காகம் ஒன்று, மரத்தின் மேல் இருந்து கரைந்து ராஜீவனின் கவனத்தை ஈர்த்தது. மேலே அன்னாந்து பார்க்க,அது தன் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டிக் கொண்டிருந்தது.
அந்த மரத்தின் கீழ் ஒரு பசுமாடு… தன் கன்றுக்குட்டியை நாவால் வருடியபடி பால் ஊட்டிக் கொண்டிருந்தது.
சற்று தள்ளி… தெருநாய் ஒன்று தன் குட்டியைச் சுற்றி நின்று, அதை நெருங்க முயன்ற மற்ற நாய்களை எதிர்த்து குரைத்துக் கொண்டிருந்தது. தன் குட்டிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக… தன்னையே ஒரு அரணாக மாற்றிக் கொண்டிருந்தது.
Advertisement
அந்தக் காட்சிகளைப் பார்த்த ராஜீவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“இப்படித்தானே…
அப்பாவும் என்னை வளர்த்தார்…”
சிறுவயதில் ‘பசிக்குது’ என்று சொன்னவுடன், நொடியும் தாமதிக்காது அவனுக்கு உணவு ஊட்டியவர்…தான் நோய்வாய்ப்பட்டால் இரவு முழுவதும் கண்விழித்து பார்த்தவர்…தான் தவறு செய்தபோது கோபப்பட்டாலும்,
பிறகு மன்னித்து மனம் இறங்கியவர்… தன் மகனுக்கு ஒரு கஷ்டம் என்றால்… அந்தக் கஷ்டத்தை முதலில் தன் மீது வாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தவர்..
இன்று அவர் இல்லை என்ற உண்மை ராஜீவனின் நெஞ்சை அடைத்தது.அவர் இறந்துவிட்டார் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
Advertisement
தன் கால்களால்தான் நடந்து வீடு வருகிறோமா? என்று கூடத் தெரியாமல்… எப்படியோ வீடு வந்து சேர்ந்தான்.
Advertisement
சாமியான பந்தலும், உறவுகளின் அழுகுரலும்,ரோஜா மாலை வாசனையும் அவனை வரவேற்றனர்.
இத்தனை நாட்களாக, “அப்பா தன்னைத் தேடி வருகிறார்…” என்று தெரிந்தும் வராமல் இருந்தான்.
“அப்பா அழைக்கிறார்…” என்று தெரிந்தும் பேசாமல் இருந்தான்.
Advertisement
“ஒருமுறை வந்து என் பேரனைப் பாருடா…” என்று கெஞ்சிய போதும்… அந்தக் குரலை அலட்சியப் படுத்தி வராமல் இருந்தான்.
இன்று…அந்தக் குரலைக் கேட்க வேண்டும் என்று அவனது மனம் கதறியது.
ஆனால்…”வா ராஜீவா..வந்து உன் பையனே பாரு” என குரல் கொடுக்க வேண்டியவர் அமைதியாக கைகளை கட்டி தரையில் படுத்திருந்தார்.
இவ்வளவு நாள் வீட்டிற்கு வராமல் போனவனைத் திட்ட வேண்டியவர்;
தன் மனைவிக்கும் பையனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது தவிர்த்தவனைப் பார்த்து கோபப்பட வேண்டியவர் இன்று எந்த அசைவும் இன்றிக் கிடந்தார்.
வழக்கம்போல் இரண்டு திட்டு திட்டிவிட்டு…அவனை மன்னித்துவிடும் அந்த இரண்டு கண்களும் இனி திறக்கப் போவதில்லை.
ராஜீவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
அம்பிகா அவனை கட்டியணைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.
“எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும்…”என்று கேட்டாலும்… “என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது…”என்று வாதாடினாலும்…
“நான் இன்னும் சில கடமைகளை முடிக்க வேண்டியிருக்கிறது…”என்று கெஞ்சினாலும்…
அந்த அழைப்பைத் தடுக்க முடியாது. இதுபோன்ற எந்தக் காரணமும் மரணத்தின் முன்னால் செல்லுபடியாகாது.
