Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

உறவாடும் கனவே தொடருதே – அத்தியாயம் -6

அத்தியாயம் -6

         திடுமென வந்து நின்றவனை கண்டு திகைத்து,  சில வினாடிகளுக்கு இருவரும் அப்படியே இருந்தனர். நிச்சயமாய் இருவரும் வெற்றியை இங்கு எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் தற்பொழுது தான் அத்தனை பெரிய பிரச்சனை நடந்து முடிந்திருக்க, அதற்கு மறைமுக காரணமான அவனே வந்து நிற்பதை கண்டு உறைந்து போயினர் கனகவல்லியும், வெண்பாவும்.

அவர்களின் அதிர்ந்த முகத்தை கண்டு குழம்பியவன்,



Advertisement

“என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் இப்படி பார்க்கிறீங்க?” என யதார்த்தமாக கேட்க, அப்பொழுது தான் இருவரும் மீண்டனர். ஒருவரையொருவர் திரும்பி பார்த்து கொள்ள, வெற்றியோ,

“என்ன அத்தே, வீட்டுக்கு வந்து இருக்கேன் உள்ள வானு கூப்பிட மாட்டீங்களா?” என அவனே கேட்டதும் தான், கனகவல்லிக்கும், வெண்பாவிற்கும் உரைத்தது.

“வா.. வா ப்பா,  வெற்றி” என கனகவல்லி அழைக்க, வெண்பாவும் “வாங்க” என மெதுவாக அழைத்தாள்.

Advertisement

உள்ளே நுழைந்தவன், நேராக கனகவல்லியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

Advertisement

“என்ன அத்தே? எப்படி இருக்கீங்க? இப்போ கால்வலி எப்படி இருக்கு?”

என அக்கறையாக விசாரிக்க, அவனிடம் பேசலாமா? வேண்டாமா? என குழப்பத்துடனே அவரை பார்த்தார் கனகவல்லி.

“சொல்லுங்க அத்தே, இப்போ கால் எப்படி இருக்கு?” என அவன் மீண்டும் கேட்டதும்,

Advertisement

“ஆன்.. இப்போ பரவாயில்ல வெற்றி. மாத்திரை போடுறதால வலி அவ்வளவா இல்ல. என்ன கொஞ்ச நேரம் நின்னா தான் தான் கால் வீங்கி வலி எடுக்குது” என தயங்கி தயங்கி அவனுக்கு பதில் கூறினார் கனகவல்லி.

“அப்போ நிறைய நேரம் நிக்காதீங்க அத்தே. ரெஸ்ட் எடுங்க” என்றதும் சரியென்று தலையாட்டி வைத்தார் அவர்.

“தமிழ்.., நீ  அத்த கிட்டயிருந்து போன் வந்ததும் பதறி போய் கிளம்பினதா, வள்ளி அக்கா சொன்னாங்க. ஏதாச்சும் பிரச்சனையா? எதுக்கு வந்த?”

என வெண்பாவை விசாரிக்க, அவளோ அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.

நாச்சியார் வந்து தன்னை பற்றி தவறாக பேசி சண்டை போட்டார் என்றா அவனிடம் கூற முடியும்? பிரச்சனை இன்னும் பெரிய பிரச்சனையாக தான் வளரும் என்பது அவளுக்கு தெரியாதா!!

“அது.. அதுவந்து…” என என்ன சொல்வது என்று தெரியாது அவள் விழிக்க,

“எனக்கு கொஞ்சம், கால் வீங்கினா மாதிரி இருந்தது வெற்றி, அதான்.. அவளை வர சொன்னேன்” என கனகவல்லி முந்திக்கொண்டு சமாளிக்க, இருவரையும் சந்தேகமாய் பார்த்தான் வெற்றி.

“வேற ஒன்னுமில்லையே, என்கிட்ட ஏதாச்சும் மறைக்கிறீங்களா?” என அவன் கேட்க,

“அதெல்லாம் இல்ல பா. உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு? உண்மையாலுமே, கால்வலி வந்துடுச்சு அதான் வெண்பாவை வர சொன்னேன்” என கனகவல்லி மீண்டும் அதையே கூறினார்.  

“ஆனால், உங்க ரெண்டு பேர் முகமே சரியில்லையே! ஏதோ அழுத போல இருக்கு. அதனால் தான் கேட்கிறேன்” என அவனுக்கு சந்தேகம் தீர்ந்தப்பாடில்லை.

