Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 11

     “உங்களுக்கு போலீஸ் னா அவ்ளோ பிடிக்குமா அண்ணி?” ஆச்சர்யமாகக் கேட்டான் கேசி.

     “எனக்கு போலீஸ் பிடிக்கிறதில் அப்படி என்ன ஆச்சர்யம் உங்களுக்கு?” அமைதியாகக் கேட்டாள் நீலா.

     அமிர்தா மற்றும் மோகனன் இருவருக்கும் நடுவில் அழகான பந்தம் ஒருபக்கம் நல்லமுறையில் வளர்ந்துகொண்டிந்தது என்றால், இந்தப்பக்கம் சாருகேசி மற்றும் நீலாம்பரிக்கும் இடையேயான உறவும் கௌரவமாக வளர்ந்து வந்தது. அதை சகோதரத்துவம் என்றும் சொல்ல முடியாது, நட்பு என்றும் சொல்ல முடியாது. உறவும், அன்பும், கலந்து உருவான பெயர் அறியாத பந்தம் ஒன்று நால்வருக்கும் நடுவில் முளைத்திருந்தது.



Advertisement

     “பொதுவா உங்களை மாதிரி அமைதியான பொண்ணுங்க, எந்த வித சண்டை சச்சரவும் இல்லாத வாழ்க்கையோடு கூடிய அமைதியான ஆண்களைத் தான் விரும்புவாங்க. நீங்க ஏன் அண்ணி மாத்தி யோசிச்சீங்க.” தன் சந்தேகத்தைக் கேட்டான் கேசி.

     “நீங்க சொன்னது சரிதான். எனக்கும் அமைதியான வாழ்க்கை வாழத்தான் உள்ளுக்குள்ள ஆசை இருந்தது. ஆனா அதைத் தாண்டி நிதர்சனம் னு ஒன்னு இருக்கே. போலீஸ் ஒருத்தர் எங்க கூட இருந்தா வருங்காலத்துக்கு நல்லா இருக்கும் னு தோணுச்சு. அதனால் தான் அம்மா மாப்பிள்ளை பார்க்கிறதைப் பத்தி பேசும் போது, போலீஸ் மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்.” எனத் தன் நிலையை விளக்கினாள்.

     “ரொம்ப தனிப்பட்ட காரணமா இல்லாமப் போனா அது என்ன காரணம் னு நான் தெரிஞ்சுக்கலாமா?” தயங்காமல் கேட்டுவிட்டான் கேசி. அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. இடைப்பட்ட காலங்களில் நீலா மீது தனி மரியாதையும் அன்பும் முகிழ்த்திருந்தது அவனுக்கு. அவள் தன் அண்ணனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மலையளவு ஆசை இருந்தது. அதையும் தாண்டி அவளையும் பிடித்திருந்தது என்பது தான் அங்கே விஷயம்.

Advertisement

     “எதுக்காக அக்காவை கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க?” அமிர்தா கூட எரிச்சல்பட்டாள்.

Advertisement

     தங்கையை அமைதிப்படுத்திவிட்டு, “உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? உங்களுக்கு எங்க குடும்பத்தைப் பத்தி நல்லாவே தெரியும். எங்களுக்கு அண்ணன், தம்பின்னு ஆம்பிளைத் துணை கிடையாது. அப்பாவும் இருந்தும் இல்லாத மாதிரி தான்.

     இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. நாளைக்கு என் தங்கச்சி கல்யாணம் பண்ணிப் போற வீட்டில் ஏதாவது பிரச்சனை வந்தா, இல்ல வெளியே இருந்து எனக்கோ, அவளுக்கோ, அவ குடும்பத்துக்கோ என் குடும்பத்துக்கோ பிரச்சனை வந்தா சமாளிக்க, தைரியமான அதே சமயத்தில் பவர் இருக்கிற ஒரு ஆள் எங்க கூட இருந்தா நல்லா இருக்கும் னு எப்பவும் யோசிப்பேன். ஒருமுறை என்னோட தோழி தான் இந்த ஐடியாவை கொடுத்தா. எனக்கும் பிடிச்சிருந்தது. அப்படியே மனசில் தங்கியும் போச்சு.” என்றுவிட்டு தோள்களைக் குலுக்கினாள் நீலாம்பரி.

