Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 7

அத்தியாயம்      7

நேயா, சரி அதை விடு, ‘’நீ என்ன கொஞ்ச நாளா சோக கீதம் வாசிக்கற….? சைட் எதாவது செட் ஆகிடுச்சா………?” என்றாள் பூர்ணிமாவைப் பார்த்து கண் அடித்து.



Advertisement

‘’அடி வாங்க போற நீ……..’’

‘’வேற என்ன பிரச்சனை….., உன்னை குடையுது, என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு சீக்ரெட்டா……?’’

அதெல்லாம் எதுவும் இல்ல, என்றவள் சுருக்கமாக செந்திலைப் பற்றி கூறினாள்.

Advertisement

யார்…., அன்னைக்கு உன்னை நேர்ல பார்க்க வந்திருந்தானே…., அவனா…..? என்றாள்.  ‘’பார்க்க நல்லா ஹேன்ட்சம்மா, டீசன்ட் பாய் மாதிரி இருந்தான்…, அவனுக்குள்ள இப்படி ஒரு கேரக்டரா………?’’

Advertisement

‘’ஆள் பார்க்க நல்லாயிருந்தா…. போதுமா, குணம் சரியாயிருக்கனும் இல்ல’’.

ஹ்ம்ம்….. நீ சொல்றதும் கரெக்ட் தான், விடு.  ‘’உனக்கான ராஜகுமாரன் சீக்கிரமா வந்து, உன்னை அவன்கிட்ட இருந்து தூக்கிட்டு போயிடுவான்,’’ என்றாள் ரசனையாக.

நேயா சொன்ன பாவனையில் சிரித்தவள், நானும் அப்படிதான் மனசை தேத்திக்கறேன், இருந்தாலும் அப்பப்ப அவனைப் பத்தின நினைவு வந்து பயமுறுத்துது.

Advertisement

மேம், உன்னை எம்.பில் படிக்க சொன்னது என்னாச்சு…..?

யோசனையா இருக்கு நேயா, சில சமயம் படிக்கனும்னு ஆசையா இருக்கு.   சில சமயம் முடியுமான்னு பயமாயிருக்கு.

என்ன பயம் உனக்கு?  மேம்மே உன் டேலன்ட் பார்த்துட்டு தான சொன்னாங்க.  முதல்ல அப்ளை பண்ணு.  அப்புறம் என்னன்றத பார்க்கலாம்.  லாஸ்ட் டேட் முடியறதுகுள்ள அப்ளை பண்ணிடு,  என்ட்ரன்ஸ் இருக்கு இல்ல.

ஹ்ம்ம்……. பண்றேன், அதுக்கு முன்னாடி அக்காகிட்ட கேட்கனும்.

சும்மா இப்படி ஏதாவது காரணம் சொல்லிகிட்டே இருக்காத, நீ முதல்ல ஸ்டெடியா முடிவெடு, அப்புறம் அவங்களை கன்வின்ஸ் பண்றது எல்லாம் மேட்டரே இல்ல என ஊக்கப்படுத்தினாள்.

இன்னைக்கே வீட்ல பேசிட்டு அப்ளை பண்றேன், போதுமா…………?

ஹான், அது………. நேயான்னா சும்மாவா, அவள் சொல்லி ஒரு விஷயம் நடக்காம இருக்கறதா…… என்றாள் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டு.

அதற்குள் பீரியட் முடிந்ததற்கான் பெல் சவுன்ட் கேட்கவும், பூர்ணிமாவும் அவளும் சிரித்துக் கொண்டே எழுந்து அவரவர்களுக்கான வகுப்புகளுக்கு சென்றனர்.

சங்கரும் சரசும் வாக்கிங் செல்வதற்காக அவர்களது அப்பார்ட்மென்டில் இருந்த நடைபாதையிலேயே நடந்து கொண்டிருந்தனர்.

சரசு, நான் இன்னும் இரண்டு நாளைல ஊருக்கு கிளம்பறேன் ப்பா……

சங்கர், ஏன் ம்மா………? இன்னும் கொஞ்ச நாள் தங்கியிருக்கலாமில்ல.

சரசு, ”அங்க அப்பாவைப் பார்க்க வேணாமா…..?  அவர் வெளி சாப்பாடு சாப்பிட்டு உடம்பை கெடுத்துப்பாரு……. ஏற்கனவே வாயை கட்டாத மனுஷன், இப்ப நான் அங்க இல்லன்னதும்…, இன்னும் வசதியா போயிருக்கும்,” என குறைபடித்தார் அவனிடம்.

