Skip to content
Post Views: 4,433
அத்தியாயம் – 21
தீபாவளி திருநாளின் முதல் நாள் இரவு கடைசி நேர விற்பனை கடைத்தெருவில் களைகட்டிக்கொண்டிருக்க, ஆங்காங்கே தங்களின் வாகனங்களை நிறுத்தி கண்காணிப்பு கேமரா மூலம் கூட்டத்தை கவனித்து, ஒலிப்பெருக்கி உதவியுடன் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர் காவல்துறையினர். அகிலனும் அதில் அடக்கம். கூட்டம் மிகுந்த நேரத்தில் அசம்பாவிதம் நிகழாதிருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. அந்த மொத்த மாவட்டத்தின் முக்கிய இடங்களை கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து மேற்பார்வையிட்டாள் அதிரா.
பெரிதாக அசம்பாவிதங்கள் இன்றி அடுத்த நாளின் இனிய பரபரப்போடு முடிந்தது அந்த நாள். நடுஇரவில் தான் வீடு வந்தாள். அசதியில் உடை மாற்றி படுத்துவிட, நல்ல உறக்கத்தில் இருக்கும் போது யாரோ படபடவென கதவை தட்டுவது செவியை எட்ட, அதிர்ந்து எழுந்தாள் பெண். பூட்டிய வீட்டுக்குள் யார் என்ற மெல்லிய அதிர்வுடன் பிஸ்டலை கையிலெடுத்துக்கொண்டு கதவைத் திறக்க, தீபாவளி வாழ்த்துக்கள் என்று ஆர்ப்பாட்டமாக கத்தினான் அகிலன்.
நீயா என்பது போல் ஆசுவாசமாக உணர்ந்தவள் உடனே சுதாரித்து, “நீ எப்படி உள்ள வந்த? நான் பூட்டிட்டு படுத்தேனே…”
Advertisement
“நீங்க பூட்டுறதுக்கு முன்னாடியே நான் வந்துட்டேன்.”
“அடப்பாவி! நைட் புல்லா இங்கதான் இருந்தியா பிராடு.”
“நான் உள்ள தூங்கிட்டு இருக்கிறதை கூட கவனிக்காம என்ன எஸ்.பியோ போங்க.” என்று சலிக்க, அவன் முன் துப்பாக்கியை நீட்டியவள், “ரொம்ப பேசுனா டமால் தான்டா…” என்று முறைக்க விரல் கொண்டு துப்பாக்கியை கீழே இறக்கினான் அகிலன்.
Advertisement
“வள்ளி வேலை முடிச்சி பூட்டிட்டு போயிருப்பாங்களே. எப்படி உள்ள வந்த?”
Advertisement
“வள்ளி வீட்டுக்கே போய் சாவி வாங்கிட்டு தான் வந்தேன்.” என்றவனை துப்பாக்கி கொண்டு தோளில் லேசாக அடித்தாள். அன்றொரு நாள் உணர்ச்சி மிகுதியில் லேசாக தோள் சாய்ந்துவிட்டதை சாக்காக வைத்துக்கொண்டு அதிக உரிமை எடுக்கிறான் என்று இத்தனை நாள் வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டு அவனை தவிர்த்தாள். இன்று தன்னிடம் தெரிவிக்காமல் வீட்டில் தங்கியது கோபத்தை ஏற்படுத்த,
“என்ன பண்ணிட்டு இருக்க அகிலன்? என்கிட்ட சொல்லாம எப்படி நீ இங்க தங்கலாம்.” என்று கடிந்தாள்.
“நாளைக்கு எவ்ளோ வேணும்னாலும் திட்டிக்கலாம். இப்போ வாங்க.” என்று அகிலன் லேசாக கையை பிடித்திழுக்க, பட்டென உறுவிக்கொண்டவள், “நானே வரேன்.” என்று பதட்டமான குரலில் சொன்னாள்.
Advertisement
இதழுக்குள் சிரிப்பை அதக்கியவன் உணவு மேசை அருகில் இருக்கும் சிறிய பூஜை மாடத்திற்கு அருகே சென்று நிற்க, துப்பாக்கியை உள்ளே வைத்து வந்தவள் அவன் செய்திருக்கும் ஏற்பாட்டை கண்டு மலைத்துப் போனாள். வீட்டில் பெரிதாக சுவாமி படங்கள் கிடையாது. பெயருக்கு விநாயகரும் அன்னபூரணியும் இருக்கும். வள்ளி தான் தினம் விளக்கு ஏற்றி சுத்தம் செய்து வைப்பாள். இன்று லட்சுமி படமும் சரஸ்வதி படமும் புதிதாய் இடம்பெற்றிருக்க, அனைத்து படங்களுக்கும் பூ வைத்து, விளக்கு ஏற்றி, ஊதுபத்தி, சாம்புராணியும் வைத்திருந்தான். கீழே சிறிய ஸ்டூல் போட்டு அதில் ஒரு இனிப்பு டப்பி, இருவரின் புது உடை மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் நல்லெண்ணெய் இருந்தது.
