Skip to content
Post Views: 411
இறுதி அத்தியாயம்
நீலாவை முறைப்படி அவள் புகுந்தவீட்டில் விட்டுவிட்டு தன் இல்லம் திரும்பினாள் அமிர்தா. அவளுக்கு நடக்காத ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தமக்கைக்கு செய்தாள். அது எல்லாவற்றையும் அருகில் இருந்து பார்த்தபடி எப்போதும் போல் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அவள் பின்னாலே வந்தான் சாருகேசி.
அமிர்தா நேரே வந்து நின்றது தாய், தந்தை புகைப்படத்தின் முன்னால் தான். “உங்களை மாதிரி கோழையா இல்லாம, என்ன வந்தாலும் எதிர்த்து நின்னு அக்காவை நல்லபடியா வாழவைப்பேன்னு உங்ககிட்ட சொன்னேன் தானேம்மா. இன்னைக்கு அதை நிறைவேத்திக் காட்டிட்டேன்.” பெருமை மின்ன சொன்னவளின் கண்கள் அந்த வீட்டை சுற்றி வலம் வந்தது.
அம்மா, அப்பாவோடு ஆனந்தமாக வாழ்ந்த காலங்கள் போய், அக்காவோடு வாழ்ந்து வந்த துன்பகரமான நாட்கள் சுருங்கி இப்போது அந்த வீட்டில் அவளும் குழந்தைகளும் மட்டும் என நினைக்கையில் சற்றே வெறுமை சூழ்ந்தது தான். ஆனால் இனி கஷ்டம், கவலை என்று எதுவும் இருக்காது என்பதால் இந்த நிசப்தத்தையும், அமைதியையும் கூட ரசிக்கத் தான் சொன்னது அவள் உள்மனம்.
Advertisement
நாட்கள் நகரத்துவங்கியது. காலையில் சாருகேசி எழுந்ததும் அவனுக்கான தேநீர், வேலைக்காக அவன் கிளம்பி வரும் போது காலை உணவு என அனைத்தும் தயார் செய்து வைத்துவிடுவாள் அமிர்தா. அதைத் தாண்டி வேறு எதையும் எதிர்பார்க்காமல் சமத்தாக கேசியும் அவன் உண்டு, குழந்தைகள் உண்டு, வேலை உண்டு என இருந்து கொள்வான். தேவைக்கு அதிகமாக என்ன தேவைக்காக கூட அமிர்தாவை அவன் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லை. நாட்கள் நகர நகர ஒரு வித பயமும், அழுத்தமும் அவனைப் போட்டு படுத்தியது. இப்படியே இறுதிவரை இருப்பதென்றாலும் அவனுக்கு சம்மதமே. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் அமிர்தாவையும் குழந்தைகளையும் பிரிய அவன் தயாராக இல்லை.
இன்னொரு பக்கம் நீலா சாரங்கனின் வீட்டில் நன்றாகவே பொருந்திப்போனாள். அதற்கு சாரங்கனின் அம்மாவும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல. சாரங்கனுக்கு மனைவி என்னும் கடமையை சிறப்பாக ஆற்றினாள் நீலா. தான் எதிர்பார்த்து ஏங்கிய புரிதலோடு கூடிய அன்பு இதுதான் என்பதிலேயே திருப்திபட்டுக்கொண்ட சாரங்கனும் நீலாவுக்கான இடைவெளியை கொடுத்து கண்ணியவனாக நடந்துகொண்டான்.
மருமகள் வந்ததில் இருந்து மகனின் முகத்தில் இருந்த குறையாத புன்னகையைக் காண காண சாரங்கனின் அம்மாவுக்கு என்ன நடந்தாலும் நீலாவை பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியது. வீட்டு நிர்வாகம் அனைத்தையும் அவளிடம் கொடுத்து தான் ஒதுங்கிக்கொண்டார்.
Advertisement
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ஆயினும் கணவனும், மனைவியும் ஒன்றாக வெளியே செல்வார்கள், வீட்டிற்குத் தேவையான சின்னச்சின்ன பொருட்களை பற்றியாவது பேசிக்கொள்வார்கள் என அவர்களுக்கு இடையிலான நெருக்கத்திற்கு தன்னால் முடிந்த வகையில் பாலம் போட்டுக்கொடுத்தார்.
Advertisement
ரோஜா, பரிசுப்பொருட்கள், புடவை என பலவற்றை சாரங்கன் வாங்கிக்கொடுத்தாலும், எல்லை மீறாத அவன் பாங்கில் தான் நீலாவின் மனம் ஆட்டம் காணத்துவங்கி இருந்தது. திருமணம் முடித்த எட்டு மாத காலத்தில் மனைவிக்கு தன்மேல் சின்ன சலனம் விழுந்துவிட்டதை உணர்ந்த சாரங்கன் அதன்பிறகு சும்மாவே இல்லை.
வேலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு நீலாவையும் உடன் அழைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினான். தேனிலவு பயணம் என்று நினைக்கையில் பழைய கசடுகள் நினைவுக்கு வராமல் இல்லை. ஆனால், ‘வெளியே போகும் போது என்னைத் தாண்டி உனக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனா நான் சூப்பர் ஹீரோ கிடையாதே. என்னால் உன்னைக் காப்பாத்த முடியாத சூழ்நிலை வந்தா உன்னால் உன்னைக் காப்பாத்திக்க முடியணும்.’ என்றுவிட்டு கத்தி, பெப்பர் ஸ்ப்ரே, துப்பாக்கி என ஆளைக் காயப்படுத்த ஆரம்பித்து கொல்லும் வரை ஆயுதங்கள் கொண்ட கைப்பையை அவன் கொடுத்த போது சிரித்துவிட்டாள் நீலா.
“யார் மேலாச்சும் உனக்கு சந்தேகம் வந்தா, உன்னை அவங்க தாக்க முற்படுற மாதிரி தெரிஞ்சாலே பின்யோசனையே இல்லாம அவங்களைப் போட்டு தள்ளிடு. வேற என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.” என்க, சிரிப்போடு அவன் மேல் சாய்ந்திருந்தாள்.
