அந்த மனிதர்? தமிழ் சொன்னதை போல தான் உப்பு சப்பில்லாத காரணங்களை வைத்து ஓ.டி தர மறுத்துக் கொண்டிருந்தார்.
“சார்.. பிளீஸ் சார்” என தமிழ் கெஞ்ச எழிலின் செருப்பை பார்த்தவர், “உங்களுக்கு டிரெஸ் கோட் என்ன?.. ஒழுங்கா டிரெஸ் கோட்ல வந்துட்டு அப்பறம் ஓடி வாங்கிக்கோ” என இருவரையும் அனுப்பிவிட்டார்.
ஹெச் ஓ டி யின் அறையில் இருந்து கோவத்துடன் வெளியே வந்தவன்,
“டேய்.. உங்கிட்ட ஷூ இல்லையாடா ஏன்டா செருப்பு போட்டுட்டு வந்த..” என எழிலிடம் கத்த ஏற்கனவே ஹெச்.ஓ.டியின் மீது கடுப்பில் இருந்தவன், “ஆமா இப்போ என் செருப்பால தான் அந்த ஆளு ஓடி தரலையா..” என தமிழிடம் எகிற இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது.
அங்கே வந்த அவர்களின் டியூடர் சரவணன் இவர்களின் சண்டையை பார்த்துவிட்டு, “ஏன் டா பசங்களா இப்படி சண்ட போட்டுக்கிறீங்க?” என கேட்க எழில் அனைத்தையும் அவரிடம் கூறினான்.
“அவர் அப்படி தான் விடுங்க..” என்றவர் “சரி ஓடி லெட்டரை எங்க?” என கேட்க திரு திருவென விழித்த இருவரும் இல்லையென தலையாட்ட, “நல்ல பசங்க டா.. லெட்டரே இல்லாம தான் போய் ஓடி கேட்டீங்களா?” என தலையில் அடித்துக் கொண்டவர், “போய் ஓடி லெட்டரை கொண்டு வாங்க..” என இருவரையும் துரத்தினார்.
ஐந்து நிமிடத்தில் ஓடி லெட்டருடன் வந்த எழில், “சார் பிளீஸ் எப்படியாவது ஒடி வாங்கி குடித்துருங்க.. இவன் ரொம்ப பண்றான்” என தமிழை முறைத்துக் கொண்டே சொல்ல பதிலுக்கு அவனை பார்த்து புன்னகைத்தவர், “சரி இருங்க வரேன்…” என ஹெச்.ஓ.டி யிடம் சென்றார்.
சரவணன் கேட்டவுடன் எல்லாம் ஹெச்.ஓ.டி அவ்வளவு எளிதில் ஓடி குடுக்கவில்லை. ஒரு கால் மணிநேரம் சரவணன் ஹெச்.ஓ.டி யின் மண்டையை கழுவி சம்மதம் சொல்ல வைத்தார்.
சரவணன் ஓடியுடன் வர மகிழ்ச்சியாக அவரின் கைகளை பிடித்துக் கொண்ட எழில், “ரொம்ப தேங்க்ஸ் சார்..” என கூற சிரித்தவர், “ஆல் தி பெஸ்ட்..” என தமிழிடம் ஓடியை குடுத்தார்.
ஓடி வாங்கிக் கொண்டு இருவரும் கேண்டீன் வர மலரும் இசையும் அங்கே தான் இருந்தனர் வகுப்பிற்கு செல்லவில்லை. “ஹே நீங்க ரெண்டு பேரும் கிளாசுக்கு போகல..? ” என கேட்க படி தமிழ் இசையின் எதிரே அமர “ஐயோ.. சீனியர் சும்மா இருங்க நானே இப்போ தான் அவள பிரைன் வாஷ் பண்ணி கிளாஸ் கட் அடிக்க வச்சிக்கேன்..” என்றாள் மலர் பதட்டமாக.
“ஓடி வாங்கிட்டீங்களா சீனியர்..” என இசை ஆர்வமாக கேட்க ஓடியை அவளிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்தவள் புன்னகைக்க, “ஹாப்பா.. இதுக்காக நீங்க ரொண்டு பேரும் ரெண்டு நாளா என்ன அலும்பு பண்ணீங்க.. இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு பிடிவாதம் ஆகாது பா” என்றான் தமிழ் பெருமூச்சுடன்.
