Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரும்பில் ஓர் இதயம்

இரும்பில் ஓர் இதயம்…..1

இரும்பில் ஓர் இதயம்….1

“சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா….”என்று இளையராஜாவின் குரல் அந்த பேருந்து முழுவதும் இசைந்தபடி இருந்தது.அந்த பாடல் வரிகளில் அந்த பேருந்தில் இருந்த அனைவருமே லயித்தபடி இருக்க ஒருவள் மட்டும் தன் கையில் வைத்திருந்த பையை இறுக பற்றியபடி கதவின் வழியே பேருந்தின் பின் யார்ரேனும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே வந்தாள்.அவளின் உள்ளமோ மிதமிஞ்சிய பயத்தில் நடுங்கியபடி இருக்க அப்போது அவளின் கைகளில் அகப்பட்டது கழுத்தில் புதிதாக வந்திருந்த மஞ்சள் கயிறு.அதை பற்றியவள் நிமிர்ந்து அருகில் அமர்ந்திருந்தவனை பார்த்தாள் அவனோ எந்த பதட்டமோ,பயமோ இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“எப்படி இவனால் இப்படி உறங்க முடிகிறது….”என்று நினைத்தவள் பின்,அவனை மெல்ல ஆராய்ந்தாள் ஆறடி உயரம்,மாநிறத்திற்கு சற்று குறைவான நிறம்,அடர்ந்த மீசையின் கீழ் அழுத்தமான உதடுகள் லேசான தாடி இந்த வெளி தோற்றம் தான் அவள் கண்டது ஆனால்,



Advertisement

“இவன் யார்….எதற்காக தனது ஊருக்கு வந்தான்…..இவனை நம்பி எப்படி இவனுடன் இவனுடன்….”என்று நினைத்தவளுக்கு கண்ணீர் பெருக கடைசியாக அவளின் சித்தி கூறிய வார்த்தைகளும் சேர்ந்தே நினைவுக்கு வந்தன,

“சித்தி இவரை எனக்கு யாருனே தெரியாது….நான்….நான்…”என்று ஏதோ கூற வாய் திறந்தவளை தடுத்து நிறுத்திய பார்வதி,

“மிது கண்ணு…..இங்கிருந்து போக இது தான் வழி….நான் சொல்லுறதை கேளு….அந்த பையனை கட்டிக்கிட்டு இந்த இடத்திலிருந்து தப்பிச்சி போயிடுடா….இல்ல அந்த பாண்டி என்னவேனா செய்வான்டா….என்னால உனக்கு எதுவும் செய்ய முடியலையேனு கடவுள்கிட்ட வழிகேட்டிருந்தேன்….அதான் அவரே இந்த பையனை உனக்குனு அனுப்பியிருக்காரு…..அந்த பையனோட போயிடுடா…..”என்று தன்முன்னே கலங்கி கைகூப்பி நின்ற தன் சித்தியின் வார்த்தைகள் தான் அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தது.

Advertisement

வண்டி மதுரையை தான்டி விட மிருதுளாவிற்கு இப்போது தான் சற்று மனதில் ஆசுவாசம் ஆனது போல் இருந்தது.ஆனால் எதிர்காலம் அதை பற்றி நினைக்கையில் தன் போல் மீண்டும் அச்சம் பிறக்க கண்களில் கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்தது.தன் போல் அவளின் நினைவுகள் அவள் கடந்து வந்த பாதையை நியாபகப்படுத்தியது.

Advertisement

மதுரையில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவள் தான் மிருதுளா.மிருதுளாவின் குடும்பம் மிகச்சிறியதே கந்தசாமி,வைதேகி இவர்களின் ஒற்றை வாரிசு மிருதுளா.கந்தசாமி கடின உழைப்பாளி தனக்கென்று இருந்த நிலத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்தை நல்ல முறையிலேயே நடத்தி வந்தார்.கந்தசாமிக்கு குருசாமி என்ற தம்பியும் உண்டு அண்ணன் உழைப்பாளி என்றால் தம்பி ஊதாரி.ஆம் அவர் அடுத்தவர் உழைப்பில் தன் உடம்பை வளர்த்து கொண்டு இருப்பவர்.கந்தசாமி எவ்வளவோ முயற்சி எடுத்துபார்த்துவிட்டார் தன் தம்பியை திருத்த ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது.

