உளமாற உனதாகிறேன் – 2(1)
உளமாற உனதாகிறேன் – 2(1)
இந்த இரவு இப்படி முடியும் என்று சத்தியமாய் அவள் எதிர்பார்க்கவில்லை. என்ன தான் அக்காவின் கணவன் என்று பெருமாளை ஓரளவு பொறுத்துக் கொண்டாலும்… அவர் தம்பியை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே.
Advertisement
நமச்சிவாயத்திற்கு கூட்டு வங்கியில் பணி கிடைத்ததும் அவர் குடும்பத்துடன் சென்னை வாசி ஆகி விட்டார். இங்கிருக்கும் வீடு நில புலன்கள் அனைத்தும் அக்கா ஞானசெல்வியிடம் விட்டு நிம்மதியாக சென்னையில் இருப்பவருக்கு சொந்த ஊரை விட மனதில்லை… அதனாலே என்னவோ விடுமுறை விட்டால் குடும்பத்தோடு வந்து சொந்த ஊருக்கு வந்து செல்வார்.
விவரம் தெரியாத வயதில் அத்தை வீட்டிற்கு விளையாட வருவது என்றால் அத்தனை பிடிக்கும். ஆனால் விவரம் தெரிய ஆரம்பித்த பின் பிடிக்கவில்லை என்றாலும் அக்காவிற்காக வந்து போவாள். ஆனால் அப்படி வந்து போனது தவறோ என்று நினைக்கும்படி அர்ஜூனின் செய்கைகள் இருக்க… இனி இங்கு வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு தந்தையின் விருப்ப ஓய்வினால் மீண்டும் சொந்த ஊருக்கு வரும் நிலை…
Advertisement
Advertisement
தான் மட்டும் தனியாக வருவது தெரிந்தால் இந்த அர்ஜூன் அதை பயன்படுத்தி கொள்வான் என்று நினைத்து தான் அக்காவிடம் மாமாவை சமாளிக்க சொன்னாள். கடைசியில் யாருக்காக பயந்தாளோ அவனின் கண்ணிலே சிக்கிக் கொண்டாள்.
எப்படியாவது அவனோடு போவதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தவள் நிச்சயம் அந்நேரம் வாசுவை எதிர்பார்க்கவில்லை… அதுவும் அவன் அர்ஜூனை அறைந்தது கண்டு நெஞ்சம் படபடவென்று துடித்திட… யார் பேசுவதும் காதில் விழவில்லை…
Advertisement
“சார்… சார்… பிளிஸ் சார்… இது நிஜமா நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தான் சார்… கொஞ்சம் ரெண்டு பேருக்கும் சண்டை… வேற எதுவும் இல்ல” என்று பதறிட…
“நீ சொல்றது எதுவும் நிஜம் மாதிரி தெரியலையே… ஏம்மா நீ இந்த பையனை லவ் பண்றியா” என்று கண்ணுக்கினியாளிடம் முடிக்க…
அவளோ அப்போது தான் நினைவு திரும்பியவளாக…
“அய்யோ இல்ல சார்... நான் இவனை லவ் எல்லாம் பண்ணல” என்றவளின் பதிலில் மீண்டும் அறை வாங்கினான் அர்ஜூன்.
“பொய்யாடா சொல்ற… தொலைச்சுபுடுவேன் ராஸ்கல்… வேலுண்ணா இவனை வண்டியில ஏத்துங்க…” என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை அவசரமாக தடுத்தாள் கண்ணுக்கினியாள்.
“சார்… சார் லவ் பண்ணல… ஆனா இவரு என் அத்தை பையன் தான்… சோ அரஸ்ட் எல்லாம் வேண்டாம்” என்றிட… அவளை ஆழ் பார்வை பார்த்தானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை…
“சரி ரெண்டு பேரும் வண்டியில ஏறுங்க உங்க வீட்டுல விட்டுற்றேன்”
“அச்சோ சார் அதெல்லாம் வேண்டாம்… நாங்களே போய்ப்போம்” என்று அவசரமாக தடுத்த கண்ணுக்கினியாளை சட்டை செய்யாது…
“வேலுண்ணே வண்டியை பெரியகுளம் விடுங்க” என்றிட அதற்கு மேலும் மறுத்து பேச இயலாது இனியாள் வண்டியில் ஏறிட… உர்ரென்ற முகத்தோடே அர்ஜூனும் வண்டியில் ஏறினான்.
