Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 13

     கோலாகலமாகத் திருமணம் முடிந்திருந்தது. ஒருவருக்கு ஒருவர் அத்தனை பொறுத்தமாக இருந்தனர் மோகனனும், நீலாம்பரியும். மணமக்களுக்குப் பரிசு கொடுப்பதற்காக மணமேடை வந்த தன் தாய்மாமன் பைரவனை சவடாலாகப் பார்த்தான் சாருகேசி.

     மோகனனுக்குத் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்த நேரம் பைரவிக்கு முதலில் நினைவு வந்தது, தன் அண்ணன் மகளான கீரவாணி தான். அன்பான பெண், தன் குடும்பத்தையும் மகனையும் நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்கிற எதிர்பார்ப்பில் கணவரிடம் சொல்ல ஆனந்திற்கும் அது பிடித்திருந்தது. மனைவியின் அண்ணனான பைரவன் மீது அத்தனை மரியாதை வைத்திருந்தார் ஆனந்த்.

     சிறுவன் மோகனனை மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அழைத்துச் சென்று வந்து கொண்டிருந்த கடினமான நேரத்தில் கேசியின் முழுப்பொறுப்பையும் ஏற்று அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக்கொண்டது முழுக்க பைரவன் தான். அந்த நன்றி இப்போதும் இவர்கள் மனதில் இருந்தது.



Advertisement

     சொந்த தங்கை மகன் மாப்பிள்ளையாக வந்தால் அவருக்கு கசக்கவா போகிறது. அதோடு அவருக்கும் தங்கள் குடும்பத்தின் மீது பெரும் மரியாதை இருக்கிறது என்பதால் நிச்சயம் அவர் திருமணத்திற்கு சம்மதிப்பார் என்கிற நம்பிக்கையில் தான் அவர்கள் வீட்டு படி ஏறிச் சென்றனர் ஆனந்த், பைரவி, கேசி மூவரும்.

     ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பை நிராசையாக்கும் வகையில், “நம்ம கேசிக்கு கேட்டு இருந்தீங்கன்னா நான் கண்டிப்பா மறுத்து இருக்க மாட்டேன். ஆனா இந்தப் பேச்சுவார்த்தை வேண்டாம்.” என்றிருந்தார். அந்த நேரம் கீரவாணி விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்ததால் மகளின் மனம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

     “அண்ணனோட பிரச்சனையை பத்தி யோசிக்கிறீங்களா மாமா? அவருக்கு எல்லாம் சரியாகிடுச்சுன்னு டாக்டர் சர்டிபிகேட் இருக்கு.” ஆளுக்கு முன்னால் வந்தவன் கேசி தான். பெற்றவர்கள் இருவரும் நல்லவேளை மூத்த மகனை இங்கே அழைத்து வரவில்லை என்று மனதோடு நிம்மதியடைந்து கொண்டிருந்தனர்.

Advertisement

     “மோகனன் தம்பி ரொம்ப நல்லவர், அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்ல. அவர் சரியாகணும் னு குலதெய்வத்துக்கு தங்கத்தில் வளையல் செஞ்சு போட்டவன் நான். அவர் மேல் எனக்கு இப்பவும் நிறைய அன்பு இருக்கு. எப்பவும் இருக்கும். அதுக்காக பொண்ணு கொடுக்கணுமான்னு யோசனையா இருக்கு. இன்னைக்கு சரியான வியாதி நாளைக்கு திரும்ப வராதுன்னு என்ன நிச்சயம்.” தயங்கியபடியே கேட்டார்.

Advertisement

     “என்ன பேசுறீங்க மாமா. அண்ணன் தொன்னூறு சதவிகிதம் சரியாகிட்டான். மத்த பத்து சதவிகிதம் கூட அவனைப் பாதிச்ச மாதிரியான சம்பவங்கள் திரும்ப நடந்தா தான் ட்ரிகர் ஆகும் னு டாக்டர் சொல்லி இருக்கார்.” என்றான் கேசி.