“உன் கணக்கு முடிந்துவிட்டது… கிளம்பு” என்று அழைப்பு வந்துவிட்டால்… எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்…
எவ்வளவு பணம் இருந்தாலும்…
எத்தனை முடிக்கப்படாத ஆசைகள் இருந்தாலும்…
கிளம்பித்தான் ஆக வேண்டும்.
நேற்று வரை மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர்…இன்று உயிரற்ற உடலாக அவன் முன்னால் கிடக்கிறார்.அந்தக் காட்சியை எதிர்கொள்ளும் தைரியம் ராஜீவனிடம் இல்லை.
“அப்பா…”என்று அவனது உதடுகள் மட்டும் நடுங்கின. அந்த ஒரு வார்த்தையில்…
அவன் இதுவரை சொல்லாமல் விட்ட ஆயிரம் வார்த்தைகளும் இருந்தன.
அவரை கட்டியணைத்து அழுக வேண்டும் போல இருந்தது.அதற்கான நேரத்தை கூட காலம் அவனுக்குத் தர மறுத்தது.
ராஜசேகர்,”ராஜீவா நேத்து நைட் உயிர் பிரிஞ்சது.நீ வரனும்னுதான் இவ்வளவு நேரம் அவனை வெச்சிருந்தோம். இனியும் உடம்பு தாங்காது.சீக்கரமே ஆக வேண்டிய வேலையே பாக்கலாம்” என வேதனையோடு அவனது தோளை தட்டி துரிதப்படுத்தினார்.
துக்கத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு, ஒரு மகனாக அவருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்தான். பாடை கட்டி அவரது உடலை ஏற்றினர்.
அம்பிகா,”வேண்டாம்! அவரே கொண்டு போகாதீங்க” என உரக்க கத்தி அப்படியே மயங்கிச் சரிந்தார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மயானத்தின் எரிமேடையில் அவரது உடல் கிடத்தப்பட்டது.
சுயநினைவு அற்று, தனக்கு ஏவப்பட்ட வேலைகளை செய்வது போல… ராஜீவன் அவரது உடலை மூன்று சுற்றுகள் சுற்றி வந்து பானையை உடைத்தான்.
கொள்ளியை கையில் கொடுக்க நடுங்கிய கைகளோடு அதை வாங்கினான்.
ராஜீவா,”இந்தா உன் மகன்” என பார்வதியின் கணவன் முருகேசன் நீட்ட தன் மகனை கையில் வாங்கிக் கொண்டு,ராம மூர்த்தியின் உடலுக்கு சிகை மூட்டினான்.
சில நொடிகளில் தீ அவரது உடல் முழுவதும் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.
ராஜீவன் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அழுவதற்கான சக்தியே இல்லாதவனைப் போல நின்றிருந்தான்.
அதுவரை உறவுகள் எல்லாரும் வீட்டில் கூடியிருக்க…அதுவும் தனக்கு ரொம்ப பிடித்த பெரியப்பா சித்தப்பா மகன்கள் மகள்கள் இருக்க சித்தார்த்துக்கு ஒரே உற்சாகம்.தாத்தா கண்ணை மூடி படுத்து ஏதோ விளையாட்டு காண்பிக்கிறார் என்றே எண்ணினான் போல….
தற்போது யாரென்றே தெரியாத ஒருவன் வந்து,” தான் எது கேட்டாலும் வாங்கி தரும் தாத்தாவை… அம்மா அடித்தால் நியாயம் கேட்க வரும் தாத்தாவை…தன் புல்லட்டில் ஊரையே சுற்றிக் காட்டும் தாத்தாவை தீ வைத்து கொளுத்த…ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்பதை அவனது குழந்தை மனம் உணர்ந்து கொண்டது.
“தாத்தா…தாத்தா…”
என கத்திக் கொண்டே தனது கைகளால் ராஜீவனின் மார்பில் அடிக்க ஆரம்பித்தான்.ஒரு நொடியில் ராஜீவனின் கைகளிலிருந்து நழுவி கீழே இறங்கியவன்…
எரிந்து கொண்டிருந்த ராமமூர்த்தியின் உடலை நோக்கி ஓடினான்.
ராஜீவன் அதிர்ந்து அவனை தூக்க முயல…திமிறிக் கொண்டு முன்னால் போக முயன்றான். ஜெகன் அவனை தூக்கி கொண்டு வேறு திசையில் அவனது கவனத்தை திருப்ப…”தாத்தா தாத்தா”என அழுது கொண்டே சோர்வுடன் தூங்கிப் போனான்.
