Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா? அத்தியாயம் 2

உடைந்த மனங்கள் ஒட்டாதோ?…

அத்தியாயம் 2

        ஜெகன் குளித்து உண்ணுவதற்காக கீழே இறங்கி வந்தான். இன்று மீனா சிவப்பில் கருப்பு பூக்கள் போட்ட சேலை அணிந்திருந்தாள். மேலிருந்து கீழ் இறங்கி வரும் வரை ஜெகனின் பார்வை அவள் மேல்தான். தன்னருகே யாரோ வரும் அரவம் கேட்டு மீனா நிமிர்ந்து பார்க்கும் வரை ஜெகனின் பார்வை தொடரும். அதன் பின் அவன் கண்டு கொள்ள மாட்டான். மிக கவனமாக இருந்தான்.

எப்போதும் போல தன் உணவுக்காக ஜெகன் காத்திருக்க.. இன்று கொஞ்சம் தாமதம். இட்லி அடுப்பில் இருந்தது. இன்றைய மெனுவோடு மெதுவடை சேர்ந்திருந்தது. நல்லா பந்து பந்தாக சூடோடு இருக்க, வேகமாக காலியானது. மீனா ஒரு குட்டி ஸ்டவ் வைத்து சுட சுட மெது வடையை போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள். நேரம் வேற போய்க் கொண்டிருக்க கூட்டம் குறைய காணம். அவளின் சின்ன குட்டி எழுந்து விடுவாளோ என்று நினைக்க..



Advertisement

அதற்குத் தகுந்தது போல் மலர், அம்மா என்று சிணுங்கி கொண்டு வந்து விட்டாள். அடுப்பில் ஒரு பார்வை பார்த்து அவசரமாக பாத்ரூம் அழைத்துச் சென்றவள்.. முகம் கழுவி தூக்கி வந்து தன் அருகே அமர்த்தி கொண்டாள். தூக்கம் மீதமிருக்கும் விழிகளோடு கண்ணை உருட்டி பார்த்து கொண்டிருந்தது சின்ன குட்டி.

அந்த மார்கழி மாத குளிருக்கு எல்லோரும் ரெண்டு வடையை சூடாக உள்ளே தள்ள.. பார்த்திருந்த மலர் கனிக்கு கை நிற்க வில்லை. அம்மா சூடாக எடுத்து போடும் வடையை எடுக்க செல்ல, தட்டி விட்டாள் மீனா.

“நல்ல சூடு மலர். உன் கை தாங்காது வடை சுடும்.. உட்கார், அம்மா ஆற வைத்து ஊட்டி விடுறேன்” என்றதும் சமத்தாக அமர்ந்தது குழந்தை.

Advertisement

அடுத்து எங்கே குழந்தையை கவனிக்க, நேரமில்லை மீனாவுக்கு.. குழந்தை தானே, மற்றவர்கள் உண்ணுவதை பார்த்து அசை வந்தது. ஜெகனின் பார்வை பிள்ளை மேல் படிய, மெல்ல எழுந்த குட்டி வாண்டு, தாய் கண்டு கொள்ளவில்லை என்றதும் அவள் செய்வது போலவே, மீனா வெட்டி வைத்து இருந்த பேப்பரை மெல்ல எடுத்து பூனை நடை போட்டது. மீனா கவனிக்கவில்லை. ஜெகனின் பார்வை முழுவதும் பிள்ளை மீதுதான்…

Advertisement

 தன் அம்மா எடுப்பது போலவே தன் கையில் இருக்கும் பேப்பரில் இரண்டு வடையை தூக்க, அப்போதுதான் மீனா எடுத்துப் போட்டு இருப்பாள் போல.. கையை சுட்டு கொண்டது.

“அம்மா…” அழுகை சத்தத்தில் பதறிப் போய் மீனா திரும்பி பார்த்தாள்.

“என்னடி.. நான்தான் சொன்னேன்ல.. என்ன அவசரம் உனக்கு..” கடிந்து கொண்டே பிள்ளையை தூக்கினாள்.

Advertisement

 அங்கு சற்று தள்ளி இருக்கும் வாலியில் கையை விட்டு சூட்டை தணித்து, அழும் பிள்ளையின் கண்ணை துடைத்துவிட்டு அங்கு இருக்கும் சேரில் அமர்த்தினாள். மீனாவுக்கும் வேலை நெருக்கியது. எட்டரை மணி வரை தான் வியாபாரம் நடக்கும்.. திரும்பவும் வேலையில் மூழ்கிப் போனாள் மீனா.