“என்ன இது?” அதிர்வாய் அவனைப் பார்க்க, எண்ணெய் கிண்ணத்துடன் அவளிடம் வந்தவன் அவள் யூகிக்கும் முன் குழித்த கரத்தில் கொஞ்சம் எண்ணெய் எடுத்து அவள் உச்சந்தலையில் வைத்துவிட்டான்.
“என்ன பண்ற?” அவள் ஓரடி பின்னெடுத்து வைத்து தலையை தொட்டுப்பார்க்க, எண்ணெய் வைத்த இடம் பிசுபிசுத்தது.
“தீபாவளி அன்னைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்குறதுதான வழக்கம். என்ன புதுசா பாக்குறீங்க.” என்று இவன் புருவம் சுருக்க,
“இல்லை… அது… இதெல்லாம் பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு. அதான்…” என்று தடுமாற, எண்ணெய் கிண்ணத்தை அவளிடம் கொடுத்தவன், “குளிச்சிட்டு வந்து புதுசு போட்டுக்கோங்க.” என்க, அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.
“எண்ணெய் வச்சி தலை குளிக்குறது எல்லாம் கஷ்டம். நீ தேச்சிக்கோ.”
“நான் குளிச்சிட்டேன். நீங்கதான் பாக்கி.” என்று இன்னும் கொஞ்சம் எண்ணெய் எடுத்து அவள் தலையில் தேய்க்கப் போக, துள்ளிக் குதித்து நகர்ந்தாள் அதிரா.
இவனும் விடாது வேக எட்டுகள் வைத்து அவளை நெருங்க, அவனிடம் சிக்காது ஓடிச்சென்று அறைக்குள் புகுந்து கொண்டு அவள் கதவை அடைக்கும் முன் இவனும் உள்ளே புகுந்துவிட்டான்.
“நான் ஜிம் போறேன்னு மறந்துட்டீங்க மேடம். முன்ன மாதிரி இல்லை நல்லாவே ஓடி பிடிச்சு விளையாடலாம்.” ஆர்ப்பாட்டமாக சொன்னவன் எண்ணெயை அவள் மேல் கவிழ்க்கப் போக, மின்னல் வேகத்தில் நகர்ந்து குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.
“நான் எஸ்.பிடா. எங்க எப்படி தப்பிக்கனுன்னு எனக்கு தெரியும்.” என்று அவள் குளியலறையிலிருந்து கத்த, இவன் சத்தமாக சிரித்தான்.
“போனா போகுது முத தீபாவளினு விடுறேன். அடுத்த வருஷமெல்லாம் இப்படி தப்பிக்க முடியாது.” என்று இவன் கத்த, உள்ளே தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.
‘நான் சொன்னது கேட்டிருக்குமா?’ என்று மீண்டும் சந்தேகம் வந்துவிட்டது அகிலனுக்கு. முன்பு விருப்பத்தை சொன்னதற்கே இன்னும் பதிலைக் காணும். இதற்கு ஏதாவது சொல்லிவிட்டாலும் என்று சலிப்புடன் கதவை சாற்றிவிட்டு வெளியே சென்றான்.
அகிலனை திட்டிக்கொண்டே தலைக்கு ஷேம்பூ போட்டு தண்ணீர் ஊற்றி குளித்து வந்தாள். வலக்கையை இன்னும் முழுதாக மேலே உயர்த்த முடியவில்லை. வள்ளி உதவியுடன்தான் தலைமுடியை பராமரித்து வருகிறாள். இன்று இவன் செய்த கூற்றில் ஒற்றைக்கையில் சிரமப்பட்டு தேய்த்து குளித்தவளுக்கு தலையை ஒழுங்காக துவட்ட முடியவில்லை. மனம் அவனை வசவினாலும் தீபாவளி அன்று தலைகுளித்துதானே ஆகவேண்டும் என்று வாதிட்டது அறிவு. நீர் சொட்ட சொட்ட ஒரு குர்தி செட் உடுத்தி வெளியே வர, இவளுக்காவே காத்திருந்தவன் புது உடையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவனை முறைத்துக்கொண்டு அதை வெடுக்கென பிடுங்கி அறைக்குச் செல்ல திரும்ப, “ஒரு நிமிஷம்.” என்ற அகிலன் குரலில் என்னவென்று திரும்பிப் பார்க்க, அவளைத் தாண்டி அவள் அறைக்குச் சென்றான் அகிலன். குழப்பமுற்ற அதிராவும் அவனை பின்தொடர்ந்தாள். உரிமையாய் உள்ளே சென்றவன் வாட்ரோபை திறந்து ஒரு துண்டுடன் வந்தவன் அவள் பின்சென்று முடியை துவட்டிவிட, மிரட்சியுடன் நகர்ந்தவள், “என்ன செய்ற நீ?” என்று விழிகளை விரிக்க,
“இப்படி சொட்ட சொட்ட ஈரத்தோட இருந்தா ஜன்னி வந்துடும்.” என்றபடியே துண்டை கொண்டு மேலிருந்து கீழ் துடைக்க, இடக்கையை பின்னே கொண்டுவந்தவள், “நானே துடைச்சிக்குறேன். நீ போ.”
