Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இமை மூடும் விழியும் நீ

இமை மூடும் விழியும் நீ-1.2

அதற்காக அழுது கரைபவள் அல்ல.அவர்களுடன் மல்லுக்கு நின்று அவர்கள் சொன்னது தவறென்று ஒப்புக் கொள்ளும் வரை விடமாட்டாள்.

இதுவே எதிரில் இருப்பவர் கடைசி வரை தான் சொன்னது தப்பு என்று ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதுவே அவர்களை அவள் கடைசியாக பார்ப்பது.அவர்களை தன் வாழ்க்கையில் இருந்து அறவே ஒதுக்கி விடுவாள்.

தான் தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பவள்,தன் மேல் தவறு இல்லாத பட்சத்தில் தான் செய்தது சரி என்று அவளுக்கு தோன்றினால் அவள் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தை ஒருபோதும் வராது.

“ஆஷி !அண்ணா வருத்தத்துல பேசுறாரு.பெருசு படுத்தாம உள்ள போ” சையத் மீண்டும் சொன்னார்.



Advertisement

“சையத் இவளையும் நம்ப முடியாது.ரெண்டு பேரும் ஒன்னாவே தானே எல்லாம் செய்வாங்க.அடுத்து இவ யார்கூட போக தயாராகிட்டு இருக்கான்னு தெரில” மகளின் துரோகத்தில் மூளையை கோபம் ஆக்கிரமிக்க,தம்பி மகளின் மீது வார்த்தை கங்குகளை விட்டெறிந்தார் அப்துல்.

கோபத்துடன் ஆஷியா பதில் பேசும் முன் இடையிட்டது இன்னொரு குரல்.

“கோபத்துல நம்ம வீட்டு பொண்ணை நாமளே கீழே இறக்கி பேச கூடாது மாமா.ஆஷி அப்படிப்பட்டவள் கிடையாது.நதீராவும் ஆஷியும் ஒன்னாவே வளர்ந்து,ஒன்னாவே இருந்திருக்கலாம்.ஆனா நதீரா செஞ்ச தப்பை ஆஷி செய்யவே மாட்டா.ஏன் நதீரா இப்படி செய்ய போறான்னு ஆஷிக்கு தெரிஞ்சிருந்தா உடனே நம்ம கிட்ட சொல்லி இருப்பா.நிஜமாவே நதீரா காதலிக்குற விசயம் ஆஷிக்கு தெரிஞ்சிருக்காது மாமா.நிதானம் இல்லாம வார்த்தையை விட்டு நிம்மதியை தொலைச்சுடாதீங்க”

Advertisement

அவனின் அழுத்தமான பேச்சில் அந்த இடமே ஓரிரு நிமிடங்கள் அமைதியானது.

Advertisement

இதுவரை கொந்தளித்த ஆஷியாவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அமைதி பெற்றது அந்த வார்த்தைகளைக் கேட்டு!

அந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் அர்மான்.அவளின் ஒன்று விட்ட அத்தை சாஹிராவின் இளைய மகன்.

மகளுக்காய் பேசிய சகோதரியின் மகனின் தோள் மீது ஆதரவாய் தட்டிய சையத் இன்னும் கோபத்தில் நின்றிருக்கும் அண்ணனை அமர வைத்து தண்ணீர் அருந்த வைத்தார்.

Advertisement

தம்பியை பார்த்ததும் அவன் மகளை பேசியும் தனக்காக தம்பி நிற்பது கண்டு, தன் கோபத்தை அடக்கி பெரிய மூச்சுக்களாக விட்டு தன்னை சமன் செய்ய முனைந்தார்.

பெண்கள் சென்ற வேலை என்னவாயிற்று என்ற கேள்வியை முகத்தில் சுமந்திருப்பதை பார்த்த சையத் பெருமூச்சுடன் நடந்ததை சொன்னார்.

“நதீரா அந்த ஆகாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா.நாங்க கூப்பிட்டதுக்கு வர மாட்டேன் சொல்லிட்டா”

ராபியா அழுதவாறே சரிந்து தரையில் அமர ஹமீதா அவருடன் அமர்ந்து அவரைத் தேற்றினார்.

“அழு!நல்லா அழு! எப்படி வந்து நின்னா தெரியுமா உன் பொண்ணு?கழுத்துல தொங்க தொங்க தாலி கட்டிக்கிட்டு,நெத்தில பொட்டு,குங்குமம் வச்சுக்கிட்டு வந்து நிக்கிறா.யாரோ மாதிரி தெரியுறாடி அவ என் கண்ணுக்கு! இனி அவ யாரோ தான்‌.என் பொண்ணே இல்ல.நல்லா ப்ளான் பண்ணி தான் எல்லாம் செஞ்சு இருக்கா.நம்பிக்கை துரோகி” மூச்சு வாங்க கத்தினார் அப்துல்.

