Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் 26.1

      உன்  சுவாசம்  என் மூச்சில் 26.1

              ( முதல் நிறைவு பகுதி )

   

       கதிரவன் கையில் தனது மகளுடன் வாசலில் நின்றுகொண்டிருந்த எழில்விழியை கண்டவன் அவளை முறைத்துவிட்டு அவளிடம் பேசாது வெங்கடேசனிடமும் அன்னலெட்சுமியிடமும்  ஓர் வார்த்தை பேசிவிட்டு விஜயனை  அழைத்து அவனின் உதவியுடன் அறைக்கு சென்றுவிட்டான்.



Advertisement

      எழில்விழிக்கு  அவனின் உதா சீனத்தில் வழக்கம் போல் மனதில் வலி உண்டாக அதனை மறந்து அவனை பின் தொடர எண்ணிய மனதை அடக்கி அங்கிருந்த மாமியார் மாமனாரை கவனிக்க,

   தெய்வானையோ அவளை முறைத்துவிட்டு ஒன்றும்  கூறாது வெடுக்கென  தலையை திருப்பி கொண்டு அடுக்கலைக்குள்  சென்றுவிட  சுவாமிநாதனோ எழில்விழியிடம்,

“ எழிலு போத்தா போய் உன் அறையில ஓய்வெடு ” என கூறி அவளையும் கண்ணாவையும் அறைக்கு அனுப்பிவிட்டு வெங்கடேசனிடமும் அன்னலெட்சுமியிடமும் பேச ஆரம்பித்தார்.

Advertisement

   சுவாமிநாதனுக்கு பேத்தியை தூக்கி கொஞ்ச ஆசைதான் எங்கே பேத்தியை கொஞ்ச தூக்கினால் எழில்விழி பெற்றோர் முன் தெய்வானை  ஏதேனும் மனம் நோகும் படி பேசிவிட்டால் அதான் சம்பந்தி சென்றவுடன் பேத்தியை தூக்கி கொஞ்சிக்கொள்ளலாம் என எழில்விழியை அறைக்கு அனுப்பினார்.

Advertisement

   எழில்விழி தனது குழந்தைகளுடன் அறைக்கு செல்ல அங்கு கால் மற்றும் தலையில் கட்டுடன் படுத்துக்கொண்டு எங்கோ வெறித்துக்கொண்டிருந்த கணவனை கண்டு பொங்கி வந்த கண்ணீரையும் உள்ளிழுத்துக்கொண்டு அமைதியாக மகளை அவனின் அருகில் படுக்க வைத்துவிட்டு குளியல் அறைக்குள் செல்ல,

 கண்ணாவோ கதிரவன் அருகில் சென்று,

“ அப்பா ” என அழைத்தான் மகனின் குரலில் அதுவரை கதிரவனிடம் இருந்த ஒருவித இறுக்கம் எரிச்சல் போன்ற உணர்வுகள் விடைபெற  மகனை கண்டு கண்களால் அருகில் வருமாறு சமிக்கை  செய்தான்.

Advertisement

   அந்த மூன்று வயது சிறுவனோ  தந்தையின் கண்களில் தூசி விழுந்ததால் கண்களை சிமிட்டுகிறான் என எண்ணி,

“ என்னப்பா கண்ணை அசக்குற த்துச்சியா??.. இரு அம்மாவை கூப்றேன் ” என மழலை  குரலில் கூறி குளியல் அறை கதவை தட்ட

   அதில் கடுப்பானவன்,

“ டேய்!!!… டேய்!!…. இங்க வாடா உன்னைய பக்கத்துல வர சொல்லி கண்ணை அசைச்சேன்டா ” என கதிரவன் கூறிக்கொண்டிருக்கையில்,

   அவனின் சத்தத்தில் அதுவரை நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த அவனுடைய மகள்

 தூக்கத்தை தொந்தரவு படுத்திய கோவத்தில் வீல் என்று கத்தி அழ,

   அதில் பதறியவன் மகளை அவனறியாது வேகமாக சிரமப்பட்டு தூக்கி கையில் வைத்துக்கொள்ள  அதற்குள் மகன் மகள் சத்தத்தில் அவசர குளியல் போட்டுவிட்டு வெளியே வந்தாள் எழில்விழி.