மிருதுளாவின் வாழ்வும் நிம்மதியாக தான் சென்று கொண்டிருந்தது அவளின் பதினாறாம் வயது வரை.அவளும் தாய்,தந்தையின் அரவணைப்பில் நன்றாகவே இருந்தாள்.மிருதுளா பன்னிரெண்டாவது படிக்கும் போது கந்தசாமியும்,வைதேகியும் ஒரு விபத்தில் இறந்துவிட,மிருதுளாவின் வாழ்வு தலைகீழாக மாறிப்போனது.மிருதுளாவின் பொறுப்பை  குருசாமியின் தலையில் விழுந்தது.குருசாமிக்கு அண்ணன் மகள் என்ற பாசமெல்லாம் கிடையாது அவரை பொறுத்தவரை பணம் தான் அனைத்தும்.மிருதுளாவை அவர் வைத்துக் கொள்ள காரணமும் அதுவே தனது அண்ணன் விட்டு சென்ற நிலத்தை தனது பெயருக்கு மாற்றவே அவர் மிருதுளாவை தன்னுடன் வைத்துக் கொண்டார்.

முதலில் மிருதுளாவின் பள்ளி செலவு அதிகம் என்று அவளை பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு மாற்றியவர் தன் மகளை வெளி இடத்தில் படிக்க வைத்தார்.மிருதுளா பன்னிரண்டாம் முடித்தவுடன் தன்னிடம் மேல் படிப்புக்கு பணம் இல்லை என்று கூறி அவளை தன்னுடன் வயல் வேலைக்கு அழைத்துக் கொண்டார்.கொஞ்சம் கொஞ்சமாக மிருதுளாவின் ஆசைகள்,கனவுகள் எல்லாம் கரைய தொடங்கியது.

Advertisement

குருசாமியின் மனைவி பார்வதி மிருதுளாவை நன்கு பார்த்துக் கொண்டாலும் அவராலும் கணவரை மீறி எதுவும் செய்ய முடியாது.அதையும் மீறி அவர் ஏதாவது பேசினால் குருசாமியின் கை தான் பேசும் அதனாலே பார்வதி மிகவும் கவனமாக தான் இருப்பார்.மிருதுளா ஒருவாறு தன் சித்தி,சித்தாப்பாவுடனா வாழ்வை வாழ தொடங்கி பத்து வருடங்கள் கடந்திருந்தது.

காலை வயல் வேலைக்கு சென்று மாலை வருபவள் வீட்டிலும் வேலைகள் செய்வாள் பார்வதி வேண்டாம் என்று மறுத்தாலும் கேட்கமாட்டாள் தன் நிலை என்ன என்று புரிந்து கொண்டவள் அதற்கு ஏற்றார் போல தான் இருப்பாள்.வயலில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை சரியாக குருசாமியிடம் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அதற்கும் அவளை வார்த்தைகளால் குதறிவிடுவார் அந்த மனிதர்.

அதனால் மிருதுளாவின் வாழ்வு எப்போதும் தன் சித்தப்பாவை சார்ந்து தான் இருக்கும்.இயல்பிலேயே மிருதுளாவிற்கு அதிர்ந்து பேச வராது மிகவும் சாது அதனால் அவளை தன் கை பொம்மை போல் வைத்துக் கொண்டார் குருசாமி.மிருதுளா இளைப்பாறும் இடம் பார்வதி மட்டுமே மனதெங்கும் பாசம் மட்டுமே வைத்துக் கொண்டு அவளுக்காக இருக்கும் ஒரே உயிர் அவர் மட்டுமே.இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்த மிருதுளாவின் வாழ்வை அழிக்கவே வந்தான் பாண்டி.

