Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 44

அத்தியாயம் – 44

 

மயக்கத்திலிருந்து மெல்லக் கண்விழித்த மிருதுளா, தான் மருத்துவமனையில் இருப்பதைப் புரிந்து கொண்டாள். கடந்த சில மணி நேரங்களில் நடந்தவை அனைத்தும் அவள் நினைவில் நிழலாட, கண்கள் தானாகவே குளமாகி, கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. அந்த அறையில் இருந்த காயத்ரி அவள் விழித்துக்கொண்டதைக் கண்டு அருகில் வந்தவர்… ​”மிருதுளா… இப்போ எப்படிம்மா இருக்க?” என்று கனிவோடு கேட்க, மிருதுளா சட்டென்று எழுந்து அவரைத் தாவி அணைத்துக்கொண்டு கதறி அழத் தொடங்கினாள்.

​”நான் ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன் அத்தை! ர… ரன்வீரை நான் ரொம்ப நோகடிச்சிட்டேன், தப்பே பண்ணாத அவருக்கு ரொம்பப் பெரிய தண்டனை கொடுத்துட்டேன், அ.. அவர் மனசையே சுக்கு நூறாக்கிட்டேன் அத்தை! ஒரு பாவமும் அறியாத என் ரன்வீரை நான் எவ்வளவு காயப்படுத்திட்டேன்,” என்று சொல்லி விக்கி விக்கி அழுதவள்,..
​”அவர் எத்தனை முறை என்கிட்ட கெஞ்சினாரு அத்தை… நான் இதைச் செய்யல மிருதுளா, என்னை நம்பு’ன்னு சொன்னப்போ எல்லாம், நான் ஒரு வார்த்தை கூடக் கேக்கலயே, அவரை கொலைகாரன்னு சொல்லி சொல்லியே அருவருப்பாப் பார்த்தேனே அத்தை! அந்த ரணம் அவருக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்? தப்பே பண்ணாத மனுஷனை நோகடிச்சி அவர் குடும்பத்தை விட்டும் பிரிச்சிட்டேனே” என்று அழுதவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்ற உணர்ச்சி கொப்பளித்தது…



Advertisement

​காயத்ரி அவளது முதுகை வருடிக்கொடுத்து.. “அழாதம்மா… உண்மை இப்போ வெளிய வந்திருச்சுல்ல, அந்த விஷ்வாவையும் சுந்தரத்தையும் போலீஸ் கூட்டிட்டுப் போயிட்டாங்க, ரன்வீர் மேல இருந்த பழி நீங்கிடுச்சு. ரன்வீர் பெரிய மனசுக்காரன், அவன் உன்னை மன்னிச்சுடுவான்,” என்று ஆறுதல் சொல்ல, “இல்ல அத்தை… நான் பேசின வார்த்தைகள் ரொம்ப மோசமானது, உன் முகத்தைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு’னு சொல்லிட்டேன் அத்தை, அவர் என்னை எப்படி மன்னிப்பார்? எனக்கு இப்போவே ரன்வீரைப் பார்க்கணும், அவர்கிட்ட மன்னிப்புக் கேட்கனும்!” என்று கதறியபடி, தன் கையில் இருந்த குளுக்கோஸ் ஊசியைப் பிடுங்க முயல, ​”இரும்மா… இப்படியெல்லாம் நீ செய்யக்கூடாது, கொஞ்சம் பொறுமையாக இரு,” என்று காயத்ரி அவளைத் தடுக்க முயல, மிருதுளாவோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

“இல்ல, இப்போதே நான் அவரைப் போய்ப் பார்க்கனும், நான் அவரைப் பார்த்தே ஆகனும்” என்று பிடிவாதம் செய்ய, அந்த நேரம்​அறையில் கேட்ட சத்தம் கேட்டு உள்ளே வந்த சமுத்திரவேல், “என்ன ஆச்சு அண்ணி?” என்று வினவ, “தம்பி, சீக்கிரம் டாக்டரை கூப்பிட்டு வாங்க,” என்று பதற்றத்துடன் கூறிட, அவரும் விரைந்து சென்றார்.

