இப்படிக்கு, – 05
இப்படிக்கு,
அத்தியாயம் – 05*
Advertisement
பொழுது விடிந்தும் விடியாத,பொழுது அது.சமயலறைக்குள் காஃபி கலக்கிய வண்ணம் இருந்த,சம்பூர்ணத்தின் முகத்தில் அத்தனை வாட்டம்.
எண்ணவலைகள் மனதை நிரப்பிட,அதன் தாக்கத்தில் மனம் வலித்தது.எண்ணம் முழுவதும் பிள்ளைகளின்,நல்வாழ்வைப் பற்றித் தான்.
Advertisement
Advertisement
பிள்ளகைளுக்கு எப்படியோ,பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் சிந்தையே,அதிகம் நிறைந்திருக்கும்.அதுவும்,அன்னையர் என்றால்,அதைப் பற்றிக் கூறவே தேவையில்லை.
நடைப்பயிற்சியை முடித்து விட்டு,களைப்புடன் வீட்டுக்குள் வந்தார்,அவரின் கணவர் முத்தையா.வந்ததுமே,அவர் மனைவியைத் தேடிச் செல்ல,பார்த்தவுடனேயே அவர் மனம் இயல்பின்றி தவிப்பதை உணர கொள்ள முடிந்தது,அவரால்.
Advertisement
“அம்மாடி!” சிறு புன்னகையுடன் கூறியவரை நிமிர்ந்து பார்த்தவரோ,அவர் கேட்கும் முன்னமே கணவருக்கென கலக்கி வைத்திருந்த காஃபியை அவரிடம் நீட்டியிருந்தார்.முகபாவத்தை நொடி நேரத்தில்,அவர் மாற்றியிருக்க,கணவரின் விழிகளில் இருந்து அது தப்பவில்லை.
“என்ன யோசன..?” அவர் மனதின் ஓடிக் கொண்டிருக்கும் என்னவென்று,தெரிந்த போதிலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டிட,சம்பூர்ணத்தின் பார்வையில் முறைப்பு குடி கொண்டது.
“என்ன யோசிப்பேன்னு உங்களுக்கு தெரியாதா..?” சடைத்துக் கொள்ள,முத்தையாவோ மிதமான புன்னகையை சிந்தி வைத்தார்.
“எல்லாம் நல்ல படியா நடக்கும்மா..நீ சும்மா போட்டு யோசிச்சு உன்ன டென்ஷன் பண்ணிக்காத..அவ்ளோ தான் நா சொல்றது..கடவுள மீறுன சக்தி ஒன்னும் இல்லன்னு நல்லா புரிஞ்சி கிட்டதுக்கு அப்றமும் இப்டி வருத்தப்பட்டு என்னாகப் போகுது..?”
“எல்லாம் புரிதுங்க..ஆனா,மழத்தண்ணிய சேக்க குடமே வக்காம,தண்ணி சேரனும்னு வேண்டிக்கிறது நியாயமா..?” அவர் குரலில்,அத்தனை ஆதங்கம்.
தாம் எந்த முயற்சியும் முன்னெடுக்காது,எல்லாம் நல்ல படியாய் நடந்தேறும் என்று நம்புவது பிழையென்றே,அவர் குறிக்க,முத்தையாவோ அவரின் சிறு கோபத்துடன் ஏறிட்டார்.
“உன்னாலயும் என்னாலயும் சரி மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன பண்ணிர முடியும்..? பேசிப் பாக்கறது தான்..அதத் தாண்டி நம்மளால எதுவும் பண்ண முடியாது..”
“………………….”
“நாம சொல்ற விஷயம் சரியா இருந்தாலுமே,அதப் பத்தி தெளிவு படுத்திட்டு முடிவெடுக்குற உரிமய பசங்க கிட்ட கொடுத்துரனும்..முக்கியமா இந்த கல்யாண விஷயத்துல..நூத்துக்கு நூறு நல்ல மனுஷன கூட்டி வந்தாலும்,பையனுக்கோ பொண்ணுக்கோ பிடிக்கலன்னா அவங்கள வற்புறுத்த கூடாதும்மா..”
“………………….”
“எல்லாத்துக்கும் காலம் வரும்..அந்த டைம்ல எல்லாம் சரியா நடக்கும்..அத மட்டும் மனசுல வச்சி கிட்டு யோசிக்காம இரு..பொண்ணு கிட்டவும் இப்டி மூஞ்ச நீட்டி வச்சி கிட்டு இருக்காத..” அதட்டல் இல்லையென்றாலும்,அழுத்தமாய் உரைத்து விட்டே சென்றார்,மனிதர்.