அவள் கையை தட்டிவிட்டவன், “துடைச்ச அழகை நானும் பாத்தேன்.” என்று அவன் வேலையைத் தொடர்ந்தான். இவளுக்குத்தான் அவஸ்தையாகிப் போனது. அவனது நெருக்கமும் உரிமையும் இதமளிப்பதற்கு பதில் அச்சமூட்டியது. குறுகிய இடைவெளியில் அவன் தன்னை அதிகம் நெருங்குகிறான், இது நல்லதா கெட்டதா என்று தவித்து தடுமாறினாள்.
“இன்னும் ஈரம் இருக்கே என்ன செய்யுறது?” அவள் முடியை விரலால் அளந்து ஈரத்தை உணர்ந்தவன் கேட்க, நகர்ந்து சென்று மேசை டிராயரில் இருந்த ஹேர் டிரையரை எடுத்தாள்.
பின்னோடே சென்று அதை பிடுங்கியவன் அதை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்து, “இது எப்படி யூஸ் பண்ணனும்?”
“நானே…” என்ற வார்த்தை அவள் இதழை விட்டு வெளியே வந்த நொடி, அவன் ஆட்காட்டிவிரல் தடையாய் அவளிதழில் பதிந்தது, “நான் இருக்குற வரை நாந்தான் எல்லாம் பண்ணுவேன்.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அதிரா.
சற்று தடிமனான அவனது ஒற்றை விரல் அவளது மென்னிதழ் தீண்டவும் சிலிர்த்து நின்றது அவளது மயிர்க்கால்கள் அத்தனையும். ஓட்டப்பந்தையத்தில் ஓடுவது போல் இதயம் படபடவென துடித்து உடலில் நடக்கும் மாற்றங்களை எடுத்துச் சொல்லியது. அதிர்வில் விரிந்த அவள் விழிகளில் அவனது முகம் வெகு அருகினில் நெருக்கமாக தெரிய, இமைகள் பட்டென குடைசாய்ந்து பின் இறுக்கமாய் மூடிக்கொண்டது அவனது மூச்சுக்காற்றை கன்னத்தில் உணர்ந்ததும்.
என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன் அவனது அருகாமை தூரசென்றுவிட, தெளிந்து விழிகளை திறந்தவள் எதிரே அவனில்லை. கண்களை தேய்த்துக்கொண்டு சுற்றிலும் பார்வையை சுழற்ற, வெகு தீவிரமாக சற்று தள்ளி இருந்த சாக்கெட்டில் ஹெர்டிரையர் வயரை சொருகிக்கொண்டிருந்தான்.
‘என்ன பண்ற அதிரா நீ? அவன் பக்கத்துல வந்தாலே நீ நீயா இருக்க மாட்டேங்குற. அவன்கிட்ட மயங்கி கிடக்குறியா…’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
‘இவனை யாரு இப்போ இங்க வரசொன்னது?’ என்று பார்க்க, எதுவும் அறியாதவன் போல் டிரையரை வைத்துக்கொண்டு நின்றான்.
எதுவும் சொல்லாமல் டிரையரை வாங்கி மிதமான வேகத்தில் வைத்து அவனிடம் நீட்டினாள். நல்லபிள்ளையாக அதை கொண்டு அவள் முடியை உலர வைக்கும் வேலையினை செய்ய, அவனிடம் வாய் கொடுக்க பயந்து தலையை மட்டும் அவனிடம் கொடுத்து நின்றாள். ஆம் பயம்தான். அவனை இன்னும் கொஞ்சம் புரிந்துகொண்ட பின் விருப்பத்தை சொல்லலாம் என்று நினைத்திருக்க இவன் தன் வாயை பிடுங்காமல் விடமாட்டான் என்று புரிந்து போனது.
என்ன நினைத்தானோ அமைதியாய் அவளுக்கு உதவிவிட்டு வெளியே சென்றுவிட, இவள் புது உடை உடுத்தி, சிகை அலங்காரம் எதுவுமின்றி பொட்டு மட்டும் வைத்து வெளியே வந்தாள்.
