Skip to content
Post Views: 1,214
அத்தியாயம் 26
“சாரங்கன்” ஆச்சர்யமாய் அழைத்தாள் நீலா.
“பரவாயில்லையே, வருஷம் மூணு போயிடுச்சு என்னை மறந்து இருப்பீங்கன்னு நினைச்சேன்.” சின்ன சிரிப்போடு கேட்டான் அவன்.
“உங்களை எப்படி மறக்க முடியும். நான் என் வாழ்க்கையில் மனசறிஞ்சு தப்பு பண்ணது உங்களுக்கு மட்டும் தான். என்னை உங்களுக்கு எந்தளவு பிடிச்சிருந்தது, எனக்காக உங்க வீட்டில் எவ்வளவு தூரத்துக்கு போராடிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சும் நான் என்னோட சுயலாபத்துக்காக உங்களை வேண்டாம் னு சொல்லிட்டேன் இல்ல. ஆசை காட்டி மோசம் பண்ணிட்டோமோன்னு பல முறை நினைச்சிருக்கேன்.” சோகமாய் சொன்னாள்.
Advertisement
“யாரைக் கல்யாணம் பண்ணிக்கனும் என்பது முழுக்க முழுக்க ஒரு பொண்ணோட முடிவு. என்னை விட எந்த வகையிலோ மிஸ்டர் மோகனன் உங்களுக்கு பெட்டரானவரா தெரிஞ்சிருக்கார். அப்படி இருக்க, என்னைத் தாண்டி அவர்கிட்ட போனதை நான் என்னைக்கும் தப்பா நினைக்க மாட்டேன்.” என்றான்.
“இது உங்க பெருந்தன்மையை தான் காட்டுது சாரங்கன். ஆனா நடந்தது என்னன்னு எனக்குத் தெரியுமே. எங்க வீட்டில் இருந்து தான் முதலில் சம்பந்தம் பேசினாங்க. அதுக்கு அப்புறம் தான் நீங்க சம்மதம் சொன்னீங்க. அந்த வகையில் நான் பண்ணது தப்பு தான்.” என்றாள்.
“சரி அந்த தப்பை நேர் செய்ய ஒரு வாய்ப்பு கிடைச்சா சரிபண்ணுவீங்களா?” என்றவனை புரியாமல் பார்த்தாள் நீலா.
Advertisement
“எனக்கு இப்பவும் உங்க மேல அதிகமான மரியாதையும், அன்பும் இருக்கு. கூடவே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான ஆசையும்.” என்று சாரங்கன் நகர்த்த, கேட்டுக்கொண்டிருந்த நீலாவுக்கு கண்கள் விரிந்தது.
Advertisement
சில நொடிகளில் சுதாரித்தவள், “தப்பு சாரங்கன். கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட வந்து இப்படிப் பேசுறது நல்லா இல்ல. நான் உங்களை என் மனசோட உயரத்தில் வைச்சிருக்கேன். அதில் இருந்து நீங்க இறங்க வேண்டாம். உங்களுக்குன்னு பொறந்த பொண்ணு எங்கேயாவது இருப்பாங்க, அவங்களைத் தேடி பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்றாள்.
“அப்படி நினைச்சு தான் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணேன். வரதட்சணை அதிகம் கிடைச்சதுன்னு என்னோட அம்மாவும் சந்தோஷமா முன்ன நின்னு கல்யாணத்தைப் பண்ணி வைச்சாங்க.
ஆனா வந்த பொண்ணுக்கு என்னோட வேலை பிடிக்கல. வேலைக்காக காலையில் சீக்கிரமா கிளம்புறதும், இராத்திரி நேரம் கழிச்சு திரும்பி வருவதும் பிடிக்கல. அவளுக்காக நான் செலவளிக்கும் நேரங்கள் குறைவா இருக்கிறது பிடிக்கல. அவளோட சொந்தங்கள் வீட்டு விஷேஷத்துக்கு என்னால் போக முடியாதது பிடிக்கல. அவளோட ப்ரண்ட்ஸ் மாதிரி வெளிநாட்டுக்கு ஹனிமூன் போகாதது பிடிக்கல. எல்லாத்துக்கும் மேல என்னோட காக்கி யூனிபார்ஃம்மை துவைக்கிறது பிடிக்கல. இப்படி என்னோட செயல்களை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டு இருந்தவளுக்கு கடைசியில் என்னையே பிடிக்காம போயிடுச்சு.