ஜெகனின் கைக்கு ஐந்து இட்லிகளும், இரண்டு வடையும் வந்து சேர்ந்தது. அவன் திரும்பி பிள்ளையை பார்க்க, தன் பெரிய கண்கள் கலங்கி, உதடு தொங்கி போய் அமர்ந்து இருந்தது குட்டி வாண்டு.

பிள்ளைக்கு என்னவோ ஒரு கோபம். தாய் தன்னை சமாதானம் செய்து கொஞ்சுவாள் என்று நினைத்திருக்கும் போல.. ஜெகனின் பார்வை மீனாவை தொட, அவள் வேலையில் கவனமாக இருந்தாள்.

வடையை பிய்த்து, லேசாக சட்னியில் தொட்டு குழந்தையின் வாய் அருகே வைத்தான். தன் பெரிய கண்களை இன்னும் பெரிதாக்கிப் பார்த்த குழந்தை, திரும்பி தன் தாயையும் பார்த்துக் கொண்டது. ஜெகனின் முகம் புன்னகையில் மலர, மேலும் உணவை வாய் அருகே கொண்டு சென்றான்.

பிடிக்காத தோரணையில் தன் அம்மாவை பார்த்துக் கொண்டே லேசாக வாய்ப்பிளந்து வாங்கிக் கொண்டாள் மலர் கனி. ஜெகனின் பார்வையும் மீனாவை பார்த்துக் கொண்டே கவனமாக பிள்ளைக்கு ஊட்டி விட்டான். மீனாவுக்கு அதெல்லாம் பிடிக்காது என்று தெரியும்.

ஆனால், பசியோடு இருக்கும் பிள்ளையை எவ்வாறு கவனிக்காமல் இருப்பது.. எத்தனை வேலை இருந்தாலும் முதலில் பிள்ளையை தானே கவனிக்க வேண்டும். அப்படி என்ன வியாபாரம் முக்கியம், நினைத்தான் ஜெகன். அவளின் குடும்பத் தேவையை அவன் அறிய முடியுமா?…

மீனா அவ்வப்போது மலர் என்ன செய்கிறாள் என்று பார்க்க, அப்போது ஜெகன் கண்டுகொள்ளாதது போல வேறு பக்கம் திரும்பிக் கொள்வான். மலரும் அமைதியாக அமர்ந்து கொள்வாள். மீனா திரும்ப வேலையில் கவனமானதும், ஜெகன் திரும்ப ஊட்டி விடும் வேலையை தொடங்குவான்.

அதை கவனித்த விமலாவின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.

“அப்படி என்ன இந்த அக்காவுக்கு இவரோட பேசுறது, பழகுறது பிடிக்க வில்லை. ஒரே வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார்கள். நட்பாக, சகஜமாக பழகிக் கொள்ளலாமே, அதைக் கூடவா தப்பாக எடுத்துக் கொள்வார்கள் மக்கள்.. அப்படி என்ன பயம் இந்த அக்காவுக்கு?” என்று நினைத்தவள், அவர்களை மறைத்து நின்று கொள்ள,

ஜெகன் நிமிர்ந்து விமலாவை பார்த்து லேசாக புன்னகைத்தான். உண்டு முடித்து கை கழுவும் போது, தன் ஈர கை கொண்டு யாரும் அறியாமல் பிள்ளை வாயை துடைத்து விட்டான். இன்று, ஜெகனுக்கு மனம் அவ்வளவு திருப்தி…

 பயங்கர விவரம் இந்த சின்ன வாண்டு மலர் கனி. ஜெகனைப் பார்த்து சிரிக்கவில்லை, ஒட்டியும் நிற்கவில்லை, பேசவுமில்லை. ஆனால், அவன் ஊட்டி விட்ட உணவை வேகமாக வாங்கி கொண்டது. அப்புறம் கண்டு கொள்ளாமல் அமர்ந்து கொண்டது…

ஜெகனுக்கு தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தம் வைக்க ஆசை. தன்னை கட்டு படுத்தி நின்றான். இன்று கொஞ்சம் தாமதம் வேலையெல்லாம் முடிந்து நிமிரும் பொழுது மணி பத்தை தொட்டது.

அதற்குப்பின் பிள்ளையை தயார் செய்து பால்வாடியில் விட்டு வந்தாள். மதியம் ஒரு மணி வரை அவளுக்கு ஓய்வு. அதற்குப் பின் மலர்கனி வீட்டுக்கு வந்து விடுவாள்.