     கேசியின் மனம் வேகவேகமாக சில கணக்குகளைப் போட்டது. அது சாத்தியம் தானா என்கிற சந்தேகம் வந்தாலும், செயல்படுத்திப் பார்க்காமல் நடக்காது என்கிற முடிவுக்கு வர வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தான்.

Advertisement

     “அக்கா எனக்காகவா?” அமிர்தா நீலாவின் கரத்தைப் பிடித்தபடி கண்கலங்க, “பைத்தியம், போலீஸ்காரரை கல்யாணம் பண்ண இதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான். இன்னொரு பக்கம் அரசாங்க வேலை, பார்க்கவும் அழகா இருப்பாங்க, நல்லா சம்பாதிப்பாங்கன்னு நிறைய கணக்கு இருக்கு.” என்று சிரிக்க, அக்காவின் முயற்சி புரிந்து தானும் சிரித்தாள் அமிர்தா.

     ஆனால், அக்காவின் யோசனை தனக்காக தான் என்பது புரிந்தே இருந்தது அவளுக்கு. நீலாம்பரி தன் மீது கொண்டிருக்கும் அன்பை நினைத்து உளமாற மகிழ்ந்தாள் அமிர்தா. அந்தக் கணம் எதிர்காலத்தில் எப்படியான சூழ்நிலை வந்தாலும் அக்காவை என்றும் கைவிடக்கூடாது என்று மனதோடு தீர்க்கமான முடிவெடுத்தாள். அன்றைய அவர்களின் சந்திப்பு நல்லபடியாக நடந்து முடிந்தது.

     கேசிக்கு இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. அக்கா, தங்கை இருவரில் யாராவது ஒருவரின் கணவன் காவலனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது தானே நீலாவின் கனவு. அது அவளின் கணவனாக இருந்தால் என்ன? அவளின் தங்கையின் கணவனாக இருந்தால் என்ன? தான் போலீஸாகிவிட்டால் எல்லாக் கணக்கும் நேராகிவிடும் என்று கணக்கு போட்டான்.

     அண்ணி நீலாவின் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திற்கும், அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆழ்மன ஆசைக்கும் சேர்த்து ஒரு விடிவு கிடைத்துவிடும் என்றால், தான் ஏன் இதைச் செய்யக்கூடாது என்று யோசித்தவன் அடுத்த நாளில் இருந்தே அதற்கான முயற்சியில் இறங்கினான். அந்த அளவில் இருந்தது நீலாவின் மீது அவன் கொண்டிருந்த அன்பும், அவளை எப்படியாவது தன் அண்ணனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்கிற பிடிவாதமும்.

     கேசி தன் முடிவைப் பற்றி அமிர்தாவிடம் சொல்ல, “என்னாச்சு உங்களுக்கு? பேங்க் வேலைக்கு தானே ட்ரை பண்ணப் போறதா சொன்னீங்க. இப்ப என்ன புதுசா போலீஸ்.” குழப்பமாய் கேட்டாள்.

     “ஏன் நீ போலீஸ்காரனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” இந்த முடிவை எடுக்கும் போது அவன் மனதில் இருந்த ஒரே ஒரு பயத்தை வெளிப்படுத்தினான்.

     “நான் போலீஸ்காரனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படல தான். ஆனா என் கேசிக்கு அது தான் விருப்பம் னா அதைத் தடுக்க மாட்டேன்.” என்று சொல்லி அவனை உச்சிகுளிர வைத்தாள் அமிர்தா.

     தயங்கித் தயங்கி தன்னுடைய இந்த முடிவின் பின்னால் இருக்கும் காரணத்தைப் பற்றி அமிர்தாவிடம் விளக்கினான் கேசி. “உங்க அண்ணனா?” ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியுடன் கேட்ட அமிர்தாவுக்கு அந்த இணை ஏன் சாத்தியம் ஆகக்கூடாது என்றே தோன்றியது.

     குற்றம் குறை சொல்ல முடியாத அன்பான ஆண் தேவதை மோகனன். அவனைப் போன்றவனை மணக்க தன் அக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே நினைத்தாள். அதை வார்த்தையால் வெளிப்படுத்தவும் செய்தாள்.