​அதற்குள் சுமதியும் அறைக்குள் நுழைந்து, “மிருதுளா… கொஞ்சம் பொறுமையாக இரும்மா, டாக்டர் உன்னை அலைச்சல் படக்கூடாதுனு சொல்லி இருக்காங்க” என்று என்ன சமாதானம் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. “நான் இப்போதே ரன்வீரைப் பார்க்கனும் தயவுசெய்து என்னை விடுங்க,” என்று மீண்டும் ஊசியைப் பிடுங்க முயல, சுமதி ஒரு பக்கம் வந்து அவளது கையைப் பிடித்துத் தடுத்தார்.

Advertisement

​அந்தக் கணமே அறைக்குள் நுழைந்த மருத்துவர், “என்னம்மா… எதுக்காக இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகிற?” என்று வினவிட, “நான் என் கணவரைப் பார்க்கப் போகனும்” என்றாள் அவள் விம்மலுடன்…

Advertisement

​”உன் கணவர் வெளிநாட்ல இருக்கிறதா சொன்னாங்களே?” என்று அவர் கேட்க, “ஆமா” என்றாள் மிருதுளா…

“அப்படினா நீ இப்போ ட்ராவல் செய்ய நினைக்கிறியா?” என்று மீண்டும் அவர் வினவ, “ஆமா அதுல என்ன தப்பு இருக்கு? நான் இப்போதே போயாகனும்” என்று பிடிவாதமாக சொன்னவளிடம்,.
​”சரி, நான் ஒரு விஷயம் சொல்றேன், அதற்கு அப்புறமும் நீ போகனுமா வேண்டாமானு நீயே யோசிச்சுக்க” என்றவர், “இப்போ உன்னுடைய கர்ப்பப்பை ரொம்ப, பலவீனமா இருக்கு, நீ நீண்ட தூரம் பயணம் செய்தாலோ இல்ல மனசளவுலயும் உடலளவுலயும் உன்னை அதிகம் வருத்திக்கிட்டாளோ மிஸ்கரேஜ் ஆகுற அபாயம் இருக்கு,” என்று எச்சரிக்க, ​அதிர்ந்து போன மிருதுளா, “எ… என்ன சொல்றீங்க?” என்று திகைப்புடன் கேட்க, “இருப்பதை தான்மா சொல்றேன், உன் குழந்தையை பத்திரமா நீ பெத்து எடுக்கணும்னா இதுக்கு அப்புறம் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், உன் மனசுல இருக்கிற பாரமும், இந்த ஓயாத அழுகையும் குழந்தைக்கு நல்லது இல்ல மிருதுளா,” என்று மருத்துவர் கனிவான அதே சமயம் கண்டிப்பான குரலில் அறிவுரை வழங்கினார்…

​மருத்துவர் சொன்ன வார்த்தைகள் மிருதுளாவின் காதுகளில் இடியாக விழுந்தன, தான் செய்த தவறால் ரன்வீரைத்தான் இழந்துவிட்டோம், இப்போது இந்த உயிரையும் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவளை ஆட்கொண்டது.

Advertisement

​கையிலிருந்த குளுக்கோஸ் ஊசியைப் பிடுங்க முயன்றவள், இப்போது அப்படியே தளர்ந்து படுக்கையில் சாய்ந்தாள், அவளது கைகள் அனிச்சையாகத் தன் வயிற்றை அரவணைத்தன, கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடியது.

​தன்னால் இப்போது பயணம் செய்வது என்பது முடியாத காரியம் என்பதும், தன் பிடிவாதம் குழந்தையைப் பாதிக்கும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் மனம் தன் கணவனின் அருகாமைக்காகத் துடித்தாலும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து எனும் போது அவளால் எப்படி அதை மீறி செயல்பட இயலும்?

