Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-13

     ஆதவ் கிருஷ்ணனை நெஞ்சோடு அணைத்தவாறு சிந்தனையில் சுழன்றிருந்ததவளின் அறைக்குள் இன்பனும் நீலவேணியும் நுழைந்திருந்தனர். ஆழினியின் எதிரில் அமர்ந்தவன் ஆதவ் கிருஷ்ணனிடம்

     “ஆது குட்டி, வேணி அத்தை கடைக்கு போறாங்களாம் நீங்களும் அவங்க கூட போயிட்டு வாங்க, அப்படியே வரும்போது எங்க எல்லாருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரீங்களா?” என்று இன்பன் சிரித்தவாறு வினவ, அவன் வினவிய கேள்விகான பதிலை தன் தாயிடம் கண்களால் கேட்ட ஆதவ் கிருஷ்ணனிடம் ஆழினி போய் வருமாறு தலையசைத்து பதிலளிக்க, தன் கன்னக்குழி தெரியுமளவிற்கு சிரித்து மூவரது மனதிற்கும் மருந்திட்ட ஆதவ் கிருஷ்ணனும் அவனின் நீலவேணி அத்தையுடன் கடைவீதிக்கு சென்றுவிட்டான்.



Advertisement

     அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பிறகு ஆழினியின் மடியில் இன்பன் படுத்து கொள்ள, மறுநிமிடமே தன் தம்பியின் தலையை அவனது தமக்கையின் கைகள் அன்னிச்சையாக கோத ஆரம்பித்துவிட்டது.

     நீண்ட நேரமாய் அவர்களுக்குள் நீடித்திருந்த மௌன யுத்தத்தை ஆழினி தான் முதலில் தகர்த்திருந்தாள்.

Advertisement

Advertisement

     “நான் சிவமாறன் சார் கிட்ட பேசுறேன்….” என்று ஆழினி கூறியதை கேட்டு இன்பமாய் அதிர்ந்தவன் அவளது மடியிலிருந்து அதிவேகமாய் எழுந்திருந்தான்.

     “நிஜமாத்தான் சொல்றியா ஆழினி? உனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என்று மகிழ்ச்சியாய் வினவிய இன்பனை முறைத்தவள்

Advertisement

     “பேசுறேன் தான் சொன்னேன், கல்யாணத்தை பத்தி அப்புறம் யோசிக்கலாம்….” என்று ஆழினி கூற, அவளை கண்டு புன்னகைத்தவன்

     “நீ இதுவரை இறங்கி வந்ததே போதும் ஆழினி, உனக்கு கண்டிப்பா சிவா சார் பிடிக்கும் பாரு….” என்று கூறிய இன்பன் பருவதம்மாவிடம் இதை பற்றி கூறவேண்டுமென்ற ஆவலில் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட, இங்கு ஆழினி தன் மனதில் வேறொரு திட்டத்தை தீட்டி கொண்டிருந்தாள்.

     கடைவீதியிலிருந்து ஆதவ் கிருஷ்ணனுடன் இல்லம் திரும்பிய நீலவேணியும் அவளது பெற்றோர்களான ஆறுமுகம் மற்றும் ராணியும் இன்பன் கூறிய செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருந்தாள். ஆழினியின் மனமாற்றத்தை எண்ணி அவளின் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷத்தில் கரைய, இவை அனைத்துக்கும் காரணமானவளோ அடுத்து என்ன செய்யவேண்டுமென்று திட்டவட்டமாக முடிவெடுத்திருந்தாள்.

     தன் இருச்சக்கர வாகனத்தில் ஆழினி மற்றும் ஆதவ் கிருஷ்ணனை அழைத்து கொண்டு விஜய சிவமாறன் இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தான் இன்பன். தன் பரு பாட்டியையும் செல்வி ஆன்டியையும் காணப்போகும் ஆவலில் இல்லத்திற்குள் ஓடும் ஆதவ் கிருஷ்ணனை இரசித்தவாறு இன்பன் நடந்து வர, அவனருகில் நடந்துவரும் ஆழினியின் மனதில் இத்தனை நாட்களாக இல்லாத ஒருவித பதட்டமும் பயமும் அவளை சூழ்ந்து கொண்டது.