     “உங்க அண்ணன் மாதிரி ஒருத்தர் கிடைக்கிறதுக்கு அக்கா கொடுத்து வைச்சிருக்கணும். நானும், அக்காவும் ஒரே வீட்டில் நினைக்கவே ஜாலியா இருக்கு.” சந்தோஷ மிகுதியில் சொன்னவள், “ஆமா இதுக்காக எதுக்கு நீங்க போலீஸ் ஆகனும். உங்களை நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா அக்காவோட பயங்கள் எல்லாம் தேவையே இல்லாதது தானே.” அத்தனை நம்பிக்கையுடன் கேட்டவள் மீது காதல் பெருகியது கேசிக்கு.

     அவளையே பார்த்தபடி அவன் இருக்க, “உங்க இரண்டு பேர்கிட்ட இருந்து எங்களை நாங்க காப்பாத்திக்கிற மாதிரி சூழ்நிலை கனவில் கூட வராது. அதோட உங்களைத் தாண்டி வெளியே இருந்து எந்தப் பிரச்சனையும் எங்களைத் தீண்டிடுமா என்ன? அதனால் இந்த போலீஸ் ஆகும் வேலை எல்லாம் வேண்டாம். உங்களுக்குப் பிடிச்ச வேலைக்குப் போங்க. அக்கா அம்மாகிட்ட நானே பேசுறேன்.” என்றாள் அமிர்தா.

     “இல்ல அமிர்தா தெரிஞ்சோ தெரியாமலோ அண்ணி ஒரு விஷயம் ஆசைப்பட்டாங்க. அதுக்குப் பின்னாடி நியாயமான காரணமும் இருக்கு என்னும் போது அதை நிறைவேத்துறதில் தப்பு இல்லையே. என் அண்ணனைக் கல்யாணம் பண்ணி எங்க குடும்பத்தையே காப்பாத்த வந்த தேவதை என் அண்ணி. அவங்களுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா?

     அதோட எனக்குப் பிடிச்ச வேலை பிடிக்காத வேலைன்னு எதுவும் கிடையாது. இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. போலீஸ் ஆகி தான் பார்ப்போமே.” என்க, “அக்கா உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கிறது சாதாரண விஷயம் தானே. அதை ஏன் ஏதோ குறிஞ்சிப் பூ மாதிரி அதிசயமா பார்க்கிறீங்க.” அமிர்தா கேட்க, அத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்த கேசியின் முகம் சுருங்கியது.

     “என்னாச்சு கேசி?” நொடி நேரம் அவன் முகம் சுருங்கியது கூட அவள் கண்ணில் இருந்து தப்பவில்லை.

     வேகமாகத் அமிர்தா பக்கம் திரும்பியவன், அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டான். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, பதட்டப்படுவனாக அவன் கைகள் ஆரம்பித்து உதடுகள் வரை நடுங்கத் துவங்கியது.

     காதோரம் ஆரம்பித்த வியர்வை வடிந்து கன்னத்தை தொட,  “என்னாச்சு கேசி உங்களுக்கு. எதை நினைச்சு இந்தளவுக்கு நெர்வஸ் ஆகுறீங்க?” பயத்தோடு கேட்டபடி தன் துப்பட்டா கொண்டு அவன் வியர்வையைத் துடைத்துவிட்டாள் அமிர்தா.

     “என் அண்ணனைப் பத்தி நான் உன்கிட்ட சொல்லணும் அமிர்தா. என் அண்ணன் என்னை விட ரொம்ப அழகா இருப்பான், நல்லா சம்பாதிக்கிறான், ரொம்பவே பொறுப்பானவன், ஆனாலும் அவனுக்கு ஏன் கல்யாணம் ஆகலன்னு யோசிச்சு இருக்கியா?” என்று நிறுத்த, அமிர்தாவுக்கும் அப்போது தான் அது யோசனைக்கே வந்தது.

“அவருக்கு ஏதாவது பிரச்சனையா?” அப்படி இருக்கக் கூடாது என்னும் வேண்டுதலோடு கேட்டாள்.

     அவள் அப்படிக் கேட்டதும் பெரிய கேவல் ஒன்று வெளிப்பட்டது கேசியிடம் இருந்து. உள்ளங்கைகளால் தன் தலையில் அடித்துக்கொண்டவன், “எல்லாம் என்னால் தான். நான் மட்டும் அண்ணனை மாதிரி பொறுப்பானவனா நடந்துக்கிட்டு இருந்திருந்தா எதுவுமே நடந்திருக்காது.” என்றவன், நினைவுகளால் தன் சிறு வயது பிராயத்திற்குச் சென்றான்.

