ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 20
அத்தியாயம் – 20
திடீரென்று ஒலித்த அந்தக் குரலின் அதிகாரத்தில் மேளச் சத்தம் சட்டென்று அடங்கியது, மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் வாசலை நோக்கித் திரும்பிட, அங்கே ரன்வீர் தான் நின்று கொண்டிருந்தான், அவனது முகம் ஆவேசத்தில் தகித்துக் கொண்டிருந்தது, அவனுடன் அவனது நண்பன் நிதினும், ஆஜானுபாகுவான அவனது பாதுகாவலர்கள் சிலரும் வந்திருந்தனர்…
மிருதுளா அசைவற்று அமர்ந்திருந்தாள், ரன்வீரைக் கண்டதும் அவளது மனதிற்குள் ஏனோ ஒரு இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது, ஆனாலும், அடுத்த கணமே அவன் செய்ததாக அவள் நம்பும் துரோகமும் நினைவிற்க்கு வர, அவளது முகம் மீண்டும் வெறுப்பால் சிவந்தது…
Advertisement
ரன்வீர் யாரையும் பொருட்படுத்தாமல் நேராக மணமேடையை நோக்கி நடக்க, மண்டபத்தில் இருந்த அனைவரின் பார்வையும் ரன்வீர் மற்றும் அவனது பாதுகாவலர்கள் மீதுதான் இருந்தது, அவன் மேடையை நெருங்கியதும், சுந்தரம்
ஆவேசமாக அவன் முன் வந்து நின்று… ”எதுக்கு இங்கே வந்த? வெளிய போ!” என்று சீறினார்….
விஷ்வாவோ தாலி கயிற்றை இறுக்கமாகப் பற்றியபடி, ரன்வீரின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்தை மறைக்கப் போராடினான், ரன்வீரோ சுந்தரத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை, மேடையில் ஏறி, மிருதுளாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான், அவனது பார்வையில் தெரிந்த அந்த உண்மையும், தவிப்பும் அவளை நிலைகுலையச் செய்தாலும், அவளது கோபம் அவளைக் கட்டிப்போட்டுவிட்டது
”மிருதுளா… இந்த கல்யாணம் நடக்கக் கூடாது!” என்று தீர்க்கமாகச் சொன்னான் ரன்வீர், அவனது ஒவ்வொரு வார்த்தையும் அந்த மண்டபத்தில் ஒரு போர்க்களத்திற்கான அறிகுறியாக எதிரொலித்தது…
Advertisement
மிருதுளாவிற்கோ ஆத்திரம் தலைக்கேறியது. “அதை சொல்ல நீ யாரு?” என்று ஆவேசமாக எழுந்தாள், தான் நேசித்த ஒருவன், தன் தாத்தாவையே கொலை செய்து விட்டு, இப்போது எந்த உரிமையில் வந்து இப்படிப் பேசுகிறான் என்ற கோபம் அவளை பாடாய்படுத்தியது…
Advertisement
அவள் மணக்கோலத்தில் இன்னொருவனுக்குச் சொந்தமாகத் தயாராக மேடையில் அமர்ந்திருப்பதே ரன்வீருக்கு ஏற்கனவே சொல்லொணா வலியைத் தந்திருந்த நிலையில், இப்போது அவளது வார்த்தைளும் வேறு அந்த வலியை இன்னும் ஆழமாக ரணப்படுத்தின. ஆனாலும், தன் வேதனையை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாத அவன், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி, “நீ எனக்கு மட்டுமே சொந்தம்! உன்னை எவனும் சொந்தமாக்கிக்க நான் விடமாட்டேன்,” என்று அழுத்தமாகக் கூறினான்…
அவனது அந்த அதிகாரத் தோரணை மிருதுளாவிற்கு மேலும் ஆத்திரத்தைக் கொடுக்க… “என் தாத்தாவையே கொன்னுட்டு, இப்போ எந்த தைரியத்துல வந்து இங்கே நிக்கிற? எதை வச்சு நான் உனக்கு சொந்தம்னு சொல்ற?” என்று அவள் கத்தினாள்…
அவள் அப்படிப் பேசப் பேச, ரன்வீரின் முகம் இறுகியது. அவன் விஷ்வாவை ஒரு கேவலமான பார்வை பார்க்க, விஷ்வாவோ பயத்திலும் ஆத்திரத்திலும், “மிருதுளா, இவன்கிட்ட பேசிட்டு இருக்காதே, இவன் ஒரு பொறுக்கி… இவனை முதல்ல வெளியே தள்ளுங்கடா!” என்று தன் அடியாட்களை ஏவி விட… ஆனால் இரும்புச் சுவர் போல ரன்வீரை சுற்றி நின்ற அவனின் பாதுகாவலர்களின் முன் விஷ்வாவின் ஆட்கள் கொசுவாக தான் தெரிந்தனர்,..
