ரஞ்சிதா சித்தார்த்திற்கு சூடு போடுவதாக கூறி கம்பியை நெருப்பில் காட்ட,அவன் பயந்தபடி,” ம்மா வண்டா!” என இரு கைகளையும் ஆட்டியபடி கத்தினான்.
இன்று யாருமே தன்னை காப்பாற்ற போவதில்லை என அவனது குழந்தை மனம் அறிந்து கொண்டது போல… சமையல்கட்டு முழுவதும் எதிரொளிக்கும் படி கத்தினான்.
ரஞ்சிதா அந்த கம்பியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் வர…ராஜீவன் அதை பிடிங்கி கழுவும் தொட்டியில் போட்டு தண்ணீரை திறந்துவிட்டான்.
Advertisement
தன் இரு கைகளாலும் அவனது காலை கட்டிக் கொண்டான் சித்தார்த்..அவன் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது.
எதுக்கு இப்படி மாட்டை அடிக்கறே மாதிரி அடிக்கறே?அவன் குழந்தை அவனுக்கு எதுமே தெரியாது.நாம்ம தான் அவனுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி தரனும்.-ராஜீவன்
என்ன சொல்றீங்க? இன்னைக்கு மட்டும் நீங்க இங்க வரலீனா என் நிலைமையே கொஞ்சம் யோசிச்சு பாருங்க.நான் யாரை கூப்பிட்டு இருப்பேன்?எப்படி இவனை வீட்டுக்கு திரும்ப கூட்டிட்டு வந்திருப்பே?-ரஞ்சிதா
Advertisement
அதுக்கு அவனை இப்படி அடிக்கறது சரியா?-ராஜீவன்
Advertisement
சரி நான் அவனை அடிச்சது தப்புதான். வேற எப்படி அவனை சமாளிக்கறது?சொல்லுங்க… -ரஞ்சிதா
அன்பா சொன்னா அவன் புரிஞ்சுப்பா..
-ராஜீவன்
சரி நீங்க அவன்கிட்ட அன்பா சொல்லி இனிமே குறும்பு பண்ணக் கூடாதுனு புரிய வைங்க.அவன் கேட்கறானானு பாக்கலாம்.-ரஞ்சிதா
Advertisement
சரி,நான் நீ சொல்றபடி கேட்கறே. இன்னைக்கு ஃபுல்லா அவன் என்னோட பொறுப்புல இருக்கட்டும்.நான் அவனே பாத்துக்கறே.-ராஜீவன்
அவன் முகத்தை பார்க்காது “சரி” என கூறி விட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள் ரஞ்சிதா.
அதுவரையும் ராஜீவனின் காலை கட்டிக் கொண்டு இருவரின் பேச்சுகளையும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தான் சித்து.கீழே குனிந்து மகனை எடுத்துக் கொண்டான் ராஜீவன்.இவ்வளவு நாளாக அவனை பார்த்தாலே முகத்தை சுளிப்பவன் இன்று நடந்த கலவரங்களினால் பயந்து போய் அவனோடு ஒட்டிக் கொண்டான்.
மண்ணில் புரண்டு விளையாடியவன் போல உடல் முழுவதும் ஒரே மண்.. ஆடை முழுவதும் கசங்கி இருந்தது. அதனால் மகனை எடுத்துக் கொண்டு முதலில் குளியலறை சென்றான்.
பக்கெட்டில் தண்ணீரைத் திறந்துவிட்டு நிரப்பி,சுடு தண்ணீரை கலந்து தன்மீது ஒருமுறை ஊற்றி அளவான விகிதத்தில் உள்ளதா என ஒரு முறை சரிபார்த்துக் கொண்டான்.
சித்தார்த்தை தன் அருகில் நிற்க வைத்து…அவன் ஆடையை கழற்றினான்.அவன் முதுகில் ரஞ்சிதா அடித்த அடியால் அவளது மூன்று கைவிரல் பதிந்து இருந்தது.”ராட்சசி எப்படி அடிச்சு வெச்சிருக்கா?”என மனைவியை மனதுள் கடிந்து கொண்டான்.
