Skip to content
Post Views: 3,838
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 9
விஷயம் கேள்விப்பட்டு பரமு பதறி அடித்து ஓடி வரும் முன்னே மீனாவுக்கு மகன் பிறந்து விட்டான். பேரன் பிறந்த சந்தோஷத்தை விட தாங்கள் இத்தனை சொந்தங்கள் இருந்தும் தன் பிள்ளை யாரும் இல்லாதவள் போல் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை வந்து விட்டது என்று தான் கதறினார் பரமேஸ்வரி.
கோபம் தான் மருமகன் மீது அதிகமாக இருந்தது. அந்த மருமகனை முட்டாள்தனமாக நம்பும் மகள் மீதும் இருந்தது. அதற்காக கர்ப்பிணி மகளை எவ்வாறு ஒரு தாய் ஒதுக்கி வைப்பார். மகளின் வைராக்கியத்தை நினைத்து கோபம் வந்தது. பேரனை கையில் வைத்திருந்தவர் மகளை வெளியே கூட்டி வரும் நேரத்திற்கு காத்திருந்தார். உடல் தளர்ந்து சோர்ந்து போய் வந்த மகளை பார்த்ததும் கோபம் பின்னுக்கு போய் அழுகை வந்து விட்டது.
Advertisement
அரசு மருத்துவமனையில் நார்மல் டெலிவிரியாகும் பெண்கள் எல்லாம் அப்போதே எழுந்து கொள்ள வேண்டும். உடல் வலியும் அதீத சோர்வையும் தாண்டி பெரிய அளவில் தொந்தரவு இல்லாததால் பிள்ளையை கையில் வாங்கிக் கொண்டாள் மீனா. நினைவு கணவனை நோக்கி சென்றது. என்னவோ அவனிடம் சொல்ல தோன்றவில்லை.
கணவனுக்கு தனியாக ஏதேனும் சிக்கல் இருக்குமோ என்றெல்லாம் மீனா யோசிக்கவில்லை. அவன் கேட்ட நகையை கொடுத்து அவனுக்கு பிடித்த தொழிலை வைத்தாயிற்று.. சேர்க்கை சரி இல்லாமல் குடித்துவிட்டு சுற்றுகிறான். எவ்வளவு அவசர வேலையாக இருந்தாலும் அப்படி எப்படி கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகளை மறக்க முடியும். பணம் கொடுத்தால் மட்டும் போதுமா?…
அப்படித்தான் ஜெகனும் நினைத்தான். ஒன்பதாம் மாதம் துவக்கத்திலே மீனாவுக்கு பிரசவம் நடந்துவிட்டது. ஜெகனை பொருத்தவரை நாள் இருக்கிறதே என்று நினைத்தான் போல… மீனாவும் போன் செய்து சொல்லவில்லை. பரமுவும் கண்டு கொள்ளவில்லை.
Advertisement
“அம்மா, வீட்டுல பாப்பாவ தனியா விட்டுட்டு வந்து இருக்கேன்”
Advertisement
“அந்த சண்டியர் எங்க போனான்?” என்றார் பரமு…
“வேலை விசயமாக வெளியூர் போயிருக்கார்” சோர்வாக சொன்னாள் மீனா.
“ஆமா, பெரிய கலெக்டர் உத்தியோகம், வெளியூர் போக.. அவன் வேணாம்னு தலைப்பாடா அடிச்சேன். எங்க கேட்ட” என்று சலித்து கொண்டவர், மகளின் தேவையை கவனித்த பின் பேத்தியை கவனிக்க ஓடினார்.
Advertisement
பிள்ளை பெற்ற வயிறு பசித்தது. தாய்க்காக காத்திருந்தாள். ஏன் அண்ணன்கள் வர வில்லை. கேள்வி இருந்த போதும் கேட்டு கொள்ள வில்லை. அவர்கள் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதோடு, அதில் வெற்றியும் பெற வில்லை. ஆம், தன் திருமணம் வெற்றி பெறவில்லை என்றே நம்பினாள் மீனா.
