Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே!.. அத்தியாயம் 16.

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 16

    தேவியின் வார்த்தையில் அதிர்ந்து நின்றது பாண்டியம்மாவும், முத்தையாவும் மட்டும் தான். சாலாவிடம் எந்த சலனமும் இல்லை. சாதரணமாக தான் இருந்தாள்.

   “நியாயம் கேட்டையா? என்ன நியாயம் கேட்ட? என்னன்னு நியாயம் கேட்ட? எனக்கு புள்ளை பெற வக்கு இல்லை, என் புருசன் வேற கல்யாணம் பண்ணிகிட்டான்னா? அப்படின்னாலும் உன் தங்கச்சிய தான் நீ குத்தம் சொல்லணும்…” என்று பாண்டியம்மாள் எகிற,



Advertisement

   தேவி பேச வில்லை. பல நாள் அழுத்தம், ஆதங்கம் வாய் வழி வார்த்தை வந்து விட்டது. வார்த்தை விட்ட பின் நிதானம் வந்தது. ஆனாலும் பயன் இல்லை. விட்ட வார்த்தையை திரும்ப வாயில் அள்ள முடியாதே…

       “என்ன வார்த்தை சொல்லிட்ட தேவி. உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல. குடும்பத்துக்கு மூத்த மருமகளா எல்லாத்தையும் கட்டி இழுக்குறது நீ தான். உன்னை நினைச்சு நான் பெருமை படாதா நாள் இல்லை. உன் மனசுல இப்படி ஒரு வஞ்சகமா… நீ வளர்த்த பொண்ணு இல்லையா சாலா, அது வாழ்க்கை கெடவா நீ அசைபட்ட… என்னால நம்பவே முடியலை தேவி…” என்று சொல்லிய முத்தையா,

   “நீ சொல்லி தானே ரெண்டாம் கல்யாணத்துக்கு பேசினோம். உன் தங்கச்சிக்கு நீயும் சரின்னு தான சொன்ன. இப்படி ஒரு யோசனையே உன்னை பெத்தவங்க தான கொண்டு வந்தாங்க. நீ யாரையும் குத்தம் சொல்லாம எம்மக்களவா வாக்கு விட்ட, எம் மருமக தேவியா இது!… இந்த வீட்டுல உனக்கு மரியாதை குறைவா ஒரு நாளாகவது நடத்தி இருப்போமா… உங்க அத்தை வாயில இருந்து பெத்த பிள்ளைக பேரு கூட வராது, தேவின்னு உம் பேரு தான் முன்ன நிக்கும். அதட்டி பேசினாலும் அவளுக்கு எல்லாத்துக்கும் நீ தான் வேண்டும்….” என்று முத்தையா சொல்லி முடிக்க,

Advertisement

   தேவி கண்களில் நீர் கொட்டியது. வஞ்சகம் எல்லாம் இல்லை. எப்போதும் தன் அகங்காரத்தோடு எல்லோரையும் அரட்டி கொண்டு ஊர் வீட்டுக்கு எல்லாம் நியாயம் சொல்லி நெஞ்சை நிமிர்த்தி திரியும் பாண்டியம்மாள், இன்று தான் கண் கலங்கி நிற்கிறார்.

Advertisement

     இந்த ஒரு வாரமும் அழுகையும், புலம்பலும் தான். இப்படி தானே மூன்று முறை தன்னை பஞ்சாயத்தில் மலடி பட்டம் கட்டி அத்து விட பேசும் பொழுது அழுதே ஓய்வாள். எட்டு கட்டை தொண்டையில் பச்சை மிளகாயாக தான் பேச்சு இருக்கும். ஒவ்வொரு மாசமும் வீட்டுக்கு தூரம் ஆகி நிற்கும் போது எல்லாம்…

   “ஏண்டி! தினமும் ராத்திரி புது சேலையும், மல்லிய பூவுமா போய் கதவடைக்க தெரியுது தான… ஒரு நாள் கூட தள்ளி போகாம இருபத்தி எட்டு நாள்ல உட்கார்ந்துற, பொம்பளைன்னா இது மட்டும் தான் அடையாளம் இல்லை, பத்து மாசத்துல பிள்ளை பெக்கணும்…”