Advertisement
விவாகரத்து வேணும் னு கேட்டா. நானும் அம்மாவும் எவ்வளவோ பேசிப் பார்த்தோம். போலீஸ் வேலையை விட்டா என்கூட வந்து வாழுறேன்னு சொன்னா. அப்படித்தான் உன்னோட வாழனும் னா அந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லைன்னு சொல்லி விலகிட்டேன். விவாகரத்து ஆகி இரண்டு வருஷம் ஆகுது.” என்று சுருக்கமாக தன் கதையை முடித்தான்.
“என்னங்க இது, நீங்க போலீஸ் னு கல்யாணத்துக்கு முன்னாடி தெரியாதா அந்தப் பொண்ணுக்கு. ஒத்து வருமா வராதான்னு கல்யாணத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். அதை விட்டுட்டு அவங்க வாழ்க்கையோடு சேர்த்து உங்க வாழ்க்கையையும் வீணாக்கி இருக்காங்க.” கோபமாய் சொன்னாள் நீலா.
“இது தான் நீலா, இப்படி எதிரே இருக்கும் நபரோட சூழ்நிலையை யோசிச்சு பேசுற, நடந்துக்கிற உங்க குணம் தான் அப்பவும் இப்பவும் எனக்கு அதிகமா பிடிச்சிருக்கு.
பொண்டாட்டின்னு நீ யாரைக் கூட்டிட்டு வந்தாலும் நான் ஒன்னும் சொல்லமாட்டேன், ஆனா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க. அதனால் இனி நீங்க தான் சொல்லணும்.” என்றான்.
“என்னைப் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியுமோ.” சந்தேகமாக அவள் கேட்க, ஆமாம் என்று தலையாட்டினான் சாரங்கன்.
“எப்படி?” என்க, “சாருகேசி என்னோட மேலதிகாரி. அவரோட ஸ்டேஷனில் என்னைப் பார்த்ததும் ஷாக்கானார். என்ன நினைச்சாரோ சில நாட்கள் என்னைத் தொடர்ந்து மானிட்டர் பண்ணார். அப்புறம் ஒருநாள் என்னை தனியா கூட்டிட்டு போய் உங்களைப் பத்தி, உங்க கல்யாண வாழ்க்கையைப் பத்தி, உங்களுக்கு நடந்த எல்லாத்தைப் பத்தியும் சொன்னார்.
எனக்கு முதலில் அவர் மேல கோபம் தான் வந்தது. அவங்க அண்ணனை குணப்படுத்தி உங்களோட சேர்த்து வைக்கிறதை விட்டுட்டு இப்படி தனித்தனியா வாழ்க்கைத்துணையை அமைச்சுக் கொடுக்க விரும்புறாரேன்னு. ஆனா அவரோடு சேர்த்து நான் மீட் பண்ண மோகனனோட மனநல மருத்துவர் தான் எனக்கு நடப்பை புரிய வைச்சார்.
சம்பவம் நடந்த நேரம் அவ்வளவு தூரத்துக்கு மோகனனுக்காக யோசிச்ச நீங்க, குணமாகி வந்தாலும் அவரைப் பிரிய தான் முயற்சி செய்வீங்கன்னு மிஸ்டர் கேசி சொன்னார். பொண்ணுங்க மனசு ஆழம் னு நான்அதை நம்பாம தான் இருந்தேன். ஆனா இன்னைக்கு அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வார்த்தைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.” என்று நிறுத்த, “நாங்க பேசிக்கிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்டீங்களா?” கோபமாகக் கேட்டாள் நீலா.
