ஊஞ்சலாடும் முகிலே 37
அத்தியாயம் 37
ஈஸ்வர் இரவு உணவுக்கு கீழே இறங்கி வந்த போது அவனுக்கென லதாவும் அஞ்சலியும் காத்திருக்க, இன்னுமே கீர்த்திஸ்வரன் முகத்தில் இறுக்கம் தான்.
Advertisement
“இன்னும் கோவமா தான் இருக்கான் போல!” மெதுவாய் கூறிக் கொண்டார் லதா.
அவருமே மகனுக்காக இனி எதையும் தானே எதிர் கொள்வது எனும் முடிவுக்கு வந்திருந்தார்.
Advertisement
Advertisement
சாப்பாட்டுடன் மாடிக்கு சென்ற போதும் தானே வருவதாய் சொல்லி அவன் அதை வாங்க மறுத்திருக்க, பத்து மணியாகியும் ஈஸ்வருக்காக லதாவும் அஞ்சலியும் காத்திருந்தனர்.
“நீங்க தூங்க வேண்டியது தானே? நான் எடுத்துக்க மாட்டேனா?” என அக்கறையாய் கேட்டாலும் முகத்தில் கொஞ்சமும் சிரிப்பில்லை ஈஸ்வரிடம்.
Advertisement
“உன்கிட்ட பேசணும்னு தான் ஈஸ்வர்!” என லதா சொல்லவும் தங்கையைப் பார்த்தான்.
“அம்மா நீங்க கோபமா இருக்கிங்கனு சொன்னாங்க. அதான் பேசலாம்னு இருந்தேன் ண்ணா!” என அவளும் விளக்கம் கொடுக்க, இவர்களையும் தான் பயமுறுத்தி வைத்திருப்பது புரிந்தது.
“நீ ஒன்னும் கவலைப்படாத ஈஸ்வர். அப்படி எதுவும் நடக்க அம்மா விடமாட்டேன். நாளைக்கே நான் சித்ராவைப் பார்த்து பொண்ணு கேட்குறேன்!” என்றார் லதா.
“ம்ம்ம் ஏட்டிக்கு போட்டியா நாமளும் போய் நிக்கணுமா?” என்றவன்,
“இவ்வளவு நாளும் அப்பா கொஞ்சம் இறங்கி வரட்டுமேனு நினைச்சேன். கூடவே அவளும் படிப்பை முடிச்சுட்டா ஈஸியா இருக்குமேனு நான் நினைச்சுட்டு இருந்தேன்” என்றவன்,
ஒரு பெருமூச்சைக் கொடுத்து சாப்பிட அமர்ந்தவன், “அதெல்லாம் ஒண்ணுமில்ல. எல்லாம் சரியாகிடும்!” என்றவன் அன்னை தங்கை இருவரின் முகத்தையும் பார்த்துவிட்டு,
“நாளைக்கு பல்லவியை ஆபீஸ்க்கு வர சொல்லிருக்கேன். பேசப் போறேன்!” என்றான். அதில் தான் எத்தனை வெளிச்சம் லதா, அஞ்சலி இருவரின் முகத்திலும். அதைக் கண்டபின் தான் கொஞ்சம் இலகுவாகவே முடிந்தது ஈஸ்வருக்கும்.
“பல்லவி கால் பண்ணினா. அப்பாக்கு எப்படி இருக்குன்னு கேட்டா. உங்களையும் கேட்டா!” என்றவன் அவள் பேசியதை எல்லாம் சொல்லி,
“சித்ரா அத்தைகிட்ட பேசுறது சரி தான். ஆனா அவ மனசுல என்ன இருக்குனு தெரியணும் முதல்ல. அவ வேண்டாம்ன்னு சொன்னா…” என்று சிறுஇடைவெளி விடவும் அஞ்சலியும் அன்னையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
“டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். பண்ணவும் மாட்டேன்!” என்றதிலேயே லதா கவலை கொள்ள,
“இப்ப மேரேஜ்க்கு தான் ஓகே சொல்லிருக்கா. மாப்பிள்ளைக்கு இல்ல. அதனால தான் நான் பேசவே போறேன். பேசிட்டு என்னனு பார்க்கலாம். பதினைஞ்சு நாள்ல காலேஜ் முடியுதாம்” என்றவன் பேச்சினோடு சாப்பிட்டும் முடித்திருந்தான்.