     “நீங்களே சொல்றீங்களே தம்பி. பத்து சதவிகிதம் மறுபடியும் அந்தப் பிரச்சனை வர வாய்ப்பிருக்குன்னு. ஒருவேளை அவர் மறுபடியும் பார்க்கக் கூடாத எதையும் பார்த்தா. அதனால் பழையபடி மாறிட்டா. என் பொண்ணு வாழ்க்கை என்னாகுறது. இது ஒன்னும் விளையாட்டு விஷயம் இல்ல. மூணு வாய்ப்பு இருக்கேன்னு துணிஞ்சு ரிஸ்க் எடுக்க. வாழ்க்கை ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கு. என் பொண்ணுக்கு ரிஸ்க் இல்லாத வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கப் பார்க்கிறேன்.” என்றார்.

     “அண்ணனை பாதிச்ச சம்பவம் மறுபடி அவன் கண் முன்னாடி நடக்கிறதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல மாமா. நீங்க கொஞ்சம் யோசிங்க. எதுக்கும் வாணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு சொல்லுங்க.” என்று கட்டாயப்படுத்த, “வேண்டாம் கேசி. அண்ணனைத் தொந்தரவு பண்ணாத. அவர் யோசனையும், பயமும் தப்பு இல்லையே.” என்றுவிட்டு முதல் ஆளாக அங்கிருந்து எழுந்தது பைரவி தான்.

Advertisement

     வெளியே அண்ணனை விட்டுக்கொடுத்து பேசாமல் போனாலும், என் மகனை நீயே குறையாகப் பார்த்தால் வெளியே உள்ளவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று குற்றம் சாட்டும் பார்வை பார்த்தபடி வெளியேற அவர் பின்னே தன்னால் வந்திருந்தார்கள் கேசியும், ஆனந்த்தும்.

     அந்த நினைவில், “மாமா என் அண்ணி பார்த்தீங்களா? சும்மா தங்க விக்ரகம் மாதிரி ஜொலிக்கிறாங்க இல்ல. அவங்க பக்கத்திலேயே மணப்பெண் தோழியா இருக்காளே ஒருத்தி, அவளைத் தான் நான் காதலிக்கிறேன், கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்.” என்றான்.

     “சந்தோஷம் தம்பி, நீலாம்பரி மாதிரி அந்தப் பொண்ணும் அழகா இருக்கா. அக்காவும், தங்கச்சியும் ஒரே வீட்டில் இருந்தா பிரச்சனை இல்லாம நல்லபடியா போகும் வாழ்க்கை. என் தங்கச்சி பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான்.” என்றார். அவர் வாடிய முகத்தைக் கண்டு தான் நடந்து கொண்டது தவறு என்று புரிய, “மன்னிச்சிடுங்க மாமா, நான் ஏதோ பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிட்டேன்.” உடன் இறங்கி வந்தான் கேசி.

     “பரவாயில்ல விடுப்பா.” என்றுவிட்டு தளர்ந்த நடையோடு தான் மற்ற சடங்குகளைக் கவனிக்கச் சென்றார் மனிதர். சில தினங்களுக்கு முன்னர் தான் மகள் மோகனனை எந்த அளவு காதலிக்கிறாள் என்பதே அவருக்குத் தெரிய வந்திருந்தது. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை நிறுத்தவும் முடியாது, மகள் அழுவதைப் பார்க்கவும் முடியாது இருதலைக்கொள்ளி எறும்பாய் துடித்துக்கொண்டிருக்கிறார் மனிதர். மோகனனுக்கு என்று தனியாக நண்பர்கள் யாரும் கிடையாது. அவனின் முதல் நண்பன் தம்பி கேசி. அடுத்து அவன் நண்பர்கள். கேசியின் நண்பர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்துகொண்டு ஆட்டம், பாட்டம் என அமர்க்களம் செய்தனர். ஒரு குறையும் சொல்ல முடியாத வண்ணம் அமைந்தது அந்த நாள்.

     நீலாம்பரி புகுந்த வீடு வந்து அங்குள்ள சம்பிராதயங்கள் நல்லபடியாக நடந்து முடிந்தது. எப்போது பார் கனவுலகில் இருக்கும் அண்ணன் கையில் அடிக்கடி கிள்ளி நடப்பது அனைத்தும் நிஜம் தான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தான் கேசி. அண்ணன், தம்பி இருவரும் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தாள் நீலா.