Advertisement
அந்த இருபது நாட்கள் பயணம் அவளுக்கு பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்திருந்தது. நிஜமாகவே ரசித்து அனுபவித்தாள் நீலாம்பரி. கணவன் அவனாக உரிமை எடுத்துக்கொண்டால் மறுக்கக்கூடாது என்று அவள் நினைத்திருக்க, அதற்கான எத்தனையோ வாய்ப்புகள் அமைந்தாலும் சாரங்கன் அமைதியாகவே இருந்தான். நீலாவே அதைப் பற்றி கேட்டுவிட, சிரித்தவன், “என் பொண்டாட்டி எப்ப முழு மனசா தயாராகுறான்னு என்னால் புரிஞ்சுக்க முடியும். அப்ப யார் நினைச்சாலும் இந்த சாரங்கனைத் தடுக்க முடியாது.” என்று சிரிக்க, தானும் சேர்ந்து சிரித்தாள் நீலா.
பல இடங்கள் சுற்றியவன் கடைசியாக ஊட்டியும் வந்தான். ஊட்டியை நெருங்கிய சமயம் நீலா நல்ல உறக்கத்தில் இருந்தாள். கண்விழித்துப் பார்க்கையில் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அந்தக் கொடூரம் நிகழும் போது முக்கால்வாசி அவள் மயக்கத்தில் இருந்தாலும், நினைவு இருந்த அந்த கால்வாசி நேரத்தில் நடந்த யாவும் நினைவு வந்து அவளைப் பயமுறுத்தாமல் இல்லை.
காரை ஒரு இடத்தில் நிறுத்தி, மனைவியை இழுத்து அணைத்துக்கொண்ட சாரங்கன், “இந்த உலகத்தில் பார்த்து பயப்படும் அளவிலான இடங்கள் எதுவும் இல்லை. இயற்கை உருவாக்கின எல்லாமே அழகு தான். நம்ம மனுஷங்க நம்மளோட உணர்வுகளை வைச்சு சில இடங்கள் அழகு, சில இடங்கள் ஆபத்தானதுன்னு பிரிச்சு வைச்சிருக்கோம். ஊட்டியில் பார்த்து ரசிக்க பல இடங்கள் இருக்கு. ஒரு துர்சம்பவம் நடந்ததாலேயே இந்த ஊட்டி உன் மனசில் அபாயகரமான இடமா பதிஞ்சிடக்கூடாது.” என்க, புரிந்தது எனத் தலையாட்டிய நீலா, சாரங்கனின் துணையோடு ஊட்டியில் சில நாட்கள் தங்கி இருந்து அந்த ஊரின் மீது அவளுக்குள் இருந்த கசப்பான எண்ணங்களோடு சேர்த்து தேவையில்லாத தாழ்வான எண்ணங்களையும் தூக்கி எறிந்து மனதை இலகுவாக்கி இருந்தாள். அதன்பிறகு சாரங்கனை ஏற்றுக்கொள்வதற்கு அவளுக்கு எந்தவிதமான தடையும் இல்லை.
பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளமாய் அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக நகரத்துவங்கியது. பழக்கமான நடைபாதையாக இருந்தாலும் அதில் நம்மோடு கைகோர்த்து நடக்கும் நபர் புதியவராக இருந்தால், புதுப்புது அனுபவங்கள் கிடைக்குமே. அப்படித்தான் இருந்தது சாரங்கன் நீலாம்பரி தாம்பத்ய வாழ்க்கை.
அனுபவித்தது எல்லாம் போதும் என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ சேர்ந்து வாழத்துவங்கிய ஒரே மாதத்தில் கருவுற்றாள் நீலாம்பரி. இதில் சாரங்கனுக்கு சோகமான சோகம். ஆனால் அமிர்தாவுக்கு வானளவு சந்தோஷம். அவளிடம் மட்டும் பணம் இருந்திருந்தால் உலக மக்கள் அனைவருக்குமே விருந்து வைத்திருப்பாள். சந்தோஷத்தின் உச்சத்தில் ஓடி வந்து தமக்கையை கட்டி அணைத்து தூக்கி தன் நிலையை வெளிப்படுத்தினாள்.
மூன்று வயதான லவன், லதாங்கிக்கு நீலாவையும் அம்மா என்னே பழக்கிக்கொடுத்திருக்க, “அம்மாவுக்கு தம்பி” என்று அவர்களும் குதித்தனர். சூழ்ந்திருந்த அனைவரின் சந்தோஷத்தையும் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த சாருகேசியை தனியாக அழைத்துச் சென்றான் சாரங்கன்.
“வாழ்த்துக்கள் சார்.” கேசி சொல்ல, “நீங்க எனக்கு வாழ்த்து சொல்லிட்டீங்க. நான் உங்களுக்கு எப்ப சொல்றது?” புருவம் உயர்த்திக் கேட்டான்.
“ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நான் இரண்டு குழந்தைங்களுக்கு அப்பா ஆகிட்டேன். வாழ்த்து சொல்றதுன்னா அப்பவே சொல்லி இருக்கணும். எங்க, அப்ப எல்லாம் உங்க நினைப்பு முழுக்க அண்ணி மேல தானே இருந்தது.” என்று சொல்லி கேசி சிரிக்க, தானும் சிரித்தான் சாரங்கன்.
“உங்களுக்கும் அமிர்தாவுக்கும் நடுவில் எதுவும் இன்னும் சரியாகலையா?” அக்கறையாய் கேட்க, “அத்தனை சுலபத்தில் சரியாகுற மாதிரி நான் நடந்துக்கலையே.” என்ற கேசி அதற்கு மேல் எதுவும் கேட்காதே என்பதாய் பார்க்க, அது புரிந்தது போல் சாரங்கனும் அமைதியானான்.
நாட்கள் நகர்ந்தது. ஊரைக் கூட்டி அனைவரும் ஆச்சர்யப்படும் வகையிலும், தங்களின் முதுகிற்குப் பின்னால் வயிற்றெரிச்சலில் புகைந்து தள்ளும் அளவிலும் நீலாவின் சீமந்தத்தை நடத்தினான் சாரங்கன்.
வளைகாப்பு முடிந்த சில நாட்களாவது தங்கையோடு இருக்க வேண்டும் என்று நீலா ஆசை கொள்ள மனதே இன்றி தான் அவளை அனுப்பி வைத்தான் சாரங்கன். வீட்டிற்கு வந்த நீலா தங்கையும் அவள் கணவனும் வாழும் ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையைக் கண்டுகொண்டாள். கேசியை அவள் அர்த்தமாய் பார்க்க, சின்னதாக சிரித்துக்கொண்டவன் பெரிதாக எதுவும் பேசவில்லை.
