பிரச்சனைகள் அனைத்தையும் தீர முடித்து வைத்துவிட்ட பின்னரே அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டுமோ அத்தனையையும், திருநாவுக்கரசு மிச்சம் வைக்காது எண்ணி கொடுத்தார். சண்முகம் அவரை நன்றியுடன் பார்த்து கொண்டிருந்தார்.
Advertisement
வெண்பாவிற்கு இன்னும் பயம் தெளியவில்லை. அவள் ஒரு ஓரமாக வீட்டின் தூணை இறுக பிடித்தப்படி நின்றிருந்தாள்.
அவளருகே வந்த வெற்றி, அவள் தலையை கோதி கொடுத்து,
“ரொம்ப பயந்திட்டியா?” என கேட்க, பயம் தெளியா முகத்துடன், ஆமாம் என தலையாட்டினாள் வெண்பா. அவன் அப்படி கேட்கும் பொழுதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் சரேலென்று அவள் கன்னத்தில் வழிந்தது.
Advertisement
“ச்சூ.. அழ கூடாது. மாமா இருக்கேன்ல. நான் பார்த்துகிறேன்” என அவள் கண்ணீரை துடைத்து விட்டு சிறு குழந்தைக்கு சொல்வது போல அவளுக்கு ஆறுதல் சொல்ல, அதற்கும் சரியென்று தலையாட்டினாள் வெண்பா.
Advertisement
அவர்களை இனி அந்த ஊரிலே இருக்க வைக்க, வெற்றிக்கும், திருநாவுகரசிற்கும் விருப்பமில்லை.
இருவரும் தங்களுடனே தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். சண்முகத்திற்கும் தற்பொழுது வேறு வழியும் தெரியவில்லை. மனைவியையும் மகளையும் பாதுகாக்க தவறிவிட்டதை எண்ணி அவர் மிகவும் மனமுடைந்து போயிருந்தார்.
காரில் வரும்பொழுது கூட, விடமால் அழுது கொண்டே தான் பயணத்தை மேற்கொண்டாள் வெண்பா.
காரை ஓட்டிக்கொண்டே கண்ணாடி வழியே அவனை பார்த்து கொண்டே வந்தான் வெற்றித்திருக்குமரன்.
நேராக பெரிய வீட்டிற்கு அவர்களை அழைத்து வர, அதுவரை அவர்களுக்காக காத்து கொண்டிருந்த நாச்சியார் அவர்களை கண்டதும் கோபத்துடன், எழுந்து உள்ளே சென்று விட்டார்.
ஏற்க்கனவே நொந்து போயிருந்த கனகவல்லிக்கு, அவரின் இந்த கோபம் இன்னமும் வேதனையை தந்தது.
மூவரையும் உண்ண அழைத்து, விசாலாட்சி பரிமாற, தொண்டை குழியில் உணவு கூட இறங்கவில்லை மூவருக்கும்.
அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார் திருநாவுக்கரசு.
மூவரும் அறைக்குள் வந்ததும் ஆளுக்கு ஒரு திசையை பார்த்து அமர்ந்துகொண்டு நடந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருந்தனர்.
சண்முகம் விட்டதை பார்த்தப்படி அருகில் அமர்ந்திருந்தார். கடவுள் தங்களுக்கு இத்தனை பெரிய சோதனையை கொடுத்திருக்க வேண்டாம் என்பது தான் அவரின் எண்ணமாக இருந்தது.
அறைக்கு சென்று படுத்து கொண்டிருந்த வெற்றிக்கு ஏனோ மனம் கேட்கவில்லை. திரும்ப திரும்ப வெண்பா அழுது கொண்டிருந்த காட்சியே நினைவிற்கு வர, உடனே சட்டையை போட்டு கொண்டு, அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
மூவரும், உறங்காமல் கலங்கி போய் உட்கார்ந்திருப்பதை பார்த்தவன்,
“மாமா, என்ன இது? ஏன் நடந்து முடிஞ்சதையே நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க. நாங்களாம் இல்ல. போய் தூங்குங்க” என ஆறுதல் கூற, சண்முகமோ,
“சரியான நேரத்தில், நீங்க மட்டும் வரலைனா என்ன நடந்திருக்கும்னு நினைச்சு பார்க்கவே பயமே இருக்கு வெற்றி. தெய்வம் போல வந்து எங்களை மீட்டு கொண்டு வந்து இருக்கீங்க. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல வெற்றி” என அவர் கையெடுத்து கும்பிட்டு தன் நன்றியை தெரிவிக்க,
“ஐயோ மாமா, நான் உங்களை விட வயசில சின்ன பையன் என்னை போய் கும்பிட்டுட்டு. கையை இறக்குங்க” என அவர் கைகளை இறக்கி விட்டான் வெற்றி.
“உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் தானே பார்க்கணும். எனக்கு நீங்க என்ன அந்நியமா? நீங்க என் சொந்தம் மாமா. அத்தை எனக்கு இன்னொரு அம்மா போல. உங்களை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என் கடமை இல்லையா. அதனால் எதையும் யோசிக்காம தூங்குங்க. ரெண்டு மூணு நாள் போகட்டும் அப்புறம் அடுத்து என்னன்னு பார்ப்போம் ” என ஆறுதல் கூற, அவரும் சரியென்று தலையாட்டினார்.
அவன் உள்ளே நுழைந்ததும், அன்னையின் மடியில் படுத்திருந்தவள், அவனை கண்டு பதறி எழுந்து அமர்ந்து கொண்டாள். சண்முகத்திடம் பேசி முடித்தவன், அவளின் மீது பார்வையை செலுத்தி, அவளின் தலையை வருடி கொடுத்தவன்,
“இன்னும் பயம் போகலையா உனக்கு? என கேட்க, வெண்பாவோ அமைதியாக இருந்தாள்.
“சரி என் கூட வா” என அவளை அழைக்க, அவளோ எங்கே என வெற்றியை கேள்வியாக பார்த்தாள்.
“வா, அப்படியே தோட்டத்து பக்கம் போய்ட்டு வருவோம்” என அவன் மீண்டும் அழைக்க, வெண்பாவோ, தாய் தந்தையை பார்த்தாள்.
“போய்ட்டு வா மா. வந்ததிலிருந்து அழுத்துட்டே இருக்க. வெளியே போய்ட்டு வந்தா மனசு கொஞ்சம் லேசா இருக்கும்” என கனகவல்லி அனுப்பி வைக்க, அவளும் வெற்றியுடன் புறப்பட்டாள்.
வீட்டின் பக்கவாட்டில் உள்ள பெரிய தோட்டத்திற்கு தான் அழைத்து வந்தான் வெற்றி.
இரவின் இருளில், லேசான குளிரில், நிலா வெளிச்சத்தில், தோட்டத்தின் மலர்கள் ரம்மியமாக காட்சியளித்து கொண்டிருந்தன.
அதனை கண்டதும், வெண்பாவிற்கு பிடித்து போயிற்று. கனமான மனநிலை, சட்டென்று மாறிய வானிலை போல லேசாக மாறியது அவளுக்கு.
“மாமா, இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு. இங்க பாருங்களேன், முல்லை கொடியில் எவ்வளவு பூ பூத்திருக்குனு. வானத்தில் இருக்கிற நட்சத்திரமெல்லாம் இங்க இருக்கிற போல இருட்டில் அவ்வளவு அழகா தெரியுதுல”
என அவள் மற்றதை மறந்து, தோட்டத்தின் அழகினை வர்ணித்து பேசிக்கொண்டே நடக்க, வெற்றியோ புன்னகைத்து கொண்டான்.
சிறிது நேரம் தோட்டத்தை சுற்றி வந்தவர்கள்,
“சரி, மீதி பகலில் வந்து பார்க்கலாம். நேரமாச்சு, போய் தூங்கலாம் சரியா?” என வெற்றி அவளை அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
“போய் தூங்கு. காலையில் பேசிப்போம்” என்று அவன் அவனறைக்கு சென்று விட, வெண்பாவும் அறைக்குள் வந்து படுத்து கொண்டவள் சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனாள்.
இரண்டு நாட்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை சண்முகமும், கனகவல்லியும். யாருடைய முகத்தை பார்த்தப்பதற்கும் அவர்களுக்கு சங்கடமாக இருந்தது.
அதிலும் நாச்சியாரின் குரல் வேறு அவ்வப்பொழுது கேட்டு கொண்டே இருக்க, அவரை எதிர்கொள்ளவே பயந்தார் கனகவல்லி. ஏதேனும் மனம் சங்கடப்படும்படி பேசிவிட்டால். அதுவும் அவரை ஏதாவது சொன்னால் கூட தாங்கி கொள்வார். கணவனை ஏதாவது சொன்னால் அவரால் எங்கனம் தாங்க முடியும்? அதற்கு பயந்து உள்ளேயே இருந்தார்.
