Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 12

அத்தியாயம் – 12

 

அதன்பிறகு வந்த நாட்கள் அவர்கள் இருவருக்கும் ஒரு வண்ணமயமான கனவுப் பயணம் போல அமைந்தது, அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு இடமும் ஒரு காதல் கூடாரமாக மாறியது, கார் பயணங்களின்போது ஒரு கையில் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி, மறு கையால் அவளது விரல்களைக் கோர்த்துக் கொள்வதை ரன்வீர் வழக்கமாக்கிக் கொண்டான்…

எப்போதாவது மிருதுளா செல்லமாகக் கோபித்துக் கொண்டால், அவளது கன்னத்தில் ஒரு மென்மையான முத்தத்தைப் பதித்து அவளது கோபத்தை நொடியில் கரைத்துவிடுவான், அவளும் “இப்படிப் பண்ணா நான் எப்படி உங்கமேல கோபப்படுறது?” என்று செல்லமாகச் சிணுங்கி கொண்டே அவன் நெஞ்சில் தஞ்சம் புகுவாள்..



Advertisement

பிஸ்னஸ் மீட்டிங்களில் பிஸியாக இருக்கும்போது கூட, ரன்வீரின் கண்கள் மிருதுளாவின் நினைவிலேயே இருக்கும், அவளுக்கு ஒரு சிறிய மிஸ் யூ மெசேஜ் அனுப்பிவிட்டு, அவள் தரும் பதிலுக்காக ஒரு சிறுவனைப் போலக் காத்திருப்பான்,
​மிருதுளாவும் இப்போது ஒரு முழுமையான காதல் பறவையாக மாறிவிட்டாள், அவளது ஒவ்வொரு அசைவிலும் ரன்வீரின் காதல் தெரிந்தது, அவனது தோளில் சாய்ந்து கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் அந்தத் தருணங்கள் அவளுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தன, ரன்வீரும் அவளை ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவே நடத்தினான்.

​”உன்னைத் திருட வந்தவன், இப்போ உன் அன்புக்கு அடிமையாகிட்டேன் மிருதுளா,” என்று அவன் அவளது கூந்தலை வருடியபடி சொல்லும்போது, அவளது உலகம் அவனது அரவணைப்பிற்குள் சுருங்கிப் போனது….

அன்று காரின் ஜன்னலுக்கு வெளியே நிலவொளி மென்மையாகப் படர்ந்திருக்க, உள்ளே ரன்வீரும் மிருதுளாவும் ஒரு நெருக்கமான அமைதியில் அமர்ந்திருந்தனர்,.. அந்த கணம் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா மிருது?” என்று அவன் மெல்லிய அதே சமயம் அழுத்தமான குரலில் கேட்டான், அவனது லேசர் விழிகள் இப்போது ஒரு காதலனின் அதிகாரத்தோடும் காதலோடும் அவளை ஊடுருவின…

Advertisement

​”ம்ம்… பண்ணிக்கலாமே!” என்று அவள் எந்தத் தயக்கமும் இன்றி உடனே பதிலளிக்க, அவளது அந்த சம்மதம் அவனுக்குப் பேரின்பத்தைத் தந்தது…

Advertisement

​”எப்போ?” என்று ஒரு சிறுவனின் ஆர்வத்தோடு அவன் கேட்க, மிருதுளா சிரித்துக்கொண்டே, “தாத்தாகிட்ட பேசிட்டுச் சீக்கிரமே பண்ணிக்கலாம்,” என்றாள்…

​”சரி… அப்போ உன் தாத்தாகிட்ட எப்போ நீ பேசப் போற?” என்று ரன்வீர் வினவ, “நானும் ரொம்ப நாளா பேசணும்னுதான் நினைச்சுட்டு இருக்கேன், நாளைக்கே பேசிடுறேன்,” என்று ஒரு உறுதியான முடிவைச் சொன்னாள்…

​”ஓகே சொல்லிடுவாரா?” என்று ரன்வீர் சற்றே தயக்கத்துடன் கேட்க, “கண்டிப்பா சொல்லுவாரு, என் கல்யாணத்தைப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை,” என்று தன் தாத்தாவின் மீதிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியவள், பிறகு.. “உங்க வீட்ல எப்படி?” என்று அவனது குடும்பத்தைப் பற்றி வினவினாள்.