ஒரே அறையில், ஒரே மெத்தையில் இரண்டு குழந்தைகளுக்கு நடுவில் படுத்திருந்தாலும் தனித்தனி தீவாக வாழ்வது எப்படி என்பதை அமிர்தா மற்றும் கேசியிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
அன்று இரவு நீலாவின் கால்களுக்கு சூடான எண்ணெய் தேய்த்து நீவிவிட்டுக்கொண்டிருந்தாள் அமிர்தா. “இதெல்லாம் நான் உனக்கு செய்யணும். ஆனா நீ செஞ்சுக்கிட்டு இருக்க.” நீலா குறைபட, “நீ சந்தோஷமா இருக்கியா அக்கா.” அக்கறையாய் கேட்டாள் தங்கை.
“எனக்கென்ன அமிர்தா. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இருந்தவரை என் மேல உயிரையே வைச்சிருந்த அம்மா, என்னோட இரண்டாம் நிழலா என்கூடவே இருந்த நீ, ஒன்னா இருந்த காலகட்டம் வரை என்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைச்சு தாங்கின மோகனன், இனி என்னோட கடைசி காலம் வரை என்னை பல்லக்கில் தூக்கி சுமக்கப் போகும் சாரங்கன். மணி மணியா குழந்தைங்கன்னு என்னைச் சுத்தி இருக்கும் எல்லோரும் என்மேல் உயிரா இருக்காங்க.
சில தேவையில்லாத நினைவுகளை தூக்கி போட்டுட்டா, என் வாழ்க்கையில் முழுக்க முழுக்க சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்.” என்றாள். அக்காவின் மகிழ்ச்சிக்கு இதை விட ஆதாரம் தேவை இல்லை என்பதால் ஆனந்தமாக அதை ஏற்றுக்கொண்டாள் அமிர்தா.
சுகப்பிரசவத்தில் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் நீலா. அந்த நாளன்று தான் பலநாள் பரதேசம் சுற்றிய மோகனன் ஊர் திரும்பி இருந்தான். வாணியை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகிவிட்டானா என்றால், நீலாவை அவளின் நலனுக்காக முழு மனதோடு, சந்தோஷமாக தன் மனதில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு தேறி இருந்தான். மற்றவைக்கு அவனுக்கு இன்னும் கொஞ்ச காலங்கள் தேவையானதாக இருந்தது.
“நீலாவையும் பையனையும் பார்க்கிறதா இருந்தா போய் பார்த்துட்டு வாங்க.” வாணியே சொல்லியும், “வேண்டாம், அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.” என்றவன் நன்றாக விவரம் தெரிந்த தன் மகளைத் தூக்கி கொஞ்சினான்.
நாட்கள் நகர்ந்து அமிர்தா, கேசி இருவருக்குமான இரண்டாம் திருமண நாள் வந்தது. கேசிக்கு உயிரே கையில் இல்லை. காலை எழுந்ததில் இருந்து அமிர்தாவின் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவளானால் அமைதியாக பிள்ளைகளை பள்ளிக்கு தயாராக்கிக்கொண்டிருந்தாள்.
அந்த நாள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது. கேசி சற்றே ஆனந்தம் அடைய, அடுத்த நாள் காலையில் தானே அவனை எழுப்பி அமிர்தா, “சீக்கிரம் கிளம்பி வாங்க. ஒரு இடத்துக்குப் போகணும்.” என்ற மனைவியைப் பார்க்கையில் கேசியின் முகம் இஞ்சி தின்ற குரங்கைப் போல் மாறியது.
நிறைய பயம், மெல்லிய தயக்கத்தோடு கிளம்பியவன் வந்து நின்ற இடத்தைப் பார்த்ததும் தான் ஒரு காவல் அதிகாரி என்பதைக் கூட மறந்து உடலின் நடுக்கத்தை வெளிப்படையாகக் காட்டினான். அது எதையும் பொருட்படுத்தாமல், அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அமிர்தா நுழைந்த இடம் ஒரு வழக்கறிஞர் அலுவலகம்.
முகம் செத்துப்போன நிலையில் தான் கேசி உள்ளே நுழைந்தான். ஆனால் அவனை ஆச்சர்யப்படுத்தும் விதமாக, தங்களின் பிள்ளைகளை சட்டப்படியும் தங்களுக்கே உரித்தானவர்களாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக வந்திருப்பதாக சொல்லி அவன் நெஞ்சில் பாலை வார்த்தாள் அமிர்தா.
திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது, இவர்களுக்கும் குழந்தை இல்லை. தத்து எடுக்கப்போகும் குழந்தைகளும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பதால எந்த வித சட்ட சிக்கலும் இல்லாமல் வெகுவிரைவிலேயே லவன், லதாங்கி அமிர்தா மற்றும் சாருகேசியின் பிள்ளைகளாக மாறினார்கள்.
அந்த நாள் தொட்டு அமிர்தாவின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்தான் கேசி. முதல் ஆச்சர்யமாக தங்களின் அறையில் குழந்தைகளுக்காக சின்னக்கட்டில் ஒன்றை வாங்கிப்போட்டு, அவர்களை அதில் படுக்க வைத்து அவர்களுக்கு அருகில் அவள் படுக்க, கேசி அவளுக்கு அருகே படுக்க வேண்டிய நிலை.
அதுவே அவனுக்கு ஆச்சர்யம் தான் என்னும் போது அடுத்தடுத்த நாட்களில் அவன் குளித்துவிட்டு வரும் போது அவன் காக்கி உடைகளை எடுத்துக்கொடுப்பது, பணம் தேவைப்பட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் சட்டைப்பையில் இருந்து எடுத்துக்கொள்வது, வழக்கத்திற்கு மாறாக அவன் வாங்கி வரும் பழங்கள், இனிப்புகள் என அனைத்தையும் பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்காமல் அவளும் உண்பது, பிள்ளைகளோடு விளையாடும் போது அவனையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்வது என புதிதாக செய்தாள்.
ஒன்றும் புரியாமல் கேசி நின்ற போது, அவளின் மாற்றத்தின் உச்சகட்டமாக பிள்ளைகள் மூலம், அவர்களுக்கு தம்பி வேண்டும் என்று கேட்க வைத்தாள். கேசியின் கண்கள் வெளியே தெரித்துவிழுந்துவிடும் போல் ஆனது.
