அதிகாலை நேரம்… கிழக்கு வானில் சூரியன் தன் பொன்னிறக் கதிர்களை மெல்ல மெல்ல விரித்தபடி, இரவின் இருளை அகற்றிக் கொண்டிருந்தான்.
ரஞ்சிதா அமைதியாக எழுந்து குளித்துவிட்டு, மெதுவாக அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அது வசதிகள் நிறைந்த பெரிய வீடல்ல…அன்பும், உழைப்பும் சேர்ந்து கட்டிய ஒரு எளிமையான நடுத்தரக் குடும்ப வீடு.
Advertisement
சிறிய வரவேற்பறை… அதனுடன் மூன்று அறைகள்… ஒரு சமையலறை… வீட்டின் பின்புறம் சிறிய திறந்த வெளி. வீட்டின் ஒரு பகுதியில் இரண்டு சிறிய வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இன்னும் அங்கிருந்தவர்களும் உறக்கத்தின் பிடியிலேயே இருந்தனர்.
வீடு முழுவதும் ஆழ்ந்த அமைதி நிலவியது.மெதுவாக வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள் ரஞ்சிதா.
அதிகாலைப் பனித்துளிகள் இன்னும் தரையில் படர்ந்திருந்தன. குளிர்ந்த தென்றல் அவள் முகத்தை வருடிச் சென்றது.
Advertisement
வாசலை கூட்டி சுத்தப்படுத்தி… வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாசல் முழுவதும் தெளித்தாள். தண்ணீர் பட்ட மண் எழுப்பிய ஈரமான மண்வாசனை அவள் மனதையே புத்துணர்ச்சியடையச் செய்தது.பிறகு அழகிய பூ வடிவ கோலத்தைப் போட்டாள்.
கோலத்தை முடித்தவள் ஒரு நொடி நின்று ரசித்தாள்.
Advertisement
அதன்பின் வீட்டின் ஓரத்தில் இருந்த மல்லிகைச் செடியை நோக்கி நடந்தாள். இரவு முழுவதும் பனியைத் தாங்கி நின்றிருந்த வெண்மையான மல்லிகை மொட்டுகள், அதிகாலை காற்றில் மெதுவாக அசைந்தன. மலர்ந்திருந்த சில பூக்களையும், மலரத் தயாராக இருந்த சில மொட்டுகளையும் மெதுவாகப் பறித்துக் கொண்டாள்.அந்த மல்லிகையின் மணம் அவள் கரங்களிலும் ஒட்டிக் கொண்டது.
உள்ளே வந்து நேராக பூஜை அறைக்குள் நுழைந்தாள்.சுவரில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த விநாயகர், முருகன், பெருமாள், அம்மன் படங்களை ஒரு கணம் பக்தியோடு பார்த்தவள், பறித்து வந்த மல்லிகைப் பூக்களை ஒவ்வொரு படத்திற்கும் அழகாகச் சூட்டினாள்.
பிறகு விளக்கில் எண்ணெய் ஊற்றி, புதிய திரியை விளக்கில் பொருத்தி தீபம் ஏற்றினாள். மெதுவாக ஒளிர்ந்த அந்த அகல் விளக்கின் வெளிச்சம் பூஜை அறை முழுவதும் பரவியது. இரு கைகளையும் கூப்பியபடி கண்களை மூடியவள் மனமுருகி வேண்டினாள்.
Advertisement
“நேற்றே ராஜீவனின் ஒவ்வொரு செய்கையையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் ரஞ்சிதா.
மணமக்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்திற்கும், புதுமணப் பெண்ணுக்கே உரிய வெட்கமும்,ஆசையும் நிறைந்த பார்வையோடு ராஜிவனின் முகத்தைப் பார்த்தபடியே ஒவ்வொன்றையும் இவள் செய்ய…
அவனோ இதில் எதிலும் விருப்பம் இல்லாதவனைப் போல இருந்தான்.
அவனது முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை…கோபமும் இல்லை…
உணர்ச்சிகளே இல்லாத ஒரு மனிதனைப் போல, கடமைக்காக மட்டுமே ஒவ்வொரு சடங்கையும் செய்து முடித்தான்.அவனது அந்த அமைதி ரஞ்சிதாவின் மனதில் ஏராளமான கேள்விகளை விதைத்திருந்தது.
“கடவுளே… அவருக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லையா…? இல்லை… என்னைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லையா…? எதுவுமே என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால்…இந்தக் குடும்பத்தில் என்னால் ஒரு நாளும் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலையக் கூடாது. என்னை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும்…”என மனமுருகி வேண்டிக்கொண்டு, குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் வகிட்டிலும் வைத்துக் கொண்டாள்.