இரவு ஏழு மணி உறவுகள் ஒவ்வொருவராக விடைபெற அம்பிகாவை தனிமை வாட்டத் தொடங்கியது. கண்களில் நீர் வழிய சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். ரஞ்சிதா இரவு உணவு கொடுக்க…எந்த அசைவும் இன்றி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ராஜீவன் வெளியே அமர்ந்திருக்க… “அத்தை காலைலே இருந்தே சாப்பிடல வந்து சாப்பிட சொல்லுங்க”என்ற செய்தியை மட்டும் சொல்லிவிட்டு, அவனது பதிலுக்காக காத்திருக்காமல் உள்ளே சென்று விட்டாள் ரஞ்சிதா.
அறைக்குள் நுழைய… அம்பிகா கட்டிலின் மீது அழுதபடி படுத்திருக்க..
ரஞ்சிதா ஒருபுறம் அமர்ந்து தன் மகனுக்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
சித்தார்த்! உதட்டை பிதுக்கியபடி,
“அம்மா தாத்தா நோ” என இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி அழுது… உணவை வாங்க மறுத்தான்.
ரஞ்சிதா அவன் கண்களை துடைத்து விட்டு,”தாத்தா வருவாரும்மா,நீ அவரு கிட்ட என்ன வாங்கிட்டு வரச் சொன்னே?”
“மென்கோ”
“அஹான்! தாத்தா சித்து குட்டிக்கு மாங்கா வாங்க போயிருக்காரு… சீக்கிரமே வந்துருவாரு”என இட்லியை வாயில் வைக்க ராஜீவன் இவர்களை கடந்து அம்பிகா அருகில் சென்றான்.
மீண்டும் “அம்மா நோம்மா… தாத்தா…. பேட்பாய்…” என ராஜீவனை நோக்கி கைநீட்டி…
அதற்குமேல் எப்படி சொல்வது என தெரியாமல்…இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்து ராஜீவனை நோக்கி ஓடிச் சென்று அடிக்க ஆரம்பித்தான்.
ரஞ்சிதா அதிர்ச்சியுடன் எழுந்து வந்து மகனை கணவனிடம் இருந்து பிரித்து எடுத்து வெளியே சென்றாள்.
ராஜீவன் அம்பிகாவை சமாதானப்படுத்தி இரண்டு இட்லிகளை சாப்பிட வைத்து… அவர் அருகிலேயே படுத்துக் கொண்டான்.
எப்படியோ சித்தார்த்தை ஒருவழியாக சமாளித்து உணவை ஊட்டி தூங்க வைத்தாள்.அனைவரும் உறங்கி போக அவளுக்கு மட்டும் தூக்கம் வர மறுத்தது.
ராம மூர்த்தியின் இழப்பு வீட்டு ஆட்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான்.ஆனால் தனக்கு?தன் இருண்ட வாழ்விற்கு… விடை தெரியாத தன் மகனின் எதிர்காலத்திற்கு…
ஒரே நம்பிக்கை..ஒரே வெளிச்சம் ராம மூர்த்திதான்
இன்று அவர் அந்த வெளிச்சத்தை நிரந்தர இருளாக்கி விட்டுச் சென்று விட்டார்.தன் தாய் தந்தை மறைவிற்கு கூட இந்த அளவு துயருற்றாளா என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவ்வளவு கணம் அவள் இதயம் முழுவதும்.
“இந்த வீட்டுக்கு நீதான் மருமக. இந்த வீட்டுல இருந்து வெளியே போற எண்ணத்தை இதோடு விட்டுரு. நீ என் மருமக இல்லம்மா… என் பொண்ணு…
நீங்க ரெண்டு பேரும் பிரியணும்னு நினைச்சீங்கனா அது நான் உயிரோட இருக்குற வரைக்கும் நடக்காது” என்ற வார்த்தைகள் இன்று காற்றோடு காற்றாகி போனதாகவே தோன்றியது அவளுக்கு…
இவ்வளவு நாட்களாக தள்ளி நின்ற கந்தசாமி குடும்பம் இந்த இறப்பிற்கு வந்தது.பிரியா,அம்பிகாவை தாங்கி கொண்டாள்.அவரும் அவளிடமே தஞ்சமடைந்தார்.