“கேட்கணும் னு கேட்கல. உங்களை தற்செயலா பார்த்து பேசலாம் னு பக்கத்தில் வரும் போது மோகனனும் வந்தார். சரி என்ன தான் பேசுறீங்கன்னு ஒரு ஆர்வத்தில் கேட்டேன்.” உள்ளது உள்ளபடி சொன்னான்.
“நான் இன்னும் மோகனன் மனைவி தான் தெரியும் தானே.” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன், “ஒரு போலீஸ்காரனா யாரையும் எடை போடுறது என்னோட வழக்கம். அப்படி முதன்முதலில் உங்களைப் பார்த்த நேரம் நீங்க உங்களுக்கு வரப்போற கணவனை புரிஞ்சு நடந்துப்பீங்கன்னு தான் நினைச்சேனே தவிர, யாராலும் காட்ட முடியாத அளவு அன்பையும் அக்கறையையும் காட்டுவீங்கன்னு எதிர்பார்த்து இருக்கல.
கண்ணுக்கு முன்னாடி அதைப் பார்த்த பிறகும் உங்களை யாருக்கோ விட்டுக்கொடுக்க என்னால் முடியாது நீலாம்பரி. அம்மாகிட்ட சொன்னேன். உன்னோட விருப்பம் னு சொல்லிட்டாங்க. அவங்களோட முன்னாள் மருமகளால் அந்த அளவு காயப்பட்டு இருப்பாங்க போல.
விதியைப் பார்த்தீங்களா? யார் மூலமா நீங்க என் கையை விட்டுப் போனீங்களோ அந்த கேசி சார் மூலமாவே உங்களைச் சேர எனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.” என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் நீலா.
அவள் என்னவோ பேச விரும்புவது புரிய, “எதுவா இருந்தாலும் மனசில் இருந்து பேசிடுங்க நீலா. நான் தப்பாவே நினைக்க மாட்டேன்.” என்று உத்தரவாதம் கொடுத்தான் சாரங்கன்.
“நான் மோகனனைப் பிரியப்போறது நிஜம் தான். ஆனா அவர் மேல இன்னமும் எனக்கு நிறைய அன்பு இருக்கு. அப்படி இருக்க உங்களோட ஆசை விசித்திரமா இருக்கு.” என்றாள்.
“நான் உணர்ந்த வரை நீங்க எவ்வளவுக்கு அன்பான நபரோ அதே அளவு எதார்த்தவாதியும் கூட. இல்லன்னா இத்தனை பெரிய முடிவை இத்தனை சுலபத்தில் எடுத்து, அதை நிறைவேத்தி அதுக்கு அப்புறமும் கல்லு மாதிரி இருக்க முடியாது.
காயம் வலிக்குதேன்னு அதையே யோசிக்காம, கூடுதல் வலியைத் தாங்கிக்கிட்டாச்சும் காயத்தை குணப்படுத்த வழியைத் தேடின நீங்க, ஆறிப்போன காயத்தை நினைச்சு அடுத்து வரும் பயணங்களை வெறுக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க சாரங்கன்.” நீலா சொல்ல, “இந்த விஷயமும் எனக்குத் தெரியும். கேசி சார் குழந்தைங்களை அவரும் அவரோட மனைவியும் பார்த்துக்கப் போறதா சொன்னார். எனக்கு அதில் உடன்பாடு இல்ல.
நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நாம தான் பார்க்கணும். உங்க குழந்தைங்க உங்களோட பொறுப்பு. நீங்க என்னோட பொறுப்பா வந்திட்டா, ஆட்டோமேட்டிக்கா அந்தக் குழந்தைகளும் என்னோட பொறுப்புக்கு வந்திடுவாங்க. மோகனன் குறுக்கே வராம இருந்திருந்தா இந்நேரம் நிஜமாவே அந்தக் குழந்தைங்க எனக்கு தானே பிறந்திருக்கும். அப்படி நினைச்சுட்டு போறேன். என்னால் முகம் சுளிக்காம அவங்களோட பழக முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்றான்.
“எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல சாரங்கன். எல்லாம் ரொம்ப வேகமா நடக்கிற மாதிரி இருக்கு.” சற்றே தயங்கினாள் நீலா.
மோகனனைப் பிரிய முடிவெடுத்து, அந்த முடிவுக்கு அவனையும் சம்மதிக்க வைத்து விட்டாள் தான். அவர்களைச் சூழ்ந்திருந்த ஒரு சிக்கலுக்கு விடை கொடுத்துவிட்டாள் தான். அதற்காக அது வலிக்கவில்லை என்று அர்த்தம் ஆகிவிடாதே.
அது புரிந்தது போல், “கண்டிப்பா டைம் எடுத்துக்கோங்க. விவாகரத்து அப்ளை பண்ணனும், அது கிடைக்கணும். அதுக்கு அப்புறம் தானே நம்ம கல்யாணம். இதெல்லாம் நடந்து முடிய நாட்கள் எடுக்கும். அதுக்குள்ள உங்க மனசு நடப்பை ஏத்துக்கும் பாருங்க.” ஆரூடம் சொன்னான் சாரங்கன். பார்க்கலாம் என்றுவிட்டு தன் வீடு வந்து சேர்ந்தாள் நீலாம்பரி.
விஷயம் கேள்விப்பட்டு, “உனக்கு என்ன பெரிய தியாகின்னு நினைப்பா. உனக்காகவும், நீ பெத்த இரண்டு குழந்தைங்களுக்காகவும் சுண்டுவிரலைக் கூட அசைக்காத குடும்பத்துக்காக உன் வாழ்க்கையை விட்டுக்கொடுத்திட்டு வந்திருக்க. இப்ப நீ செஞ்சதுக்காக உனக்கு சிலையா வைக்கப்போறாங்க. அவ்வளவு போக வேண்டாம், இந்த செயலுக்கான நன்றி உணர்ச்சியாவது அந்தக் குடும்பத்தில் யாருக்காச்சும் இருக்குமா சொல்லு. ஒளிஞ்சது தொல்லைன்னு நிம்மதியா இருப்பாங்க.
ஒரு கன்னத்தில் அறைஞ்சா மறுகன்னத்தை காட்டுங்கன்னு சொன்ன இயேசுபிரான் கூட உன் புகுந்த வீட்டுக்காரங்களைக் கண்டா கன்னம் கன்னம் அறைஞ்சுட்டு வருவார். நீ ஏன் அக்கா இப்படி இருக்க.” என வானுக்கும் பூமிக்கும் குதித்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள் அமிர்தா.
மனைவி அறியாமல் அவள் அக்காவைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னான் சாருகேசி. “ஸ்டே ஸ்ட்ராங்க் அண்ணி. உங்களோட இந்த தைரியம் இந்த உலகத்தில் எந்தப் பொண்ணுக்கும் வராது. சீக்கிரமே உங்களுக்குள்ள இருக்கும் வலியில் இருந்து மீண்டெழுந்து சாரங்கன் சாரோட நல்லபடியா வாழனும்.” என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் நீலா.
“என் அண்ணன் மேல நான் வைச்சிருக்கிற அக்கறை உலகத்துக்கே தெரியலாம். ஆனா உங்க மேல எனக்கு இருக்கும் அக்கறை உங்களுக்கு மட்டுமாச்சும் புரியும் னு நினைக்கிறேன். என்னோட செயல் தப்பானதுன்னு தோணுதா?” என்க, “தெரியல.” என்றுவிட்டு விலகிச்சென்றாள் நீலா.
வீடு வந்து சேர்ந்த மோகனன் கண்ணில் படும் பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தான். குழந்தையை பத்திரமாக அறைக்குள் விட்டுவிட்டு வந்த வாணி, கணவன் ஆடும் ருத்ரதாண்டவத்தின் காரணம் புரியாமல் நின்றாள்.
