Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 25

     ஊட்டி சென்று வந்த பிறகு இத்தனை நாட்களாக கார் ஓட்டி இருக்கவில்லை மோகனன். காரைப் பார்த்தாலே கண்டதும் நினைவு வர, இரண்டு முறை கோபம் தலைக்கேறி கார் கண்ணாடிகளை சுக்கல் சுக்கலாக நொறுக்கிப் போட்டிருந்தான்.

     இப்போது கார் ஓட்ட வேண்டும் என்று நினைக்கையில் கைகள் நடுங்கியது. ஆனாலும் வைராக்கியமாக முயற்சித்தான். தன் பலவீனத்தை எதிர்கொள்ள நினைக்காமல் அதைக்கண்டு ஒதுங்கி ஓடியது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்பதால் இன்று திடமாக எதிர்த்து நிற்க முயன்றான்.

     மிக மெதுவாக தான் காரை ஓட்டினான். இரண்டு முறை எதிரே வந்தவர்கள் மீது மோதப் பார்த்து தப்பித்தாலும் மூன்றாம் முறை ஏதோ நினைப்பில் பக்கவாட்டு சுவரில் மோதி தலையில் காயத்தை வாங்கிக்கொண்டவன் இயலாமையின் உச்சத்தில் அப்படியே அமர்ந்துவிட்டான். நீலா சொன்ன நேரம் வந்திருக்க அதற்கு மேலும் தாமதிக்காமல் காரை அப்படியே விட்டுவிட்டு ஆட்டோ ஏறி புறப்பட்டுச் சென்றான்.



Advertisement

     ஜனநடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில், இயல்பான தோற்றத்தில் உப்பு வாசம் வீசும் கடற்காற்றை சுவாசித்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள் நீலாம்பரி. கடந்த சில நாட்களாக அவள் மனதிற்குள் ஆயிரம் சூறாவளிகள் சுழன்றடித்து அவளைப் போட்டு பந்தாடி இருந்தது. அனைத்தையும் தாண்டி நிலையான முடிவுக்கு வந்திருந்ததால் இப்போது மனம் ஆழ்கடலைப் போல் அமைதியாக இருந்தது.

     பின்னால் இருந்து பார்த்தே அவளை இனம் கண்டுகொண்ட மோகனன் தாயை தேடும் சேயாய் வேகமாக அவளை நெருங்கினான். அவளுக்கு மிக அருகே சென்ற பின் என்ன நினைவு வந்ததோ தயங்கி நின்றுவிட்டான். அவன் வந்துவிட்டான் என்று தெரிந்தும் திரும்பாமல் அப்படியே இருந்தாள் நீலா. பெருமூச்சுவிட்ட மோகனன், தன் தயக்கங்கள் அனைத்தையும் விரட்டிவிட்டு நீலாவின் அருகே அமர்ந்தான். அவர்களுக்கு முன்னே தெரிந்த அவர்களின் நிழல்களும், தங்களின் நிஜங்களைப் போல ஒன்றில் இருந்து ஒன்று விலகி நின்றன.

     அவர்கள் கணவன், மனைவியாக வாழ்ந்த காலத்தில் பலநாட்கள், இரவு நேரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அறை சுவரில் தங்களின் அசைவுகளுக்கு ஏற்ப தங்களின் நிழல்களை ஒன்றோடு ஒன்று உறவாட விட்டு ரசிப்பது மோகனன் மற்றும் நீலாம்பரியின் வழக்கம். என்னவோ மோகனனுக்கு அப்படி ஒரு ஆசை. அந்த வகையில் நெருக்கத்தை மட்டுமே பழகிய அவர்களின் நிழல்கள் பல காலத்திற்குப் பிறகு சந்தித்தாலும் வழக்கத்திற்கு மாறாக விலகி நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தன.

Advertisement

     சின்னப்புன்னகையோடு மோகனன் பக்கம் திரும்பிய நீலா, “வாங்க மோகனன்.” என்றுவிட்டு அவன் முகத்தையே பார்த்தபடி இருக்க, மோகனனால் அந்தப் பார்வை வீச்சை தாங்க முடியவில்லை.