சங்கர், சிரித்துக் கொண்டே அப்பாவை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க ம்மா………

”இத்தனை வருஷம் அவரோட வாழ்ந்திருக்கேனே, இதுகூட தெரியலனா எப்படி?”

”சங்கர் உனக்கு நான் சொல்லனும்னு அவசியம் இல்ல, இருந்தாலும் என் கடமை சொல்லிடறேன்.  பானுவை உன்னை நம்பி தான் இங்க விட்டுட்டு போறேன்.  இனியும் நீ இப்படியே ஒட்டாம இருக்க முடியாது.”

அம்மா என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.  உன் மனசை மாத்திகிட்டு அவளோட சேர்ந்து வாழ ஆரம்பிக்கனும்.

சங்கர், பொறுமையாக அவர் பேசுவதை எல்லாம் கேட்டவன், ம்மா.. ”நானே உங்ககிட்ட பேசனும்னு இருந்தேன் என்றான் பீடிகையாக.”

சரசு அவனை கேள்வியாக திரும்பி பார்த்தார்.

”நீங்க அவளை உங்க கூடவே கூட்டிட்டு போயிடுங்க ம்மா”……

சரசு, அதிர்ச்சியாக என்ன சொல்ற சங்கர்?

ம்ப்ச்… ”எதுக்கு இப்படி ஷாக்காகறீங்க……?”  முதல்ல நான் சொல்ல வரதை புரிஞ்சிக்கோங்க.  ஏதோ அந்த நேரத்துல கல்யாணம் நின்ன அதிர்ச்சியில, நீங்க சொன்னதும் நானும் யோசிக்காம அவள் கழுத்துல தாலியைக் கட்டிட்டேன்.

ப்ளீஸ்…….., ”என்னை புரிஞ்சுக்கோங்க ம்மா….., என்னோட லைஃப் ஸ்டைல் வேற…., அவளோட லைஃப் ஸ்டைல் வேற.  சுட்டு போட்டாலும் எங்களுக்குள்ள மேட்ச் ஆகாது.  அவளை நான் டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்……… என்றான் அதிராமல்.”

”டேய்……… என்னடா பேசற நீ?”  எனக்கு கண்ணை இருட்டுது என அவனைப் பிடித்துக் கொண்டார்.  அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றவன் அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர வைத்தான்.

இங்கேயே இருங்க வரேன் என்றவன்.. சென்று தண்ணீர் எடுத்து வந்து அவருக்கு குடிக்க கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.  ம்ப்ச்…… எதையுமே சாதாரணமா எடுத்துக்க மாட்டீங்களா……? இப்படி எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகி அதிர்ச்சியாகி இருக்கறவங்களையும் கூட சேர்த்து பயப்பட வைங்க…….. என அடிக்குரலில் கடிந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அவருக்கு ஹார்ட் பீட்டின் வேகம் தாறுமாறாக எகிறியது.  முகமெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.

”உனக்கு இது சாதாராணமாடா……..? எவ்வளவு பெரிய மேட்டர இப்படி அசால்ட்டா சொல்லிட்டு, இதுல சாதாரணமா எடுத்துக்கலன்னு திட்ட வேற செய்யற என கண் கலங்கினார்.”

ம்ப்ச் ம்மா….. வர வர ”சின்ன குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க நீங்க?  எனக்கு டென்ஷன் தான் ஆகுது.  முதல்ல கண்ணைத் துடைங்க, வெளியில இருக்கோம் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க……?” என பல்லைக் கடித்துக் கொண்டே வார்த்தைகளை கடித்து துப்பினான்.

முந்தானையால் கண்ணைத் துடைத்தவர், முகத்தையும் அழுந்த துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார் பாவமாக.

நீங்க என்ன சால்ஜாப்பு சொன்னாலும் என் முடிவு இதுதான், இதை நான் யாருக்காகவும் மாத்திக்க போறது இல்ல.  ”சும்மா….. அன்னைக்கு கல்யாணத்துல பண்ண மாதிரி அழுது ஏதாவது கலாட்டா பண்ணனும்னு நினைச்சீங்க….., நான் பாட்டுக்கும் யார் கிட்டயும் சொல்லாம எங்கயாவது போய்கிட்டே இருப்பேன்….., என்றான் காட்டமாக.”