இப்போதெல்லாம் அவளுக்கு அந்த காதலித்த காலங்கள் ஏதோ கனவு போல தான் இருந்தது. காதலித்தவனை தான் கணவனாக கைபிடித்தது. ஆனால் இன்று கணவனாக மட்டும் தான் இருக்கிறான். காதலனாக இல்லையே.. அப்போது காதல் திருமணம் தோல்வி தானே..
மகனின் பட்டு முடியை வருடி கொடுத்த படி, அவனின் தந்தையின் சிந்தனைகளே மனதில் ஓடியது. கொலுசு சத்தம் கலகலக்க குட்டி தம்பியை பார்க்க தளிர் நடையிட்டு வந்தாள் தமிழ். காலையிலிருந்து மகளைப் பார்க்காத ஏக்கம் வேகமாக பிள்ளையை தூக்க போக,
“தூக்காத மீனா.. பச்சை உடம்பு வலிக்கும்..” என்றார் தாய்.
“அப்ப நீ தூக்கி என் மடியில வை ம்மா.. காலைல கிளம்பிற அவசரத்துல என் பிள்ளையை சரியாக கூட தூக்கல” என்று மகளை ஏக்கமாக பார்த்தாள்.
ஒன்றை வயது தான் தமிழ். தாய்ப்பாலை கூட சில மாதங்களுக்கு முன்பு தான் மீனா நிப்பாட்டினாள். ஆனால், தமிழுக்கு உணவு தூக்கம் எல்லாம் தாயின் கைக்குள் தான். பரமு பேத்தியை தூக்கி கொடுத்து, பேரனை வாங்கி கொண்டார்.
தமிழ் தன் தாயை தொட்டு தொட்டு பார்த்தாள். ஹாஸ்பிடல் வாசம், கலகலவென சத்தமும் அவள் முகத்தை சுருங்க வைத்தது. பேச்சு ஓரளவு திக்கி திக்கி தான் வரும்.
“அம்மா.. ஊசி..” என்று மீனாவின் குளுக்கோஸ் ஏறிய கைகளை பிடித்து முத்தம் கொடுத்தாள்.
இதை கண்டதும் மீனாவின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவள் அப்பன் சொல்லி கொடுத்தது தான். தமிழுக்கு தடுப்பூசி போட்டு வந்தால், நாள் முழுக்க தந்தையிடம் ஊ..ஊ என்று தொட்டு காட்டி கொண்டு இருப்பாள். அப்போது ஜெகன் தான் தங்க குட்டிக்கு வலிக்குதா.. முத்தம் கொடுத்தா வலி பறந்து போகும் என்று முத்தம் கொடுத்து கிச்சு கிச்சு மூட்டி விடுவான்.
கணவனின் ஞாபகம் மீனாவை வாட்டியது. தங்களைக் கண்டு கொள்ளவில்லை என்ற கோபம் இருந்தாலும்.. மனைவி, பிள்ளைகளை மறக்கும் அளவுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என்று பயமாகவும் இருந்தது. எங்கே இருக்கிறான். சாப்பிட்டானா இல்லையா? நிறைய கவலை தான் கணவனை நினைத்து. ஆனாலும், இறங்கி போய் போன் செய்ய மனம் வரவில்லை. தன் பிள்ளைகளை கூட நினைக்கவில்லையே என்ற ஆதங்கம் நெஞ்ச நிறைய இருந்தது.
மகளின் முகத்தையும் கலங்கிய கண்களையும் பார்த்த பரமேஸ்வரிக்கும் கண்கலங்கியது.
“உன் புருசனுக்கு அப்பா அம்மா இல்லாட்டியும்.. ஆணுக்கு ஆண், பொண்ணுக்கு பொண்ணுன்னு கடவுள் நல்லாத்தான் கொடுத்து இருக்கு.. அவனுக்கு வாழ தெரியல. வேற என்னத்த சொல்ல…” முந்தானையில் முகத்தை துடைத்தார்.
