Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 19

அத்தியாயம் 19

அடுத்து அவர்கள் கண்ட காட்சி மிகப் பெரிய ஒரு விளையாட்டு அரங்கம் போல் அரைவட்ட வடிவில் சிதிலமடைந்த கட்டிடம் இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்படி என்ன போட்டி இங்கே நடத்தி இருப்பார்கள் அதைப் பார்த்துக் கொண்டே வைஷ்ணவி இருக்க அசோக் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

‘இதை விட்டுட்டு பொருட்களை வாங்குவதில் நேரம் செலவிடுவது தவறுதான். இந்த ஸ்டான் பென்னி எல்லாம் நம்ம கூட வந்திருக்கலாம்’ வைஷ்ணவி சொல்ல அசோக் அவள் புறம் திரும்பினான். அந்தப் பார்வையில் ஏதோ ஒரு உணர்வு வித்தியாசமாக இருந்தது. அசோக்கின் கேள்வியான பார்வையைக் கண்டு வைஷ்ணவி பேசினாள்.

“இல்ல இவ்வளவு அழகு அழகான இடத்தை விட்டுட்டு பொருள் எல்லாம் வாங்குறேன்னு சுத்துறது தப்பு தானே”



Advertisement

வைஷ்ணவி நடந்தாள் தான் பார்த்த அனைத்திற்கும் மேல் ஒரு அழகு ஒன்று உண்டு என்று அப்பொழுது தான் அசோக் அவளுக்கு அறிமுகப்படுத்தினான். மேலே ஏற ஏற ஒரு வட்டமான குடுவைகளில் கால் கால் பகுதி அங்கங்கே ஒட்ட வைத்தது போல் வெள்ளை வடிவத்தில் சுண்ணாம்பு போன்ற படிமங்கள் இருக்க அதனுள் தண்ணீர் நீல நிற வண்ணத்தில் இயற்கையான நீச்சல் குளம் இருந்தது. அந்த நில அமைப்பின் மொத்த மணலும் வெள்ளை நிறத்தில் இருக்க உள்ளே தேங்கி இருந்த தண்ணீர் நீல நிற வண்ணத்தில் அழகின் உச்சம் நான் என பேசி நின்றது. அதனுள் குளிக்க தான் அசோக் ஆடைகளை கொண்டு வரச் சொல்லி இருந்தான்.

வைஷ்ணவி சட்டென்று அசோக்கை நோக்கி திரும்பினாள்.

“அசோக் இங்க தான் குளிக்கிறதா?”

Advertisement

அவள் கேட்டதும் அசோக் புன்னகைத்தான்.

Advertisement

“அங்க பாரு!”

அவன் சொன்ன இடத்தில் வைஷ்ணவி பார்க்க அங்கே சில பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். வைஷ்ணவி சற்று நேரத்தில் தன் ஆடைகளைக் களைந்து அந்த தண்ணீருக்குள் இறங்கினாள். “இயற்கையில் ஒரு நீச்சல் குளம் வெள்ளை நிற குவளையில் நீல நிற தண்ணீருக்குள் நீந்தி கொண்டே கீழிருக்கும் ஒவ்வொரு அழகையும் பார்த்து அதன் முகப்பில் கைகளைத் தாங்கி நிற்பது சொர்க்கம். சொர்க்கம் இங்கே உலகில் தான் இருக்கிறது என சத்தியம் செய்து சொன்னது அந்த பயணம்.

அசோக் இன்னொரு குளத்தில் இறங்கிக் குளித்தான். சற்று தள்ளி காப்ரியேல் அடலின் இருவரும் ஒரே குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் காதலோடு ஒருவரை ஒருவர் சீண்டி விளையாட அதைக் கண்டதும் வைஷ்ணவி வேறுபுறம் கண்களைத் திருப்பினாள். அசோக் அவளை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவளுக்கு வெட்கம் கூட வருமா என்று கூட வருமா’ என்றது அவன் பார்வை.