   வந்தவள் மகள் கணவனின் கையில் படுத்திருப்பதை பார்த்து ஏதும் அறியாதவள் போல சேலையை சுற்றிக்கொண்டு  கணவனிடம் சென்றவள்,

“ என்னங்க கண்ணாவுக்கு பசிக்கும். நான் அவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன். அதுவரைக்கும் உங்க மகளை பார்த்துக்கோங்க ” என கூறி வேகமாக அறையைவிட்டு கண்ணாவையும் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடி வந்தாள்.

   இல்லையென்றால் யார் திட்டுவாங்கவது அவனிடம் என்ற எண்ணம்தான்.

   தெய்வானை யாருக்கும் சமைக்காமல் சும்மா சமையல் அறையில் நின்றுகொண்டிருப்பதை எழில்விழி கண்டு அவரிடம் ஒன்றும் பேசாது வேகமாக சமையலில் இறங்கினாள். அவள் சமையல் அறைக்குள் வந்தவுடனே தெய்வானையும் அறையை விட்டு வெளியே சென்றுவிட அது எழில்விழிக்கு சற்றே இதமாக வேகமாக சமயல் வேலையை கவனித்தாள்.

   இங்கு மகளை கையில் வைத்திருந்தவன் மகளை நன்றாக கவனிக்க மகள் அப்படியே கதிரவன் முக அமைப்பில் இருக்க அவனின் மனதிற்குள் ஒரு சிலிர்ப்பு.

   கண்ணாயிரம் பிறந்தவுடன் எழில்விழி போல் இருந்ததில் சிறு பொறாமைகூட கதிரவனுக்கு வந்தது. இப்பொழுது மகள் அப்படியே அவனை போல் இருப்பதில் அவன் மனதில் கர்வம் வர  மெதுவாக குழந்தையை தூக்கி நெற்றியில் ப ட்டும் படாமலும் தன் இதழ்களை  ஒற்றி  முத்தம் வைக்க,

   அதில் குழந்தை முகத்தை சுழிக்க அதன் அழகில் சொக்கியவன் சிறுது நேரம் குழந்தையை கையில் வைத்திருந்துவிட்டு மீண்டும் அவன் அருகில் படுக்க வைத்தான் கதிரவன்.

   அதுவரை தந்தையின் கை அணைப்பில் இருந்ததில் அதில் இருந்த சுகம் குறைந்ததால் குழந்தை மீண்டும் வீல் என கத்தி அழ அதில் பயந்து குழந்தையை மீண்டும் தூக்கி கையில் வைத்துக்கொண்டான். மெதுவாக குழந்தையிடம்,

“ ஏய் பாப்பா!!.. என்ன  மெத்தைல படுக்க வச்சா அழுற. அப்பா உன்னைய கையிலேயே வச்சுக்க முடியுமா??… ” என கேட்க

   அவனின் அந்த சத்தத்தில் உறங்கி கொண்டிருந்த குழந்தை ஒற்றை கண்ணை மட்டும் திறந்து தனது தந்தையை பார்த்துவிட்டு பின் இதழ்களை ஒரு பக்கம் சுழித்துவிட்டு மீண்டும் தனது உறக்கத்தை தொடங்கியது.

   அந்த சின்ன சிட்டின் செயலில் மயங்கியவன்,

“ ஏய்!!… என்ன இப்பவே சலிச்சுக்குற??.. ” என மீண்டும் பேசிய கதிரவனின் குரலில் தூக்கம் கலையாது குழந்தை தூக்கத்தை தொடர

“ இப்போவே உனக்கு அவ்வளவு கோவம் வருது. அவ்வளவு அலட்சியமா??… பார்த்து உதட்டை சுளிக்குற. ஹ்ம்ம்…. அதுசரி என் மகள் ஆச்சே அப்படித்தான் இருப்ப ” என சந்தோசமாக புன்னகை முகத்துடன் சலித்துக்கொண்டவன் அப்பொழுதுதான் ஒன்றை உணர்ந்தான்.