”சங்கர் அப்படி எதுவும் பண்ணிடாதடா……. நானும் அப்பாவும் உனக்காக தான் டா எல்லாம் பண்ணோம்.  அந்த பொண்ணு கல்யாணத்தன்னைக்கு ஓடிப் போகும்னு கனவா கண்டோம்.  ஏன்டா எங்களை புரிஞ்சுக்க மாட்டேன்ற……….? என்றார் ஆதங்கமாக.”

இப்ப நான் நடந்து முடிஞ்சது எல்லாம் பேசத் தயாரா இல்ல.  பாஸ்ட் இஸ் பாஸ்ட்.  இனிமே என்ன பண்ணனனும்னு மட்டும் பேசுங்க என்றான் கறாராக.

மகனது வார்த்தையில் நொறுங்கியவர், இவன் என்னை புரிஞ்சிக்கவே இல்லையா……?  நான் மட்டும் என்ன ஆசைப்பட்டா பானுவ இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் என மருகினார்.

சங்கர், கல்யாணம் நின்னதோட விட்டிருந்தீங்கன்னா எனக்கு இப்படி ஒரு தர்மசங்கடம் வந்திருக்காது இல்ல.  உங்களுக்கு  அவங்க வீட்டைப் பத்தி முன்னமே தெரியாதா…….? நமக்கும் அவங்களுக்கும் எப்படி ஒத்துவரும்னு நினைச்சீங்க?

எல்லா விதமாவும் நான் யோசிச்சு பார்த்துட்டேன்.  ”எனக்கு எந்த வகையிலும் அவளோட சூட் ஆகல.  நான் நினைச்சது போல அழகாயிருக்காளா…….? படிச்சிருக்காளா……..? இல்ல வசதிதான் இருக்கா……..?  எந்த விதத்தில எனக்கு அவள் பொருத்தமா இருப்பாள்.”

கொஞ்சம் யோசிச்சு பாருங்க ”அவளோட ஜோடி போட்டு நான் எங்கயாவது வெளியில போக முடியுமா……..?  முதல்ல என் பிரண்ட்ஸ்…., கொலீக் முன்னாடி அவளை கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்த முடியுமா…….?”

”அவளும்….., அவள் டிரஸும்….., பார்க்கவே சகிக்கல…….  எங்கயோ நாட்டுப் புறத்துல இருக்க வேண்டியவள கொண்டாந்து என் தலையில கட்டியிருக்கீங்க”……………..

சரசு, ”இவனுக்கு யார் சொல்வது வெள்ளைத் தோல் இருந்தால் மட்டும் அழகில்லை, கருப்பும் அழகுதான் என்று.”  இத்தனைக்கும் பானு மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறத்துடன் இருப்பவள்.  பார்க்க குண்டு முகமாக இலட்சணமாக மூக்கு முழியுடன் இருப்பவளையே குறை சொல்றான் இவன்.

வெளித்தோலைப் பார்க்காதடா…….. உள்ள இருக்கற மனசைப் பாரு என கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல் ஆத்திரமாக வந்தது அவருக்கு.

அழகைப் பார்த்துதான் ஒருத்தி சொல்லாம கொள்ளாம ஓடிப் போனா உன்னை நட்டாத்துல நிக்க வச்சிட்டு.  அந்த நேரத்துல தெய்வமே பார்த்து பானுவ கொண்டாந்து எங்களோட கௌரவத்தை காப்பாத்தி கொடுத்திருக்கு இதை புரிஞ்சுக்காம என்ன பேச்சு பேசறான் இவன்.

சரசு முந்தானையால் நெற்றியில் இருந்த வியர்வைத் துளிகளை துடைத்து, தண்ணீர் சிறிது குடித்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டவர், அவனிடம் தெளிவாக பேசிவிடுவது என நிமிர்ந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

சங்கர் ”வாழ்க்கை…., நீ நினைக்கற மாதிரி அவ்வளவு ஈசி கிடையாதுப்பா……. நீ நினைச்சா அவளை கூட்டு கல்யாணம் பண்றதுக்கும், வேணாம்னா வெட்டி விடறதுக்கும், முதல்ல அப்பாவே இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க.”