     செவிலியராக இல்லத்திற்குள் நுழைந்தவளை இன்று குடும்ப உறுப்பினராய் அவளை தங்களுடன் இணைக்க நினைக்கும் பருவதம்மா மற்றும் சிவமாறனை எப்படி எதிர்கொள்வதென்று அறியாமல் தனக்குள் படபடத்து கொண்டிருந்தாள் ஆழினி. சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இது ஆழினியின் பெண் பார்க்கும் படலம் இல்லையில்லை மாப்பிள்ளை பார்க்கும் படலம் என்று தான் கூறவேண்டும். அதன் பொருட்டே ஆழினியின் மனம் சற்று வேகமாக துடித்து கொண்டிருந்தது. ஆனால் அதையும் மிக அழகாகவே யாரும் அறியாதது போல் தனக்குள் மறைத்து கொண்டாள் பெண்ணவள்.

     ஆழினியின் இந்நிலைக்கு காரணமான விஜய சிவமாறனின் கண்கள் இரண்டும் தன் அன்னை பருவதம்மாவிடம் மழலை மொழியில் கொஞ்சி கொண்டிருந்த ஆதவ் கிருஷ்ணனை ஆசையாக வருடியது. அலையலையாய் படர்ந்திருந்த சுருள் முடியும், நீலவிழி கண்களும் குறிப்பாக கன்னகுழி சிரிப்பும் சிவமாறனை அந்த குறும்புக்கார கண்ணனின் பக்கம் சாய்த்துவிட்டது.

     ஆதவ் கிருஷ்ணனை இரசித்து கொண்டிருந்தவனின் கண்களில் பருவதம்மாவின் அறைக்குள் நுழையும் ஆழினியையும் இன்பனையும் கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்தது. சிவமாறனை கண்டதும் ஆழினியின் கண்கள் வேறுபக்கம் சென்றுவிட, இன்பனை கண்டு சிரித்தவன் ஆழினியினது ஒதுக்கத்தை சரியாக புரிந்து கொண்டு தன்னெதிரிலிருப்பவனிடம்

     “இன்பா, ஆது குட்டியை கூட்டிட்டு வெளிய வா…. அம்மாவுக்கு ஆழினி ட்ரெஸிங் பண்ணனும்….” என்று கூறிய சிவமாறன் அறையிலிருந்து வெளியில் சென்றுவிட, அவன் கூறியது போல் இன்பனும் ஆதவ் கிருஷ்ணனுடன் இல்லத்தின் கூடத்திற்கு சென்றிருந்தான்.

     அறைக்குள் வந்ததிலிருந்து தன்னிடம் ஒருவார்த்தை கூட பேசாது தன் காலிலிருக்கும் காயங்களை துடைத்து மருந்திட்டு கட்டிடும் ஆழினியை விழியகலாமல் பார்த்தவர்

     “ரொம்ப கோபமா இருக்கீங்களோ?” என்று நக்கலாக வினவிய பருவதம்மாவை தீயாய் முறைத்தவள்

     “ஆமா….”

     “இருக்கட்டும் இருக்கட்டும்…. அதுசரி, எட்டு மணிக்கு வரவேண்டியவ எதுக்கு பத்து மணிக்கு வந்த? வேலையில ஒரு டீடிக்காஷன் வேண்டாமா?

     “வேலைக்கான டெடிக்கேஷன் எல்லாம் எங்களுக்கும் இருக்கு ஆனா மத்தவங்க தான் அதை ஓவரா யூஸ் பண்ணிக்குறாங்க?”

     “சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வா ஆழினி….”

     “ஏன் பருவதம்மா என்னை உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப்படுறீங்க? எனக்கு ஒரு குழந்தை இருக்கு, நான் போய் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

     “ஏன் முடியாது? சிவாவுக்கும் தான் ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு, அவன் உன்னை கல்யாணம் பண்ண சம்மதிக்கலையா?”