மகளின் வாழ்க்கையை நினைக்கையில்,அவருக்குமே வருத்தம் மேலோங்கும்.ஆயினும்,அவளின் விருப்பத்தை மீறி எதுவும் செய்திட இயலாதே.
திருமணம் வேண்டாமென்று முரண்டு பிடிப்பவளை,கடத்திக் கொண்டு சென்றா,மணவறையில் உட்கார வைத்திட முடியும்..?
“ரொம்ப அழுத்தம்!” மகளின் எண்ணத்தில்,அவர் இதழ்கள் தன்னாலே உச்சரித்து இருந்தன.அந்த அழுத்தத்தின்,பிண்ணனி காரணமாய் அவர்களும் இருப்பது நினைவில் எழுகையில்,மனதில் சிறு நெருடல்.
அவளை அவளே,பார்த்துக் கொள்ளக் கூடும் என்கின்ற நம்பிக்கையில்,அவள் மீது பெற்றவர்களின் கவனம் குவிய தவறியிருக்க,அதுவோ மகளவளை தனக்குத் தான் மட்டுந்தான் என்கின்ற எண்ணத்துக்குள் அல்லவா தள்ளி விட்டிருக்கிறது..?
அவளுக்குள் அப்படியொரு எண்ணம் இருப்பதே,பெற்றவர்களுக்கு சமீபமாகத் தான் தெரியும்.ஏனோ,அது புரிந்த பின்னர் தான்,மகள் தன் பிரச்சினையைக் கூட தம்மிடம் பகிர மறுப்பதன் காரணம் அவர்களுக்கு புரிந்திருந்தது.
இதுவரை அவளை கூப்பிட்டு அமர வைத்து,அவள் மனம் திறந்து பேசிடும் வாய்ப்புக்களை தாம் வழங்கியதே இல்லை என்று உணர்ந்தவரின்,மனதில் சுருக்கென்று ஓர் வலி.
வளவளத்துக் கொண்டே இருக்கும் மகள் அவள்.கோபத்தை காட்டி விடுவதுண்டு.பிடிவாதங்களும் அதிகம் வெளிப்படும்.அப்படி இருப்பதாலோ என்னவோ,அவள் தம் அன்புக்கு கரிசனைக்கும் ஏங்கக் கூடும் என்று மறந்து தான் போயிருந்தனர்,அவர்கள்.
அவளும் தன் ஏக்கத்தையும் தேவைகளையும் வெளிப்படுத்தி நிற்கும் ரகமும் இல்லை,என்பதால் வயதும் முதிர்ச்சியும் உண்டாக உண்டாக,அவளுக்கும் பெற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளிய வெகுவாய் நீண்டிருந்தது.
அதை உணர்ந்து புரிகையில்,காலம் கடந்திருக்க,இப்போது அந்த இடைவெளியை எப்படி நிரப்புவது என்று தெரியாமல் திணறி நிற்கிறார்,தந்தையவர்.
உணராமலே சில திருத்தங்களை கொண்டு சேர்ப்பிக்கும் காலம்,உணர்ந்த பின்னரும் சில திருத்தங்களை செய்து கொள்ள வழி விடாமல் போவது தான்,நிதர்சனம் போலும்.
●●●●●●●
அபினவ்வின் கதை..
அப்டியே ஒரு வாரம் போயிருக்கும்..அவள கடைசியா,அந்த டைம் கேன்டீன்ல பாத்தது தான்..நானும்,அவள மறந்து இருந்தேன்னு தான்,சொல்லனும்..
அன்னிக்கி ஈவ்னிங் எங்களுக்கு லெக்சர்ஸ் இருக்கல..ஈவ்னிங் லெக்சர்ஸ் இல்லங்குறதே,எங்களுக்கு ரொம்பப் பெரிய ரிலீஃப் தான்..
நானும் என் ஃப்ரெண்ட்ஸ் நாலஞ்சு பேரும்,கேன்டீன்ல உக்காந்து சாப்டுட்டு இருந்தோம்..நாங்க சாப்டுட்டு இருந்த டேபிள்ள இருந்து பாத்தா,கேன்டீக்கு யார் யார் வர்ராங்கன்னு நல்லா தெரியும்..
