காலை வழக்கம் போல் ரஞ்சிதா எழுந்து வாசலை சுத்தம் செய்ய வெளியே வந்தாள்.அவளுடன் சித்தார்த்தும் ஒட்டிக் கொண்டான்.வாசல் தெளித்து முடிப்பதற்குள் ஒரு குளியலே போட்டு விட்டான்.ஒரு வழியாக மகனை சமாளித்து கோலத்தை போட்டு முடித்து உள்ளே வந்தாள்.
“சித்து! அம்மா உனக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வரே.அதுவரை குறும்பு பண்ணாம,இந்த பாலை வெச்சி விளையாடு” என சொல்லிச் சென்றாள்.
பாலை உதைத்து விளையாடியவன் அது கேட்டை விட்டு வெளியே போக,அவனும் வெளியே வந்தான்.பத்து தெரு நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த சித்தார்த்திற்கு உற்சாகம் பொங்கியது.
Advertisement
“லொள்… லொள்…” என்று அவனும் நாய்களைப் போல குரைத்தபடியே அவற்றை நோக்கி ஓடினான்.
அவன் அருகில் வந்ததும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்கள் சட்டென அவனை நோக்கித் திரும்பின. சித்தார்த்தோ அதைக் கண்டு பயப்படாமல், இரண்டு கைகளையும் தட்டி சிரித்தான்.
அடுத்த நொடி…அவற்றில் ஒரு நாய் தன் பற்களைக் காட்டியபடி அவனை நோக்கிப் பாய்ந்தது.
Advertisement
“ஐய்யோ சித்து!”என அலறலோடு தூக்கத்தில் இருந்து விழித்தான் ராஜீவன்.அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.சில நொடிகள் அவனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை.உடல் முழுவதும் வியர்த்திருந்தது.கண்களைத் திறந்து அறையைச் சுற்றிப் பார்த்தான்.முந்தரா துறைமுகத்தின் அமைதியான அறை.
Advertisement
வெளியே கடல் காற்று.தொலைவில் எங்கோ இயந்திரங்களின் மெல்லிய சத்தம்.ஆனால் அவனுடைய காதுகளுக்குள் மட்டும் இன்னும்… “லொள்… லொள்…”என்ற சித்தார்த்தின் குரல்தான் கேட்டுக்கொண்டிருந்தது.
“என்ன கொடுமையான கனவு இது…?”
என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.
மீண்டும் கண்களை மூடினால் அந்த நாய் சித்தார்த்தை நோக்கிப் பாய்ந்த காட்சிதான் தெரிந்தது.
“நாய் கடிச்சா… அவன் எப்படி தாங்குவான்?”என்று நினைத்தவனுக்கு உடலே நடுங்கியது.
இரண்டு வருடங்களாக தன் குடும்பத்தில் இருந்தும், தனக்கு பிடிக்காமல் செய்து வைத்த திருமணத்தில் இருந்தும் தப்பிக்க இதுதான் வழியென இங்கேயே காலத்தை நகரத்தியவன்தான்.ஆனால் இன்று தனது மகனிற்கு ஒரு கெட்டது நடப்பது போன்ற கனவை கூட அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ஒருவேளை உண்மையிலேயே ஏதாவது நடந்திருந்தா…?”என்ற எண்ணம் அவனைப் பதறச் செய்தது.
உடனே மேசையின் மீது இருந்த கைபேசியை எடுத்து,ரஞ்சிதாவின் எண்ணிற்கு டையல் செய்யப் போனான்.
சில நொடிகள் அப்படியே திரையைப் பார்த்துக் கொண்டு,”அழைக்கலாமா? வேண்டாமா?இவ்வளவு நாள் இல்லாமல் இன்று அழைத்தால் அவள் என்ன நினைப்பாள்?”என எண்ணியவாறே அழைக்காமல் ஃபோனை வைத்துவிட்டான்.
மீண்டும் படுக்கையில் சென்று படுக்க… தூக்கம் வரவில்லை.கண்களை வலுக்கட்டாயமாக மூடினாலும் சித்தார்த்தின் முகம்தான் நினைவில் வந்தது.
எல்லா குறும்புதனங்களையும் செய்துவிட்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொள்வது. தன்னை பார்த்த நொடி முகத்தை சுருக்கிக் கொண்டு “பேட்பாய்”என அழைப்பது.மொட்டை போட்ட போது அழுது கொண்டே தன்னை அடித்தது என அனைத்தும் அவன் முன் காட்சியாய் தோன்றியது.