எப்போதுமே அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் அம்பிகாவிற்கு, இன்று மட்டும் எழ மனமில்லை.
நேற்று நடந்த அனைத்தும் இன்னும் அவளது மனதை அழுத்திக் கொண்டே இருந்தது.மகனிற்கு பிடித்தமில்லாத திருமணம்.. இனி அவன் வாழ்வு எப்படி போகும் என கவலையோடு சுவரை வெறித்தபடி படுத்திருக்க… வீடு முழுவதும் சாம்பிராணி மணம் மெதுவாகப் பரவியது.அந்த மணம் அவளை படுக்கையிலிருந்து எழ வைத்தது.
மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தவர், பூஜை அறை முன் நின்றார். அங்கே… கைகளை கூப்பி பயபக்தியோடு இறைவனை வேண்டிக் கொண்டிருந்தாள் ரஞ்சிதா.
அந்த காட்சியை சில நொடிகள் அமைதியாகப் பார்த்த அம்பிகாவின் மனதில் தன்னையும் அறியாமல் ஒரு எண்ணம் தோன்றியது.
“இந்த இடத்தில்… என் தம்பி மகள் பிரியா நின்றிருக்க வேண்டியவள்”என… அந்த எண்ணம் வந்த மறுநொடியே, ரஞ்சிதாவின் முகத்தை மீண்டும் பார்க்க மனமில்லாமல்… தன் அறைக்குள் சென்று அமைதியாக படுத்துக் கொண்டார். ஆனால்… கண்களை மட்டுமே மூட முடிந்ததே தவிர, மனதை மூட முடியவில்லை.
அதன்பின் புடவையின் முந்தானையை இடுப்பில் சொருகியபடி,
கூந்தலை கிளிப்பில் அடக்கி,மெதுவாக சமையலறையை நோக்கி நடந்தாள், ரஞ்சிதா. அந்த வீட்டின் முதல் நாள் காலையை… தன் கைகளால், தன் அன்பால், தன் பொறுப்பால் தொடங்கத் தயாரானாள்.
நேற்றிரவு நடந்த சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் ராமமூர்த்தியின் உடன்பிறப்புகள் யாரும் தங்கள் வீட்டிற்குச் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தனர்.
திருமண அசதியில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், யாரையும் எழுப்பாமல் காலை உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள் ரஞ்சிதா.
வெண்ணிற மாவை இட்லிப்பானையில் ஊற்ற வைக்க, பக்கத்தில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில்… “என்னடா… சமையல்கட்டுல சத்தம் கேட்குது?” என்று பேசிக்கொண்டே உள்ளே வந்தார் பார்வதி.
அவரைத் தொடர்ந்து பத்மாவதி, தீபா, ஆர்த்தி என ஒவ்வொருவராக சமையலறைக்குள் வந்தனர்.
ரஞ்சிதா மட்டும் தனியாக சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பத்மாவதி சிரிப்புடன்,”அடடா… மருமக வந்த முதல் நாளே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுட்டாளே!” என்றார்.
அதை கேட்ட ரஞ்சிதா உடனே கைகளை புடவை முந்தானையில் துடைத்தபடி,”அத்தே… நீங்க எல்லாரும் ரொம்ப களைப்பா இருப்பீங்கனு நினைச்சேன். அதான் சமைக்க ஆரம்பிச்சுட்டேன்…” என்றாள்.
“கல்யாணம் ஆன மறுநாளே சமையலறைக்குள்ள நிக்கக் கூடாது. நாங்க இருக்கோம்ல?” என்று பாசமாகச் சொல்லியபடி அவள் கையிலிருந்த கரண்டியை வாங்கிக் கொண்டார் பத்மாவதி.
“சரி… இனி எல்லாரும் சேர்ந்து சமைக்கலாம்…”என்று சிரித்தாள் தீபா.
“ஆமாம்… இப்போதான் நம்ம வீட்டுக்கு ரஞ்சிதா வந்திருக்கா. அவளை வேலை வாங்கறோம்னு தெரிஞ்சா… ராஜீவன் மாமா எங்களை திட்டுவாங்க.” என்று ஆர்த்தி கலாய்க்க, அனைவரும் சிரித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் சமையலறையே கலகலப்பாக மாறியது.