Advertisement

     “நான் உன்கிட்ட நிறைய பேசணும் நீலா.” தயக்கத்தோடு சொன்னான் மோகனன்.

     “பேசலாமே. பேசுறதுக்கு தானே வந்திருக்கோம். இரண்டு வருஷம் ஆச்சுல்ல, பேசுறதுக்கு நிறைய இருக்கும் தான்.” சாதாரணமாகச் சொன்னாள்.

     “நான்… என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்.” என்றவன் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் வந்துவிட்டது.

Advertisement

     “மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணீங்க மோகன்.” நீலா சாந்தமான புன்னகையோடு கேட்க, “என்னோட வாலிப வயசு தொடங்கி பயந்தாங்கொள்ளியா, கோழையா இருந்ததுக்காக, பைத்தியக்காரனா இருந்தும் கல்யாண வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதுக்காக, பத்திரமா பார்த்துப்பேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்ட உன்னைக் காப்பாத்த முடியாம போனதுக்காக, உன்னை மறந்ததுக்காக, உனக்குத் துரோகம் பண்ணதுக்காக, நம்ம குழந்தைகளுக்கு முறையான அங்கீகாரம் கொடுக்காம விட்டதுக்காக.

     என்னைச் சுத்தி நடக்கும் எதையும் தடுக்க முடியாம இருந்ததுக்காக, கடைசியா இப்ப உன்னை நேருக்கு நேரா பார்க்க முடியாம உட்கார்ந்து இருக்கிறதுக்காக.” இதைச் சொல்லி முடிக்கும் போது மோகனன் குரலோடு சேர்த்து அவன் உடலுமே நடுங்க ஆரம்பித்துவிட்டது.

     மோகன் என்கிற அழைப்போடு அவன் கரத்தை எடுத்து தன் கரத்திற்குள் வைத்துக்கொண்டாள் நீலா. “நீலா” என்கிற அழைப்போடு அவள் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டான் மோகனன்.

     சில நிமிடங்கள் அவனை அழ விட்ட நீலா, அவன் முகத்தை நிமிர்த்தி, “நிறைய பேசணும் னு சொன்னீங்களே மோகன். இப்படி அழுதுட்டே இருந்தா அப்புறம் பேசுறதுக்கு எப்படி எனர்ஜி இருக்கும்.” என்றவாறு அவனைப் பேசுவதற்காக தூண்டிவிட்டாள்.

     “அன்னைக்கு அங்க இருந்து உன்னையும், என்னையும் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்த்து, சிகிச்சை முடிஞ்சு  கண்விழிச்சப்ப நான் நானாவே இல்ல.

     நான் எத்தனை பெரிய துரதிஷ்டசாலின்னு எனக்கே நல்லாத் தெரிஞ்சிருந்தும் எதுக்காக உன்னை என் வாழ்க்கையில் கொண்டு வந்தேன்னு ஆத்திரம், என்னைப் பிடிச்ச பாவம் தான் உன்னையும் பிடிச்சிடுச்சோன்னு பச்சாதாபம். கடைசி நொடி வரை நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்திடுவேன்னு நம்பி இருப்ப தானே. அந்த நம்பிக்கையைக் காப்பாத்த முடியாத நான் எந்த நம்பிக்கையோட உன்னைப் பார்க்கன்னு தவிப்பு எல்லாம் சேர்த்து தான் தற்கொலை முயற்சி பண்ணேன். ஆனா அங்கேயும் என் கொடூர விதி என்னை ஆட்டிப் படைச்சிடுச்சு. நான் என்னோடு, உன்னோடு சேர்த்து எல்லாத்தையும் மறந்துட்டேன்.” என்று நிறுத்த, விதியின் விளையாட்டை எண்ணி கசப்பாக சிரித்தாள் நீலா.

     “கண்விழிச்சப்ப கேசி, அம்மா, பைரவன் மாமா, கீரவாணி நாலு பேரும் தான் என்னைச் சுத்தி இருந்தாங்க. நான் அவங்களோட சொந்தம் னு எல்லா ஆதாரங்களையும் காட்டினாங்க. ஆனா அவங்க எல்லோரையும் தாண்டி என்னோட மனசு யாரையே தேடுச்சு.

