Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 18

அத்தியாயம் 18

 

காரில் அமர்ந்தபடி அந்த பள்ளியின் வெளிப்புறத்தில் சுற்றிலும் பார்த்தான் கீர்த்திஸ்வரன்.


Advertisement

 

“எங்க இருக்கான் அந்த பொறுக்கி!” என்று பல்லவியும் அஞ்சலியிடம் கேட்க, அங்கே அவன் இருபதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

Advertisement

Advertisement

 

“காணுமா? சரி விடு. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். உன் அண்ணா தான் சீக்கிரம் இழுத்துட்டு வந்துட்டாங்க. லதாம்மாவை நான் பார்த்துட்டு வந்திருந்தா டைம் சரியா இருந்திருக்கும்!” என்று கூறினாலும் பல்லவியின் பார்வையும் வெளிப்புறத்தைக் கண்காணித்தபடி தான் இருந்தது.

Advertisement

 

“ஓகே! அஞ்சலி! இறங்கி நடந்து போ!” என கீர்த்திஸ்வரன் சொல்ல,

 

“இங்க இருந்தா?” என பயந்து விழித்தாள் அவள்.

 

இதே இடத்தில் இருந்து தான் நேற்றும் அவள் நடந்து சென்றது. எங்கிருந்து எப்படி வந்தான் என்று தெரியாமலே அவள் முன் வந்து நின்றிருந்தான். இப்பொழுதுமா? என கலவரமானாள் அவள்.

 

“என்ன இங்க இருந்தா? அவன் வந்தா வாயை உடைச்சு அனுப்புவியா… நேத்து அவ்வளவு சொல்லி தந்தேன்ல?” என பல்லவி சொல்ல,

 

“அவளை டென்ஷன் பண்ணாத பல்லவி!” என்ன என்றவன்,

 

“நீ போ அஞ்சலி. நான் இங்க தான் இருப்பேன். எதுவும்னா உடனே வந்துடுவேன்” என்றான் ஈஸ்வர்.

 

“ஹ்ம்!” என தலையசைத்து பயந்து பயந்து இறங்கி எங்கும் பார்க்காமல் குனிந்தபடி அவள் நடக்க,

 

“என்னவோ தப்பு பண்ணதாட்டம் எப்படி போறா பாருங்க. வரட்டும். மண்டைல நாலு கொட்டு கொட்டுறேன்!” என்றாள் உள்ளிருந்து பல்லைக் கடித்த பல்லவி.

 

இதோ அன்று போலவே அவள்முன் வந்து நின்றிருந்தான் அவன். பார்த்ததும் இரண்டடி பின்வாங்கி இருந்தாள் அஞ்சலி.

 

“பல்லவி நீ இறங்காத!” என சொல்லி வேகமாய் ஈஸ்வர் இறங்கி செல்ல, பல்லவி கேட்க வேண்டுமே! அவளும் பின்னோடு சென்றிருந்தாள்.

 

“கார்ல வர்ற அளவுக்கு நீ பெரிய இடமா?” என கேட்டுக் கொண்டிருந்தான் அவன் அஞ்சலியிடம். கூடவே இரண்டு பேர் அவனுக்கு துணைக்கு என்று.

 

“அஞ்சலி!” என ஈஸ்வர் வரவும் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு அஞ்சலி பேசியவனை முறைத்துப் பார்க்க,

 

“ஆளை கூட்டிட்டு வந்திருக்கியா? யார் இது உன் ஆளா?” என்றவன் சொல்லிக் கொண்டே பின்னால் நகர்ந்து ஓட தயாராக, சொல்லி முடிக்கும் முன் அவன் கை விரல்களைப் பற்றி திருகி இருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

ஈஸ்வரைப் பார்த்த நொடியே அவனோடு இருந்த இருவரும் தப்பித்து ஓடி இருக்க, வசமாய் சிக்கி இருந்தான் பேசியவன்.

 

“பொறுக்கி பொறுக்கி!” என்ற பல்லவியும் காலில் கிடந்ததை கழற்றி இருந்தாள்.