     மறுநாள் மறுவீடு வர இருக்கும் மணமக்களுக்காக வீட்டில் ஏற்பாடுகளைச் செய்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்தனர் கல்யாணி, அமிர்தா இருவரும். பைரவி அவர்களை வழி அனுப்பிவைக்க வரும் போது, தயக்கத்தோடு அவரைத் தனியாக அழைத்து வந்தார் கல்யாணி. அவர் ஏதோ கேட்க நினைப்பதையும் அது முடியாமல் தடுமாறுவதையும் யூகித்து, “என்னன்னு சொல்லுங்க அண்ணி. ” என பைரவி ஊக்கம் கொடுக்க,

     “மாப்பிள்ளை தம்பிக்கு இருந்த பிரச்சனையைப் பத்தி என் பொண்ணுங்க இரண்டு பேருமே என்கிட்ட சொல்லல. கொஞ்சம் தாமதமா தான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்ப இருந்து எனக்குள்ள ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கு.” என்றுவிட்டு தயங்கினார்.

     என்ன கேட்கப் போகிறாரோ என்னும் பயத்தில் பைரவி விழிக்க, “இந்த மாதிரி விஷயத்தில் பாதிக்கப்படும் பொண்ணுங்க கல்யாண வாழ்க்கையை நினைச்சு பயப்படுவாங்க. அவங்களால் சந்தோஷமா வாழ முடியாது. ஆனா பசங்க பாதிக்கப்பட்டா அவங்களோட பாதிப்பு எந்த வகையில் இருக்கும் னு எனக்குத் தெரியல. அப்படி ஏதாவது?” என்று நிறுத்தியவர், பைரவியின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “என் பொண்ணை நல்லபடியா வாழவைச்சிடுவீங்க இல்ல.” மனதின் பயம் மொத்தத்தையும் வார்த்தையில் சொல்லி விட்டிருந்தார்.

     இதுவரை இந்தக் கோணத்தில் யாருமே யோசித்து இருக்கவில்லை என்பதால் பைரவிக்கும் என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் புரியவில்லை தான். ஆனால் விரைவில் தன்னைச்  சமாளித்தவர், “மோகனன் ரொம்ப நேர்மையானவன் அண்ணி. தன்னோட முன்னாள் பிரச்சனை தெரிஞ்சு சரின்னு சொல்லும் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியா சொன்னான். கல்யாணம் னா என்ன, அதோட படிநிலைகள் என்னென்னன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். நீங்க பயப்படுற மாதிரி அவனுக்கு சின்ன சந்தேகம் வந்திருந்தாலும், கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டான். அதனால் பயம் இல்லாம போயிட்டு வாங்க.” என்று அனுப்பி வைத்தார்.

     இதை சற்று தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த கேசிக்கு அண்ணனை விட அண்ணியை நினைத்து சற்றே சங்கடமாக இருந்தது. எந்தக் குறையும் இல்லாமல் நீலாவை வாழவைப்பேன் என அமிர்தாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தவன் என்பதால் அந்த இரவு முழுக்க நிம்மதியைப் பறிகொடுத்திருந்தான்.

     அடுத்த நாள் காலையில் இருந்து அண்ணன் அறை திறப்பதற்காக காத்திருந்தான் கேசி. இங்கிதம் பார்க்கும் நிலையில் எல்லாம் அவன் இல்லை. ஏழு மணி அளவில் நீலாம்பரி தான் முதலில் அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் தன்னைக் கண்டால் சங்கடப்படக்கூடும் என்று அறைக்குள் மறைந்துகொண்டான். அதற்குப் பிறகும் ஒரு மணி நேரம் கழித்து மோகனன் வெளியே வர, அவன் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு மாடியேறினான் கேசி.

     “என்னடா?” மூத்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை தான்.

யாரும் மேலே ஏறி வந்தால் தெரியும் இடத்தில் நின்றுகொண்டு அண்ணன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் இளையவன்.

     “என்னாச்சு உனக்கு. என்கிட்ட ஏதாச்சும் பேசணுமா? அமிர்தாவோட எங்கேயாச்சும் வெளியே போகப்போறியா? அதுக்கு பெர்மிஷன் வாங்கிக்கொடுக்கணுமா?” என யூகமாய் கேட்க, இல்லை என்று தலையாட்டியவன், “நேத்து நைட் எல்லாம் ஓகே வா?” பட்டென்று கேட்டு வைத்தான்.