“நாங்க.., நாங்க ஏன் அழ போறோம்? ஆமாம், என்ன விஷயம் வெற்றி? திடீர்னு வந்து இருக்க?” என கனகவல்லி பேச்சை மாற்ற, அவனோ,

“நான் மட்டும் எங்க வந்தேன்?” என கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே சண்முகம் வீட்டினுள் நுழைந்தார்.

“இதோ மாமாவே வந்துட்டாரே!. நான் பக்கத்து ஊருக்கு வேலை விஷயமா போய் இருந்தேன். பார்த்தா, மாமாவும் அங்க வந்திருந்தார். அதான் வேலை முடிஞ்சதும் ரெண்டு பேரும் ஒன்னா வந்துட்டோம். அவர் பக்கத்து வீட்டுக்காரரோட பேசிட்டு வரேன் சொன்னார்” என வெற்றி கூறியதும், சண்முகமும்,

“ஆமாம் கனகா, வெற்றியே நம்ம வீட்டுக்கு வரதா தான் இருந்தானா? வாங்க ஒன்னாவே போலாம் சொல்லி கூட்டிட்டு வந்துட்டான்” என அவர் விளக்க, ‘ஐயோடா’ என்றிருந்தது கனகவல்லிக்கு.

“ஏன், ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க? உங்க முகமே சரியில்லையே!!” என சண்முகமும் கேட்க, இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“அதைத்தான் நானும் கேட்டேன் மாமா. ஒன்னுமில்ல சொல்லி சமாளிக்கிறாங்க என்னன்னு கேளுங்க” என கூட வெற்றியும் கூற, தாயும் மகளும் திருதிருவென முழித்தனர்.

“என்னங்க நீங்க, எங்க முகம் எப்பவும் போல தான் இருக்கு. எனக்கு இன்னைக்கு கால்வலி கொஞ்சம் அதிகமாகிடுச்சு அதான் வலியில் முகம் அப்படி இருக்கு வேற ஒன்னும் இல்ல” என கனகவல்லி எதையோ கூறி சமாளித்தார்.

உணவு தட்டு கீழே இருப்பதை கண்டு இருவரும் உணவு உண்டு கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்ட வெற்றி,

“ஐ, அத்தே இன்னைக்கு தமிழ் வச்ச கடுகு குழம்பா? கூடவே அப்பளமுமா?. செமையா இருக்குமே!! எனக்கு பார்த்ததும் பசிக்க ஆரம்பிடுச்சு. தமிழ் எனக்கும் சாப்பாடு போடு”

என அவன் உரிமையாய் கேட்டு, கீழே சம்மணமிட்டு உணவுண்ண தயாரானான். அவனை சங்கடமாக பார்த்தாள் வெண்பா. ஊரில் எவ்வளவு செல்வாக்கு உடையவன், பெரிய வீட்டின் மொத்தமும் அவன் தானே!! அவனே சாப்பாடு வேண்டும் என கேட்கிறான், கொடுக்காமல் இருக்க முடியாது. இவன் இங்கு சாப்பிட்டால், அதற்கு வேறு நாச்சியார் என்ன சொல்வாரோ என்று பயமும் வந்தது. 

“என்ன மா, தம்பி கேட்கிறாங்க. பார்த்துட்டே நிக்கிற? போய் எடுத்து வை” என சண்முகமும் கூற, சரியென்று தலையாட்டி விட்டு அவனுக்கு உணவினை கொண்டு வந்து பரிமாறினாள் வெண்பா. கூடவே சண்முகமும் அமர்ந்து உண்ண, அனைவருக்கும் உணவினை பரிமாறி விட்டு ஓரமாக நின்று கொண்டாள்.

அவளுக்கோ உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது. இந்த விஷயம் நாச்சியாருக்கு தெரியாமல் இருக்க போவதில்லை. தெரிந்தவுடன் என்ன ருத்ரதாண்டவம் ஆட போகிறாரோ, என நினைக்க நினைக்க உள்ளுக்குள் கலங்கியது அவளுக்கு.

“அப்பாடா, நல்லா சாப்பிட்டேன்” என வெற்றியின் குரலில் யோசனையில் இருந்து கலைந்தவள், அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க வீட்டின் பின்புறம் சென்றாள்.