     அப்போது சாருகேசிக்கு எட்டு வயது, மோகனனுக்கு பதினைந்து வயது. சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டிருந்தனர் கேசியின் குடும்பத்தினர்.

     குடும்பத்தலைவர் ஆனந்த் பாதுகாப்பிற்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ற வகையில் கிடைக்க வேண்டும் என்று நகருக்குள் தான் வீடு தேடிக்கொண்டிருந்தார். ஆனால் தொலைக்காட்சியில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அங்கே தான் வீடு வாங்க வேண்டும் என்று அடம்பிடித்தான் சிறுவன் கேசி.

     “அங்க இன்னும் வீடுகளே சரியா வரல டா.” என்று மோகனன் அந்த வயதிற்குரிய புரிந்துணர்வுடன் தம்பியை அதட்டினாலும் கேசி கேட்க வேண்டுமே.

     அந்த வீட்டு மனைகளுக்கு மிக அருகே தீம் பார்க் வரப்போகிறது என்று அவர்கள் கொடுத்த விளம்பரம் அவனை பிடிவாதம் பிடிக்க வைத்தது. வேகமாக வளர்ந்து வரும் நகர். எப்படியும் விரைவில் நகரமயமாகிவிடும். அதோடு சற்று தொலைவிலேயே இரயில் நிலையமும் இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலும் கணிசமான தொகை கையில் மிஞ்சும். அதைக் கொண்டு ஏதாவது தொழில் கூடத் துவங்கலாம் என்று ஒப்புக்கொண்டு, கேசி சொன்ன இடத்திலேயே வீட்டு மனை வாங்கினார் ஆனந்த். போதுமான அளவு பணம் இருந்ததால் வீடு கட்டும் வேலையும்உடனே ஆரம்பிக்கப்பட்டது.

     அடுத்த ஒரு வருடத்தில் இவர்கள் குடும்பம் அந்த வீட்டில் குடிவரத் தயாரான போது, அந்த நகர் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் வீட்டைச் சுற்றி இருந்த மனைகளில் சிலவற்றில் மட்டுமே வீடுகள் எழும்ப ஆரம்பித்திருந்தன.

     ஆரம்பத்தில் சில நாட்கள் மனைவி பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு பதைபதைக்கும் மனதோடு தான் வேலைக்கு செல்வார் ஆனந்த். ஆனால் அவர் பயந்தது போல் எதுவும் நிகழவில்லை என்பதால் நாளாக நாளாக பயம் குறைந்திருந்தது. ஆனால் ஆபத்து குறைந்திருக்கவில்லை.

     அது ஒரு மழைக்காலத்தின் துவக்கம். கால மாற்றத்தால் சிறுவன் கேசிக்கு நல்ல காய்ச்சல். மாத்திரை, டானிக் கொடுத்தும் குறையவில்லை. நேரம் செல்லச் செல்ல வெப்பநிலை உயர்ந்துகொண்டே செல்வது போல் தோன்ற பயம் பிடித்தது அந்தக் குடும்பத்தினருக்கு.

     இரவு ஏழு மணி தான் ஆகி இருந்தது. அதனால் மருத்துவமனை போய் வந்துவிடலாம் என்கிற நினைப்போடு ஆனந்த் கிளம்ப, பைரவிக்கு மட்டும் மோகனனை தனியே விட்டுச் செல்ல தயக்கம்.

     “அவன் என்ன சின்னப்பையனா மீசை முளைக்கும் வயசு ஆகிடுச்சு. அதெல்லாம் அவன் தனியா சமாளிச்சுப்பான்.” தைரியம் சொல்லி மனைவியை அழைத்துச் சென்றிருந்தார் ஆனந்த்.

     அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் இந்தப்பக்கம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. சொல்லப்பட்டிருந்த எச்சரிக்கை நினைவு வர, ஜன்னல் வழியே வெளியே நிற்பது யார் என்று பார்த்தான் மோகனன். வெளியே நின்றிருந்தது அவர்கள் வீட்டிற்கு அருகே ஒரு மனையில் தற்காலிக குடிசை போட்டு தங்கி இருந்த சரஸ்வதி. பைரவிக்கு சில மேல் வேலைகள் செய்து கொடுப்பவர் என்பதால் வீட்டில் இருந்த அனைவருக்குமே பழக்கம் தான்.