அடித்துப் பிடித்து வெளியே சென்றவனுக்கு அந்த நாள் முழுக்க வேலையே ஓடவில்லை. ஒருவேளை நீலா அண்ணி இப்போது நல்லபடியாக வாழ்வதும், குழந்தைகளுக்கு அவர்களுக்கு உரித்த கௌரவம் கிடைத்ததும், கால மாற்றமும் அவளுடைய மனதில் மாற்றத்தை உருவாக்கி இருக்குமோ என்று யோசித்தவன் தயங்கி தயங்கி தான் அன்று இரவில் அவளை அணைத்தான்.
நொடி கூட தாமதிக்காமல் அவனைக் கட்டிக்கொண்டாள் அமிர்தா. கிடைத்தற்கு அரிய பொக்கிஷம் தன்னால் கை வந்து சேர்ந்த நினைப்பில் அவளைத் தன் மார்பில் பொத்திக்கொண்டான் கேசி. கிடைத்தது வாய்ப்பென்று உடனே அவளை சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கவில்லை. அதற்காக பழையவற்றைப் பேசி உருவாகி இருக்கும் இனிமையான சூழலைக் கெடுக்கவும் அவன் மனம் விரும்பவில்லை.
தங்கள் உறவு மெதுவாக முன்னேறட்டும் என்று நினைத்தான். அதற்கு ஏற்ப அடுத்த நாளில் இருந்து அவர்களுக்கு இடையேயான பேச்சுக்கள், கலகலப்புகள், பொறுப்புகள் எல்லாம் சிறிது சிறிதாக அதிகரித்தது. விளைவு விரைவிலேயே நிஜமான கணவன், மனைவியாக வாழ ஆரம்பித்தார்கள். நாட்கள் அழகாக நகர்ந்தது. இரண்டு மாதத்தில் அமிர்தா கருவுற, கேசிக்கு ஒரே கொண்டாட்டமாகிப் போனது. அவளை மகாராணியைப் போல் பார்த்துக்கொண்டான்.
ஆனால் அடுத்த சில நாட்களில் மனமொத்த விவாகரத்துக்கான மனுவோடு அவனைச் சந்தித்து பெரும் இடியை தலையில் இறக்கினாள் அமிர்தா.
“என்னடி இது?” ஆக்ரோஷமாய் அவன் கேட்க, “நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் என்னால் உங்களோட சில செயல்களை மன்னிக்கவே முடியல. உங்களோட காலம் முழுக்க வாழ்ந்தா ஒருநாள் இல்லாமப் போனாலும் ஒருநாள் உங்களை நான் ரொம்ப மோசமா கஷ்டப்படுத்திடுவேன். காயப்பட்டவங்களுக்கு ஒருசில நாள் தான் வலி, காயப்படுத்தியவனுக்கு ஆயுள் முழுக்க வலி. அந்த வலியை சுமந்துக்கிட்டு எப்படியோ இத்தனை நாள் ஓட்டிட்டீங்க. உங்களை மாதிரி இரும்பு மனசு எனக்குக் கிடையாது. அதனால் தான் டிவோர்ஸ் வாங்கிக்கலாம் னு நினைக்கிறேன்.” என்றாள்.
“அப்ப நாம வாழ்ந்த வாழ்க்கை, இப்ப உன் வயித்துக்குள்ள இருக்கும் குழந்தை.” காட்டமாய் அவன் கேட்க,
“உங்களைத் தான் வேற வாழ்க்கை தேடிக்க சொன்னேனே தவிர்த்து நான் வேற வாழ்க்கை வாழப்போறேன்னு சொல்லவே இல்லையே. எனக்கு என் குழந்தைங்க போதும். இருந்தாலும் காதலா வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை சில நாட்களாச்சும் வாழ்ந்து பார்க்கணும் என்பதற்காக தான் இதெல்லாம்.
அதோட லவன், லாதாங்கிக்கு நீங்க தான் அப்பா. உங்களுக்கு வேற ஒரு குடும்பம் அமைஞ்சு அதனால் ஒருவேளை எதிர்காலத்தில் அவங்க மேல பாசம் குறைஞ்சுட்டா, அதுக்காக தான் உங்களோட சொந்த இரத்தத்திலும் ஒரு குழந்தையைப் பெத்துக்க நினைச்சேன். முதல் இரண்டு குழந்தைகளை மறந்தாலும் மூணாவது குழந்தை எப்பவும் உங்க நினைப்பில் இருக்கும் பாருங்க.” என்றவள் கழுத்தைப் படித்து தூக்கி இருந்தான் கேசி.
“என்ன பண்றீங்க?” காற்றில் இருந்தபடி அவன் இரண்டு புஜங்களிலும் அடிக்க, “என்னடி ஆச்சு உனக்கு. பழிவாங்கும் வெறியுள்ள பேய் எதுவும் உன் உடம்புக்குள்ள வந்திடுச்சா. காலத்துக்கும் உன்னோட அருகாமையும், பிள்ளைங்களோட அன்பும் மட்டும் போதும் னு தானே இருந்தேன். ஆசை காட்டி ஏமாத்தி பைத்தியமாக்கப் பார்க்கிறியே.” என்று கோபமாக் கேட்க, விளையாட்டாக ஆரம்பித்தது வினையாகிப் போனதை நினைத்து பதறி அவன் கன்னத்தில் அடித்து சுயநினைவுக்கு வரவைத்து பத்திரமாக தரைஇறங்கினாள் அமிர்தா.
எந்த வித கௌரவமும் பார்க்காமல் பட்டென்று அவள் காலில் விழுந்த கேசி, “நீ என்ன பண்ணச் சொன்னாலும் பண்றேன். என்னை விட்டுப் பிரிய நினைக்காத ப்ளீஸ்.” என்றான்.
“என்ன சொன்னாலும் செய்ய முடியுமா?” நக்கலாக அவள்கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல் சரி என்று சொன்னான் கேசி.
“இனி உங்களோட ஆயுள் முடியுற வரைக்கும் என்னைத் தொடக்கூடாது. உங்க வீட்டுக்குப் போகக்கூடாது, உங்க அம்மா, அண்ணன், அண்ணியோட பேசக்கூடாது. என்னோட எந்த முடிவையும் எதிர்த்து எதையும் செய்யக்கூடாது. கடைசியா என்னோட வயித்தில் இருக்கும் குழந்தையை கலைக்க ஒத்துக்கணும்.” என்று ஒரே போடாகப் போட, தரையில் இருந்த வாக்கில் அவளை நிமிர்ந்து பார்த்து, “குழந்தை பாவம் அமிர்தா.” என்றான்.
