அத்தியாயம் 2
குஜராத்தில் இருந்து கோவையை நோக்கி அதிவேக ரெயில் “தடக்… தடக்..” என வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. நள்ளிரவு பனிரென்டரை மணி அனைவரும் நல்ல உறக்கத்தில் இருக்க…ராஜீவன் மட்டும் தூங்காது ஜன்னல் வழியே வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..
மரங்கள் எல்லாம் பின்னோக்கி பயணித்தனர். அதைப் போலவே அவனது நினைவுகளும் பின்னோக்கிப் பயணித்தனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள இருகூர்தான் ராஜீவனின் ஊர்.தந்தை ராமமூர்த்தி சிறிய அளவில் பில்டிங் மெட்டிரியல் கடை நடத்தி வருபவர்.தாய் அம்பிகா இல்லத்தரசி.அவர்களின் ஒரே செல்லப் புதல்வன்தான் ராஜீவன்.
சிறுவயதில் இருந்தே பிடிவாதம் அதிகம். ஒரு விஷயத்தை மனதில் முடிவு செய்து விட்டான் என்றால்… அதை முடித்தே தீருவான். யார் சொன்னாலும், எவ்வளவு தடுத்தாலும் அவன் முடிவு மாறாது.
Advertisement
ராம மூர்த்தியின் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன்,அக்கா இவர்தான் கடைக்குட்டி…
அண்ணன் ராஜ சேகர் பத்மாவதி தம்பதிகளுக்கு இரண்டு புதல்வர்கள் மூத்தவன் ஜெகன் இளையவன் நவீன். இரு புதல்வர்களுக்கும் திருமணமாகி ஒரு பெண் ஆண் என நான்கு பேரன் பேத்திகளை எடுத்து விட்டார் ராஜசேகர். குடும்பமாக சேர்ந்து சேகர் மெஸ் என்ற உணவு கடையை இருகூர் பஸ்நிலையம் அருகில் நடத்தி வருகிறார்கள்.சைவம் அசைவம் என வியாபாரம் படு ஜோராக நடைபெறும்.
அக்கா பார்வதி அவரது கணவர் முருகேசன். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் தீபாவை ஜெகனுக்கும் இளையவள் ஆர்த்தியை நவீனுக்கும் என மணமுடித்துக் கொடுத்து அண்ணன் குடும்பத்திலேயே சம்பந்தியும் ஆகிப் போனார்.
Advertisement
அக்கா தங்கையே மருமகள்களாக வந்ததால் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் குடும்பத்தோடு மெஸ்ஸூம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Advertisement
ராஜசேகர், பார்வதி,ராம மூர்த்தி மூவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அன்பின் இலக்கணமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அம்பிகாவின் ஒரே தம்பி கந்தசாமி அவன் மனைவி சரோஜா இவர்களுக்கு மித்ரா, பிரியா என இரு மகள்கள் இதில் மித்ராவிற்கு திருமணமாகி விட்டது. தம்பி மகளையே மருமகளாக கொண்டு வருவதே அம்பிகாவின் ஒரே ஆசை. அவரின் ஆசைப்படியே ராஜீவனும், பிரியாவும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தனர்.
நட்பாக ஆரம்பித்த அந்த உறவு… வயது கூடக் கூட காதலாக மலர்ந்தது.அது சாதாரண காதல் அல்ல.”நீ இல்லாமல் நான் இல்லை…” என்ற அளவிற்கு ஆழமான காதல்.ஆனால்…அந்த காதலுக்கு எதிரியாக நின்றவன் கந்தசாமி.
Advertisement
கந்தசாமிக்கு ஊரில் பணத்தை வட்டிக்கு விடுவதுதான் தொழில்…அவனிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கியவர்கள், திருப்பிக் கொடுப்பதற்குள் பத்து ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
பொய்க் கணக்குகள்…மீட்டர் வட்டி…
அப்பாவி மக்களின் நிலங்களை கைப்பற்றுவது…என இதையெல்லாம் தொழிலாகவே செய்து வந்ததால், ஊரில் அவனை கந்தசாமி என பெயர் சொல்லி அழைப்பவர்கள் குறைவு.
மாறாக”கந்துவட்டி கந்தசாமி”என்ற பெயர் மக்களால் சூட்டப்பட்டது.