கையை கழுவிவிட்டு, அவள் கொடுத்த துண்டை வாங்கி கையை துடைத்தப்படியே அவளையே வெற்றி பார்த்து கொண்டிருக்க, வெண்பாவிற்கோ படபடவென வந்தது.

அவளது செய்கையை உற்று நோக்கியவனுக்கு இன்னமும் சந்தேகம் தான்.

“தமிழ், நீ ஏதோ என்கிட்ட இருந்து மறைக்கிற மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சனையா? என்னவா இருந்தாலும் எனகிட்ட சொல்லு” என கேட்க, திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா.

“என்ன? சொல்லு” என அவன் கண் பார்த்து அதட்ட, பயந்துவிட்டாள் வெண்பா.

“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா” என வேகமாக கூறியவள் அடுத்த நொடி அங்கு நிற்கவில்லை. வீட்டிற்குள் ஓடி வந்து விட்டாள்.

யோசனையுடன் உள்ளே வந்த  வெற்றி, அதன் பின் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.

“நல்லா சாப்பிட்டேன் அத்த. ஒரு குட்டி தூக்கம் போட்டா நல்ல இருக்கும்” என்றவனுக்கு,

“அதுக்கென்னப்பா, இங்க தானே வீடு இருக்கு. பத்து நிமிஷத்தில் போயிடலாம். வீட்டுக்கு போய் தூங்கு பா” என்று அவனை அங்கிருந்து விரட்டி விடுவதிலே இருந்தார் கனகவல்லி.

“ஐயோ, வீட்டுக்கா? இப்பவா? என்னால் முடியாது அத்தே. நான் வயிறு முட்ட  சாப்பிட்டு இருக்கேன். என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. நான் இங்கேயே கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்துகிறேன்” என்றானே பார்க்கலாம், தலைவலியே வந்து விட்டது கனகவல்லிக்கு.

அவனை இங்கிருந்து போவென்றும் அவரால் சொல்ல முடியவில்லை. இரு என்றும் கூற முடியவில்லை. அவர் தூக்கி வளர்த்த பிள்ளை அவன், அவனிடம் வெறுப்பையோ, பிடித்தமின்மையையோ காட்ட முடியவில்லை அவரால்.

நாச்சியார் தவறாக நினைக்கிறார் என்பதற்காக , அவனை தள்ளி வைக்க முடியுமா? மனம் தவித்து போனது அவருக்கு. அவன் எதார்த்தமாக தான் பழகுகிறான். இருந்தாலும் எந்த பேச்சும் வேண்டாம் என்றே  அவர் மனம் சிந்தித்தது.

“இல்ல, வெற்றி, இங்க நீ படுக்க வசதியா இருக்காது பா. கட்டில் இல்ல, ஏசி இல்ல, இடம் வேற சின்னது, அதனால்.., அதனால் நீ வீட்டுக்கே போய் ரெஸ்ட் எடு பா” என கனகவல்லி நாசூக்காக கூற, அவனோ,

“அதனால் என்ன அத்தே!! இதுவும் நம்ம வீடு தானே! எங்க படுத்தாலும் எனக்கு தூக்கம் வரும். இடமோ, வசதியோ எதுவும் முக்கியமில்ல” என அவரையே மடக்க, கனகவல்லிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“கனகா, அதான் வெற்றி இங்கே தூங்க போறேன் சொல்றான்ல, படுக்கட்டும்” என சண்முகமம் அவனுக்கு ஆதரவு தெரிவிக்க, அவரை மறுத்து பேச முடியாமல் தவித்தார் கனகவல்லி.

“வெண்பா, உள்ளே இருக்கிற ரூமை பெருக்கி சுத்தம் செய் மா. வெற்றி படுக்கட்டும்” என மகளுக்கு கட்டளையிட, அவளும் அன்னையை பார்த்துக்கொண்டே அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்தாள்.

வெற்றியும், எந்தவித தயக்கமும் இல்லாது, அவள் படுக்கும் அந்த அறைக்கு சென்று படுத்து கொண்டான். சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.

சண்முகம், வேலை விஷயமாக வெளியே சென்று விட, கனகவல்லியும், வெண்பாவும் ஒருவரையொருவர் பார்த்தப்படி அமர்ந்திருந்தனர்.