ஏன்னா அந்த டேபிள்,டோருக்கு சரியா முன்னாடி இருக்கும்..அப்டி என்டர் ஆகறவங்கள பாத்து,நாங்க ஏதோ கதக்க அப்டியே கத புதுசா வந்து இருக்குற ஜூனியர்ஸ் பக்கம் திரும்பிச்சு..
புதுசா பொண்ணுங்க வந்தா,பசங்களுக்குள்ள இந்த டாக் எல்லாம் நார்மல் தான..
“இந்த வருஷம் வர்ர ஜூனியர்ஸ்லயாச்சும் யாரயாச்சும் லவ் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகலாம்னு பாத்தா,வந்த யாருமே நம்மளுக்கு செட் ஆக மாட்டாங்க போல இருக்கே..”
பக்கத்துல இருந்த ரித்விக் சொல்ல,எனக்கு அவ்ளோ சிரிப்பு அவன் சொன்ன மாடுலேஷன்ல..எனக்கு வீட்ல பாக்கற பொண்ண தான் கட்டிக்கனும்னு அப்போ இருந்தே ஒரு தாட்..அதனால,அந்த டைம் காலேஜ்ல யாரயாச்சும் பாத்து லவ் பண்ணனுங்குற ஐடியா எனக்கு இருக்கல..
“இந்த பேட்ச் இல்லன்னா அடுத்த பேட்ச்..” நா சிரிச்சு கிட்டே சொல்ல,அவன் மொறச்சி தள்ளிட்டான்..
“உனக்கென்னடா நீ நல்ல ஸ்மார்ட்டா இருக்க..பாக்கற பொண்ணெல்லாம் உன் பின்னால வரும்..எனக்கு அப்டியா..?” அவன் திட்டும் போதே,”இந்தா ஜூனியர்ஸ் வர்ராங்க..நீ ஒரு பொண்ண பாத்து சொல்லு..நாங்க என்னவாச்சும் பண்ணி சேத்து வக்கிறோம்னு..” முன்னாடி இருந்த என்ற மத்த ஃப்ரெண்டு வாக்குக் கொடுக்க,எங்க பார்வை அப்டியே டோர் பக்கம் போச்சு..
அங்க நாலஞ்சு பொண்ணுங்களோட,வந்துட்டு இருந்தா,அவ..
காலர் வச்சு தச்ச,முக்கா கை சுடிதாரு..வீ ஷேப்ல போட்டு பின் பண்ணியிருந்த துப்பட்டா..நெத்தில சின்னதா ஒரு கறுப்பு பொட்டு..
மாஸ்க் போட்டு இருந்தா..ப்ராக்டிகல்ஸ்கு யூஸ் பண்ற லேப் கோர்ட் கைல தொங்கி கிட்டு இருந்தத பாத்ததுமே புரிஞ்சு போச்சு,அவ டிஸெக்ஷன் முடிச்சிட்டு வர்ரான்னு..
ஏன்,அவளை என் பார்வை தழுவியது என்று எனக்குத் தெரியவில்லை.திரை தப்பியது அவள் விழிகளும் நுதலும் மட்டுமே என்றிருந்த போதிலும்,அவையே போதுமாய் இருந்தது,அது அவள் என்று எனக்கு உணர்த்தி நின்றிட.
அவளுமே,என்னை கண்டு கொண்டிருப்பாள்,போலும்.மேடு பள்ளங்களுடன் சுருங்கி நின்ற புருவங்களுடன்,இடுங்கிய விழிகள் என் வதனத்தில் குவித்த பார்வை,அப்படித் தான் எனக்கு உணர்த்திச் சென்றது.
மூன்று நொடிகளுக்கு மேலாய்,என்னில் நிலை கொண்ட பார்வை,அடுத்து சட்டென முறைப்பாக மாறிப் போக,அவள் விழிகள் கண நேரத்தில் அலட்சியம் காண்பித்து விட்டு திரும்பிக் கொண்டன.
யாரென யோசித்து,என்னை கண்டு கொண்டு விட்டு,அவள் காட்டிய அலட்சியம்,என்னுள்ளும் சிறு கோபத்தை விதைத்தது.
பின்ன,தெரியாம சேத்த வாரி எறச்சிட்டேன்..என் தப்பு தான்,ஆனாலும், அவ இவ்ளோ திமிர் காட்டக் கூடாதுன்னு எனக்குள்ள ஒரே கொடச்சல்..