“இனியும் இங்கே இருப்பதில் பிரயோஜனம் இல்ல.உடனே இருகூர் கிளம்பனும்” என மணியைப் பார்க்க அது காலை நான்கு என காட்டியது. மேலதிகாரிக்கு லீவை மெயில் செய்து விட்டு ட்ரெயினைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தான்.
சோர்வாக வீட்டிற்குள் நுழைந்த ராஜீவன், அடுத்த நொடியே தன் மீது ரஞ்சிதா வந்து மோதியதில் தடுமாறினான்.
“ஆ…!”என்று கத்தியபடி ஒரு கையால் அவளை பிடித்து நிறுத்தி, “என்னாச்சு…?”எனக் கேட்டான்.
அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது.மூச்சு வாங்கியபடி அவனைப் பார்த்தவள்,“சித்துவை… காணோம்…”என்றாள்.
அந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டதும் ராஜீவனின் முகம் சட்டென மாறியது.
“என்ன சொல்றே…?எங்கே போனான்…?”
“வீட்டுக்குள்ளதான் இருந்தான். ஒரு நிமிஷம் நான் உள்ளே போயிட்டு வந்தேன்… அதுக்குள்ள காணோம். எங்க போனான்னே தெரியல…”என சொல்லும்போதே அவளுடைய குரல் படபடப்போடு பயத்தையும் வெளிக் காட்டியது.
இருவரும் பதற்றத்தோடு வீட்டை விட்டு வெளியே வந்து அவனை தேட ஆரம்பித்தனர்.
வீட்டை விட்டு சற்று தள்ளி வந்ததும் எதிர் வீட்டுக்காரர் ஒருவர் வேகமாக அவர்களை நோக்கி வந்து,“ரஞ்சிதா… உன் பையன் இப்போதான் இந்தச் சந்துக்குள்ள ஓடிப் போனான். என்னால அவனைப் பிடிக்கவே முடியல. காத்தை விட வேகமா ஓடுறான்!”என்றார்.
“எந்தப் பக்கம்?”
“அந்தப் பக்கம்…”என்று அவர் கை காட்டியதும் இருவரும் அந்தத் தெருவை நோக்கி ஓடினர்.
“சித்து…!சித்தார்த்…!”என்று மாறி மாறி அழைத்துக் கொண்டே சென்றனர்.
அப்போது எதிரே வந்த வயதான ஒருவர் அவர்களைப் பார்த்ததும்,“ராஜீவா… உன் பையனை இப்போதான் கடையில பார்த்தேன்.”என்றார்
இருவரும் அவரை நோக்கி ஓடினர்.
“எந்த கடையிலே?”
“இந்த தெரு முக்குல இருக்குதே அந்த கடையிலேதான்.கடைக்குள்ள வந்து நின்னுட்டு இருந்தான். அப்புறம் உங்க அத்தை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க”என்றார்.
அதைக் கேட்டதும் இருவரும் ராஜீவனின் அத்தை வீட்டை நோக்கி ஓடினர்.அங்கே சென்றதும் அவனது அத்தையும் பதற்றமாக வெளியே வந்தார்.
“ரஞ்சிதா…சித்து கடையில தனியா நின்னுட்டு இருந்தான்.நான்தான் அவனை இங்கே கூட்டிட்டு வந்தே…
டீவியைப் போட்டுவிட்டு, பிஸ்கட் கொடுத்தேன்.உனக்கு ஃபோன் பன்ன ஃபோனை எடுத்துட்டு திரும்பி வந்து பார்த்தா அவனைக் காணோம்!”
ரஞ்சிதாவின் கால்கள் நடுங்கின.
“அவன் எங்க போயிருப்பான்…?”என்று சுற்றிலும் பார்த்தாள்.
ராஜீவனின் முகமும் இறுகியது.மீண்டும் இருவரும் வெளியே ஓடினர்.
வழியில் எதிரே வந்த ஒரு மூதாட்டி அவர்களைப் பார்த்து,“என்னம்மா இப்படி தலைதெறிக்க ஓடுறீங்க? கல்யாணத்தப்போ உங்க ரெண்டு பேரையும் ஜோடியா பார்த்தது. இப்போதான் ரெண்டு பேரும் ஒண்ணா வர்றீங்க. ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு. வீட்டுக்குப் போய் சுத்திப் போடுங்க…”என்று நெட்டி முறித்தார்.