​அந்தக் கணத்தில், ரன்வீர் லண்டன் புறப்படும் முன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் அவள் நினைவில் நிழலாடின, அவளால்  வலிகளை சுமந்து கொண்டு அவன் வெளியேறிய அந்தச் சூழலிலும், அவன் அவளிடம் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் ‘என் குழந்தையைப் பத்திரமாப் பார்த்துக்கோ…’ என்பது மட்டுமே…

அந்த நினைவே அவளைச் சுட்டெரிக்க, மௌனமாக கண்ணீர் வடித்தவள், அதன் பிறகு எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. மருத்துவர் அவளை டிஸ்சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று கூறவும், உறவினர்கள் மிருதுளாவை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர், அவள் மாடிப் படிக்கட்டுகளில் ஏறி அலைச்சல் படக் கூடாது என்பதால், கீழ்த்தளத்திலேயே ஒரு அறை அவளுக்காக ஒதுக்கித் தரப்பட்டது.

​மிருதுளா யாரிடமும் பேசவில்லை, அந்த அறைக்குள்ளேயே முடங்கிப்போனாள், அவளது உலகம் இப்போது அந்த நான்கு சுவர்களுக்குள் ரன்வீரின் நினைவுகளோடு மட்டுமே சுருங்கிவிட்டது…

​சரியாக அந்த நேரம், நண்பர்களுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்றுவிட்டு அன்றுதான் வீட்டிற்குத் திரும்பியிருந்தான் வினோத், தன் அண்ணன் வெளிநாடு போய்விட்டதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டவன்,.. “அண்ணன் எப்போ வருவாரு? அவர் ஏன் என்கிட்ட சொல்லாமலே போயிட்டாரு?” என்று  விடாமல் கேட்டுக் கொண்டிருக்க, அவனை சமாளிக்க பெரும்பாடு பட்டு போயினர் அவனின் பெற்றோர்கள்,..

​வினோத்தின் ஏக்கமான அந்தக் குரல் அறையிலிருந்த மிருதுளாவின் காதில் விழ, அவள் மனது மேலும் துயரப்பட்டது…

இரண்டு நாட்கள் அறையை விட்டே வராமல் இருக்கும் மருமகளைக் காண வந்தார் காயத்ரி, அவளாகவே வெளியே வருவாள் என்று கொஞ்சம் நேரம் கொடுத்துக் காத்திருந்தவர், அவள் வருவதாய் தெரியவில்லை எனவும் அவரே அவளைப் பார்க்க வந்துவிட்டார்.

​”ஏன் மிருதுளா ரூம்லயே இருக்க? கொஞ்சம் வெளியே வந்து உலாவுனா தானே உடம்புக்கும் மனசுக்கும் நல்லது” என்று கனிவுடன் அவர் சொல்ல,.. விழிகள் கலங்க அவரைப் பார்த்தவள்… ​”உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா அத்த?” என்று மெல்லிய குரலில் வினவினாள்.

​மெல்ல புன்னகைத்தவரோ.., “உன் மேல நான் எதுக்கு கோபப்படணும்?” என்று திருப்பிக் கேட்க, “உங்க பையன் என்னால தான் இந்த வீட்டை விட்டுப் போனாரு, என்னால தானே அவரைப் பிரிஞ்சு நீங்க எல்லாரும் கஷ்டப்படுறீங்க? நியாயமா பார்த்தா நீங்க என் மேல கோபம்தான் பட்டிருக்கணும்,” என்று தன் குற்ற உணர்ச்சியை கொட்டிட, ​அதற்கும் புன்னகைத்தவர், “கோபமெல்லாம் இல்லம்மா… வருத்தம் மட்டும் தான் இருக்கு, நீ என் பையனை மட்டும் இல்ல, ரன்வீர் உன்மேல வச்சிருந்த அந்த ஆழமான காதலையும் சேர்த்து தான் சந்தேகப்பட்ட, ரன்வீர் தன் உயிரையே கொடுத்தாவது உன் தாத்தாவைக் காப்பாத்துவானே தவிர, அவருக்கு ஒரு சின்ன தீங்கு கூட நினைக்க மாட்டான்னு உனக்குத் தெரிஞ்சிருக்கணும், அதுதான் எனக்கு வருத்தம்,” என்றார்..