மாலையில் தான் அவளின் அண்ணன் அண்ணிகள் பிள்ளையை பார்க்க வந்தது. முதல் குழந்தைக்கு போல சீரும் சிறப்புமாக செய்யவில்லை. ஏதோ பழங்களும் டிரெஸ்ஸும் இருக்க.. அதுவே பெரிய விஷயம் நினைத்துக் கொண்டாள் மீனா.
எப்படியும் மூன்று நாட்கள் ஆகிவிடும்.. நார்மல் டெலிவரி ஆக இருந்தாலும் மூன்று நாள்தான். அதனால் பரமேஸ்வரி மகளோடு இருந்து கொண்டு தமிழ் பாப்பாவை தன் மகன்களோடு அனுப்பி வைத்தார். மீனாவுக்கு அதில் விருப்பமில்லை. இதுவரை தாயை பிரியாத குழந்தை எவ்வாறு தாய்மாமன் வீடு என்றாலும் இருக்கும்.
“அம்மா, பாப்பாவை அனுப்பாதீங்க. என்னை விட்டு இருக்காது”
தனியாக ஒற்றை பிள்ளையாக இருந்த குட்டி தமிழுக்கு, தன் மாமன் மக்களை பார்த்து அவ்வளவு குஷி. கையில் சாக்லேட்டும் பிஸ்கட்டுமாக மாமன் மக்களோடு கிளம்பியது.
“நீ சும்மா இரு மீனா. ஒரு விவரமும் தெரியாது. இந்தப் பிள்ளையோட உன்னை பார்த்தா பாப்பா மனசு ஏங்கும். நம்ம வீடா இருந்தாலும் பரவாயில்லை. இது ஹாஸ்பிடல்.. இங்க வச்சு எப்படி பார்க்க முடியும்” என்றார் தாய்.
“இப்ப ஜாலியா தான் போவா.. நடுராத்திரி எந்திரிச்சு அழுதா அம்மா தான் வேணும்”
“அதுக்கு என்னடி பண்ண முடியும். உனக்கு பிள்ளை பெத்த உடம்பு. பிறந்த குழந்தையை நீ வைக்கணும்.. உங்க ரெண்டு பேரையும் நான் பாக்கணும். என்னாலையும் தமிழை பார்க்க முடியாது. இன்னும் ரெண்டு நாள் தானே அப்புறம் வீட்டுக்கு போயிடலாம்” என்ற தாய்க்கு மறுத்து பதில் சொல்ல முடியா வில்லை.
புதிதாக உலகத்தை பார்த்தவனின் மின்மினி கண்களை வெளிச்சம் கூச செய்ய, உறங்க முழிக்க என்று விடிய விடிய அழுகைதான். தாய்க்கும் மகளுக்கும் இவனைப் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.
அதிகாலையில்தான் குட்டி பையன் கொஞ்சம் கண்ணசைந்தான். அப்போதுதான் மீனாவுக்கும் உறங்க நேரம் கிடைத்தது. உடல் அசதியே நீண்ட தூக்கத்தை கொடுக்க நன்றாக தூங்கிவிட்டாள்.
பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் பரமு மகளுக்கு இட்லி வாங்கி கொடுத்தார். மீனா விழிகள் மகளை தேடியது. காலையில் எழும்போதே பால் காய வைத்து பிஸ்கட் கொடுக்க வேண்டும் பிள்ளைக்கு.. தன் அண்ணி அவ்வாறு குழந்தையை கவனித்து இருப்பாரா?…
பத்து மணிக்கு மேல் தான் தமிழ் தாயை காண வந்தாள். வந்ததும் பக்கத்தில் இருக்கும் குட்டி தம்பியை கூட காணாமல் வேகமாக தாய் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள். மீனா பிள்ளையை நன்றாக பார்க்க, தமிழ் தாயின் மார்பில் ஒன்டினாள்.
அந்த நேரம் குட்டி பையன் அழுக, “என்னமோ ரொம்ப நாள் பாக்காத மாதிரி அவங்க அம்மா மேல ஏறி உட்கார்ந்து இருக்கிறத பாரு” என்ற பரமு..
“அவளை கொஞ்சம் கீழே இறக்கி விடு மீனா. தம்பி அழுகிறான் பாரு” என்றார்.