     அதனால் துணிந்து கதவைத் திறந்து விட்ட மோகனன், “அம்மா இல்லையே அக்கா.” என்க, “அம்மா வரும் வரை அக்கா உள்ள இருக்கேன் தம்பி.” என்றவர் அவன் பதில் சொல்லும் முன்னர் முந்திக்கொண்டு உள்ளே வந்தார்.

     குழப்பத்தோடு மோகனன் அவர் பின்னே வர, “தம்பி கதவை மூடி தாள்ப்பாள் போடு.” பதட்டமாகச் சொன்னார்.

     “வீட்டு ஆள் இல்லாம வேற யாரும் வீட்டுக்குள்ள இருந்தா கதவை சாத்தக்கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்கார் அக்கா.” நல்லபிள்ளையாகப் பதில் சொன்னான் மோகனன்.

     “நேரம் காலம் தெரியாம நீ வேற.” என்றவர் தானே சென்று கதவை அடைக்கப் போக வெளியில் இருந்து யாரோ உதைத்ததில் கதவு திறந்து கீழே விழுந்தார் சரஸ்வதி.

     “என்னடி, பாத்ரூம் போயிட்டு வரும் கேப்பில் இங்க வந்துட்ட.” ஒரு மாதிரி பார்வையோடு கேட்க, “இங்க பாருங்க, எதுவா இருந்தாலும் காலையில் பார்த்துக்கலாம். போங்க  இங்க இருந்து.” என்றபடி தன்னைத் தேடி வந்த கணவனைப் பிடித்து பின்னால் தள்ளப் பார்த்தார் சரஸ்வதி.

     “காலையில் வரியா, அப்ப உனக்காக காத்துக்கிட்டு இருக்கிற என் மேனேஜனருக்கு என்ன பதில் சொல்றது. வா என்கூட.” என்றபடி கை பிடித்த கணவனை அடித்தே கொன்றுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குப் போய்விட்டார் சரஸ்வதி.

     அவருக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகி இருந்தது. அவரின் கணவருக்கு குடிக்காமல் இருக்க முடியாது. வரதட்சணை கொடுக்க முடியாமல் மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என்று கிடைத்த இடத்தில் தள்ளிவிடப்பட்டவர் என்பதால் பிறந்த வீட்டின் ஆதரவு இல்லாத நிலை.

     குடித்துவிட்டு அடிப்பது, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருப்பது வரை பொறுத்துப்போக முடிந்த சரஸ்வதியால், பணத்திற்காக மற்றவரோடு ஒன்றாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் கணவனைப் பிடிக்காமல் போய்விட்டது. குடியோடு சேர்த்து சில நாட்களாக எடுத்துக்கொள்ளும் வேறு விதமான போதை அவரை மிருகமாக மாற்றி வைத்திருக்க, அப்படியான நேரங்களில் எல்லாம் தப்பித்து இங்கே வந்துவிடுவார். இன்றும் அப்படித்தான் வந்திருந்தார்.

     “போங்க இங்க இருந்து.” சரஸ்வதி கணவனைப் பிடித்து வெளியே தள்ள, கோபம் வந்தது அந்தக் குடிகாரனுக்கு. என்ன நடக்கிறது என்கிற குழப்பத்துடனும், எதுவும் தவறாக நடந்துவிடுமோ என்கிற பயத்துடனும் நின்று கொண்டிருந்த மோகனனைக் கண்டவர், “என்ன, என்னை விட்டுட்டு சின்னப் பையனா பிடிக்க இங்க வந்தியா, இல்ல அவன் அப்பனைப் பிடிக்க வந்தியா?” நாக்கில் நரம்பில்லாமல் பேச, ச்சீ என கணவனின் முகத்திலே காறி உமிழ்ந்தார் சரஸ்வதி.

     அதில் கோபம் தூண்டப்பட மனைவியை ஓங்கி உதைத்தவர் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த தன் மேனேஜரைப் பார்த்து கண்ஜாடை செய்ய அவரும் உள்ளே வந்து கதவைச் சாற்றினார்.