     தர்ம சங்கடமாகிப் போனது மோகனனுக்கு. தலையைக் கோதிக்கொண்டவன், “என்னோட தம்பி டா நீ. என்கிட்ட பேசுற பேச்சா இது?” வெட்கத்தோடு கேட்டான்.

     “உனக்கு நான் தம்பி மட்டும் இல்ல. அதோட எனக்குத் தெரியாத விஷயங்களும் இல்ல. அதனால் ரொம்ப சங்கடப்படாம விஷயத்தை சொல்லு. இராத்திரி முழுக்க தூக்கமே வரல.” என்க, சிரித்துவிட்டான் மோகனன்.

     “என்னை நினைச்சு நீ எதுக்காக தூங்காம இருக்கணும்?” அதே சிரிப்போடு கேட்டவனுக்கு முந்தைய நாள் கல்யாணி பேசியதை எடுத்துரைக்க, சில கணங்கள் அமைதியாக நின்றிருந்தான் மோகனன்.

     சங்கடப்படுகிறானோ, வருத்தப்படுகிறானோ இல்லை  கோபப்படுகிறானோ என கேசி அவனை உற்று உற்று பார்க்க, “டேய் கொஞ்ச நேரம் சம்மா இருடா. அப்புறம் ஆம்பிளையைப் பார்த்து இன்னொரு ஆம்பிளைக்கு வெட்கம் வந்துச்சாம் னு நம்ம கதை தான் இந்த ஊர் முழுக்க மணக்கும்.” என்க நெஞ்சை அரித்த பிரச்சனையில் இருந்து நிம்மதி கிடைத்தது போல் இருந்தது கேசிக்கு.

     அண்ணனை இறுக்கமாக அணைத்தவன், “அப்ப எல்லாம் ஓகே தானே.” வாயால் சொல்லும் வரை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான் கேசி.

     “வற்புறுத்தலுக்கும், இணக்கத்துக்கும் வித்தியாசம் இருக்கே கேசி. எனக்கு உன் அண்ணி மட்டும் தான் மனசில் நின்னா. நானே என் சொந்த நினைவில் இல்ல அப்புறம் எப்படி தேவையில்லாத நினைவுகள் வரும்.” என்க, வயிற்றில் பால் வார்ந்த உணர்வு கேசிக்கு.

     அண்ணனை மீண்டும் ஒருமுறை கட்டிக்கொண்டவன், “இந்த வீட்டில் எந்தக் குறையும் இல்லாம வாழ்வாங்கன்னு நான் அண்ணிக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். அதைக் காப்பாத்திக் கொடுத்ததுக்கு நன்றிண்ணா. எந்தக் காரணம் வந்தாலும் அண்ணியை மட்டும் கஷ்டப்படுத்திடாத.” கண்கள் கலங்கச் சொன்னான். அவன் தான் அந்த அண்ணியை அனைவரையும் விட மோசமாகக் காயப்படுத்தப் போகிறான் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை.

     “நல்ல அண்ணி நல்ல கொழுந்தன்.” போங்கடா, என்றுவிட்டு மோகனன் நகரப்பார்க்க, அவனை இழுத்துப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பிவைத்தான் இளையவன்.

     கேசிக்கு குறையாத பயத்தில் தான் பைரவியும் இருந்தார். அந்த பயத்திற்கு அவசியமே இல்லை என்பதைப் போல நீலாம்பரி கேட்ட சந்தேகம் அவர் மனதை குளிர்வித்து இருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது. அனுபவித்த துன்பங்கள் எல்லாம் போதும் என்று கடவுள் நினைத்துவிட்டார் போலும் என்று சந்தோஷமாக இருந்தார்.

     ஒரு மாதம் கடந்து போனது. பொறுப்பான மருமகளாக, நல்ல அண்ணியாக, ஈடு இணையில்லாத மனைவியாக அந்த வீட்டில் சுற்றி வந்தாள் நீலாம்பரி. மோகனன் அவள் மீது அன்பை வாறி வழங்கினான். பகலில் காட்டும் அன்பு இரவுத் தேவைக்கு என்று தான் நீலாவுக்கு அறிவுரை சொல்லி இருந்தார்கள் தோழிகள். அதை பொய் என்று நிரூபித்தான் மோகனன். மகன், மருமகள் வாழும் இணக்கமான வாழ்வைப் பார்த்து சந்தோஷம் அடைந்தனர் பெரியவர்கள்.