“ம்மா!” என்று அழைக்கவும் என்னவென்று அவர் கேட்க,
“ஈஸியா சொல்ற மாதிரி இருக்கும். ஆனாலும் சொல்றேன். பல்லவிகிட்ட சம்மதம் வாங்கிட்டா…. “ என்றவன்,
“எனக்கு தெரியாது அப்பாவை நீங்க தான் சம்மதிக்க வைக்கணும். அப்பா அப்புறமும் பிரச்சனை பண்ணினா அப்புறம் நானும் எதாவது முடிவு எடுக்க வேண்டியதாகிடும்!” என்றான்.
“நீ பல்லவியை பார்த்துக்கோ ஈஸ்வர். அவ மட்டும் சம்மதிச்சா போதும் உன் அப்பா வாயை திறக்காம நான் பாத்துக்குறேன்!” என்றுவிட்டார் லதா.
“நானும் அண்ணியை டிஸ்டர்ப் பண்ற மாதிரி எந்த ஸ்டேட்டஸ் எதுவும் அப்டேட் பண்ண மாட்டேன்ண்ணா!” என தன் பக்க உதவியாய் அஞ்சலி சொல்ல, அதில் மிக மெல்லிய புன்னகையை கொடுத்தவன்,
“அவ அதையெல்லாம் பெருசா எடுத்துக்கவே இல்ல!” என சொல்லிவிட்டு சென்றுவிட,
“கல்யாணம் மட்டும் நல்லபடியா முடியட்டும். கடவுளே! பழனிக்கு கூட்டிட்டு வந்து அவர் முடியை உனக்கு காணிக்கையா செலுத்துறேன்!” என வேண்டுதலை அப்பொழுதே ஆரம்பித்தார் லதா.
இந்த அழுத்தத்தினோடே இருக்க முடியாதே. என்ன செய்யலாம் என அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரம் தான் பல்லவி அழைத்து பேசி வைத்திருக்க, இனி அவளிடமே பேசி தெளிவுபடுத்திவிட துணிந்துவிட்டான்.
மதியத்திற்கு பின் அவளை வர சொல்லியவன் காலை முதலே தன் அலுவலகத்தில் தான் இருந்தான்.
“சைட்டுக்கு போய் பார்ப்போமா சார்? அந்த பள்ளம் எல்லாம் க்ளியர் பண்ணியாச்சு. நீங்க பார்த்துட்டா அடுத்த வேலையை ஆரம்பிச்சுடலாம்!” என மேனேஜர் அழைத்தும், மணியைப் பார்த்தவன்,
“நீங்களே பார்த்துட்டு வந்துடுங்க. எனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்க. நான் பார்த்துட்டு சொல்றேன்!” என சொல்லிவிட்டான். மணி பண்ணிரெண்டை தான் நெருங்க இருந்தது.
சாப்பாடும் எடுத்து வரவில்லை. வீட்டிற்கு சென்று சாப்பிட முடியும் என்றும் தோன்றவில்லை.
எப்பொழுது வேண்டுமானாலும் அவள் வரலாம் தானே எனும் எண்ணத்தில் அவன் இருக்க,
அவன் நினைத்தது போலவே அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் பல்லவி வந்திருப்பதாய் அலுவலகத்தின் முன்னறையில் இருந்து அழைப்பு.
“இவ்ளோ சீக்கிரமா?” என சொல்லிக் கொண்டு அவளை உள்ளே அழைக்க, உம்மென்ற முகத்தோடு வந்து அமர்ந்தாள் அவன்முன்.
“முன்னாடியே வந்திருக்க? டெக்ஸ்ட் பண்ண சொன்னன்ல?” ஈஸ்வர் கேட்க,
“ப்ராஜெக்ட் ரிவியூக்கு போய்ட்டு வந்தேன். அதான்!” என்றவள் சட்டென்று தன் கல்லூரிப்பையை திறந்து என்னவோ எடுக்க,
எங்கே மாப்பிள்ளையின் புகைப்படத்தை தான் தேடுகிறாளோ என அவனுக்கு அந்த நொடியே வியர்க்க ஆரம்பிக்க,
“என்ன தேடுற? நான் எதையும் பாக்குற மைண்ட்செட்ல இல்ல!” என்றான் உடனேயே.