ஆனால், மீனா மகளை இறக்கி விட வில்லை. மகளை மடியில் போட்டு, மகனை தோளில் போட்டு கொண்டாள். கொஞ்ச நேரம் தட்டி கொடுக்க அக்கா, தம்பி இருவரும் உறங்கி விட்டார்கள்.
“பாப்பா சாப்பிட்டாளா அண்ணி” என்றாள் மீனா.
“ம்ம், பெரிய மனுசி மாதிரி நாலு இட்லி சாப்பிட்டா” என்றதும் மேலே கேட்க வில்லை மீனா.
மனதில் என்னவோ ஒரு அழுத்தம். நேற்று காலையில் மீனா குளிக்க வைத்து பிள்ளைக்கு உடைமாற்றி விட்டதுதான். அதற்குப்பின் பிரசவ வலி குழந்தை பிறப்பு மாறி போக.. தன் அண்ணன் வீட்டுக்கு அதே உடையில் தான் குழந்தையை அனுப்பியது. இன்று காலையில் தமிழ் வரும்போது அந்த உடை தான் அணிந்திருந்தாள். பெரிதாக தன் பிள்ளை கவனிக்கப்படவில்லை, கண்டு கொள்ளவுமில்லை.
நேற்று பரமு தூக்கி வரும்போது அவசரத்தில் தமிழுக்கு செருப்பு அனுவிக்காமல் தான் தூக்கி வந்தார். காலையில் தமிழ் ஹாஸ்பிடல் வரும்போது நடந்து தான் வந்தாள். இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தை.. தூக்கி வந்திருக்கலாம்.
ஆனால், மீனா வாய் விட்டு எதையும் கேட்க வில்லை. யாரையும் குறைவாக நினைக்கவும் இல்லை. குற்றம் சொல்லவுமில்லை. தன் தாயிடம் கூட விடாமல், குளிக்கவும் வைக்காமல் உடை மட்டும் மாற்றி விட்டாள். ஏனெனில், மீனா நாளை தான் நடமாட முடியும்.
அன்று மாலையும் பரமு, பேத்தியை வந்திருந்த சின்ன மகனோடு அனுப்ப பார்க்க, தமிழ் தாயின் கழுத்தை கட்டி கொண்டு விடவே இல்லை.
“என்னடி மீனா, பாப்பாவ விடு. நீயும் மடியிலே தூக்கி வச்சு இருக்க”
“அழுகுறா அம்மா”
“அப்படிதாண்டி அழுகும்.. தூக்கிட்டு வெளியே போயிட்டா கொஞ்சம் அழுகை குறையும். அப்படியே உங்க சின்ன அண்ணன் கொண்டுபோய் பெரிய அண்ணன் வீட்டில் விடட்டும். அங்க தான் பிள்ளைகள் இருக்குல்ல” என்றார்.
தமிழ் தாயை விடவே இல்லை, “இருக்கட்டுமா குழந்தை தானே. பெரிய ஆளுங்க தான் தங்க கூடாது சின்ன பிள்ளை தங்கலாம். நாமே பார்த்துப்போம்”
“என்னடி, ராத்திரி முழுக்க உன் மகன் வேலை வைப்பான்”
“அம்மா, நான் பாத்துக்குறேன் என் பிள்ளைகளை.. உன்னால இருக்க முடிஞ்சா இல்லன்னா நீயும் வீட்டுக்கு கிளம்பு” என்று எரிச்சலில் கத்த,
“ஆமா நானும் போயிட்டா உன் புருஷன் கூட இருக்கான் பாரு உன்னையும், உன் பிள்ளைகளையும் பார்க்க.. வாய் மட்டும் உனக்கு என்னைக்கும் குறையாது” முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் பரமு.
