Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

77. பிரியதர்ஷினி S - உனதன்பில் சரணாகிறேன்

உனதன்பில் சரணாகிறேன் 8

அத்தியாயம் 8

‘பிரபஞ்சத்தின் பெருங்காதல் உன்மீது எனக்கு.’ எனும் விதமாக வார்த்தைகளாலே தனது காதலை அவனிடம் சேர்ப்பித்த நாளின் நினைவிலிருந்து மீண்ட மித்யுகா, நெஞ்சத்தை அழுத்திய பாரத்தோடு அமர்ந்திருந்த இருக்கையின் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். 



Advertisement

உருகி கரைந்து நேசித்த நேசத்தைவிட… “உனக்கு எல்லாமாவும் நானிருப்பேன்” என காதலாய் கொடுத்த நம்பிக்கையை சிதைத்தது தான் இக்கணம் மித்யுகாவினுள் அதீத வதை கொடுத்தது. 

‘இன்றைய இந்நேரம் இத்தனை வலி கொடுக்குமென தெரிந்திருந்தால், நேற்றைய தொலைந்த நிமிடங்களுக்காக அவ்வளவு மகிழ்ந்திருக்கமாட்டேனோ!’

Advertisement

Advertisement

நினைத்த கணம் சுகம் கொண்ட காதலின் நினைவுகளெல்லாம் இப்போது வலி கொடுக்கவே நெஞ்சோடு கதறினாள். 

ம்ருதவ்விடம் “இந்த காதல் வேண்டாம்” என்று சொல்லி வந்த பின்னர், இத்தனை ஆண்டுகள் இந்த வலி இல்லையா என்று தோன்றலாம், ஆனால் அந்த வலிகளுக்கும் மேலான துயரங்களையெல்லாம் அவளின் சிறு இதயம் தாங்கிக்கொண்டதும் அவன் காட்டிய காதல் கொடுத்த இன்பத்தால், அது இல்லையென்ற வலியால் தானே! 

Advertisement

காலங்கள் எப்படி மாற்றம் பெற்றாலும், தன்னுடைய வாழ்வும், மனமும் ம்ருதவ் என்பவனின் மீது தான் கொண்டுள்ள காதலை தாண்டி மாற்றம் கொள்ளப்போவதில்லை என்பதை சில நினைவுகளை மீட்டிப்பார்த்திட்ட இவ்வேளையில் புரிந்திட… தீர்க்கமான ஒரு முடிவெடுத்தவளாக, 

விடியலை நோக்கி காத்திருந்தாள். தன்னுடைய வாழ்வின் விடியலுக்காக! 

****************

“இப்போ எதுக்குடா கால் பண்ணா அவள். நான் ராங் நெம்பரா அவளுக்கு” என்று சிடுசிடுப்பின் உச்சத்தில் கமலேஷ். 

ம்ருதவ் இதழில் தொக்கி நின்ற சிரிப்போடு கமலேஷைப் பார்த்தான். 

“நீ இந்த மாதிரி ஸ்மைல் பண்ணி எத்தனை வருஷமாச்சு” என்று ம்ருதவின் கண்களிலும் பிரதிபலிக்கும் சிரிப்பைக்காட்டி சொல்லிய கமலேஷ், “ஆனாலும் இப்போ சிரிக்கிறது எரிச்சலாவுதுடா. அவள் என்னை நோஸ்கட் பண்ணியிருக்காடா. நீ அதுக்கு இத்தனை வருஷம் சிரிக்காத சிரிப்பு சிரிக்கிற” என்று கடுகடுத்தான். 

“அவளுக்கு நான் வேணும் தோணுதுடா. என்னை அவள் தேடுறா. என்னைத் தெரிஞ்சிக்க நினைக்கிறாள்… இது திரும்ப எனக்கு அவளை உணர வைக்குதுடா… லவ் ஃபீல்” என்ற ம்ருதவ், “வேணும்னா பாரு மேடம் நாளைக்கு முடியுறதுக்குள்ள திரும்ப உனக்கு கால் பண்ணுவாங்க. என்னைப்பற்றி கரண்ட் ஸ்டேட்டஸ் தெரிஞ்சிக்க உன்கிட்ட கண்டிப்பா பேசுவாள்” என்றான். 