  “உனக்கு சாமி வரம் கொடுக்கவே இல்லையே. ஒரு நாள் கூட தள்ளி போகலை, ரெண்டு மாசம், மூணு மாசம்ன்னு நிண்டு போகலை, சும்மா பித்த வாந்தி கூட வரலை… என்ன பொம்பளை நீ… நல்லவ ஒரு பிள்ளை பெற வேணாம். என்னத்த பாவம் பண்ணையோ… எம் மக்களை பாரு, யாரும் உன்னைய மாதிரி காத்து கிடக்கல… என் மகள்க ரெண்டு பேரும் அடுத்த வருச கல்யாண நாளுக்கு ஒத்த பிள்ளையோட நின்னாங்க… பொட்டை பிள்ளையாவது ஒன்ன பெத்து குடுன்னா… ஒன்னுத்துக்கும் லாயக்கி இல்லாம உடம்பை தான் வளத்து நிக்குற…” வார்த்தைகள் எல்லாம் தாராளமாக வந்து விழும் பாண்டியம்மாள் வாயில்…

Advertisement

  இத்தனை வருட அழுத்தம் வெளி வந்த பின் அடுத்த வார்த்தை வர மறுக்க, பேசாமல் உள் சென்று அடைந்து கொண்டாள்.

  “ஒத்த பிள்ளைக்கு வயிறு வீங்காத சிறுக்கிக்கு வாய் எட்டு ஊரு தூக்குதே… பார்த்தீங்களா பேச்சை, அன்னைக்கே அத்து விட்டு இருந்தா சீந்தாமா மூலையில் உட்கார்ந்து இடி சோறு வாங்கி இருக்கணும். பசிக்கமா சோறும், பட்டும் பவுசுமா வச்சதுக்கு நல்ல பேரு தான் நமக்கு… இவளை யோசிச்சு தான, இவ தங்கச்சிய பேசினோம். ரெண்டாந்தாரமாவும் எம் பிள்ளைக்கு பொண்ணு ரெடியா தான் இருந்துச்சு… இவ எண்ணத்துக்கு தான் பிள்ளை தங்கல, ஆனாலும் புத்தி வருதா பாரு…” என்று மேலும் பேசி கொண்டு இருந்த பாண்டியம்மாளை பார்த்த விசாலாட்சி,

  “நீ பட்ட பாட்டுக்கு உனக்கு என்னைக்கு ம்மா புத்தி வரும்…”

  “சாலா…”

   அங்கு வீட்டு கூடத்தில் மாட்டி இருந்த மீனாட்சி போட்டோவை தூக்கி வந்தவள்.

   “எனக்கு மூத்தவ காத்தோடு போயாச்சு. அவ பெத்த ரெண்டும் தாயில்லாம அனாதையா நிக்குதுக. நான் பட்ட மரமா போனேன். எம் பிள்ளைக ரெண்டும் தகப்பன் இருந்தும் இல்லாத மாதிரி தான். நான் சுமந்து நிக்கிற தாலிக்கு மதிப்பு இல்லை. இத்தனை வருசம் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு நாள் பஞ்சாயத்து முடிச்சு போட்டுருச்சு… உங்க மக்க ரெண்டு பேரோட வாழ்க்கையை பாரும்மா…” என்றவள், முகத்தை அழுந்த துடைத்து விட்டு, அவள் கையில் இருந்த மீனாட்சி போட்டோவை பாண்டியம்மாள் கையில் கொடுத்தவள்,

   “உம் பெரிய மக எங்கம்மா?… பேர் பெற வாழ்ந்த உம் மக இப்ப இங்க போனா… மதினிக்கு சாமி வரம் கொடுக்கலன்னு சொன்னியே, உனக்கு சாமி என்ன வரம் கொடுத்துச்சு. உம் பெரிய மக சாவை உன் கையில கொடுத்துருச்சே… எத்தனை கோவில் போயும், பரிகாரம் பண்ணியும் பிள்ளை இல்லானு சாடினையே…. இன்னைக்கு நீ எத்தனை கோவில் போனாலும் உம் மகளை காண முடியுமா!… காத்தோடு கலந்தவள கண் கொண்டு பார்க்க முடியுமா!… அவ அம்மான்னு சொல்ற ஒத்த வார்த்தையை உன்னால கேட்க முடியுமா!… ஒரு வருசம் ஆச்சே உன் கனவுலயாவது உம் மக தென்பட்டாலா?…”

 “உனக்கு எதுக்கு இவ்வளவு ஆணவம். என்னத்தை நீ சீரும் சிறப்புமா வாழ்ந்து போன… இன்னும் எம்புட்டு நாளைக்கு உன் வாய் பேச்சு…. இருக்குறது நானும், அப்பாவும் தான். எங்களையும் தூக்கி கொடுத்துட்டு என்ன பெருமை பேசுவ… தகப்பன் இருந்தும் தனியா இருக்குற எம் பிள்ளைகளுக்கு தாயும் இல்லாம ஆக்கி போடாத…” கண்களில் நீரோடு சொல்லிய சாலா உள்ளே செல்ல,