“அம்மாவுக்கு மட்டும், வெற்றி இங்க வந்தது தெரிஞ்சது அவ்வளவு தான். ஏற்க்கனவே அவ்வளவு பேசினவங்க, இப்போ என்னென்னெ பேச போறாங்களோ?! நினைக்கவே பயமா இருக்கு வெண்பா” என வெண்பாவிடம், மெதுவாக கனகவல்லி புலம்ப, 

“ம்மா, நாம பயந்து இப்போ என்ன ஆக போது சொல்லுங்க. அம்மாச்சி என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காதீங்க. நம்ம மேலே எந்த தப்பும் இல்லாத போது நாம ஏன் பயப்படனும். மாமாவா வந்தாங்க, சாப்பிட்டாங்க, தூங்குறாங்க, நாமளா வர சொன்னோம். அதனால் விடுங்க ரொம்ப யோசிக்காதீங்க” என அவரை தேற்றி கொண்டிருந்தாள் வெண்பா.

“நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனால் இதெல்லாம் உன் அம்மாச்சிக்கு எங்க புரிய போது? நாம என்னமோ திட்டம் போட்டு வெற்றியை இங்க இருக்க வச்ச போல தானே பேசுவாங்க’

என அவர் கூற, இதற்கு வெண்பாவிடம் எந்த பதிலும் இல்லை. உண்மை தானே! நாச்சியார் எதை தான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறார்.  எல்லாவற்றையும் தவறாக தானே புரிந்து கொள்கிறார். எது வந்தாலும் எதிர்கொள்ள தானே வேண்டும். பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் இருவரும் இருந்தனர்.

தூங்கி எழுந்த வந்த வெற்றிக்கு, சூடாக காபியும், பலகாரமும் செய்து கொடுக்க, அதையும் உண்டு விட்டு சாவகாசமாகவே அங்கிருந்து புறப்பட்டான்.

கிளம்பும் போது வெண்பாவிடம்,

“தமிழ், நாளைக்கு வந்துருவல? என கேட்க, அவளோ அன்னையை திரும்பி பார்த்தாள்.

“வர முடியலைன்னா சொல்லு. நான் இங்க வந்துறேன்” என அவன் சிரிப்புடன் கூற, அவளோ

“இல்ல இல்ல நானே வந்துறேன்” என்றாள் அவசரமாக. சரியென்று அவர்களிடமிருந்து விடைபெற்று கொண்டு புறப்பட்டான் வெற்றி.

இனி வருவதை எதிர்கொள்ள தயாராகினர் வெண்பாவும் கனகவல்லியும்.

நேராக பெரிய வீட்டிற்கு வந்தவன் தன் புல்லட்டை நிறுத்தி விட்டு உள்ளே நுழைய, நாச்சியார் சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தார்.

“வா ராசா, என்ன இவ்வளவு நேரம்? அவ்வளவு வேலையா? அந்த மூர்த்தி இன்னைக்கும் வேலையை காட்டிட்டானா? என விசாரிக்க, 

“அதெல்லாம் இல்ல அப்பத்தா, மூர்த்தியை பார்த்து பேசிட்டேன். போன வேலை சீக்கிரமே முடிஞ்சுருச்சு” என கூறியபடியே அவரருகில் வந்து அமர்ந்தான்.

“அப்புறம் ஏன் பா, இவ்வளவு நேரம்? சாப்பிட்டியா? இல்லையா ராசா? 

“நான் சாப்பிட்டேன் அப்பத்தா. நீங்க சாப்பிடீங்களா? 

“நான் சாப்பிட்டேன் பா. நீ ஏன் பா வெளியேலாம் சாப்பிற? அதான் வேலை முடிஞ்சதுல வீட்டுக்கு வந்து சாப்பிட்டு இருக்கலாம்ல. வெளியே சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்கலைனா என்ன பண்றது? என அக்கறையாய் கடிந்து கொண்டார் நாச்சியார். 

“நான் வெளியே சாப்பிடவே இல்லையே அப்பத்தா!! என்றவனை யோசனையாக பார்த்தவர், 

“அப்புறம் சாப்பிட்டேன் சொன்ன?

“ஆமாம் சாப்பிட்டேன் தான், வெளியே சாப்பிட்டேன் சொன்னேனே, நான் நம்ம தமிழ் வீட்டில் தான் சாப்பிட்டேன்” என்றதும் அவரோ அதிர்ந்து போய் அவனை பார்த்தார்.

“நீ ஏன் அங்க போன? உன்னை யாரு அங்க போக சொன்னது?  என அவர் சட்டென்று குரலை உயர்த்த, அவனோ எதற்கு இந்த கோபம் என்பது போல அவரை திரும்பி பார்த்தான்.