”நமக்கும் நம்ம ஊருல கௌரவம் இருக்கு.  எங்களை தலை தூக்காத மாதிரி அசிங்கப்படுத்திடாத….. அதோட நானும் உன் அப்பாவும் ஊர் முன்னாடி,  நம்ம சாதி சனம் முன்னாடியெல்லாம் அவமானப்பட்டு நிக்கனும்”………,

”என்ன பிளாக்மெயில் பண்றீங்களா…….?”  என்னை.

”பிளாக்மெயில் இல்ல, நிஜத்த சொல்றேன்.  நம்ம சாதி சனக்கட்டு எப்படிப்பட்டதுன்னு உனக்குத் தெரியும்.  எதுன்னா ஒன்னுன்னா…… முதல்ல கத்தியும் அருவாளுந்தான் பேசும் அவங்களுக்குள்ள.  நீ அங்க வளர்ந்தவன் தான, இது எல்லாம் உனக்குத் தெரியாதா……?”

அதுவும் ”பானுவோட அண்ணன் மது இருக்கானே முரடன். ஆள் பார்க்க எப்படி இருக்கான் பார்த்தேயில்ல. வாட்டசாட்டமா……… ஒரு அடிக்கு தாங்க மாட்ட நீயெல்லாம்.  ஊருல ஒருத்தருக்குன்னாலே முன்னாடி போய் நின்னு நியாயம் கேட்கறவன், அவன் தங்கச்சிக்குன்னா சும்மாவா விடுவான். யோசிச்சு பேசுப்பா…..   எதையும்.  பட்டுன்னு வார்த்தைய விட்டுடாத, காலத்துக்கும் கஷ்டமாயிடும்”.  இது அறுத்துக்கர உறவில்ல என புரிய வைக்க முயன்றார் அவனுக்கு.

அவங்களா வந்து பொண்ணை கட்டிக்கோங்கன்னு கேட்கல.  நாம அன்னைய நிலைமைய சரி பண்ண அவங்க கால்ல விழுந்து பொண்ணைக் கேட்டு கட்டியிருக்கோம்.  கேட்ட உடனேயும் அவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல, நம்ம வீட்டு ஆளுங்க பேசிதான்….., அவங்க எல்லாம் பானுவை உனக்கு கட்டித் தரதுக்கு சம்மதிச்சாங்க.

எங்க அவங்க அண்ணனுக்கு தெரிஞ்சா அவன் ஒத்துக்க மாட்டான்னு, அவன்கிட்ட கூட ஜமுனாவை சொல்லவிடாம செஞ்சுதான் உனக்கு இந்த கல்யாணத்தையே நடத்தி முடிச்சேன், புரஞ்சுக்கோடா……

ம்ப்ச் ம்மா…… ”சும்மா என்னை பூச்சாண்டி காமிச்சு பயமுறுத்தாதீங்க.  எனக்கும் சட்டம் தெரியும்.  அவங்க அண்ணன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா…..?  எனக்குப் பிடிக்கல, அதனால டைவர்ஸ் பண்றேன்.” இதனால அவளுக்கும் தான நல்லது.  அவள் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழலாம் இல்ல.

ம்கூம் இவனுக்கு என்ன சொன்னாலும் புரியமாட்டேங்குதே கடவுளே என நொந்து கொண்டார் மனதில்.

அம்மாவிடம் பேசுவதை விட நேராக பானுவிடமே பேசிடலாம் என முடிவு  செய்து கொண்டவன் அதற்கு மேல் அவரிடம் ஏதும் வாதிடவில்லை.

வீட்டிலிருந்து ஒருத்தி……., இங்கே வந்து இவர்கள் பேசியதைக் கேட்டு சென்றதை இவர்கள் இருவரும் பேச்சு மும்முரத்தில் இருந்ததால் பார்க்கவில்லை.  இரவு நேரம்.  எங்கும் இருட்டு சூழ்ந்திருந்தது.  மங்கிய விளக்கொளியில்  இவர்களைப் போல பலர் அங்கே வாக்கிங் சென்று கொண்டும், பேசிக் கொண்டும் இருந்ததால்…, பேச்சு சுவாரஸ்யத்தில் பானு வந்ததை கவனிக்கவில்லை.  அதுவும் இவர்கள் லிஃப்டிலிருந்து இறங்கி நடந்து வரும் பாதைக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால், அவள் பின்புறமாக வந்திருந்ததை அறியவில்லை.