   கை நடுங்க தன் கையில் இருக்கு மகள் முகத்தை பார்த்தார். மஞ்சள் பூசிய வட்ட முகம், பெரிய வட்ட பொட்டு, மஞ்சளில் சிவப்பு கரை வைத்த பட்டு சேலையும், கல்லு வைத்த தோடும், ஒற்றை கல் மூக்குத்தி , வெற்றிலை போல படர்ந்த முகமும், சிரிப்புமாக இருந்த தன் மூத்த மகளை கண்டதும், நெஞ்சை அடைத்தது.

   அழகான மஞ்சள் முகத்தில் தீ வைத்து எரித்த நாள் நினைவு வர, மூச்சு வாங்கியது. முத்தையாக்கும் மகளை கண்டதும் நெஞ்சு தடித்தது. இனி எங்கு காண்பேன் அவளை…

  “ஐயோ! நான் பெத்த மகளே…” என்று அரட்ட தொடங்கி விட்டார் பாண்டியம்மாள்.

  சாலாவும் வர வில்லை, தேவியும் வர வில்லை. என்றேனும்  ஒரு நாள் பட தான் வேண்டும். முத்தையா தான் உடன் இருந்தார்.

  தேவி தயங்கிய படி சாலா அறைக்கு சென்றாள். அங்கு சாலா பெட்டி அடுக்கி கொண்டு இருந்தாள். இனி தன் ஊர் பார்த்து செல்ல வேண்டும். இதன் தாக்கம் பிள்ளைகளை தொடர கூடாது.

    “சாலா…” மறுகலாக குரல் வந்தது.

  “என்ன மதினி…” சாதரணமாக தான் கேட்டாள்.

   “நீ நம்புறையா சாலா, நானா உனக்கு வாக்கு விட்டு இருப்பேன். ஏதோ ஒரு கோபம், அழுத்தம்…. இன்னைக்கு மகன்னவும் பதறி துடிக்கிற மனசு, அன்னைக்கு எனக்கு ஏன் துணை நிக்கலன்னு கோபம். பிள்ளை பெத்த நீ உரிமைகாரி, பிள்ளை பெறாத நான் உரிமை இல்லாதவ… அப்படியா சாலா?…”

  “உனக்கு எப்படி புரிய வைக்க, நீ என்னை புரிஞ்சுப்ப தானே… உன் புருசன் ஆயிரம் குறை உன்ன சொன்னாங்க, ஆனா நீ ரெண்டு பிள்ளை பெத்து, நல்லா வாழ்ந்து இருக்கன்னு சொல்லி உம் புருசன் பண்ணது துரோகம்ன்னு சொல்லிட்டாங்க இல்லையா?… ஆனா, நான்… முழுசா எட்டு வருசம் அவர் மட்டும் தான்னு வாழ்ந்தேன். வீடு, வேலை, பொறுப்பு, குடும்பம்ன்னு என்னதான் நாயா கிடந்தாலும், பிள்ளை இல்லன்னு என்னை ஒதுக்கி தான் வச்சாங்க…”

   “அப்ப ஒரு ஒரு பொண்ணு புருசன் கூட வாழ அவ பிள்ளை பெற தகுதி ஒன்னு மட்டும் போதும் தானே. கட்டுன பொண்டாட்டி இருக்கும் போது வேற பொண்ணு கூட போனது தப்புன்னு சொல்ற உலகம், பொண்டாட்டிக்கு பிள்ளை இல்லன்னவும், ஒரு ஆம்பிளை கட்டுன பொண்டாட்டி கண்ணு முன்னவே வேற ஒருத்திய கல்யாணம் பண்ற ஆண்களை ஏன் தப்புன்னு சொல்ல மாட்டாது. இன்னைக்கு தலைவர் பேசினாரே ஒரு வார்த்தை, அப்பா!… என்னா மாதிரியான வார்த்தை. ஒருவனுக்கு ஒருத்தின்னு, அந்த ஒருத்தி அவன் பொண்டாட்டி தானாம்…” என்று விரக்தியாக சிரித்த தேவி,