 

“சொல்லுவியா நாயே! உன் அக்காகிட்ட அந்த வார்த்தையை சொல்லுவியா?” என சொல்லி சொல்லி அவன் மேல் அடித்த பல்லவி,

 

“ஃபால்லோவ் பண்ணி தனியா வர்ற பொண்ணுகிட்ட ஆளில்லாத நேரம் பேசுற நீ? அதுவும் ஸ்கூல் முன்னாடி. சின்ன பசங்க பயந்து வெளில சொல்ல மாட்டாங்கனு நினைப்பா டா உனக்கு?” என்றவள் அடியை நிறுத்தவில்லை என்பதில் சுற்றி இருந்தவர்கள் கூட்டம் கூடி இருந்தது அங்கே.

 

“உன் வீட்டுல இருக்க பொண்ணுங்ககிட்ட போய் இப்படி சொல்லி கூப்பிடுவியா அவங்களை? சொல்லுடா பொறுக்கி!” என அவள் அடித்தபடி ஆத்திரத்தில் சொல்லியிருக்க, கேட்ட ஈஸ்வரின் கண்கள் எல்லாம் கோபத்தில் சிவந்தது.

 

கொத்தாய் அவன் சட்டையை பிடித்தவன் மாறி மாறி பலம் எல்லாம் திரட்டி கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்தான்.

 

கால்களை மடித்து தரையில் தள்ளி அவன் முடியைப் பிடித்து ஈஸ்வர் இழுக்க, வலியில் துடித்தான் அவன்.

 

“சின்னப் பசங்களை கூட நடமாட விடமாட்டிங்களா டா நீங்க எல்லாம்?” சொல்லி வலது கை விரலை நொறுக்கி இருந்தான் ஈஸ்வர்.

 

சுற்றி இருந்தவர்களுக்கு உண்மை அதில் புரிந்தது தான் என்றாலும் நிலைமை கை மீறாமல் இருக்க தடுத்து நிறுத்தி உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருந்தனர்.

 

நிஜமாய் பல்லவி அடித்தபடி பேசியதை கேட்கும் வரை கூட அவனுக்கு கோபம் மட்டும் தான். அதன்பின் தான் முழுதாய் அவன் உணர்ந்தான் மொத்த அர்த்தத்தையும் அஞ்சலி பயத்தின் முழு காரணத்தையும்.

 

அஞ்சலி பெயர் வெளியில் வர கூடாது என்று சொல்லி அனைவருமாய் அவளை பள்ளிக்கு அனுப்பி இருந்தனர். பல்லவி அஞ்சலியை வகுப்பில் விட்டு வர, இங்கே அதற்குள் காவல்துறையினர் வந்து இழுத்து சென்றிருந்தனர் அவனை.

 

“நீ வீட்டுக்கு போ பல்லவி. நான் ஸ்டேஷன் போய்ட்டு வர்றேன்!” ஈஸ்வர் அவளிடம் சொல்ல,

 

“இட்ஸ் ஓகே சார்! சைன் மட்டும் பண்ணிடுங்க. நாங்க கூப்பிடும் போது வந்தா போதும். இந்த மாதிரி ஆட்களை நாங்க எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்படி பண்ணிக்குறோம்” என்ற காவல்துறை அதிகாரி மீது நம்பிக்கை வைத்து கையெழுத்தை கொடுத்து மாலை வருவதாய் சொல்லி ஈஸ்வர் அங்கிருந்து சென்றான் பல்லவியுடன்.

 

காரில் ஏறிய பின்னுமே கொதித்துக் கொண்டு தான் இருந்தது ஈஸ்வரின் உள்ளம். ‘ஒரு அண்ணனா துடிச்சு போயிடுவீங்க!’ என்று நேற்று பல்லவி சொல்லியதை இன்று நிஜமாய் உணர்ந்திருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

“ஹௌ டேர்!” என்றவன் இன்னும் பல்லைக் கடித்து அமர்ந்திருக்க, பல்லவி திரும்பி அவனைப் பார்த்தவள் எதுவும் பேசவில்லை.

 

நேற்றே இனி தங்கையுடன் தான் எப்படி இருக்க கூடாது என முடிவெடுத்தவன் தான் என்றாலும் இன்று இப்பொழுது இன்னுமே அதில் உறுதியாய் இருந்தான்.