மிச்சம் மீதி என்ன இருந்ததோ அதை உண்டு விட்டு, டீவி ஓடிக்கொண்டிருக்க ஒரு பக்கம் சாய்ந்து விட்டாள் மீனா. ஒரு சீரியல் கூட ஒழுங்காக முடிந்து இருக்காது மீனா நல்ல உறக்கத்தில் இருந்தாள். அந்த ஓய்வு அவளுக்கு நிச்சயம் தேவை. அதை மீனாவும் அறிவாள். தன் உடல் நிலையை கவனிக்காமல் ஏதேனும் இழுத்துக் கொண்டால் ஒன்றுக்கு மூன்று பிள்ளைகளை யார் கவனிப்பது? அதனால் தன் உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் மீனா கவனத்துடன் இருப்பாள்.

 மதியத்திற்கு மேல் பிள்ளையை அழைத்து வந்தால், மலர்கனி ஒரு குட்டி தூக்கம் போடுவாள். அதற்குப் பின் மீனா துணி தைக்க அமர்ந்து விடுவாள். தனக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் தொழிலாக்கிக் கொண்டாள் மீனா. பெரிய படிப்பாளி எல்லாம் கிடையாது தையல் குரூப் எடுத்து படித்தது உபயோகமாக இருந்தது. அதனால் தானோ என்னவோ மீனாவுக்கு படிப்பில் பெரிய மரியாதை.

எத்தனை கஷ்டப்பட்டாவது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கி விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறாள். மூன்று மணி நேரம் தையல் மிஷினோடு போராடிய பின் உடல் எல்லாம் அப்படி வலிக்கும். இடுப்பில் தான் பயங்கர வலி. முதல் ரெண்டு பிள்ளையும் நார்மல் டெலிவரி தான். இந்த கடைசியாக பிறந்தது தான் ஆபரேஷன். இந்தப் பிள்ளையை பெற்றெடுக்க தான் மீனா மிகுந்த சிரமப்பட்டு போனாள்.

அடுத்து மறுநாள் தேவைக்கு மாவை ஆட்டி வைத்து துணியை துவைக்க இருக்க, மற்ற பிள்ளைகள் பள்ளி விட்டு வந்தாச்சு. அடுத்த அவர்களை கவனிப்பதில் நேரம் ஓடிவிடும். காலையில் பெரிதாக பிள்ளைகள் விருப்பத்திற்கு சமைக்க மீனாவுக்கு தோது வராததால், இரவில் அவர்கள் கேட்கும் உணவை செய்து கொடுத்து விடுவாள்.

கடைக்குட்டிக்கு உறக்கமெல்லாம் தொட்டியில் தான். ரொம்பவும் படுத்தாது, உறக்கம் வந்தால் தொட்டியில் போட்டு லேசாக ஆட்டும் போதே உறங்கி விடுவாள். மற்ற பிள்ளைகளோடு மீனாவுக்கு மல்லுக்கட்டு இருக்கும். இடது பக்கம் ஒன்று, வலது பக்கம் ஒன்றை போட்டுத்தான் படுத்து இருப்பாள். ஆனால், யார் பக்கம் திரும்பி உறங்குவது என்று அக்கா தம்பி இருவருக்கும் சின்ன சண்டை வரும்.

“அம்மா என் பக்கம் திரும்பி தூங்குங்க?” என்பான் புகழ்.

“போடா.. அம்மா என் பக்கம் படுத்து தூங்குங்க?” என்பாள் தமிழ்.

புகழ் முகம் தொங்கி போக, “தமிழ், தம்பி சின்னப் பையன் தானே. நீ அம்மா மேல கால் போட்டு தூங்கு” என்றதும்,

“போம்மா உனக்கு என் மேல பாசமே இல்லை. தம்பியைத்தான் பார்க்கிறீங்க” என்று மகள் சிணுங்க, தாங்காது தாய்க்கு…

மீனா வயிற்றில் வந்த முதல் முத்து. அத்தோடு அவள் மிக சந்தோசமாக, ஆசையோடு பெற்ற பிள்ளை இவள் தான். அதற்குப் பின் நடந்ததெல்லாம் அவள் கற்பனை செய்யாத குடும்ப வாழ்க்கை.