சண்முகத்திற்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? எப்படி குடும்பத்தை நடத்துவது என்ற யோசனையிலேயே அறையை விட்டு வெளிவரவில்லை.
வெண்பா மட்டும் அவ்வப்பொழுது வெளியே வந்து, விசாலாட்சியிடம் பேசுவதும், அவருக்கு ஏதாவது உதவி செய்வதும் என்று இருப்பாள்.
ஒரு வாரம் கழிந்த நிலையில், திருநாவுக்கரசு, சண்முகத்தை தனியே அழைத்து பேசினார். உடன் வெற்றியும் இருந்தான்.
“மாப்பிள்ள, முடிஞ்சதையே நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காதீங்க. இனி அடுத்து என்னன்னு பார்ப்போம்.
உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைனா, நீங்க இங்கேயே இருக்கலாம். நீங்களும் தங்கச்சியும் இங்கேயே இருக்கிறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரே குடும்பமா நாம வாழலாம்.
நமக்கு ஏகப்பட்ட தொழில் இருக்கு. அதில் ஏதாச்சும் ஒன்னை நீங்க பார்த்துக்கோங்க”
என திருநாவுக்கரசு கூற, சண்முகமோ அதிர்ந்து அவரை பார்த்தார்.
“அப்பா, நம்ம அரிசி குடோனை மாமா கிட்ட கொடுக்கலாம் ப்பா. அதில் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கு” என உடன் வெற்றியும் கூற, சண்முகம் அவர்கள் முன் கண்கலங்கி அமர்ந்திருந்தார்.
“நீங்க கொடுத்த காசை எப்படி திருப்பி கொடுக்குறதுன்னே தெரியாம, நான் உட்கார்ந்து இருக்கேன் மச்சான். இதில் இன்னமும் எனக்கு செய்யணும்னு எப்படி உங்களுக்கு தோணுதுன்னே தெரியல. உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க” என அவர் கண் கலங்கி கொண்டே கூற, திருநாவுக்கரசோ,
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நன்றி அது இதுன்னு பெரிய வார்த்தைலாம் சொல்லாதீங்க. யாருக்கு செய்யுறோம். எங்க வீட்டு பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தானே! அதுவும் நீங்க எப்படின்னு எங்களுக்கு தெரியதா?!!
எவ்வளவு நேர்மையான மனுஷன் நீங்க. அப்பா அதப்பார்த்து தானே என் தங்கச்சியை கட்டி கொடுத்தார். உங்களுக்கு தொழிலில் தான் நஷ்டம் வந்து இருக்கே தவிர வாழ்க்கையில் இல்லையே!!
என் தங்கச்சியை எவ்வளவு நல்ல பார்த்துட்டு இருக்கீங்கனு எனக்கு தெரியும். இத்தனை கஷ்டத்திலும், தங்கச்சி கிட்ட உங்க அம்மா வீட்டில் போய் பணம் வாங்கிட்டு வானு ஒருதடவையாயவயது சொல்லி இருப்பீங்களா? நாங்களே வந்து கொடுத்தபோ கூட வேண்டாம் தானே சொன்னீங்க. அந்த நேர்மை யாருக்கு வரும் சொல்லுங்க. எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு செய்யுறதில் எனக்கு சந்தோஷம் தான்”
என அவர் நீளமாக பேச, சண்முகத்திற்கு அத்தனை நெகிழ்ச்சியக இருந்தது.
“போதும் மச்சான், இது போதும் எனக்கு. என்னை நீங்க தப்பா நினைக்கல என்பதே போதும். இன்னமும் செஞ்சு என்னை கடன்காரன் ஆக்காதீங்க.
என்னதான் சொந்தமா இருந்தாலும், ஓரடி தள்ளி இருக்கிறது தான் நல்லது. அப்போ தான் காலம் முழுக்க உறவுகள் பலப்படும். அதனால் ஒரே வீட்டில் நாங்க இருக்கிறது அவ்வளவு சரியா படல, அதனால் இதே ஊரில் வேற வீட்டில் இருந்தா நல்ல இருக்கும்.
அதே போல, உங்க தொழிலில் நான் பார்க்கிறது தப்பு. அது நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு உருவாக்கினது. நான் நோகாம அதை எடுத்துகிறது என்ன விதத்தில் நியாயம்? அதனால் எனக்கு எதுவும் வேண்டாம். நான் வேற ஏதாச்சும் வேலைக்கு போய் என் குடும்பத்தை பார்த்துகிறேன்”
என அவர் திட்டவட்டமாக மறுத்து விட, தற்பொழுதும் அவர் குணத்தால் உயர்ந்து நின்றார்.