அப்படி சேர்த்த பணம்…கந்தசாமிக்கு மட்டுமல்ல…அவன் மனைவி சரோஜாவிற்கும் அளவுக்கு மீறிய கர்வத்தை கொடுத்திருந்தது.
பரம்பரையாக பணக்காரனாக இருப்பவனுக்கு பணத்தின் மதிப்பு தெரியும்.வறுமையில் வாழ்பவனுக்கு பணத்தின் அருமை தெரியும்.
ஆனால்…நேற்று வரை சாதாரண மனிதனாக இருந்து, இன்று பணம் சேர்ந்தவனின் ஆணவத்திற்கு எல்லையே இருக்காது.
“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்ற பழமொழிக்கு உயிரோட்டமான எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருப்பவன் கந்தசாமி.
கந்தசாமி சரோஜாவின் ஆணவ வாழ்க்கையின் முதல் பலி… அவர்களுடைய மூத்த மகள் மித்ராதான்.
“கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகி குழந்தையும் பிறந்தாச்சு… இன்னமும் ஏன் மாமியார் வீட்டுல தனியா இருந்து கஷ்டப்படணும்? நம்ம வீட்டிலேயே இருந்தா செளகரியமா இருக்கும்…நம்ம வீட்டுல என்ன குறை? இங்கயே இருங்க…” என்று தினமும் மூளைச் சலவை செய்து…சரோஜா, மித்ராவின் மனதை மெதுவாக மாற்ற ஆரம்பித்தாள்.இறுதியில் மித்ராவோடு அவள் கணவன் விக்னேஷையும் வீட்டோடு மாப்பிள்ளையாக சம்மதிக்க வைத்துவிட்டாள்.
கந்தசாமியின் வீட்டில் உறவுகள் கூட…
அன்பால் உருவானவை இல்லை…
சொத்தால் கட்டிப்போடப்பட்டவை.
ராஜீவனும், பிரியாவும் காதலிப்பது கந்தசாமிக்கு தெரிய வந்தபோது…
எல்லோரும் எதிர்பார்த்தது போல எந்த எதிர்ப்பையும் அவர் காட்டவில்லை.
மாறாக…”அக்கா ஆசைப்பட்ட மாதிரியே நடக்கட்டும்.” என்று பெருந்தன்மையாகச் சிரித்தார்.
அந்த சிரிப்பைப் பார்த்து அம்பிகா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால்… அந்த சிரிப்புக்குப் பின்னால் ஒரு பெரிய கணக்கு இருந்தது.
அது அம்பிகா பெயரில் இருந்த ஐந்து ஏக்கர் பூர்வீக நிலம்.இருகூர் பைபாஸ் சாலையை ஒட்டி இருந்த அந்த நிலத்தின் மதிப்பு, வருடா வருடம் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருந்தது.
அதை எப்படியாவது தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே கந்தசாமியின் நீண்ட நாள் ஆசை.
“அக்கா… அந்த நிலத்தை ஏன் இன்னும் குறைஞ்ச விலைக்கு லீசுக்கு விட்டிருக்கீங்க? இப்போ ப்ளாட் போட்டா கோடிக்கணக்குல பணம் வரும்.”என்று எத்தனையோ முறை பேச்சை ஆரம்பித்திருக்கிறான்.
ஆனால் ஒவ்வொரு முறையும் அம்பிகாவின் பதில் ஒன்றுதான்.
“அது நம்ம தாத்தா ஆசையா கொடுத்த நிலம் கந்தா. ராஜீவன் படிப்புக்கு எவ்வளவோ செலவு வந்துச்சு. அப்போ கூட விற்க மனசு வரல. உன் மாமாவும் வட்டிக்குக் கடன் வாங்கினாரே தவிர, அந்த நிலத்தைத் தொடவே இல்ல.”
பின் புன்னகையுடன் “நாளைக்கு அந்த நிலம் எல்லாமே ராஜீவனுக்குத்தான். ராஜீவனுக்குன்னா… உன் மகள் பிரியாவுக்கும்தானே?”என்றார்.
அம்பிகா அதை பாசத்தோடு சொன்னார்.
ஆனால்…கந்தசாமி அதை கணக்கோடு கேட்டான்.பின் உதட்டில் வக்கிர புன்னகையோடு,”ஆமாக்கா… எல்லா நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்குத்தானே…” என்றான்.