“என்னோட எந்த யோசனைக்கும் குறுக்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். உங்களுக்கு நான் வேணும் னா என்னோட கண்டிஷனுக்கு ஒத்துக்கோங்க. இல்ல விவாகரத்து கொடுத்துட்டு போயிடுங்க. குழந்தையை பத்திரமா பெத்து வளர்க்கிறேன்.” என்றாள்.
எழுந்தவள் அவள் கண்களையே சில நொடிகள் பார்த்துவிட்டு, “நீ சொன்ன எல்லாத்துக்கும் எனக்கு சம்மதம்.” என்றான் இறுகிப்போன குரலில்.
“நிஜமா தான் சொல்றீங்களா? உங்க அண்ணனைப் பார்க்காம பேசாம உங்களால் இருக்க முடியுமா?” அமிர்தா நக்கலாகக் கேட்க, “வேற ஊருக்கு ட்ரான்ஸ்வர் வாங்கிடலாம். நம்பரை மாத்திடுறேன். அதையும் தாண்டி என்னைத் தேடிவந்தா இனி என்னைத் தேடி வராதன்னு சொல்றதுக்காக மட்டும் அவன்கிட்ட கடைசியா பேசிக்கிறேன்.” என்றான்.
“குழந்தையைக் கலைக்கப் போறேன்னு சொல்றேன்.” என்றவளை வலியோடு நிமிர்ந்து பார்த்தவன், “உன் இஷ்டம்.” என்றுவிட்டான். இரண்டு வார்த்தை தான் என்றாலும் உயிர் போய் உயிர் வந்தது அதை சொல்லி முடிப்பதற்குள்.
“அவ்வளவு நல்லவரா நீங்க?” என்றவளை வலியோடு பார்த்தவன், “நான் நல்லவனா கெட்டவனாங்கிற கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. அதனால் அதை தூரமா வைச்சுட்டு, உனக்கு நல்லவனா இருக்க ஆசைப்படுறேன்.” என்றான்.
“நல்லவரா இருந்தாலும் கெட்டவரா இருந்தாலும் எனக்கு இந்த கேசி போதும்.” என்றவண்ணம் அவனை முதுகோடு அணைத்தாள் அமிர்தா.
கேசிக்கு ஒருகணம் என்ன நடந்தது என்பதே உணர்வில் இல்லை. பனிச்சிலையாய் நின்றவனை அமிர்தாவின் உடல்வெப்பம் தான் உருக்கியது. அசையாமல் நின்றவன் இடையோடு கைகோர்த்தவள் அவன் எதிர்பாராவண்ணம் அங்கேயே நன்றாகக் கிள்ளி வைத்தாள். அதில் முற்றிலும் உணர்வு வந்தவன் அவளை முன்னே இழுத்து நிறுத்தி அவள் முகம் பார்க்க, “இத்தனை நாள் என்னைப் போட்டு எப்படிப் படுத்துனீங்க. அதுக்காக கடைசி முறையாக கொஞ்சமே கொஞ்சம் உங்களைப் பழிவாங்க நினைச்சேன். மத்தபடி உங்களை விட்டு பிரியும் எண்ணமோ, நம்ம குழந்தைகளைக் கொல்லும் எண்ணமோ எனக்கு இல்லை.” என்றாள்.
“அமிர்தா” நம்ப முடியாத குரலில் அழைத்தான் கேசி. “அச்சோ குழந்தை மாதிரி ஏன் இப்படி அழுறீங்க. என்னை அந்தளவு பிடிக்குமா உங்களுக்கு.” கேட்டுக்கொண்டே அவனை அமர வைத்தவள் அவன் கண்கள் தாண்டி வடிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
தன் கண்ணீரைத் துடைத்துவிடும் அவள் கரங்களைப் பிடித்துக்கொண்டவன், உயிர் மொத்தத்தையும் வார்த்தையில் தேக்கி, “இது நிஜம் தானே.” என்க, “கடவுள் சத்தியமா நிஜம் தான். உங்க அமிர்தா உங்களுக்கே கிடைச்சுட்டா.” என்றாள்.
அவன் அவளை ஏக்கமாகப் பார்க்க, அவன் மடியில் அமர்ந்து கழுத்தோடு கட்டிக்கொண்டவள், “எந்தப் பொண்ணாச்சும் தனக்குப் பிடிக்காத ஆண்கிட்ட தானா நெருங்கி வருவாளா? அந்த யோசனை கூட இல்லையா உங்களுக்கு. இந்தளவு மக்கா இருந்தா எப்படி துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடிக்கப் போறீங்க.” கிண்டலாய் கேட்க, அவளிடம் பழைய துடுக்குத்தனம் மீண்டு இருந்தததையும், கண்ணில் தன் மேலான காதல் ததும்புவதையும் கண்டுகொண்டான் கேசி.
நடந்து முடிந்த அனைத்தையும் தாண்டி அவள் காதல் தனக்கு மீண்டும் கிடைப்பது உயிரோடு சொர்க்கம் செல்வதற்கு இணை என்று புரிந்தாலும், திரிசங்குக்கு பாதி சொர்க்கம் கிடைத்தது போல் தனக்கு அமிர்தாவின் பாதி காதலாவது கிடைத்துவிடாதா என்று உள்ளுக்குள் ஏக்கம் இல்லாமல் இல்லை. ஆனால் என் முழு காதலுக்கும் நீ உரியவன் என்று அவள் வந்து நிற்கும் போது அவனால் நம்ப முடியவில்லை. அவன் செய்து வைத்த காரியங்கள் அப்படி.
“இதெல்லாம் எப்படி சாத்தியம் அமிர்தா?” நம்பமுடியாமல் கேட்க, அவனைப் பார்த்து சிரித்தவள், “என்ன செய்ய என் போலீஸ்கார புருஷனுக்கு கோபமா இருக்கும் பொண்டாட்டியை சரி பண்ணுற அளவுக்கு திறமை இல்லன்னு என் அக்கா அவங்களா முன்வந்து என்னை சமாதானம் பண்ணாங்க.” என்றவள் அந்த நாளின் நினைவுகளில் ஆழ்ந்தாள்.
வளைகாப்பு முடிந்து வீடு வந்த நீலாம்பரி மீண்டும் சாரங்கன் இல்லம் கிளம்பும் நாள் வந்தது. அக்காவை அனுப்பி வைப்பதற்கு மனமே இல்லாமல் அவளோடவே சுற்றிக்கொண்டிருந்தாள் அமிர்தா.