அதன் பின் எவ்வளவு கூறியும் அவர் முடிவிலிருந்து அவர் மாறவே இல்லை. அவர் தான் அப்படி இருக்கிறார், சரி தங்கையிடம் பேசுவோம் என திருநாவுக்கரசு கனகவல்லியிடம் பேச, அவரும் கணவர் எவ்வவழியோ தானும் அவ்வழியே என்று கூறிவிட்டார்.
இந்த விஷயத்தை திருநாவுக்கரசு தாயிடம் பகிர்ந்து கொள்ள, அவரோ சண்முகம் இல்லாத நேரமாக பார்த்து, கனகவல்லியை சந்தித்தார்.
இங்கு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாத தாய் தன்னை தேடி வந்திருப்பதை எண்ணி சந்தோஷப்பட்டவர், அவரை அழைத்து அருகில் அமர்ந்து பேச ஆரம்பிக்க, நாச்சியாரோ எடுத்த எடுப்பிலே,
“இன்னும் இந்த மனுஷன் கூட வாழ தான் வேண்டுமா நீ?” என்று கேட்க, ஒன்றும் புரியாது பார்த்தார் கனகவல்லி.
“என்னடி அம்மா, ஊர் உலகத்தில் இல்லாததையா சொல்றேன். வாழ வைக்க முடியாத மனுஷன் கூட எவ்வளவு தான் நீ கஷ்டப்படுவ. அதான் விட்டுட்டு வர சொல்றேன்.
அந்த மனுஷன் கடன் வாங்கினத்துக்கு நீங்க ஏன் கூட சேர்ந்து கஷ்டப்படனும். ஒழுங்கா அந்த மனுஷனை எங்கயாச்சும் போய்க்க சொல்லு. நீயும் பேத்தியும் இங்கேயே இருங்க” என முடிவாக கூற, கனகவல்லி தாயை வெறுப்புடன் பார்த்தார்.
“என்னமா பேசுற நீ? அவர் என் புருஷன் மா. அவரை விட்டுட்டு எப்படி நான் வருவான். அந்த மனுஷனே நொந்து போய் இருக்கார். இந்த நேரத்தில் நான் வேற மேலும் நோகடிக்கணுமா. இந்த மாதிரியெல்லாம் பேசதீங்க மா. நான் அவரை விட்டு எங்கேயும் வர மாட்டேன்” என முடிவாக கூற, நாச்சியாருக்கு கனகவல்லி மீது அப்படியொரு கோபம் வந்தது. இனி ஜென்மத்துக்கும் பேச போறதில்லை என முடிவாக கூறிவிட்டார்.
சண்முகம் விருப்பத்திற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை திருநாவுக்கரசு. இந்த நிலைமை அவருக்கு வந்திருந்தாலும் அவரும் இந்த முடிவை தானே எடுத்திருப்பார்.
அதனால் இரண்டு தெரு தள்ளி இருந்த ஒரு வீட்டை சிறிய வாங்கி அவர்களை அங்கு தங்க வைக்க, வீட்டை கூட அவர்களது பெயரில் வாங்க விடவில்லை சண்முகம்.
“உங்க பெயரிலே வாங்குங்க. நான் சம்பாரிச்சு வாங்குனாதான் அது என் சொத்து. நீங்க வாங்குனா அது உங்க சொத்து தான். நாங்க அதில் குடி இருந்துகிறோம். மாச, மாசம் வாடகை கொடுத்துறேன்” என்று கூறிவிட்டார். அவரே வேறொரு இடத்தில் சம்பளத்திற்கு வேலையும் தேடி கொண்டார்.
புது வீட்டிற்கு புறப்படும் பொழுது தாயிடம் சொல்லி விட்டு செல்லலாம் என கனகவல்லி கூறிவிட்டு செல்ல, அவரோ
“அவனை நம்பி போற, நடுத்தெருவில் தான் நிக்க போற பாரு” என்று அப்பொழுதும் மனம் சங்கடப்படும்படி தான் பேசினார்.
மூவரும் புது வீட்டிற்கு குடியேறி வருடங்கள் பல ஓடிவிட்டன.