பார்வதி சாம்பாரின் உப்பைச் சரிபார்க்க.. பத்மாவதி டிபன் பாத்திரங்களை எடுத்து வைக்க..தீபா தேங்காய் சட்னிக்கு தேங்காய் துருவ…
ஆர்த்தி இட்லிகளை எடுத்து ஹாட்பாக்ஸில் அடுக்கினாள்.
அவர்களுடன் இயல்பாகவே ஒன்றிப் போனாள் ரஞ்சிதா.அவள் முகத்தில் இருந்த தயக்கமும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது.
இதற்குள்…ராமமூர்த்தி, ராஜசேகர், ஜெகன், நவீன் ஆகியோர் குளித்துவிட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ரஞ்சிதா ட்ரேயில் சூடான காபி டம்ளர்களை அடுக்கிக் கொண்டு வந்து, முதலில் ராஜசேகரிடம் “மாமா… காபி…”என நீட்டினாள்.அவரும் சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்டார்.
அடுத்து ஜெகன், நவீன் ஆகியோருக்கும் கொடுத்தாள்.
கடைசியாக ராமமூர்த்தியிடம் நீட்ட… சங்கடமாக பார்த்தார்…இவளாலும் அந்த பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை.
“மாமா காபி”என நிலையை இயல்பாக்கினாள். பின் அவரும் காபியை வாங்கிக் கொண்டார்.
ரஞ்சிதா ஒரு டம்ளர் காபியை எடுத்துக் கொண்டு அம்பிகாவின் அறைக்குச் சென்றாள்.அம்பிகா கட்டிலில் அமர்ந்திருந்தார்.
“அத்தை… காபி…”என மரியாதையோடு நீட்டினாள்.
அவளை ஒரு கணம் பார்த்த அம்பிகா, எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்,”அங்க மேஜை மேல வை…” என்றார்.
அவ்வளவுதான்.ஒரு புன்னகை கூட இல்லை…அமைதியாக டம்ளரை மேஜையின் மீது வைத்துவிட்டு வெளியே வந்தாள் ரஞ்சிதா.
அவள் வெளியே வந்தவுடன் ராமமூர்த்தி அவளை அழைத்து “ராஜீவனை எழுப்பிவிடும்மா.”என்றார்.
ரஞ்சிதாவின் இதயம் வேகமாகத் துடித்தது. கையில் சூடாக ஆவி பறக்கும் காபியுடன் மெதுவாக அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அறை முழுவதும் அமைதியாக இருந்தது.
கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தான் ராஜீவன். எப்போதோ தூக்கம் விடை பெற்று சென்றிருக்க.. கண்கள் மட்டும் மூடியிருந்தன.
கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் அது ரஞ்சிதாதான் என்பதை உணர்ந்தவன், எழுந்து அமர மனமில்லாமல் அப்படியே படுத்திருந்தான்.
ரஞ்சிதா சில நொடிகள் தயக்கத்தோடு நின்றாள்.பிறகு மெதுவாக, “என்னங்க…”என்று அழைத்தாள்.
பதில் இல்லை. மீண்டும்…”என்னங்க..எழுந்திருங்க…”என்றாள்.
மீண்டும் அமைதி. வேறு வழியில்லாமல், நடுங்கிய விரல்களால் அவன் தோளை மெதுவாகத் தொட்டாள்.
அந்த ஒரு தொடுதல்… ராஜீவனுக்கு பிடிக்கவில்லை.சட்டென்று அவளது கையைத் தட்டிவிட்டு எழுந்து அமர்ந்தான்.
“காபி…” என்று அவள் தயக்கமாக நீட்டினாள்.அவளை ஒரு நொடி கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.காபியையும் வாங்கவே இல்லை.
எதுவும் பேசாமல் கட்டிலில் இருந்து இறங்கி நேராக குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
அவள் கையில் இருந்த காபி அப்படியே குளிர ஆரம்பித்தது.சில நொடிகள் அங்கேயே நின்றவள்…மெல்ல திரும்பி வெளியே வந்தாள்.
வாசலில் காத்திருந்த ராமமூர்த்தி,”என்னம்மா… எழுந்துட்டானா?” என்று கேட்டார்.
தன் மனவருத்தத்தை முகத்தில் காட்டாமல் சிரித்தபடி”எழுந்துட்டாரு மாமா… காபி வேண்டாம்னு… டீ கேட்டாரு.”என்றாள்.
அந்த பதிலை கேட்ட ராமமூர்த்தி ஒரு நொடி அமைதியாக நின்றார்.தன் மகனுக்கு டீ என்றாலே பிடிக்காது என்பது அவருக்கு நன்றாகவே தெரியுமே.