     “வேண்டாம் சின்னப் பையன் இருக்கான். போங்க இங்க இருந்து.“ கீழே விழுந்த வேகத்தில் எழுந்து நின்று பேசினார் சரஸ்வதி.

     “சின்னப்பையனா இருந்தா என்ன. அவனும் பையன் தானே. எதிர்காலத்துக்கு உபயோகப்படுறதைப் பார்க்கட்டும்.” என்றபடி தான் முதலில் கணவனாய் சரஸ்வதியை நெருங்க, கைக்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு தப்பிக்கப் பார்த்தார் அவர்.

     ஏதோ ஆபத்து என்பது வரை புரிந்துகொண்ட மோகனன், தன் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு வந்து மேனேஜரின் தலையில் அடிக்க, சிறுவனின் வலு இரத்தக்காயத்தை உண்டாக்கியதே தவிர, எதிராளி நினைவு இழக்கும் அளவிற்கு வலுவானதாக இல்லை.

     “என்னையே அடிச்சிட்டியா?” என்கிற வெறியில் மோகனனின் கையில் இருந்த மட்டையைப் பிடுங்கி, தான் அவனை அடித்திருந்தான் அந்த வெறிப்பிடித்தவன். சுயநினைவோடு அசைய முடியாமல் தரையில் விழுந்த அந்தச் சிறுவன் கண் முன்பே அந்த இரண்டு கயவர்களால் சரஸ்வதிக்கு அநியாயம் நிகழ்த்தப்பட்டது.

     எடுத்துக்கொண்ட போதை கொடுத்த மூர்க்கம் அவர்களை கண்ட மாதிரி நடந்துகொள்ள வைக்க, வலியில் அலறிய சரஸ்வதியின் சத்தம் கொட்டித் தீர்த்த மழையில் வெளியே கேட்காமல் போனது. ஆனால் அது சிந்தாமல் சிதறாமல் மோகனனின் ஆழ் மனதில் இறங்கிக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறியவில்லை.

     “ஆண்டவா காப்பாத்து, மோகனா காப்பாத்து, யாராவது காப்பாத்துங்க.” என்கிற சரஸ்வதியின் தொடர் அலறல் காதிற்குள் கேட்டுக்கொண்டே இருக்க, சிறுவன் நிலை குலைந்து போனான் உடலாலும் மனதாலும்.

     தலையில் உண்டான காயம் உயிர் வதை தந்தது. ஆனால் அதையும் தாண்டிய வலி ஒன்று அவன் மனதை இங்கு இடம் இல்லாமல் ஆக்கிரமித்தது. சுயநினைவே இல்லால் கால்சட்டையை நனைத்தான். கண்கள் துடித்துக்கொண்டிருக்கும் சரஸ்வதியின் மீதே நிலைத்திருந்தது. மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பு தேடி வந்தவர், வலியைத் தாங்கிக்கொள்ள முடியாதவராக அந்தச் சிறுவன் கண் முன்னே உயிரைப் பறிகொடுத்திருந்தார். அவர் இறந்து போனது கூடத் தெரியாமல் தங்கள் காரியத்தை நிறைவுசெய்துகொண்டிருந்தனர் அந்த மனித மிருகங்கள்.

     மருத்துவமனை சென்றிருந்தவர்கள் திரும்ப வர நடந்த குரூரம் தெரய வந்தது. பைரவி ஓய்ந்து போய் வாசலில் அமர்ந்துவிட்டார். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இன்னொரு பெண்ணைப் பார்க்க முடியாத கோலத்தில் சரஸ்வதியைப் பார்த்தவர் உடைந்தே போனார். ஆனந்த் மகனைக் கவனித்து அவளை அள்ளி அணைத்து மீண்டும் மருத்துவமனை நோக்கி ஓடினார்.

     அந்தக் கயவர்களை சரஸ்வதியின் இறந்த உடலோடு வீட்டிற்குள் வைத்து பூட்டி சாவியை கையோடு எடுத்துக் கொண்ட ஆனந்த், மகனை மனைவியின் பாதுகாப்பில் மருத்துவமனையில் விட்டுவிட்டு காவல்நிலையம் சென்றார்.

     சரஸ்வதியின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அந்தக் கயவர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணைக்காக ஆனந்த், பைரவி வீடு கையகப்படுத்தப்பட்டது.