     அவங்க எனக்கு ரொம்ப நெருக்கமானவங்களா இருந்தாங்கன்னு எனக்குள்ள ஒரு குரல். என்னைச் சுத்தி இருந்த எல்லோரையும் விட்டுட்டு யாருன்னு தெரியாத, அப்படி ஒருத்தர் இருக்காங்களான்னு கூட தெரியாத ஒருத்தரை தேடி மனசு கிடந்து அல்லாடுச்சு. யாரும் எனக்கு உறவாவே தெரியல. அந்த நேரம் தான் எனக்கும் கீரவாணிக்கும் கல்யாணம் பேசி அதை நடத்தியும் வைச்சாங்க.” என்று நிறுத்தியவன் நீலாவின் முகம் பார்த்தான்.

     “நடந்த எதுவும் என்னைப் பாதிக்காது மோகன். அதனால் உங்க மனசில் இருக்கும் எல்லாத்தையும் எந்த விதமான பின்யோசனையும் இல்லாம சொல்லுங்க.” என்று ஊக்கம் கொடுத்தாள் நீலா.

     “என் மனசு தேடும் உறவு கீரவாணின்னு நினைச்சேன். அம்மா, கூடப்பிறந்த தம்பின்னு இருந்தாலும் அந்த நேரம் இருந்த எனக்கு அவங்க வேற்று ஆளா தான் தெரிஞ்சாங்க. ஆனா கீரவாணிக்கும் எனக்கும் இருந்த உறவு எனக்கு நல்லா நினைவில் இருந்தது. அதனால் அவளோட மட்டும் தான் என்னால் இயல்பா பழக முடிஞ்சது. ஒரு எல்லையோட நின்ன பொண்ணை எல்லையே இல்லாம நான் தான் நெருங்கினேன்.” என்றுவிட்டு தப்பு செய்தவன் போல் குலுங்கினான் மோகனன்.

     இதை ஏற்கனவே கணித்திருந்தாள் நீலா. அவளுக்கு கீரவாணியைப் பற்றி தெரியாது தான். ஆனால் மோகனனைப் பற்றி தெரியுமே. அவன் நினைவில் இல்லாத போது நடந்த திருமணத்தை மீறி வரமுடியாமல் திண்டாடுகிறான் என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது என்று யூகித்து இருந்தாள். அதனால் அது அவன் வாயாலே வெளிவரவும் அவளுக்கு அது அதிர்ச்சியாக இல்லை.

     “ஒருநாள் குளிக்கப் போகும் போது ஹீட்டர் ஸ்சுவிட்டில் ஷாக் அடிச்சு மயங்கி விழுந்தேன். எழும்பும் போது எனக்கு எல்லா நினைவும் வந்திடுச்சு. அந்த நேரம் என்னை நினைச்சு நான் எந்தளவு அவமானமா உணர்ந்தேன்னு உனக்குத் தெரியாது நீலா.

     உன்னோட புருஷனா உன்னோட வாழ்ந்த நான் அதே அளவு அன்போடு இன்னொருத்தியோடவும் வாழ்ந்திருக்கேன் என்கிற உண்மையை என்னால் ஏத்துக்கவே முடியல. நடந்த எல்லாத்தையும் கேசி மூலமா தெரிஞ்சுக்கிட்ட போது, உனக்கும் நம்ம குழந்தைங்களுக்கும் என்னோட சொந்த குடும்பத்தால் நடந்த அநியாயங்கள் என்னை மூச்சடைக்க வைச்சிடுச்சு. உன்னைத் தேடி கிளம்பினப்ப வீட்டு வாசலில் நின்னுக்கிட்டு இருந்த காரைப் பார்த்தேன்.” என்று நிறுத்த, என்ன நடந்திருக்கும் என்று புரிய கண்களை மூடித்திறந்தாள் நீலா.