தன் மனதை காயப்படுத்த விரும்பாமல் தான் அவள் பொய் சொல்கிறாள் என்பதையும் புரிந்துகொண்டார். அவளின் மனப்பக்குவம் அவரை நெகிழ வைத்தது.
மெல்ல சிரித்தபடி, “ராஜீவன் கொஞ்சம் பிடிவாதக்காரன் மா… ஆனா குழந்தை மாதிரி மனசு. நல்லது எது, கெட்டது எதுன்னு யோசிக்காம, உணர்ச்சிவசப்பட்டு சில நேரம் தப்பான முடிவு எடுத்துடுவான். கோபம் வந்தா யார் பேச்சையும் கேட்க மாட்டான்… ஆனா அதே சமயம் கோபம் இறங்கினா, அவன மாதிரி பாசக்காரனும் கிடையாது.நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போம்மா…ஒருநாள் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பான்.”
என்றார் நம்பிக்கையோடு.
ரஞ்சிதா “சரிங்க மாமா…”என மெதுவாகத் தலையசைத்தாள்.
அதற்குப் பிறகு அனைவருக்கும் காலை உணவை பரிமாறினாள்.
ஜெகனும், நவீனும் ராஜீவனை சாப்பிட அழைத்து வந்தனர். அவன் யாரிடமும் பேசவில்லை.அமைதியாக அமர்ந்து சாப்பிட்டான்.
ரஞ்சிதா அவன் தட்டில் சாம்பார் ஊற்றியபோதும்…
அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
சாப்பிட்டு முடித்ததும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும்… குழந்தைகள் மட்டும் அந்த அமைதியை உடைத்தனர்.”சித்தி… சித்தி…”என்று ஓடி வந்து ரஞ்சிதாவைச் சுற்றிக்கொண்டனர்.அவர்களோடு சிரித்துப் பேச ஆரம்பித்தவளின் முகத்தில் இருந்த சோகத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில்… ராமமூர்த்தியின் அண்ணன்,அக்கா குடும்பத்தினர் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.வீடு திடீரென்று வெறிச்சோடியது.
நேற்று வரை சிரிப்பும் சத்தமுமாக இருந்த வீடு…இன்று அமைதியில் மூழ்கியிருந்தது.
ரஞ்சிதா வீடு முழுவதையும் சுத்தம் செய்தாள்.பாத்திரங்களை கழுவி, ஹாலை ஒழுங்குபடுத்தி அனைத்தையும் சீர்செய்தாள்.
தனது உடைகளை அவள் கைகளில் பார்த்த ராஜீவனின் முகம் இறுகியது.
விருட்டென்று அவள் கையில் இருந்த தனது துணிகளைப் பிடுங்கிக் கொண்டான்.
அதிர்ச்சியடைந்து அவள் அவன் முகத்தைப் பார்க்க…
கோபத்தை அடக்கிக் கொண்ட குரலில்… “இதோ பார்…இந்த வீட்டுல உனக்கு உரிமை வந்துடுச்சுன்னு நினைச்சு எல்லா வேலையும் இழுத்துப் போட்டுட்டு செய்யாத.எங்க அப்பாவுக்கு என்ன வேலை வேணும்னாலும் செய்… எனக்கு பிரச்சினை இல்லை.ஆனா… என்னோட எந்த வேலையையும் நீ செய்யக் கூடாது. என்னோட துணி… என்னோட பொருள்… என்னோட வாழ்க்கை… எதுலயும் நீ தலையிடாத என்றான்.
அவனின் ஒவ்வொரு வார்த்தையும்… அவளது மனதில் சாட்டையடிபோல் விழுந்தது.ரஞ்சிதா எதுவும் பேசாமல், மெதுவாகத் தலையைக் குனிந்து நின்றாள்.
ராஜீவன் அந்த துணிகளை அவள் கைகளில் இருந்து பிடுங்கி கொண்டு நேராக அம்பிகாவிடம் சென்றான்.
“அம்மா… இனிமே என் துணியெல்லாம் எப்பவும் போல நீங்களே துவைங்க .” என சொல்லிவிட்டு… பைக்கின் சாவியை எடுத்தான்.
அடுத்த நொடியே… வண்டியின் சத்தம் வாசலை விட்டு தூரமாக மறைந்தது.
வாசலில் நின்றபடியே அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சிதா.கண்களில் கண்ணீர் திரண்டது.
ஆனால்…அந்த கண்ணீரை யாரும் பார்க்கக் கூடாது என்று நினைத்தவள்… அமைதியாக துடைத்தபடி உள்ளே நடந்து சென்றாள்.