Advertisement

​”என் சம்மதம்தான் அவங்க சம்மதமும், நான் யாரைக் கை காட்டுறேனோ அவங்களை அவங்க ஏத்துப்பாங்க,” என்று ரன்வீர் கர்வமாக சொல்ல, “அப்போ சரி, நான் தாத்தாகிட்ட பேசிடுறேன்,” என்றாள் மிருதுளா.

​இருவரும் அவனது காரின் முன் இருக்கையில் தான் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தனர், பேச்சின் இடைவெளியில் ரன்வீரின் கைகள் அவளது தோள்களை வருடிட… மிகுந்த சந்தோஷத்தில் இருந்தவன்.. “சரி… ஒரு கிஸ் கொடு,” என்று உரிமையோடு கேட்டான்…

​அவன் முத்தம் கேட்டதும் மிருதுளாவின் முகம் தக்காளிப் பழம் போலச் சிவந்தது. “என்னால முடியாது… நீங்களே எடுத்துக்கோங்க,” என்று வெட்கத்தில் தலைகுனிந்திட,
​”எப்போ பாரு இதையேதான் சொல்ற! யு ஹேவ் டூ கிவ் இட் ரைட் நவ்” என்று அவன் செல்லமாக மிரட்டியும்,.. “ம்ஹும்… முடியாது!” என்று அவள் பிடிவாதமாக மறுக்க, ரன்வீர் பொய்க் கோபம் கொண்டு, “போடி… என்கிட்ட பேசாத!” என்று அவளை விட்டுத் தள்ளிச் செல்ல முயன்றான்..

​அவன் தள்ளிப் போவதைப் பொறுக்க முடியாத மிருதுளா, சட்டென்று அவனது சட்டை காலரைப் பற்றித் தன் பக்கம் இழுத்தவள், அவன் சுதாரிக்கும் முன்னே, அவனது இதழ்களோடு தன் இதழ்களைப் பொருத்தினாள்.

அதுவரை அவனிடம் இருந்து மட்டுமே முத்தங்களைப் பெற்றவள், இன்று முதன்முறையாகத் தானாக முன்வந்து கொடுத்தது ரன்வீரை நிலைகுலைய வைத்தது, ​அவளது அந்த அன்பின் அத்துமீறலை ரசித்து அனுபவித்தவன், அடுத்த நொடியே அந்த முத்தத்தைத் தனதாக்கிக் கொண்டான்.

காருடைய குறுகிய இடத்திற்குள், இரு இதயங்களின் துடிப்பும் ஒன்றிணைந்து ஒலிக்க, அந்த தருணம் அவர்களின் காதலுக்கு மௌன சாட்சியாக நின்றது…

*******

“தாத்தா, உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,” என்று தயக்கமும் புன்னகையுமாகத் தொடங்கினாள் மிருதுளா…

​வீரமாணிக்கம் அவளை வாஞ்சையுடன் பார்த்து, “சொல்லுமா,” என்றார்…

​”அது… தாத்தா… நான் ஒருத்தரை லவ் பண்றேன்,” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும், அவர் முகம் சட்டென்று மலர்ந்தது, பேத்தியின் வாயால் இப்படி ஒரு செய்தியைக் கேட்பார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை…

​”அட நிஜமாவா? என் பேத்தி மிருதுளா தானா இதை சொல்றது? இல்ல இது என் கனவா?” என்று அவர் ஆச்சரியமும் கிண்டலும் கலந்த குரலில் வினவிட, ​மிருதுளா செல்லமாகச் சிணுங்கிக்கொண்டே, “தாத்தா… கிண்டல் பண்ணது போதும், இது கனவு எல்லாம் இல்லை, வேணும்னா ஒரு கிள்ளு கிள்ளி வைக்கவா?” என்று விளையாட்டாகக் கேட்க, அவரது சிரிப்பு இன்னும் அதிகமானது.