அவள் உடைக்கு ஏதுவாய் அவனும் புதிய சட்டையும் வேஷ்டியும் உடுத்தி அவளுக்காக மலர்ச்சியுடன் காத்திருந்தான்.
“டிரெஸ் நல்லாயிருக்கு.” என்றவன் இனிப்பு எடுத்து வந்து அவள் உதட்டருகே ஊட்டுவதற்கு தயாராய் நிற்க, அவளோ இனிப்பை வாங்க கைநீட்டி இருந்தாள். அனாசியமாக கையை தட்டிவிட்டவன் அவள் இதழில் படும்படி இனிப்பை வைத்துவிட, வேறுவழியின்றி முறைத்துக்கொண்டே வாய் திறந்து அதை ஏற்றுக்கொண்டாள்.
“நல்லா முறைச்சு பாருங்க, எனக்கு பழகிடுச்சு.” என்றவனை முறைத்தவள் சுவாமி மாடத்திற்கு சென்று கண்களை மூடி பிராத்தனை செய்தாள். அமைதியாய் அவள் அருகில் வந்து நின்றுகொண்டவனும் கண்களை மூடி கைகுவித்து வேண்டினான்.
வேண்டி முடித்து திருநீறு எடுத்து பூசிக்கொண்டவள் அவனைப் பார்க்க, அவனும் பூசிக்கொண்டு, “அடுத்து என்ன… வெடி போட்டுறலாம் தானே…”
“அதெல்லாம் நான் வாங்குறது இல்லை.”
“நான் வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று உள்ளே சென்று ஒரு பை நிறைய பட்டாசுகளை எடுத்து வந்தான்.
“இவ்ளோ வெடிச்சா பொலியூஷன் ஆகிடும்.” என்றவளை முறைத்தவன்,
“கொஞ்சமா வெடிச்சா ஒன்னும் ஆகாது. ஒருநாள் தானே…”
“இதே மாதிரி ஊர்ல இருக்குற அத்தனை பேரும் கொஞ்சம் கொஞ்சம் வெடிச்சாலே அவ்வளவு மாசு வரும்.”
“அப்படி மாசு ஆகும்னு பாக்குறவங்க அரசியல்வாதிங்க கூட்டம், தேர்தல் முடிவு, சாவு ஊர்வலம், படம் ரிலீஸ் அப்போ வெடிக்குறதுக்கு எல்லாம் தடை போடணும்.” என்றவனிடம் பேசி வெல்ல முடியாது என்றுணர்ந்து அமைதியாகிவிட்டாள்.
முதலில் அவனே வீட்டு வாசலில் ஒரு நூறுவாலா வைத்து வந்தவன் ஊதுபத்தியை அவளிடம் நீட்ட, நானா என்று இரண்டடி பின் நகர்ந்தாள் அதிரா.
“ஓ… இந்த துப்பாக்கி எல்லாம் அசால்ட்டு இந்த வெடினா மேடமுக்கு கிலியா…” என்று கேலி பேசியவன் பிடிவாதமாக அவள் கையில் ஊதுபத்தியை திணித்து அவளை தன் கைவளைவிலேயே இழுத்துச் சென்று ஒரு நூறுவாலாவை வைத்துவிட்டுதான் மூச்சே விட்டான்.
அவள் வைத்த சரம் வெடித்து முடிக்கும் வரை அவன் கைவளைவில் கழுத்தில் முகம் புதைத்து நின்றவள் அது வெடித்து முடிந்தும் அவன் தோளில் சாய்ந்த இருந்தாள்.
லேசாக குனிந்து அவள் செவியருகே, “அடுத்தது வைக்க வேணாமா?” என்று கிசுகிசுக்க, நிதானமாக அவனிலிருந்து நகர்ந்தவள் வாசல் படியில் சென்று அமர்ந்துகொண்டு கண்களைத் துடைத்தாள்.
அவளது கலங்கிய விழிகளை பார்த்தவன் ஊதுபத்தியை அப்படியே போட்டுவிட்டு அவளிடம் வந்தான், “என்னாச்சு? நான் எதுவும்?” என்று ஆரம்பிக்க, இம்முறை அவன் வாயை இவள் கைக்கொண்டு மூடினாள்.
“ஏதாச்சு பேசுன புடிச்சு உள்ள தூக்கி போட்டுருவேன்.” குரல் கலங்கி, விழிகள் நீர் சுரந்து, முகம் மலர என மூன்று வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி அவனை நன்றாகவே குழப்பிவிட்டாள்.
