Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 15

அத்தியாயம் – 15

 

“ஏதாவது சாப்பிடுறியா கண்ணா, குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா?” என்று வீரமாணிக்கம் மிகுந்த பாசத்துடன் வினவிட, ​பணம் கைக்கு வந்த உடனேயே கிளம்பிவிட்டான் என்று தாத்தா நினைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த விஷ்வா “குடிச்சிட்டுதான் வந்தேன் தாத்தா வர்றப்பவே மிருதுளா ஜூஸ் போட்டு கொடுத்தா,” என்று ஒரு பொய்யைச் சொல்லி சமாளித்தான்…

​”அப்படியா? சரி சரி…” என்றவர், ஏதோ நினைவுக்கு வந்தவராக, “மிருதுளான்னு சொன்ன அப்புறம்தான் ஞாபகம் வருது விஷ்வா, சீக்கிரமே மிருதுளாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணியிருக்கேன்ப்பா, உன் அப்பா சுந்தர்கிட்டயும் இதைப்பத்திப் பேசினேன், அவன் உன் கல்யாணத்தோடவே கூட மிருதுளா கல்யாணத்தையும் சேர்த்து வச்சுக்கலாம்னு சொல்லியிருக்கான்,” என்று சொல்ல, அதைக் கேட்ட விஷ்வாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது…



Advertisement

​அதிர்ச்சியில் உறைந்துபோனவனோ… “என்ன தாத்தா சொல்றீங்க? மிருதுளாவுக்கு கல்யாணமா? யாரு… மாப்பிள்ளை யாரு?” என்று இழுத்திட,.. ​”சுந்தர் உன்கிட்ட சொல்லலையா விஷ்வா? மிருதுளாவும் ஒரு பையனும் விரும்புறாங்க, அந்தப் பையனும் பெரிய இடத்துப் பையன், ரொம்ப செல்வம் கொண்டவன், அன்பானவன்,” என்று வீரமாணிக்கம் பெருமையாகச் சொல்ல, விஷ்வாவிற்கு இது பேரிடியாக இறங்கியது…

​தந்தை சுந்தரம் இந்த விஷயத்தைத் தனக்குத் தெரியக் கூடாது என்று வேண்டுமென்றே மறைத்திருப்பது அவனுக்குப் புரிந்தது, மிருதுளாவை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற பிடிவாதம் அவனிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது. அதனால்தான், தனக்குப் பார்த்த பெண்ணிடம் கூட இதுவரையிலும் அவன் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை, தந்தையை மீறித் திருமணத்தை நிறுத்த முடியாத இக்கட்டில் அவன் இருந்தாலும், ஒரு சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்…

​மிருதுளா எங்கே போய்விடப் போகிறாள் என்ற மிதப்பில் லேசாக விட்டவனுக்கு, அவள் ஒருவனைத்  காதலிக்கிறாள் என்பது தாங்க முடியாத ஆத்திரத்தைத் தந்தது, இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் அவள் தன் கையை விட்டுப் போய்விடுவாள் என்று எண்ணியவன், தன் தந்திர மூளையை வேலையில் இறக்கினான்…

Advertisement

அவன் மௌனத்தை கண்ட வீரமாணிக்கம்… “என்னப்பா… என்ன யோசனை?” என்று மீண்டும் கேட்க, சட்டென்று அவரை அணைத்துக்கொண்டு போலி கண்ணீர் வடிக்கத் தொடங்கினான் விஷ்வா,

Advertisement

பதறிப்போனவரோ…​”என்னாச்சுப்பா, ஏன் அழற?” என்று வினவ… “தாத்தா… நான் இவ்வளவு நாள் இதை உங்ககிட்ட மறைச்சது தப்புதான், ஆனா இப்போ சொல்லாம இருந்தா என் வாழ்க்கை நரகமாயிடும்,” என்று தேம்பித் தேம்பி அழுவது போல் நடித்தவன்… “சின்ன வயசுல இருந்தே எனக்கு மிருதுளானா ரொம்ப பிடிக்கும் தாத்தா, இப்போ அந்த பிடித்தம் நேசமா மாறி அவளை நான் என் உயிரை விட அதிகமா நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்,” என்று சொல்ல, கேட்ட வீரமாணிக்கத்திற்கோ மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது…