பெருமூச்சு விட்டுக் கொண்டு பெரிய மகளைத் தட்டிக் கொடுக்க, “அக்காவ தான் நீங்க பாக்குறீங்க. என்னை கண்டுக்கவே இல்லை” என்று இந்த பக்கம் ஒரு சத்தம் கேட்கும்..

“இருடா வாரேன்” என்றவள் தட்டி கொடுத்து தமிழை உறங்க வைத்த பின், மகன் பக்கம் திரும்பி அவனை அணைத்துக்கொள்ள, தாய் மீது கால் போட்டு உறங்க தொடங்கினான் புகழ். மனதில் பாரம் ஏறிக் கொண்டது. எவ்வளவு அருமையான பிள்ளைகள். நன்றாக போயிருந்திருக்கும் வாழ்க்கை. எவ்வளவு உழைக்கவும் அவள் தயாராக நிற்கிறாள், உடன் நின்றால் போதும் என்று தானே கணவனை நினைத்தாள்.

அப்படி அல்லாமல் நான் என் விருப்பத்திற்கு தான் இருப்பேன். குடி, அடிதடி, போலீஸ் கேஸ் என்று மல்லுக்கட்டி வாழ்பவனோடு தன்னால் வாழ முடியாமல் தான் வந்து விட்டாள். முடிந்த அளவு இந்த வாழ்க்கையை சரி பண்ண போராடிப் பார்த்தாள் முடியவில்லை.

பிள்ளைகள் மூவரும் நன்றாக உறங்கிய பின் மெதுவாக எழுந்தாள் மீனா. இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தாலும் அவர்களோடு ஒருவராக உறங்கி இருப்பாள். ஆனால், மறுநாள் காலை வேலை சுளுவாக இருக்காதே…

பிள்ளைகள் கலைத்துப் போட்ட வீட்டை ஒதுங்க வைத்து, அடுத்த நாளுக்கு தேவையானவற்றை பிரித்து அடுக்கினாள். முன்பே பிள்ளைகள் சீருடையை தேய்த்து வைத்து விடுவாள். காலையில அவளுக்கு நிதானமாக பிள்ளையை கவனிக்க நேரம் இருக்காது அல்லவா!…

எல்லாவற்றையும் முடித்து திரும்ப ஒரு குட்டி குளியல் போட்டு பிள்ளைகள் அருகில் படுத்துக்கொள்வாள். திரும்பவும் அதிகாலை அவளின் வேலை நாள் துவங்கிவிடும்.

“அண்ணே!” என்று வந்து நின்றான் ஜெகனோடு இருக்கும் குமரன்.

“என்னடா?”

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!” அதற்குப் பின் தான் ஜெகன் தேதியை பார்த்தான்.

இருவத்தி எட்டாவது பிறந்தநாள். ஆசிர்வதிக்க பெரியவர்களும் வாழ்த்து சொல்ல குடும்பமும் அவனுக்கு ஏது? பிறந்தநாள் எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குமரன் மட்டுமே ஞாபகம் வைத்து வாழ்த்து சொல்வான்.

“நம்ம கடையில வேலை பாக்குற எல்லாருக்கும் பிரியாணி சொல்லிடு” என்று ஜெகன் சொன்னதும், வாயெல்லாம் பல்லாக யாருக்கு என்ன தேவை என்று கேட்க ஓடினான் குமரன்.

“அண்ணே.. நாலு மட்டன் பிரியாணி, ஆறு சிக்கன் பிரியாணி. அப்புறம் உங்களுக்கு என்ன பிரியாணி அண்ணே?” என்று கேட்க.

“எனக்கு எதுவும் வேணாம். உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கி சாப்பிடுங்க..” என்றவன்,

“குமரா, எனக்கு சீக்கிரம் வெளியே போற வேலை இருக்கு.. கீழ் வீட்டுல சாம்பார் சாதம் மட்டும் வாங்கி வச்சுட்டு. நான் போகும்போது காலை சாப்பாடு அங்கேயே சாப்பிட்டு போயிருவேன்” என்று நிற்காமல் நகர்ந்து விட்டான் ஜெகன்.

ஜெகனை அதிசயமாக பார்த்தான் குமரன். இங்கு வந்ததிலிருந்தே மீனா வீட்டு சாப்பாடு தான். அவள் கடை திறக்காத போது தவிர மற்ற எல்லா நேரமும் அவள் வீட்டு உணவுதான். ஒரு நல்ல நாள் விசேஷம் என்றபோது கூட வேற கடையில் உணவை வாங்க மாட்டான். தன்னோடு இருப்பவர்களுக்கு கூட வாங்கி கொடுப்பான் தனக்கான உணவு என்பது மீனா வீட்டு உணவு தான்.

