Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 19

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 19

    பிரகாஷ் தன்னை தனிமை படுத்தி கொண்டான். யாரிடமும் பேச வில்லை. யாரும் இவனுக்கு அழைக்கவும் இல்லை. தாய் அத்தனை அறிவுரை சொல்லியும், மனைவி நார் நாராக கிழித்து தொங்க விட்ட போதும் புரியாமல், ஊர் உலகத்தில் நடக்காததா… தப்பு செய்தவன் திருந்த கூடாதா என்றெல்லாம் தனக்கு தானே நியாயம் வகுத்து கொண்டவன். சாரு பாலாவின் ஒற்றை கேள்வி அவனை அசைத்து பார்த்தது.

     விசாலாட்சி இடத்தில் மகளை வைத்து பார் என்றால் இந்த அளவுக்கு வலி இருக்காது. ஆனால், ஷாலினி இடத்தில் தன் செல்ல மகளை ஒரு நொடி கூட யோசிக்க வில்லை. அண்ணன், தம்பி என்று வீட்டுக்கு மூவர் இருந்தும், அஞ்சனா மட்டுமே ஒரே பெண் பிள்ளை. அவ்வளவு செல்லம். மகனிடம் கூட சில நேரம் கண்டிப்பு வந்து விழும். ஆனால், மகளின் கொஞ்சும் கிளி பேச்சில் அப்படியே மயங்கி விடுவான். பிரகாஷ் வளையும் ஒரே ஆள் அஞ்சனா மட்டும் தான்.



Advertisement

    கண்களில் நீர் பொழிந்தது. கடவுளை தேடினான். என் தப்புக்கு என் பிள்ளைகளை தண்டித்து விடாதே என்று வேண்டி கொண்டான். தன் தவறு தன் பிள்ளைகளிடம் சரி கட்டி விடுமோ என்ற பயம் மனதை கவ்வியது. ஒரு தப்புக்கு பின் தண்டனை இருக்கு என்ற நீதி வெளி படும் வரை தப்புகள் குறையாது தான். ஆனால், வெளி உலக பார்வையில் மறைத்தாலும் தப்பு தப்பு தான். என்றேனும் நீதி சரி செய்ய படும். அந்த பயம் தான் பிரகாஷ் மனதில்.

   அவன் ஒன்றும் ஷாலினியை வற்புறுத்த வில்லை. அவளாக ஏற்று கொண்ட உறவு தான். ஷாலினிக்கும் எல்லாம் தெரியும். பிரகாஷ் ஒளித்து மறைத்து ஒன்றும் செய்ய வில்லை தான். திருமணம் ஆனவன், இரண்டு பிள்ளைகளின் தகப்பன் என்று தெரிந்தே தான் மனதை படற விட்டாள். ரகசிய உறவாக இருந்த போதும் உன்னோடு தான் என்பதில் உறுதியாக நின்றாள். அந்தளவில் பிரகாஷ், ஷாலினியை ஏமாற்ற வில்லை என்று மனதில் ஒரு எண்ணம்.

   விசாலாட்சியையும் விட வில்லை. பிரகாஷ் மனைவி விசாலாட்சி தான். அவன் குடும்பம் என்றால் சாலாவில் தான் தொடங்கும். மனைவி, பிள்ளைகள் தான் அவன் வட்டம். வீடு, வசதி எல்லாம் அவன் தான் உருவாக்கியது, மேலும் உருவாக்கவும் முடியும். ஒரு ஆண் மகனாக தன் குடும்பத்திற்கு இதுவரை எந்த குறையும் வைக்க வில்லை. வசதியான வாழ்க்கை, எதிர்கால பயமின்றி நிம்மதியான தூக்கம், பாதுகாப்பான கூடு என்று தன் கடமையில் இருந்து தவறவில்லை என்ற இறுமாப்பு. நான் சரியாக தான் இருக்கிறேன் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.

Advertisement

   ஆக, இரு பக்கமும் சரியாக பேலன்ஸ் செய்து கொண்டு போகிறோம். தன்னளவில் தான் சரி என்ற எண்ணம் மகள் என்ற வார்த்தையில் நொறுங்கியது. சமூகத்தில் பலர் இப்படி தான் இருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கை, அவரவர் சுதந்திரம் என்ற கருத்து எல்லாம் கற்பூரமாக கரைந்து போனது. தான் தன் பிள்ளைகளுக்கு தவறான முன் உதாரணமாக போய்விடுவோமோ!… என்ற பயம் வந்தது.