பாண்டி அந்த ஊரின் பெரிய தலைவரின் மகன்.அனைத்து கெட்ட பழக்கங்களையும் உடையவன்.அவன் கண்களில் மிருதுளா விழ குருசாமியை தனது கைகளுக்குள் போட்டுக் கொண்டு மிருதுளாவை பெண் கேட்க முதல் முறையாக பார்வதி வெகுண்டுவிட்டார்.

அந்த பெண்பித்தனுக்கு பெண்ணை தரமாட்டேன் என்று பார்வதி உறுதியாக மறுக்க அதன் விளைவு அடி வெளுத்துவிட்டார் குருசாமி.அப்போதும் பார்வதி அடங்காமல்,

“நீ அடிச்சே கொன்னாலும் பரவாயில்லை…ஆனா இந்த அந்நியாயம் நடக்க நான் விடவே மாட்டேன்….ச்சீ…நீ எல்லாம் என்ன மனுசன் உன் அண்ணன் பொண்ணு பாசம் வேண்டாம் நம்ம பொண்ணு வயசு தானய்யா மிதுகுட்டிக்கும் எப்படி எப்படி மனசு வந்தது உனக்கு இப்படி ஒரு சம்மதம் பேச….”என்று குருசாமி அடித்தில் கிழிந்த தன் உதட்டை துடைத்தபடி கேட்க,

“ஏய்….என்னடீ…என்னையவே எதிர்த்து பேசுற அளவுக்கு போயிட்டியா…உன்னை என்ன பண்ணுறேன் பாரு….”என்று ஆக்ரோஷத்துடன் கூறியவர் பக்கத்தில் இருந்த அம்மி கல்லை தூக்க,அதுவரை அனைத்தையும் நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா,

“சித்தப்பா….வேண்டாம் விட்டுங்க….நான் நீங்க சொல்லுறத கேட்குறேன்…சித்தியை ஒண்ணும் பண்ணிடாதீங்க….”என்று அவரின் காலை பிடித்து கெஞ்ச,

“ம்ம்…அது….சொல்லி வை உன் சின்னம்மாகிட்ட…இனி வாய் நீளுச்சு கொன்னு பொதைச்சிடுவேன்…..”என்றுவிட்டு சென்றுவிட,மிருதுளா வேகமாக தன் சித்தியிடம் நெருங்கியவள்,

“சித்தி…எந்திரீங்க….”என்று மெல்ல அவரை கைதாங்கலாக எழுப்ப அவரோ,

“என்ன காரியம் பண்ணிட்ட மிது கண்ணு….ஏன் இப்படி பண்ண….நான் செத்தா….”என்றவரின் வாயை வேகமாக மூடியவள்,

“சித்தி இப்படி எல்லாம் பேசாதீங்க….எனக்குனு இருக்குற ஒரே சொந்தம் நீங்க தான் நீங்களும் என்னை விட்டு போயிடாதீங்க…நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….இதுக்கு மேல சித்தப்பாக்கிட்ட இதை பத்தி பேசாதீங்க….”என்று கூறிவிட்டு அவரின் காயங்களுக்கு மருந்திட பார்விதியின் மனது இன்னுமே இறுகி தான் போனது .எப்படியேனு தன் பெண்ணை இந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றியே தீர வேண்டும் முடிவெடுத்தார்.

பார்வதி என்ன தான் மிருதுளாவை தன் கணவரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாலும் அதை எப்படி செயல்படுத்த என்று அவருக்கு புரியவில்லை.எப்போதும் கணவரின் சொல்படியே நடந்தவருக்கு திடீர் என்று அவரை எதிர்த்து நிற்கவும் மனதெங்கும் பயம் அப்பிக்கிடந்தது.அதோடு குருசாமி அவரை தன் கண்காணிப்பு வட்டத்திற்குள் வைத்துவிட எங்கே தன் பெண்ணை காப்பாற்ற முடியாமல் போகிவிடுமோ என்று அச்சம் இருந்தாலும் மிருதுளாவின் குழந்தை முகத்தை பார்த்தவுடன் அனைத்தும் மறந்து அவளை இந்த கயவர்களிடம் நான் விடமாட்டேன் என்ற உறுதியும் மனதில் ஆழமாக பதியும்.