அவள் கையை விலக்கியவன் நெற்றி சுருங்க, “என்ன செக்ஷன்ல போடுவீங்களாம்?” என்று பார்க்க,
“இ.பி.கோ.55.” மலர்ந்த முகத்துடன் சொன்னவள் அவன் தலையை லேசாக கலைத்துவிட்டு உள்ளே செல்ல, இவன் மூளை சட்ட புத்தகத்தில் இருக்கும் IPC செக்ஷன் அனைத்தையும் மனதிற்குள் ரிவைஸ் செய்தது.
சட்டென்று அவள் சொன்ன செக்ஷன் நினைவிற்கு வரவில்லை. வேகமாக உள்ளே சென்று அவன் அலைபேசி எடுக்க, நொடியில் அதை பிடுங்கியிருந்தாள் அதிரா.
“ம்ச்… என்ன பண்றீங்க. போன் கொடுங்க.”
“அப்போ படிச்சது எல்லாம் மறந்துட்ட… IPC. செக்ஷன் 55 என்னனு சொல்லிட்டு போனை வாங்கிக்கோ.” பழைய அதிரா மீண்டிருந்தாள். விழிகளில் கண்ணீர் இல்லை மாறாக குறும்பு எட்டிப்பார்த்தது. கலங்கியிருந்த முகம் தெளிவாக இருந்தது.
தெளிவாக இருந்த இவன்தான் குழம்பி யோசனையாகி நின்றான்.
“ஏதாச்சு க்ளூ?” என்று அவன் பாவமாக பார்க்க, உதட்டை பிதுக்கினாள் அதிரா.
“இதெல்லாம் போங்கு… முக்கியமா என்னத்தையோ சொல்லிட்டு அது என்னனு கூட தெரிஞ்சிக்க விடமாட்டேங்குறீங்க.” என்று முகம் சுருக்கினான்.
“அதுவும் தீபாவளிக்கு அன்னைக்கு என்னை சுத்தல்லல விடுறீங்க.” என்று அவன் கொடி பிடிக்க, அலைபேசியை அவனிடம் நீட்டிவிட்டு சமையலறை சென்றாள் அதிரா. வேகவேகமாக கூகிளில் இ.பி.கோ.55 என்று டைப் செய்தான்.
‘ஆயுள் தண்டனை.’ என்று பதிலை எடுத்துவந்து கொடுத்தது கூகிள்.
‘இதை எதுக்கு சொன்னாங்க?’ என்று யோசித்தவனுக்கு அதன் பின்பொருள் புரிபடவே ஓரிரு நிமிடம் தேவைப்பட்டது. புரிந்த நொடி உல்லாச கூச்சலிட்டவன் ஓடிச்சென்று அதே வேகத்தில் பின்னிருந்து அவள் இடை பற்றி தூக்கினான்.
“ஹே!” அவள்தான் பயந்து கத்தினாள்.
“என்னை சுத்தல்ல விடுறதே இவ்வளவு நாள் வேலையா பாத்தீங்கல்ல… இனி முடியாதே…” என்று அப்படியே அவளை சுற்ற, கண்களை இறுக மூடிய அதிரா ஸ்டாப் என்று கத்தும் வரை அவன் சுற்றுவதை நிறுத்தவில்லை.
அத்தனை சுற்றிவிட்டு கீழே விடவும் சட்டென நிதானத்திற்கு வரமுடியவில்லை அவளால். தலை சுற்றியது. தடுமாறி விழப்போனவளை இழுத்துப் பிடித்து தன்னோடு இறுக்கிக்கொண்டான் அகிலன்.
இயல்புக்கு வரும் வரை அவன் தோள் பற்றி நின்றவள் மூச்செடுத்து அவனை முறைத்தாள், “என்னடா பண்ற? இப்படியா சுத்துவாங்க… தலையே சுத்திடுச்சு.”
“எப்படியும் ஒருநாள் சுத்தத்தானே போகுது. அதுக்கு ஒத்திகையா வச்சிக்கோங்க.”
முதல்முறையாக அவன் பேசுவது அவளுக்கு புரியவில்லை. விழித்து நின்றாள். அட்டகாசமாக சிரித்தவன் அவள் புறம் சரிந்து கிசுகிசுப்பான குரலில் அர்த்தம் சொல்ல, அவன் தோளில் அடித்தவள் முகம் செவ்வானமாய் அத்தனை நாணம் பூசி நின்றது.
“ரொம்ப பேசுற அகிலன்.” வெட்கத்தின் சாயலில் அவள் முறைக்க முயல,
“நடக்கப்போறதை தானே சொல்றேன்.” என்று உரிமையாக குழைந்தான் அகிலன்.