பேத்திக்கான சில விளையாட்டுப் பொருட்களோடு வந்த பைரவனைப் பார்த்த மோகனன், அவர் அருகே சென்று சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்து தூக்கினான்.
“மாப்பிள்ளை என்ன பண்றீங்க?” ரைபவன் உயிர் பயத்தில் கத்த, “மாப்பிள்ளை, இந்த உறவுக்காகத் தானே நீயும், உன் பொண்ணும் சேர்ந்து அத்தனை திட்டம் போட்டு காரியம் சாதிச்சீங்க. உங்களோட எண்ணம் நிறைவேறிடுச்சு. என்பொண்டாட்டி நீலா என்னை வேண்டாம் னு சொல்லிட்டா. என்னைத் தூக்கிப்போட்டுட்டா. என்னை உன் பொண்ணுக்கே கொடுத்திட்டா.
உங்களுக்கு குளுகுளுன்னு இருக்குமே. இப்ப சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ. உன் பொண்ணு என் வாழ்க்கையில் வேண்ணா இடம் பிடிச்சிருக்கலாம். ஆனா என் மனசில் என்னைக்கும் அவளுக்கு இடம் கிடைக்காது.” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்று அனைவரும் பயம்கொள்ளும் வண்ணம் பெரும் சத்தத்துடன் கதவை அறைந்து சாற்றினான்.
அடுத்த நாள் காலையில் உணவு உண்ணும் போது, “நான் உங்க அண்ணனையும், அண்ணியையும் பார்க்கணும் கேசி. ஏற்பாடு பண்ண முடியுமா?” என்றாள் நீலா.
“பண்றேன் அண்ணி.” கேசி சொல்ல, “அதுதான் அண்ணன் பொண்டாட்டி பதவியை பிடுங்கியாச்சே இன்னும் என்ன அண்ணி.” நக்கலாய் வந்தது அமிர்தாவின் வார்த்தைகள்.
“நீலா என்னைக்கும் எனக்கு அண்ணி தான்.” அமிர்தாவிடம் சொன்னவன் நீலா பக்கம் திரும்பி, “எப்ப போகணும் னு சொல்லுங்க.” என்றான்.
“எதுக்கு போகணும் னு கேட்க மாட்டீங்களா கேசி.” நீலா கேட்க, “ஆமா நீங்க எதுக்காக அவங்களைப் போய் பார்க்கணும். அதுதான் எதுவும் இல்லன்னு ஆகிடுச்சு தானே.” என்றாள் அமிர்தா
“டிவோர்ஸ் பத்தி பேசணும். அதோட இன்னொரு முக்கியமான விஷயமும் பேச வேண்டியது இருக்கு.” நீலா சொல்ல, சாப்பிட்டுக்கொண்டிருந்த கேசிக்கு சாப்பாடு இறங்கவில்லை. கையில் இருந்த சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு நீலாவைப் பார்த்தான்.
“இதுதான் சரின்னு முடிவு பண்ண பின்னாடி எதுக்காகவும் கலங்கக் கூடாது கேசி. அடுத்தடுத்து நடக்க வேண்டியது நடந்தா தானே எல்லோருக்கும் நல்லது.” என்றவள் சாப்பிடத் துவங்கிய போது வீட்டின் காலிங்பெல் அடித்தது.
நீலா எழுந்துகொள்ள முயற்சிக்கையில், “நீங்க சாப்பிடுங்க அண்ணி. நான் பார்க்கிறேன்.” என்ற கேசி கதவைத் திறக்க அங்கே கீரவாணியும், பைரவனும் நின்றிருந்தனர்.
வேகமாக சாப்பாட்டில் கை கழுவிய அமிர்தா, பைரவனை நோக்கி வேகமாக அடியெடுத்து வைக்க, அவள் கரத்தை இறுக்கமாகப் பிடித்துக்கெண்டான் கேசி.