     “என்ன தான் கம்பெனி, கலர், நம்பர் ப்ளேட் னு எல்லாத்திலும் வித்தியாசம் இருந்தாலும் என்னோட மூளைக்கு கார் என்கிற ஒரு வடிவம் போதுமானதா இருந்தது. நடந்த ஒவ்வொன்னும் இப்ப கண்ணுக்கு முன்னாடி நடக்கிற மாதிரி தோணுச்சு. அதையே தாங்க முடியாம நான் தடுமாறும் போது இலவச இணைப்பா சரஸ்வதி அக்கா நினைவும், அவங்க கத்தலும் என் காதுக்குள்ள கேட்க ஆரம்பிச்சது. அவ்வளவு தான் வலிப்பு வந்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துட்டேன்.” என்று நிறுத்திய மோகனன், அந்தக் காட்சி ஏதோ இப்போது நடப்பது போல் நடுங்கினான். தன் கரத்திற்குள் இருந்த அவன் கரத்தில் லேசாகத் தட்டிக்கொடுத்தாள் நீலா.

     “கடவுளுக்கு என்மேல இரக்கம் வரல. நான் மறுபடியும் கண்ணு முழிச்சேன். என் கண்ணு முன்னாடி இருந்தது வாணி. நான் அவளை கோபமா திட்டும் போது,

     ‘எனக்கு ஒரு முடிவை சொல்லிட்டு உங்க மனைவி, குழந்தைங்களைப் பார்க்க போங்க என்ன வேண்ணா செய்யுங்கன்னு’ சொன்னா. அந்த வார்த்தையில் நான் உடைஞ்சு போயிட்டேன் நீலா.

     அவளுக்கு என்னால் என்ன முடிவு சொல்ல முடியும். குற்றவுணர்ச்சி கொல்லாம கொன்னது. என்னைச் சுத்தி இருக்கும் எல்லோரும் அவளைத் தேர்ந்தெடுக்கச் சொன்னாங்க. என்னால் அது முடியல. அதே சமயம் அவளை விட்டு மொத்தமா விலகவும் என்னோட குற்றவுணர்ச்சி இடம் கொடுக்கல. அந்தக் கோபத்தை என்னைச் சுத்தி இருக்கும் எல்லோர் மீதும் காட்டினேன்.

     நாங்க மறுபடியும் சென்னைக்கு வந்தோம். உன்னையும் நம்ம குழந்தைகளையும் பார்க்க அத்தனை உணர்வு எனக்குள்ள கொட்டிக்கிடந்தது. ஆனா தினம்தினம் சொந்தக்காரங்களோ இல்லை வெளிஆட்களோ யாரோ ஊட்டியில் இருந்து திரும்பி வரும் போது நமக்கு நடந்ததை நினைவுபடுத்திக்கிட்டே இருந்தாங்க. நான் என்னோட கூட்டுக்குள்ள சுருங்கிட்டேன்.

     என்னால் தான், என்னைப் பார்த்ததால் தான், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் தான் உனக்கு நடக்கக் கூடாத எல்லாம் நடந்ததுன்னு உள்ளுக்குள்ள ஏதோதோ எண்ணம். என்னால் அது எல்லாத்தையும் தாண்டி உன்னையோ குழந்தைங்களையோ வந்து பார்க்கவே முடியல. தைரியம் இல்ல, கோழையா நாட்களைக் கடத்தினேன்.” என்று அழுதான். மனநிலை பிறழ்வு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் இல்லை அவர்களோடு நெருக்கமான உறவில் இருப்பவர்களால் அன்றி வேறு யாராலும் மோகனனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது. அந்த வகையில் அவனை நீலாவுக்குப் புரிந்தது. மேலும் பேசுவதற்காக அவனை ஊக்குவித்தாள்.

     “ஆறு மாசம் தைரியத்தை ஒன்னு திரட்டி அமிர்தாவை நேரில் பார்த்தேன். அவளைப் பார்த்ததுக்கே, அவளோட பேசினதுக்கே நான் திரட்டி வைச்சிருந்த தைரியம் எல்லாம் கற்பூரம் மாதிரி காற்றில் கரைந்து காணாமல் போயிடுச்சு.