“ச்ச்சீ போடா…” அவனை தள்ளிவிட்டு அவள் வெளியே செல்ல,
“என்ன ச்ச்..சே நடக்கல அதுக்குள்ள ச்சீ’யா.” என்று அவன் அதற்கும் பேச,
“வாயா இது… இதுக்குதான் சொல்லாம இருந்தேன்.” என்று அவன் வாயிலேயே பட்டென்று அடித்தாள் அதிரா.
“சரி, மீதியை கொளுத்தலாமா? புஷ்வானம், சக்கரம், மத்தாப்பு எல்லாம் இருக்கு.” என்று அவள் கைபிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.
அவன் தோளில் சாய்ந்த வண்ணம் அனைத்தையும் வெடித்து முடித்து, போட்டா எடுத்துக்கொண்டவர்கள் சோர்ந்து சோபாவில் அமர,
“ரொம்ப வருஷம் கழிச்சு சந்தோஷமா தீபாவளி கொண்டாடியிருக்கேன் அகிலன்.” மனதளவில் உருகியிருந்தாள் அதிரா.
“இனி எல்லா வருஷமும் இப்படியே கொண்டாடிலாம்.” என்றான் அவனும் புன்னகை முகமாய்.
“அம்மா இறக்குறதுக்கு முன்னாடி அவங்களோட நான் கடைசியா கொண்டாடுன பங்ஷன் தீபாவளிதான்.” என்றதும்தான் அவள் ஏன் இத்தனை கலக்கமாய் இருக்கிறாள் என்று புரிந்தது அகிலனுக்கு. உடனே எழுந்து அவளருகில் சென்று அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
ஆதரவாய் அவள் தோளை வருடிக்கொடுக்க, “டெல்லியில ஹாப்பியா இருந்தாலும் இங்க கொண்டாடுற மாதிரி இருக்காது. இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். தேங்க்ஸ்.” என்று நிமிர்ந்து அவன் விழிகளை ஏறிட்டு சொல்ல, குனிந்து அவள் நெற்றியில் லேசாக இதழ் ஒற்றி எடுத்தவன், “என்னோட தீபாவளியை மறக்கமுடியாததா, அழகாக்குனதுக்கு தேங்ஸ்.” என்று அவன் கிசுகிசுக்க, தயக்கம் விடுத்து அவளும் அவன் இடை சுற்றி கைபோட்டு அணைத்துக்கொண்டாள்.
நிமிடங்கள் அப்படியே கடக்க, “வீட்டுக்கு பேசுறீங்களா?” என்று கேட்டிருந்தான் அகிலன்.
“வீட்டுக்கா?” என்று அவள் அணைப்பிலிருந்து வெளியே வந்து பார்க்க,
“அம்மாகிட்ட வேணிகிட்ட? அம்மாட்ட கேட்டுதான் சுவாமி படம், சுவீட் வாங்கிட்டு வந்து வச்சி நெய்வேத்தியம் பண்ணேன்.”
“அவங்க ஒன்னும் சொல்லல?”
“அவங்ககிட்ட நம்மள பத்தி சொல்லிட்டேன்…” என்றதும் அவள் முகமே மாறிவிட்டது.
“அதுக்குள்ள ஏன் சொன்ன? எனக்கு இப்போவே கல்யாணம் பண்ணிக்குற ஐடியா எல்லாம் இல்லை.” என்றாள் அதிரா தீர்க்கமாய்.
“எனக்கும் இப்போவே பண்ணிக்கனும்னு இல்லை. எக்ஸாம், ட்ரைனிங் எல்லாம் முடிச்சிட்டு உங்களுக்கு எப்போ ஓகேவோ அப்போ பண்ணிக்கலாம்.” என்றதும் ஆசுவாசமாக உணர்ந்தாள் அதிரா.
அவளுமே இதைத்தான் எண்ணி இருந்தாள். அவன் தேர்வில் தேர்ச்சி பெற்று அவன் நிலை கொஞ்சம் உயர்ந்த பின் மணம் புரிந்தால்தான் இருவருக்கும் ஏற்றத்தாழ்வு கம்மியாக இருக்கும். அதன்பொருட்டு சங்கடங்களும் மனக்கசப்புகளும் வராது என்பது அவள் எண்ணம். அவனும் அதை பகிர, இருவரின் எண்ணம் ஒத்துப்போனதில் மனதில் இருந்த ஐயத்தை மொத்தமாக துடைத்து எறிந்துவிட்டாள் அதிரா.
பின் அகிலன் குடும்பத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேச, வேணி அண்ணி அண்ணி என்று ஓயாது பேசியதில் இவள் முகம் பிரகாசித்தது. என்னதான் மறக்க முடியாத நாளாக இருந்தாலும் அந்த நாளும் முடிவுபெறும் தானே. நிறைவாக கழிந்த அந்த நாளிற்கு பின் படிப்பில் இன்னும் தீவிரமானான் அகிலன்.