“இதோ பார் என் உரிமையை…
இனிமேல் இது என்வீடு” என்பதை ரஞ்சிதாவிற்கு தன் செய்கைகள் மூலம் உணர்த்தினாள்.
அம்பிகா மயங்கி விழுந்த நொடி, ரஞ்சிதா அவரைப் பிடிக்க போக…பிரியா அவளை தள்ளி விட்டுக் கொண்டு, முன்வந்து அவரை தாங்கிப் பிடித்தாள்.
ராம மூர்த்திக்கு ராஜீவன் முறை செய்ய…பிரியா அவனருகில் நின்று அவன் மீது அவளது உரிமையை ரஞ்சிதாவிடம் காட்டினாள்.
இதையெல்லாம் நினைத்த ரஞ்சிதாவிற்கு தூக்கம் வராது, துக்கமே வந்தது.தான் மட்டும் என்றால் சமாளித்து கொள்ளலாம்..
தற்போது தன் மூலம் உலகிற்கு வந்த உயிர் உள்ளதே… எதிர்காலம் புயலென கிளம்பி தன்முன் நிற்பதாக தோன்றியது.
தனக்கு கணவன் வேண்டாம்…ஆனால் தன் மகனுக்கு அப்பா வேண்டுமே…
அருகில் தூங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தை பார்த்தாள்.அவனை நல்லமுறையில் படிக்க வைத்து ஒரு சிறந்த மனிதனாக கொண்டு வர வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
மெல்ல ஜன்னல் வழியே பார்க்க ஒரே கும்மிருட்டு…அது தன் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும், எப்போதும் அது விடியவே போவதில்லை என்றும் நினைத்துக் கொண்டாள்.
பிரயாண கலைப்பும், இறப்பின் துக்கமும் சோர்வை வரவழைத்து தூக்கத்தை கொடுக்க தன்னை மறந்து நன்றாக தூங்கினான் ராஜீவன். அதிகாலை சூரிய ஒளி தன் கதிர்களை அவன் முகத்தில் வெளிச்சத்தை படர வைத்து எழுப்பியது.
எழுந்தவன் முதலில் அம்பிகாவை பார்த்தான்.அவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க…மெதுவாக எழுந்து தன் அறைக்குச் சென்றான்.
கட்டில் முழுவதும் விளையாட்டு கார்கள், பைக்குகள்,பொம்மைகள் அவற்றின் நடுவே சித்தார்த் தூங்கிக் கொண்டிருந்தான்.
அப்பா சொன்னது போல் அப்படியே தனது கண்கள், கன்னம்,தலைமுடி கொண்டு தன்னை உரித்து வைத்திருக்கிறான் என எண்ணியவாறு, ஒரு பெரும் மூச்சு விட்டுக் கொண்டு காலை கடன்களை முடிக்கப் போனான்.
பாத்ரூம்மை திறந்து வெளியே வர… சித்தார்த் எழுந்து கொண்டான்.ஒரு தலையணையை கட்டிலின் மீதிருந்து கீழே தள்ளி,சரியாக அதன் மீது குதித்து எழுந்து,”அம்மா” என அழைத்துக் கொண்டே சமையலைறையில் இருக்கும் ரஞ்சிதாவை தேடிப் போனான்.
அவள் மகனை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைய, அவன் வெளியே வந்தான்.ராம மூர்த்தியின் புல்லட் நிற்க அதன் அருகே சென்று மெல்ல தடவிப் பார்த்தான். அவரோடு அந்த பைக்கில் செய்த பிரயாணங்கள் நினைவில் வந்தது.
பைக் அருகில் நின்ற ராஜீவனைப் பார்த்த சித்தார்த் தன்னால் முடிந்த பலத்தை கொண்டு அவனை தள்ளிவிட்டு,”பேட் பாய்…! போ… தாத்தா பைக்… போ.. போ..என அவனை விரட்டினான்.
தான் இத்தனை நாட்களாக விலக்கி வைத்த வாழ்க்கை…
தற்போது தன்னை விலக்கி வைப்பதாக ராஜீவன் உணர்ந்தான்.