“ரொம்பத்தான் ஆசைப்படுற. அவளைத் தெரிஞ்சும் அதிகத்துக்கும் ஆசைப்படாதடா. திரும்ப உன்னை மீட்டெடுக்குற தெம்பெல்லாம் என்கிட்ட இல்லை” என்ற கமலேஷ், “ஒருமுறை பட்டும் அந்த வலி வேணும் நினைக்கிற உன்னை என்ன சொல்லித் திட்டுறதுன்னு கூட எனக்குத் தெரியல” என்றான். 

“இந்த காதல் சேர்ந்திருந்தாக்கூட இத்தனை ஆழமாகியிருக்காது டா” என்ற ம்ருதவ், “ரதி உன்னோடவே இருக்கிறதால் லவ்வோட இந்தப்பக்க சந்தோஷத்தை அனுபவிக்கிற வாய்ப்பு உனக்கு கிடைக்கவே இல்லை. அதனாலதான் இதோட ஃபீலும் உனக்கு புரியல. காதல்ல அவங்க இல்லங்கிற வலி கூட சுகம் தான் டா” என விளக்கம் கொடுக்க கமலேஷ் கையெடுத்து கும்பிட்டுவிட்டான். 

“போதும்டா… வலி சந்தோஷம் கொடுக்குமாம். போடாங், அப்படி அழுது, உருகி காதலிக்கிற காதல் வேணவே வேணாம். என் ரதிக்கும் எனக்கும் எப்பவும் சேர்ந்திருக்க காதலே போதும்” என்ற கமலேஷ், “விட்டா நீயே பிரிச்சு வச்சிடுவப்போல” என்றதோடு, “நான் போய் தூங்கப்போறேன். உன்னோட இன்னும் கொஞ்ச நேரமிருந்தாலும் எனக்கும் இந்த வலி நிறைய காதல் கொடுக்குமோ அப்படின்னு யோசிக்க வச்சிடுவ. நான் போறேன். குட் நைட்” என அறைக்குள் வந்து கட்டிலில் கவிழ்ந்து படுத்தான். 

சில நொடிகளில் உள்ளிருந்தே சிட்டவுட்டில் அமர்ந்திருக்கும் ம்ருதவ்வை எட்டிப்பார்த்த கமலேஷ், 

“உன் காதல்ல இந்த வலியை தவிர்த்து நினைச்சுப் பார்க்க ஒண்ணுமே இல்லையாடா?” எனக் கேட்டிருந்தான். 

கமலேஷ் உள் சென்றதும் வெளிப்புறம் இருளில் பார்வையைப் பதித்திருந்த ம்ருதவ், கமலேஷின் கேள்வியில் விழிகளை மென்மையாய் மூடியிருந்தான். 

இமை மூடிய குகைக்குள் வெளிர் நிற படலமாய் பாதையமைத்து உருண்டு கொண்டிருந்த கருவிழிகளுக்குள் காட்சி சிதறலாய் உருவகம் கொண்டிருந்தாள் மித்யுகா. 

அவள் காதல் சொல்லிய நாள், விதம், வார்த்தைகள் எதையும் அத்தனை எளிதாக அவனால் மறந்திட முடியாது. 

எதுவுமே இல்லையென்ற ஒருவனுக்கு நானிருக்கிறேன் எனும் எண்ணத்தை காதலாக அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தாள். 

“நானும், என் காதலும் உங்க இதயத்துக்கு வந்துட்டா கால் பண்ணுங்க.” 

மித்யுகா இவ்வார்த்தைகளை உதிர்த்து எட்டு வருடங்கள் கடந்திருந்த பின்னரும் ம்ருதவ்வினுள் பசுமையாய். 

‘காதலை இத்தனை ஆழமாக வார்த்தையால் சொல்லிட முடியுமா?’