ஜெகன் அவசரமாக வண்டியை எடுக்க,

“அண்ணே” என்று ஓடி வந்தவன் கொஞ்சம் தயங்கினான்.

“என்னடா?” என்று அதட்டல் போட,

தலையை சொரிந்து கொண்டு, “நம்ம பசங்க பார்ட்டி கேப்பாங்கண்ணே”

“இங்க பாரு குமரா.. என்ன வேணுமோ வாங்கி சாப்பிடுங்க. சினிமா போங்க, ஊர் சுத்துங்க, நான் காசு தாரேன். ஆனா, இந்த குடும்பத்தை கெடுக்கிற வேலைக்கு மட்டும் என்னை ஜோடி சேர்க்காதே.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் என் வாழ்க்கையில செய்யாத விஷயம் இந்த குடி தான்” அழுத்தமாக சொன்னவன், கிளம்பி விட்டான்.

ஜெகன் எப்போதும் அப்படித்தான். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு தேவை அறிந்து நிறைவேற்றுவான். ஆனால், குடி மட்டும் கிடையாது. அதற்காக பைசா செலவழிக்க மாட்டான். அதனால என்னவோ அந்த ஏரியாவில் ஜெகனுக்கு நல்ல பெயர்..

மீனா கடைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு விட்டுவிடுவாள். அந்த நாள் அவளுக்கு வியாபாரமும் ஆகாது. அதனால் அவர்களுக்கு பிடித்ததை சமைத்து, பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பாள். மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மீனாவின் தாயார் பரமேஸ்வரி வந்து போவார்.

“வாம்மா..” அந்த மாதம் வந்த தாயை மீனா வரவேற்க,

அவர் கண்டு கொள்ளவே இல்லை. தன் பேரன் பேத்திகளை மட்டும் பார்த்துக் கொண்டார். மீனாவும் அதற்குப்பின் அமைதியாகிப் போனாள். மகள் ஏதாவது பேசுவாள் என்று பார்க்க, அவளும் அடமாக நின்றாள்.

“ வெட்டி கவுரவம் பார்த்து உன் வாழ்க்கையை வீணாக்காத மீனா” என்று தாய் சொல்ல,

பிள்ளைகள் எங்கே என்று பார்க்க, அவர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் தாயை பார்த்தவள்,

“நான் தெளிவா முடிவெடுத்துதாம்மா ஒதுங்கி வந்தேன். வேற யோசிக்க அதுல எதுவும் கிடையாது”

“உன் மனசு எனக்கு புரியுது மீனா. ஆனா, நீயும் மூணு பிள்ளையை பெத்து வச்சிருக்க. எம்புட்டு காலத்துக்கு ஒத்தையில கிடந்த அல்லாட முடியும். ரெண்டு பொட்ட பிள்ளையை கரை சேர்க்கணும். பொம்பள பிள்ளைகளை படிக்க வச்ச மட்டும் போதும் நினைக்கிறாயா?” என்றார் தாய்.

 “அவங்களுக்கு வழிகாட்டுனா போதும் நினைக்கிறேன். இன்னைக்கு என் பிள்ளைக மூன்றையும் உட்கார வைத்து என் வாழ்க்கையில் நடந்ததை சொல்ல முடியாது. ஆனா அவங்களும் வளர்ந்த பெருசாகும்போது அவங்க அம்மா எப்படின்னு புரிஞ்சுப்பாங்க” என்றாள்

“முட்டாளா இருக்காதடி மீனா. ஏதோ உங்க போதாத நேரம் சண்டையும் சத்தமமா கிடந்தீங்க. இப்பதான் அந்த மனுசன் திருந்தி வந்து இருக்காரு.. புத்திசாலித்தனமா கைல புடிச்சு உன் பொழப்ப பாரு” என்று அதட்டலாக சொல்ல,

 விரக்தி புன்னகை தான் மீனா இதழ்களில்..