மெதுவாக தண்ணீரால் அவனது உடலை நனைக்க…சித்துவிற்கு உற்சாகம் பொங்கியது.அதே சமயம் வாங்கிய அடியால் அங்கங்கே எரிச்சல் ஏற்பட “ஆ…”வென கத்தியபடியே இருந்தான்.ராஜீவன் ஒரு மெல்லிய மலரை பறிப்பது போன்று மென்மையாக சாம்புவை போட்டு தலையை தேய்த்து விட அதில் இரண்டு மூன்று குட்டி கட்கள் இருந்தன.
அதிர்ச்சியில் கண்கள் விரிய,” ஓடும் போது கல்லு மண்ணெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தலையிலே எடுத்துப் போட்டுக்கிட்டையா?”என அதட்டும் குரலில் கேட்டான்.
அப்பா என்ற வார்த்தையை கேட்ட அடுத்த நொடி,”அப்பா நோ…பேட் பாய்” என்றான்.
சற்று நேரத்திற்கு முன்பு இருந்த சந்தோசமான மனநிலை மாறியது ராஜீவனிற்கு…”இவனை எப்படிதான் சமாளிக்கறதோ?என்ன பண்ணி இவனை ஏத்துக்க வைக்கிறது?”என குழம்பியபடி குளித்து விட்டு வெளியே தூக்கி வந்தான். பீரோவைத் திறந்து ஒரு துணியை எடுக்க…”நோ “என்றான் சித்தார்த்.
சரி என வேறு துணியை எடுத்தான். அதையும் வேண்டாம் என நிராகரித்தான்.இப்படியே ஒரு நாலைந்து துணியை நிராகரித்தான். பீரோவினுள் இருந்த பாதி துணி வெளியே வந்து கிடந்தது.அதைப் பார்த்த ராஜீவனிற்கு மூச்சே முட்டியது. வீராப்பாக..”நானே பார்த்துக் கொள்கிறேன்”என ரஞ்சிதாவிடம் கூறியது தவறு என புரிந்து கொண்டான்.
எப்படியோ இறுதியாக ஒரு ஆரஞ்சு நிற பூனைக்குட்டி போட்ட பனியனையும் அதற்கு மேட்சானா டிரவுசரையும் அணிந்து கொண்டான்.ரஞ்சிதாவை தினமும் இப்படிதான் படுத்தி எடுக்கறான் போல என மனதில் நினைத்துக் கொண்டான்.
அதற்குள் ரஞ்சிதா சித்துவிற்கு பால் காய்ச்சி எடுத்து வந்து கொடுக்க, சித்து அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அதை வாங்கி குடித்தான்.
அடுத்து அவள் பார்வை சிதறி கிடந்த துணிகளின் மீது செல்ல…அவள் பார்வையின் பொருளை உணர்ந்த ராஜீவன் வேக வேகமாக துணிகளை எடுத்து சுருட்டி பீரோவினுள் திணிக்க போனான்.
ரஞ்சிதா பொறுமையாக அவற்றை வெளியே எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.
“ம்ம்…!”என ஒரு பெரும் மூச்சை இட்டபடி அவனும் அமைதியாக துணிகளை மடித்து வைத்தான்.அவன் மடித்து வைக்க அவள் அதை உள்ளே எடுத்து அடுக்கினாள்.மெதுவாக அவன் பார்வை அவள் மீது சென்றது.
சோர்ந்து போன முகம்…நன்றாகவே இளைத்து இருந்தாள்.”திருமணத்தின் போதுகூட சற்று உடம்பாக இருந்தாளே…”என அவனின் திருமண நாளை எண்ணிப் பார்த்தான். ஆயுளுக்கும் நினைத்து நினைத்து பூரித்து வாழ வேண்டிய வாழ்வு இப்படி அலங்கோல படுத்தி விட்டேனே…
சித்தார்த்தை தேடி ஓடும் போது மூதாட்டி சொன்ன,” ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்கு” என்ற வார்த்தை நினைவில் வர…இதழோரம் சிரிப்பு எட்டிப் பார்த்தது…எதிரே ரஞ்சிதா இருக்க வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
இவன் இப்படி குறும்பு செய்து கொண்டே இருப்பதால் இவளும் அவன் பின்னாடியே ஓடி இந்தளவு இளைத்து விட்டாள்.சாப்பிடுகிறாளோ என்னவோ என்றெல்லாம் திடீரென மனைவியின் மீது அக்கறை படர்ந்தது.