பார்வதியின் வேண்டுதலை கடவுள் செவிமடித்தார் போலும் அவ்வூரின் கோவில் திருவிழா வர அந்த விழா முடிந்தவுடன் தான் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.இது தான் சமயம் என்று நினைத்த பார்வதி மிருதுளாவை ஊர் திருவிழா அன்று ஊரை விட்டு சென்றுவிட கூற அவளோ பயந்து நடுங்க,

“இங்க பாருடீ….இது தான் நமக்கு கடவுள் கொடுத்திருக்கிற கடைசி வாய்ப்பு இங்கிருந்து போயிடு இல்ல நான் இதை குடிக்க வேண்டியிருக்கும்….”என்று தன் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை காட்டினார் பார்வதி,

“சித்தீ….”

“என்னை என்னடீ பண்ண சொல்லுற உன்னை வளர்த்து அந்த கேடு கெட்டவன்கிட்ட கொடுக்குறத பார்க்குறதுக்கு பதிலா நான் சாவலாம்….என்னால இந்த பாவத்தை செஞ்சிட்டு உயிரோட இருக்கவே முடியாது…அதுக்கு தான் சொல்லுறேன்…நீ போயிடு….”என்று அவர் உடைந்து அழ,

“அய்யோ சித்தி….நான் போயிட்டா சித்தப்பா உன்னை விடமாட்டார் கொன்னுடுவார்….”என்று அவள் நடுங்க,

“மிது கண்ணு என்னை எனக்கு காப்பாத்திக்க தெரியும் நீ போயிடு ஆத்தா….இங்க இருக்காத இவனுங்க உன்னை சும்மா விடமாட்டானுங்க….நான் சொல்லுறத கேளு கண்ணு போயிடு….”என்று அவளின் காலிலேயே விழுந்துவிட,

“அய்யோ சித்தி நான் போயிடுறேன்…நான் போயிடுறேன்…ஆனா எனக்கு எங்க போகனு தெரியலையே….”என்று வெள்ளேந்தியாக அழுதவளை பார்க்க பார்க்க பார்வதியின் மனதும் நெஞ்சம் வலித்தது இருந்தாலும் இது கலங்கும் நேரம் அல்லவே,

“கண்ணு இப்படி நீ அழுதா…நான் என்ன செய்யுவேன்….அய்யோ கடவுளே ஏன் என்னை இப்படி ஒண்ணுத்துக்கும் உதவாதவளா படைச்ச….என்னால என் பிள்ளையை காப்பத்த முடியலையே….”என்று கதற,மிருதுளா அவரின் கண்ணீரை துடைத்தவள்,

“சித்தி நீ அழாத…நான் போறேன்…நீ உன்னை பார்த்துக்க…”என்று விட்டு அவர் கொடுத்த பொதியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாள்.ஆனால் விதி அவளை அந்த ஊர் எல்லையை கூட தான்டவிடவில்லை அவள் ஊர் எல்லை கோவிலில் பதுங்க அங்கு யாரோ அவளின் முகத்தில் எதையோ அழுத்த அந்த இடத்திலேயை மயங்கி சரிந்துவிட்டாள்.

மிருதுளா காலை கண்விழுத்ததே ஊர் பஞ்சாயத்தில் தான் அவளது சித்தி தான் அவளை தண்ணீர் தெளித்து எழுப்ப எழுந்தவளுக்கு தான் முதலில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை.அவள் திருதிருவென விழித்தபடி சுற்றி பார்க்க கூட்டத்தில் குருசாமி உக்கிரமாக அவளை முறைத்தபடி இருந்தார்.அவரின் பக்கத்தில் பாண்டி அதைவிட ரௌத்திரமாக நின்றான்.