பானு அவர்களை நோக்கி வரும் போது சங்கர் சரசை சத்தமாக கடிந்து கொண்டிப்பதைப் பார்த்தவளுக்கு பயமாக இருந்தது.  கீழே வரும் போது நல்லாதான வந்தாங்க.  இப்ப ஏன் அவங்க அம்மாவ திட்டறாங்க. போலாமா வேண்டாமா என தயங்கியவாறே மெல்ல வந்தவளுக்கு, அவளைப் பற்றிதான் பேசுகிறான் என தெரிந்ததும் கால்கள் அவர்களிடம் செல்ல மறுத்து தயங்கி அங்கேயே நின்றுவிட்டது.

‘’அவளும் அவள் டிரஸும், எங்கயோ நாட்டுப் புறத்துல இருக்க வேண்டியவளை கொண்டாந்து என் தலையில கட்டி வச்சீட்டீங்க’’ என பேசியதைக் கேட்டதும் அதற்கு மேல் அங்கே நின்று கேட்க முடியாமல் அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள்.

சரசின் போனுக்கு ராகவன் போன் செய்து கொண்டேயிருந்தார்.  அவரது போன் எடுக்கவில்லை என்பதால் சங்கருக்கு போன் செய்தார்.  அவனது போனும் அங்கேதான் சார்ஜில் இருந்தது.  இருவரும் போன் எடுக்காமல் கீழே வாக்கிங்கிற்கு சென்றிருந்தனர்.

ராகவன் இருவரும் போன் எடுக்கவில்லை என்பதால் பயந்துபோய் விடாமல் அடித்திருந்தார்.  பானுவும் ஏதாவது முக்கியமானதாக இருக்கப் போகிறது என சரசின் போனை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுப்பதற்காக கீழே வந்திருந்தாள்.

சங்கரின் பேச்சைக் கேட்டவள் திரும்ப சென்று இருந்த இடத்திலேயே போனை வைத்துவிட்டு….,  கண்ணீருடன் சென்று படுத்துக் கொண்டாள்.  அவளுக்கு ஆத்திரமும் அழுகையும் முட்டிக் கொண்டு வந்தது அவனது வார்த்தைகளில்.

”இவனை நானா தேடி கல்யாணம் பண்ணிக்கோன்னு கால்ல விழுந்தேன்.  என்ன நினைச்சான்… எங்க குடும்பத்தை பத்தி?  இவங்க கிட்ட பணம் இருந்ததுனா இவங்களோட.  நாங்களா இவங்ககிட்ட வந்து நின்னு கெஞ்சி நின்னு சம்மந்தம் பேசினோம்.”

”என்னல்லாம் பேசறான், ஆளைப் பாரு, மூஞ்சைப் பாருன்னு.  நான் டிரஸ் பண்றது இவனுக்கு பிடிக்கலையாமே….?  நான் அப்படிதான்டா பண்ணுவேன் என்ன பண்ணுவ……..? அழகைப் பாரு, அந்தஸ்தப் பாருன்னு பேசறான்.  சாருக்கு இப்பதான் தெரியுதோ……?’’

‘’அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கறப்ப கண்ணை கொண்டையிலயா வச்சிருந்தான்.  மாங்கா மடையன், நாட்டுப் புறமாமே……?  ஐயா ஃபாரின் ரிட்டர்னோ……. என மனதிலேயே அவனைக் கரித்துக் கொண்டிருந்தாள்.’’

அவன் வெளிநாடு சென்று படித்து வந்ததெல்லாம் அவளுக்குத் தெரியாது.  ஏன் என்ன படித்திருக்கிறான்? எனக் கூடத் தெரியாது.  அது போல அவள் பி.இ படித்திருப்பது அவனுக்கும் தெரியாது.  அவனது அம்மாவும் அவனிடம் எதுவும் விலாவாரியாக சொல்லவில்லை.

சரசுக்கும் பானு பி.இ. படிப்பது எல்லாம் தெரியாது.  அவருக்கும் அவள் என்ன படிக்கிறாள்….. என சரியாகத் தெரியாததால், காலேஜ் செல்கிறாள் என தான் மகனிடம் கூறியிருந்தார்.