நானும்,அவளை முறைத்துக் கொண்டேயிருக்க,அது உணர்ந்தாற் போல் அவள் பார்வை ஒரு நொடி என்னைத் தொட்டு விட்டு மீண்டது,அழுத்தம் நிரம்பி வழிய.
மின்னல் போல் ஒரு நொடிக்கும் குறைவான அவகாசமதில்,வெட்டிச் சென்ற அவள் பார்வையில், என் அசைவுகளை இசைவின்றி இடை நிறுத்தம் செய்யக் கூடிய அழுத்தம்.
“சாப்புர்ரா..என்ன பாத்து கிட்டு இருக்க..?” ரித்விக் தட்டவும் தான்,நா சுயத்துக்கே வந்தேன்..என்ன தான் சாப்பட்றத போல காட்டிக் கிட்டாலும்,அந்த அழுத்தம் என் மண்டய போட்டு கொடஞ்சி கிட்டே இருந்தது..
ஆர்வங்களை மட்டுமே கண்டிருந்த என் விழிகளுக்கு,அவள் அழுத்தம் வித்தியாசம் காண்பிக்க,அதுவே அவள் மீது என் ஆர்வம் விதைத்தெழ அடித்தளமாய்.
கேன்டீன்ல இருந்து வெளியே போற வர,அவ மாஸ்க கழட்டவே இல்ல..சாப்பிட்டு முடியுர வர,அடிக்கடி அவள என்னோட பார்வை கவனிச்சி கிட்டே தான் இருந்துச்சு..
“திமிரு புடிச்சவ..” அடிக்கடி அவள பாத்து நா திட்டி கிட்டே இருக்கேன்,மனசுக்குள்ள..என்னவோ,அவளின் அழுத்தம் எனக்கு ஒப்பவேயில்லை..
அப்றமா…
●●●●●●●
“சார் நைட் பார்ட்டி இருக்கு..கிருஷ்ண மூர்த்தி சார் இன்வைட் பண்ணி இருக்காரு..அவரோட டுவென்டி பிஃப்த் வெட்டிங்க் அனிவர்ஸரி..கண்டிப்பா வர சொன்னாரு..”
எங்கே,பையனுக்கு மறந்திருக்க கூடும் என்கின்ற எண்ணத்தில்,நினைவு படுத்தினான்,வருண்.
“ஞாபகம் இருக்கு!” என்று கூறிய படி,வருணிடம் சில வேலைகளை ஒப்படைத்து விட்டு,தானுமா மடிக்கணினியில் ஆழ்ந்து போனான்.
நேரம் ஆறுமணியைத் தாண்டிட,பையனே எழுந்து கொண்டதும் வருணின் விழிகளில் மெல்லிய அதிர்வு தோன்றி மறைந்தது.அவன் இப்படியெல்லாம்,நடந்து கொள்ளும் ஆள் இல்லையே.
“செவன்கு தான..?” கைக்கடிகாரத்தை சரி செய்தவாறு,வருணிடம் கேட்க,”ஆமா சார்” என்றவனும்,அவனுடன் கிளம்ப எழுந்து கொண்டான்.
வீட்டுக்குச் சென்று குளித்து உடைமாற்றி விட்டு,கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குச் செல்வதே,அவன் திட்டம்.மாளிகை போன்ற வீடு அவரது.அங்கு தான்,பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சாம்பல் நிற ஷர்ட்டும் கறுப்பு நிற ப்ளேசருமாய் வந்தவனின் ஆளுமை,நிச்சயம் காண்போரின் கவனத்தை ஒரு கணம் களவாடிக் கொள்ளும்.
“ஸ்மார்ட்டா இருக்கீங்க சார்!” நாவை அடக்க முடியாமல்,வருண் கூறியே விட,அப்படியா என்பது போல் ஒற்றைப் புருவம் உயர்த்தி பாவம் காட்டியவனோ,பெருவிரல் கீழ்த்தாடையில் ஊன்ற,ஆட்காட்டி விரலால் பக்க நுதலில் மெல்லமாய் கீறி,பக்கமாய் விரல் நுழைத்து கேசத்தை பின்னே தள்ளினான்,கொஞ்சம் கழுத்தை சரித்து.
“கம்ப்ளிமன்ட் கொடுத்த என்ன சொல்லனும்..” முணுமுணுத்துக் கொண்டே,வண்டியை நகர்த்தினான்,வருண்.அவனின் உர்ரென்று முகபாவம் புரிந்த போதிலும்,இதழ் பிரித்து எதுவும் கேட்கவில்லை,பையன்.