     “உங்களுக்கு நான் என்ன சொல்லி புரிய வைப்பேன்? எனக்கு….” என்று ஆழினி ஏதோ கூற வருவதற்குள் அவளை பேசாதே என்பதை போல் தடுத்தவர்

     “நீயும் சிவாவும் தனியா போய் ஒருத்தருக்கொருத்தர் மனசுவிட்டு பேசுங்க…. நான் உன்னை கம்பெல் பண்ணல, என் பையன பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ இல்லையா அவனை ஏன் பிடிக்கலன்னு சரியான காரணத்தை என் கிட்ட சொல்லு, ஏத்துக்ககூடிய காரணமாயிருந்தா நானே உனக்கு சப்போர்ட் பண்றேன்….” என்று பருவதம்மா தீர்க்கமாக கூற, அவர் கூறியதை கேட்டவள் இனி சிவமாறனிடம் தான் பேசவேண்டுமென்று முடிவெடுத்து அவனுடன் பேசவிருக்கும் உரையாடலை தன்னுள் ஒத்திகை பார்த்து கொண்டாள்.

     இல்லத்தின் கூடத்திலிருந்த நீள்சாய்விருக்கையில் இன்பனின் அருகில் அமர்ந்திருந்த ஆதவ் கிருஷ்ணனோ தன் மாமனின் அருகில் அமர்ந்திருக்கும் விஜய சிவமாறனை ஒளிந்து ஒளிந்து பார்த்து கொண்டிருந்தவனது செயலை இரசித்தவன் நீலவிழி கண்ணனை தன்னருகில் வருமாறு செய்கை செய்ய, ஆனால் அவனோ மாட்டேன் என்று தன்‌ தலையை இடவலமாக ஆட்டிவிட்டு இன்பனுடன் ஒன்றிவிட்டான்.

     சிவமாறனுக்கும் இன்பனுக்கும் தேநீரை வழங்கியவர் ஆதவ் கிருஷ்ணன் உண்பதற்கு சில திண்பண்டங்களை வழங்கிவிட்டு

     “ஆது கண்ணா, நேத்தெல்லாம் ஒரு இடத்துல நிக்காம இங்கேயும் அங்கேயும் ஓடிட்டு இருந்தீங்க இன்னிக்கு என்னாச்சு? நீங்க விட்டுட்டு போன கலர்புக்ஸ் எல்லாம் நான் பத்திரமா எடுத்து வச்சிருக்கேன் கலர் பண்றீங்களா?” என்று வினவிய செல்வி அக்காவிடம் மறுப்பாக தலையசைத்தவன் தன்னருகில் அமர்ந்திருந்த இன்பனிடம் நெருங்கி அமர்ந்து அவனது காதில்

     “பன்னு, இவர் தான் என் அப்பாவா?” என்று ஆதவ் கிருஷ்ணன் இரகசியமாக வினவ, அவன் கூறிய இரகசியத்தை கேட்டு இன்பன் மட்டுமல்லாது விஜய சிவமாறனும் செல்வி அக்காவும் ஆனந்தமாய் அதிர்ந்திருந்தனர்.

     ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு மகிழ்ச்சியில் கரைந்தவன் இன்பனின் அருகில் அமர்ந்திருந்தவனை தன் இருக்கரங்களில் ஏந்திக்கொண்டு அவனது இரண்டு கன்னத்திலும் அழுத்தமாய் முத்தம் பதித்திருந்தான். ஏனோ விஜய சிவமாறனை கண்டதும் ஆதவ் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்துவிட, தனக்கு அளித்த முத்தத்தினை வட்டியும் முதலுமாய் அழகிய பொக்கிஷமாக சிவமாறனிடம் வழங்கிய ஆதவ் கிருஷ்ணனின் செயலில் மகிழ்ந்தவன் அந்த குட்டி கண்ணனை தன் மடியில் அமர்த்தி கொண்டான்.