அவள் சொல்லிச் சென்ற கணத்தில் ம்ருதவ்வினுள் காதல் இருக்கிறதோ இல்லையோ அவனால் அவளின் காதலை உள்வாங்கிட முடிந்தது. உணர முடிந்தது. அவள் சென்ற திசை பார்த்து நின்றிருந்தவன் கமலேஷின் குரலில் மீண்டிருந்தான். 

“என்னடா சொல்லிட்டுப்போறாள்.” மரத்துக்கு பின்னால் நின்று அனைத்தையும் கேட்டிருந்த ரதி, கமலேஷ் அவனருகில் வந்திருக்க, வினவியிருந்தான். 

“ஏன் அங்க மறைஞ்சு நின்னு கேட்டுட்டு இருந்த உங்களுக்கு கேட்கலையா? இல்லை உங்களுக்கு அவள் என்கிட்ட லவ் சொல்லப்போறது முன்னவே தெரியாதா?” என்ற ம்ருதவ்வின் கேள்வியில் இருவரும் அசடு வழிய, 

“தெரிஞ்சிடுச்சா?” எனக் கேட்டனர். 

“ம்ம்… இப்போ நீங்க அங்கிருந்து வரும்போது” என்ற ம்ருதவ், “க்ளாஸ்க்கு டைம் ஆச்சே, போலாம்!” என முன்னால் அடி வைத்தான். 

“அவ்ளோதானா?” ரதி கேட்க, 

நின்று திரும்பிய ம்ருதவ், 

“அவ்வளவு தான்” எனக்கூறினான் அழுத்தமாக. 

“அப்போ லவ்?” 

தலையை சாய்த்து ஒற்றை விரலால் நெற்றி தேய்த்தவன், 

“தோணும் போது, அவகிட்ட சொல்லணும்னா சொல்றேன்” என்று வகுப்பை நோக்கி எட்டுக்கள் வைத்தான். 

“என்னடா இவன் இப்படி சொல்லிட்டுப்போறான். அவள் லவ் சொன்ன விதத்துக்கே இவன் லவ்ல விழுந்திருப்பான் நினைச்சா.. இப்படி சொல்லிட்டுப்போறான்” என்ற ரதி, “விடாத அவனை” என்று ம்ருதவ்வின் பின்னால் கமலேஷை இழுத்துக்கொண்டு ஓடினாள். 

அதற்குள் ம்ருதவ் வகுப்பிற்குள் சென்றிருக்க, பேராசிரியரும் வந்திருந்தார். 

அடுத்தடுத்த வகுப்புகள் சென்றுகொண்டிருக்க, இவர்களுக்கு அவனிடத்தில் மித்யுகா கூறியதைக் குறித்துக் கேட்டிருக்க முடியவில்லை. 

இறுதி வருட மாணவர்கள் என்பதால் மதியத்திற்கு மேல், மாணவர்களின் செயல்திட்டத்திற்கான நேரமென்பதால் கல்லூரியில் இருந்தும் செய்யலாம் அல்லது வீட்டிற்கும் சென்றிடலாம் என்பதால் மதியம் உணவு நேர மணியடித்ததும், ஆளுக்கு முதல் ஆளாய் ம்ருதவ் வகுப்பைவிட்டு வெளியேறியிருந்தான். 

“டேய் போயிடப்போறான்… புடிடா!” பைக்குள் குறிப்பேடுகளை எடுத்து வைத்தவளாக ரதி கூறிட,

“வீட்டுக்குத்தான் போவான். வீட்ல போய் பேசிப்போம்” என்றான் கமலேஷ்.

“அவன் நேத்து மாதிரி வீட்டுக்குப்போகாம வேறெங்கும் போனால்” என்ற ரதி, “வாடா” என்று கடிந்தவளாக கமலேஷுடன் பார்க்கிங் வந்து சேர, ம்ருதவ் சென்றிருந்தான். 

“இப்பவும் அவன் வீட்டு வாசலில் தேவுடு காக்க வேண்டியதுதான்” என்ற ரதி, “நல்லா வந்து வாச்சிருக்கீங்க ரெண்டு பேரும்” என்றாள். 