“ அதானே என் மகள்ன்னா என்னை போலத்தானே இருப்ப. அப்போ எப்படி தப்பு பண்ணும். என் மகள் என் குலசாமி இல்லையா??… என் கவுரத்தை காப்பாத்துற  தேவதை. அவளை போய் வேணாம்ன்னு சொல்லிருக்க கூடாதோ ”  என எண்ணிக்கொண்டவன் குழந்தையின் பாதங்களில் ஒற்றை முத்தம் வைத்து

“ என்னைய மன்னிச்சிடுத்தா. நீ இந்த கதிரவனோட மக. உன்னால என்னைக்கும் தப்பான விஷயத்தை செய்யவோ யோசிக்கவோ முடியாது. அது புரியாம உன் அம்மாகிட்ட முட்டாள் மாதிரி பொம்பள பிள்ளை வேணாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். இதுல  ட்ரைனிங்   போய் காலை உடைச்சதுதான் மிச்சம் ” என மகளிடம் கதிரவன் பேசிக்கொண்டிருக்க

   தந்தை பேசிக்கொண்டே உறங்க விடாமல் செய்ததில் கடுப்பான அவன் மகள் மீண்டும் வீல் என கத்தி அழ. அவள் சத்தத்தில் எழில்விழி அறைக்கு ஓடி வந்தாள்.

   வந்தவள் அங்கு கணவன் மகளிடம்,

“ ஏய் பாப்பா!!!…. சும்மா சும்மா உங்க அம்மா மாதிரி அழக்கூடாது எல்லாத்துலயும் தைரியமா இருக்கனும் ” என சின்ன சிட்டை  சமாதானம் செய்யும் அழகை கண்டுவிட்டு திரும்ப செல்ல எண்ணுகையில் மகள் திரும்ப அழ,

    அப்பொழுதுதான்  மகள் பசிக்கு அழுகிறாள் என்பதை உணர்ந்தவள் வேகமாக கதிரவனிடம் இருந்து மகளை வாங்க அதில் கடுப்பானவன்,

“ என்ன??…. ” என கேட்க ஒன்றும் கூறாது மகளை வாங்கி பசி  ஆற்றிவிட்டு ஏப்பம் வர வரை தட்டிக்குடுத்தவள் குழந்தை உறங்கியவுடன் கதிரவன் அருகில் படுக்கவைத்துவிட்டு வேகமாக அறையில் தொட்டிய கட்ட,

    அதுவரை அவளின் செயல்களை மவுனமாக கவனித்தவன் வேகமாக,

“ விழி தொட்டி கட்ட  வேணாம்” என கதிரவன் கூற அதில் பாதி கட்டி முடித்தவள்

“ ஏன்??… ” என எழில்விழி  கண்களில்  கேள்வியுடன் கணவனை காண,

அதற்கு

“ இல்ல  நீ வேலையா  இருக்க. அதான் பாப்பா  அழுதா என்னால எழுந்து தூக்க முடியாது.  இங்க என் பக்கத்துல தூங்க வை ” என கதிரவன் கூற

    அதற்கும் ஒன்றும் கூறாது அமைதியாக மகளை அவனிடம் விட்டுவிட்டு வேலையை கவனிக்க சென்றுவிட்டாள் முகத்தில் புன்னகையுடன்.

   அனைவரும் உணவை உண்டுவிட்ட பின் அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் கதிரவனிடம் சிறுது நேரம் இருந்து பேசிவிட்டு ஊருக்கு கிளம்பினர்.

   பின் வேலைகளை முடித்துவிட்டு  எழில்விழியும் கண்ணாவை  அழைத்துக்கொண்டு  அவளின் அறைக்கு செல்ல அங்கு மகளின் அருகில் கதிரவன் அவன் கைகள் கொண்டு தொடாதவாறு அணைவாக படுத்திருந்தான்.