     அந்த நேரம் தான் வாணி கர்ப்பமா இருந்தது தெரிய வந்தது. மொத்தமா உடைஞ்சே போயிட்டேன் நீலா. எனக்கு என்ன பண்றதுன்னு சத்தியமா தெரியல. என்னால் உன்னைத் தாண்டி வாணியை ஏத்துக்கவும் முடியாது. அதே சமயம் என்னை விட்டுப் போயிடுன்னு அவ முகத்தைப் பார்த்து சொல்லும் தைரியமும் எனக்கு இல்ல. முடிவெடுக்கத் தெரியாத இரண்டும்கெட்டான் மனநிலையோட தான் போன நொடி வரை இருந்தேன். ஆனா இந்த நிமிஷம் என்னோட முடிவை எடுத்துட்டேன்.” என்றவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் நீலா.

     “எனக்கு நீ வேணும் நீலா. நீயும் குழந்தைகளும் வேணும்.” என்று தன் மனதை வெளிப்படுத்தினான் மோகனன்.

     “நான் உங்களோட இருக்கிறது உங்களுக்கு என்னைக்குமே ஆபத்து தானே மோகனன்.” நீலா மென்மையான குரலில் சொல்ல, “பரவாயில்லை, ஆறிலும் சாவு நூறிலும் சாவு. உன்னோட இருக்கிறதால் நான் செத்துப்போவேன்னா சந்தோஷமா செத்துப்போவேன்.” என்றான்.

     “இல்ல மோகன், நீங்க உணர்ச்சிவசப்பட்டு பேசுறீங்க. என்னோட பேசப்போகும் இந்த ஒரு நாளுக்காக, என்னைத் தனிமையில் சந்திக்கப் போகும் இந்த ஒரு நாளுக்காக,  கிட்டத்தட்ட ஆறு மாசமா உங்களை நீங்களே தயார் பண்ணிக்கிட்டு இருந்திருக்கீங்க. அதனால் தான் உங்களால் என் முன்னால் இயல்பா உட்காரவாச்சும் முடியுது. வாழும் காலம் முழுக்க இப்படி நீங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையோட இருக்க முடியுமா. இல்ல இப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லா நேரமும் கைகொடுத்திடுமா?” என்றவளை பாவமாகப் பார்த்தவன்,

     “உன்னோட வாழ என்னால் ஆன எல்லா முயற்சியையும் செய்வேன் நீலா. அதனால் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.” என்றவனைப் பார்த்து தலை ஆட்டியவள்,  “அப்ப வாணிக்கு என்ன பதில்?” என்றாள்.

     “கல்யாணத்துக்குப் பிறகு நடந்த எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு. அந்தக் காரணத்துக்காக தான் அவளை இப்ப வரை விட்டு வைச்சிருக்கேன். ஆனா கல்யாணம் நடந்ததுக்கு அவ தானே பொறுப்பு. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு எனக்குத் தான் நினைவு இல்ல, அவளுக்கு நினைவு இருந்துச்சு தானே. அடுத்தவ புருஷன் மேல ஆசைப்படக்கூடாதுன்னு அவளுக்குப் புரிஞ்சிருக்கணும். தெரிஞ்சு தானே தப்ப பண்ணா. அந்த தப்புக்கு தண்டனையா அவ என்னை விட்டுப் போய் என்னவும் பண்ணிக்கட்டும்.” என்றான்.

     “அப்ப அவங்களோட குழந்தை.” என்க, பதில் சொல்ல முடியவில்லை மோகனனால்.

     “நான் ஒன்னு சொல்லவா மோகனன். வாணி, நான் இரண்டு பேருக்கு நடுவில் உங்க மனசு என்பக்கம் அதிகமா சாயக் காரணம் உங்களால் என்னை அந்த கொடூரத்தில் இருந்து காப்பாத்த முடியல. உங்களால் என் வாழ்க்கை பாழாகிடுச்சு என்கிற குற்றவுணர்ச்சி தான்.” என்க, வேகமாக தலையாட்டியவன், “இல்ல இல்லவே இல்ல. உன்மேல் எனக்கு அன்பு இல்லன்னு சொல்ல வரீயா?” கோபமாகக் கேட்டான்.