​கடந்த சில நாட்களாகவே மிருதுளாவின் முகத்தில் ஒரு புதிய தேஜஸையும், கண்களில் ஒரு மின்னலையும் அவர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார், அந்த மாற்றத்திற்கான காரணம் இப்போதுதான் அவருக்குப் புரிந்தது, தனிமையில் இருந்த தன் பேத்திக்கு ஒரு துணையை அவளே தேர்ந்தெடுத்துவிட்டாள் என்பது அவருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது…..

​”ரொம்ப சந்தோஷம் மிருதுளா! ஆமா… அந்தப் பையன் யாரு? என்ன பண்றார்?” என்று ஆவலுடன் வினவிட,.. ​மிருதுளா மெல்லத் தலைநிமிர்ந்து, “ரன்வீர்… உங்களுக்குக் கூடத் தெரியுமே தாத்தா, அன்னைக்கு பார்ட்டியில மீட் பண்ணினோமே, ரன்வீர் இம்போர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ஸோட சி.இ.ஓ… அவர்தான்,” என்று சொன்னபோது அவளது குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது…

​வீரமாணிக்கம் ஒரு நிமிடம் யோசித்தார், பிசினஸ் உலகில் மிகப்பெரிய ஆளுமையான ரன்வீரா? என்று வியந்தவர்…  “ஓ… ரன்வீரா! அந்தத் துடிப்பான இளைஞனா? பிசினஸ்ல ரொம்ப கறாரான ஆளுன்னு கேள்விப்பட்டிருக்கேன், ஆனா, என் பேத்தி மனசைத் திருடுற அளவுக்கு அவன் சாமர்த்தியனாவும் இருப்பான் போலிருக்கே!” என்று மீண்டும் ஒருமுறை கிண்டல் செய்ய,.. ​”அவர் பார்க்கத்தான் அப்படி தாத்தா, பழகினா ரொம்ப அன்பானவர்னு உங்களுக்கே புரியும்” என்று ரன்வீருக்காகப் பரிந்து பேசினாள் மிருதுளா.

​”சரிம்மா… நீயே ஒருத்தரை விரும்புறேன்னு சொல்லிட்ட, இனிமே இதுல எனக்கு என்ன தயக்கம் இருக்கப்போகுது? உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம், நாளைக்கே அந்தப் பையனை வீட்டுக்கு வரச் சொல்லு, நான் நேர்ல பேசி முடிவு பண்றேன்,” என்று தாத்தா பச்சைக் கொடி காட்டிட, மிருதுளாவும் அந்த பச்சைக்கொடியை அடுத்து, ரன்வீரிடம் இவ்விஷயத்தை பற்றி கூறினாள்,..

அவனும் நாளை வருவதாக கூறி இருக்க, அதே போல் அன்று தாத்தாவை பார்க்க கிளம்பி வந்திருந்தான் ரன்வீர், ஒரு பிஸ்னஸ் மேனாக இல்லாமல், ஒரு பெண்ணின் கரம்பிடிக்கப் போகும் சாதாரண ஆணாக அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்…

ரன்வீர் தனது காரை வீட்டின் வாசலில் நிறுத்திய அந்த நொடியே, மிருதுளாவின் இதயத் துடிப்பு மளமளவென எகிறியது, ஆர்வம் தாளாமல், விறுவிறுவென நடந்து  வாசலுக்கே வந்து நின்றாள்,
​கார் கதவைத் திறந்து ரன்வீர் வெளியே இறங்கிய அந்த விநாடி, அவனது அந்த லேசர் விழிகளும் முதலில் தேடியது அவளைத்தான்.