    அவனின் உறக்கம் கலையாதவாறு கண்ணாவையும் உறங்க வைக்க ஆரம்பிக்க சிறுது நேரத்தில் கண்ணா உறங்கியவுடன் மெதுவாக எழில்விழி  எழ அங்கு கதிரவன் கட்டிலில் கால்களை நீட்டியவாறு  சாய்ந்து அமர்ந்து கொண்டு எழில்விழியை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டே இருக்க அதனை கண்டு எழில்விழி திடுக்கிட்டு,

‘ என்ன இப்படி பார்க்குறாங்க. நம்மள முறைச்சு பார்க்குறாங்களா இல்ல ரசனை யா பார்க்குறாங்களா ஒரு மண்ணும் புரியல. ரெண்டு பிள்ளையை பெத்து என்ன செய்ய’ என மனதில் அவளையே அவள் திட்டிக்கொண்டு,

  அவன் திட்டினாலும் பரவா இல்லை  என கணவனிடம் பேசிவிடும் எண்ணத்தில் தன் மனதில்  இருக்கும் கேள்வியை கேட்க எண்ணி கதிரவனை நோக்கி,

“ என்னங்க….” என பேச முற்படுகையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்க வேகமாக எழில்விழி எழுந்து கதவை திறக்க அங்கு தெய்வானை கோவமாக நின்று கொண்டிருந்தார்.

 அவரை கண்டு, “ என்ன அத்தை??….” என கேட்க,

“ நான் உன்கிட்ட ஒன்னும் பேசல எங்க அவன் ” என எழில்விழியை இடித்துக்கொண்டு அறைக்குள் தெய்வானை வர அங்கு கதிரவன் புருவம் சுருக்கி தெய்வானையை  பார்க்க ,

“ என்னடா இது எல்லா??… உனக்கு ஒரு தடவை பட்டு புத்தி வரல ” என கத்த

   அந்த சத்தத்தில் பிள்ளைகள் இருவரும் சற்றே சினுங்க அதனை கண்டு,

“ அம்மா உனக்கு என்ன பிரச்சனை ஆனாலும் மெதுவா பேசு இல்ல நான் அப்புறம் வெளிய வரேன் அப்ப பேசு. பிள்ளைங்க  தூங்குதுல ” என கதிரவன் அழுத்தமான குரலில் கூற

   அதனை கண்டு கொள்ளாத தெய்வானை,

“ ஏன்டா இந்த ராசி இல்லாத பிள்ளையை வீட்டுக்கு தூக்கிட்டு வந்துருக்கா. நீ  ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்க ” என ஆகங்காரமாக  கத்த

  அதில் கடுப்பான கதிரவன்,

“ என்ன ராசி இல்லாதவளா யாரைம்மா சொல்லுற??…” என புருவ சுளிப்புடன் கேட்க 

“ இதோ இந்த இருக்காளே உன் பொண்டாட்டி நான் சொல்ல சொல்ல கேட்காம ஒரு பொட்ட பிள்ளைய பெத்து, அதுவும் அது பிறந்த ராசி நீ கீழ விழுந்த. ஏதோ நாங்க பண்ணுன புண்ணியத்துல பொழைச்சு வந்துருக்க ” என தெய்வானை புலம்ப

   எழில்விழி அவரின் அபாண்ட குற்றச்சாட்டை எண்ணி கலங்கிய கண்களுடன் வேகமாக  உறங்கிக்கொண்டிருந்த மகளை வாரி அணைத்துக்கொள்ள கதிரவனோ தெய்வானை பேச்சில் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.

“ என்ன ம்மா காமெடி பண்ணுறியா??… என் பிள்ளை தலைல தகப்பன் இல்லாத பிள்ளையா வளர கூடாதுன்னு  எழுத்திருக்குறதால தான் நான்  பொழச்சு  கால்  காயத்தோட போச்சு. நீங்க பண்ணுன பாவம் தான் எனக்கு வந்து விடிஞ்சுருக்கு” என கதிரவன் கூற அவனின் பேச்சில் தெய்வானைக்கு மனதில் சுருக்கென வலிக்க,

“ ஏன்டா நான்…. நான்…. என்னடா பண்ணுனே??…..” என தெய்வானை கேட்க

“ என்ன பண்ணல ஒரு கருவை அழிக்க சொன்னிங்க. அது எவ்வளவு பெரிய பாவம். அப்போவே உங்கள கண்டிக்காம இருந்ததுல நான் கீழ விழுந்து மன கஷ்டத்தையும் குடுத்து என் தேவதைய பிறந்தவுடனே என் கையில மகன முதல்ல வாங்கின மாதிரி  முதல்ல வாங்க முடியாம போச்சு ” என கதிரவன் கூற

  அதில் மேலும் எரிச்சல் ஆன தெய்வானை,

“ அதுசரி இத்தனை நாளு நல்லாத்தான் இருந்த. பொண்டாட்டி பிள்ளைகளுக்கு போன் கூட பேசாம.  இன்னைக்கு புதுசா பொண்டாட்டி  நேருல வந்தவுடன் அவுங்க பக்கம் பேசுற. இதோ இன்னைக்கு கூட அவுங்க வந்தவுடன் நீயும் கோவமாதான் அவளை முறைச்ச இப்போ கொஞ்ச நேரத்துல என்ன சொக்கு பொடி போட்டாளோ இப்படி பொண்டாட்டிதான் முக்கியம்ன்னு கிடக்குற ”   என தெய்வானை மீண்டும் கோவமாக பேச

“ அம்மா சின்ன திருத்தம் அவ புது பொண்டாட்டி இல்ல அதே பழைய பொண்டாட்டி தான். அவளுக்கு நான் போன் கூட பேசாம இருந்ததுக்கு காரணம், அவ பண்ணும்போது நான் எடுக்காம இருந்ததுக்கு காரணம் எங்க பேசுனா அவளை பார்க்கணும் போல இருக்கு வான்னு சொல்லி அவளை கஷ்டப்படித்திடுவேன்னு தான் போன் பேசல.

   அதோட நான் முறைச்சதுக்கு காரணம் பச்சை உடம்போட பச்சை பிள்ளைய தூக்கிட்டு ஒரு மாசத்துல வந்துருக்காளேன்னு கடுப்பு. அப்புறம் என்னமா சொன்ன??… சொக்கு பொடியா??… ஹா… ஹா… அவ எனக்கு சொக்கு பொடி எல்லாம் போட வேணாம். அவ ஒரு பார்வை பார்த்தாலே நான் விழுந்துடுவேன் ” என கதிரவன் கூற   

   அதில் மேலும் கடுப்பான தெய்வானை

“ ஏண்டா என்னமோ பொம்பள பொம்பளைன்னு இளக்காரமா பேசுவ. இப்போ இப்படி  பொண்டாட்டிகிட்ட விழுந்துகிடப்பன்னு நான் எதிர்பார்களடா ” என தெய்வானை கோவமாக பேச

“ அம்மா பொண்டாட்டி  காலுலதான் விழ கூடாது. ஆனா அவளோட காதல்ல நேசத்துல அன்புல விழலாம். அது எல்லாம் விழாம இருந்தா தான் தப்பு. அப்புறம்… ம்மா… நான் என் பொண்டாட்டி பிள்ளைகளோடு என் வீட்டுக்கு அதான் புதுக்கோட்டை  போறேன்.  எனக்கு ஒத்தாசைக்கு  ஆளு வச்சுக்குறேன் ” என கூறி அப்பொழுதே வண்டிக்கும் கூப்பிட்டு பேச

   அதனை கண்ட தெய்வானை,

“ என்னடா இப்போ என்ன சொல்லிட்டேன்னு  இந்த நிலமைல கிளம்புறேன்னு சொல்லுற??… ”