Advertisement
ஒரு அடி முன்னே வந்து மிருதுளாவின் கையைப் பற்றிய ரன்வீர்,.. “உண்மையை நிரூபிக்க என்கிட்ட இப்போ ஆதாரம் இல்லாம இருக்கலாம் மிருதுளா… ஆனா உன்னை இந்த நரகத்துல தள்ள என் உயிர் இருக்கும் வரைக்கும் விடமாட்டேன்!” என்று கர்ஜிக்க,..
அவளோ “உன் நாடகத்தை நிறுத்து, முதல்ல என் கையை விடு” என்று திமிற, அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டவன், அவளது போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காதவன் போல் அருகிலிருந்த விஷ்வாவின் கையிலிருந்த தாலியை மின்னல் வேகத்தில் உருவி எடுத்தான்…
”ஏய்! என்னடா பண்ணுற?” என்று எகிறிக்கொண்டு வந்த விஷ்வாவின் முகத்திலேயே ரன்வீரின் பலமான குத்து விழுந்தது. அந்த அடியில் விஷ்வா நிலைகுலைந்து கீழே போய் விழ,.. அவனை ஒரு ஏளனப் பார்வையுடன் பார்த்த ரன்வீர், “உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்டா!” என்று சிங்கமாய் கர்ஜித்துவிட்டு, ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் மிருதுளாவின் கழுத்தில் அந்த மாங்கல்யத்தை இறுக்கிக் கட்டினான்…
வெறும் சில நொடிகளில் அரங்கேறிவிட்ட இந்த அதிரடியான சம்பவத்தால், மண்டபத்தில் இருந்த அனைவரும் சிலையாக உறைந்து அதிர்ச்சியாகப் பார்த்தனர். மிருதுளாவோ ஒரு கணம் மூச்சற்று நின்றாள், தன் கழுத்தில் விழுந்த அந்த பாரமான கயிறு அவளுக்குள் சொல்ல முடியாத ஒரு கலக்கத்தையும், அதே சமயம் ஒரு விசித்திரமான பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் கொடுத்தது…
அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்திருக்க, “இப்போ நீ எனக்கு சொந்தம் மிருதுளா… உன்னைத் தொட இனி இந்த உலகத்துல எவனுக்கும் உரிமையில்லை!” என்று அவளது காதோரம் உறுதியாகச் சொல்ல, சட்டென்று ரன்வீரின் நெஞ்சைப் பிடித்து பலமாகப் பின்னுக்குத் தள்ளியவள், அதிர்ச்சியும் ஆத்திரமும் மேலோங்க அவனைப் பார்த்தாள். அவள் உடல் முழுவதும் கோபத்தில் நடுங்கியது…
”எந்த தைரியத்துல எனக்குத் தாலி கட்டுன நீ? என் சம்மதம் இல்லாம, ஒரு கொலைகாரன் கையால என் கழுத்துல தாலி ஏறுறதை விட நான் செத்துப்போயிருக்கலாம்!” என்று கதறினாள். அவள் கைகள் தாலியை அறுத்து எறியத் துடித்தாலும், மங்கல நாண் என்ற அந்தப் புனிதமான உணர்வு அவளைத் தடுத்து நிறுத்தியது…
சுந்தரமோ தன் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டதே என்று அதிர்ச்சியில் சமைந்து போய் நின்றார், சரஸ்வதிக்கும் இது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, ரன்வீர் உண்மையில் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது தெரியாததால், தன் கண்முன்னே நடக்கும் இந்தச் சம்பவங்களைக் கண்டு தவித்துப் போய் நின்றார்…
”இனி நமக்கு இங்கே வேலை இல்லை ரன்வீர், கிளம்பலாம்,” என்று நிதின் ரன்வீரின் காதருகே வந்து சொல்ல, அவனுக்கும் அங்கிருந்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றியது…
”கிளம்பலாமா மிருது?” என்று ரன்வீர் அழைக்க, அவளோ ஆவேசமாக… “இல்லை! நான் உன்கூட வரமாட்டேன்” என்று மறுத்தவள்,… “மாமா!” என்று தன் தாய் மாமனை நோக்கிக் கத்தினாள், சுந்தரமும் விடாப்பிடியாக, “ஆமா, அவளை நான் உன்கூட அனுப்ப மாட்டேன், அவ எங்க வீட்டுப் பொண்ணு!” என்று குறுக்கே நின்றார்…
”அதெல்லாம் முன்னாடி! இப்போ அவ என் பொண்டாட்டி,” என்று ரன்வீர் அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அவளது கரத்தைப் பற்றி இழுக்க முயன்றிட.. “என்னை விடுடா! நான் உன்கூட வரமாட்டேன்,” என்று அவள் பிடிவாதம் செய்ய, “பிடிவாதம் செய்யாம வா மிருதுளா,” அவன் குரலில் எச்சரிக்கை தொனித்தது…
”முடியாது! என்னை விட்டுடு, உன்னை மாதிரி ஒரு கொலைகாரன் கூட என்னால வர முடியாது!” என்று அவள் கண்ணீருடன் ஆவேசமாகக் கத்திட, இத்தனை தூரம் பழகியும், அவள் தன்னைச் சற்றும் புரிந்துகொள்ளாமல் ஒரு கொலைகாரனாகவே பார்க்கிறாளே என்ற விரக்தி ரன்வீருக்குள் ஒருபுறம்… அதே சமயம், அவளை இந்த நரகத்திலிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மறுபுறம். ஆத்திரமும் ஆவேசமும் ஒன்று சேர, ரன்வீர் அவளது கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டான். அவ்வளவு தான் அந்த ஒரு அறையிலேயே மிருதுளா மயங்கிச் சரிந்தாள்…
கீழே விழப் போனவளைத் லாவகமாகத் தாங்கி, தன் தோளில் போட்டுக்கொண்ட ரன்வீர், சிங்கத்தைப் போல அங்கிருந்து மிடுக்காக நடந்து செல்ல, அவனது ஆஜானுபாகுவான பாதுகாவலர்களைத் தாண்டி சுந்தரத்தின் ஆட்களால் ரன்வீரை நெருங்க கூட இயலவில்லை…
கல்யாண மண்டபமே ஸ்தம்பித்து நிற்க, ரன்வீர் தன் உரிமையையும் காதலையும் ஒரு முரட்டுத்தனமான அதிகாரத்துடன் நிலைநாட்டிவிட்டு மிருதுளாவுடன் வெளியேறினான்…
இரண்டு மணி நேரத்திற்குப் பின் தான் மெல்லக் கண்விழித்தாள் மிருதுளா, அறையில் பரவியிருந்த மிதமான வெளிச்சத்திலேயே அந்த அறையின் பிரமாண்டம் அவளுக்கு வியப்பை அளித்தது.
“இது என்ன இடம்?” என்று அவள் மூளை யோசிக்கத் தொடங்கிய போதே, திருமண மண்டபத்தில் நடந்த களேபரங்கள் அனைத்தும் மின்னலென நினைவுக்கு வந்தன…
பதற்றத்துடன் குனிந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் உடல் நடுங்கியது, அவன் அராஜகமாகக் கட்டிய அந்தத் தாலிக் கயிறு, அவளது கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தது, தான் வெறுக்கும் ஒருவனின் அடையாளத்தைச் சுமக்கிறோம் என்ற ஆவேசத்தில் அவள் படுக்கையை விட்டுத் துள்ளி எழ, அதே சமயம் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ரன்வீர்.
அவனைக் கண்டதும் மிருதுளாவின் கண்கள் கனலாய் சிவந்தன. “என்னை எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்த? இந்தத் தாலியைக் கட்டுனா நான் உனக்கு அடிமையாகிடுவேன்னு நினைச்சியா?” என்று சீறினாள்…
ரன்வீர் அவளது ஆத்திரத்தைப் பொருட்படுத்தாமல், கையில் வைத்திருந்த ஜூஸ் நிறைந்த கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு.. “முதல்ல இந்த ஜூஸைக் குடி, ரெண்டு மணி நேரமா மயக்கத்துல இருந்திருக்க, உடல் சோர்ந்து போயிருக்கும்” என்றான் மிக சாதாரணமாக.
அவனது இந்த அக்கறை அவளை இன்னும் ஆத்திரப்படுத்தியது… “எனக்கு எதுவும் வேண்டாம்! ஒழுங்கு மரியாதையா என்னை போக விடு, இல்லைனா நடக்கிறதே வேற” என்று கத்தி ஆவேசம் கொள்ள, ரன்வீரோ மெல்ல அவளருகே நெருங்கி வந்தவன்,..
”எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற? கொஞ்சம் அமைதியா இரு, பேசலாம்,” என்று அவன் நிதானமாகச் சொல்ல, மிருதுளாவின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.
”உன்கிட்ட பேசுறதுக்கு எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை! என் அனுமதி இல்லாம என் கழுத்துல தாலி கட்டி, அடிச்சு இங்கே இழுத்துட்டு வந்திருக்க… என்ன மாதிரியான மனுஷன் நீ? எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல என் மாமா போலீஸோட இங்கே வந்துடுவாரு, அப்புறம் இருக்கு உனக்கு!” என்று அவள் சத்தமிட, அவனோ சட்டென்று இடைமறித்து..
”உன் மாமா போலீஸைத் தேடிப் போக மாட்டார் மிருதுளா! ஏன்னா, போலீஸ் உள்ளே வந்தா முதல்ல கைதாகப் போறது அவரோட மகன் விஷ்வாதான்!” என்று அவன் உண்மையை உரைக்க, மிருதுளா அதை நம்பத் தயாராக இல்லை…
”போதும் நிறுத்து! உன்னை எவ்வளவு நம்பினேன்… ஆனா நீ இவ்வளவு கேவலமானவனா? இன்னும் விஷ்வா மேலேயே பழி போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறியா?” என்று அவள் அருவருப்புடன் கேட்க, ரன்வீர் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுத் தனக்குள் எழுந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்…
”கேவலமானவனா இருந்தா ஊர் அறிய தாலி கட்டி உன்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்க மாட்டேன்!” என்று அழுத்தமாக உரைத்துவிட்டு, மேற்கொண்டு அங்கு நின்றால் தன் நிதானம் தப்பிவிடும் என்று உணர்ந்து அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டான்.
அவளோ அவன் போனதும் அங்கிருந்து தப்பித்துச் செல்லலாம் எனும் முடிவில் கதவை நோக்கி ஓடினாள். ஆனால், அந்தக் கதவு வெளியே இருந்து தாழிடப்பட்டிருந்தது, அவன் தான் தன்னைச் சிறை வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்பதை அறிந்தவள், அவமானத்திலும் ஆத்திரத்திலும் துடித்தாள்…
”கதவைத் திறடா! பெரிய யோக்கியன் மாதிரி பேசிட்டு கதவைப் பூட்டிட்டுப் போயிருக்க… திறடா!” என்று கத்திக் கதவை ஓங்கி தட்டினாள், தன் மொத்த பலத்தையும் கொண்டு கதவை உடைக்க முயன்றும், அந்தத் தேக்கு மரக் கதவு அசைய கூட இல்லை. போராடிப் போராடி உடல் சோர்ந்து போனவள், அந்தத் தரையிலேயே அமர்ந்து தன் நிலையை எண்ணிக் கதறி அழுதாள்…
கழுத்தில் மின்னும் அந்தப் புதுத் தாலி அவளுக்குப் பெரும் சுமையாகத் தோன்றியது, ரன்வீர் சொல்லும் அந்த உண்மை அவளுக்குப் புரியப் போகிறதா? அல்லது விஷ்வா மற்றும் சுந்தரத்தின் சதிவலையில் அவள் இன்னும் சிக்கிக் கிடக்கப் போகிறாளா?