     “உங்களுக்கு என் மேல நிறையவே அன்பு இருக்கு, அக்கறை இருக்கு. ஆனா அதைத் தாண்டி நிறைய குற்றவுணர்வு இருக்குன்னு தான் சொல்றேன்.” என்றவள் சில கணங்கள் தாமதித்து, “நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் மோகன்.” என்று நிறுத்தினாள்.

     அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை யூகித்தவனாக, “என்னை விட்டுப் போயிடாத ப்ளீஸ். நீ என்னை விட்டுப் போயிட்டா என்னோட தம்பி, அம்மா, மாமா, கீரவாணி எல்லோரும் செஞ்சது சரின்னு ஆகிடும். அதுக்கு அனுமதிக்கக் கூடாது.” ஒருவித பிடிவாதத்தோடு சொன்னான் மோகனன்.

     “நான் உங்களோட இருப்பதால் உங்களுக்கோ, எனக்கோ என்ன பிரயோஜனம் சொல்லுங்க. உங்களால் நடந்ததை மறந்து என்னோட சந்தோஷமா வாழ முடியுமா? வெறும் தாம்பத்யத்தைப் பத்தி மட்டும் பேசல நான். ஒருநாள் ஒருபொழுது கூட நடந்த கொடூரங்கள் எதுவும் நினைவு வராம முன்னாடி வாழ்ந்த மாதிரி நல்ல ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா?” என்றவளைப் பார்த்து, “நான் என்னால் ஆன எல்லா முயற்சியையும் செய்யுறேன்.” என்றான்.

     “இத்தனை வருஷமா உங்களோட மனநோயில் இருந்து வெளியே வர நீங்க உங்களோட முழு முயற்சியையும் போடலன்னு நினைக்கிறீங்களா மோகன். கட்டாயம் இல்ல. உங்களோட முழு முயற்சியையும் போட்டு தான் இருக்கீங்க. ஆனாலும் அது தோல்வியில் தான் முடிஞ்சிருக்கு. சில விஷயங்களில் நம்மளோட இயலாமையை, தோல்வியை ஏத்துக்கிறது தான் சரியான முடிவு.

     நாம ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை இனி அதே அழகோடு தொடரப்போவது இல்லை என்னும் போது, அழகான நினைவுகளோட அந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைச்சிடுவோமே.” என்றவளை இழுத்து அணைத்தக்கொண்டு அவள் முதுகின் பின்னால் முடியாது என்று தலையாட்டினான் மோகனன்.

     அவன் முதுகை வருடிக்கொடுத்து அவனை நிதானத்திற்கு கொண்டு வந்த நீலா, “நான் எடுத்தோம் கவிழ்த்தோம் னு இந்த முடிவுக்கு வரல மோகன். நல்லா யோசிச்சேன். இனி நமக்கு எதிர்காலம் இல்லங்கிறது தான் உண்மை. இவளைக் காப்பாத்தாம போயிட்டோமேங்கிற குற்றவுணர்வோட நீங்க என்னோட வாழ்வதற்குப் பதிலா, நீலா எங்கேயோ யாரோடவோ நல்லா வாழுறாங்கிற நினைப்போட வாழும் போது கிடைக்கும் நிம்மதி அதிகமாக இருக்கும்.” என்றவளைப் பார்த்தவன்,

     “நீ விட்டுப் போயிட்டா நான் என்ன ஆவேன்னு தெரியாது நீலா.” குழந்தையைப் போல் சொன்னான்.

     “ஆனா நான் உங்களோட இருந்தா என்ன ஆவீங்கன்னு எனக்குத் தெரியும். அது நடக்கக்கூடாதுன்னு தான் பிரிவைப் பத்தி பேசுறேன்.” என்றாள்.