என ஆதங்கமாக கேட்க,

  அதில் கதிரவனோ,

“ அம்மா உனக்கு என் மக வேண்டாம்  உன் மகன் மட்டும் வேணுமா??… உனக்கு இன்னும் ரெண்டு பசங்க ரெண்டு பொண்ணுங்க இருகாங்க. என் மகளுக்கு நான் தான் அப்பா அந்த கடமையை செய்யணும்ல. என் மகளை பத்தி உன்னைய பேசவிட்டு வேடிக்கை பார்க்கமுடியாது ” என கூறிவிட்டு எழில்விழியிடம்,

“ விழி சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துவை ” என கூற

   அதுவரை கணவனின் பேச்சில் சமைந்து நின்றவள் வேகமாக எடுத்துவைக்க எண்ணி குழந்தையை அவனின் அருகில் படுக்க வைக்க செல்ல,

   அதற்குள் அறைக்குள் வந்த சுவாமிநாதன்,

“ கதிரு நானும் கிளம்பிட்டேன் ” என பெரிய பையுடன் வந்தவர் எழில்விழியிடம்,

“ எழிலு குடு என் ஆத்தாதவ.  எங்க அம்மாவே திரும்ப வந்துருக்கு ” என கூறி குழந்தையை கொஞ்ச கதிரவனோ,

“ என்னப்பா நீங்களும் வரிங்களா??… ” என கேட்க

“ ஆமாடா எங்க அம்மாவை பார்த்துக்குறதை விட எனக்கு என்ன வேலை ” என சுவாமிநாதன் கூற

“ அம்மாவா!!… ”

“  ஹ்ம்ம் ஆமாடா உன் மக என் அம்மா மாதிரித்தான் இருக்கா ” என  சுவாமிநாதன் கூற

“ அப்பா என் பொண்ணு என்னைய மாதிரித்தான் இருக்கா ” என கதிரவன் சின்ன குழந்தை போல் கூற

“ டேய் நீயே உன் அப்பத்தா மாதிரித்தான் இருக்க. அப்போ உன் பொண்ணும் அப்படித்தான் இருக்கும் ” என கூறி பேத்தியை கொஞ்ச

    அதில் தெய்வானை மெதுவாக குழந்தையை எட்டி பார்க்க அதுவரை முழித்து தாத்தாவை பார்த்துக்கொண்டிருந்தவள் வேகமாக கண்களை மூடி கொண்டாள்.

  அதனை கண்ட  தெய்வானை,

‘ ஹம்ம்ஹும்… இருக்கும் இருக்கும் அந்த  மாமியா கிழவியும் இப்படித்தான் என்னைய பார்த்தா மூஞ்சிய காட்டும். இந்த வாண்டும் அப்பிடியே பண்ணுதே’ என எண்ணிக்கொண்டு

“ என்னங்க நீங்களும் போறிங்களா??… ” என சுவாமிநாதனிடம் தெய்வானை கேட்க

“ ஹ்ம்ம் ஆமா தெய்வா நானும் கதிரவனோட போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன் ” என கூறிக்கொண்டிருக்கையில் வண்டியும் வந்துவிட கதிரவன் குடும்பம் சுவாமிநாதனோடு புதுக்கோட்டைக்கு கிளம்பியது.

     காரில் புதுக்கோட்டைக்கு செல்லும் பயணத்தில் எழில்விழிக்கு கதிரவன் பற்றிய சிந்தனை மட்டுமே.

‘ ச்ச நல்ல வேலை ஏன் போன் போடல ஏன் முறைச்சீங்கன்னு கேட்கணும்ன்னு நினைச்சேன் கேட்கல. இல்ல நம்மள பேசியே ஒரு வழியா ஆக்கிருப்பாங்க. இவரு  ஒவ்வொன்னையும்  வேற விதம்தான் யோசிப்பாரு போல.