“உனக்கு முதல் பிரசவம் நான் தானே பார்த்தேன். ஒன்னும் தெரியாத அந்த நேரமே உன்னை நல்லபடியா பார்த்துக்கிட்டவ நான். குழந்தை வளர்ப்பில் நல்ல அனுபவம் இருக்கும் இந்த நேரத்தில் பார்த்துக்க மாட்டேனா? இருந்தாலும் இந்த சாரங்கன் மாமா ரொம்ப ஓவரா தான் போறார்.” என்று புலம்பினாள் அமிர்தா.
“உனக்கு என்ன நான் உன்னோட இருக்கணுமா? சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக்கோ. சாரங்கன் என்ன சொன்னாலும் பரவாயில்லைன்னு நான் உன்கூடவே வந்து தங்கி இருக்கேன்.” என்க, அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து போய், “குழந்தைங்களை முறைப்படி தத்து எடுக்க எனக்குன்னு குழந்தை இல்லாம இருக்கிறது பெட்டர் னு தோணுச்சு, அவருக்கும் கூட சம்மதம் தான்.” வேகமாகச் சொன்னாள் அமிர்தா.
“அது மட்டும் தான் காரணமா அமிர்தா. என்னைப் பார்த்து உண்மையைச் சொல்லுவன்னு எதிர்பார்க்கிறேன்.” நீலா கேட்க, “என்ன உன் முன்னாள் கொழுந்தனர் என் பொண்டாட்டி என்னை கொடுமைப்படுத்துறான்னு உன்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணாரா. இந்த ஆம்பிளைங்க புத்தி இப்படித்தான் போகுமா. எந்த மாதிரி சூழ்நிலையில் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணோம் னு நல்லாத் தெரிஞ்சிருந்தும் அவ மனசு மாற நாள் கொடுக்காம அவரோட அல்ப்ப ஆசைக்காக தங்களோட அந்தரங்கத்தை அடுத்தவங்க முன்னாடி கடை பரப்புவாங்களா? கொஞ்சமாச்சும் நாகரிகம் வேண்டாம்.” கடுகடுப்போடு சொன்னாள்.
“கேசி அப்படியான ஆள் னு நினைக்கிறியா அமிர்தா.” நீலா கோபமாகக் கேட்க பதில் சொல்லவில்லை அமிர்தா.
“கேசி எதுவும் சொல்லவும் இல்ல, சொல்லவும் மாட்டார். அது உனக்கும் நல்லாவே தெரியும். தெரிஞ்சும் அவரோட கேரக்டரை தப்பா பேசிக்கிட்டு இருக்க. உன்னோட மனசில் நீ என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க. இன்னும் எத்தனை நாள் இப்படி தாமரை இல்லை தண்ணீ மாதிரி வாழப்போறீங்க இரண்டு பேரும்.” நீலா கேட்க,
“எனக்கு இதைப் பத்தி பேசவும் விருப்பம் இல்ல. அவரோட சேர்ந்து வாழவும் விருப்பம் இல்ல. குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்கும் வரை எனக்குப் புருஷன்னு ஒருத்தர் வேணும். அதுக்காக தான் அவரை பொறுத்துப் போய்கிட்டு இருக்கேன்.” எங்கோ பார்த்தபடி சொன்னாள் அமிர்தா.
வெகுநேரம் நீலாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அக்கா புரிந்துகொண்டாள் போல என நினைத்து அமிர்தா எழுந்துகொள்ளப் பார்க்க, “தப்பே செய்யாத ஒருத்தர் முதல்முறை ஒரு தப்பு பண்றாருன்னா அந்த தப்புக்கு பின்னாடி இருக்கும் காரணத்தை யோசிக்கணும் அமிர்தா.
கேசி எடுத்த முடிவால் நிறைய பாதிப்பு நடந்தது உண்மை தான். ஆனா அவரோட தப்பான முடிவுக்கு பின்னாடி என்னைக் கஷ்டப்படுத்தி அழ வைக்கணும் என்கிற எண்ணம் இருந்ததா இல்ல, அவர் அண்ணனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கணும் என்கிற எண்ணம் இருந்ததான்னு யோசி.” என்ற நீலாவைத் தடுத்து அமிர்தா கோபமாக ஏதோ சொல்ல வர,
“அவர் அண்ணன் மட்டும் தான் உயிரா, என்னை விட அவர் தான் கேசிக்கு முக்கியமான்னு கேட்கக் கூடாது. எனக்கு ஒன்னுன்னதும் எந்த ஒரு குடும்பப்பொண்ணும் செய்யத் துணியாத காரியத்தை செய்யப் பார்த்தவ நீ. உனக்கு கேசியோட அண்ணனுக்கான தவிப்பும், துடிப்பும் அண்ணனைக் காப்பாத்த என்ன வேண்ணா செய்யலாம் என்கிற வைராக்கியமும் புரியும்.” என்க, “நல்லதுக்காகவே இருந்தாலும் அடுத்தவங்களுக்கு தப்பு செய்யலாமா அக்கா.” நியாயமாகக் கேட்டாள் அமிர்தா.
“கேசி செஞ்சது தப்பு இல்லன்னு இங்க யாரும் சொல்லவே இல்ல. அவர் செஞ்சது பெரிய தப்புன்னு அவருக்கே புரிஞ்சதால் தான் அதுக்கான தண்டனையா உன்னை விட்டு விலகி இருக்க நினைச்சிருக்கார். உனக்காக உதவிகளை தள்ளி நின்னு செய்ய முயற்சி செய்திருக்கார்.
அம்மா அப்பா செத்த நேரத்தில் உனக்கு உதவிக்கு ஆட்களை வரவைச்சவர் கேசி, ஏதாவது முடியாத சூழ்நிலையில் உன் நண்பர்கள்கிட்ட காசு கேட்கும் போது உனக்கு உடனே காசு வருமே அது எப்படின்னு நினைக்கிற கேசியோட காசு அது.
நீ நல்லபடியா வாழ்ந்திருந்தா அவர் கட்டாயம் உன்பக்கம் வந்திருக்க மாட்டார். எங்க இருந்தாலும் நீ நல்லபடியா வாழனும் என்கிற வேண்டுதலோட அவர் வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு இருந்திருப்பார். அவர் கண்ணுக்கு முன்னாடி நீ கஷ்டப்படும் போது அவரால் எப்படி பார்த்துக்கிட்டு அமைதியா இருக்க முடியும். அதனால் தான் மறுபடியும் உன்னை சுத்தி வந்தார். எப்படியாவது அவரோட உன்னை சேர்த்து உன்னை சந்தோஷமா வைச்சிருக்க முடியுமான்னு பார்த்து இருக்கார்.”
“அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே அவசரப்பட்டு எடுத்தவை தான் என்றாலும் அதுக்குப் பின்னால் இருப்பது எல்லாம் அவரைச் சார்ந்தவங்களோட நிம்மதியும், சந்தோஷமும் மட்டும் தான்.”
“அந்த வீட்டு ஆளுங்க உன்னை எப்படியெல்லாம் பேசினாங்கன்னு உனக்குத் தெரியாது அக்கா.” அமிர்தா சொல்ல, “அவர் பேசலையே. அந்த நேரம் நீ எப்படியான ஷாக்கில் இருந்தியோ அதே அளவு ஷாக் தானே அவருக்கும். உன்னை மாதிரி தானே நடக்கும் எதையும் தடுக்க முடியாத பரிதாபகரமான நிலையில் நின்னு இருப்பார். நீ கிளம்பி வந்த பிறகு அவர் தப்பு பண்ணவங்களை கண்டிச்சிருந்தா அது உனக்குத் தெரிஞ்சிருக்குமா?
நீ கேட்ட உதவிகளை அவர் செய்யல என்பதாலேயே அவரா செய்ய நினைச்ச எந்த உதவிகளையும் நீ ஏத்துக்கல. உன்னை நான் தப்பு சொல்லல. உன் இடத்தில் இருந்து யோசிச்சு பார்த்தா நீ செஞ்சது தான் சரி. ஆனா கேசியும் பாவம் தானே. செஞ்ச தப்புக்கு மனசு வருந்தி மன்னிப்புக் கேட்கும் போது அந்த மன்னிப்பைக் கொடுத்தா அது அவருக்கும் நல்லது, மன்னிப்பு கொடுக்கும் நபருக்கும் நல்லது.”
“உன்னை விட்டு மோகனனைத் தேர்ந்தெடுத்துட்டாருன்னு சொல்லாத அமிர்தா. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தராசுதட்டில் எடை போட முடியாத சில உறவுகளும், சூழ்நிலைகளும் இருக்க தான் செய்வாங்க. அவங்களை தராசில் இரண்டு பக்கமும் உட்கார வைக்கும் தப்பை கூட இருக்கிறவங்க பண்ணக்கூடாது. அப்படி பண்றது எல்லோருக்குமே கஷ்டத்தை மட்டும் தான் கொடுக்கும்.
உன்கிட்ட நான் வந்து உனக்கு நான் முக்கியமா, இல்ல குழந்தைகள் முக்கியமான்னு கேட்டா என்ன பண்ணுவ. இரண்டு பேரில் ஒருத்தர் பக்கம் தான் நாம நிக்க முடியும் என்கிற நிலை இருக்கு பார்த்தியா அது ரொம்பக் கொடூரம். புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.
மோகனனா நீயான்னு வரும் போது தான் அவர் மோகனனைத் தேர்ந்தெடுத்தார், மத்த எல்லா இடத்திலும் அவர் உன்னைத் தான் தேர்ந்தெடுத்தார். அவர் நினைச்சிருந்தா வாணியோட தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி குற்றவுணர்ச்சி எல்லாத்தையும் துடைச்சுப் போட்டுட்டு வாழ்ந்திருக்கலாம். உன்னை நினைச்சவர் உனக்காக காத்திருந்தார். நீ தப்பு பண்ண பார்த்த நேரம் ஆத்திரம் , வருத்தம் தாண்டி எத்தனை துடிச்சுப் போய் இருப்பார் மனுஷன். எல்லாத்தையும் யோசி அமிர்தா.
கேசி தப்பு பண்ணவர் தான். அந்த தப்புக்காக வருத்தப்படுறார். அவர் வருத்தத்தையும், உங்களோட எதிர்காலத்தையும் மனசில் வைச்சு அவரை மன்னிக்க முயற்சி பண்ணு. நீங்க காதலிச்ச காலத்தில் நடந்ததையும் நினைக்க வேண்டாம், என்னோட கஷ்டகாலங்களில் நடந்ததையும் நினைக்க வேண்டாம். இனி வரக்கூடிய காலங்களில் அவர் உனக்கு எப்படியான புருஷனா நடந்துக்கிறாருன்னு பாரு.” என்றுவிட்டு சென்றிருந்தாள் நீலா. அவளோடு பேசிய அந்த குறிப்பிட்ட நேரங்கள் அமிர்தாவுக்குள் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
தப்பு பண்ணிட்டான், என்னை கைவிட்டுவிட்டான் என்று மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தவள் இனி அவன் தவறு செய்யாமல் இருப்பானா, அனைவரையும் விட என்னை முதன்மையானவளாக நினைப்பானா என சோதித்து பார்க்க நினைத்தாள்.
அவனோடு எதிர்காலத்தை திட்டமிடத் துவங்கிய நேரத்திலேயே அவள் மனம் அவனை மன்னிக்கத் துவங்கிவிட்டதை உணர்ந்தாள். இத்தனை இறங்கிப் போக வேண்டுமா எனக் கஷ்டமாக இருந்தது தான். ஆனால் மன்னிக்க மனது தீர்மானித்துவிட்ட பிறகு அவளால் அதைத் தடுக்க முடியவில்லை.
நாளும் பொழுதும் தன் ஒவ்வொரு செய்கையாலும் அவளைத் தன்பக்கம் வெகுவாக ஈர்த்தான்கேசி. “மாயக்காரன் காலேஜ் படிக்கும் காலத்திலும் இப்படித்தானே. அவனைத் தவிர வேற யாருமே என் கண்ணுக்குத் தெரியாதபடி எனக்கு மந்திரம் போட்டு இருந்தான். இப்பவும் அதையே போட்டு இருப்பான் போல.” எனத் தனக்குள் திட்டிக்கொண்டே வாழ்க்கையை முன்னேற்றினாள்.
மனைவி தன்னை மன்னிக்கத்துவங்கிவிட்டாள் என்பதில் ஆரம்பித்து அவள் முழுதாக தன்னை மன்னித்துவிட்டாள் என்பது வரை எதையுமே உணராத கேசி ரோபோட் போல சுற்றி வர, அதன்பிறகு தான் அவளுக்கு அவனோடு விளையாடிப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. விளைவு அவன் மடியில் உட்கார்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு இருக்கிறாள்.