தினம் சுறுசுறுப்பாக விடியும் காலை எப்போதும் போல் செல்ல, இரவு இருவர் மட்டும் உணவு உண்ணும் வேளையில் இவன் கொஞ்சலுக்கு பற்றாக்குறை இருக்காது. அவள் அனைத்தையும் அனுபவித்தபடி புன்னகையுடன் இருப்பாள்.
“என்ன மேடம் கேஸ் இப்படி இழுத்துட்டு போகுது? பேசாம கிடைப்புல போட்டுட்டு வேற வேலை பாக்க போலாம்.” என்ற பரிதியை ஆயாசமாக பார்த்தாள் அவளும்.
“அந்த மூணு மிஸிங் கேஸ்லேந்து ஒன்னை ஷார்ட்லிஸ்ட் பண்ணி டீ.என்.ஏ டெஸ்ட் எடுக்க அப்ளை பண்ணா கோர்ட்டும் பெர்மிஷன் கொடுக்காம இப்படி இழுத்தடிக்குறாங்க. நானும் ஐ.ஜிகிட்ட பேசியிருக்கேன் பரிதி. இப்போ இந்த கேஸ் ப்ரியாரிட்டி இல்லைனு அவரும் அழுத்தம் கொடுக்காம தள்ளிப் போடுறாரு.” என்றாள் அதிராவும் அதிருப்தியாய்.
“அந்த சிங்கப்பூர் ஆள் வர்றாரா?”
“அவர் வந்தாலும் டீ.என்.ஏ டெஸ்ட்டுக்கு பெர்மிஷன் கிடைக்கணுமே?”
“க்ரைம் சீன் ஸ்பாயில் ஆகிடுச்சுனு வேற நமக்கு கோர்ட்டு கண்டனம் குடுக்குறாங்க. இந்த மொத்த ஏரியாவோட குப்பையும் அங்க கொட்ட கூடாதுனு சொன்னாலும் நம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு கொட்டிட்டுதான் இருக்காங்க. அதுவும் இந்த தீபாவளிக்கு அப்புறம் ரொம்ப மோசமாகிடுச்சு மேடம்.”
“மழையில அப்புறப்படுத்துற வேலையும் நின்னுடுச்சுனு கேள்விப்பட்டேன்.” என்று அதிரா பார்க்க, உதடு சுழித்தான் பரிதி.
“அவ்வளவுதான் மேம் இது.”
“இல்லை நாம எதையோ மிஸ் பண்றோம்.” என்று நெற்றிப்பொட்டில் அழுத்தம் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள் அதிரா.
“எனக்கு தெரிஞ்சு எல்லாம் கவர் பண்ணிட்டோம் மேம். நீங்க வேணும்ன்னா திரும்ப பாருங்க.” என்று அந்த வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகளை கொடுத்துவிட்டு சென்றான் பரிதி.
எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவள் பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு கோப்பை பிரித்து அமர்ந்துவிட்டாள்.
“என்ன இன்னைக்கு வீட்டுக்கே வேலையை தூக்கிட்டு வந்தாச்சா?” என்று கேட்டபடி உண்டு கைகழுவி வந்த அகிலன் அவளை உரசிக்கொண்டு அமர்ந்தான்.
“என்னை டிஸ்டர்ப் பண்ணாத. முக்கியமா பாத்துட்டு இருக்கேன்.” என்று அவள் சொன்னபின் இவன் தொந்தரவு செய்யாமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டான்.
சில நிமிடங்களுக்கு பின் கையை உயர்த்தி ஆர்பாட்டமாய் அவள் சிறு ஓசை எழுப்பவும் என்னவென்று இவன் திரும்பிப் பார்க்க,
“வெளில போகணும் அகிலன். உன் வண்டில போகலாமா?” என்றதும் புத்தகத்தை பட்டென்று மூடிவைத்துவிட்டான் அகிலன்.
மழை நாள் ஆரம்பித்த பின் பாதி நாள் இரவு அவள் வீட்டிலே தங்கும் நிலை வந்தால் அவன் உற்சாகத்துக்கு அளவில்லை என்றால் மறுபுறம் அவனை விடிய விடிய படிக்க அமர்த்தி அவனுக்கு வேறு எண்ணங்கள் வராதவாறு தடுத்துவிடுவாள் அதிரா. அப்படி கண்டிப்பாக இருப்பவள் இன்று வெளியே வண்டியில் செல்ல வேண்டும் என்று கேட்கவும் தலைகால் புரியவில்லை அகிலனுக்கு.