 

“போலாம் சார்!” பல்லவி சொல்ல, காரை நகர்த்தியவன் அமைதியாய் வந்தான்.

 

“என்ன நடந்துட்டு இருக்கு இந்த உலகத்துல?” என்று வாய்விட்டே சொல்லிவிட்டவனுக்கு,

 

‘பிறந்த குழந்தைல இருந்து வயசான பாட்டிங்க வரை இங்க பொண்ணுன்றதால அவ தோல் மட்டும் தான் இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கண்ணுக்கு தெரியுது’ என்ற பல்லவி வார்த்தைகள் மீண்டுமாய் மனதில் தோன்றியது.

 

தனக்கு, தன் உறவுக்கு, தன் ரத்தம் சார்ந்தவளுக்கு என்ற போது தான் தனக்கு வலிக்கிறதா என தன்னையே சிந்தித்தான் அவன்.

 

இந்த நிமிடம் தான் அவனுக்கு வலிக்கிறது அத்தனை ரணமாய். தன்னைப் போல கோபம் கொண்டு தானே அத்தனை கோபமாய் இந்த வார்த்தைகளை சொல்லி இருந்தாள் இவள் தன்னிடம் என நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.

 

“உலகத்துல எல்லாம் தான் நடக்குது சார். எவனையும் அடிச்சும் திருத்த முடியாது அட்வைஸ் பண்ணியும் திருத்த முடியாது. இப்படி எவனாவது மாட்டினா நாலு அடி அடிச்சு நம்ம கோவத்தை காமிச்சுக்கலாம். அவ்வளவு தான் நம்மாள பண்ண முடியும்!” என்று கூறிவிட்டு கைகளை தூசி தட்டுவதாய் தட்டிக் கொண்டாள் பல்லவி.

 

“இப்படி தான் இந்த உலகம். ஒரு பக்கம் எல்லாத்துலயும் வளர்ச்சி அடைஞ்சாலும் இந்த மாதிரி இடைஞ்சல்களும் வளந்துட்டு இருக்குன்றது கசப்பான உண்மை. அதுவும் பொண்ணுங்களுக்கு…. கொஞ்சம் பயம் வர்ற மாதிரி தெரிஞ்சாலே சுத்து போட்டுடுவாங்க போல” என்று அவள் சொல்ல சொல்ல, அமைதியாய் வந்தான் அவன்.

 

சில நிமிட அமைதிக்கு பின், “நீங்க இவ்வளவு கோபப்படுவீங்க நினைக்கல. சூப்பர் சார் நீங்க!” என்றாள் பாரட்டாய்.

 

அதற்கும் அவள் பக்கம் திரும்பிடவில்லை அவன். நிகழ்வின் தாக்கம் அப்படியே இருந்தது அவனிடம்.

 

“இன்னும் கோவமா தான் இருக்கிங்களா?” அவன் அப்படி அமைதியாய் வருவதில் பல்லவி கேட்க,

 

“ப்ச்! என்ன பண்ண சொல்ற? சும்மா நாலு அடி குடுத்ததோட எல்லாம் முடிஞ்சதா? என்னவோ ஒரு மாதிரி இருக்கு” என்றான் மெதுவாய்.

 

“அதுக்கு பேரு ஆதங்கம். உங்க கையால அவனை கொல்ல முடியலையேன்ற ஆவேசம்!” என வசனம் பேசியவளை முறைத்து அவள் பக்கம் திரும்பினாலும் அவள் சொல்லிய விதத்தில் கொஞ்சம் இலகுத்தன்மை கிடைத்திருந்தது அவனிடம்.

 

“நிஜம் சார்! எல்லாருக்கும் ஒவ்வொரு நேரம் புல்லரிச்சு மேல சிலிர்த்து வரும். நிலைமை சரியானதும் அப்படியே அடங்கிப் போயிரும். எப்படினா இப்போ நாம ஒரு படம் பார்த்து நல்லா மோட்டிவேட் ஆகி நாமளும் எதாவது சாத்திக்கணும் நினைச்சுட்டு இன்டெர்வல்ல பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டு கையை துடைச்சுட்டு வருவோம்ல? அந்த மாதிரி” என்றாள்.