Advertisement

   அவரவருக்கு என்று நியாயம் கற்பித்து நின்றவன். தனக்கு நியாயம் கற்பிக்க படுமோ என்ற பயமும், அதுவும் தன் பிள்ளைகள் மூலம் என்ற நடுக்கமும் மனதில் வந்தது. அதுவும் ஷாலினி இடத்தில் ஒரு நொடி கூட அஞ்சனாவை வைத்து பார்க்க முடியவில்லை.

   இருக்காது, அப்படி இருக்காது. சாலா வளர்ப்பு தவற வாய்ப்பு இல்லை. பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறையோடு ஒரு கண்டிப்பு எப்போதும் சாலாவிடம் உண்டு. பிரகாஷ் மாதிரி தனக்கு கிடைக்காதது, தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டது எல்லாம் செய்யும் ரகம் அல்ல…

    முட்டி வரை பாவாடை, சிலிவ்லெஸ் டாப் என்று மகளுக்கு வித விதமாக அணிந்து அழகு பார்த்தாலும், அஞ்சனா உட்காரும் போதோ, டீவி பார்க்கும் போதே பாவாடை லேசாக மேலே ஏறி இருந்தால் கூட சாலா சுள்ளென்று முதுகில் போட்டு விடுவாள். பிரகாஷ் தான் கத்தி கொண்டு முன் வருவான்.

Advertisement

   எத்தனை நாகரிகமா, விதவிதமாக உடை அணிந்தாலும், நடத்தையில் ஒழுக்கம் என்ற ஒன்றை அஜய், அஞ்சு இருவரிடத்திலும் கண்டிப்போடு, கட்டாயம் கடை பிடிப்பாள். அந்த ஒன்று தான் பிரகாஷ்க்கு ஆறுதல்.

   தனக்கான கடமைகளை செய்து தன் தவறை பூசி மொழுக பார்த்தான். ஊரும் அதை தான் சொல்லியது…

    “இது ஒன்னுல தானே தப்பு. வேற ஒரு குறை அந்த தம்பி மேலே சொல்ல முடியுமா… இம்புட்டும் நீயா சம்பாதிச்ச எல்லாம் பிரகாஷ் தான. அவன் என்ன கடவுளா தப்பே பண்ணாம இருக்க, மனுசன்னா ஏதோ ஒரு நேரம் தப்பு இருக்க தான் செய்யும்…” என்று சரி கட்ட படும் பேச்சுக்கள் அவனுக்கு வலு சேர்த்தது.

  கடவுள் என்ன கடவுள்… கடவுளாகவே இருந்தாலும் தப்புக்கு நீதி செய்த மண் இது. கடவுளுக்கும் நீதி வழுவாது என்று உரைத்த கூட்டம் நாம். தவறாக தோன்றினால் கடவுளையும் கை நீட்டி குற்றம் சொன்ன ஊர் இது. இங்கு எப்படி அநீதி நீதியாக பார்க்க படும். நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே!…

    பிரகாஷ் மதுரை வந்தான். மனம் மனைவி, மக்களை தேடியது. பிள்ளைகளுக்கு பள்ளி தொடங்கி விட்டது. பள்ளி விட்டதும் நேர கடைக்கு தான் போவார்கள். அங்கிருந்து தான் வீட்டுக்கு வருவது வழக்கம். அதை கொண்டு கடைக்கு தான் சென்றான்.

    கடை வாசலில் நின்று பார்க்கும் போதே அதன் முன்னேற்றம் தெரிந்தது. எப்போது வந்தான் என்பது கூட நியாபாகத்தில் இல்லை. பெரிதாக மனைவி என்ன செய்கிறாள் என்று கண்டு கொள்ளவும் இல்லை. நேர் உள்ளே சென்றான்.

   நிமிர்ந்து பார்க்கும் போதே மகன் தான் கண்ணுக்கு தெட்டு பட்டான். அங்கு வந்திருக்கும் ஒருவருக்கு உடைகளை காட்டி கொண்டு இருந்தான். அவர் உடலுக்கு தக்க சட்டையை எடுத்து காட்டினான்.

  ஐயோ! என் மகன். என்ன தான் சொந்த கடை என்ற போதும் இந்த வேலை எல்லாம் இவன் செய்ய தான் வேண்டுமா… மனம் அடித்து கொண்டது.