எங்கே தன் பேச்சையும் மீறி காட்டிவிடுவாளோ என பதறி வந்தது அவனுக்கு தான் தெரியும்.
“நீங்க செக் பண்ண கூட வேண்டாம். எல்லாம் ஒரிஜினல் தான்!” என்று சொல்லி ஒரு ஃபைலை எடுத்து அவன்முன் பல்லவி நீட்ட,
“என்ன இது?” என்றான். அவனிடத்தில் இருந்து பார்க்க அவளது கல்லூரி ப்ராஜெக்ட் ரிப்போர்ட் போலவும் இருக்க, அப்பொழுது தான் மூச்சுவிடவும் முடிந்தது.
“மார்னிங் தான் அம்மாகிட்ட கேட்டேன். அம்மாவும் தந்துட்டாங்க!” என்றதில் இன்னும் புரியாமல் அவன் புருவங்கள் சுருங்க,
“எங்க அப்பா எங்களுக்குன்னு வச்சிருந்த ஒரே ஒரு லேண்ட் ப்ரொபேர்ட்டியோட டாக்குமேன்ட்!” என்று சொல்லவும் அதிர்ந்தவன்,
“என்ன?“ என கேட்க,
“வீடு கூட லோன்ல தான் இருக்கு. இந்த லேண்ட் அம்மா எனக்காக மட்டும் காப்பாத்தி வச்சிருக்கு. உங்களுக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லையே. சின்ன நிலம் தான். ஆனா இப்போதைக்கு எங்ககிட்ட இது தான் இருக்கு. வச்சிருங்க. நான் என் கடனை குடுத்துட்டு…” எனும் பொழுதே எழுந்துவிட்டான் கோபமாய்.
“பல்லவி! என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என ஈஸ்வர் கேட்டபடி எழவும் அவள் பேச்சை நிறுத்தி அவனை பாவமாய் பார்த்து வைக்க,
“நான் கேட்டேனா? அதுவும் அத்தைகிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்னு சொல்ற? எப்படி தந்தாங்க?” என்றான்.
“நேத்து பேசும் போதே தெரிஞ்சது உங்க சந்தேகம். அதான் அம்மாகிட்ட இப்படின்னு சொன்னேன். அவங்களும் தந்துட்டாங்க!” என்றாள்.
“மை காட்!” என நெற்றியை அழுந்த அவன் தேய்க்க, இவள் புரியாமல் பார்த்தாள்.
எப்படி யோசித்தும் அவளுக்கு இவ்வளவு தன்மானத்தை சீண்டும்படி நேற்று தான் அப்படி என்ன சொல்லிவிட்டோம் என்று மட்டும் அவனுக்கு தெரியவே இல்லை.
“பரவால்ல! அம்மா எதுவும் நினைக்க மாட்டாங்க சார். நானும் கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சு மீட்டுக்குவேன்!” என்றவளை இன்னும் கோபமாய் அவன் பார்க்க,
“இதுக்கு தானே கூப்பிட்டீங்க? உங்களுக்கு நம்பிக்கை தரணும்னு தான் நானும் அம்மாகிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்!” என்று அவள் சொல்ல,
“என்ன கேட்டேன்? எனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல உன் ப்ரொபேர்ட்டி டாக்குமெண்ட் வேணும்னு நான் கேட்டேனா?” என்ற ஈஸ்வர்,
“எதை தான் நீ சரியா புரிஞ்சிப்ப?” என்றான் ஆதங்கமும் சேர்த்து.
“அப்போ நம்பிக்கை இருக்கா? நீங்க இதுக்காக கூப்பிடலையா?” என்றாள் அவளுமே அவனைப் போலவே. என்ன முகம் மட்டும் அதன்பின் கொஞ்சம் வெளிச்சம் வந்திருந்தது பல்லவியிடம்.