     அந்த சந்தோஷத்தில் இடி விழுவது போல், இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி தன் பிள்ளைகள் நன்றாக வாழ்வதைப் பார்த்த நிம்மதி போதும் என்று நினைத்தாரோ என்னவோ தலைவலி என்று பாதியில் வேலையில் இருந்து வந்திருந்த ஆனந்த் உறங்குவதற்காக படுத்தவர் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மொத்தமாக உறங்கி இருந்தார்.

     திருமணம் முடிந்து நாற்பது நாட்கள் மட்டுமே ஆகி இருந்த நிலையில் நடந்த இந்த மரணம் அந்தக் குடும்பத்தினரை உலுக்கிப் போட்டது. தந்தையோடு நல்ல ஒட்டுதலில் இருந்த மோகனன் மொத்தமாக உடைந்து போனான். பைரவிக்கு மிகப்பெரிய இழப்பு என்பதால் அவர் அனைத்தையும் வெறுத்த நிலையில் இருந்தார். கேசி தான் பம்பரமாகச் சுழன்றான். தன் அறிவுக்கு எட்டிய சிலதை அவனாகச் செய்தான். மீதியை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், தந்தையின் நண்பர்கள் உதவியோடு செய்தான்.

     ஆனந்த்தின் உடல் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டு பைரவிக்கான சடங்குகள் ஆரம்பித்தது. எந்தப் பேச்சுவார்த்தை வரக்கூடாது என்று கல்யாணியும், அமிர்தாவும் பயந்துகொண்டிருந்தார்களோ அந்தப் பேச்சுவார்த்தை அந்த இடத்தில் வந்தது.

     “மருமக வந்த நேரம் தான் சரியில்ல. அவ கழுத்தில் தாலி ஏறின உடனே மாமியார் கழுத்தில் இருந்த தாலியைப் பறிச்சுக்கிட்டா போல.” என்று வந்தவர்களில் ஒருவர் ஆரம்பித்து வைக்க, அடுத்தடுத்து அனைவரும் ஆளுக்கு ஒன்றாகப் பேச ஆரம்பித்தனர்.

     பெண் கொடுத்த வீடு என்பதால் தன்பெண்ணுக்கான அநீதியைக் கூட தட்டிக் கேட்க முடியாமல் நின்ற கல்யாணி, அமிர்தாவையும் பேசவிடாமல் பார்த்துக்கொண்டார். பைரவி பேசும் நிலையில் இல்லை. மோகனன் அறையே கதி என்று இருந்தான். நீலாம்பரி கணவனோடு இருந்து அவனை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டாள். துர்வார்த்தைகள் பேசிய அனைவரும் சாருகேசியை மறந்துவிட்டிருந்தனர்.

     தன் வீட்டு கூடத்தில் அமர்ந்துகொண்டு தன் வீட்டுப் பெண்ணைப் பற்றி பேசிய அனைவரையும், சொந்தங்கள் என்று கூடப் பார்க்காமல் தாளித்து எடுத்துவிட்டான் கேசி. அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தந்தையை பறிகொடுத்திருந்த துக்கம் அழுத்தி அழுத்தி கோபமாக மாறி சரியான இலக்கில் பாய்ந்திருந்தது. சத்தம் கேட்டு கீழே வந்த மோகனன் தம்பியை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான். அன்றைய இரவு உறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த கேசியைத் தேடிச் சென்றாள் அமிர்தா.