துணியை மடித்து விட்டு இருவரும் திரும்ப மீண்டும் தவப்புதல்வனை காணவில்லை.அதிர்ச்சியுடன் ‘சித்து’ என கத்தியபடி ரூமை விட்டு வெளியே வந்தனர்.
சமையலறையில் இருந்த சிறிய முக்காலியை சின்ங்கின் முன்பு இழுத்துப் போட்டு அதன் மீது ஏறி நின்று, ரஞ்சிதா அவனுக்காக வாங்கி வைத்திருந்த நாட்டுக் கோழி முட்டைகளை ஒவ்வொன்றாக அதற்குள் தூக்கிப் போட்டு உடைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
‘சித்து!’ என கத்திக் கொண்டே மீண்டும் அவனை அடிக்க போக…ராஜீவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தி அவனை மீண்டும் குளியலறைக்குள் இழுத்துச் சென்றான்.மீண்டும் முதலில் இருந்து, அனைத்தையும் செய்தான். ராஜீவன் தான் எந்தளவு பொறுமையான மனிதன் என்பதை முதல்முறையாக உணர்ந்து கொண்டான்.
இதற்கு மேல் அவனை வீட்டில் வைத்து சமாளிக்க முடியாது என அருகில் இருந்த மாலுக்கு அழைத்துச் சென்றான்.
அந்த பெரிய மாலுக்குள் நுழைந்ததுமே சித்தார்த்தின் கண்கள் விரிந்தன… வீட்டில் எப்போதும் ரஞ்சிதா நாலு சுவற்றிற்குள் அடைத்து வைக்க… அங்கேயே ஓடி, குதித்து, எதையாவது செய்து கொண்டிருக்கும் அவனுக்கு அந்தப் பெரிய இடம் புதிதாக இருக்க… ஒவ்வொரு பொருளையும் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
ஒரு பொம்மை கடை வர அதை விட்டு நகர மறுத்து அங்கேயே நின்று கொண்டான்.ராஜீவன் அவனை உள்ளே அழைத்துச் செல்ல…யானை பொம்மை.. புலி பொம்மை…சிறிய கார்கள்…சத்தம் எழுப்பும் பொம்மைகள்…பந்துகள் என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்றான்.ஆனால் எவற்றையும் தொடவில்லை.
ராஜீவன் மெதுவாக “உனக்கு என்ன வேண்டும்?”என கேட்க…”அது” என ஒரு பொம்மை காரை கை நீட்டினான்.உடனே ராஜீவன் அதை எடுத்து அவன் கைகளில் தர… கண்கள் மின்ன அதை வாங்கிக் கொண்டான்.
போதுமா?-ராஜீவன்.
அது… இது …என தன் கைக்குள் எவ்வளவை அடைக்க முடியுமோ அவ்வளவையும் அடைத்துக் கொண்டான்.
“அடப்பாவி! விட்டா கடையவே கேட்ப போலவே இன்னைக்கு இது போதும்” என பில்லை போட்டுக் கொண்டு…வீட்டு அட்ரஸை கொடுத்து டோர் டெலிவரி செய்யச் சென்னான்.சித்து,” ஒரு புலி பொம்மையை மட்டும் விடுவேனா” என கைகளில் வைத்துக் கொண்டான்.
மகனை தூக்கிக் கொண்டு அடுத்த கடைக்கு நகர்ந்தான்.சித்தார்த் அவன் கழுத்தை கட்டிக் கொண்டான்.அவனைத் தூக்கிக் கொண்டு நடக்கும்போது, அவன் கன்னம் ராஜீவனின் கன்னத்தில் உரசியது.அந்தச் சிறிய ஸ்பரிசத்திற்கே ராஜீவனுடைய மனம் நிறைந்துவிட்டது.
