எபிலாக்
ராஜீவன் முதலில் சென்றது ரஞ்சிதாவின் வீட்டிற்குதான்…
வாசலில் வண்டியை நிறுத்தியவனிற்கு உள்ளே செல்ல தயக்கம்.”இனி உன் வாழ்க்கையே நீ தான் சரியான பாதையில கொண்டு போகனும்” என்ற அம்பிகாவின் வார்த்தை நினைவில் வர,
என்னால் மட்டுமே என் வாழ்வை சரி செய்ய முடியும் என்ற திடத்தோடு கேட்டைத் திறந்தான்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டவுடன் அலமேலு தன் கை வேலையை விட்டு விட்டு யார் என காண வாசல் வந்தார். ராஜீவனை கண்டதும் உள்ளே அழைக்கலாமா வேண்டாமா என்ற தயக்கம்…இருந்தும் மாப்பிள்ளை அல்லவா…மகிழ்ச்சியற்ற முகத்தோடு “வாங்க” என்றார்.
இவனிற்கும் அந்த ஒரு வார்த்தை போதுமானதாக இருக்க…உள்ளே நுழைந்தான்.கார்த்தி வேலைக்கு ரெடியாகிக் கொண்டிருந்தவன் இவனை கண்டதும்,”இவனை யாரு வீட்டுக்குள்ள விட்டது?” என சட்டையை மடித்து விட்டு கத்த,மாதவியும் வெளியே வந்தாள்.
ராஜீவன் பொறுமையாக,”நான் இவ்வளவு நாளா செய்தது எல்லாம் பெரிய தப்புதான்.அதுக்கு என்னை மன்னிச்சுடுங்க. நீங்க உங்க பொண்ணுக்கு இன்னொரு திருமணம், இன்னொரு வாழ்க்கையை அமைத்து கொடுக்கனும்னு நினைச்சது சரிதான்.
நீங்க ரஞ்சிதா மேல இருக்கிற பாசத்துல அவ வாழ்க்கை மேல இருந்த அக்கறைல இதை எல்லாம் செய்தீங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது.
Advertisement
நானும் அவளை ரெண்டு வருஷமா இங்க தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டேன்.அவளோட கர்ப்ப காலத்துல,என் பையன் பிறந்தப்போ, அவனோட முதல் அழுகை,முதல் சிரிப்பு இப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் ரஞ்சிதா கூட நிக்கல.அதுக்காக என்ன நீங்க எவ்வளவு அடிச்சாலும் பொறுத்துக்குவேன்.ஆனா இனிமே ரஞ்சிதா மேல எக்காரணத்தை கொண்டும் நீங்க கை வெக்க கூடாது.
மாதவியிடம் திரும்பி,இனி ரஞ்சிதாக்கு இன்னொரு திருமணம் தேவையில்லை. அவளுக்கு இனி எல்லாமா நான் இருப்பேன் என்றான்.அவன் இருவரிடமும் பணிவாக கூறியது போல இருந்தாலும்,இருவருக்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையே விடுத்தான். அதனால் இருவரும் எதுவும் பேசாது அமைதியாக நின்றனர்.
அலமேலுவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு,அவர் கைகளை பிடித்தபடி,”பாட்டி இனிமே ரஞ்சிதா வாழ்க்கையே பத்தி கவலை படாதீங்க அவளை நான் பார்த்துக்கறேன்”என்றான்.
Advertisement
பதிலுக்கு அவரும் அவன் கைகளைப் பிடித்தபடி,”ரெண்டு பேரும் நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும். சந்தோசமா இருங்க” என்று வாழ்த்த ராஜீவன் விடை பெற்றான்.
Advertisement
அடுத்து அவன் சென்றது கந்தசாமியின் வீட்டிற்கு.
வாசலில் ராஜீவனைப் பார்த்ததும் பிரியா வெளியே வந்தாள். அவன் முகத்தில் தெரிந்த உறுதியைப் பார்த்தவளின் மனம் ஏதோ புரிந்துகொண்டு கலங்கியது.
“ராஜூ…”என தொடங்க…
Advertisement
“பிரியா, நான் உன்கிட்ட தெளிவா ஒரு விஷயம் சொல்லணும். நம்ம காதல் வாழ்க்கை எனக்கு கல்யாணம் ஆனதோட முடிஞ்சு போச்சு. உன் மனசுல இன்னும் என் மேல நம்பிக்கை இருந்தா, அதை இனிமே வளர்த்துக்காதே. என்னை மறந்துட்டு, உன்னோட வாழ்க்கையைப் பாரு. நான் ரஞ்சிதாவோட கணவனா, சித்துவோட அப்பாவா வாழ முடிவு பண்ணிட்டேன். இனிமேல் என் வாழ்க்கையில உனக்கு இடமில்லை.”
இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரியாவின் கண்கள் கலங்கின.
“ஆனா ராஜீவா, நான் உனக்காகத்தானே இவ்வளவு நாள்….”
“போதும் பிரியா!” என்று இடைமறித்தான்.
“நீ காத்திருந்ததுக்காக உன் வாழ்க்கையை என்கூடக் கட்டிப்போட முடியாது. நான் உன்னைத் திருமணம் செய்துக்கப் போறதில்லை. இதை இன்னொரு முறை உன்கிட்ட சொல்ல வேண்டிய நிலைமை வரக்கூடாது. தயவுசெய்து என்னை மறந்துடு.”
அந்த வார்த்தைகளைக் கேட்ட பிரியா அப்படியே நின்றாள்.
அப்போது வெளியே வந்த கந்தசாமி, “என்ன ராஜீவா, என் பொண்ணுகிட்ட இப்படிப் பேசுற?” என்று ஆவேசமாகக் கேட்டான்.
ராஜீவன் அவனை நேராகப் பார்த்து, “என் அம்மாவை உங்க வீட்டுல அடைச்சு வச்சு, அவங்க மேல கை வைக்கத் துணிஞ்சிருக்கீங்க. சொத்துக்காக என் குடும்பத்தையே அழிக்க நினைச்சிருக்கீங்க. இனிமேல் என் அம்மாவையோ, என் மனைவியையோ, என் பையனையோ தொந்தரவு பண்ணினீங்கன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன். குறிப்பா, என் அம்மா மேல இன்னொரு முறை கை வைக்க நினைச்சா, உங்களைச் சட்டத்தின் முன்னாடி நிறுத்தி உங்க உண்மையான முகத்தை எல்லாருக்கும் காட்டுவேன். என்னை மீறி என் குடும்பத்தைத் தொட நினைக்காதீங்க!”
கந்தசாமி பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால், ராஜீவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் நின்றான்.
அப்போது சரோஜா, “எல்லாம் அந்த ரஞ்சிதாவால வந்தது! உன் வாழ்க்கையே அவளாலதான்…” என்று சாபமிடத் தொடங்கினாள்.
ராஜீவன் அவளை இடைமறித்தான்.
“போதும் அத்தை! ஒவ்வொரு தடவையும் உங்க தவறுக்கு இன்னொருத்தரைக் காரணமாக்காதீங்க. ரஞ்சிதா யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யல.இன்னொரு முறை என் முன்னாடி அவளை இப்படி பேசாதீங்க..”
பிறகு மூவரையும் பார்த்து,“சில ஜென்மங்களை வார்த்தைகளால திருத்த முடியாது. அவங்களைத் திருத்துற பொறுப்பை இனி நான் எடுத்துக்க விரும்பல. காலம் உங்களுக்கு என்ன பாடம் கத்துக்கொடுக்கணுமோ, அதைக் கத்துக்கொடுக்கட்டும்.”என சொல்லிவிட்டு திரும்பினான்.
“ராஜீவா!” என்று பிரியா அழைத்தாள்.
அவன் ஒரு கணம் நின்றான். ஆனால், திரும்பிப் பார்க்கவில்லை.
“இனிமேல் என்னைத் தேடி வராதே பிரியா. உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்.” என்றபடி வாசலைத் தாண்டி வெளியேறினான்.
பின்னால் கந்தசாமியின் கோபக் குரலும், சரோஜாவின் புலம்பலும் கேட்டுக்கொண்டிருந்தன. ஆனால், ராஜீவன் திரும்பிப் பார்க்கவில்லை.
ஏனென்றால், சில உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வார்த்தைகள் போதும். அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்காமல் நடப்பதற்குத்தான் மனவலிமை வேண்டும்.
இன்று அந்த மனவலிமை அவனிடம் இருந்தது.இனி அவனுடைய வாழ்க்கை ரஞ்சிதாவுக்காகவும் சித்தார்த்துக்காகவும் மட்டுமே!
காலை விடிந்து மணி பத்தைக் கடந்தது கூடத் தெரியாமல் நல்ல அசதியில் தூங்கிப் போனாள் ரஞ்சிதா.இவ்வளவு நாட்களாக மனதில் இருந்த பாரம் குறைந்ததால் எந்த கவலையும் இன்றி உறங்கிப் போனாள்.எழுந்தவள் மகனைத் தேடிப் போக…சமையலறை ஸ்லாப் மீது அமர்ந்திருக்க…அம்பிகா அவனிடம் பேச்சு கொடுத்தபடி சமைத்துக் கொண்டிருந்தார்.
எதுவும் பேசாது அமைதியாக சித்துவின் அருகே வர…ஆள் அரவம் கேட்டு அம்பிகா அவளைத் திரும்பி பார்த்தாள்.