ஆனால்…உள்ளுக்குள் வேறொரு குரல் “அந்த ஐந்து ஏக்கர் நிலத்துக்காகத்தான் இப்போதைக்கு அமைதியா இருக்கேன்… அது இல்லைனா, ஒன்னும் இல்லாத உன் பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்க நான் சம்மதிப்பேனா?” என ஒலித்தது.
மனதிற்குள் எழுந்த அந்த எண்ணத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டு நடிப்பதில்…கந்துவட்டி கந்தசாமி கில்லாடிதான்.
காரணம்…ராஜீவன் பதினொன்றாம் வகுப்பு படித்த போது செய்த சேட்டைகள்.
தகாத நண்பர்கள் கூட்டத்தில் சேர்ந்து…
“திருட்டு தம் ” பிடிப்பது…பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்துவது…இரவு நேரங்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது…
இப்படியான பழக்கங்கள் அவனுக்கும் ஒட்டிக் கொண்டிருந்தன.
இந்த விஷயங்கள் தெரிய வந்த நாளிலிருந்து…ராமமூர்த்தியின் கையில் இருந்த பெல்ட்டும்…வாயில் இருந்த கண்டிப்பும்…ஒரு நாளும் ஓய்ந்ததில்லை.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த போது இது இன்னமும் வளர்ந்தது.ப்ளஸ் டூவில் குறைந்த மார்க் எடுத்த போதும்…பிடிவாதமாக ராம மூர்த்தியை டொனேஷன் கட்ட வைத்து சிவில் என்ஜினீயரிங் சேர்ந்தான்.
கல்லூரியை கட் அடித்து ஊர் சுற்ற ஆரம்பித்தான்.அதுபோக பிரியாவுடன் காதல் வேறு வந்துவிட்டது சொல்லவா வேண்டும்.இறக்கை இல்லாமல் ஆகாயத்தில் பறந்தான்.விளைவு அரியர் என்னும் பெயரில் ராம மூர்த்தியை வட்டிக்கு கடன் வாங்கி லட்சம் லட்சமாக கட்ட வைத்தான்.
“ஒரு தகப்பன் மகனுக்கு சொத்து சேர்த்து வைக்க முடியலன்னாலும் பரவாயில்ல…நல்ல பழக்கத்தை கத்துக் கொடுத்து விடணும்…”என்று சொல்லி சொல்லியே மகனை வளர்த்தார்.
அப்போது…அந்த வார்த்தைகளின் அர்த்தம் ராஜீவனுக்கு புரியவில்லை.
தன்னை எப்போதும் குறை சொல்லும் அப்பாவாகத்தான் அவரை பார்த்தான்.
அதே சமயம் மகன்மீது கொள்ளைப் பிரியம் ராமமூர்த்திக்கு. ஒரே பையன் அவன் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என நினைப்பவர்.ஆனால் அவன் செய்யும் தப்புகளுக்கு அந்த நிமிடமே தண்டனையை கொடுத்து கண்டிப்புடன் இருப்பார்.
அந்த கண்டிப்புக்கு ஏற்றாற்போல்…
ராஜீவனின் பிடிவாதமும் அதிகரித்தது.
இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும்,
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத இரண்டு துருவங்களாக மாறிப் போனார்கள்.
அதனால் ராஜீவன் தனக்கு ஏதாவது ஒன்று வேண்டுமென்று நினைத்து விட்டால்… நேரடியாக ராம மூர்த்தியிடம் செல்லாது “அம்மா…” என்று அம்பிகாவிடம் செல்வான்.
அம்பிகாவும்…”ஒரே பையன்தானே… விடுங்க… அவனுக்கு இல்லாது வேறு யாருக்கு செய்யப் போகிறோம்”என மகனுக்கு ஆதரவாக பேசுவார்.
அதனால்…அம்மா மீது அளவில்லாத பாசம்.அப்பா மீது அளவுக்கு மீறிய வெறுப்பு.இதுதான் அந்தக் காலத்து ராஜீவன்.
ஆனால்…ராமமூர்த்தியின் ஒவ்வொரு கண்டிப்புக்கும் பின்னால்…மகன் மீது வைத்திருந்த அளவற்ற அன்பு இருப்பதை…காலம் மிகவும் தாமதமாகத்தான் ராஜீவனுக்கு உணர்த்தப் போகிறது.