   அஜய்க்கு சற்று தள்ளி ஒரு குட்டி டேபிள் போட்டு அஞ்சு வீட்டு பாடம் செய்து கொண்டு இருந்தாள். யூனிஃபார்ம் மாற்ற வில்லை, ஒரு பக்க ரிப்பன் கலண்டு இருந்தது. முகம் சுண்டி இருந்தாள் மகள்.

  பிரகாஷ்க்கு நெஞ்சு பதறியது. வீடு வந்ததும் பை ஒரு பக்கம், ஷூ ஒரு பக்கம் என்று தூக்கி வீசி டிவியை பிடித்து கொண்டு சோபாவில ஒரு ஆள், ஊஞ்சலில் ஒரு ஆள் என்று இளைப்பாறும் மக்கள் நினைவுக்கு வந்தார்கள். அஞ்சு அருகில் இருந்த வேர் கடலை தொடாமல் இருந்தது.

   ஒரு பெரு மூச்சு பிரகாஷிடம். இந்த மாதிரி உணவுகள் எல்லாம் எப்போதாவது தான் மகள் உண்பாள். அதையும் மீறி சாலா செய்து கொடுத்தால், ஒரு போன் அப்பா என்று, அடுத்த அரை மணி நேரத்தில் வெஜ் மஞ்சூரியன், சிக்கன் பர்க்கர் கையில் இருக்கும். அது போக வீட்டிலும் கொட்டி தன் போட்டு இருப்பான் பிரகாஷ்.

   எத்தனை செல்லமாக என் பிள்ளைகளை வளர்த்தேன். என் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்களோ… கவலை வந்தது. இந்த சாலா என் பணத்தை பிள்ளைகளுக்காகவாது வாங்கலாம் தானே… எங்கே அவள்?… கண்கள் தேடியது.

   அவனுக்கு வலது புறத்தில் தான் இருந்தாள். உள் நுழைந்தவன் சைடாக பார்க்க வில்லை. மிக பெரிய கண்ணாடி டேபிள், அதன் ஓரத்தில் கணினி, பெரிய ரோல் சேர், சந்தன நிறத்தில் காட்டன் சேலை அணிந்து, தளர்வாக பின்னிய சடை, எப்போதும் போடும் குடை சிமிக்கி அல்லாமல், காதோடு ஒட்டிய கம்மல், மூக்கு கண்ணாடி போட்டு இருந்தாள்.

    கடையில் வேலை செய்யும் மூன்று ஆண்கள் நின்று கொண்டு இருக்க, கம்பீரமாக அமர்ந்த படி அந்த ஆட்களுக்கு கட்டளை கொடுத்து கொண்டு இருந்தாள். தன்னை பார்க்க வில்லை. நிறைய பேர் வந்து போகும் இடம் என்பதால் கவனிக்க வில்லை போல…

  பிரகாஷ் அருகே சென்றான். அப்போது தான் அவர்களை அனுப்பி விட்டு நிமிர்ந்து பார்த்தாள். ஒரு திகைத்த பார்வை மட்டும் தான். அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவனை பார்த்து எழுந்து நிற்கவும் இல்லை. என்ன என்ற கேள்வி அவள் முகத்தில்.

   என்னவோ பேச வந்தவன் தடுமாறி, “ஏன் கண்ணாடி போட்டு இருக்க சாலா?…” இத்தனை ஆண்டு கால கல்யாண வாழ்வில் மனைவியிடம் வந்த முதல் தடுமாற்றம். என்ன கேட்க என்று தெரியாமல் என்னத்தவோ கேட்டு வைத்தான்.

   சாலா பேசாமல் நிமிர்ந்து பார்த்தள். இதற்கு பதில் அவசியமா?… என்பதாக பார்வை இருந்தது.

   வெள்ளி கிழமை எப்போதும் விரதம் இருந்து சாமிக்கு விளக்கு போடுவாள் சாலா. ஒரு நாளும் தவறாது. அவள் விளக்கு வைக்கும் நேரம் பிரகாஷ் வந்தால்,

   கையில் இருக்கும் ஆராதனை தட்டை கீழே வைத்து விட்டு, “ஒரு நிமிசங்க விளக்கு போட்டு வந்து காபி போடுறேன். துண்டு, ட்ரெஸ் எல்லாம் கட்டில்ல இருக்கு…” என்று ஆபீஸ் விட்டு வரும் கணவனுக்காக சாமியவே காக்க வைக்கும் தன் மனைவி விசாலாட்சி எங்கே?…

   தயக்கமாக ஆரம்பித்தான், “ஆபீஸ்ல என்னை வேற இடத்துக்கு மாற்றி விட்டாங்க. மும்பை போகணும்…” என்றான்.