மிருதுளாவிற்கு புரிந்து போனது தான் மாட்டிக் கொண்டோம் என்று.இனி என்ன செய்வது என்று மூளை மறத்து போயிருக்க அவளின் முகத்தை துடைத்த பார்வதி அவளின் காதில்,

“மிது கண்ணு இப்ப நான் என்ன சொன்னாலும் ஆமாம் மட்டும் சொல்லு போதும்….”என்று கூற மிருதுளாவிற்கு எதுவும் புரியவில்லை அவள் பிடிப்பட்ட பயத்துடன் நடுங்கியபடி நிற்க,

“நான் சொல்லுறதை கேளு கண்ணு….புரியுதா…”என்று மன்றாட,

“சித்தி…”என்று அவள் அழைக்கும் முன்,

“என்ன சொல்லுறா உன் பொண்ணு பார்வதி….”என்று ஊர் தலைவரின் குரல் அதிகாரமாக வந்தது.அவர் ஊருக்கு முன்னிலையில் தன் உண்மை முகத்தை காட்ட மாட்டார் நல்லவன் போர்வையில் வலம் வரும் வில்லன்.இப்போது தன்னை கடினப்பட்டு நிதானித்து கொண்டு கேட்டார்.ஏற்கனவே சாதாரண வீட்டில் பெண் எடுக்கிறோம் என்று கோபம் இருந்தாலும் ஊர் மக்கள் அவரின் புகழ்பாட அதுவே அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.இப்போது மிருதுளா செய்துள்ள காரியம் அவளை கொன்று போடும் அளவிற்கு கோபம் இருந்தாலும் அதனை அடக்கி கொண்டு நின்றார்.

“அது தானுங்க ஐயா….புள்ளையும் அந்த தம்பியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி இருக்காங்க…..அவங்க சித்தப்பா மேல ரொம்ப பிரியமுங்க அதான் பிள்ளை கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கு….ஆனா மனசுல இந்த பிள்ளை வச்சுக்கிட்டு அதால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியல அதனால நாம இருந்தா தான கல்யாணம்னு விஷத்தை குடிக்க பார்த்தது நான் தான் கடைசி நேரத்துல காப்பத்தி நாலு அரைவிட்டதுக்கு அப்புறம் என்கிட்ட விஷயத்தை சொல்லுச்சி…..நான் தான் அந்த பையனை கூப்பிட்டு வர சொன்னேன்….ஆனா இப்படி இந்த இரண்டும் கோவில் உள்ள மாட்டிக்கும்னு நான் நினைக்கலைங்க….”என்று தன்னால் முடிந்த மட்டும் ஒரு கதை உருவாக்கி பார்வதி கூற,மிருதுளாவிற்கு தன் சித்தி என்ன சொல்லுகிறார் என்றே புரியவில்லை.அவள் திருதிருவென முழிக்க அவளின் அருகே யாரோ நிற்கும் அரவம் உணர்ந்து அவள் நிமிர்ந்து பார்க்க நின்றிருந்தான் அவன்.

“அவங்க சொல்லுறது எல்லாம் உண்மை தான் நானும் இவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்….”என்று அவளின் தோள்களில் கையை போட்ட படி கூற,மிருதுளாவிற்கு தலை கிறுகிறுத்தது என்ன நடக்கிறது தன்னை சுற்றி என்று பரிதவிக்கும் விழிகளுடன் அவள் தன் சித்தியை பார்க்க அவரோ கண்களால் அவளிடம் எதுவும் சொல்லாதே என்று கூறிக் கொண்டிருந்தார்.