அவரின் தந்தை நசீர் சோர்ந்த முகத்துடன் அமர்ந்து விட்டார்.ஆசையாய் வளர்த்த பேத்தி செய்த செயல் அந்த முதியவரை நோகடித்து விட்டது.

வேற்று மத பையனுடன் பேத்தி திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர் பெருந்தன்மையானவர் அல்ல.

அதற்காக அவர்களை அடித்து,துன்புறுத்தவும் மனம் இல்லை.

பேத்தியை தன்னுடன் வருமாறு அவரும் அழைத்துப் பார்த்தார்.அவள் வர மாட்டேன் என்றவுடன் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார்.

அவரின் மகன்களும் அதையே செய்தனர்.இருபத்து நான்கு வருடம் பொத்தி வளர்த்த மகளுடனான உறவு வெறும் நான்கே நாட்களில்,நான்கு மணி நேரத்தில் முடிந்து விட்டது.

“இனி அவ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கவே கூடாது.மக பாசத்துல அவ கூட பேசுனேன்னு தெரிஞ்சது,இப்போ அவளை தான் ஒதுக்கி வச்சேன்.அடுத்து உன்னையும் ஒதுக்கி வைக்க வேண்டி வரும்” ஆத்திரமாய் உரைத்தவர் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

அண்ணனை சமாதானம் செய்ய சையதும் பின்னே சென்று விட மற்ற ஆண்கள் ஹால் சோபாவில் அமர்ந்தனர்.

ஆஷியா தாதிமாவை கவனிக்க உள்ளே சென்று விட,அவள் செல்லும் வரை அவளை தொடர்ந்து அர்மானின் பார்வை.

அதனை பார்த்த ஹைதர் அவன் தோள் தட்டி ‘அடக்கி வாசிடா’ என்பது போல் பார்த்தான்.

அவனை பார்த்து புன்னகைத்த அர்மான் கண்கள் சேமித்த காதலியின் தோற்றத்தை மனதில் இருத்தி பார்த்தான்.

ஆஷியா! அவளின் மேல் ஆசை, காதல்,அன்பு எல்லாம் அர்மானுக்கு உண்டு.

ஆனால் அவளிடத்தில் அதனை அவன் வெளிப்படுத்தியதில்லை.காரணம் அவள் அவனிடம் அத்தனையாய் உறவு பாராட்டியதில்லை.

நதீரா கூட அவனிடம் தோழமையாய் பேசுவாள்.ஆனால் ஆஷியா பார்வைக்கு கூட பஞ்சம்.

ஆஷியாவிற்கு அர்மான் உறவினன் அவ்வளவே!ஆனால் அர்மானுக்கு அவள் அவனுக்கு உற்றவள்.

அர்மானின் நேசம் ஹைதர் அறிவான். ஆஷியாவின் எண்ணம் என்னவென்பது அறியாமல் ஹைதர் அர்மானின் நேசத்தை ஆதரிக்காமல் இருக்கிறான்.

எப்பொழுதாவது அர்மான் இப்படி காதல் பார்வை வீசும் பொழுது மட்டும் அடக்கி வைப்பான்.

ஆஷியாவிடம் காதல் சொல்ல நாள் பார்த்து, தயக்கம் கொண்டே இத்தனை காலம் கடத்தி விட்டான்.

இப்பொழுது நதீராவின் பிரச்சனையில் இன்னும் எத்தனை காலம் தன் காதல் சொல்லாமலே தள்ளிப் போகுமோ என்று எண்ணும் பொழுதே அவன் முன் தேநீர்‌ கோப்பை அடங்கிய தட்டு நீட்டப் பட்டது.

அதை வாங்கி குடித்தவன் அவர்களிடம் விடை பெற்று தன் வீட்டிற்கு சென்றான்.

“ஹைதர் அந்த பையன் நல்லவனான்னு விசாரிச்சியாடா” மெல்லிய குரலில் வினவிய அன்னையை முறைத்தான் ‌ஹைதர்.