அந்த வார்த்தைகள் காதில் விழுந்தும், அந்த நேரத்தில் அவற்றைக் கேட்கும் நிலையில் இருவரும் இல்லை.
ரஞ்சிதாவின் கண்கள் மட்டும் மகனைத் தேடிக் கொண்டிருந்தன.“சித்து…!”என்று மீண்டும் அழைத்தாள்.
அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து,
“அக்கா… சித்து கிரவுண்ட்ல நின்னுட்டு இருக்கான்!”என்றான்.
“எங்க?”
“அங்க…”
அவன் காட்டிய திசையில் இருவரும் ஓடினர்.ஆனால்…மைதானம் முழுவதும் பார்த்தும் சித்தார்த்தைக் காணவில்லை.
ரஞ்சிதாவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.“சித்து…!”என்று மீண்டும் கத்தினாள்.அவளுடைய கண்களில் கண்ணீர் தேங்கியது.
அந்த நேரத்தில்…தூரத்தில் இருந்து,
“நெஞ்சினா…!”என்ற சித்தார்த்தின் உற்சாகக் குரல் கேட்டது.
இருவரும் ஒரே நேரத்தில் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.ஒரு சிறிய மினிவேன் சாலையில் சென்று கொண்டிருந்தது.அதன் பின்புறத்தில் இருந்து சித்தார்த்தின் தலை தெரிந்தது.
அவன் மகிழ்ச்சியாக கைகளைத் தட்டிக் கொண்டிருந்தான்.
“ஐயோ… சித்து!”என்று ரஞ்சிதா அலறியபடி,அந்த மினிவேனை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
வேன் வேகமாகச் சென்றது.ஓட்டுநருக்கு பின்னால் குழந்தை இருப்பது தெரியவே இல்லை போலும்.ரஞ்சிதா இன்னும் வேகமாக ஓட முயன்றாள்.
ராஜீவன் அவளைப் பிடித்து நிறுத்தி,
“நீ வீட்டுக்குப் போ! நம்ம பையனை…!
நான் கூட்டிட்டு வரேன்!”என அவளை அனுப்பிவிட்டு, சாலையில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதில் ஏறினான்.
“அண்ணா… அந்த மினிவேனை மட்டும் ஃபாலோ பண்ணுங்க. சீக்கிரம்!”என்று சொல்லிவிட்டு… பார்வையை அந்த வேனிலிருந்து அகற்றவே இல்லை.
மினிவேன் மெயின் ரோட்டுக்குள் நுழைந்தது.சித்தார்த்திற்கு அது ஒரு புதிய உலகமாக தெரிந்தது.வானைத் தொடும் அளவுக்கு உயரமாகத் தெரிந்த கட்டிடங்கள்…அந்த கட்டிடங்களைவிட பெரிய லாரிகள்…பெரிய பேருந்துகள்…
ஒன்றன்பின் ஒன்றாக பாய்ந்து சென்ற வாகனங்கள்…என எல்லாவற்றையும் பார்த்து அவன் கண்கள் விரிந்தன.
“ஆ…!”என்று கைகளைத் தட்டிக் கொண்டான்.அவனுக்கு அது ஒரு விளையாட்டு மைதானம் போலிருந்தது.
திடீரென காற்றில் பறந்து வந்த ஒரு காகிதம் வேனுக்குள் வந்து விழுந்தது.
அதைப் பார்த்த சித்தார்த்திற்கு அதை பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
அவன் அதை நோக்கி கையை நீட்டினான்.காகிதம் மீண்டும் காற்றில் பறந்து வேனின் பின்புறம் சென்றது.
அதைப் பிடிக்க சித்தார்த்தும் வண்டியின் விளிம்பைத் தாண்டி வெளியே குனிந்தான்.
அதைப் பார்த்த ராஜீவனின் இதயம் ஒரே நொடியில் நின்றுபோனது.
“சித்து…!வண்டியைப் பிடிச்சுக்கிட்டு நில்லு!”என தொண்டை கிழியக் கத்தினான்.
அதே நேரத்தில் வேன் திடீரென பிரேக் போட்டது.சுற்றிலும் பெரிய லாரிகளும் பேருந்துகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.