“நீ யாருப்பா உன்னை இந்த ஊரிலேயே நாங்க பார்த்தது இல்லை…அப்புறம் எப்படி என் பொண்ணை நீ பார்த்திருப்ப….அவ இந்த ஊர் தான்டி போனது இல்லை….”என்று குருசாமி சரியாக கணித்து கேட்க,பார்வதிக்கு திக் என்று இருந்தது ஆனால் அந்த புதியவனுக்கு அதெல்லாம் இல்லை போல,

“நான் வெளியூர் தான் அடிக்கடி இந்த ஊர் திருவிழாக்கு வந்திருக்கேன்….அப்ப தான் இவ எனக்கு பழக்கம் என்று அசராமல் கூற,

“அட அமாப்பா….போன திருவிழால கூட இந்த தம்பியை நான் பார்த்திருக்கேன்….”என்று ஒரு பெருசு கூற,

“யோவ் என்னங்கயா ஆளாளுக்கு ஏதோ கதை சொல்லுறீங்க….எனக்கு நிச்சியம் பண்ணியிருக்க பொண்ணு அவ அப்படியெல்லாம் இல்லை எனக்கு தெரியும்….முதல்ல இவனை அடிச்சி மரத்துல தொங்கவிடுங்க…இவன் வேற எதுக்கோ வந்திருக்கான்….இப்ப பொய் சொல்லுறான்….”என்று பாண்டி கூற,இவ்வாறு இரு தரப்பாக சண்டை ஏற்பட்டது.ஒரு தரப்பு பாண்டியின் பக்கம் நிற்க,மறுதரப்பு மிருதுளா பக்கம் நின்றது.

“அதெல்லாம் எவன்னே தெரியாதவனுக்கு என் பொண்ணை நான் தரமாட்டேன்….”என்று குருசாமி பெருங்குரல் எடுத்து கத்தியவர் வேகமாக மிருதுளாவை அந்த புதியவனிடம் இருந்து பிடித்திழுக்க முயல அவரின் ஒற்றை கைபிடித்தவன் மிருதுளாவை தன் பக்கம் இழுத்து நிற்க வைத்துக் கொண்டு,

“அதான் சொல்லுறேன்ல….அவ எனக்கானவ என் பொண்டாட்டி….”என்று கூற,அந்த கலவரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட பார்வதி அம்மன் கழுத்தில் இருந்த மாங்கள்யத்தை எடுத்து வந்து அந்த புதியவனிடம் நீட்டினார்.

“தம்பி இந்தாங்க தாலி…முதல்ல கட்டுங்க….அப்ப தான் இவங்க எல்லாம் அடங்குவாங்க….”என்று இது தான் சமயம் என்று பார்வதி அவனின் முன்னே தாலியை நீட்ட,

“ஏய் என்னடீ பண்ணுற…..இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்…உன்னை….”என்று பார்வதியை அவர் அடிக்க பாய,

“டேய்….”என்று பாண்டி அவனிடம் வருமுன் மிருதுளாவின் கழுத்தில் தாலியை கட்டி முடித்திருந்தான் அவன்.அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் முடிந்திருந்தது.குருசாமியும்,பாண்டியும் இருவரையும் கொலைவெறியுடன் பார்த்து கொண்டிருக்க இது எதையும் சட்டை செய்யாமல்,

“இப்ப நான் என் பொண்டாட்டியை என் கூட கூட்டிக்கிட்டு போகலாம் தான….இல்ல யாராவது பிரச்சனை பண்ணீங்க….நான் போலீஸ்க்கு போக வேண்டியது வரும்….”என்று கூற ஊர் தலைவர் முதற்கொண்டு அனைவருமே அமைதியாகிவிட்டனர்.பின்னே போலீஸ் என்று போனால் அவர்களின் தவறுகள் வெளிவந்துவிடுமே.அவனும் அது தெரிந்து தானே போலீஸ் என்ற வார்த்தையை உபயோகித்தது.இதோ அவன் நினைத்தபடி மிருதுளாவை அவர்களே அனுப்பி வைத்துவிட்டனர்.அவன் யார் என்றே தெரியாமல் அவனுடன் தன் வாழ்வும் பிணைந்துவிட இது தான் தனக்கு விதிக்கப்பட்டது என்று அவள் நினைத்து பயணிக்க ஆனால் இனி தான் அவளின் வாழ்வில் பல இன்னல்கள் ஆரம்பிக்க போகிறது என்று அவள் அறியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!