     “ஆது கண்ணா, நான் தான் உன் அப்பான்னு உனக்கு யார் சொன்னா?” என்று வினவிய சிவமாறனிடம்

     “பன்னு மாமாவும் வேணி அத்தையும் தான் சொன்னாங்க….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு முழித்தவன் இன்பனிடம் என்னவென்று வினவ

     “டேய் பப்பாளி, எங்க போனாலும் என்னைய அசிங்கப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு…. சிவா சார், அவன் என்னை எப்பயுமே பன்னு’ன்னு தான் கூப்பிடுவான்…. எப்போதாவது தான் அத்தி பூத்தா மாதிரி மாமான்னு கூப்பிடுவான்….” என்று கூறிய இன்பனை கண்டு நக்கலாக சிரித்தவன்

     “அப்போ வேணி அத்தை யாரு? எங்கிருக்காங்க பன்னு?” என்று சிவமாறன் வினவ, அவனை கண்டு இன்பன் திருதிருவென முழித்து கொண்டிருந்தான்.

     “வேணி அத்தை எங்க வீட்டுக்கு கீழ தான் இருக்காங்க…. பன்னும் வேணி அத்தையும் லவ்ஸ் பண்றாங்க தெரியுமா?” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறியதை கேட்டு தன்னெதிரில் அமர்ந்திருப்பவனை சிவமாறன் அர்த்தமாக பார்த்து சிரிக்க, அவனை கண்டு பதறியவன்

     “ஐயோ சார், வேணி நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு…. சின்ன வயசிலிருந்தே லவ் பண்றோம், சொல்லப்போனா என் அப்பாவும் அவளோட அப்பாவும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்…. இந்த பப்பாளி படிக்குற ஸ்கூல்ல தான் சைன்ஸ் டீச்சரா வர்க் பண்றா….” என்று இன்பன் அனைத்தையும் கூறிவிட, அவன் பதற்றத்தை கண்ட சிவமாறன் சிரித்து கொண்டிருந்தான்.

     தன் பிஞ்சு கரங்களால் விஜய சிவமாறனின் தாடையை பற்றி தன்னை காண செய்தவன்

     “நீங்க என் அப்பா தான? அப்போ ஏன் இத்தனை நாளா என்னையும் அம்மாவையும் பார்க்க வரல? இன்னிக்கு அம்மா எப்படி அழுதாங்க தெரியுமா? நீங்க தான் என் அம்மாவை அழ வச்சிட்டீங்க…. நான் உங்க மேல ரொம்ப கோபமாயிருக்கேன்…. உங்க பேச்சு டூ….” என்று ஆதவ் கிருஷ்ணன் கோபமாக கூறிவிட்டு இன்பனின் அருகில் சென்று அமர்ந்துவிட, அவன் கூறியதை கேட்டதும் சிவமாறனின் உதட்டில் குடியிருந்த புன்னகை அனைத்தும் காற்றில் பறந்துவிட்டது.

     சிவமாறனின் முகமாற்றத்தை வைத்து அவனது மனதை படித்தவன்

     “சாரி சார், இன்னிக்கு காலையில நானும் வேணியும் ஆது கிட்ட ‘அப்பா பரு பாட்டி வீட்டுல இருக்காங்கன்னு’ சொன்னோம் அதை அவன் புடிச்சிக்கிட்டான் போல…. ஆழினி கிட்ட உங்களை பத்தி பேசுறதுக்கு முன்னாடி ஆது கிட்ட பேசணும்னு எனக்கு தோனுச்சு….” என்று கூறிய இன்பனை கண்டு மெலிதாக புன்னகைத்தவன் ஆதவ் கிருஷ்ணனை தன் மடியில் அமர்த்தி கொண்டு