“உக்காரு!” என்றவன் தானும் அமர்ந்து,
“சாப்பிட எதாவது சொல்லவா?” என கேட்டு போனைக் கையில் எடுக்க,
“இது?” என டாக்குமெண்ட்டை காட்டினாள்.
“அதை பேக்ல வச்சு பாத்திரமா வீட்டுக்கு கொண்டு போ பல்லவி. சொல்லு என்ன சாப்பிடுற?” என அவன் கேட்கவும் முழுதாய் மீண்டவள்,
“பசிக்குது தான். ஆனா அம்மா வெயிட் பண்ணுவாங்க சாப்பிட. இப்ப சில்லுனு எதாவது குடிக்க மட்டும் சொல்லுங்களேன்!” என்று அவள் சொல்லவும் தலையசைத்துக் கொண்டவன் அவளுக்கு வேண்டியதை சொல்லிவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்து அமர்ந்தான்.
“முதல்ல எதிர்ல பேசுறவங்க என்ன பேசுறாங்கனு அப்சர்ப் பண்ண கத்துக்கோ. யார் கேட்டாலும் இப்படி தான் டாக்குமெண்ட் தூக்கிட்டு வருவியா நீ?” என்றவன் கேள்வியில்,
“அப்படியெல்லாம் எல்லாருக்கும் தூக்கி குடுத்துட்டு இருக்க மாட்டேன். என்ன நீங்க! கேட்டது ஈஸ்வர் சார். அவரோட நம்பிக்கை எனக்கு வேணும். அதுக்கு தான் எடுத்துட்டு வந்தேன்!” முகத்தை தூக்கிக் கொண்டு அவள் சொல்ல, அவள் கேட்டபடியே சில்லென்று குடிக்க வந்து சேர்ந்தது.
“அப்போ எதுக்கு என்னை வர சொன்னிங்க?” என அவள் கேட்க,
“சொல்றேன். முதல்ல குடிச்சு முடி. நான் சொல்றதை கேட்டு ஷாக் ஆகி குடிக்காம போய்ட்டா அப்புறம் என்னைக்காவது ஒரு நாள் இதையும் சொல்லிக் காட்டுவ நீ!” என்றவன் சொல்லில்,
“குட் சார்! என்னை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க!” என்றவள் புன்னகை மீண்டிருக்க,
“ஹ்ம்!” என்றவன் அவள் குடித்து முடிக்கும் வரை தனக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
குடித்து முடித்து பாட்டிலை கீழே வைத்தவள், “ஆமா.. ஆபீஸ்க்கு வர சொல்லிருக்கீங்க என்னை. நேத்து காலேஜ் எப்ப முடியுதுன்னும் கேட்டீங்க!” என கண்களை விரித்துக் கூறியவள்,
“அப்போ உங்க ஆபீஸ்லேயே பெரிய வேலையா போட்டு குடுக்க போறிங்களா?” என்ற போது அவள் வாயெல்லாம் பல்.
“உன் மியுசியம் மூளையை வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டியா நீ? எதாவது பேச விடுறியா?” என்றவன் இப்பொழுது டென்ஷனுக்கு சென்றிருந்தான் தான் சொல்வதைக் கேட்டு என்ன பதில் கூறுவாளோ என்று.
“வேலை தர மாட்டேன்னு சொல்ல கோவம் வேற!” முணுமுணுத்து அவள் அமைதி காக்க,
“நான் சொல்றதை பொறுமையா கேளு. இதே மாதிரி எதையும் எது கூடவும் முடிச்சு சேர்க்க கூடாது. பழசையே புடிச்சு வச்சுட்டு இப்ப கண் முன்னாடி இருக்கறதை தூக்கி போடவும் கூடாது. எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவை சொல்லணும்!” எனும் அவனின் இந்தவித அறிவுரைகளில் எதுவும் புரியாமல் மலங்க விழித்து அமர்ந்திருந்தாள் பல்லவி.
“கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்!” என்றவன் சொல்லில் உதடுகள் விரிந்த புன்னகையை அவள் கொடுக்க,
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றிருந்தான் அடுத்தநொடி.