அங்கு நோயாளிகளுக்கு மட்டுமே பெட் இருக்கும். பரமும் மகளின் கட்டிலுக்கு கீழேயே போர்வை விரித்து பேத்தியை படுக்க போட்டார். தமிழுக்கு, தாய் தன்னை தூக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. தாய் அருகில் இருக்க வேண்டும் அவ்வளவுதான். என்ன உன்ன கொடுத்தார்களோ உண்டு விட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள் பிள்ளை…
மகனைத் தோளில் தட்டி ஏப்பம் விட்டு படுக்க வைத்தவள் எட்டி மகளைப் பார்த்தாள். பாட்டியும், பேத்தியும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். மெல்ல எழுந்து நகர்ந்தவள் உறங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கிக் கொண்டாள் . தமிழுக்கு உறக்கம் களையவெல்லாம் இல்லை. பிள்ளைக்கு தெரியாத தாயின் வாசம். இரு கைகளை கொண்டு தாயின் கழுத்தை கட்டிக் கொண்டது. மெல்ல மகனின் அருகில் மகளைப் படுக்க வைத்தவள், இருந்த கொஞ்ச இடைவெளியில் தானும் உறங்கிக் கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் ஏதோ கசகசாவென சத்தம் கேட்டு விழித்து பார்க்க வந்துவிட்டான் பிள்ளைகளின் தகப்பன். உறக்க கலக்கத்தில் லேசாக விழித்து பார்த்தவள், மகனை தூக்கி வைத்திருந்த கணவனைப் பார்த்ததும் நன்றாக விழித்துக் கொண்டாள். வந்துவிட்டான் என்ற பரவசமும் இல்லை. ஏன் தாமதமாக வந்தான் என்ற கோபமும் இல்லை.
“தமிழ் குட்டிக்கு தம்பி பாப்பா வந்து இருக்கா!.. பட்டுக்குட்டி இனி அடுத்த வீட்டுக்கு போய் விளையாட மாட்டிங்க.. நம்ம வீட்டுக்கே ஆள் வந்தாச்சு” மகனை தூக்கி வைத்து மகளிடம் கேள்வி கேட்டாலும்.. அப்போதுதான் உறங்கி எழுந்திருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.
அவள் ஏதாவது பேசுவாள் என்று பார்க்க, மீனா கண்டுகொள்ளவே இல்லை.
அவளுக்கு நேற்று இரவே தெரியும் நாளை கணவன் வந்து விடுவான் என்று… அவள் குடியிருந்த வீட்டின் சுற்றத்தார்கள், கணவனின் நண்பர்கள் என்று நேற்று ஒரு பட்டாளமே வந்து பார்த்தது. அப்போதே அவளுக்கு தெரியும் விஷயம் கணவன் காதுக்கு சென்று விடும் என்று.. அதனால் அவன் வருவான் என்று எதிர்பார்த்து இருந்தால்…
இரண்டு பிள்ளைகளுக்கும் நிறைய உடைகள், பழங்கள், இனிப்புகள், விளையாட்டு பொருட்கள் என்று என்னென்னவோ வாங்கி வந்திருந்தான். மீனா அதையெல்லாம் சீண்ட கூட இல்லை.
“எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமல்ல மீனா. எதுக்கு கவர்மெண்ட் ஹாஸ்பிடல் வந்தீங்க. சுந்தர் கிட்ட சொல்லி பணம் கொடுத்தேனே. டெலிவரிக்கு இன்னும் இருவது நாள் இருக்குனு தான் அவசரப்படாம இருந்துட்டேன். தமிழுக்கு இந்த மாதிரி சிரமம் எல்லாம் நம்ம படலையா அதனால நான் யோசிக்கலை மீனா” தன் பக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகன்.
அதற்கும் மீனா எந்த பதிலும் பேசவில்லை. அமைதியாகத்தான் இருந்தாள். பொது வார்டு என்பதால் ஆட்கள் கூட்டமும் இருக்க.. பரமவும் கூடவே தான் இருந்தார். அதனால், ஜெகன் பெரிதாக வேற எதுவும் பேசவில்லை.
இன்று மீனாவை குளிக்க சொன்னார்கள். அதனால் அவள் வேலையை பார்க்க, மகளோடு கிளம்பி விட்டான் ஜெகன். இன்று கொஞ்சம் நன்றாக இருந்தாள் மீனா. அவளும் குளித்து பிள்ளைக்கும் உடம்பு துடைத்து விட்டிருந்தாள். அவளுக்கே உடம்பு நன்றாக இருப்பது போல் இருந்தது.