Advertisement

அதன் பின் அவர்கள் அங்கு இருந்துக் கிளம்பி இத்தாலி வந்தடைந்தனர் இத்தாலி பயணம் இரு நாளாக இருந்தது. அங்கிருந்த ஒரு விடுதியில் தங்கி இருந்தனர். அசோக் காலையில் இத்தாலிய உணவு வகையை வைஷ்ணவிக்கு அறிமுகப்படுத்தியிருந்தான். மிகவும் சுவையான உணவு வகைகள் அது. எல்லாவற்றிலும் சீஸ் எனப்படும் பால் உணவு சேர்க்கப்பட்டிருந்தது. லசாங்கே உணவவைச் சுவைத்துச் சாப்பிட்டாள்.

“வைஷூ இன்னைக்கு அவுட்டிங்கு பேன்ட் ஷர்ட் போட்டுக்கோ”

அசோக் சொல்ல வைஷ்ணவி கேள்வியாக நோக்கினாள்.

“எல்லா காரணமாகத்தான் சொல்றேன் வைஷூ. சீக்கிரம் கிளம்பு!”

அசோக் சொல்லிவிட்டுச் சென்றான்‌. அதன் பின் ஒரு வேனில் அவர்கள் அனைவரும் லூகானியன் டொமாடைஸ் என்ற இரு மலைகளுக்கு இடையே சுற்றி பார்க்கும் அழகிய நில அமைப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உண்மையில் அங்கு ஒரு சாகச நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. பைட்ராபெட்ரோசா மற்றும் காஸ்டல்மெஸ்ஸோனா எனும் இருமலை கிராமங்களுக்கு இடையே நடுவில் ஒற்றை கேபிளில் தொங்கிக் கொண்டே கீழிருக்கும் மலைகளை 100 கிலோமீட்டர் வேகத்தில் கண்டு களிக்கும் சாகசம் அது. வெறும் ஒற்றை கயிரில் பல ஆயிரம் அடி மேலே அந்தரத்தில் பிடிப்பின்றி தொங்கிச் செல்கையில் 100 கிமீ வேகத்தில் வீசும் காற்று முகத்தில் அறைய உயிர்ப் பயத்தில் கீழிருக்கும் கட்டிடங்களும் எதிரே தெரியும் மலை முகடும் எங்கிருந்து அழகாகத் தெரியும்?! யாமறியேன் பராபரமே!

அசோக் அதைப்பற்றி எதுவும் சொல்லாது வைஷ்ணவியை அழைத்து வந்தான். தனக்கு ஏன் ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் போட்டு வரச் சொன்னான் என்று அறியாதவளாக வைஷ்ணவி வந்தாள். அசோக் இந்த மாதிரி பல முறை சாகசப் பயணத்திற்கு அழைத்து வந்திருக்கிறான். அங்கே கையெழுத்திடுகையில் கூட அசோக்குடன் பயணிப்போம் என எண்ணியிருந்தாள். உண்மையில் அது ஒருவர் மட்டும் செல்லக்கூடியது இதுவரை ஆபத்தான பயணம் எல்லாவற்றிலும் எப்பொழுதும் அவளது கரங்களைப் பிடித்துக் கொள்ள அசோக் இருந்தான்.‌ வழக்கம் போல் இருவர் இருவராக மேலே செல்ல வைஷ்ணவி தனக்கு கொடுக்கப்படும் தற்காப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாட்டியவர்களிடம் புன்னகையுடன் நன்றி சொன்னாள். அவன் அவளது தைரியத்தை மெச்சுவதாக ஏதேதோ பேசினான். ஒன்றும் புரியாவிட்டாலும் அசோக் அங்கிருந்து தலையாட்டச் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டினாள். அசோக்கிற்கும் பாதுகாப்பு உபகரணங்களை பொருத்திக் கொண்டு இருந்தனர்.

அந்த வழிகாட்டி ஏதோ கேட்க அசோக் சற்று தள்ளி இருந்தவன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட வைஷ்ணவியும் உயர்த்திக் காட்டினாள். மறு நொடி அந்த இரு மலைகளுக்கு இடையே அந்தரத்தில் தொங்கிக் கொண்டே 100 கிமீ வேகத்தில் வீசும் காற்று முகத்தில் அறைய

“டேய் அசோக் எருமை!”