 

“நீயெல்லாம் அல்டிமேட் பல்லவி. உன்கிட்டயும் இவ்ளோ நான் எதிப்பார்க்கல. பயமே இல்லைல?” என்றான் நினைத்ததை.

 

“அதான் சொன்னேனே! பயந்தா சுருட்டி வாயில போட்டுடுவாங்க” என்று அவள் சொல்ல,

 

‘நானுமே எல்லாத்தையும் கிராஸ் பண்ணி வந்த பொண்ணு தான். ஆனா என்னால அந்தந்த சிட்டுவேஷனை ஹண்ட்ல் பண்ண முடிஞ்சது. ஏன்னா என்னை நான் தான் பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். எனக்கு அஞ்சலி மாதிரி அப்பா அண்ணா எல்லாம் இல்ல’ என்ற அவளின் நேற்றைய வார்த்தைகளின் நியாபகம் ஈஸ்வரின் மனதினுள்.

 

“எதுக்கும் அஞ்சலி கூட கொஞ்ச நாள் அப்பப்ப ஸ்கூல்க்கு வந்து போய் இருங்க. தினமும் அவகிட்ட பேசுங்க. கொஞ்சம் அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க சார். இன்னும் எத்தனை வருஷம் அண்ணன் தங்கச்சினு கூட இருப்பிங்க?” என்றவள் சட்டென்று வாய்விட்டு சிரித்து,

 

“உங்க ஆள் எல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் லதாம்மா சொன்ன மாதிரி ‘கோதாவரி! வீட்டுக்கு குறுக்க ஒரு கோடு போடு டி’ன்னு சொன்னாலும் சொல்லும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!” என்று சொல்ல,

 

“ப்ச்! நீ இருக்கியே!” என்று ஈஸ்வர் முறைத்தாலும் அவள் சொல்வதை இல்லை என்று சொல்ல முடியாது தானே!.

 

இப்பொழுது தான் தந்தையிடம் தான் சொல்லி வந்ததும் அவர் அதிர்ந்து நின்றதும் என நியாபகம் வர,

 

“அம்மாவை மறந்துட்டேனே!” என அன்னைக்கு வேகமாய் அழைக்க, அழைப்பு செல்லவில்லை அவருக்கு.

 

மீண்டும் மீண்டும் அழைத்து, “ப்ச்!” என அவன் சலிக்க,

 

“கார் ஓட்டிட்டே என்ன சார் விளையாட்டு இது? நான் இல்லாத போது இந்த சாகசம் பண்ணுங்க. ப்ளீஸ் இப்போ என்னை ட்ராப் பண்ணிடுங்க!” என்றாள் அப்போதும் நிறுத்தாத பல்லவி.

 

வீடு வந்து சேர்ந்ததும் அன்னையை தான் தேடி சென்றான் வேகமாய். வாசலிலேயே தந்தையின் கார் இல்லை என்பதை கவனித்துவிட்டான்.

 

“ம்மா!” என காரை நிறுத்திவிட்டு அவர் அறைக்குள் அவன் வேகமாய் வர, அவனுக்கு முன்பே லதாவிடம் வந்துவிட்டாள் பல்லவி.

 

 

“நீ என்ன இந்நேரம்?” என பல்லவியை லதா கேட்டுக் கொண்டிருக்க, ஈஸ்வரும் அன்னை அருகே வந்திருந்தான்.

 

“என்ன டா சொல்லிட்டு போன உன் அப்பாகிட்ட? இங்க பாரு என் போனை!” என உடைந்து சுக்குநூறாய் கிடந்த தனது அலைபேசியை காண்பித்தார் அவனிடம் லதா.

 

“அஞ்சலியை நீயா ட்ராப் பண்ண போன? அதுக்கும் சேர்த்து தான் திட்டினார். ஏன் ஆட்டோ வரலையா?” என்றும் அடுத்தடுத்து அவர் கேட்டு,

 

“லாவண்யாவை நிஜமாவே வேண்டாம்னு சொன்னியா? இனி வீட்டுக்கே வர மாட்டேன்னு சொல்லிட்டு போறார் உன் அப்பா!” என்று கூற, தலைகோதி நின்றான் ஈஸ்வர் எதற்கும் பதில் சொல்லாமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!