“என்னை விடுங்க, இந்த வீட்டில் உயிரோட இருக்கிறவங்க செத்துப் போனவங்கன்னு பாரபட்சமே இல்லாம எல்லோரையும் தீட்டித் தீர்த்துட்டு கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாம இந்த வீட்டு வாசலை மிதிக்க எப்படி தைரியம் வருது அவங்களுக்கு. இப்ப எதுக்காக வந்து இருக்காங்களாம். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் பறிக்கவா.” என்று கத்தினாள் அமிர்தா.
“அமிர்தா அமைதியா இரு.” நீலா சொல்ல, “உனக்குத் தெரியாது அக்கா. அன்னைக்கு இதே மாதிரி தான் இரண்டு கைக்குழந்தைங்களோட என்ன செய்யுறதுன்னு தெரியாம அந்த வீட்டு வாசலில் போய் நின்னேன். அப்ப என்னென்ன பேச்சு பேசினான் தெரியுமா இந்த ஆளு. நான் சாகுற வரைக்கும் அந்த வார்த்தைகள் எல்லாம் மறக்குமான்னு தெரியல.” என்று அழுதவள் வழக்கமான வழக்கமாக கேசியின் தோளில் சாய்ந்து ஆறுதல் பெற்றுவிட்டு நடப்பு நினைவு வரவும் வேகமாக அவனில் இருந்து நிமிர்ந்து விலகி நின்றுவிட்டாள்.
தரையில் கிடத்தப்பட்டிருந்த மெத்தையில் தவழ முயற்சித்துக்கொண்டிருந்த லவன், லதாங்கி நடுவே தன் குழந்தையைப் போட்டுவிட்டு வந்து நின்றாள் வேணி. அதற்குள் தன் அருகே நின்றிருந்த நீலாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து விட்டிருந்தார் பைரவன்.
கேசி பதறிப்போய் தூக்கப்போக, நீலா எந்த ஆரவாரமும் இல்லாமல் சற்று விலகி மட்டும் நின்றுகொண்டாள். “என்னை மன்னிச்சிடு மா. வெறும் மன்னிப்புங்கிற வார்த்தையால் நான் பண்ண பாவத்தைக் கழுவ முடியாது தான். ஆனா இந்த மன்னிப்பு உனக்கும், உன் தங்கக்சிக்கும் கொஞ்சமாச்சும் அவமான உணர்வைக் குறைக்கும் னு நம்புறேன்.” என்றதோடு ஒரு மூலையில் போய் நின்றுகொண்டார்.
வாணி நீலாவின் அருகே வர, “மோகனன் எப்படி இருக்கார்?” என்றாள் நீலா. “இருக்கார், ரொம்ப கோபமா, அதைவிட அதிகமான ஏமாற்றத்தோடு.” என்று தாழ்வான குரலில் சொன்னாள் கீரவாணி.
“எல்லாம் சரியாகும். கொஞ்சம் காலம் ஆகும் அவ்வளவு தான். நானே உங்க வீட்டுக்கு வர நினைச்சிருந்தேன். வர வெள்ளிக்கிழமை ஆலந்தூர் குடும்ப நல நீதிமன்றதுக்கு அவரை வரச்சொல்லுங்க. விவாகரத்துக்கு பெட்டிஷன் போடணும்.” சாதாரண குரலில் சொன்னவளையே ஆச்சர்யமாகப் பார்த்தாள் வாணி.
“என்ன என்னை அப்படிப் பார்க்கிறீங்க?” காரணம் தெரிந்துகொண்டே கேள்வி கேட்டாள் நீலா.
“அமைதியானவங்க ஆளுமை செய்ய ஆரம்பிச்சா எப்படி இருக்கும் னு உங்களைப் பார்த்து கத்துக்கிட்டு இருக்கேன். எல்லா வலியையும் தாங்கிக்கிட்டு பெரிய பெரிய விஷயங்களை ரொம்ப சாதாரணமா செய்யுறீங்க. உங்களுக்கு நிஜமாவே மனவலிமை அதிகம் தான்.” வாணி சொல்ல, சின்னதாகப் புன்னகைத்துக்கொண்டாள் நீலா.