    இவருக்கு நம்ம மேல அன்பு இல்ல காதல் இல்லன்னு லூசு தனமா யோசிச்சு நான் புலம்புனா இவரு இவ்வளவு காயத்தோடையும் வலிகளையும் தனிமையிலையும் என் உடம்ப பத்தி யோசிச்சுருக்காரே ’ என எண்ணி  மகிழ்ச்சியில்  இருந்தாள் எழில்விழி.

‘ ஹ்ம்ம் நம்ம புருஷன் கோவக்காரரா இருந்தாலும் பாசகராறுதான். எழிலு இனிமேல் அவரு என்ன சொன்னாலும் நாம கலங்க கூடாது சும்மா தில்லா நிக்கணும். நான் கதிரவன் பொண்டாட்டின்னா சும்மாவான்னு அப்படியே கெத்தா….’ என புன்னகையுடன் எண்ணிக்கொண்டிருந்தவளை,

“ விழி…..” என உரக்க அழைத்த கதிரவன்

“ ஏய் என்னடி??…” என கேட்க அவனின் சத்தத்தில் சுயம் பெற்றவள்,

“ என்னங்க??…” என கேட்க

“ உன்கிட்ட ஒன்னு கேட்கலாம்ன்னு நினைச்சேன் நீ சும்மா தனியா சிரிச்சுக்கிட்டு இருக்க ” என கதிரவன் கேட்க

“ இல்ல சும்மாங்க….” என கூறி புன்னகைக்க

“ நான் கூட என் காலுல அடிபட்டத்துல சந்தோஷத்துல சிரிக்குறன்னு நினைச்சேன் ” என கதிரவன் கூற

   அதில் அதுவரை அழ கூடாது என்று சபதம் எடுத்தவள் அதை காற்றில் பறக்க விட்டுவிட்டு கலங்கிய கண்களுடன்,

“ என்னங்க நான் அப்படி நினைப்பேனா??… ” என கேட்க

“ நீ நினைப்பியான்னு தெரியல ஆனா பக்கத்துல நான் இருக்குறேன் என்கிட்டே பேசாம தனியா சிரிச்சா எனக்கு அப்பிடித்தான் தோணுது ” என மறைமுகமாக என்னுடன் பேசு என கதிரவன் கூற அது புரியாத அறிவாளி எழில்விழி,

“ நான் என்னத்தங்க பேச ” என  பொதுவாக கூற

“ ஓ!!… உனக்கு என்கிட்டே பேசகூட ஒன்னும் இல்லை. என்ன??…. ” என அழுத்தமாக கேட்ட கணவனை கண்டு மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டவள்

“ நான் அப்படி சொல்லலைங்க. நீங்க சோர்வா இருப்பீங்களே என்னத்த பேசன்னு கேட்டேனே ஒழிய வேற எந்த அர்த்தமும் இல்ல ” என எழில்விழி கூறிக்கொண்டே,

   இந்த இடைப்பட்ட கால கதைகளை பேச அதில் ஆரம்பித்தில் முறுக்கி கொண்டிருந்தவன் பின் விழியின் விழியில் விழுந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.

   பின் காலங்கள் வேகமாக  நகர கதிரவன் கால்களும் சரியாகி ஒரு வழியாக வேலைக்கும் செல்ல ஆரம்பித்தான்.

    இம்முறை மகளுக்கு அவனே பெயர் வைக்க முடிவு செய்து ஆறு மாதங்கள் நேரமும் எடுத்துக்கொண்டு துளசி பாரதி என்ற பெயரை வைத்தான் கதிரவன்.

‘ துளசி போல் பவித்தரமானவள் என் மகள். பாரதி கண்ட புதுமை பெண்ணாக வளரவேண்டும்’ என்ற எண்ணத்தில் பெயரை வைத்த கணவனை கண் இமைக்காமல் கூட ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்விழி.

  வேண்டாம் என கூறிய மகள் மீது கதிரவன் வைத்திருக்கும் பாசத்தை கண்டு ,

‘ இவரை புரிஞ்சுக்கவே முடியலையே எழிலு’ என வழக்கம் போல் மனதில் பேசிக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!