“நிஜமா என்னை மன்னிச்சுட்டியா அமிர்தா.” கேசி கண்கள் கலங்க கேட்க, “என் பிள்ளைங்க மேல சத்தியமா நான் உங்களை மன்னிச்சுட்டேன். ஆனா இது தான் கடைசி முறை. இனி கடைசி காலம் வரை என்னை நீங்க ஏமாத்தக் கூடாது.” கண்டிப்பாக அவள் சொல்ல,
“அப்படி ஒரு நிலை வந்தா அதை செய்யுறதுக்கு முன்னாடி நான் செத்துப்போயிடுவேன்.” என்று சொல்லி இத்தனை நாள் மரணவேதனைகள் தீரும் அளவுஅவளை நெருக்கமாகக் கட்டிக்கொண்டான் கேசி.
பள்ளி முடிந்து வந்த லவனும், லதாங்கியும் தாயும், தந்தையும் அரவணைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு சந்தோஷித்து அவர்களும் இணைந்துகொண்டார்கள்.
தன் பரந்த கைகளால் குறுகிய மார்புக்குள் அனைவரையும் அணைத்துக்கொண்டான் சாருகேசி. பல நாட்களாக அவன் மனதை அரித்த கரையான்கள் காணாமல் போனது போல் தோன்ற, வெகுநாட்களுக்குப் பிறகு மனதாரப் புன்னகைத்தான்.
மோகனன் எப்போதும் மகளோடே இருந்தான். கொஞ்சமாக ஆறி இருந்த அவன் காயங்களை தன் எச்சில் மருந்து போட்டு மிக வேகமாக ஆற்றிக்கொண்டிருந்தாள் அவன்செல்ல மகள்.
வாணி அமிர்தாவின் கர்ப்ப விஷயத்தை சொல்ல மனதை அரித்த கடைசி வலியும் இலவம் பஞ்சாக பறந்து போனதில் நிம்மதியாய் உணர்ந்த மோகனன் வாணியைப் பார்த்து மனமாற சிரித்தான். இடைப்பட்ட நாட்களில் அவளோடு சகஜமாக பேச ஆரம்பித்து நட்பு பாராட்டும் நிலைக்கு வந்திருந்தான். இன்னும் சில காலங்கள் அவனோடு நட்புறவாக மட்டுமே பழக ஆசை கொண்டது வாணியின் மனது. அந்த அளவு நல்ல நண்பனாக, நல்ல வழிகாட்டியாக இருந்தான்.
“ரொம்ப நாளா என்னோட மனசை உறுத்திக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை நான் சொல்லணும். நான் ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டேன். என்னோட காதலைப் பத்தி மட்டும் யோசிச்சு உங்களையோ உங்க மனசையோ நீலாவையோ பத்தி துளி கூட யோசிக்காம கிடைச்சது சந்தர்ப்பம் னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதில் கொடுமை என்னென்னா அது தப்புன்னே எனக்கு ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிய வந்தது. அதுக்கான நான் உங்ககிட்ட மன்னிப்புக்கேட்டுக்கிறேன்.” என்றாள் வாணி.
“விடு, இங்க யாரு தான் தப்பு பண்ணல. நம்மளையும் மீறின சக்தி ஒன்னு இருக்கு. அதுக்கு பொழுது போகலன்னு நம்மை பொம்மலாட்ட பொம்மைகளா ஆட்டிவிளையாடுது. என்ன பண்ணிட முடியும்.” என்றவன் அவளை மன்னித்ததாய் புன்னகைக்க, அதுவே போதுமானதாக இருந்தது வாணிக்கு. தாங்கள் மற்ற கணவன், மனைவியைப் போல் வாழ ஆரம்பிக்க நெடுநாட்கள் தேவைப்படும் என்பது புரிந்தது. ஆனால் அதற்கு துளி கூட வருத்தம் இல்லை அவளிடத்தில். இப்படியே காலத்திற்கும் மோகனன் முகத்தைப் பார்த்துக்கொண்டு வாழ்ந்தால் கூட போதும் என்று தான் நினைத்தாள்.
அமிர்தாவுக்கு பிரசவத்தில் இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தது. பள்ளிக் கட்டணத்தை நினைத்து மலைத்த கேசி, “உங்களைப் படிக்க வைக்கவே நான் இலஞ்சம் வாங்கணும் போல.” என்று கலகலத்து சிரிக்க அவன் சிரிப்பில் பங்குகொண்டாள் நீலா.
சாரங்கனுக்கு வேலை மாற்றுதல் ஆகி இருக்க சில நாட்கள் முன்பு தான் வேறு ஊருக்குச் சென்றிருந்தான். அமிர்தாவோடு அவர்கள் வீட்டிலே தங்கி இருந்த நீலாம்பரி கணவன் புதுவீட்டிற்கு சென்று அவனுக்கு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு வருவதாக தகவல் சொல்லிவிட்டு நகர்ந்த சில நிமிடங்களில் மோகனன் வாணி இருவரும் குழந்தைகளைப் பார்க்க வந்தனர்.
அவர்கள் சந்தித்துக்கொள்வதில் யாருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் போனாலும், விதி அவர்கள் இனிமேல் பார்த்துக்கொள்ளவே தேவையில்லை என்று நினைத்தது போலும் சந்தர்ப்பங்களைத் தடை செய்துகொண்டே இருந்தது. அமிர்தாவின் வளைகாப்பின் போது பைரவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் மோகனன் அவரோடு இருந்துகொண்டான். இப்போது இப்படி. இதுவும் கூடநல்லதுக்கு தான் என்று சிரித்துக்கொண்டாள் அமிர்தா.
அண்ணன் மோகனனை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினான் கேசி. அவர்களைப் பார்த்துவிட்டு அப்படியே அமிர்தா திரும்ப ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டவண்ணம் படுத்திருந்தனர் அவளுடைய இரட்டைப்புதல்வர்கள்.
“வேண்டாம் டா பசங்களா? நீங்க அடிச்சுக்கிற அண்ணன் தம்பியா கூட இருங்க. ஆனா உங்கஅப்பாவையும், பெரியப்பாவையும் மாதிரியான அண்ணன் தம்பியா மட்டும் இருக்க வேண்டாம் என நினைத்து சிரித்துக் கொண்டாள்.
நீலாம்பரி, மோகனன், அமிர்தவர்ஷினி மூவருமே உடைந்த தூரிகைகள் தான். அவர்களைக் கொண்டு காலம் வரைந்த உயிரோவியம் காலத்திற்கும் அழியாமல் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு விடைபெறலாம்.
error: Content is protected !!