​”என்ன சொல்ற விஷ்வா? இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல?” என்று அவர் பதற்றத்துடன் வினவ… ​”அப்பாகிட்ட சொன்னேன் தாத்தா, ஆனா அவர் மிருதுளாலாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டானு என்னை மிரட்டிதான் வேற பொண்ணைப் பார்க்க அழைச்சிட்டுப் போனாரு, எனக்கு இப்போ வரை அந்த கல்யாணத்துல நாட்டம் இல்ல, எப்படியாவது நான் அப்பாவை கன்வின்ஸ் பண்ணி மிருதுளாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா இப்போ நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, எனக்கு மிருதுளா வேணும் தாத்தா, அவ இல்லைனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்,” என்று அவன் கூற, தன் பேரன் இத்தனை பெரிய வார்த்தையைக் கூறியதைக் கேட்டுப் பதறிப்போனார் அவர்…

​”என்ன பேச்சு இது விஷ்வா?” என்று அவர் அதட்ட… ​”ப்ளீஸ் தாத்தா, எனக்கு மிருதுளா வேணும், நான் தப்பு பண்ணிட்டேன், முன்னாடியே உங்ககிட்ட இதைப் பத்தி சொல்லியிருக்கணும். ஆனா இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லையே தாத்தா,” என்று கூறி அவன் போலிக் கண்ணீர் சிந்த, அந்தப் பெரியவரின் மனம் பேரனுக்காக மிகவும் துயரப்பட்டது…

Advertisement

​ஆனாலும் மிருதுளா மற்றும் ரன்வீரின் காதலையும் அவரால் அத்தனை எளிதில் எதிர்க்க முடியாதே! அதனால் அவர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ள, விஷ்வாவோ தன் கண்ணீராலேயே அவர் மனதைக் கலைத்தான்…

​”மிருதுளாவை நான் நல்லபடியா பார்த்துப்பேன் தாத்தா, நம்ம குடும்பத்துலேயே அவ இருப்பா, நாம எல்லாரும் ஒன்னா ஒரே வீட்ல வாழலாம், யாரோ ஒரு வெளியாள் கிட்ட அவளைக் கொடுத்து அனுப்பிட்டு நீங்க மட்டும் இங்க தனியா இருக்கணுமா? யோசிச்சுப் பாருங்க தாத்தா,” என்று அவன் பாசப் போராட்டத்தை அரங்கேற்றிட, ​தன் ரத்தமான பேரன் தன் காலடியில் விழுந்து அழுவதைக் கண்டு வீரமாணிக்கம் நிலைகுலைந்து போனார்..

ஒருபுறம் ரன்வீரின் கண்ணியமான குணமும், மிருதுளாவின் கண்களில் தெரிந்த அந்த தேஜஸும் அவருக்கு நினைவுக்கு வந்தது. மறுபுறம், தன் சொந்த பேரன் தன் காலடியில் விழுந்து அழுதுகொண்டிருக்கிறான், அவருக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை…

“என்ன தாத்தா மௌனமாகிட்டீங்க” அவன் வினவ,.. ​”விஷ்வா… கொஞ்சம் அமைதியா இருப்பா, இது எவ்வளவு பெரிய விஷயம்னு உனக்குத் தெரியல, மிருதுளா ஏற்கனவே ஒருத்தரை விரும்புறதா என்கிட்ட சொல்லிட்டா, நானும் சம்மதிச்சுட்டேன், இப்போ திடீர்னு இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன்?” என்று அவர் தவிப்புடன் கேட்டார்…

​விஷ்வாவோ சட்டென்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டு… “தாத்தா… அவ சின்னப் பொண்ணு, அவளுக்கு எது நல்லதுன்னு தெரியல, யாரோ ஒரு வெளி ஆள் வந்து அவளை மயக்கிட்டான், ஆனா நான் அவளை சின்ன வயசுல இருந்து பார்த்தவன், என் அப்பா வேணாம்னு சொன்னதுனாலதான் நான் இவ்வளவு நாள் தள்ளி நின்னேன், இப்போ அவ வேற ஒருத்தன் பின்னாடி போறதை என்னால தாங்கிக்கவே முடியல தாத்தா, எனக்கு அவ வேணும்!” என்று பிடிவாதமாகச் சொல்ல, ​வீரமாணிக்கமோ…. “சரி விஷ்வா… அழாத, நான் இதைப் பத்தி யோசிக்கிறேன். ஆனா மிருதுளா மனசை மாத்துறது அவ்வளவு லேசான காரியம் இல்லை,” என்றார் சற்றே தளர்ந்த குரலில்.