ஒரு நொடி…சித்தார்த்தின் உடல் சமநிலையை இழந்து முன்பக்கம் சாய்ந்தது.சித்தார்த் சற்றே தடுமாறி கீழே விழப் போனான்.
“சித்து…!”என அலறியபடி ஓடினான் ராஜீவன்.ஒரே பாய்ச்சலில் அவனை எட்டிப் பிடித்து,அவனை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். இருவரும் சாலையோரத்தில் உருண்டு விழுந்தனர்.
சுற்றிலும் வாகனங்களின் சத்தம்.
பிரேக் சத்தம்.மக்களின் அலறல்.ஆனால் ராஜீவனுக்கு எதுவுமே கேட்கவில்லை.
அவன் கைகளுக்குள் இருந்த சித்தார்த்தை மட்டும் பார்த்தான். சித்தார்த்தும் பயந்து போய் அவன் கழுத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தான்.
“ஒண்ணும் ஆகல… ஒண்ணும் ஆகலடா…”என்று குரல் நடுங்கச் சொல்லிக்கொண்டே அவனுடைய தலை முதல் கால் வரை,எங்காவது அடிபட்டிருக்கிறதா என்று பார்த்தான்.
அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்றவுடன்தான் இவனுக்கு மூச்சே வந்தது.மகனை பத்திரமாக வீட்டிற்கு கூட்டி வந்தான்.
அதுவரை வீட்டு வாசலில் காத்திருந்த ரஞ்சிதா, ராஜீவனின் கைகளுக்குள் சித்தார்த்தைப் பார்த்ததும் அப்படியே உறைந்து போனாள்.
அடுத்த நொடியே அவனிடம் ஓடி வந்தவள், மகனின் முகத்தை இரு கைகளாலும் பிடித்து பார்த்தாள்.
கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மீண்டும் வழிந்தது.
அவன் பாதுகாப்பாக இருக்கிறான் என்பதை உறுதி செய்ததும், அதுவரை அவளுக்குள் தேங்கியிருந்த பயமெல்லாம் கோபமாக வெடித்தது.
“எங்க போனே?”என்று அவன் கன்னத்தைப் பிடித்து இழுத்தாள்.“இனி எங்காச்சும் போவையா?கேட்டைத் தாண்டி எங்காச்சும் போவையா?”என அவன் முதுகில் இரண்டு அடி வைத்தாள்.
சித்தார்த்திற்கு ஏற்கனவே நடந்தது எதுவுமே புரியாமல் இருக்க… இப்போது அம்மாவின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்ததும்,“ம்மா… வண்டா…” பயந்து அழ ஆரம்பித்தான்.
“வர வர உன் குறும்பு ரொம்ப அதிகமாயிட்டே போகுது!”என சொல்லிக்கொண்டே ரஞ்சிதா அவனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
அடுப்பின் அருகில் கிடந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து நெருப்பில் சுட வைத்தாள்.அதைப் பார்த்ததும் சித்தார்த், “வண்டா ம்மா..”என மீண்டும் கத்த ஆரம்பித்தான்.அவனது குரல் சமையலறை முழுவதும் எதிரொலித்தது.
“சூடு வெச்சாதான் நீ அடங்குவே!” என்றவளுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.அவள் முகத்தில் கோபம் இருந்தாலும், அந்தக் கோபத்தின் அடியில் இருந்தது பயம்.
‘இன்னைக்கு இவனுக்கு ஏதாவது ஆகியிருந்தா?’என்ற எண்ணமே அவளை உள்ளுக்குள் சிதைத்துக் கொண்டிருந்தது.
கம்பியை சூடாக்கி அதை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வர,சித்து தன் சிறிய கைகளை முன்பக்கம் நீட்டி,
“ம்மா… நோ…”என தலையை ஆட்டினான்.
ராஜீவன் ஒரு நொடிகூட யோசிக்காமல் ரஞ்சிதாவை நோக்கி வந்து,
அவளுடைய கையிலிருந்து கம்பியைப் பிடுங்கி, அதை நேராகக் கழுவும் தொட்டிக்குள் போட்டு தண்ணீரைத் திறந்துவிட்டான்.
சூடாக இருந்த இரும்பில் தண்ணீர் பட்டதும்,“ச்ச்…”என்ற சத்தம் எழுந்தது.
சித்தார்த் ஓடிவந்து ராஜீவனின் கால்களைப் பற்றிக் கொண்டான்.
அவனுடைய உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது.