Skip to content
Post Views: 4,362

உனதன்பில் சரணாகிறேன்
YOU ARE MY 7 MINUTES…
Advertisement
# After death, the human brain lives for 7 minutes to replay the best memories of your life…
– சிவ ம்ருதவ்
_____________________________
Advertisement
இவ்வுலகில்…
எனக்கென ஓர் அன்பு,
இறுதிவரை, இருக்கிறதென்றால்?
அவன் மட்டுமே!
Advertisement
– மித்யுகா
அத்தியாயம் 1
மாலை நேரம்.
Advertisement
ஜன்னல் வழியாக நுழையும் சூரியனின் மங்கிய வெளிச்சம் வீடு முழுவதும் பொன்னிறமாகப் பரவியிருந்தது.
அந்த வெளிச்சத்தினை சிதறடித்து சிரிக்கும் சத்தம் வீடெங்கும் எதிரொலிக்க மலர்ந்து சிரித்திருந்தாள் ஐந்து வயது சிவன்யா.
அக்கணம் அவளின் உலகம் தொலைக்காட்சி திரையில் சுருங்கி இருந்தது.
அவள் கண்கள் பெரியதாகத் திறந்து, நிகழ் மறந்து பார்த்துக்கொண்டிருந்தது ‘டோராவின் புது பயணங்கள்’ எனும் கார்ட்டூன்.
பார்த்துக் கொண்டிருந்ததை விட, தானே அந்த டோரா எனும் எண்ணம் அவளுள். தன்னையே டோராவாக உருவகப்படுத்திக் கொண்டவள், அந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தாள்.
“வாங்க நண்பர்களே… எல்லாரும் ஒண்ணா போவோம். முயற்சி திருவினையாக்கும்… முயன்றால் சாதிக்க முடியும்!”
எங்க நாம போறோம்? சொல்லுங்க… சொல்லுங்க…
இப்போ, எங்க நாம போறோம்?
காடு, மலை, பெரிய சிவப்பு ஏரி…”
சிவன்யா துள்ளலோடு உற்சாகமாய் இரு கைகளையும் தட்டிக்கொண்டு, திரையில் ஒலிக்கும் பாடலையும் பாடிக்கொண்டிருக்க,
வீட்டு வெளி வாயிலின் சிறிய இரும்பு கேட் திறக்கும் சத்தம்.
வேகமாக தொலைக்காட்சியை அணைத்த சிவன்யா,
“அய்யோ பாட்டி அம்மா வந்தாச்சு” என்று, அங்கிருந்த நீண்ட நீள்விருக்கையில் படுத்திருந்த செண்பகத்தை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிட்டு, ஒற்றை இருக்கையில் புத்தகத்தை திறந்து வைத்து உட்கார்ந்து கொண்டாள்.
இருப்பினும் சிறுமியின் செவி அன்னையின் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாக உள்வாங்கியது.
“கேட் மூடியாச்சு!”
“செப்பல் ரிமூவ் பண்றாங்க.”
“டோர் ஓபன்” என்ற சிவன்யாவின் உதடுகள் இறுக மூடிக்கொண்டன.
“ஸ்நாக்ஸ் சாப்டியா சிவா?” என்ற மித்யுகாவின் கேள்வியில்.
“இல்லைம்மா” என்ற குழந்தையின் தோற்றத்தை கவனித்தாள் மித்யுகா.
இரு பக்க குதிரைவாலில் ஒன்று கீழே சரிந்து, மற்றொரு பக்கம் முடி கலைந்து, டக் இன் செய்திருக்க வேண்டிய மேல்சட்டை, பின் பக்கம் முழுவதும் வெளிவந்து, காலில் ஒற்றை சாக்ஸ் அணிந்திருக்க, கையில் வைத்திருந்த புத்தகம் தலைகீழாக இருந்தது.
“ஏன் சாப்பிடல” என்ற மித்யுகா வெறுமென கண்களை மட்டும் மூடி படுத்திருக்கும் தன்னுடைய அன்னையின் மீது பார்வையை பதித்தாள்.
“பாட்டி எதுவும் கொடுக்கலம்மா! நான் ஸ்நாக்ஸ் எடுக்க ட்ரை பண்ணேன். டப்பா எட்டல” என்ற சிவன்யா, “பாட்டி என்கிட்ட பேசவே இல்லம்மா” என்றாள். உதட்டினை வளைத்து.
“சிவேஷ் எங்க?” என்று தோளில் மாட்டியிருந்த ஸ்லிங் பேக்கினை கழட்டி வைத்த மித்யுகா தனதறை நோக்கிச் சென்றாள்.
“அவன் வந்ததும் தூங்கிட்டாம்மா. பாட்டி ரூம்ல” என்ற சிவன்யா அம்மாவின் பின்னே செல்ல,
“முகம் கழுவிட்டு வந்து டிரஸ் மாத்து சிவா” என்றாள் மித்யுகா.
“சரிம்மா” என்ற சிறுமி, குளியலறைக்குள் நுழைய, ஆடை மாற்றிக்கொண்டு, மகளுக்கான உடையையும் எடுத்து வைத்து வெளியில் வந்த மித்யுகா, இன்னமும் அசையாது படுத்திருந்த செண்பகத்தினை கண்டுகொள்ளாது மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எட்டிப்பார்த்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.
காலை அவள் வேலைக்கு செல்லும் முன்பாக இரு வேளைக்கும் செய்து வைத்துவிட்டுச் சென்ற உணவு பாத்திரங்கள் திறந்துகூட பார்க்காது, அவள் வைத்துச்சென்ற அதே இடத்தில் இருந்தன.
செண்பகம் இன்று முழுக்க சாப்பிடவில்லையென தெரிந்தது.
வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்களை கழுவ நேரமின்றி, சிங்கில் போட்டுவிட்டு சென்றிருக்க, அவை காய்ந்திருந்தன.
பள்ளி சென்று வந்த பிள்ளைகளின் மதிய உணவு பை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தது.
எப்போதும் இந்நேரம் அவள் வேலை முடித்து வந்தால், வீடு அத்தனை நேர்த்தியாக இருக்கும். பிள்ளைகளுடன் மாலை நேர இறை வழிபாட்டில் பூஜையறையில் அமர்ந்திருப்பார் செண்பகம்.
ஆனால் இன்று…
பள்ளி விட்டு வந்த பிள்ளைகளுக்கு பால் கூட காய்ச்சிக் கொடுக்காது, அடமாகப் படுத்திருக்கும் செண்பகத்தின் வீம்பு எதற்காக என்று அறிந்தவள், அவரிடம் வாயினை திறக்காது, முதலில் பாத்திரத்தில் பாலினை ஊற்றி அடுப்பில் ஏற்றியவள், பாத்திரங்களை கழுவி முடித்து, வீட்டினை ஒதுங்க வைத்து சுத்தம் செய்து முடித்தாள்.
இடையில் ஆடைமாற்றி வந்த மகளுக்கு பாலாற்றி கொடுத்தவள்,
“ஹோம் வொர்க் பண்ணு சிவா” என குறிப்பேட்டினைப் பார்த்து, இவ்வாறு செய்ய வேண்டுமென வழிநடத்தியிருந்தாள்.
வேலைகள் முடித்து தனக்கான தேநீருடன் மகளின் அருகில் வந்து தரையில் சம்மணமிட்டு அமர்ந்த மித்யுகா, சூடான பானத்தை மிடறு மிடறாக தொண்டைக்குள் விழுங்கி வைத்தாள்.
இனி இரவு உணவு சமைக்க வேண்டும். அதற்கான யோசனையில் கண்களை மூடிக்கொண்டு பின்னிருந்த நீள்விருக்கையில் சாய்ந்தாள்.
அதுவரை மூடியிருந்த கண்களால் மகளின் அரவத்தை அவதானித்தபடி இருந்த செண்பகம் மெல்ல கண்களைத் திறந்தார்.
மித்யுகாவை சில நொடிகள் எவ்வித உணர்வற்றுப் பார்த்தவர்,
“நான் சொன்னதுக்கு என்ன முடிவு பண்ணியிருக்க மித்யு?” எனக் கேட்டார்.
மித்யுகா கண்கள் திறக்காது, அவரின் கேள்வி காதுகளில் விழவே இல்லை எனும் நிலையில் அப்படியே இருக்க…
“இப்படியே இருந்திட முடியும் நினைக்காத மித்யு. அது ரொம்ப கஷ்டம். தனிமை இப்போ நல்லாயிருக்கும். பிள்ளைங்க மட்டும் போதும்னு இப்போ தோணலாம். ஆனா உன் மனசு ஒருநாள் நீ வேண்டாம்னு ஒதுக்கி வச்சதையெல்லாம் வேணும்னு கேட்கும். அப்போ வலியும், தனிமையும் உனக்கு மட்டும் தான்” என்றார் செண்பகம்.
“ஏன் சாப்பிடல.”
அவர் சொல்லியதை கருத்திலே வாங்காதவளாக இமைகள் திறந்து கேட்டிருந்தாள்.
“பசியில்லை.” செண்பகம் பட்டென்று சொல்லிட,
“உண்ணாவிரதமா?” என்ற மித்யுகா, “நீங்க என்ன பண்ணாலும் என் பதில் நோ தான்ம்மா” என்றாள். அத்தனை அழுத்தம் அவளின் பாவனையிலும், சொல்லிலும்.
“இதெல்லாம் நல்லாவே இல்லை மித்யு” என்ற செண்பகம், “நீ சந்தோஷமா வாழுறதை பாக்கிற கொடுப்பினையை கொடுடி” என்றார்.
“இப்போ என் சந்தோஷத்துக்கு என்னம்மா குறைச்சல்” என்ற மித்யுகா, “சிவா, சிவேஷ் இவங்க போதும். காலத்துக்கும் நான் நிம்மதியா சிரிக்க” என்றாள். இதழ் காட்டிய புன்னகையின் உயிர்ப்பு அவளின் கண்களில் இல்லை.
“நிஜமாவே நீ உன் மனசிலிருந்து தான் சிரிக்கிரியா மித்யு? என்னை ஏமாத்துறன்னு உன்னை நீயே ஏமாத்திக்காத” என்றவர், “நீ யாரையோ விரும்பினியே! அந்தப்பையன் கிட்ட பேசி பார்ப்போமா?” என்றார்.
“ம்மா…” என்று கத்தியவளின் ஒற்றை கண்ணிலிருந்து அத்தனை வேகமாக நீர் இறங்கியிருந்தது. சடுதியில் துடைத்தும் கொண்டாள்.
கீழ் இமையில் ஒட்டி நின்ற கண்ணீரின் மிட்சமாய், கடந்துபோன அவளது வாழ்வின் சந்தோஷங்கள் யாவும் தோன்றிய நொடி மறைந்துப்போகும் வானவில்லாய் மறைந்தும் போனது.
“அந்தப்பையன் நெனப்பு கொஞ்சமும் உன் மனசுல இல்லைன்னு சொல்லு பார்ப்போம்” என்ற செண்பகம், “அன்னைக்கு உன் அப்பாவும், நானும் சொன்னதை நீ கேட்காம உன் காதல் தான் முக்கியம்னு முடிவெடுத்திருந்தா இந்நேரம் இந்த துன்பமெல்லாம் இல்லாம சந்தோஷமா இருந்திருப்பியோன்னு நான் நினைக்காத நாளில்லை. என்னோட கடைசி காலத்தை குற்றவுணர்வோட கடக்க விட்டுடாத மித்யு” என்றவர் இரு கரம் குவித்து, அவளைப் பார்த்து கும்பிட… அவரின் கையை இறக்கிவிட மித்யுகா அவரை நெருங்கும் முன்பு மயங்கி சரிந்திருந்தார்.
“அம்மா” என்று மித்யுகா பதறியது ஒரு நொடி தான்.
அடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தவள், அவரிடம் அசைவில்லை என்றதும், தெரிந்த ஆட்டோவிற்கு அழைத்து வரவழைத்து, உறங்கிக்கொண்டிருந்த மகனையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றுவிட்டாள்.
பிள்ளைகளுக்காக நெஞ்சின் படபடப்பை முகத்தில் காட்டாது, செண்பகத்திற்கு சிகிச்சையளிக்கும் அறையின் கதவினையே பார்த்திருந்தாள்.
“பாட்டிக்கு என்னாச்சும்மா?” உறக்க கலக்கத்தில் சிவேஷ் கேட்டிட…
“காய்ச்சல். ஊசி போட வந்திருக்கோம்” என்று மகனை தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.
அனைத்து சூழலிலும் அவளுக்கென மடித்தாங்கி துணை நின்றவர் செண்பகம் மட்டுமே! இதுநாள் வரை அவரின் நிழலில் தைரியமாக இருந்தவளுக்கு, வீட்டில் அவர் அறிவுரையாக சொன்னபொழுது கூட, ‘அப்படியென்ன தனிமை, தான் பார்த்து வருந்தாததா?’ என அலட்சியமாக நினைத்தவளுக்கு இக்கணம், ஏதோ நழுவும் உணர்வு. மனதில் தானாக பாரத்தின் கனம் கூடுவதைப்போல் இருக்க நெஞ்சத்தை நீவி விட்டுக்கொண்டாள்.
கரித்துக் கொண்டு வரும் கண்களை பிள்ளைகளுக்காக அடக்கி வைத்தவள் இதற்குமேல் முடியாதென கண்களை மூடிட,
“இந்த தனிமை ரொம்ப கொடுமை யுகா. நீ வந்த அப்புறம் தான் எனக்குன்னு ஒரு உறவுன்னு ரொம்ப நிம்மதியா இருக்கு. இது சந்தோஷமில்லை… அதுக்கும் மேல ஒரு நிறைவு” என கருவிழிக்குள் நின்று ஒலித்த குரலில் பட்டென்று இமைகளை திறந்திருந்தாள்.
நொடியில் விழிகள் இரண்டும் செவ்வரி ஓடியிருந்தது. வலியின் மிச்சத்தின் பிரதிபலிப்பு அது.
மூச்சுக்குத் தவித்தவளின் மனம் சத்தமின்றி அவனின் பெயரை உச்சரித்தது.
மனதின் பெரும் ஓலத்திற்கு நடுவில் அவனின் நினைவு, அவன் தந்த காதல் அதீத அரவணைப்பாய்.
“நீ ரொம்ப நல்லாயிருக்கணும்” என வாய் விட்டே மெல்லிய ஓசையில் சொல்லிக்கொண்டவள்,
“உன் நினைவில் நான் இருப்பேனா?” எனக் கேட்டுக்கொண்டாள்.
அடுத்த நொடி, ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என அவளின் மனம் பதில் வழங்கியிருந்தது.
“என்னை மறந்து உனக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்கியிருப்பல?” நெஞ்சம் கசந்தது அவளுக்கு. அவளின் காதலோடு, அவனின் காதலும் கைக்கூடாமல் போனதற்கு முழுமுதற் காரணம் அவள் மட்டுமே!
அவனின் உலகமாக தானிருக்க, நொடியில் அவனது உலகத்தை அழித்து வெளிவந்திருந்தாள்.
“வேணாம் இப்போ அவங்களை நினைக்கிறதே தப்பு” என்று அவனின் நினைவை உதற முயற்சித்தவளுக்கு, முடியாத சூழல் எப்போதென்றாலும் அவனின் நினைவுகள் தான் துணையாய் வந்து நின்றிடும். மனதினோரம் தேங்கி நிற்கும் அவன் காட்டிய அன்பின் நிழலில் தான் அனைத்து வலிகளையும் தாங்கிட பழகிக்கொண்டாள்.
இப்போதும் அதுவே!
சிகிச்சை முடித்து மருத்துவர் வெளியில்வர, மிகுந்த படபடப்புடன் அவர் முன் சென்று நின்றாள்.
“ஒரு நாள் முழுக்க சாப்பிடாம, தண்ணி கூட குடிக்காம இருந்திருக்காங்க. வயசானவங்க… பிபி, சுகர் எல்லாமே கம்மியாகியிருக்கு. அதோட மயக்கம் வர அதுதான் காரணம் அப்படின்னாலும், இன்னொரு காரணம் அதிகத்துக்கும் மேலான அழுத்தம். மைல்ட் அட்டாக் அப்படின்னும் சொல்லலாம். பயப்படுற அளவுக்கு இல்லை. ஆனா இனிமேல் கவனமா இருக்கணும். இப்போதைக்கு அமைதியும், ஓய்வும் போதுமானது” என்றார்.
வேண்டுமென அவராக இழுத்துக்கொண்ட வேதனையென தெரிந்தது. அதற்கு காரணம் தானென்று புரிந்தாலும், இதில் அவள் செய்வதற்கு ஒன்றுமில்லை.
‘வீண் பிடிவாதம்.’ அந்நொடி வரை அன்னைக்காக தவித்தவள் அக்கணம் அப்படித்தான் நினைத்தாள்.
அவருக்காக அவர் சொல்வதை செய்திட முடியுமா? அதற்கு அவளின் மனம் தான் விட்டுவிடுமா?
“கொஞ்ச நேரத்தில் கண் திறந்திடுவாங்க. கூட்டிட்டுப் போகலாம்” என்ற மருத்துவர், “கரெக்ட் டைமுக்கு சாப்பிட கொடுங்க. இனிமேல் சின்ன சின்ன அழுத்தம் கூட அவங்க உடல்நிலையை பாதிக்கும்” என்று அறிவுறுத்தினார்.
கண் விழித்த செண்பகம், தன்னுடைய காலுக்கு கீழ் படுக்கையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துவிட்டு, மித்யுகா எங்கென பார்வையை சுழற்றினார்.
அவ்வறையின் ஓரிடத்தில் போடப்பட்டிருந்த நீண்ட பெஞ்சில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
செண்பகம் எழுந்தமர முயற்சிக்க… அருகில் சென்று அவர் எழ உதவி செய்தாள்.
“நான் இன்னும் சாகலையா?” செண்பகம் கேட்க, அவரை முறைத்தவள்,
“ஒருநாள் சாப்பிடாம இருந்ததுக்கெல்லாம் யாரும் சாக மாட்டாங்கம்மா” என அழுத்தமாகக் கூறினாள்.
“அப்போ நான் பட்னி கிடந்து செத்தாலும் உனக்கு ஒன்னுமில்லன்னு சொல்றியா?” என்ற செண்பகம், “நான் இப்படியே போய் தொலைஞ்சிருக்கலாம் நினைச்சியோ!” என்றார்.
“நீ எழுந்ததும் வீட்டுக்குப் போலாம் டாக்டர் சொன்னாங்க. நான் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு வர்றேன்” என்று மித்யுகா நகர,
“இந்தப்பொண்ணை ஒத்துக்க வைக்க எனக்கொரு வழிகாட்டுங்க கடவுளே” என மேல் பார்த்து புலம்பினார்.
“சாப்டிங்களா சிவா?” பிள்ளைகளிடம் செண்பகம் கேட்க,
“எழுந்துட்டிங்களா பாட்டி” என்ற சிவேஷ் வேகமா அவரின் மடியேறி கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
“அம்மா பயந்துட்டாங்க பாட்டி. நீ இனிமே இப்படிலாம் தூங்காத” என்ற சிவேஷின் முதுகை தட்டிக் கொடுத்த செண்பகம்,
“உன் அம்மா பயப்படுற ஆளா” என மெலிதாகச் சிரித்தார்.
“அம்மா அழுதாங்க பாட்டி. ஆனா எங்ககிட்ட காட்டிக்கவே இல்லை” என்று சிவன்யா சொல்ல…
“அவ எப்பவுமே அப்படித்தான். அழுத்தக்காரி” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
“கிளம்பலாம்மா” என்று மித்யுகா வர, அடுத்த அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.
“டைம் ஆச்சுன்னு பசங்களுக்கு ஹாஸ்பிடல்லே கேண்டினில் வாங்கி சாப்பிடக் கொடுத்துட்டேன். உனக்கு இப்போ கஞ்சி வைக்கட்டுமாம்மா” என செண்பகத்திடம் கேட்ட மித்யுகா, “நீங்க ரெண்டு பேரும் போய் படுங்க” என பிள்ளைகளை படுக்கையறைக்குள் அனுப்பி வைத்தாள்.
“எனக்கு எதுவும் வேண்டாம்” என்ற செண்பகம், தனது அறைக்குள் சென்று மறைந்தார்.
வேகமாக பழச்சாறு செய்து எடுத்துகொண்டு சென்றாள்.
“காலையிலிருந்து சாப்பிடாம இருக்க… மருந்தெல்லாம் உடம்புல ஏறியிருக்கு. முதல்ல இந்த ஜூஸ் குடிம்மா. இட்லியே ஊத்தி வச்சிட்டேன். மதிய சாம்பார் இருக்கு சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கலாம்” என்று குவளையை செண்பகத்திடம் நீட்டினாள் மித்யுகா.
ஒரு பக்கமாகப் படுத்திருந்த செண்பகம், மித்யுகாவின் முகத்தைக்கூட பார்க்காது,
“எனக்கு எதுவும் வேணாம்” என்றார்.
“சாப்பிடாம இருந்து என்னை பிளாக்மெயில் பாண்ணாதம்மா” என்ற மித்யுகா, “நீ இப்படியெல்லாம் பண்ணா நான் ஒத்துப்பேன்னு உனக்கு யார் சொன்னா?” எனக் கேட்டாள்.
“யாரும் சொல்ல வேணாம். அம்மா மேல பாசமிருந்தா பசங்க அவங்க சொல்ற பேச்சை கேட்பாங்க. இங்க உனக்கு அந்தப் பாசம் இருக்கான்னு தெரியலையே. இல்லைன்னா நான் மயங்கி விழுந்தும் நீ கொஞ்சம்கூட இறங்கி வராம உன் பிடியில் இப்படி கல்லு மாதிரி இருப்பியா?” என்று எழுந்து உட்கார்ந்தார்.
மித்யுகா பதில் சொல்லாது நின்றிருக்க…
“உனக்கு இன்னும் வயசிருக்கு மித்யு. வாழ்க்கை போயிடுச்சுன்னா திரும்ப வராது. நீ பட்டதெல்லாம் போதும். அம்மா சொல்றதை கேளு தங்கம்” என்று அவளின் கையை பிடித்து தனக்கருகில் அமர வைத்தார்.
“இன்னைக்கு ஏம்மா இவ்வளவுக்கு பிடிவாதம் பண்ற? மனசுல அவங்க தாம்மா இருக்காங்க. நான் எப்படி?” என்றவள் முகத்தை உள்ளங்கைகளில் புதைத்துக் கொண்டாள்.
“உன்னை மறக்கணும் சொல்லலடா. ஒதுக்கி வச்சிட சொல்றேன். மறந்துட்டு அடுத்த வாழ்க்கையை பாருன்னு சொல்றவங்களுக்கே மறந்துட்டு வேறொன்னை ஏத்துக்கிறது முடியாத காரியம். நிதர்சனத்தோட நடந்துக்க சொல்றேன். நீ தனியா இருக்க வரைக்கும் கண்ட கண்ணும் உன்மேல படியத்தான் செய்யும். உன் ஆபிஸ்லே உன்கிட்ட வாலாட்டிட்டு இருக்கவனை அடக்க முடிஞ்சுதா? என்கிட்டவே நேரடியா வந்து உன் பொண்ணையும், பசங்களையும் நான் பார்த்துக்கிறேன். வரப்போக இருக்க உங்க பொண்ணை சம்மதிக்க வைங்கன்னு சொல்லிட்டுப்போறான். அவன் மேல போலீஸ்ல புகார் கொடுத்தும் பிரயோஜனமாச்சா? உனக்காக இல்லைன்னாலும், உன் பாதுகாப்புக்காகவும், அப்பா எங்கன்னு கேட்கிற பிள்ளைங்களுக்காகவும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு. இன்னும் என் காலம் எத்தனை நாளுக்குன்னு தெரியல. எனக்கு நிம்மதியான சாவை கொடு மித்யு. வாழ வேண்டிய வயசுல வாழ்வை இழந்துட்டு நிக்கிறியேன்னு நெஞ்செல்லாம் அடைக்குது. இப்படியே நான் செத்துப்போனாலும் என் நெஞ்சுக்கூடு வேவாது” என அவளின் கைகளில் வேண்டுவதைப்போல் தலையை பதித்தார்.
செண்பகத்தின் கண்ணீரின் ஈரம் அவளது விரல்களில் படர்ந்தது.
“அம்மா!” உதடு துடிக்க மித்யுகா விளித்திட, “எனக்கு என்ன முடிவெடுக்கணும் தெரியலையேம்மா. ஒரு பொண்ணு அவளாவே தனியா கடைசிவர வாழ முடியாதா?” எனக் கேட்டாள்.
“வாழ வழியில்லாம இல்ல… வாழ விடமாட்டாங்க” என்ற செண்பகம், “சீக்கிரம் முடிவு சொல்ல சொல்லியிருக்காங்க. சரின்னு சொல்லுடா” என்றார்.
மித்யுகாவுக்கு ஆயாசமாக வந்தது.
முன்புபோல அவரிடம் அழுத்தமாக அவளால் தன்னுடைய மறுப்பை சொல்ல முடியவில்லை.
அடமாக இருப்பவரின் உடலுக்கு மேற்கொண்டு ஏதேனும் ஆகிவிடுமோ எனும் பயம் வேறு அவளின் மறுப்புக்கு சிறிய தடையாக இருந்தது.
இவரிடம் கெஞ்சி வேலைக்காகப் போவதில்லை என நினைத்த மித்யுகா… ‘வரவங்களிடம் பேசிக்கொள்ளலாம். தான் வேண்டாமென்றால் தானே அன்னைக்கு மனவருத்தம், வரவங்களிடம் பேசி வேண்டாமென சொல்ல வைத்திடுவோம்’ என எண்ணியவளாக,.
“சரிம்மா… வரச்சொல்லு. ஆனால் எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இது எனக்கு ரெண்டாவது கல்யாணம்ன்னு தெளிவா சொல்லிடு” என சொல்லிவிட்டு வேகமாக எழுந்து சென்றுவிட்டாள்.
இரண்டாவது திருமணம், இரு பிள்ளைகள் எனத் தெரிந்தால் வர இருப்பவர்கள் வீடுவரை வராமலே வேண்டாமென்று சொல்ல வாய்ப்பிருக்கென நினைத்து அதற்கு அழுத்தம் கொடுத்திருந்தாள்.
தன்னுடைய அறைக்கு வந்தவள் கண்ணாடி முன்பு அமர்ந்து, அலங்கார மேசை இழுவையை இழுத்திட,
ஒற்றை ஜிமிக்கி ஜோடியற்று தனித்து கிடந்தது.
முகம் தாழ்ந்து பார்த்திருந்தவளின் கண்ணீர் அந்த வெள்ளி நிற ஜிமிக்கியில் துளியாய் விழுந்து தெறித்தது.
தனிமையில் வாடும் அந்த ஜிமிக்கியின் இணை, அங்கொருவனின் சுட்டுவிரலில் சுழன்று கொண்டிருந்தது.
error: Content is protected !!