​”நீங்க சொன்னா அவ கேப்பா தாத்தா, அவளுக்கு உங்க வார்த்தைதான் வேதம், ப்ளீஸ்… எனக்காக அவகிட்ட பேசுங்க,” என்று விஷ்வா ஒரு தந்திரமான புன்னகையை மனதிற்குள் மறைத்துக்கொண்டு வேண்டிட,..
“நான் பேசுறேன்” என்று அவனை சமாதானம் படுத்தி அனுப்பியவர், அவன் கிளம்பிச் சென்ற பிறகு அந்த அறையில் தனியாக அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார்…

​ரன்வீர் குணமானவன்தான், அதில் அவருக்குச் சந்தேகமே இல்லை. அவனது நிதானமும், மரியாதையும் வீரமாணிக்கத்திற்குப் பிடித்துதான் இருந்தது. ஆனால், இப்போது தன் பேரனுக்கு முன்னால் ரன்வீர் அவருக்கு இரண்டாம் பட்சமாகத்தான் தெரிந்தான், மிருதுளாவும் அவரது சொந்தப் பேத்தியாக இருந்தாலும், ஆண் வாரிசு என்ற அந்தப் பழமைவாதப் பாசம் விஷ்வாவின் சந்தோஷத்தையே முதன்மையாகக் காட்டத் தொடங்கியது…

​மிருதுளா-ரன்வீர் காதலில் இருக்கும் உண்மையை விட, விஷ்வாவின் அந்த கண்ணீரும், உயிரை விட்டுடுவேன் என்ற மிரட்டலும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது…

‘நம்ம குடும்பப் பையனுக்கே அவளைக் கட்டி வச்சுட்டா, அவளும் நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா, குடும்பச் சொத்தும் வெளியில போகாது’ என்று தனக்குள்ளே சமாதானம் சொல்லிக்கொண்டார்…

ரன்வீர் மிருதுளாவின் மேல் வைத்திருக்கும் ஆழமான காதலை விட, விஷ்வா விரித்த வஞ்சக வலை புரியாமல் அவனுடன் அவள் சேர்வதே சரியானது என்று அவர் மிகவும் தவறான முடிவை எடுத்தார்…

*****************

ரன்வீரின் நிறுவனம் அந்த மாலை நேரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், ரன்வீரோ தனது கேபினில் ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த நகரத்தின் விளக்குகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான், அவனது அந்தத் தீர்க்கமான விழிகளில் இன்று ஒரு தேடல் தெரிந்தது.

அந்த கணம்.. ​”என்ன ரன்வீர், ரொம்ப நேரம் ஏதோ ஆழ்ந்த யோசனையிலேயே இருக்க?” என்று கேட்டபடி உள்ளே வந்தான் அவனது நண்பன் நிதின்…

​ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு நண்பனை ஏறிட்டவனோ, “மிருதுளாகிட்ட உண்மையை சொல்லலாம்னு நினைக்கிறேன் நிதின், அவகிட்ட மறைக்கிறது எனக்கு ரொம்ப கில்ட்டி ஃபீலிங்கா இருக்கு,” என்றான், அவனது குரலில் ஒருவிதமான தவிப்பு இருந்தது…

“உண்மையை சொன்னா அவ கோபப்பட மாட்டாளா?” என்று நிதின் சற்றே சந்தேகமாக வினவிட..
​”கோபப்படத்தான் செய்வா, அவளோட கோபத்தை எதிர்கொள்ளவும் நான் தயாரா தான் இருக்கேன், ஆனா இனியும் என்னால அவகிட்ட பொய் சொல்லிட்டு இருக்க முடியல, அதுமட்டும் இல்லாம, இப்போ வரைக்கும் என்னால அந்த ஃபைலை நெருங்க முடியல அந்தத்  தாத்தா ரொம்ப கவனமா இருக்கார், மிருதுளாகிட்ட எல்லா உண்மையும் சொன்னா, அவ எனக்கு ஹெல்ப் பண்ண வாய்ப்பிருக்குல?” என்று ரன்வீர் தனது திட்டத்தை விளக்கிட,.. ​நிதின் மெல்லத் தலையசைத்துவிட்டு, “எனக்கு மிருதுளாவோட கேரக்டர் பத்தித் தெரியல ரன்வீர். சோ, நீ என்ன முடிவு எடுக்கிறியோ எடு, அது எப்போதும் சரியாத்தான் இருக்கும்,” என்றவன்,.. ஒரு நிமிடம் நிறுத்தி, ரன்வீரின் கண்களை நேராகப் பார்த்து, “அப்புறம்… ஒரு விஷயம் கேட்கணும், நிஜமாவே மிருதுளாவை நீ உண்மையா நேசிக்கிறியா?” என்று வினவினான்…

​ரன்வீர் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை,.. கண்கள் மின்னிட.. “என்னோட உயிரே அவதான்டா, அந்த ஃபைலை எடுக்கிறது என் அப்பா இறப்புக்காக நான் செய்ற கடமை, ஆனா மிருதுளா என் வாழ்க்கையோட மூச்சு, அவ இல்லாம இந்த ரன்வீர் இல்ல,” என்று கூறித் தன் நேசத்தை ஆழமாக உறுதிப்படுத்தினான்…

********

அடுத்த நாள் மாலை, மிருதுளா ரன்வீரின் காரில் ஏறியதிலிருந்தே சூழல் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எப்போதுமே உற்சாகமாகப் பேசும் ரன்வீர், இன்று ஏதோ ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பது போல் மௌனமாகவே இருந்தான், மிருதுளா வழக்கம் போல் ஜாலியாக ஏதேனும் பேசினாலும் கூட அவன் சுரத்தையே இல்லாமல் பதில் சொல்லவும், அவளது குழப்பம் மெல்ல பயமாக மாற, “என்னாச்சு வீர்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று மென்மையாகக் கேட்டாள்.

​அவள் இப்போதெல்லாம் அவனை இந்த ‘வீர்’ என்ற பிரத்யேகப் பெயரில் தான் அழைக்க ஆரம்பித்திருக்கிறாள், அந்த அழைப்பில் இருக்கும் நெருக்கம் ரன்வீரின் இதயத்தை இன்னும் கனக்கச் செய்தது, இவ்வளவு அன்பைக் காட்டும் இவளிடம் எப்படி உண்மையைச் சொல்வது என்று அவன் தவித்தான்…

​ஒரு அமைதியான இடத்தில் காரை ஓரமாக நிறுத்திய ரன்வீர், ஸ்டீயரிங்கின் மேல் கைகளை வைத்தபடி சில நொடிகள் கண்களை மூடி அமர்ந்திருந்தவன், பிறகு, மெல்லத் திரும்பி அவளது கண்களை நேராகப் பார்த்தான், அவனது அந்த விழிகளில் இன்று அதிகாரம் இல்லை, ஒருவிதமான கெஞ்சல் கலந்த வலி இருந்தது…

“மிருதுளா… உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்” அவன் மெல்ல ஆரம்பிக்க, “உண்மையா? என்ன உண்மை வீர்?” என்றாள் அவள் புரியாமல்…

​தொண்டையைச் செருமிக்கொண்டவனோ, “நீ என்னை விரும்புறதுக்கு முன்னாடியே, நான் உன்னைத் தேடி வந்தது ஒரு காரணத்தோட தான்,” என்று பீடிகை போட, மிருதுளாவோ, “காரணமா? என்ன காரணம்?” என்றாள்.

​”உன் தாத்தாகிட்ட எனக்கு தேவையான ஒரு ஃபைல் இருக்கு, அந்த ஃபைல் எனக்கு ரொம்ப முக்கியம், அதைத் திருடத் தான் அன்னைக்கு உன் வீட்டுக்கு திருடன் போல வந்தேன்,” என்று அவன் உண்மையை உடைத்திட, மிருதுளா அப்படியே சிலையென உறைந்து போனாள், ஆனாலும் அவளால் இதனை நம்ப இயலவில்லை, அவன் தன்னை ஏமாற்றுவான் என்பதை எண்ணி பார்க்க கூட விரும்பாதவள் “என்கிட்ட விளையாடுறீங்களா வீர்?” என்றாள் அவன் விளையாடுகிறான் என்று எண்ணி.

அவனோ ​தலையை இல்லை என்பது போல இடவலமாக அசைத்தவன் “அன்னைக்கு நான் உன் வீட்டுக்குள்ள திருடன் போல நுழைஞ்சது எனக்குத் தேவையான பைலை எடுக்கத் தான்,” என்று அவள் கண்களை பார்த்து அழுத்தமாகக் கூற, அந்த வார்த்தையில் இருந்த அழுத்தம் அவன் உண்மையை தான் சொல்கிறான் என்பதை அவளுக்கு புரிய வைத்தது,..

ஒரு கணம் சிலையென சமைந்து போனவள்… “அ… அப்போ எனக்காக வரலையா? அன்னைக்கு எனக்காக தானே வந்ததா சொன்னீங்க?” என்று கேட்கும்போதே அவள் கண்கள் குளமாகி போனது,..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!