     சில நாட்களுக்கு எங்கு தங்குவது என்று புரியாமல் மகனை அனுமதித்திருக்கும் மருத்துவமனையிலே இருந்தனர் அனைவரும். கேசிக்கு என்ன நடந்தது என்று சரியாகப் புரியாத நிலை. ஆனாலும் அண்ணனுக்கு ஏதோ பிரச்சனை என்பது வரை புரிந்துகொண்டிருந்தான்.

     நடந்த அனைத்தையும் கேள்விப்பட்ட மருத்துவர், உடல் காயம் விரைவில் ஆறிவிடும் தான். ஆனால் நடந்ததைப் பார்த்த அதிர்வில் உண்டான மனக்காயம் எத்தனை ஆழமானது என்பதைப் பார்த்த பின்னால் தான் அது குணமாக தேவைப்படும் நாட்களைக் கணிக்க முடியும் என்று கைவிரித்துவிட, அனைவரும் மோகனன் கண்விழிக்கும் நாளுக்காக காத்திருந்தனர்.

      இரண்டு நாட்கள் ஆனது மோகனன் கண்விழிக்க. ஆனால் எழும் போதே, “அம்மா” என்கிற அலறலோடு இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு தான் எழுந்தான்.

     பைரவி மகனை மார்போடு அணைத்துக்கொள்ள, பயத்தில் நடுங்கியது சிறுவனின் உடல். சரஸ்வதியின் அலறல் குரல் காதிற்குள் கேட்கத் துவங்க, அதைத் தொடர்ந்து நடந்த ஒவ்வொன்றும் படிப்படியாக நினைவு வந்தது. அளவுக்கு அதிகமான பயத்தில் இப்போதும் படுக்கையை நனைத்தான். அதைப் பார்த்து பதறிப்போய் அழுதார் பைரவி.

     மகனைத் தேற்றும் கடமையை உணர்ந்த ஆனந்த், “சரஸ்வதி அக்கா இப்ப நல்லா இருக்காங்கப்பா. அவங்க சொந்த ஊர் போயிட்டாங்க. அவனுங்க இரண்டு பேரையும் போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க. இனி அவங்க வெளியே வரவே முடியாது. ஒன்னும் இல்லடா. எல்லாம் கெட்ட கனவு மாதிரி நினைச்சுக்கோ.” என்று தேற்றினார். மருத்துவர் அப்படித்தான் சொல்ல சொன்னார். சரஸ்வதி இறந்து போனது தெரிந்தால் அது மோகனன் மனதை அதிகம் பாதித்துவிடும் என்று சொல்லி இருக்க காவலர்கள் கூட அதை அப்படியே கடைபிடித்தனர்.

     வேறு ஏரியா, வேறு வீடு, வேறு விதமான சூழ்நிலை என அனைத்தும் மாறினாலும் மோகனன் சற்றும் மாறவில்லை. மொத்தமாக அமைதியாக மாறி விட்டிருந்தான். தனியாக இருக்க பயந்து எப்போது பார் தாய்க்கும், தந்தைக்கும் நடுவில் படுத்துக்கொண்டான். அப்படியாவது நிம்மதியாக உறங்கினானா என்றால் அது தான் இல்லை. உறக்கத்தில் அலறி துடித்து எழுவான். அவனோடு சேர்ந்து ஆனந்த், பைரவியும் எழுந்துகொள்வார்கள். பைரவி அழ, ஆனந்த் மகனோடு சேர்த்து மனைவியையும் சமாதானப்படுத்துவார்.

     அத்தோடு நின்றதா என்றால் அது தான் இல்லை. யாராவது பெண்கள் அழும் சத்தமோ, ஆண்கள் சத்தமாக கத்தும் சத்தமோ கேட்டுவிட்டால் அம்மா என்று கத்திக் கதறி அழ ஆரம்பித்துவிடுவான். இரவில் கனவு கண்டு பயந்து படுக்கையை நனைப்பான். மனநல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலன் ஒரு வருடத்தில் பள்ளி செல்லும் அளவு அவன் முன்னேறி இருந்தான் மோகனன். மகன் கொஞ்சம் தேறுகிறான் என்று ஆனந்த், பைரவி இருவரும் சந்தோஷப்பட்டிருக்க, அப்படி இல்லை என்று சொல்வது போல், சரஸ்வதியின் இறப்பு செய்தி மோகனனுக்குத் தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!