“சார்,பொக்கே ஏதாச்சும்!” அவன் கேட்கும் முன்னமே,”ம்ம்” என்று தன் சம்மதத்தை பையன் தெரிவித்திருக்க,ப்ளோரிஸ்ட் ஷாப் ஒன்றின் முன்னே வண்டியை நிறுத்தினான்,பையனின் பாவப்பட்ட பி ஏ.
அவர்களின் நேரம் போலும்.அதை மூடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க,வேக நடையுடன் உள்ளே நுழைந்த வருணோ,ஒரு பொக்கேயை கையில் எடுத்து, காசை நீட்டும் முன்பே,”இதுக்கும் சேத்து பில் போடுங்க” என்று தன் கார்டை தந்திருந்தான்,பையன்.
அவன் கைகள்,ஒரு மஞ்சள் ரோஜா நிற பூங்கொத்தை,அழகாய் ஏந்தி இருந்தன.
வருணோ,அவனை எதிர்ப்பார்த்திடவில்லை.”எங்க இருந்தாலும் இவரு கண்ணுக்கு தெரிஞ்சிரும்..” அவன் கேட்கும் படி கூறிக் கொண்டே,முன்னே நடந்திட,அடுத்த சில நொடிகளில் காரில் ஏறி இருந்தனர்,இருவரும்.
வண்டியைக் கிளப்பிய வருணோ பையனைப் பார்த்திட,அவனின் கவனம் முழுக்க,அந்த ரோஜா மலர்களின் தான்,நிலைத்திருந்தது.விழிகள் அவற்றை விட்டு அசைய மறுத்திட,அதை சுழற்றி சுழற்றி பார்த்திருந்தான்.
அவ்வப்போது,நடந்தேறுவது என்பதால்,வருணுக்கு அதிர்வேதும் இல்லை.ஆனால்,எப்படித் தான் இந்த மஞ்சள் ரோஜா நிறப் பூங்கொத்துக்கள் இவன் கண்ணில் மட்டும் சிக்கிக் கொள்கிறதோ என்று தான்,அவனுக்கு புரியவேயில்லை.
கடைக்குள் நுழைந்த அவன் பார்வை வீச்சிலேயே,அது விழாதிருக்க,காரில் இருந்தே அதைக் கண்டு கொண்டு வந்திருந்தானே.
ஒற்றைக் கரம்,பூங்கொத்தை ஏந்தியிருக்க,மறு கரத்தின் விரல்களோ,மலரிதழ்களை அளவில்லா மென்மையுடன் வருடி விட்டன.
அத்தனை மிருதுவாய்,அவன் தொடுதல் நிகழ,நீண்ட செயலாக்கம் அழகின் விதிகளை மீறும்,ஒரு அழகியல்.பூவிதழுக்கும் வலிக்காத தொடுதல் என்பதற்கு,அவன் தீண்டல் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது.
அதை வருடும் போதே,அவனுக்குள் மெல்லிய சிலிர்ப்பலைகள். நினைவுகளின் நிழலில் இதழோரம்,கண்ணுக்கே தெரியாத புன்னகைத் துளியொன்றும் தேங்கி நின்றது.
பூங்கோத்தை அவன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தவன்,சற்றே சிரம் தாழ்த்திட,மலரிதழ்கள் அவனின் வதனத்தை ஆங்காங்கே,தழுவி நின்றது.முகம் புதைக்கவில்லை,ஆயினும்,மலரிதழ்கள் அவன் வதனம் தீண்டிட,உயிர் மறிக்க சிதறிப் போனான்,பையன்.
பூவிதழின் மென்மையுடனும் ஜீவன் தொடும் அதன் வாசத்துடனும்,உயிர்ப் பற்றியிருக்கும் அவள் நினைவுகளும் ஒன்று சேர்ந்து கொள்ள,
உயிரின் ஈற்றில் மீன்னல் கீற்றுக்கள்,வெட்டி வெட்டிச் சென்றன.
குறுகுறுத்த இதயத்துடன்,விரிந்த புன்னகையை இதழோரம் சுமந்து,முழுவதுமாய் அவன் சிறுக சிறுக் சிதைந்து கொண்டிருந்தான்,அந்த நொடிகளில்.
தொடரும்.
🖋️அதி..!
2026.05.21