மகனிடம் திருமணத்தன்று பானுவைப் பற்றி சொல்லியதோடு சரி.  அன்றே சரசு பானு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள் எனக் கூறினார்.  அவன் இருந்த மனநிலையில் அது எல்லாம் அவனது கவனத்தில் பதியவில்லை.

சரசுதான் பானுவின் விஷயங்களை எல்லாம் அவனிடம் பேசியதால் ராகவன் அதைப் பற்றி எதுவும் அவனிடம் பேசியதில்லை.

சரசு அறைக்கு வரும்போது, அவரை பார்க்க விரும்பாமல் போர்வைக்குள் முகத்தை மறைத்து கொண்டிருந்தாள்.  அவரும் இவள் தூங்கிவிட்டாள் என எண்ணி லைட்டை ஆஃப் செய்து சத்தமிடாமல் படுத்துவிட்டார்.

மறுநாள் காலையில் சங்கர் வேலைக்குச் சென்ற பிறகும் பானு எழுந்து வராமல் இருப்பதை பார்த்தவருக்கு சந்தேகம் வந்து அவளைச் சென்று எழுப்பினார்.  அவள் மேல் கை வைத்து எழுப்பும் போதே அவருக்குத் தெரிந்து விட்டது, அவளுக்கு ஜுரம் என்று.

சரசு எழுப்புவது எதுவும் தெரியாமல் கண்ணைக் கூட திறக்காமல் மயங்கிய நிலையில் கிடந்தவளைப் பார்த்ததும் அவருக்கு பயம் வந்தது.  உடனே சங்கருக்கு அழைத்துவிட்டார் போனில்.

சங்கர், ‘’ம்மா…… கேப் புக் பண்றேன் நீங்களே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டு வாங்கம்மா…….. எனக்கு இங்க வேலையிருக்கு.’’

”டேய் இது என்ன? நம்ம ஊரா…… எனக்கு இங்க எதுவும் தெரியாதுடா……  கொஞ்சம் நீயே வாடா….. எனக் கெஞ்சினார் அவனிடம்.’’

”சரி.., நான் கேப் புக் பண்றேன்.  அவளைக் கூட்டிட்டு நீங்க ஹாஸ்பிட்டல் வந்திடுங்க, நான் அங்க நேரா வரேன் என்றான்.’’

”டேய்………..  எந்த ஹாஸ்பிட்டல்……….? எங்கயிருக்கு………? ஒன்னுமே சொல்லாம வெறும் ஹாஸ்பிட்டல்னா’’…….

”நீங்க ரெடியாகுங்க, கேப் வந்திடும் இன்னும் அஞ்சு நிமிஷத்துல…….. ஏறினதும் எனக்கு போன் பண்ணுங்க, நான் அந்த டிரைவர் கிட்ட பேசிக்கறேன்.’’

”ம்மா…… மறக்காம வீ்ட்டை நல்லா பூட்டிட்டு, கையில போன் எடுத்துட்டு வாங்க’’.

சங்கர் சொல்லியது போல ஐந்து நிமிடத்தில் கேப் வந்திருந்தது.  சரசுக்கு பானுவை எழுப்பி அமர வைப்பதற்கே கடினமாக இருந்தது.  அவளால் தலையை கூட நிமிர்த்தி உட்கார முடியவில்லை.

இவளுக்கு இப்படி இருக்குது, நான் தனியா எப்படி கூட்டிட்டு வர முடியும்.  கொஞ்சம் ஒத்தாசைக்கு வாடான்னா…… என்ன ஆட்டம் காட்டறான்….  நல்ல பிள்ளை பெத்து வச்சிருக்கேன் என முனகிக் கொண்டே அவளை அணைவாக பிடித்து சோபாவில் கொண்டு வந்து உட்கார வைத்தார்.  ஒரு பையில் துண்டு, தண்ணீர் பாட்டில், அவரது போன், மணிபர்ஸ் என எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டார்.  பையை தோளில் மாட்டிக் கொண்டு, அவளை மெல்ல எழுப்பி நடத்தி வெளியே கூட்டி வந்து, தோளில் சாய்த்து அணைத்தவாறே வீட்டைப் பூட்டி சாவியை பையில் பத்திரப்படுத்திக் கொண்டு லிப்டின் மூலம் காருக்கு கூட்டி வந்தார்.