     “என்னை விட்டுப் போறதுன்னு முடிவு பண்ணிட்டியா நீலா. என்னை விட்டு உன்னால் இருக்க முடியுமா? என்னை வேற ஒருத்திக்கு தாரை வார்த்துக்கொடுக்க முடியுமா உன்னால்.” வேகமாகக் கேட்டான்.

     “ஏன் முடியாது. நான் ஒன்னும் பேய்கிட்டையோ, இரத்தக்காட்டேரிகிட்டையோ உங்களை ஒப்படைக்கல. எனக்கு இணையா உங்க மேல பாசம் வைச்சிருக்கும் ஒருத்திகிட்ட தான் ஒப்படைக்கப் போறேன். அவ செஞ்ச சில செயல்கள் சுயநலமா தெரியலாம். ஆனா நான் கூட செய்யாத ஒரு செயலை செஞ்சிருக்கா. என்னன்னு யோசிக்கிறீங்களா? நானாச்சும் உங்களுக்கு மனநோய் சரியாகிடுச்சுன்னு உத்தரவாதம் கொடுத்த பின்னால் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவங்க நீங்க எப்படியா நிலையில் இருக்கீங்கன்னு தெரிஞ்சும் உங்களைக் கல்யாணம் பண்ணி இருக்காங்க.

     அவங்ககிட்ட உங்களை ஒப்படைக்கிறதில் நான் எதுக்காக வருத்தப்படப்போறேன். நீங்க சந்தோஷமா இருப்பீங்க என்கிற நம்பிக்கையோட என்னோட வாழ்க்கையை நான் சந்தோஷமா வாழ்வேன்.” என்றாள்.

     “நீலா என்னைக் கடவுள் தான் கைவிட்டுட்டாருன்னு நினைச்சேன். இப்ப நீயும் என்னைக் கைவிட்டா நான் என்ன செய்வேன்.” என்றவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும், “நான் உங்களைக் கைவிடல. உங்களை இன்னொரு கரங்களோட சேர்த்து வைக்க நினைக்கிறேன்.” என்றாள்.

     “அவளை எனக்குப் பிடிக்கணுமே.” மோகனன் சொல்ல, “போகப் போக பிடிக்கலாம். அப்படியே பிடிக்காமல் போனால் கூட தான் என்ன? குழந்தையோட அப்பா அம்மாவா நிம்மதியா உயிரோடவாச்சும் வாழ்வீங்க தானே.” என்றவளை கோபமாகப் பார்த்தவன்,

     “நம்ம இரண்டு பேருக்கும் இரண்டு குழந்தைங்க பிறந்திருக்காங்க. அவங்களைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா? அவங்களுக்கு அப்பாவா என்னோட அன்பு வேண்டாமா?” என்றான்.

     “இவ்வளவு நாள் அவங்களுக்கு உங்களால் அன்பைக் கொடுக்க முடிந்ததா?” என்று கேட்க, பதில் சொல்லாமல் தலைகுனிந்தான் மோகனன்.

     “நான் உங்களைக் குத்திகாட்டுறதுக்காக இப்படிக் கேட்கல மோகன். உங்களை என்னால் புரிஞ்சுக்க முடியலன்னா வேற யாரால் புரிஞ்சுக்க முடியும்.” என்றவளை பரிதாபமாகப் பார்த்தவன், “என்னைப் புரிஞ்சு என்ன பிரயோஜனம். என்னை வேண்டாம் னு இல்ல சொல்ற.” என்க, சின்னதாய் புன்னகைத்தவள்,

     “ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய அன்பு வைச்சிருந்தாலும், அவங்க சேரக் கூடாதுன்னு விதி முடிவு பண்ணிடுச்சுன்னா எப்படியாச்சும் அவங்க பிரிஞ்சிடுவாங்க. கண்ணன், ராதா மாதிரி.” என்றவளை இமைக்காமல் பார்த்த மோகன், “ரொம்ப நல்லா பேசக் கத்துக்கிட்ட நீலா. என்னென்ன கேள்வி வரும், என்னென்ன பதில் சொல்ல வேண்டியது இருக்கும், எப்படியெல்லாம் என்னை வாயடைக்க வைக்கலாம் னு ரொம்ப தயாரா வந்திருக்க இல்ல.” என்க,

     “பின்ன கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்தா எதுவும் சரியாகாது. கஷ்டத்தை தாண்டி அதுக்கு தீர்வு என்னன்னு கண்டுபிடிச்சா தான் எல்லோருக்கும் நல்லது. அதை தான் நான் பண்றேன்.” என்றாள்.