“இல்லாட்டி உன்னையெல்லாம் சமாளிக்க முடியுமா..” என்ற எழில் தமிழின் போனை எடுத்து போட்டியில் அவன் பெயரை பதிவு செய்யதான்.
ஒரு வாரம் அப்படியே கழிய போட்டி நாளும் வந்தது.
பொதுவாக அவர்களின் கல்லூரியில் நடக்கும் போட்டிகளில் சில பல அரசியல்கள் இருக்க அதற்கெல்லாம் தமிழ் இதுவரை பயிற்சி ஏதும் எடுத்ததில்லை. அவன் ஆசைக்கு பங்கேற்பான். இம்முறை கொஞ்சம் பயிற்சி எடுத்திருந்தான். பயிற்சி என்றால் எழிலிடம் ஒரு இரண்டு மூன்று முறை பாட்டிக் காட்டினான் அவ்வளவே. அவனை, அவனை விட அதிகமாக நம்பும் எழில் மற்றும் இசைக்காக அவனின் சிறிய முயற்சி. வெற்றி பெறவில்லை என்றாலும் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஏதேனும் அங்கீகாரம் கிடைக்காதா என்ற ஏக்கம் அவன் மனதிலும் அதிமாக இருந்தது.
போட்டி தொடங்கி நேரம் ஆக ஆக தமிழின் பயமும் பதட்டமும் பலமடங்கானது. “டேய் எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு டா..” என தமிழ் பதட்டமாக எழிலின் கைகளை பிடித்துக்கொள்ள “அதெல்லாம் ஒன்னும் இல்ல டா.. நீ நல்லா பாடுவ டென்ஷன் ஆகாத.. ரிலேக்ஸ்” என தைரியப்படுத்தினான் எழில்.
தமிழின் முறை வந்ததும் மேடை ஏறியவனுக்கு கூட்டத்தை பார்த்ததும் அன்று போலவே கைகள் கொஞ்சம் நடுங்கியது. அன்றாவது பரவாயில்லை அவனின் கல்லூரி கூட்டம் குறைவுதான் இன்று கேட்கவே வேண்டாம்.. பல கல்லூரிகளில் இருந்து பல பேர் வந்திருக்க ஆடிட்டோரியத்தில் நல்ல கூட்டம்.
தன்னை நிலைப்படுத்திக் கொள்ள கண்களை மூடியவனுக்கு எழில் இசை இருவரின் முகம் கண் முன்னே வர, அவர்களுக்காகவாது அவனின் சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவன் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு மைக்கை கையில் எடுத்தான்,
நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை..
என அவனின் வசீகரிக்கும் குரலில் பாட தொடங்கினான் தமிழினியன். இன்னிசையின் தேர்வு தான்.
பார்வையாளர்களிடம் பார்வையை வைத்து பாடியவனின் பார்வை பாவையினிடத்தில் ஒரு நிமிடம் நிலைத்தது நகர்ந்தது. இன்னிசை??.. அவளாக இருக்க வாய்ப்பில்லையே அவள் தான் கல்லூரி சென்றிருப்பாளே.. மீண்டும் அவள் புறம் பார்வையை திருப்ப அவள் அங்கு இல்லை. பிரம்மை என நினைத்துவிட்டு மீண்டும் பாடலில் கவனம் செலுத்தினான்.
நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன்
நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே..
என மேற்கொண்டு முழு பாடலையும் பாடிவிட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றவன் மேடையில் இருந்து இறங்கினான்.
“மச்சி.. சூப்பரா பாடுன..” என கீழே இறங்கியவனை அணைத்து கொண்டான் எழில்.
போட்டி முடிவுகள் அறிவிக்கும் நேரம் வர வர தமிழுக்கு மீண்டும் பதட்டம் அதிகமானது. அங்கீகாரம் கிடைக்காத என ஏங்கியவன் முதல் முறை இவர்கள் இருவருக்காகவாது இந்த முறை மட்டுமாவது வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலுடன் இருந்தான்.
போட்டி முடிவுகளும் வர மேடையில் இருந்த நடுவர், மூன்றாவது பரிசை அறிவிக்க. தமிழுக்கு இன்னும் இன்னும் பதட்டம் அதிகமானது.. அவன் பதட்டத்தில் எழிலின் கைகளை பிடித்துக் கொள்ள, “ரிலேக்ஸா இருடா.. நல்ல ரிசல்ட் தான் வரும்.. வேற எதுவா இருந்தாலும் டென்ஷன் ஆகாத பார்த்துக்கலாம்..” என அவனை சமன் படுத்தினான் எழில்.