     “சாரி ஆது கண்ணா, அப்பா இத்தனை நாள் வேற ஊர்ல இருந்ததுனால உங்களை பார்க்க வரமுடியல…. ஊரிலிருந்து வரும்போது உங்களுக்காக சாக்லேட்ஸும் டாய்ஸும் வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? டாய்ஸ் நான் அப்புறமா எடுத்து தரேன், செல்வி ஆன்டி கிட்ட உங்களோட சாக்லேட்ஸ் எல்லாத்தையும் கொடுத்திருக்கேன்…. நீங்க போய் அதை வாங்கிட்டு வரீங்களா?” என்று சிவமாறன் கூறியதை கேட்டு சரியென்பதை போல் உற்சாகமாக தலையாட்டியவன் துள்ளி குதித்து கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

     ஆதவ் கிருஷ்ணன் அவ்விடத்திலிருந்து செல்லும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவன் தன்னெதிரிலிருக்கும் இன்பனை தீர்க்கமாக நோக்கியவாறு

     “நீங்க தெரிஞ்சு பண்ணீங்களா இல்ல தெரியாம பண்ணீங்களான்னு எனக்கு தெரியல இன்பன், ஆனா ஆதவ் கிட்ட நீங்க சொன்னது கரைக்ட் முக்கியமா அதை சொன்ன விதம் ரொம்ப ரொம்ப கரைக்ட்…. திடீர்னு ஆழினியை கல்யாணம் பண்ணிக்கிட்டு ‘உங்க அம்மாவுக்கு கல்யாணமாகிடுச்சு இவர் தான் உனக்கு அப்பான்னு’ சொன்னா எந்த குழந்தையா இருந்தாலும் அதை சட்டுன்னு ஏத்துக்க கொஞ்சம் டைம் எடுக்கும்…. எனக்கு ஆதவோட அப்பாவுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கிறதுல விருப்பமில்ல இன்பா, ஏனா அது ஆழினியோட பாஸ்ட்…. இப்போ இந்த நிமிஷம் ‘நான் தான் அப்பான்னு’ ஆதவ் நம்புறான்ல எனக்கு அது போதும்…. நீங்க கவலைப்படாதீங்க, ஆழினி கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க எனக்கு நம்பிக்கை இருக்கு….” என்று கூறிய சிவமாறனை நன்றியுடன் பார்த்த இன்பனின் மனமானது இத்தனை காலம் ஆழினி பட்ட துன்பங்கள் அத்தனைக்கும் விடை கிடைத்துவிட்ட திருப்தியில் மகிழ்ச்சி கடலில் தத்தளித்து கொண்டிருந்தது.

     “சிவா….” என்று அழைத்த குரலை கேட்டு சிவமாறனும் இன்பனும் பருவதம்மா அறைக்குள் செல்ல, அங்கு மெத்தையில் அமர்ந்திருந்தவர் அறைக்குள் வந்த இருவரையும் கண்டு புன்னகைத்து வைத்தார்.

     மெத்தையில் அமர்ந்திருந்த பருவதம்மாவையும் அவரருகில் நின்றிருந்த ஆழினியையும் பார்த்தவனிடம்

     “ஆழினி கிட்ட நான் பேசிட்டேன்…. நீயும் அவளும் தனியா போய் மனசுவிட்டு பேசுங்க….” என்று கூறிய பருவதம்மாவை ஒருநொடி பார்த்துவிட்டு இன்பனை பார்த்தவளின் மனதை படித்தவன்

     “நான் வெளிய கார்டன் கிட்ட வெயிட் பண்றேன் இன்பா….” என்று சிவமாறன் கூறிவிட்டு வெளியில் சென்றுவிட, ஆழினியின் கைகளை பற்றியவர்

     “நல்ல முடிவா சொல்லும்மா…. நான் காத்திருக்கேன்….” என்று பருவதம்மா கூறிய கூற்றை தன் கண்களால் இன்பனும் கூற, அவ்விருவரையும் இயலாமையுடன் பார்த்தவள் தன் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை போல் மனதில் உறுதிக்கொண்டு விஜய சிவமாறனிடம் உரையாடுவதற்காக இல்லத்தின் தோட்டத்திற்கு சென்றிருந்தாள்.

ஒளி வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!