“வீட்டுக்குதான் போயிருப்பான் ரதி. அப்படியில்லைனாலும் அவன் நம்மகிட்ட சொலித்தான ஆகணும். எதுக்கு டென்ஷன் ஆகற” என்ற கமலேஷ், “நீ உன் ரூம் போ. நான் வீட்டுக்குப்போறேன். ஈவ்வினிங் உன்னை வந்து பிக்கப் பண்றேன். அப்போ அவன் வீட்டுக்குப்போவோம்” என்றான். 

“ஹ்ம்ம்.” 

செயல்திட்ட பணிக்காக ரதி கல்லூரி விடுதியில் இல்லாது மற்ற தோழியருடன் வெளியில் தான் வீடெடுத்து தங்கியிருக்கிறாள். 

ரதியை அங்கு விட்டதும், கமலேஷ் ம்ருதவ்வுக்கு ஒருமுறை அழைத்துப் பார்ப்போமென அழைக்க… 

“நான் வீட்டிலில்லை. வேணும்னா கீ அங்கதான் கார்ப்பெட்டுக்குள் இருக்கு” என்றான் ம்ருதவ். 

“எங்கயிருக்க நீ?” 

“சொல்ல முடியாது!” 

“தனியா அப்படி எங்கதாண்டா போய் தவமிருக்க நீ. சொல்லு நானும் வர்றேன்.” 

“உன் தொல்லை இப்போ எனக்கு வேணாம்.” 

“ரைட்டு…” 

“ஹ்ம்ம்… போனை வை” என்ற ம்ருதவ் மலைக்கோட்டையின் உச்சியில் வழக்கமாக அமரும் திண்டின் மீது அமர்ந்திருந்தான். 

உள்ளங்கையில் ஜிமிக்கி உறைந்திருந்தது. 

மித்யுகா காதல் சொல்லியது… ம்ருதவ்வுக்கு, அவனது மனதிற்கு பிடித்திருக்கிறது. இந்த பிடித்தம்தான் காதலா என்று அவனுக்குத் தெரிய வேண்டியிருக்க மனதோடு சுய அலசலில் ஈடுபட்டிருந்தான். 

முதலில் இவ்வெண்ணமே காதல்தான் என்பதை அவனாகத்தான் புரிந்துகொள்ள வேண்டுமோ? 

மூச்சினை ஆழ்ந்து இழுத்தவனாக மித்யுகாவின் முகத்தை மனதில் தேக்கி நிறுத்தினான். 

இருவரும் மோதி விழுந்த கணம், அந்நேரம் உணர்ந்திடாத தீண்டலின் குளுமையை அவனது விழிகள் அக்கணம் அகம் நிரப்பின. 

அழகியலின் தோற்றமாக திரும்பிப் பார்க்க வைத்திட்டவளின் முகம், அப்போதே மின்னலென மனதை தைத்துவிட்டது என்பதை இப்போது அறிந்திட்டான். 

விழியில் விழுந்தவளை அகம் நுழையச்செய்திடவே மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்திருக்கிறோம் என்பது விளங்கியது. 

ஈர்ப்பு எனும் காதலின் முதல்நிலை அங்கேயே தொடங்கிவிட்டதென்பதை மனம் உணர, ம்ருதவ்வின் இதழ் உதிர்த்தப் புன்னகை அவனது கன்னக்கதுப்பில் புதைந்தது. 

“அவள் மனசுல நுழைஞ்சதாலதான் உன்னை பிடிச்சுதா?” என்று உள்ளங்கையில் குவிந்திருந்த விரல்களைப் பிரித்து, அதில் வீற்றிருந்த ஜிமிக்கியைப் பார்த்து வினவினான். 