ராஜீவன் இழுத்து வரும் ஒவ்வொரு பஞ்சாயத்தை தீர்த்து வைக்கும் போது… “மகன் இன்று திருந்தி விடுவான் நாளை திருந்தி விடுவான்” என எண்ணி எண்ணியே ஏமாந்து போனார்.
பிரியாவும் ராஜீவனும் காதலிப்பது தெரிந்ததும்,ராமமூர்த்திக்கு அதிர்ச்சியே கந்தசாமியின் கந்து வட்டி முறையையும்,அவன் வக்கிர புத்தியையும் நன்கு அறிந்தவர்.
இருந்தும் அம்பிகாவும் தம்பி பொண்ணே நம்ம வீட்டுக்கு வரட்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்த.. ராஜீவனும் தன் பிடியில் பிடிவாதமாக நிற்க…” சரி! பசங்க விருப்பம் முக்கியம். “என நேராக கந்தசாமி வீட்டிற்கே சம்பந்தம் பேசச் சென்றார்.
வாசலுக்கே வந்து ராம மூர்த்தியை வரவேற்றான் கந்தசாமி,”வாங்க மாமா… என்ன விஷயம்?”என்று சிரித்தபடி அமர வைத்தான்.
ராமமூர்த்தி நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.”ராஜீவனும்… பிரியாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க. அம்பிகாவுக்கும் இந்த சம்மந்தத்துல ஆசை இருக்கு. அதான் நல்ல நாள் பார்த்து பேசிட்டு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு வந்தேன்.”என்றார்
இதைக் கேட்டதும் கந்தசாமியின் முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்தது.அவன் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து,”மாமா… ராஜீவன் இன்னும் வேலை தேடிட்டு இருக்கான். என் பொண்ணை நான் வாழ வைக்கனும்னு நினைக்கற வாழ்க்கை வேற”என்றான்.
ராம மூர்த்தி அவன் கூறியதை கேட்டு, குழப்ப பார்வை பார்த்தார்
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,
“ஆனா ஒரு வழி இருக்கு மாமா… உங்களுக்கு பிடிச்சா பண்ணலாம்” என்றான்.
“என்னப்பா?”
“ராஜீவன் எங்க வீட்டோட மாப்பிள்ளையா வரட்டும்… என்னோட இந்த கந்துவட்டி தொழிலை அவன் பார்த்துகிட்டா இந்த கல்யாணத்துக்கு எனக்கு முழு சம்மதம்.”
இதைக் கேட்ட அந்த ஒரு நொடி… ராமமூர்த்தியின் முகம் இறுகிப் போனது.
“என்னப்பா சொல்றே…? வீட்டோட மாப்பிள்ளையா…?”
“ஆமா மாமா.”
“அது சரியா வராதுப்பா. என் பையன் படிச்சவன். நாளைக்கு நல்ல வேலைக்குப் போயிருவான். இந்த கந்து வட்டி தொழில் எல்லா அவனுக்கு சரிவராதுப்பா. நீ சொல்றது எனக்கு சரியா படல.”
கந்தசாமி அலட்சியமாக சிரித்தவாறு… உங்க பையனுக்கு என்ன தகுதி இருக்கு மாமா? இன்னும் அப்பன் சம்பாத்தியத்துல சாப்பிடுறான்.வேலை கூட இல்லாதவனுக்கு எப்படி என் பொண்ணை கட்டிக் கொடுக்கறது? வீட்டோட மாப்பிள்ளையா உங்க பையன் வந்தா கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறேன்… இல்லன்னா இந்த பேச்சை இத்தோட விட்டுருங்க…” என்றான்.
இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் கூட… கந்தசாமி பேசிய அவமானமான வார்த்தைகள் ராமமூர்த்தியின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.
ஊரார் வயிற்றெரிச்சலிலும், கண்ணீரிலும் பிழைக்கும் கந்துவட்டி தொழிலும்… அந்த வீட்டுச் சம்பந்தமும் இனி தன் மகனுக்கு வேண்டாம் என்று முடிவு செய்த ராமமூர்த்தி, ராஜீவனின் சம்மதத்தைக் கூட கேட்காமல் ரஞ்சிதாவை அவனுக்குப் பேசி முடித்தார்.