  முன்பே தெரியும். அதை கொண்டு தான் அஜய்க்கு ஹாஸ்டல் பார்த்தது. எல்லாம் மாறி போச்சு.

  ஒரு தலையசைப்பு மட்டுமே சாலாவிடம். வேற எந்த பிரதிபலிப்பும் இல்லை. பெருத்த ஏமாற்றம். எழுந்து பிள்ளைகளை காண சென்றான்.

  அம்மாக்கு தப்பாமல் பார்வையில் மட்டுமே திகைப்பை காட்டினான் அஜய். அஞ்சு மட்டும் சின்னதாக சிரித்தாள்.

   தன் மாற்றல் விவரம் சொன்னான். அங்கும் எந்த பிரதிபலிப்பும் இல்லை. இயல்பாக ஏற்றார்கள். கண் கலங்கும் போல இருந்தது பிரகாஷ்க்கு.

  “ஷாப்பிங் போகலாமா… அடுத்து அப்பா வர லேட் ஆகும் உங்களுக்கு பிடிச்சது எல்லாம் வாங்கி தாரேன்…” இயல்பாக பேச முயற்சி செய்தான்.

  ஒருவரை ஒருவர் பார்த்த பிள்ளைகள் ஒரு சேர வேண்டாம் என்றார்கள். போலீஸ், கேஸ், பஞ்சாயத்து என்று நிறைய பார்த்த கசப்பு. என்னவோ அப்பா என்ற உணர்வு இருந்த போதும் தள்ளி நின்றார்கள்.

   அடுத்து என்ன என்ற பார்வை பார்த்தான் பிரகாஷ். மனைவி ஒரு பார்வை மட்டும் தான். பிள்ளைகள் ஒத்த வார்த்தை மட்டும் தான். வீட்டுக்கு வா என்று கூட அழைக்க வில்லை.

  குடும்ப தலைவன் நான், என் குடும்பம் எங்கே?… எல்லாம் இயல்பாக இயங்குகிறது. பிரகாஷ் இல்லா விட்டாலும் இவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. மனம் கனத்தது. தான் ஒன்னுமே இல்லையா?…

   மகனின் அருகில் சென்று தோலில் தட்டி கொடுத்தான், மகளை நெருங்கும் போது அனைத்து கொள்ள கை பரபரத்தது. ஆனாலும், தலையில் கை வைத்து தடவி கொடுத்தான்.

   முதலாளியின் கணவன் என்பதால் சேர் கொண்டு வந்து போட்டார்கள். தன் பொருட்டு மனைவிக்கு மரியாதை என்பது போய், தன் மனைவி பொருட்டு தனக்கு மரியாதை. விரக்தி சிரிப்பு வந்தது. காலம் தான் எத்தனை நியாயவாதி…

   வீதியில் இறங்கி வெறுமையாக நடந்தான். ஒரு டீ கடையை தாண்டும் போது, அங்கு செய்யும் வாக்குவாதம் காதில் கேட்டது.

  “யோவ்! பத்து ரூபா கொடுத்து ரெண்டு பழம் வாங்குனா, நல்ல பழம் கொடுக்கல…” என்று ஒருவர் தகராறு செய்ய.

  “ரெண்டு வாழ பழம் தானே…” என்று ஒருவர் சொல்ல.

  “ரெண்டு பழம் தான். ஆனாலும் நான் காசு கொடுக்கிறேன் தானே. அதுக்கு நீ நேர்மையா இருக்க வேணாம்…” என்று விடாமல் மல்லுக்கு நிக்க.

 பிரகாஷ்க்கு சுளீர் என்று நெஞ்சில் ஒரு கீறல். தற்போதைய காலத்தில் பத்து ரூபாய்க்கு என்ன வாங்க முடியும். ஆனால், அந்த பத்து ரூபாய்க்கும் நேர்மையை, பணத்திற்கானக மரியாதையை ஒருவன் எதிர் பார்த்தால்.

   காலத்திற்கும் உடன் வந்து, உன் கஷ்டத்தில் கூட இருந்து, கவலையில் துணை நின்று, துயரத்தை பங்கு போட்டு, உன் சந்தோசத்தை பகிர்ந்து, உனக்காக வாழும் உன் வாழ்க்கை துணை உன்னிடம் நியாயம் எதிர்பார்க்காத?… தனக்கான நேர்மையை எதிர்பார்ப்பதில் என்ன தவறு… அந்த உறவுக்கு உண்மையாக தானே இருக்க வேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!