  “அப்ப குமரனுக்கு யார் பொண்டாட்டி. உங்க பண்பாடு, கலாச்சார படி முறையா தாலி கட்டிகிட்ட நான் பொண்டாட்டியா? இல்லை பிள்ளை பெத்து குடுத்து அவ பொண்டாட்டியா?… உனக்காக கொடி புடிச்சு, பண்பாடு, கலாச்சாரம் பேசுன மக்கள் யாரும் ஏன் எனக்காக கொடி பிடிக்கல… ஒரு பொண்ணு ஆளாகி ஒரு ஆம்பிளைக்கு பொண்டாட்டியா ஆனா பின்னாடி தான் ஒரு குழந்தைக்கு தாயாகுறா… இது தான உங்க வழக்கம். நீங்க தூக்கி பிடிக்கிற ஒழுக்க விதி… ஒருவேளை அந்த பொண்ணால தாயாக முடியாம போன, அவ மனைவின்ற தன்னுடைய மரியாதையை இழக்கணும். ரொம்ப ஈசியா அவ வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாம போகும். ஊர் பார்க்க ஒருத்தன் வேற பொண்ணு கூட சேர்ந்து வாழ்ந்த பிரகாஷ் கெட்டவன், தண்டிக்க பட வேண்டியவன். ஊரே சேர்ந்து நடத்தி வச்சதால பொண்டாட்டி இருக்க ரெண்டாம் கல்யாணம் பண்ண திருக்குமரன் நியாயாயவாதி. அவன் மதிக்கதக்கவன்…”

  “எனக்கு சரியான நீதி வழங்கல. யாரு?… நான் பிறந்தது முதல் கடை பிடிச்ச என் பண்பாடும், கட்டுப்பாடும், கலாச்சாரமும் எனக்கு நீதி சொல்லல. பிள்ளை வரம் வேணாம்ன்னு எந்த பொண்ணாவது சொல்லுவாளா, பிள்ளை வேணும், பிள்ளை வேணும்ன்னா நான் எங்க போவேன். பெத்தா தான் பொண்டாட்டின்டாங்க… அப்ப எதுக்கு கல்யாணம், தாலி எல்லாம். நேரடியாக பிள்ளையவே பெத்துகலாம் தான… அந்த கோபமும், ஆதங்கமும் தான் வெளி வந்துச்சு, மனசார நீ வாழ கூடாதுன்னு நான் நினைக்கல… நான் தான் உன்னை வளத்தேன். எனக்காக குரல் கொடுத்த ஒரு ஜீவன் நீதான். நீ கெட்டு போக நான் நினைப்பேனா சாலா…” கண்ணீரோடு தேவி கேட்க.

   அவளை அணைத்து கொண்டவள். “என் மதினிய பத்தி எனக்கு தெரியாத?… இவ்வளவு விளக்கம் எல்லாம் வேணாம். இப்பாவாது உங்க அழுத்தம் வெளி வரட்டும்…” என்று அமைதி படுத்தினாள் சாலா.

  குமரன், சித்ரா வீடு வரும் போது வீடு அமைதியாக இருந்தது. யாரும் பேசி கொள்ளவே இல்லை. தேவி, சாலா அறையை விட்டு வெளிவரவும் இல்லை.

  மறுநாள் காலையே சாலா பிள்ளைகள் உடன் கிளம்பி விட்டாள். பிரகாஷ் இன்னும் ஊரில் தான் இருக்கிறான். இனி அவன் யாரோ தான்.

  பாண்டியம்மாள் தான், “உன்னை எப்படி தனியா விடுறது சாலா. நானும், உங்கப்பனும் கூட வாரோம். பிள்ளைக பார்க்க ஆள் வேணும்…” பெரிய மகள் நினைவு கொஞ்சம் பயத்தை கொடுத்தது போல,

   “துணைக்கு நான் போறேன் அத்தை…” என்று தன் பெட்டியோடு தேவி வர,

  “நீயா…” அதிர்ந்து போனார் பாண்டியம்மாள்.

  “ஆமா, நீங்களே முடியாதவங்க. சாலா கடைக்கு போன வீட்டு வேலைக்கு தான் ஆள் வேணும். நீங்க தான் நான் வந்த பிறகு, எல்லாதிலையும் இருந்து வெளி வந்துட்டீங்க தான. உங்களுக்கு என்ன தெரியும்… நான் போய் கூட இருக்கேன்…”

  “நீ போய் என்ன பண்ண போற. அதெல்லாம் சாலா பார்க்கும். நீ எங்கேயும் போக வேணாம். நீ போன எனக்கு தான் ஒரு கை காணாம போன மாதிரி இருக்கும்…” என்று குமரன் சொல்ல, சித்ரா வாயே திறக்க வில்லை.

  புருசன், அக்கா என்று யாரையும் பார்க்கவும் இல்லை.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!