அவள் கத்துவது யாருக்கும் கேட்கவில்லை. ஐயோ கடவுளே அவள் கத்துவது அவளுக்கே கேட்டது பின்பு மனம் இலகுவானது சில இடங்களில் மரங்கள் தெரிந்தது சில இடங்களில் அய்யோ மோதி செத்துருவோமா என்று தோன்றியது. அடுத்த சில நொடிகள் அழகாக கீழ் இருந்த வானம் தெரிந்தது. மீண்டும் ஐயோ கடவுளே உயிர் போய்விடுமா என்றது மனம். மாறி மாறி பிழைப்போமா சாவோமா என்றிருந்த மனம் ஒரு எட்டில் மனதிலிருந்த அத்தனை கோபத்தையும் கத்தி விட சொல்லியது.

“டேய் வருண் பரதேசி நாயே! உனக்கு லவ் ஒரு கேடா டா! கோழை! நீ எல்லாம் ஒரு ஆளு! உனக்கு பேதி ஆக! உன்னை..!டேய் அசோக் தடிமாடு நான் மட்டும் பொழைச்சு கீழே வந்தேன் உன்னைக் கொல்லாம விட மாட்டேன். ஐயோ அம்மா! நான் இல்லாம நீ என்ன பண்ணுவ”

அவள் கத்த கத்தவே முகத்தில் மரத்தின் இலைகள் மோத மேலும் கத்தினாள்.

“அவ்ளோ தான் முடிஞ்சுது! முடிஞ்சுது! நான் செத்தேன்!”

அந்த பயணம் எவ்வளவு நிமிடங்கள் என்று அவளால் யூகிக்க முடியவில்லை. ஆனால் தரையில் கால் பட்டதுமே தான் அவள் நிதானத்திற்கு வந்தாள். உயிரோடு இருப்பது பெரும் வரம் என்பதை அவள் அந்த நொடி உணர்ந்துக் கொண்டாள்.

அவள் கத்திக் கொண்டே வர ஒருவர் அவளது கரத்தை பிடித்து நிறுத்த மறுபுற மலை வந்திருந்தது. அவள் இறங்கியதும் பாதுகாப்பு கவசங்களைக் கழட்ட இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியிருக்க அடுத்து அசோக் வந்திறங்கினான். அவன் வந்ததும் அவனது முதுகில் செமத்தியாக அறைந்தவள்.

“கொலைக்காரப் பாதகா! நான் என்னடா பண்ணேன் உன்னை! எதுக்குடா என்னைக் கொலைப் பண்ணப் பார்த்தே!”

வைஷ்ணவி கத்த அசோக் வலியில் கத்தினான்.

“ஏ சீனிப் பட்டாசு வலிக்குதுடி”

“என்னது டியா” என அதற்கும் சேர்த்து நாலு அடி அதிகமாகக் கொடுத்தாள் வைஷ்ணவி. அசோக் அவளது அடிகளுக்கு விலகி தள்ளி ஓடியவன் அவளைக் கைகளால் அமர்த்திப் பேசினான்.

“அதான் நான் பின்னாடியே வந்துட்டேன் ல”

“ஓ அப்படியா?! அப்ப இடையில் கயிறு அந்து கீழே விழுந்திருந்தா?”

அவள் கோபமாகக் கேட்க

“அது ஒன்னும் பிரச்சினை இல்லை அதுக்காக தான் இன்சூரன்ஸ் கையெழுத்து வாங்கினாங்கல”

அசோக் சாவகாசமாக சொல்ல வைஷ்ணவி அருகில் கிடந்தக் கல்லை எடுத்தாள். “உன்னை..” அவள் கத்திக் கொண்டே அவளை துரத்த அங்கிருந்த வெளிநாட்டவர் அவர்களைப் புன்னகையுடன் பார்த்து இருந்தனர்.