அவன் பார்வையை அவதானித்தவர்,

“அதுக்கில்ல ராசா, திடீர்னு அங்க போய் இருக்கியே! அதான் ஏன்னு கேட்டேன்” என தற்பொழுது நிதானமாக கேட்க,

“என் அத்தை வீட்டுக்கு போக காரணம் தேவையா அப்பத்தா. காலையிலேயே போகணும் சொல்லிட்டு தானே இருந்தேன். சரி வேலையை முடிச்சுட்டு போலாம் இருக்கும் பொது மாமாவை பார்த்தேன். உடனே ரெண்டு பேரும் கிளம்பிட்டோம். அங்க போன நேரம் அத்தையும் தமிழும் சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

அதை பார்த்ததும் எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு, அதான் அங்கேயே சாப்பிட்டுட்டு ஒரு குட்டி தூக்கமும் போட்டுட்டு வந்துட்டேன்” என அவன் சாதரணமாக கூற,, நாச்சியாருக்கோ அதிர்ச்சி மேலே அதிர்ச்சி தான்.

“என்ன ராசா, என்னென்னமோ பண்ணிட்டு வந்து இருக்க, இதெல்லாம் நல்லவா இருக்கு” என கேட்க,

“நீங்க வேற அப்பத்தா, தமிழ் வச்ச கடுகு குழம்பும், அப்பளமும் ரொம்பவே நல்ல இருந்துச்சு” என அவன் கூறி கொண்டிருக்கும் போதே அந்த பக்கமா சென்று கொண்டிருந்த விசாலாட்சிக்கு அவன் கூறியது காதில் விழுந்தது.  உடனே அவனருகில் வந்தவர்,

“என்னது கடுகு குழமப்பும் அப்பளமுமா? என்ன வெற்றி நீ மட்டும் சாப்பிட்டுட்டு வந்து இருக்க எனக்கும் கொஞ்சம் எடுத்துட்டு வந்து இருக்கலாம்ல” என கேட்க, நாச்சியாரோ இவளை என பல்லை கடித்தார்.

“அவளே கொஞ்சம் தான் ம்மா செஞ்சா நானே காலி பண்ணிட்டேன். நாளைக்கு வருவால அப்போ பண்ண சொல்லி கேளுங்க. நாளைக்கும் ஒரு பிடி பிடிச்சுறேன்” என அன்னைக்கு பதில் கூறியபடியே உள்ளே சென்று விட, செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தார் நாச்சியார்.

அவருக்கு எதுவுமே சரியாக படவில்லை. மனம் கண்டதையும் யோசித்து குழம்பி போனது. தான் நினைத்தது நடக்குமா என பயம் வந்து சூழ்ந்து கொண்டது. இதை அப்படியே விட்டால் வேலைக்காகாது என உடனே, மூத்த மகளுக்கு அழைத்தார்.

“அமுதா, நீங்க எப்போ வரீங்க?” என எடுத்த எடுப்பிலே கேட்க, அவரோ,

“அம்மா, அவருக்கு இங்க கொஞ்ச வேலை இருக்கு. அதை முடிச்சதும் உடனே கிளம்பி வந்துருவோம்” என அவர் பதிலளிக்க,

“சீக்கிரம் வந்து சேருற வழியை பாருங்க. இங்க நடக்கிறது எதுவுமே சரியில்ல” என அவர் பூடகமாக பேச,

“என்னம்மா  என்ன பிரச்சனை?”

“எல்லாம் போன்ல சொல்லிட்டு இருக்க முடியாது. இங்க வா நேர்ல பேசிப்போம்” என கூறி அவர் அணைப்பை துண்டித்தார்.

அவர் திட்டமிட்டபடி அடுத்த ஒரு வாரத்தில், அமுதவல்லி, இளங்கோ, ராகினி கூடவே இளங்கோவின் நண்பர் மகன் ஆகாஷ் என நால்வரும் பெரிய வீட்டிற்கு வருகை தந்தனர்.

இக்கரையில் நான் 

அக்கரையில் நீ 

கரைகடந்து உனை சேர ஆசை தான்
ஆனால்,

கரையை கடந்த பின்
நீ எனக்கில்லை என்று ஆகிவிட்டால்?

நான்,

இக்கரையிலேயே இருந்து விடுகிறேன் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!