••••••••••••••
“என்ன உன் தங்கச்சி போனை எடுத்தால இல்லையா… எப்படியும் எடுத்திருக்க மாட்டாளே… திமிரு பிடிச்ச கழுதை… வரட்டும் இன்னைக்கு…” என்று பொறுமிக் கொண்டிருந்த பெருமாளை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் பிரபா.
சரியாக அந்நேரம் போலீஸ் ஜீப் அவ்வீட்டின் முன் நின்றிட… அதில் இருந்து முதலில் வாசு இறங்கிட.. அவன் பின்னே பதற்ற முகத்தோடு கண்ணுக்கினியாளும்… சுண்டிப்போன முகத்தோடு அர்ஜூனும் இறங்கினர்.
அதுவரை தாம்தூம் என்று குதித்து கொண்டிருந்த பெருமாளின் உடல்மொழி அப்படியே மாறிப்போக…
“அடடேய் வாங்க தம்பி… நாளைக்கு கல்யாணம் இந்நேரத்துக்கு வந்திருக்கிங்க… எதுவும் முக்கியமான விஷயங்களா… அட என்ன மாமா நம்ம வூட்டு மாப்பிள்ளை வந்திருக்காங்க…நீங்க அப்படியே நின்னுட்டு இருக்கிங்க… உங்களுக்கு தனியா சொல்லனுமா அத்தை” என்றிட…
“தப்பா எதுவும் நினைச்சுக்காதிங்க மாப்பிள்ளை… தீடிர்ன்னு நீங்க வந்து நின்னதும் ஒன்னும் புரியல… எதுவும் விஷயங்களா” என்ற நமச்சிவாயத்தின் பார்வை கடைக்குட்டி மீதிருக்க…
“அட அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா… சும்மா இந்த பக்கம் ஒருவேளை… அப்படியே நம்ம பாப்பா ரோட்டுல நின்னுட்டு இருந்தாங்களா… அதுதான் கூட்டிட்டு வந்தேன்… சரி நான் வரேன்ங்க” என்று கிளம்ப முயல…
“இருங்க தம்பி… நானும் உங்களோட வந்துடுறேன்… நம்ம தலைவர்க்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு” என்றபடி பெருமாள் வாசுவோடு கிளம்பிவிட… என்னவோ புயல் அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது...
நிசப்தத்தை கலைப்பது போன்று தொண்டையை செருமினார் நமச்சிவாயம்.
“என்ன பாப்பா… எதாவது பிரச்சனையா… நீயெதுக்கு போலீஸ் வண்டியில வந்த… அதுவும் அர்ஜூனும் கூட வந்திருக்கான்… என்ன விஷயம்…”
நடந்ததை சொல்ல முயன்ற கண்ணுக்கினியாளை முந்திக் கொண்டு படபடத்தான் அர்ஜூன்…
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா… சும்மா தான் அவரோடு இரண்டு பேரும் வந்தோம்… வேறெதுவும் இல்லை…” என்றவனுக்கு எங்கே தான் அடி வாங்கியதை சொல்லி இனியாள் அசிங்கபடுத்தி விடுவாளோ என்று நினைத்திட… அவளோ தோளை குலுக்கியபடி…
“ஆமாப்பா சும்மா தான்… எனக்கு டயர்டா இருக்கு… நான் உள்ளே போறேன்” என்று வேறு யாரும் கேள்வி எழுப்பும் முன் உள் சென்றுவிட தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட்டார் நமச்சிவாயம்.
ஏற்கனவே இந்த சம்பந்தம் வேண்டுமா என்று பல விதமாக யோசித்தவரை என்னென்னவோ காரணம் சொல்லி சரிகட்ட வைத்தது பெருமாள் தான். அப்போதெல்லாம் சரி சரியென்று மண்டையை ஆட்டியவருக்கு இப்போது மீண்டும் மனதில் சஞ்சலம்.