அன்று மாலை ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி விடுதிக்கு அழைத்து வந்தான் அசோக். அன்று இரவு வைஷ்ணவி அவனுடன் பேசவே இல்லை. மறுநாள் காலை மீண்டும் அவளுக்கு இத்தாலிய உணவு வகையில் மிகப் பிரபலமான இட்டாலியன் சீஸ் பாஸ்டா வாங்கிக் கொடுத்தான். அசோக் காலை துஃவையல் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல இருப்பதாகச் சொல்ல வைஷ்ணவி வரமாட்டேன் என்பதாகத் தலையசைத்தாள்.
“உன்னை நம்ப முடியாது. என்னை கூட்டிட்டு போய் கொலை பண்ணாலும் கொலை பண்ணுவ”

அவள் கத்த அசோக் சிரித்தான்.

“வைஷு நான்தான் சொன்னேன்ல அது அட்வென்சரஸ் தான் இருக்கும். நீ தானே சரின்னு சொல்லி வந்தே”

அவன் சொல்ல வைஷ்ணவி மீண்டும் சண்டையிட்டாள்.

“அதுக்காக இரண்டு மலைக்கு இடையில ஒத்த கயித்துல என்னை தொங்கவிட்டு போக சொல்லுவியா? அதுவும் அங்க போயிட்டு என்னனு கேட்க கட்டை விரலை காமிச்சு என்னைக் கீழே தள்ளிவிட்டு, உனக்கு என்ன ஒரு சாமர்த்தியம்!”

வைஷ்ணவி பேச,

“சரி சரி கத்தாதே! சீக்கிரம் போய் கிளம்பி வா!”

என்று அசோக் சொல்ல வைஷ்ணவி உள்ளே சென்று கிளம்பினாள். அவனிடம் வெளியே சண்டை இட்டாலும் அவனோடு செல்வதற்கு அவள் மனம் மிகவும் ஆசைப்பட்டது. அரை மணி நேரத்தில் வெளியே சத்தம் கேட்டது.

“வைஷூ லேட் ஆகுது. சீக்கிரம் வா!” அசோக் கத்திக்கொண்டே முன்னே இருந்த கண்ணாடியில் தன் ஆடையைச் சரி செய்துக் கொண்டு இருந்தான்.
சிவப்பு நிற மேல் சட்டையும் அதனுள் வெள்ளை நிற பனியனும் ஒரு பீஜ் கலர் பேண்ட்டும் அணிந்து இருந்தான். அவனுடைய நிறத்திற்கும் உடைத்தேர்வுக்கும் அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது அந்த உடை.

தன் உடையை சரி செய்துக் கொண்டே அவன் நிமிர வைஷ்ணவி கதவை திறந்து வெளியே வர கண்ணாடியில் வைஷ்ணவியின் உருவம் தெரிந்தது. அழகான நீல நிற வீ கட் கவுன் அணிந்திருந்தாள். கை இல்லாத கவுனில் தோள்பட்டையில் ஒரு சிறு கைப்பை தொங்க காதில் வட்ட வடிவ காதணி அவன் பார்வை ஓரிடத்தில் நின்றது. அவள் கழுத்தில் அவன் வாங்கிக் கொடுத்திருந்த தான்சானைட் நெக்லஸ் மின்னியது. அசோக் அந்த கண்ணாடியில் தெரிந்த அவளுடைய பிம்பத்தில் அவள் அழகை ரசித்துக்கொண்டே சற்று நேரம் பார்த்து இருந்தான். வைஷ்ணவி நிமிர இருவரும் ஒருவரை ஒருவர் ரசனை உடன் நோக்கிக் கொண்டனர். சில இடங்களில் மௌனம் அதிகமாக பேசி விடுகிறது. சொல்ல நினைக்காத வார்த்தைகளையும் கூடச் சேர்த்து சொல்ல முடியாத உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தி விடுகிறது. இருவரும் தங்கள் ரசனைகளை அவ்வாறுதான் பகிர்ந்து கொண்டனர் காதலின் முதல் சுவடியை இருவருக்குள்ளும் அது எழுதிவிடப் போகிறதா இல்லை நட்பு என்ற அளவில் அவர்கள் நிறுத்திக் கொள்ளப் போகிறார்களா அன்று இரவு காலம் மீண்டும் ஒரு புதிரை கையில் எடுத்தது.