“பெத்த மனசு தவிக்குதுடா.அவ தப்பான இடத்துல மாட்டியிருக்க கூடாதுன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது.என்ன செய்ய சொல்ற” என்ற அன்னையை இயலாமையுடன் பார்த்தவன்

“அர்மானோட ஃப்ரெண்ட் ஊரு தான் அந்த ஆகாஷோட ஊரு.அதுனால தான் அவனையும் அழைச்சுட்டு போயிருந்தோம். விசாரிச்ச வரை நல்ல பையனா தான் தெரியுறான்.அவங்க அப்பாக்கு அந்த ஊருல வசதி,செல்வாக்கு அதிகம்.அவனோட அண்ணனுக்கே நூறு பவுனோட தான் பொண்ணை கட்டிட்டு வந்தாங்களாம்.இவனும் வீட்டுக்கு அடங்குன பையன்னு தான் சொல்றாங்க.ஆனா எந்த தைரியத்துல இப்படி ஒரு வேலை செஞ்சான்னு தெரியல”

“இவளுக்கு ஏம்மா புத்தி இப்படி போச்சு.ஒரே மதத்துக்குள்ள காதல் கல்யாணம்னாலே ஆயிரம் பிரச்சனை வரும்.இங்க ரெண்டு பேரும் வேற வேற மதம்.சாப்பிடுற சாப்பாட்டுல இருந்து போட்டுக்குற துணி வரை அத்தனைலயும் வேறுபாடு தான்.இவளால எல்லாம் சமாளிக்க முடியுமா?அங்க அவங்க அவளை எப்படி நடத்துவாங்கன்னு வேற தெரியல.காதல் குடுத்த தைரியத்துல எங்க கூட வர மாட்டேன்னு சொல்லிட்டா.அங்க என்ன பண்ண போறான்னு தெரில.அல்லா தான் அவளுக்கு துணையிருக்கனும்” என்றவன் வேதனையுடன் எழுந்து சென்றான்.

அவன் பேசுவதை எல்லாம் கேட்ட ஆஷியாவிற்கு நதீராவின் தற்போதைய நிலை என்ன என்று அறிய மனம் தவித்தது.

உடன் வளர்ந்தவள் ஆயிற்றே.எப்படியோ போ என்று விட முடியவில்லை.

அவளை தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் அவளின் அலைபேசியையும் அவளின் சென்னை வீட்டிலேயே விட்டு சென்று இருந்தாள்.

சகோதரியின் தற்போதைய நிலை என்ன?என்ற கவலையுடன் தனது வேலைக்காக மடிக்கணினியை உயிர்ப்பித்தாள் ஆஷியா.

**************

அப்துலின் அறையில்

“ சையத்,நதீராவை இங்க கொண்டு வரனும்.அதுக்கு என்ன செய்யறதுன்னு யோசி” என்ற அண்ணனை குழப்பமாய் பார்த்தார் சையத்.

“என்னடா வெளில அவ உறவே வேணாம்,வீட்டுல கால் வைக்க கூடாதுன்னுலாம் சொல்லிட்டு இப்போ இப்படி பேசறானேன்னு பார்க்குறியா?” என்றவர் எழுந்து அறைக்குள்ளே நடக்க ஆரம்பித்தார்.

“நான் அப்படி பேசலைன்னா அடுத்து உள்ளவங்களும் நாம காதலிக்கலாம்,வீட்டை எதிர்த்து கல்யாணம் செஞ்சுக்கலாம்,யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நினைப்பாங்க.அதுக்கு தான் அப்படி சொன்னேன்”

“ இன்னும் எனக்கு அவ மேல கோபம் தான்.ஆனா அவளை அவன் கூடவே வாழட்டும்னு எல்லாம் விட முடியாது.என் கவுரவம் இதுல அடங்கி இருக்கு.நாளைக்கி கோர்ட்டு பக்கம் போனா இதுநாள் வரை என் பின்னாடி பேசுனவன் எல்லாம் என் முன்ன நின்னு நக்கலா சிரிப்பானுங்க.பேசுவானுங்க.அதுக்கு இடம் தரக்கூடாது.அப்துல் பொண்ணு ஓடிப்போனா ஆனா திரும்ப அவன்கிட்டயே வந்துட்டான்னு தான் பேசனும்.அவளை நம்ம இங்க கூட்டிட்டு வரனும்”

“கூட்டிட்டு வந்து?” அழுத்தமாய் கேட்டார் சையத்.