     “அமிர்தா எதுக்காக இங்க வந்த?” பதறிப்போய் அவன் கேட்க, அவனைக் கட்டிக்கொண்டவள், “துக்கத்தை அடக்காதீங்க. அழுதிடுங்க.” என்றாள். உதடுகள் துடிக்க மாட்டேன் என்றவன் பின்பு ஒருகட்டத்தில் தன் துக்கம் கரைய அழ ஆரம்பித்துவிட்டான். அவன் கட்டிலில் படுத்திருக்க, அவனுக்கு அருகே தரையில் அமர்ந்தபடி அவன் தலை கோதிவிட்டுக்கொண்டிருந்தாள் அமிர்தா. அப்படியே இருவரும் உறங்கியும் போயினர். அடுத்த நாள் காலையில் தம்பியைத் தேடி வந்த மோகனன் இந்தக் காட்சியைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான். அவன் மனதிற்கு கொஞ்சம் இலகுவாக இருந்தது. தன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு சத்தம் போடாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

     காலை எழுந்த கேசி தன் அறையில் தன் அருகே உறங்கிக்கொண்டிருந்த அமிர்தாவைப் பார்த்து, “லைட்ஹவுஸ்” என மென்மையாக அழைத்தான். அந்த அழைப்பில் கண்விழித்தவள், “என்னன்னு கூப்பிட்டீங்க?” உறக்க கலக்கத்தில் கேட்டாள்.

     “லைட்ஹவுஸ் னு சொன்னேன்.”

     “என் உயரத்தை வைச்சு கிண்டல் பண்றீங்களா? என் அம்மாவோட அண்ணன் நல்ல உயரமாம். அவங்களை மாதிரி நான் பிறந்ததுக்கு என்ன பண்ண முடியும்.” என்றாள்.

     “அறிவே அறிவே. லைட்ஹவுஸ் அப்படின்னா என்னோட, என் வாழ்க்கையோட வெளிச்சம். இருட்டுக்குள்ள தவிச்ச எனக்கு வெளிச்சத்தைக் காட்டி, என்னோட பாதையை சரிபண்ற உன்னதம்.” என்க, புல்லரித்துப்போனது அமிர்தாவுக்கு. சந்தோஷமாக உணர்ந்தாள். அந்த சந்தோஷத்தை அவனுக்கும் கடத்தும் பொருட்டு அவன் புறங்கையில் முத்தமிட்டுவிட்டு ஓடினாள். அவள் சென்ற திசையைப் பார்த்து சிரித்தபடி தலையைக் கோதினான் கேசி.

     வீடு கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்கு திரும்பியது. கல்யாணி, அமிர்தா அந்த வீட்டில் தான் தற்காலிகமாக தங்கி இருந்தார்கள். வீட்டு வேலைகளில் ஆரம்பித்து, சமையல் வரை அவர்கள் தான் பொறுப்பாக செய்தனர். அமிர்தா அங்கிருந்து சில நாட்கள் கல்லூரி சென்று வந்தாள். பைரவி தன் துக்கத்தை ஏற்றுக்கொண்டு மெல்ல நடமாட ஆரம்பிக்கவும் தான் அவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

     மூன்று மாதத்தில் பழையபடி அவர்கள் இல்லம் சிரிப்பும் சந்தோஷமாகவும் மாறியது. தன் தந்தையே தனக்கு பிள்ளையாகப் பிறப்பார் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தான் மோகனன் உடன் கேசியும். ஆனால் ஒவ்வொரு மாதமும் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

     தங்கைக்காக செய்து கொண்ட திருமணம் என்று பெரிதாக எதையும் எதிர்பாராமல் இருந்த நீலாம்பரி, மோகனனின் திகட்டாத அன்பில் உருகித்தான் போனாள். எப்படி என்று தெரியாமல் கணவனை காதலிக்க ஆரம்பித்து இருந்தாள். அதுவும் ஆழமாக மிக அழுத்தமாக. அவள் அவன் மீது உருவாக்கி வைத்திருந்த காதலின் ஆழம் மோகனனுக்கு கூட தெரியாது. கேசி படிப்பை முடித்துவிட்டு காவலர் தேர்விலும் வெற்றி பெற்று பயிற்சிக்காக சென்றிருந்தான். அமிர்தா கடைசி வருடப் படிப்பில் இருந்தாள். கணவனின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே இருப்பதை உணர்ந்து, அவருக்கு எதுவும் ஆகும் முன்னர் இளையவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று கல்யாணி சொல்ல, வீடு களைகட்டியது.

     எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பாராத அந்த துயரசம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து மோகனன், நீலாம்பரி, கேசி, அமிர்தா நால்வரின் வாழ்க்கையும் மிக கொடூரமான முறையில் சூறையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!