அன்று க்ரோஷியா நகரத்திலிருந்து ஒரு படகின் மூலமாக ப்ளூ கேவ் எனப்படும் குகைக்கு செல்வதுதான் பயணம். க்ரோஷியா நகரத்தில் பழங்கால கட்டிடங்கள் ரோமானியர்கள் வாழ்வியலின் சாட்சிகளாக அமைந்திருக்க அந்த நகரை சுற்றிப் பார்க்க ஒரு மணி நேரம் இருந்தது. நகரத்தைச் சுற்றி இருந்த கோட்டை மதில்களில் நடந்து கட்டிடங்களைப் பார்வையிட வைஷ்ணவி அசோக்குடன் இணைந்து நடந்துக் கொண்டு இருந்தாள்.

கட்டிடங்களையும் ஒரே அமைப்பில் இருந்த வீடுகளையும் மேலே நடந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர் பயணிகள் அனைவரும் பின்பு நகரத்தின் மத்தியில் இருந்த ஒரு சிதிலமடைந்த திடலில் அமர்ந்திருக்க அடலின் கேப்ரியல் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஏதோ ஒரு பெண் அடலின் முன்னே வந்து உரத்தக் குரலில் பாடினாள். அடலினை கேலியாக அவருடைய குணத்தை பாடலாக அவள் பாட துவங்க அங்கு இருந்த அனைவருமே ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர். ஒரு சமயம் அந்த ஆங்கில வரிகளில் பாடலின் கேள்வியில் சிரிப்பை அடக்க முடியாது அடலின் சிரித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது அந்தப் பாடகி தன் கையில் இருந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று என்ற கிரீடத்தை அடலின் தலையில் மாட்டி மலர்களை நீட்ட அடலின் மகிழ்ச்சியில் முகம் சிவந்து புன்னகையோடு கேப்ரியேலைத் திரும்பிப் பார்த்தார். கேப்ரியல் அடலினை அவரை அணைத்து முத்தமிட்டார். ரெய்ச்சல் லிடியா இருவரும் கைத்தட்ட ஸ்டான் பென்னி கைத்தட்டி ஆராவாரம் செய்தனர். அசோக் அவர்கள் காதலை வேடிக்கை பார்த்து ரசிக்கும் மக்கள் கூட்டத்தோடு சேர்த்து அவர்களின் அந்த பொன்னான பொழுதை ஒரு புகைப்படமாக எடுத்தான்.
வைஷ்ணவி கேப்ரியல் அடலின் இருவரும் காதலை வெளிப்படுத்தும் விதம் கண்டு தன் வாழ்வின் நிகழ்ந்த ஏமாற்றத்தை நினையாது அசோக்கை கண்டாள். அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான். பின் இருவரும் பார்வைகளை வேறுபக்கம் திருப்பிக் கொண்டனர்.

அதன் பின் அனைவரும் படகில் பயணிக்க கடற்கரை வந்தனர்.

அவளது நீல நிற கவுன் காற்றில் பறக்க ஊசலாடும் தன் மனதை கட்டுப்படுத்தி பார்வையை வேறுபக்கம் திருப்பினான் அசோக்.

“அசோக்!” வைஷ்ணவி அழைக்க மீண்டும் அவள் பக்கம் திரும்பினான்.

“இதைக் கொஞ்சம் பிடி”

வைஷ்ணவி அவளது கைப்பையைக் கொடுத்து விட்டு ஹைஹீல்ஸைக் கழட்டி கையில் வைத்து விட்டு நடக்கத் தொடங்கினாள். அசோக் அவளது கைப்பையை மீளவும் அவளிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டு கடற்கரை மணலில் பாதங்கள் புதைய அவனது தோள்பட்டையைப் பிடித்து நடந்தாள். அசோக்கின் இதயம் படபடத்தது.

அன்று காலையில் இருந்து அவன் மனம் படும் அவஸ்தை புரியாது வைஷ்ணவி அவனிடம் ஏகத்திற்கு உரிமை எடுத்துக் கொண்டு இருந்தாள். உண்மையில் அசோக்கின் பதட்டம் அவளுக்கும் புரிந்தது. தன் மனம் போல் இவனும் தடுமாறுகிறானா என்ற கேள்வி அவளுள் எழுந்து இருந்தது.