“பிடிச்சிருக்கே! அவளையும், உன்னையும். ஆனா இதுதான் காதலான்னு புரியலையே! என் மனசுக்கு அவளை பிடிச்சதால்தான், அவளோட முகமும், உன்னோட இருப்பும் எனக்கு ஆறுதலா இருக்குன்னு புரியுது. ஒரு விஷயம் ஆறுதலா இருக்குங்கிறதுக்காக அங்க காதல் வந்திடுமா?” என்ற ம்ருதவ்வின் கேள்விக்கு, அவனது காதல்கொண்ட மனமே பதில் வழங்கியிருந்தது. 

‘அவள் காதலை சொல்லிவிட்டாள் என்பதற்காக மட்டும் காதலை ஏற்க முடியுமா? காதலில்லாமல் விருப்பம்கொண்டு காதலிக்க முடியுமா என அவளுக்காக நீ யோசிக்கும் இந்த செயலே அவள்மீதான உன்னுடைய காதலால் தான். அவள் காதல் சொல்லியதும் நீ மகிழ்ந்ததும் உன்னிடத்தில் அவள்மீது துளிர்விட்டிருக்கும் காதலால் தான். அவளின் மறுபிம்பமாக இந்த ஜிமிக்கியை பார்ப்பதும், உடன் வைத்திருக்க நினைப்பதுமே உன் காதலால் தான்.’

அவனது இதயத்தின் காதல் பக்கங்களை அவனுக்கே அவன் மனம் விளக்கிக் கொடுக்க, முகம் வெட்கம் கொண்டது. 

“அவளுக்கு எல்லாமாவும் நான் வேணுமாமே!” என்று வெட்கத்தில் அவனது உதடுகள் சுருங்கி குவிய, கீழுதட்டை பற்களால் கடித்து முகம் ததும்பும் காதலை மறைக்க முயன்றான். 

“நேத்துவரை எப்படியிருந்தேன்?” என்று முகம் கசிங்கியவன், “ரெண்டு நாள்ல மொத்தமா மாத்திட்டடி. யாருமே இல்லங்கிற ஃபீல் எனக்காக ரதி, கமலேஷ் இருக்காங்க அப்படிங்கிறப்போ கூட இருந்துச்சு. ஆனா, இப்போ நீயிருக்கங்கிற ஃபீல் யாருமே இல்லன்னு வாய்வார்த்தைக்கும் சொல்லக்கூடாதுன்னு நினைக்க வைக்குது. அப்போ எனக்கு உன்னை பிடிச்சிருக்கா? என் மனசு உன்னை என் உறவா ஏத்துகிட்டா மட்டும்தானே இந்த எண்ணம் சாத்தியம். அப்போ எனக்கு உன் மேல லவ் வந்திருச்சா ஜிமிக்கிப்பொண்னு” என்றவனுக்கு தனது பிதற்றல்களே அத்தனை இதம் அளித்தது. 

காதல் முளைக்க புரிதல், பழகல், ஆண்டுகள் என எதுவும் தேவையில்லை. உனக்கான தேடல் யாரென்பதை உனக்கு முன்பு உனது மனம் கண்டுகொண்டு உன்னை தேடலின் வழி ஈர்த்துச்சென்றிடும். 

அதுவே ம்ருதவ்வின் காதலிலும் அரங்கேறியது. 

தனக்கும் அவள் மீது காதல் வந்ததாலே இந்த ஆறுதல், இதம், பிடித்தம், என தெளிவாகியிருந்தவனுள், புதிதாக மற்றொரு கேள்வியும் முளைத்தது. 

‘அவள் வந்து காதலை சொல்லியதாலே தன்னுடைய பிடித்தம் காதலெனும் வரையறைக்குள் நுழைகிறதா?’

“இல்லை” என்று சத்தமாகக் கூவியது ம்ருதவ்வின் மனம். 

‘அவள் காதலை சொல்வதற்கு முன்பு உனது பிடித்தத்தை மட்டுமே நீ உணராமல் இருந்தாய். அவ்வேளையிலும் அவள் உனக்குத்தான் என்றால் தானாக வருவாளென உன்னை நீ அமைதிப்படுத்திக்கொண்டதே உன் காதலால் தான். அவள் வந்து சொல்லாதிருந்திருந்தால் நீயே அவளை நாடிச் சென்றிருப்பாய். அதுவே காதலின் பித்து நிலையாகும்.’