“வாம்மா எதாவது உடம்பு சரியில்லையா” என நெற்றியைத் தொட்டு பார்க்க…
“இல்லை” என இவள் தலையசைத்தாள்.
“நீ நல்லா தூங்கிட்டு இருந்தே, சரி ஏன் எழுப்பனும்னு நான்தான் உன்னை எழுப்பாம விட்டேன்.நீ போய் குளிச்சிட்டு வா காலை டிஃபன் ரெடியா இருக்கு, வந்து சாப்பிடு” என கையில் காபி டம்ளரை கொடுக்க…
ரஞ்சிதாவிற்கு இது கனவா?நனவா?என்றிருந்தது.எதுவும் பேசாது குளியலறை நோக்கி நடந்தாள். சித்துவும் இன்று ரஞ்சிதாவிற்கு விடுப்பு கொடுத்துவிட்டு அம்பிகாவுடன் இணைந்து கொண்டான்.
இரு வீட்டிலும் பேசி முடித்து விட்டு வீட்டிற்குள் வந்த ராஜீவன் முதலில் ரஞ்சிதாவைத் தேடித்தான் சென்றான். பாத்ரூமில் இருப்பது தெரிந்தவுடன் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து கிறுக்கி அவள் கண்ணில் படும்படி வைத்துவிட்டு…சித்துவிடம் சென்றான்.
ஒரு விளையாட்டு காரை சித்து ஓட்டி விளையாடியவாறு இருக்க…அம்பிகா அவன் அருகில் அமர்ந்து அவனை பார்த்து ரசித்த வண்ணம் இருந்தார். இவ்வளவு நாட்களாக பேரனை தள்ளி வைத்ததற்கு இன்று அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக அவனை வாரிக் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.
ராஜீவன்,”சித்து இந்தா பிஸ்கட்” என நீட்ட,அதை வாங்கியவன்,”ஆத்தாக்கு” என அம்பிகாவிற்கும் சேர்த்து கேட்டான்.
“ஆஹா…!இப்பவெல்லாம் தாத்தாவை விட ஆத்தாவை ரொம்ப பிடிச்சிருக்கு போல என் சித்து குட்டிக்கு” என மகனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
பதிலுக்கு ராஜீவனுக்கு ஒரு முத்தமும், அம்பிகாவிற்கு ஒரு முத்தமும் கொடுத்தான்.அம்பிகா வாஞ்சையாக அவன் தலையை தடவி கொடுத்தபடி, “ராஜீவா குஜராத்ல ஒரு நல்ல வீடா பாரு நீ,ரஞ்சிதா,சித்து மூணு பேரும் இனி ஒண்ணா இருங்க… அப்பப்ப வந்து என்னை பாத்துட்டு போங்க…நானும் ஒரு ரெண்டு நாளைக்கு அங்க வந்து இருந்துட்டு வரேன்” என்றார்.
“எதுக்கும்மா அங்க வீடு?இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதும் நான் இங்கேயே வரேன்.அப்பா கடை இருக்கு.
அது போதும் நான் அதைப் பார்த்துக்கறேன்.சொந்த ஊருல அழகான வீடு.அளவான வருமானம். அன்பான மனைவி.நிறைவா ஒரு பையன்.என்னை உலகமா நினைக்கிற நீங்க…உடல் அளவுல மறைந்தாலும்,
என்கூட நிழல்போலவே இருந்து என்னைப் பாதுகாக்கற அப்பா.இதைவிட வேற என்ன வேணும் எனக்கு…இந்த ஜென்மத்துக்கு இது போதும்மா…” என்றான் ராஜீவன்.
கண்களில் நீரோடு மகனை தழுவிக் கொண்டார் அம்பிகா.கூடவே சித்துவும் அவர்களோடு இணைந்து கொண்டான்.
குளித்து முடித்து வெளியே வந்த ரஞ்சிதாவின் கண்களில் காற்றில் பறந்து கொண்டிருந்த பேப்பர் கண்ணில் பட்டது.அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
“நீ பேசினா இனிமை,
நீ பேசாட்டி என் மனசுல வெறுமை!
உன் கூந்தல் கருமை,
அதில் சிக்கிக்கிச்சு என் பொறுமை!
நீ நடந்தா அழகு,
அதைப் பார்த்த என் மூளை சொல்லுது, கவிதை எழுது!
உன் கோபம் ரொம்ப அழகு,அதைப்
பார்த்த உடனே என் மனசு ஆகுது ஃபியூஸ் போன பல்பு!
நான் எழுதியது தப்புத் தப்பான கவிதைதான்…
ஆனா, என் இதயம் எழுதிய வரியில் மட்டும் பிழையே இல்லை.