பெரிய வீட்டில் இருந்த பொழுது, வெண்பா விசாலாட்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததால், இங்கு வந்த பின்பும் அவளை அழைத்து கொள்வார் விசாலாட்சி. அதிலிருந்து, அங்கு தினமும் செல்வதே அவள் வாடிக்கையாகி போனது. கனகவல்லியும்,
“நமக்கு பெரிய உதவி பண்ணி இருக்காங்க. அதனால் அங்கே போய் உன்னால் முடிஞ்சதை செஞ்சு கொடு வெண்பா. நாம என்னைக்கும் நன்றி மறந்தவங்களா இருக்க கூடாது.
அங்கே தினமும் போறதாலா, ரொம்ப உரிமை எடுத்துக்காதே. எல்லார் கிட்டயும் அளவோடு பேசு, பழகு. யாரும் உன்னை பத்தி தப்பா சொல்ல கூடாது. அதுபோல நீ நடந்துகனும்”
என அறிவுரை கூறிய பின்னரே அங்கு அனுப்பினர். தாய் சொன்னபடி தான் வெண்பாவும் நடந்து கொண்டாள்.
முன்பு போல, யாரிடமும் அவள் உரிமை எடுத்து கொள்வதில்லை. குறிப்பாக வெற்றியிடம். அவள் வெற்றியிடம் ஏதாவது வேண்டுமா? என கேட்டாளே நாச்சியார் அவளை முறைத்து பார்ப்பார்.
நாள் போக போக, அவரின் அந்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தது அவளுக்கு. அதனால் இன்னமுமே ஒதுங்கி கொண்டாள்.
ஒருமுறை வீட்டில் தனியாக இருந்த பொழுது தான், கனகவல்லி, தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்கது கால் வைத்து வழுக்கி விழுந்து விட, அப்பொழுது ஏற்பட்டது தான் அவருக்கு அந்த காலின் வீக்கம்.
எலும்பு உடைந்து, நரம்புகள் சுற்றி கொண்டதில் அவரால் நடக்க முடியாமல் போனது. அப்பொழுதும் மருத்துவ செலவிற்கு திருநாவுக்கரசும், வெற்றியும் தான் பணம் கொடுத்தனர்.
சண்முகம் தன்னால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன் பின்பு தான் அவரால் சரியாக முடியவில்லை. கொஞ்ச நேரம் நின்றாலும் கால் வீங்கி வலி எடுக்கும்.
தாயையும் பார்த்து கொண்டு, பெரிய வீட்டில் வேலையையும் சரிவர செய்து கொண்டிருக்கிறாள் வெண்பா. நாச்சியார் சொன்ன குற்றசாட்டு அவளையும் பெருமளவில் பாதித்து தான் இருந்தது. இருந்தாலும் அதையே நினைத்து கொண்டிருப்பதால் என்ன பயன்? சிறிது நேரம் தான் கண்யர்ந்து இருப்பாள். திடுமென முழிப்பு வந்து அன்னையை பார்க்க, அவரோ புகைப்படத்தை பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவரை தொந்தரவு செய்யாது சமையலை கவனித்தாள்.
கனகவல்லி மருந்து மாத்திரைகளை உண்ண வேண்டுமே!! தாயை கவனிப்பது தானே அவளின் தலையாய வேலை. மளமளவென்று உணவை தயாரித்து முடித்தவள், பழைய நினைவுகளில் ஊன்றி இருந்த அன்னையின் தோள் தொட்டு நனவுலகத்திற்கு கொண்டு வந்தாள்.
“அம்மா சாப்பிடுங்க. அம்மாச்சி சொன்னதையே நினைச்சு வருத்தப்படாதீங்க” என அவருக்கு உணவினை கொடுக்க, கனகவல்லியும் மகள் கொடுக்கும் உணவினை தவறாமல் உண்ணார்.
அவருக்காக பார்த்து பார்த்து செய்யும் மகளை கஷ்டப்படுத்த அவரால் முடியாதே!
“நீயும் சாப்பிடு வெண்பா” அந்த உணவனையே அவளுக்கு எடுத்து கனகவல்லி ஊட்ட, மறுக்காமல் வாங்கி கொண்டாள் வெண்பா. அவளுக்கும் அன்னையை கஷ்டப்படுத்த முடியாதே!
முடிந்த விஷயத்தை பற்றி மீண்டும் பேசாது, இருவரும் உணவினை உண்டு கொண்டிருக்க,
“அத்தே.., தமிழ்., என அழைத்தப்படியே அவர்களது இல்லத்திற்குள் நுழைந்தான் வெற்றித்திருக்குமரன்.