இத்தாலி நகரத்தில் ஒரு பெரிய யாக்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். நீல நிறக் கடலில் பயணம் தொடங்கியது வைஷ்ணவி அந்த சொகுசு கப்பல் முன்னே இருந்த கம்பிகளில் கைகளை ஊன்றி நின்றிருந்தாள். அவளுக்கு அந்தமான் பயணம் நினைவு வந்தது. அப்பொழுதெல்லாம் அசோக்கிடம் இந்த தயக்கம் இல்லை அவனை ஏகத்துக்கு சண்டையிட எப்பொழுதும் பேசிக்கொள்ள ஒரு உரிமை இருப்பதாக உணர்ந்தாள். ஆனால் இன்று இப்பொழுது அவளது தயக்கம் பல கேள்விகளை எழுப்பியது. இடைவெளி அதிகமானதா குறைந்ததா அவளுக்கே புரியவில்லை அவளது மனதும் அவளை குழப்பியது.

‘நான் அசோக்கை விரும்புகிறேன் இல்லை அசோக்கின் நட்பு வேண்டும் என காயப்பட்ட என் மனது தேடுகிறதா?’ புரியாது நின்றிருந்தாள் வைஷ்ணவி.

அந்த கப்பல் செல்ல இரு பெரியப் பாறைகள் சேர்ந்திருக்க நடுவில் அழகான ஆர்ச் போன்ற ஒரு வடிவம் இடைவெளியாக இருந்தது. அசோக் அவளிடம் தயக்கம் காட்டி தள்ளி இருக்க தன் அருகே யாரோ நிற்பது போல் இருக்க வைஷ்ணவி திரும்ப அடலின் நின்றிருந்தார்.

“என்ன வைஷூ? ரொம்ப யோசனையில் இருக்க?”

அடலின் கேட்க வைஷ்ணவி புன்னகைத்தாள்.

“ஒன்னுமில்ல. நீங்களும் காப்ரியேலும் எப்படி சந்திச்சீங்க?”

வைஷ்ணவி பதில் சொல்லாது மீண்டும் ஒரு கேள்வி கேட்க அடலின் எதிரே தெரிந்த பாறைகளை பார்த்துக் கொண்டு பேசினார்.

இரு பாறைகளின் இடையே பெரும் துளை இருக்க அதன் வழியே மறுபுறம் கடல் தெரிந்தது.

“இதே மாதிரி ஒரு கப்பல் பயணத்தில்”

அவர் சொல்ல வைஷ்ணவிக்கு அசோக்கின் முகம் வந்துப் போனது.

“என் கணவரை இழந்த சமயம் பைத்தியம் பிடிச்சது போன்ற மனநிலைல என்னை முதன் முதலில் சிரிக்க வைத்தது கேப்ரியல் தான். இப்ப மாதிரியே எப்பவும் கேரிங். அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும்” அடலின் சொல்லி முடிக்க வைஷ்ணவி

“நீங்க ..” என மேலும் கேட்க முடியாது திணற அடலின் பேசினார்.

“ஆமா என் முதல் கணவர் சாரோன். ரொம்ப ரொம்ப அப்யூஸிவ் என் அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் ஒரு விபத்தில் இறந்துப் போக காப்ரியலை ஒரு பயணத்தில் சந்திச்சேன். உறவுகளில் காதலில் நம்பிக்கை இல்லாத என்னை அவனோட காதலால் மனம் மாற்றினான். அவன் என் வாழ்வின் மொத்த அர்த்தத்தையும் தாங்கி நிற்பவன்”

அடலின் சொல்ல வைஷ்ணவி தன் மனதிற்குள் எழுந்த உணர்வுகளை விழிகளில் பிரதிபலித்து நின்றாள்.

“நான் உன்னிடம் என்னைப் பார்த்தேன். என்னைப் போலவே ஏதோ ஒரு வலியை மறைக்க புன்னகையையும் கோபத்தையும் முகத்தில் அப்பி நிற்கும் இருபது வருடத்திற்கு முந்தைய என் பிம்பத்தைப் பார்க்கிறேன் அப்புறம்..”