என் இதயம் எழுதும் கவிதை நீ! ரஞ்சிதா
கடைசியா சொல்றேன் கேளு கண்மணி,
உன்னால நான் கவிஞன் ஆனது உண்மை,ஆனா இந்த கவிதைக்கு நீ தான் முதல் வாசகி,
இல்ல… இல்ல… கடைசி வாசகியும் நீ தான்!”
இதைப் படித்த ரஞ்சிதாவிற்கு சிரிப்பு பொங்கி வந்தது.சிரித்தபடி திரும்ப ராஜீவன் நின்றிருந்தான்.
கவிதை பிடிச்சிருக்கா?- ராஜீவன்
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை கடுகடுவென வைத்தபடி, “இனிமே இப்படி கிறுக்குத்தனமா பண்ணாதீங்க”என்றாள்.
நான் உனக்கு கவிதை பிடிக்கும்னு நினைச்சேன் என்றான் முகத்தை தொங்க போட்டபடி…
“சரி நல்லா இருக்கு.” என்றபடி தன் வேலையை கவனிக்க கிளம்பி விட்டாள்.
சங்குப் பூக்களையும்,அதன் விதைகளையும் பேக் செய்ய அமர அம்பிகாவும் உதவினார்.ராஜீவன் வீடியோ எடுக்க உதவினான்.
மாலை நேரம் பூக்களை பறிக்க கூடையை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.பின்னாடியே ராஜீவனும் கிளம்பி விட்டான்.
வானம் மேகங்களை கருமை நிறத்திற்கு கொண்டு வந்திருந்தது..”உச்”என்று கொட்டினால் கூட மழை வந்துவிடும் போல இருந்தது.அப்படியொரு ஏகாந்தமான சூழல்.
காற்று அடிக்க பூக்கள் எல்லாம் தானாகவே செடியில் இருந்து உதிர ஆரம்பிக்க…இருவரும் வேக வேகமாக பூக்களை பறித்து கூடையில் அடுக்கினர்.
ரஞ்சிதா கவலையோடு படபடவென பூக்களை பறிப்பதில் கவனமாக இருக்க, ராஜீவனின் கவனமெல்லாம் அவள் மேல் மட்டுமே…
ஒருவழியாக பூவை பறித்து விட்டு மற்ற செடிகளுக்கு முடிந்த அளவு பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு ரஞ்சிதா கீழே இறங்கப் போக,”ரஞ்சிதா” என அவளை அழுத்தமாக அழைத்தான் ராஜீவன்.
அவள் திரும்பி பார்க்க…”இங்க வா” என கைகளால் சைகை காட்டினான்.
என்ன? என்ற கேள்வியோடு அவன் அருகில் செல்ல…
சாரி ரஞ்சிதா…
அதுதா நேத்தே சொல்லிடீங்களே. அப்பறம் என்ன?
இனிமே நீ உன் வாழ்க்கையே பத்தியோ, சித்துவைப் பத்தியோ கவலை பட வேண்டாம்.நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.இனிமே உனக்காக நான் இருக்கேன் ரஞ்சிதா.
சரிங்க…மழை வருது வாங்க கீழே போலாம்.
மழைத்துளி மெல்ல இருவரையும் நனைக்க ஆரம்பித்தது.ராஜீவன் இரு கரங்களையும் விரித்து நிற்க… ரஞ்சிதாவின் மனதில் மீண்டும் ஒரு போராட்டம்.
அவளுடைய குழப்பத்தை புரிந்தவன்… அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, என்னோட கடைசி மூச்சு இருக்கற வரை உன்னை என்னோட கண்ணின் மணி போல பார்த்துக்குவேன் என்னை நம்பு.
அவள் கண்களில் கண்ணீர் விழுந்து விடவா என நிற்க…அதற்குள் அவன் அதைத் துடைத்து விட்டான்.பின் அவன் கைகளுக்குள் அவள் அடைக்கலமானாள்.
மழை இருவரையும் முழுவதும் நனைத்தது.எவ்வளவு நேரம் அப்படியே நின்றனர் என இருவருக்குமே தெரியவில்லை. “ம்மா…!”என்ற சித்துவின் அழைப்பில் இருவரும் சுற்றம் உணர்ந்து கீழே இறங்கினர்
ராஜீவன் மீண்டும் இருகரங்களிலும் அவளை தூக்கிக் கொண்டான்.
“ஐயோ…! விடுங்க… !” என அவளும் அவன் கழுத்தை கட்டிக் கொண்டபடி சிணுங்கிக் கொண்டே வந்தாள்.
“பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்
ஒரு அச்சாரம்தான் வைக்காமலே ஹோஹோ
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோஹோ”என ரேடியோவில் கேட்ட உமா ரமணனின் குரல் அவர்களின் அன்னியோனியத்தை மேலும் கூட்டியது.