“வந்த விஷயத்தை சொல்லு மா.” பைரவன் நினைவு படுத்த, சற்றே தயங்கினாள் வாணி.
“தயங்குறதைப் பார்த்தால், மறுபடியும் என் அக்காகிட்ட இருந்து எதையோ எதிர்பார்த்து வந்திருக்கிற மாதிரி தெரியுதே.” நக்கலாகக் கேட்டாள் அமிர்தா.
கீரவாணி நீலாம்பரியின் அருகே வந்து அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு, “உங்க குழந்தைகளை எனக்கு தத்துக்கொடுக்கிறீங்களா?” மனதில் இருந்ததைக் கேட்டே விட்டாள்.
கோபத்தில் கொந்தளித்த அமிர்தா வாணி அருகே செல்லப்போக மீண்டும் கேசியின் கரங்களுக்குள் சிக்கிக்கொண்டாள். “என்ன தைரியம் உங்களுக்கு, அதுதான் என் அக்காகிட்ட இருந்து அவளோட வாழ்க்கை, அவளோட புருஷன் னு எல்லாத்தையும் பறிச்சுக்கிட்டீங்களே. அது போதாதுன்னு குழந்தைங்க வேற வேணுமா உங்களுக்கு. உங்களுக்கு தான் குழந்தை இருக்கே, அப்புறம் எதுக்காக என் அக்கா குழந்தைங்க. என்ன குழந்தைங்களைக் காட்டி உங்க புருஷன் மனசில் இடம்பிடிக்கலாம் னு நினைக்கிறீங்களா?” கணவனின் பிடியில் இருந்து விலக முடியாமல் போராடிக்கொண்டே சத்தம் போட்டாள் அமிர்தா.
தங்கையை ஒரு பார்வை பார்த்த நீலா, வாணியிடம் திரும்பி, “எதுக்காக இருந்த முடிவு?” என்றாள்.
“நான் தான் மா இந்த யோசனை சொன்னேன். என்னாகுமோன்னு நினைச்ச என் பொண்ணோட வாழ்க்கைக்கும், என் மருமகனோட உயிருக்கும் உத்தரவாதம் கொடுத்திருக்க. உனக்கு எங்களால் என்ன செய்ய முடியும் னு யோசிக்கும் போது உன்னோட குழந்தைகளுக்கு சரியான அங்கீகாரம் கொடுத்தா அது உன்னோட பெரிய மனசுக்கு நாங்க செய்யுற நன்றியா இருக்குமேன்னு நினைச்சோம்.” என்றார் பைரவன்.
“என்ன தான் நரி ஆடு வேஷம் போட்டு வந்தாலும் அது என்னைக்கும் நரி தான். அதே மாதிரி தான் நீங்களும். நாளைக்கு வளர்ந்த பிறகு என் குழந்தைங்க உங்க வீட்டுக்கு நியாயம் கேட்டோ இல்லை சொத்து கேட்டோ வந்திடக்கூடாதுன்னு தடுக்கிறதுக்காக தான் இந்த ஏற்பாடா?” கடுப்போடு கேட்டாள் அமிர்தா.
“குழந்தைகளுக்கு அவங்க அப்பாவோட பாசம், மறுக்கப்பட்ட அவங்க அடையாளம், மறுவாழ்க்கைக்கு போகப் போகும் உங்களுக்கு ஒரு நிம்மதின்னு பலதும் யோசிச்சோம். எங்களுக்கு இது நல்ல யோசனையா தான் தெரியுது. உங்களுக்கு எப்படின்னு யோசிச்சு சொல்லுங்க. நான் உங்க குழந்தைங்களை எப்படி பார்த்துப்பேனோன்னு பயம் இருந்தா அதை இப்பவே தூக்கி போட்டுடுங்க. என் குழந்தைக்கு இணையா அன்பும், அக்கறையும் காட்டி அவங்களை என்னால் வளர்க்க முடியும்.” என்றாள் வாணி.