அடலின் சொல்லிக் கொண்டே வந்தவர் இடைவெளி விட வைஷ்ணவி அவரை நோக்கினாள்.

“எனக்கு கேப்ரியலாக அசோக் தோன்றினான். எதுவாயினும் உன் மனது என்ன சொல்லுதோ அதை எந்த கடந்த காலத்தின் அனுபவத்தை வைத்து தீர்ப்பிடாது கேள்”

அடலின் சொல்ல அந்த கப்பல் கரை வந்திருந்தது.

எல்லோரும் இறங்க வைஷ்ணவியின் அருகில் வந்து நின்றான் அசோக். கடற்கரை காற்றில் அவள் கற்றைக் குழல் பறக்க சற்று நேரம் அந்த காற்றை சுவாசித்தபடி அவள் நின்று இருக்க அசோக் அவள் அருகே நின்றான். அவனது சீனிப் பட்டாசு ஏனோ எதுவும் பேசாது அமைதியாக நின்றிருந்தது. வைஷ்ணவியோ காலையிலிருந்து அவனிடமும் அதே தயக்கத்தை உணர்ந்தாள். இருவருக்கிடையில் குறுகிய இடைவெளி அதிகமானதா இல்லை இடைவெளி குறைந்ததால் இதயங்கள் தடுமாறுதா என்ற குழப்பம் நிலவியது.

அங்கிருந்து அனைவரும் படகில் அழைத்துச் செல்லப்பட்டனர். ப்ளுக்கேவ் என்னும் இடத்திற்கு அடலின் கேப்ரியல் தம்பதியர் காதலுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்வதை அனைவருமே ரசித்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு பெரிய குகையின் உள்ளே கீழே பரிசல் போன்று அந்த படகு உள்ளே செல்ல அந்த குகையில் உள்ளே கீழிருக்கும் இடம் நீல நிறத்தில் ஜொலிக்கத் தொடங்கியது. வைஷ்ணவிக்கு நீல நிறத்தில் ஜொலிக்கும் அந்த இடம் அந்தமான் தீவில் கண்ட பயோலூமினன்ஸை நினைவுப் படுத்தியது. அந்த பாறை கவிழ்ந்து கிடந்த கூடை போல் உள்ளே வெற்றிடமாக இருக்க பாறையின் மேலே உள்ள சிறு துளை வழியே சூரிய வெளிச்சம் குகையில் நீரின் வெளிச்சம் நீல வண்ணத்தில் பிரதிபலித்தது. அந்த நொடி அதன் அழகு இயற்கை தான் தன்னுள் எத்தனை அழகை ஒளித்து வைத்திருக்கிறது. இதைத் தேடித் தேடித் தோற்காமல் மனம் ஏன் பணம் பொருள் ஆசை என அலைந்து தொலைகிறது. வைஷ்ணவி அசோக்கை பார்க்க அசோக் அவளது கரங்களைப் பிடித்தான் வைஷ்ணவி உணர்ச்சி மிகுதியில் அவனிடம் பேசினாள்.

“அசோக் நான் இங்க வர்றதுக்கு முன்னாடி இவ்வளவு அழகையும் இவ்வளவு சந்தோஷத்தையும் இந்த பயணம் கொடுக்கும் நினைக்கல. உன் கூட சண்டை போடாம இருந்திருந்தா உன்னை பார்க்காம இருந்திருந்தா நான் இந்த சந்தோஷங்களை அனுபவிச்சு இருக்கவே மாட்டேன் தேங்க்ஸ் அசோக்”
அவள் சொல்ல முதல் முறையாக அவளிடம் தனது எல்லையை மீறி ஒரு காரியத்தைச் செய்தான். அவள் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். இதுதான் இந்தப் பயணத்தில் அவனிடம் அவள் கண்ட முதல் தடுமாற்றம்.

 

கவிதை

இமை மீறலில்
இதயம் நுழைந்து என்
இயல்பைத் திருடுகிறாய்!
சலனங்கள் சேர்த்தே
சதிராடுகிறாய்!
காதல் சதிராடுகிறாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!