மதியம் போல் வந்தான் ஜெகன், “நல்லா ஜம்முன்னு இருக்கான்” என்று மகனை தூக்கி கொண்டான்.
மீனா மகளை பார்க்க, குளித்து புது உடை அணிந்து இருந்தாள். தந்தையின் பின்னே தொற்றி கொண்டு இருந்தாள். ஜெகன் தான் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருந்தான். பூண்டு குழம்பு, அவித்த முட்டை இருந்தது. பரமு வைத்து கொடுக்க உண்டாள்.
நாளை மீனா வீட்டிற்கு சென்றுவிடலாம். அன்று இரவு மகளை ஜெகன் தூக்கிக் கொண்டான்.
“நாளைக்கு வரேன் மீனா. பாப்பாவ நான் வச்சிருக்கேன்” மனைவி பதில் சொல்லாவிட்டாலும் மறுப்பு சொல்லவில்லை.
மனைவி மட்டும்தான் கணவனுக்கு வேற்றாள். கண்டுகொள்ள மாட்டான் எளிதாக காயப்படுத்தி விடுவான். மற்றபடி அவள் பெற்ற பிள்ளைகள் எல்லாம் அவன் பிள்ளைகள்..
“மீனா, நாளைக்கு நீ என் கூட நம்ம வீட்டுக்கு தான் வார.. அங்க அண்ணன்கள் இருக்காங்க. உன்னை நல்லா பார்த்துப்பாங்க” என்றார் பரமு.
பொதுவாக இரண்டாவது பிள்ளை எல்லாம் கணவன் வீடு தான் பார்க்க வேண்டும். இங்கு அவளுக்கு கணவன் வீட்டு சொந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. பரமு பார்த்தால் தான் உண்டு.
மீனா முகம் யோசனையை காட்டியது. ஏற்கனவே ஜெகன் குடிகாரன். இதில் மனைவியும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் தாய் வீட்டில் இருந்து கொண்டால் முழு குடிகாரனாக மாறி விடுவான். ரெண்டு பிள்ளைகள் வந்தபின் அவனை அவன் போக்கில் விடுவது சரியல்ல.. எனக்கு நீ காதலனாகவும் இருக்க வேண்டாம், கணவனாகவும் இருக்க வேண்டாம். பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக இருக்க வேண்டும்.
அத்தோடு தமிழ் பிறக்கும் போது அவள் தந்தை இருந்தார். மகளுக்கு குறை இல்லாமல் பார்த்துக் கொண்டார். தற்போது அங்கு அப்பா இல்லையே.. பிறந்த வீட்டில் இளவரசியாக வாழ்வது எல்லாம் தாய் தந்தை இருக்கும் வரை தான். பரமுக்கு மட்டும் என்றால் மகன்களே அவர் தேவையை பார்த்துக் கொள்வார்கள்.
தற்போது அண்ணன்கள் குடும்பமும் பெரியதாக இருக்க முன்பு போல தங்கையை இளவரசையாக தாங்க மாட்டார்கள். ஆனால், தாய் உணர மாட்டார். அவரைப் பொறுத்தவரை மகளைப் பார்க்க வேண்டும். மகளுக்கு செய்ய வேண்டும்.
தாய் வீடு போய் வந்தால் பிறந்த வீட்டு சீர் செய்யணும்.. அப்பா இல்லாமல் அம்மா மட்டுமே எவ்வளவு செய்ய முடியும். அண்ணன்களிடம் செய்ய சொல்லி சண்டை போடுவார். அண்ணிகள் சும்மா இருக்க மாட்டார்கள். தன்னால் தாய்க்கு இருக்கும் சௌகரியம் குறைந்து விடுமோ?…
இவர்கள் அவன் பிள்ளைகள் அவன் தான் பார்க்கணும்.. இனியும் அவனை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது மீனா.
error: Content is protected !!