     “என்னை வாணி கூடபோகச் சொல்றியே, நீ என்ன செய்வ.” முக்கியமான கேள்வியை எழுப்ப, “என்ன மோகன், பழங்கால பொண்ணுங்களோட மைண்ட்செட்டில், பலவந்தப்படுத்தப்பட்டவ அடுத்து ஒரு வாழ்க்கை வாழ தகுதியே இல்லாதவன்னு நினைச்சு வாழ்க்கை முழுக்க தனியாவே இருந்திடுவேனோன்னு பயப்படுறீங்களா? அதுக்கு நான் ஆள் இல்லை.

     யாரோ பண்ண தப்புக்கு எனக்கு நானே எதுக்காக தண்டனை கொடுத்துக்கணும். நான் வாழ்வேன், மத்த பொண்ணுங்களை மாதிரி ரொம்ப சந்தோஷமா வாழ்வேன்.” என்றவளை உற்று நோக்கியவன்,

     “என்கூட உன்னால் வாழ முடியாது. ஆனா என்னைத் தாண்டி போய் வேற ஒருத்தனோட உன்னால் சந்தோஷமா வாழ முடியும் இல்ல.” கரகரப்பான குரலோடு கேட்டான்.

     “உங்ககூட என்னால் வாழ முடியாதுன்னு நான் எப்ப சொன்னேன். என்னோட உங்களால் வாழ முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு விடுதலை தான் கொடுக்கிறேன். நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க நல்லா இருந்தாலே போதும், நம்மளோட தான் இருக்கணும் என்கிற எந்த அவசியமும் இல்லன்னு நம்புறவ நான். அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.” காதலோடு சொன்னாள்.

     “நீ இனி எனக்கு இல்லவே இல்லன்னு சொல்லும்போது உள்ளுக்குள்ள ஊசியால் குத்துற மாதிரி வலிக்கிது. ஆனா நான் உனக்கு இல்லங்கிறதை நீ ரொம்ப சாதாரணமா எடுத்துக்கிறன்னா உன்னை நான் நல்லா பார்த்துக்கல தான் போல. ஏதோ ஒரு வகையில் உனக்கு நான் குறை வைச்சுட்டேன். அதனால் தான் உன்னால் என்னை இலகுவா கடந்து போக முடியுது.

     என்னோட கையை மீறி நடந்த தவறுகளுக்கும், என்னோட இயலாமையினால் தடுக்க முடியாமல் நடந்த தவறுகளுக்கும் இதுதான் தண்டனைன்னா அதை மனசார ஏத்துக்கிறேன். நல்லா இரு. நான் சாகும் கடைசி நொடி வரை உன்னோட நல்லதுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருப்பேன். உன்னால் முடிஞ்சா எதிர்காலத்தில் என்னை எங்கேயாவது பார்த்தால் என்னைப் பார்த்து மனசார சிரி அது போதும்.” என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றான் மோகன். அவன் கைகள் அடிக்கடி உயர்ந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டே இருந்தது. அதைப் பார்த்த நீலாவுக்கும் மனம் அதிகமாக வலித்தது தான்.

     வாழ்வில் முதல்முறையாக விரும்பிய ஆண்மகன் அவன். அவனை அழ வைத்து அனுப்பி வைத்த வலி இருந்தாலும், இது தான் அனைவருக்கும் நல்லது என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

     அவன் சென்று வெகுநேரம் ஆகியும் அவளால் அந்த இடத்தில் இருந்து நகர முடியவில்லை. சற்று முன்னர் வரை அவன் அமர்ந்திருந்த இடத்தின் தடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த இடத்தில் யாரோ அமர்வது போல் தெரிய நிமர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!