இவர்கள் வருவதைப் பார்த்த கேப் டிரைவர் எழுந்து வந்து கார் கதவைத் திறந்து உள்ளே உட்கார் உதவி செய்தார்.

சங்கர் சொல்லியது போல போன் செய்து கேப் டிரைவரிடம் கொடுத்தவர், பானுவை மடியில் சாய்த்துக் கொண்டார்.  கொஞ்சமும் நினைவில்லாமல் இருப்பவளைப் பார்த்து அவருக்கு பயமாக இருந்தது.

கேப் டிரைவர் சங்கரிடம் பேசிவிட்டு போனை சரசிடம் கொடுத்தார், ”சங்கர் போனில், ம்மா…… நம்ம வீட்டுக்கு பக்கத்தில இருக்கற ஹாஸ்பிட்டலுக்குதான் சொல்லியிருக்கேன்.  டிரைவரே உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு, அவரே உங்களை ஹாஸ்பிட்டலுக்கு உள்ள கொண்டு வந்து உட்கார வச்சிட்டு போவாரு.  ஹாஸ்பிட்டல்ல போன் மூலமா அப்பாயின்ட்மென்டும் போட்டிருக்கேன்.  நீங்க அங்க வெயிட் பண்ணுங்க நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் என்று வைத்துவிட்டான்.”

சங்கர் சொல்லியது போலவே பத்தே நிமிடத்தில் அந்த மருத்துவமனை வந்திருந்தது.  பார்ப்பதற்கு புதியதாக ஐந்து மாடிக் கட்டங்களை கொண்ட நவீன மருத்துவமனையாக இருந்தது.

கேப் டிரைவரே காரைப் பார்க் செய்துவிட்டு, அவர்களை ரிசப்ஷனுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, ரிசப்ஷனில் கூறிவிட்டு சென்றார்.

உள்ளே சென்றதும் ஏசியின் குளிரால் பானுவுக்கு இன்னும் நடுங்கியது.  அதைப் பார்த்த அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட், செவிலிப் பெண்ணை வர வைத்து அவளுடன் அவர்களை உள்ளே அனுப்பி வைத்தாள்.

பானுவை சோதித்து பார்த்த டாக்டர் ஹை ஃபீவராயிருக்கு…….. அட்மிட் பண்ணிடுங்க என பானுவை அட்மிட் செய்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் வந்த சங்கர் டாக்டரிடம் பேசி அவளது நிலையை அறிந்தவன் பிரைவேட் ரூம் புக் செய்து அங்கு ஷிப்ட் செய்திருந்தான் பானுவை.

சரசு, ”டாக்டர் என்னடா…….. சொல்றார்?”

இங்க இருக்கட்டும்னு சொல்றார் ம்மா……  பீவர் ஜாஸ்தியா இருக்காம். எதுவாயிருந்தாலும் பார்த்துட்டு இன்னைக்கு ஈவ்னிங் சொல்றேன்னு சொல்லியிருக்கார்.

இதுக்குதான் இவளை உங்களோட கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்றேன்?  தனியா இதெல்லாம் என்னால எப்படி சமாளிக்க முடியும்?

”ஹ்ம்ம்…… எப்படின்னா…….. என அவனை முறைத்தவர்……..,  உன் பொண்டாட்டிய நீதான் பார்த்துக்கனும்…….. கேட்கறான் பாரு………  வெண்ணை மாதிரி என்று முனுமுனுத்தார்.”

அதுவும் அவன் காதில் தெளிவாகவே விழுந்தது.  ம்மா…. என்ன பேசறீங்க…..?

”டேய்……. ஏதாவது சொல்லிடப் போறேன்…..?  சும்மா வாங்கிக் கட்டிக்காத, நானே நல்லாயிருந்தவளுக்கு எப்படி சுரம் வந்ததுன்னு முழிச்சிட்டிருக்கேன்.  இதுல அவங்க வீட்டுக்கு வேற கூப்பிட்டு சொல்லனுமான்னு பயந்துட்டிருக்கேன்.  நீ வேற என்னை டென்ஷன் பண்ணாத…………. என எகிறினார்.”

சரசுக்கே எப்பவாவது தான் அத்தி பூத்தாற்போல இதுமாதிரி கோவம் வரும்.  அன்னையின் கோவத்தைப் பார்த்தவன் ஏதும் பதில் பேசாமல் வாயை மூடிக் கொண்டான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!