“அம்மா போதும் இனியும் அந்த மனுசன நம்பி நான் என் வீட்டில் இருந்து ஒரு படி எடுத்து வைக்க மாட்டேன். ஏதோ எங்க அளவுக்கு என் பிள்ளைகளோட நிம்மதியா வாழ்கிறேன். தயவு செஞ்சு கெடுத்துடாத”

“எது.. இது நிம்மதியான வாழ்க்கையா? பைத்தியக்காரி.. கட்டின புருஷன் கிட்ட அப்படி என்னடி வீம்பு? மாடு மாதிரி உழைச்சு கஷ்டப்பட உனக்கு என்ன தலையெழுத்து? நான் செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்டு உன் கூட குடும்பம் நடத்த அந்த பையன் தயாரா இருக்காப்ள..” என்றவர்

“ஒரு ஆம்பளை பொறுமைக்கும் அளவு இருக்கு மீனா. என்னதான் நீ பொண்டாட்டியா இருந்து பிள்ளைகளை பெத்தாலும், எம்புட்டு நாளைக்கு அந்த பையன் உன் பின்னாடி சுத்த முடியும். காசு இல்லாதபோது எட்டி கூட பார்க்காத சொந்தம்.. இன்னைக்கு ஈ மாதிரி ஓட்டிட்டு திரியுதுக.. அந்த வீடு வசதி எல்லாம் உனக்கானது மீனா. நீ ஏன் தள்ளி நிக்கனும். யார் யாரோ வந்து போறாங்க. நீ பிள்ளைகளை வளர்த்துக்கிட்டு ஜம்முனு இருக்காம இப்படி அடுப்படியில் கிடந்து கஷ்டப்படுறியே? பெத்தவ நானு என் மனசு என்ன பாடுபடும். புருஷன் இறங்கி வரும்போது கைல புடிடீ மீனா. உன்னோட ஒன்னுவிட்ட நாத்தனார் இருக்கா பாரு அந்த வெண்பா.. உன் புருசனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரெடியா இருக்கா? ரோஷம், கோபம், வைராக்கியம் எல்லாம் அப்புறம்.. மொத உன் இடத்தை தக்க வை” என்று அழுத்தி சொல்ல,

“அப்ப நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே கிடையாதாம்மா? ஆம்பளைங்க பொறுமைக்கு மட்டும் அளவு இருக்கு. அதை பொம்பளைங்க மீறக் கூடாது. ஆனா, நாங்க மட்டும் வாழ்நாள் முழுக்க பொறுமையா இருந்து புருசனை அனுசரிக்கணும். அந்தப் பரதேசி நம்பித்தானாம்மா எல்லாரையும் விட்டுட்டு நான் அவன் பின்னாடி போனேன். என்னை நடு ரோட்ல விட்டுட்டு போயிட்டான். என் வாழ்க்கையில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் தெரியுமா? என்னோட நியாயமான கோபத்தை கூட நான் காட்டக்கூடாது. அப்படி காட்டுனா அவன் ஆம்பளை ஆயிரம் பொண்ணுங்க ரெடியா நிப்பாங்க. அவன் கூட வாழ்ந்து மூன்று பிள்ளைகளை பெத்த பாவத்துக்கு, அவன் என்ன பண்ணாலும் மறந்துட்டு திருந்தி பொண்டாட்டி பிள்ளைகள்ன்னு வந்ததே போதும் ராசா என்று சேர்ந்து வாழ நான் போயிடணும்” என்றவள்,

“கூடவே இருந்து பார்த்தியே, நீ கூட என்ன புரிஞ்சுக்கல இல்லமா?” என்று கண் கலங்க கேட்டதும், பெற்றவளுக்கு பொறுக்க வில்லை.

 “அடியே ராசாத்தி அழாத கண்ணு” மகள் அழுவது தாங்கவில்லை. மூன்று ஆண் பிள்ளைக்கு பின் தவமிருந்து பெற்ற ஒற்றைப் பெண் பிள்ளை மீனாட்சி. அவள் அழுவது நெஞ்சே எரிந்தது.

ஆனாலும் என்ன செய்ய? மகள் வாழ்க்கை தானே முக்கியம். இவள் இவ்வளவு வீம்போடு இருந்தால், ஒரு ஆண் மகன், எவ்வளவு காலம் பொறுப்பான். அவன் பாட்டுக்கு அவன் வீட்டார் பேச்சைக் கேட்டு வேற பெண்ணை திருமணம் செய்ய கிளம்பி விட்டால்.. தன் மகள் பேரன், பேத்தி வாழ்க்கை அல்லவா வீணாக போகும். மகளின் மனநிலை புரிந்தாலும், அவளின் நியாயம் கண்கூடாக தெரிந்தாலும் அவளுக்கு துணை நிற்க ஒரு தாயாக பரமேஸ்வரி தயாராக இல்லை.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!