அடுத்ததாக, “அண்ட் தி செகண்ட் ப்ரைஸ் கோஸ் டூ ‘தமிழினியன்’ ஃபிரம் *** காலேஜ்” என இரண்டாவது பரிசை அறிவிக்க “கங்கிராட்ஸ் டா.. நீ ஜெச்சுட்ட” என மகிழ்ச்சியாக தமிழை கட்டிக் கொண்ட எழில் அவனை மேடைக்கு அனுப்பினான்.
ஒரு நிமிடம் தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை, எத்தனை நாட்களாக அவன் ஏங்கிய அங்கிகாரம்.. அவன் ஏங்கிய வெற்றி இப்போது அவனிடம். முதலிடம் இரண்டாம் இடமெல்லாம் அவன் மனதில் இல்லை, ஏதாவது ஒரு அங்கீகாரம் கிடைத்தால் போதும் என்று தான் இருந்தான். மேடை ஏறியவனுக்கு அவன் மனநிலையை வரையறுக்க முடியவில்லை கலவையான உணர்ச்சிகள்.
தன் திறமைக்கு எப்போதுமே அங்கீகாரம் கிடைக்காத என ஏங்கியவனுக்கு அந்த அரங்கத்தில் அத்தனை பேர் முன்னிலையில் விருது வழங்கி அங்கீகாரித்தனர்.
மனதில் பூரிப்புடன் தமிழ் அவனின் விருதை கையில் வாங்க கீழே புன்னகையுடன் உற்சாகமாக கை தட்டிக் கொண்டிருந்தான் எழில். நண்பனை பார்த்தவனுக்கு மனதில் அத்தனை மகிழ்ச்சி. “இத்தனை அங்கீகாரத்திற்கும் இவர்கள் இருவரும் தானே காரணம். இங்கே வந்திருந்தால் இசையும் இதே போல்தானே அவன் வெற்றியை கண்டு ரசித்திருப்பாள்.” என நினைத்தான்.
தமிழின் மனம் இப்போது இசையை தேடியது. முதல் வேலையாக அவளிடமே அவன் வெற்றியை சொல்லி அவள் சந்தோஷத்தை அவள் சிரிப்பை பார்க்க அவன் அகம் ஆசையும் ஆவலும் கொண்டது.
மேடையில் இருந்து இறங்கியவன் எழிலை அனைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் மச்சான்.. நீயும் இசையும் இல்லாட்டி.. இது எதுவுமே கிடைச்சிருக்காது” என உணர்ச்சிவசத்தில் பேச
“ச்சீ போடா..” என அவன் கன்னத்தில் செல்லமாக தட்டியவன், “இது உன்னோட திறமைக்கு நீ இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு கிடைச்ச கிஃப்ட்.. நாங்க ஒன்னுமே பண்ணல” என்றான் எழில் சிரிப்புடன்.
“ஹலோ சீனியர்.. கொஞ்சம் எங்களையும் கவனிச்சா நல்லா இருக்கும்..” என்ற இசையின் குரலில் திரும்பியவன் “இசைஐஐஐஐ.. ” என உற்சாகமாக அழைத்தான்.
“இங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும்.. காலேஜ் போகலையா?” என தமிழ் அவளையும் மலரையும் பார்த்த இன்ப அதிர்ச்சியில் சிரிப்புடன் கேட்க
“சர்ப்ரைஸ்ஸ்ஸ்” என அவனை பார்த்து சிரித்தவள், “இல்ல சீனியர் கட் அடிச்சுட்டோம்” என்றாள் குறும்பு மிளிர.
“ஏன்?” என அவன் சிரிப்புடன் கேட்க
“நான் தான் சொன்னேன்னே சீனியர்.. நான் உங்க பெரிய ஃபேன்னு.. நீங்க இங்க பாடும் போது உங்க ஃபேன் எனக்கு காலேஜ்ல என்ன வேலை அதான் கட் அடிச்சுட்டேன்..” என சிரிப்புடன் சொல்லி கண்ணடிக்க அவளின் பேச்சிலும் கன்னக்குழி சிரிப்பிலும் தன்னை தொலைத்த தமிழினியனோ கண்களையும் இமைக்க மறந்து அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
error: Content is protected !!