“அவளை கொன்னுருவேன்னு நினைச்சியா சையத்? இத்தினி வருசம் அருமை பெருமையா வளர்த்தது அவ தப்பு செஞ்சா வெட்டி போடுறதுக்கு இல்ல.அவளை இங்க கூட்டிட்டு வந்து நம்ம மதத்துலயே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பேன்.ஆனா என்ன ஆனாலும் வேத்து மதத்துகாரனோட அவளை வாழ விட மாட்டேன்.அவளை இங்க கூட்டிட்டு வரதுக்கான வழியை யோசி”

“அவளோட வாழ்க்கை இந்த வீட்டு மத்த பிள்ளைங்களுக்கு பாடமா இருக்கனும்.காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாம் சுமூகமா இருக்கும்ன்ற நினைப்பு அவங்களுக்கு வரக்கூடாது.காதல் கல்யாணம் நிலைக்காது,பெத்தவங்க பார்த்து செஞ்சு வைக்குற கல்யாணம் தான் நிலைக்கும்னு அவங்க மனசுல பதியனும்”

*************
மன்னார்குடி

ஆகாஷின் வீட்டில் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தாள் நதீரா.பயத்துடன் அந்த அறையின் கதவை நோக்கினாள்.

ஆகாஷ் வரவேயில்லை.அவள் குடும்பத்து ஆட்கள் வந்து சண்டையிட்டு சென்ற போது அவனை கடைசியாக பார்த்தது.

இந்த அறையில் அவளை விட்டது கூட அந்த வீட்டின் வேலையாள் தான்.மாலை முடிந்து இரவு ஆன பின்னும் ஆகாஷ் அவளிடம் வரவில்லை.

அதை எண்ணி தான் பயத்துடன் இருந்தாள்.இப்படியெல்லாம் அவளை ஆகாஷ் தனித்து விட்டதில்லை.

அவன் மேல் எப்படி காதல் வந்தது என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.ஆனால் வந்த பின் அவனைத் தாண்டி அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

இருவருக்கு இடையில் இருக்கும் தூரங்களும் பெரிதாய் தெரியவில்லை.ஆகாஷ் மட்டுமே அவளை முழுதாய் ஆக்கிரமித்திருந்தான்.

அவன் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டதாய் அவன் சொன்னதும்,அவள் நிறைய எல்லாம் யோசிக்கவில்லை.

அவள் வீட்டிலும் இவள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.

எனவே தான் வீட்டைத் துறந்து அவனுடன் சென்று அவனைத் திருமணம் செய்தாள்.

அவள் கழுத்தில் தொங்கும் தாலியும்,நெற்றியில் வசிக்கும் குங்குமமும் அவனின் தோழர்கள் இருவர் மட்டுமே நடந்த திருமணத்திற்கு சாட்சி.

திருமணம் முடிந்தவுடன் கேரளாவில் இருக்கும் ஆகாஷின் நண்பன் வீட்டிற்கு சென்றார்கள்.

இவர்கள் வேலையை ஏற்கனவே விட்டு விட்டார்கள்.புதிய வேலை தற்காலிகமாக மும்பையில் தேடியும் கொண்டார்கள் ‌.

அடுத்த சில மாதங்களில் வெளிநாடு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து செட்டிலாகவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அதற்கு முன் கேரளாவிலுள்ள நண்பன் வீட்டிற்கு சென்று வரலாம் என்று அழைத்து சென்றான் ஆகாஷ்.

அந்த நண்பன் தான் இவர்களுக்கு வெளி நாட்டில் வேலை வாங்கி தர ஏற்பாடு செய்து வருபவன் என்பதால் இவளும் மறுப்பு சொல்லாமல் சென்றாள்.

கேரளாவின் காலநிலை இவர்களின் காதலின் நிலையை கணவன் மனைவி உறவுக்குள் இழுத்து சென்றது.

இரவு முடிந்து விடியலில் ஆகாஷின் தாயிற்கு உடல்நிலை சரியில்லை என்று அந்த கேரள நண்பனுக்கு தகவல் வர ஆகாஷ் உடனே கிளம்பி விட்டான் மன்னார்குடிக்கு.

ஆகாஷ் தாயின் மேல் மிகுந்த அன்பு கொண்டவன்.அந்த அன்பு தான் அவனை மன்னார்குடிக்கு இழுத்து வந்தது.

ஆகாஷின் மேல் நதீரா வைத்த அன்பு அவளையும் அங்கே இழுத்து வந்தது.

ஆகாஷிடம் கோபப்பட்டு பேசிய அவன் குடும்பத்தார் இவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

அதற்குள் இவள் குடும்பமும் வந்து விட இரு பக்கமும் நிறைய பேசினார்கள்.ஆகாஷின் தந்தை உங்கள் மகள் வந்தால் அழைத்து செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.

இவள் வரமாட்டேன் என்று விட அவள் வீட்டினர் கோபத்துடன் கிளம்பி விட இவள் அந்த அறையில் தனித்து விடப்பட்டாள் ஆகாஷ் இன்றி!

தற்காலிக தனிமை நிரந்தரமாகி விடுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!