“இப்படி யோசிச்தே பெரிய விஷயம் தான் வாணி. ஆனா எனக்கு இது சரியா வராதுன்னு தோணுது. குழந்தைங்க உங்களோட இருந்தா அவங்க நல்லா இருப்பாங்க. ஆனா உங்களோட, மோகனோட வாழ்க்கை முன்னேற்றம் அடையாது. குழந்தைங்க எங்களோடவே இருக்கட்டும். அவங்களோட மரியாதை மற்றும் உரிமை விஷயத்தில் நான் பின்வாங்க மாட்டேன். அதுக்கு என்ன செய்யணும் னு எனக்கு ஒரு யோசனை இருக்கு. அதை சரியான நேரம் பார்த்து செய்யலாம். நீங்க முதலில் மோகனனை விவாகரத்துக்கு சம்மதிக்க வைங்க.” என்றாள்.
நின்ற இடத்தில் இருந்து ஓடிவந்து நீலாவை அணைத்த வாணி, “என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.” என்றாள்.
“நடந்து முடிஞ்சதை நம்மால் மாத்த முடியாது வாணி. மறக்க முடிஞ்சதை மறப்போம், முடியாததை கடப்போம். சாகுற வரைக்கும் இந்தப் பூமியில் நாம வாழ்ந்து தானே ஆகனும். நடந்து முடிஞ்சதை ஏத்துக்கிட்டு, நடந்துக்கிட்டு இருக்கிறதை நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு, நடக்கப்போறது நல்லபடியா நடக்கும் என்கிற நம்பிக்கையோட வாழ்ந்து போகலாம்.” என்க, தலையாட்டி விடைபெற்றாள் வாணி.
“அடுத்த பிறவியிலாச்சும் கொஞ்சம் சூடு சுரணையோட அந்தக்கடவுள் உன்னைப் படைக்கட்டும்.” என்று கத்திவிட்டு சென்றாள் அமிர்தா.
கேசி நீலாவைப் பார்த்தபடி நிற்க, “நீங்களும் எமோஷனலா ஏதாவது பேசப்போறீங்களா?” சிரிப்போடு நீலா கேட்க, இல்லை எனத் தலையாட்டியவன், “உங்க மனசு ரொம்ப சுத்தமானது அண்ணி. நீங்க ரொம்ப சந்தோஷமா வாழனும். அதை நான் பார்க்கணும்.” உளமாற சொன்னான்.
“என் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்க எனக்குத் தெரியும். உங்களோட வாழ்க்கையை என்ன பண்ணப் போறீங்க.” நீலா கேட்க, தெரியவில்லை என்று சொல்லும் வண்ணம் தோள்களைக் குலுக்கிவிட்டு சென்றான் சாருகேசி.
நீலாம்பரி, மோகனன் விவாகரத்து வழக்கு முதல் ஹியரிங் விசாரணைக்கு வந்திருந்தது. முதல் நாள் பள்ளிசெல்லும் குழந்தையைப் போல் அழுது சிவந்து போன முகத்தோடு வந்திருந்தான் மோகனன். நீலா இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. தம்பி அருகே வந்தவன், “என் குழந்தைங்களை எனக்குக் கொடுக்கச் சொல்லு.” என்றான்.
“என்கிட்டையே கேட்கலாமே மோகன். நான் உங்க பக்கத்தில் தானே நிக்கிறேன்.” என்றவள், அவன் கண்களோடு கண் பார்த்து, “நான் ஒரு முடிவு எடுத்தா அதுக்கு சரின்னு சொல்லுவீங்களா மோகன்.” ஆத்மார்த்தமாகக் கேட்க, வேகமாக தலையாட்டினான் மோகனன்.
“நீங்களும் நானும் சேர்ந்து நம்ம குழந்தைகளை சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் உங்க தம்பிக்கும், என் தங்கச்சிக்கும் தத்து கொடுத்திடுவோம்.” என்றவளை அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
error: Content is protected !!