அனைத்திலும் தெளிதல் கொள்ள காதல் நிறைந்திட்ட நெஞ்சத்தை ஜிமிக்கி மூடியிருந்த கையால் இருமுறை குத்திக்கொண்டான். 

“எதுவுமே இல்லங்கிற நிலையில் எனக்காக நீ. இந்த பெரும் ஆறுதலுக்கு என்னோட காதல் மட்டும் தான் உனக்கான சரியான கொடுத்தலாகும்” என்ற ம்ருதவ், “லவ் யூ சொல்லணும் யுகா?” என குறுநகை சிந்தியிருந்தான். 

அன்றைய குளிர்வு இன்றும் தேகம் படர, கண்கள் மலர்ந்து உல்லாசமாக இருக்கையைவிட்டு எழுந்த ம்ருதவ், அறைக்குள் சென்று உறங்கிக்கொண்டிருந்த கமலேஷின் அருகில் தொப்பென்று படுக்கையில் விழுந்தான். 

அவ்வதிர்வில் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து துள்ளி தரையிறங்கி நின்ற கமலேஷின் கரம் பற்றி இழுத்து மெத்தையில் விழச்செய்த ம்ருதவ், அவன் மீது கால் கையைப்போட்டு அமுக்கியவனாக கன்னத்தில் அழுத்தமாகக் கடித்து வைத்தான். 

“அய்யோ… அய்யய்யோ” என்று அலறிய கமலேஷ், “டேய் என்னடா பண்ற. நான் மித்யு இல்லடா” என்று ம்ருதவ்வின் பிடியிலிருந்து விலக முயற்சித்தான். பலனில்லை. 

“சந்தோஷமா எதையாவது நினைச்சுப்பாருன்னு சொல்லி, ஏடாகூடமா எதையோ நினைக்க வச்சிட்டமோ” என்று கமலேஷ் வாய்விட்டு மிரள, 

“ரொம்பப் பேசாதடா. தூங்கு” என்ற ம்ருதவ், “நாளைக்குப்போய் தூரமா நின்னு அவளை பார்த்திட்டு வந்திடவா மச்சி” எனக்கேட்டான். 

“போயேன்… எனக்கென்ன?” என்ற கமலேஷ், “என்னை ஏன்டா அமுக்கி வச்சிருக்க” என்றான். 

“அதான்டா தெரியல” என்று தனது பிடியில் வைத்தபடியே கமலேஷை உலுக்கிய ம்ருதவ், “திரும்ப புதுசா லவ் வந்த மாதிரி இருக்குடா” என்றான். 

“இருக்கும் இருக்கும். உன் லவ்ல அதிகம் கதறினது நானும் என் பொண்டாட்டியும் தான. அதனால உனக்கு இன்பமாதான் இருக்கும்” என்ற கமலேஷ், “எப்பவும் அந்த ஜிமிக்கிட்டதானடா புலம்புவ. இன்னைக்கு ஏன் என்னை படுத்துற?” எனக் கேட்டான். 

“பிகாஸ், யூ ஆர் மை ஃப்ரெண்ட் டா… ஆம் யூர் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்றான் ம்ருதவ். 

“இப்படிலாம் உன்கிட்ட நான் சின்னப்படனும் இருந்திருந்தா, அப்போவே, உன்னை முதல் முறையா பார்த்தப்போவே மூஞ்சியை திருப்பிட்டுப் போயிருப்பேன்டா” என்ற கமலேஷ், ம்ருதவ்விடமிருந்து பதில் வராமல் போகவே, 

“என்னடா சத்தத்தைக் காணோம்” என இருட்டில் அவன் முகம் பார்க்க, ம்ருதவ் உறங்கியிருந்தான். 

தன் மீதிருந்த ம்ருதவ்வின் கால், கைகளை அகற்றி எழுந்தமர்ந்த கமலேஷ், அவனை நேராகப் படுக்க வைத்து, நெற்றிக் கேசம் ஒதுக்கியவனாக இறங்கி நின்றவன், சில நிமிடங்கள் நண்பன் உறங்குவதை நிம்மதியான உணர்வோடு பார்த்து, படுக்கையறைவிட்டு வெளியில் வந்தான். 