அடுத்து துணிக்கடை…மகன் கை நீட்டிய அனைத்து துணிகளையும் வாங்கிக் கொண்டான்.
அடுத்து சிற்றுண்டி பகுதிக்கு அழைத்துச் சென்றான்.சித்துவை டேபிளின் மீது அமர வைத்து, வெயிட்டரிடம் “சின்ன பையனுக்கு காரம் இல்லாம ஏதாவது இருக்கா?” எனக் கேட்டான். அவர் ஒவ்வொன்றாக கூறி வர… “ஃபிஷ்” என்றதும் சித்தார்த் ‘ஃபிஷ்’ என கண்கள் விரிய கூற அதையே ஆர்டர் கொடுத்தான். கவனமாக சிறு துண்டுகளாக அவனிற்கு ஊட்டி விட்டான்.
அதன்பிறகு குழந்தைகள் விளையாடும் பகுதிக்குள் சித்தார்த்தை அழைத்துச் சென்றான்.அங்கே நுழைந்ததும்… சித்தார்த்தின் கால்கள் தரையில் நிற்கவே இல்லை.
இரண்டு கைகளையும் தட்டி வாயில் வைத்துக் கொண்டே…பந்துகளுக்கு நடுவில் குதித்தான்.அங்காங்கே ஓடி குதித்து விளையாடினான்.அது அவனுக்கு ஒரு புது உலகம் போல தோன்றியது.சறுக்கு மரம் ஏறி விளையாட போனவன்…”நாஜீவா! இங்கே வா” என கத்திக் கூப்பிட, மகிழ்ச்சியில் அவன் முகம் மலர்ந்தது.
அவனும் குழந்தையாக மாறி அவனுடன் விளையாட ஆரம்பித்தான்.
விளையாடி முடித்த சித்தார்த்துக்கு சோர்வு வந்ததும், ராஜீவனின் தோளில் தலையை சாய்த்துக் கொண்டான்.
வாங்கியிருந்த புலி பொம்மையை மட்டும் கையில் இறுகப் பற்றிக் கொண்டிருந்தான்.
ராஜீவன் அவனைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நடந்து,அருகில் இருந்த மரப் பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.ரோஜா குவியலாய் மகன் மடியில் கிடக்க… தும்பினாலோ இரும்பினாலோ அவன் தூக்கம் கெட்டு விடும் என அசையாமல் அமர்ந்தான்.
சில நொடிகள் கழித்து தூக்கத்திலேயே சித்தார்த்தின் கை ராஜீவனின் சட்டையைப் பற்றிக் கொண்டது.அந்தச் சிறிய விரல்களைப் பார்த்தவன்…
அவனுடைய கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
அரை மணி நேரத் தூக்கத்தின் பின் எழுந்து கொண்டான் சித்தார்த். மீண்டும் கொஞ்ச நேரம் விளையாட விட்டு, “போதும் சித்து வீட்டுக்கு போலாம்”என கூற முகத்தை தொங்க போட்டுக் கொண்டான்.
அவன் முகம் போன போக்கை பார்த்தவன்.”நாம்ம நாளைக்கும் இங்க வரலாம்.வரும்போது அம்மாவையும் கூட்டிட்டு வரலாம்” என்றதும் முகம் மலர்ந்தது.
“சரி வா போலாம்” என தூக்க… “ஐச்சீரீம்!”என்றான்.
ஐஸ்கிரீம் வேனுமா?என கேட்க… “ஆம்” என தலையை ஆட்டினான்.
அடுத்து ஐஸ்கிரீம் வாங்கித் தர வாயெல்லாம் அப்பிக் கொண்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான்.
இருவரும் பைக்கில் வீடு திரும்ப… வழியெங்கும் காற்றில் கைகளை நீட்டி கத்திக் கொண்டே வந்தான்.
வீடு வந்ததும் ராஜீவன் சித்தார்த்தை இறக்கி விட,ஒரு கையில் புலி பொம்மையை பிடித்துக் கொண்டான். மறு கையில் ராஜீவனை பிடித்துக் கொண்டு மலர்ந்த முகமாக உள்ளே நுழைய…