வெள்ளை நிற லினன் சட்டையில், சீவி முடிக்கப்பட்ட தலைமுடியுடன் மிகவும் வசீகரமாக இருந்தவன், வாசலில் நின்று கொண்டிருந்த மிருதுளாவைப் பார்த்ததும், அவனது இதழ்களில் ஒரு மெல்லிய கள்ளச் சிரிப்பு அரும்பியது.

​”என்ன… வாசலுக்கே வந்துட்டியா? அவ்வளவு அவசரமா?” என்பது போல அவன் கண்களாலேயே கேட்க, மிருதுளா வெட்கத்தில் தன் இதழ்களைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து நிற்க,
அவனோ அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான், அந்தச் சிறிய இடைவெளியில் அவனது வாசனை அவளைத் தழுவியது.

“பயப்படாத மிருது… எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்று ரன்வீர் மிகவும் மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி தைரியம் சொல்ல,.. ​”ம்ம்” என்று தலையசைத்தவள்.. “உள்ளே வாங்க… தாத்தா வெயிட் பண்றார்,” என்று அவள் சொல்ல, ரன்வீர் அவளை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, ஒரு கம்பீரமான நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்…

​மிருதுளா அவனது பின்னாலேயே மெல்ல நடந்து வந்தாள். வரவேற்பறையில் வீரமாணிக்கம் அமர்ந்திருக்க, ரன்வீரை கண்டதும் இன்முகமாக வரவேற்றார் அவர், அந்த சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் மிருதுளாவும் அங்கே நின்று தான் கவனித்துக் கொண்டிருந்தாள்…

​”உன்னை அன்னைக்கு பார்ட்டியில பார்த்ததை விட இப்போ ரொம்ப மென்மையாத் தெரியுற,” என்று வீரமாணிக்கம் புன்னகையுடன் சொல்ல,.. “அன்னைக்கு நான் ஒரு பிஸ்னஸ்மேனா இருந்தேன், ஆனா இன்னைக்கு உங்க பேத்தியோட மனம் கவர்ந்தவனா வந்திருக்கேன்,” என்று ரன்வீர் மிகத் தெளிவாகவும், நேர்மையாகவும் பேசத் தொடங்கினான்…

​அடுத்த ஒரு மணிநேரம் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, ரன்வீர் தனது குடும்பப் பின்னணி, தனது அப்பா மறைந்த பிறகு தான் சந்தித்த சவால்கள் மற்றும் மிருதுளாவின் மீது தான் வைத்திருக்கும் அளவற்ற அன்பு என அனைத்தையும் ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்து கொண்டான், அவனது பேச்சில் இருந்த உண்மையும், நிதானமும் வீரமாணிக்கத்தை மிகவும் கவர்ந்தன…

​”மிருதுளா ரொம்பத் தனிமையை விரும்புற பொண்ணு ரன்வீர், அவளை ஒரு பொக்கிஷம் மாதிரி பார்த்துப்பியா?” என்று வீரமாணிக்கம் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்க, அவரது கரத்தை பற்றிக் கொண்டவன்,.. “அவளை நான் என் உயிரை விட மேலாப் பார்த்துப்பேன், அவளோட தனிமையை நான் காதலால நிரப்புவேன், இது வெறும் வார்த்தை இல்ல, என் சத்தியம்,” என்று ரன்வீர் உறுதியாகச் சொன்னான்…

​அவனது அந்தத் தெளிவான பதிலைக் கேட்டதும் வீரமாணிக்கத்திற்கு ரன்வீரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

“என் பேத்தி சரியான ஆளைத்தான் தேடிப் பிடிச்சிருக்கா, உன் தைரியமும், இந்த நேர்மையும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா, எனக்கு உங்க கல்யாணத்துல பூரண சம்மதம்!” என்று அவர் மனமுவந்து ஆசிர்வதிக்க,
​இதைக் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பியது.

ரன்வீர் மெல்லத் திரும்பி அவள் இருக்கும் திசையைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்புச் சிரிக்க, அந்த லேசர் விழிகள் இப்போது வெற்றிக் களிப்பில் மின்னின…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!