கலங்கத் துடித்த விழிகளை சரிசெய்ய இமைகள் தட்டியவனிடத்தில் பெரு மூச்சொன்று கிளம்பியது. 

இந்த நொடியை கடக்க முடியாது தடுமாறிய கமலேஷ் தனது மனைவிக்கு அழைத்துவிட்டான். 

ரதி உறக்கக்கலக்கத்தில் அழைப்பை ஏற்றிருந்தாள். 

“என்னடா ரெண்டு பேரும் இன்னும் தூங்கலையா?” ரதி கேட்க, 

“அவன் தூங்குறான் ரதி” என்று அடைத்த தொண்டையை செருமினான். 

“என்னடா சொல்ற?” 

“அவன் டீப் ஸ்லீப் பண்றான் ரதி. பேசிட்டு இருந்தவன் தன்னால தூங்கிட்டான். அவன் மனசு நிம்மதியா இருக்கிறதை நான் ஃபீல் பண்றேன் ரதி” என கண்கள் துளிர்த்த நீரை மூச்சோடு சேர்த்து உள்ளிழுத்தான். 

“கமல்…” அங்கு ரதிக்கும் குரல் கமறியது. 

“அவன் தூங்கி எத்தனை நாளாச்சு ரதி? நைட்ல அந்த சிட்டவுட் சேர்ல உட்கார்ந்து இருட்டை வெறிச்சிட்டு இருப்பான். ஆனா இன்னைக்கு” என்ற கமலேஷ், “அப்பவும் சரி, இப்பவும் சரி அவனோட ஆறுதல் மித்யு மட்டுந்தான் ரதி. இனி அவளே முடியாது சொன்னாலும், எப்படியாவது அவளை சிவாவோட சேர்த்து வச்சிடனும்” என்றான். 

“கண்டிப்பாடா” என்ற கமலேஷ், “அவங்க சேரணுங்கிறது தான் விதி. அதான் இவ்வளவு நடந்தப்புறமும், ரெண்டுப்பேரும் சேர காலம் அமைஞ்சிருக்கு” என்றாள். 

“ஹ்ம்ம்… இனி நடக்கிறதெல்லாம் நல்லதா நடக்கணும். இன்னொரு முறை அவன் துவண்டு வாழ்க்கையை வெறுத்து அழுது பார்க்குற தெம்பு எனக்கில்லை” என்றான். 

“அதெல்லாம் வரவள் பார்த்துப்பாள். நீ கண்ணை கசக்காம போய் படுடா. நாளைக்கு மலைக்கோட்டைப் போறேன்னு கிளம்பி நிப்பான். தனியா விட்டுடாத” என்றாள். 

“ஹ்ம்ம்… சித்தப்பாக்கு திதி கொடுத்திட்டு ஆபீஸ் கூட்டிட்டுப்போயிடுறேன்” என்ற கமலேஷ் மேலும் சில வார்த்தைகள் பேசி வைத்தான். 

கமலேஷ் இணைப்பைத் துண்டிக்க, ரதியிடம் பெரும் யோசனை. 

ரதிக்கு மித்யுகாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக ம்ருதவ்வுக்கு இரண்டாவது திருமணம் என சொல்ல வேண்டுமா எனும் ஆதங்கம். 

“உண்மை அவளுக்குத் தெரியும்போது உனக்கிருக்குடா” என்று நண்பனை மனதோடு திட்டிக்கொண்டவளுக்கு, ம்ருதவ்வின் கரத்தில் மித்யுகா சேரும் நாளுக்கான பெரும் எதிர்ப்பார்ப்பு. 

‘ஒரு நொடிப்பார்வையில்

தொலையவில்லையெனில்… 

அது என்ன வசீகரம்? 

அது என்ன காதல்?

அவளன்பின் அழுத்தம் அவன்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!