“ஊஹூ… இப்போவாச்சும் தோணுச்சே… லைட்டா இந்த சாரல் மழையில நனைஞ்சிட்டே நான் வண்டி ஓட்ட, பின்னாடி உக்காந்து நீங்க என்னை கட்டிபுடிச்சிட்டே வர… அந்த பீலே தனிதான்…” என்று கற்பனைக்கு சென்றவனை தலையில் தட்டி எழுப்பிவிட்டாள் அதிரா.
“மான்சி பாடி கிடைச்ச குப்பை கிடங்குக்கு போகணும். எழுத்துரு…” என்று இவள் எழுந்துகொள்ள, மூக்கை உறிஞ்சியவன்,
“என்னது அந்த நாத்தம் புடிச்ச இடத்துக்கு போகணுமா? மொதமொத என்கூட வண்டில வரப்போறீங்க அப்படியே ஜாலியா இந்த பீச் பக்கம் போக சொல்வீங்கன்னு பாத்தா…” என்று எழ மனமில்லாமல் அமர்ந்திருப்பவனை கைபிடித்து எழுப்பியவள், “போய் வண்டியை எடு. முக்கியமான விஷயம்.” என்றதும் பெருமூச்சுவிட்டு மனதே இல்லாமல் கிளம்பினான்.
ஐந்து நிமிடத்தில் உடை மாற்றி வந்தவள் வண்டியில் அவன் பின் இரண்டுகால் போட்டு அமர்ந்துகொள்ள, “வண்டில போகும் போது இந்த இடுப்பை புடிச்சிக்குறது, முதுகுல சாஞ்சிக்குறது இந்த சீன் எல்லாம் வருமா?” என்று அகிலன் திரும்பிப் பார்த்துக் கேட்க, அவன் தலையை லேசாக தட்டியவள், “ஆசைதான் உனக்கு. மாணிக்கம் வீடு இருக்குற ஏரியாவுக்கு போ முதல்ல.”
“குப்பை கிடங்கு போகணும்னு சொன்னீங்க?”
“நான் சொல்ற இடத்துக்கு போடா…” என்று அவனை மிரட்டி அழைத்துச் சென்றாள்.
அவன் எதிர்பார்த்த இதமான சம்பவத்திற்கு பதில் திகிலாய் அமைந்தது பயணம். மாணிக்கம் வீடு இருக்கும் ஏரியாவுக்கு சென்றபின் அங்கிருந்து அவர் அலுவலகம் செல்ல எந்தெந்த வழி இருக்கிறதோ அது அனைத்தையும் கூகுளில் பார்த்தாள் அதிரா. குப்பை கிடங்கு இருக்கும் பகுதியை கடந்து செல்லும் ஒரு வழி குறுக்கு வழியாக இருந்தது.
அதே போல கணவர் காணாமல் போனதாக திருச்சியிலிருந்து புகார் கொடுத்த பெண்மணியின் கணவரும் அந்த குப்பை கிடங்கு இருக்கும் பகுதியின் சுற்றத்தில் தான் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்திருக்கிறார். அவரது மகன்கள் வெளிநாட்டில் இருக்க, கணவர் காணாமல் போகவும் மனைவி தனியே காவல் நிலையம் அலைய முடியாமல் உடம்புக்கு வந்து திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். காணாமல் போன அந்த நபர் அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேலை செய்பவர். அவரும் தினம் இந்த கிடங்கை கடந்துதான் செல்ல வேண்டும்.
“இங்க அப்படி என்ன இருக்குனு இப்படி குறுகுறுன்னு பாத்துட்டு இருக்கீங்க?”
நாற்றம் தாங்காமல் மூக்கை பொற்றியபடி அதிராவை பின்தொடர்ந்தவன் அவள் அந்த கிடங்கில் லாரிகள் செல்லும் பாதையில் நிற்க, அவள் தோள் தொட்டு கேட்டான்.
“மிஸ் ஆனதா சந்தேகப்படுற லிஸ்டுல இருக்குற ரெண்டு பேருமே ஏதோவொரு கவர்மெண்ட் வேலையில இருக்காங்க. அண்ட் அவங்க தினம் இந்த வழியா அவங்க ஆபிஸ் போய்ட்டு வர்றதுதான் அவங்களுக்கு ஈஸியும் கூட. மான்சி… அவளும் ஃபார்மலேந்து அவங்க வீட்டுக்கு இந்த வழில வந்திருக்க வாய்ப்பு அதிகம், ஏன்னா கூகிள் இந்த வழியை தான் பாஸ்டஸ்ட் ரூட்னு காமிக்குது. அப்போ இங்கதான் என்னமோ இருக்கு. இந்த கிடங்குலதான் மர்மம் இருக்கு.” என்றவளை புரியாது பார்த்தான் அகிலன்.
error: Content is protected !!