மிருதுளா தலைகுனிந்து அழத் தொடங்க, காயத்ரி அவள் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு… “நீ வருத்தப்படணும்னு நான் இதை சொல்லலம்மா, கொஞ்சம் புரிஞ்சி வச்சிருக்கலாமேன்னு தான் சொன்னேன், அதோட இப்போ நடந்ததை நினைச்சு வருத்தப்படறதுலயும் ஒரு பிரயோஜனமும் இல்லை, நடந்ததை மாத்த முடியாது, அதனால அதை நினைச்சுட்டே இருக்காம மறந்திடலாம்,” என்று அவர் பக்குவமாகச் சொல்ல, ​அத்தையின் ஆறுதலான வார்த்தைகளில் தேறுதல் அடைந்தாலும், அவளது கணவனின் நினைவும் அவளை வாட்டியது.

“அ.. அவர்கிட்ட பேசுனீங்களா அத்தை? அவர் எப்போ வருவாரு?” ஏக்கத்துடன் கேட்டவளிடம்,.. “லண்டன்ல போய் இறங்கியதும் போன் பண்ணினவன் தான், அதுக்கப்புறம் போன் பண்ணவே இல்லை, நான் பண்ணினாலும் எடுக்கல. ‘பிஸியா இருக்கேன், நானே கால் பண்ணுவேன்ம்மா’ன்னு மெசேஜ் மட்டும் பண்ணியிருந்தான்,” என்று சொன்னவர், மிருதுளாவின் வாடிய முகத்தைக் கண்டு.. ​”நீ எதுக்கும் வருத்தப்படாதம்மா, அவன் கோபம் குறைந்ததும் சீக்கிரமே வருவான், நீ இப்படியே வருத்தப்பட்டுட்டே இருக்கிறது வயித்துல வளர்ற குழந்தைக்கு நல்லது இல்லை, வா கொஞ்ச நேரம் தோட்டத்துல உட்காரலாம்,” என்று கூறி அவளை வம்படியாகத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

​தோட்டத்தில் மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்க, இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர், செடிகளில் பூத்திருந்த பூக்களும், அமைதியான சூழலும் அவளது மன அழுத்தத்தைச் சற்றே குறைத்தன…

​”மிருதுளா, ரன்வீர் உன் மேல ரொம்ப உயிரா இருந்தவன், அவன் உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுத்துட மாட்டான்மா, ஆனா அவனோட மனக்காயங்கள் ஆற கொஞ்ச நாள் ஆகும்கிறது தான் நிதர்சனம், அதுவரைக்கும் நீ தைரியமா இருக்கணும்,” என்று அவர் அறிவுரை வழங்கியபடியே இருக்க, அவளுக்கும் மனம் கொஞ்சம் லேசானது,..

அந்த நேரத்தில் தான் சம்யுக்தாவும் வினோத்தும் தோட்டத்திற்கு வந்தனர்,  தமையன் ரன்வீர் சென்றது அவர்களுக்கும் ஆறாத வருத்தம்தான் என்றாலும், மிருதுளாவின் மீது அவர்களால் கோபம் கொள்ள முடியவில்லை,  இப்போது அவள் படும் தவிப்பையும் அவர்கள் உணர்ந்திருக்க, அவள் மண்னைலைய சற்றே மாற்ற அவளது அருகில் வந்து அமர்ந்து விட்டனர்.

​வினோத் தன் கல்லூரியில் நடந்த கலாட்டாவான கதைகளைச் சொல்லத் தொடங்கிவிட, அவன் செய்த குறும்புகளையும், சம்யுக்தாவின் மொக்கை ஜோக்குகளையும் கேட்டு, இறுக்கமான மனநிலையில் இருந்த மிருதுளாவின் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

ஆனால் ​அவளைக் கொஞ்சம் நேரம் சிரிக்க வைக்கவே அவர்கள் இருவரும் படாதபாடு பட்டு போயினர், அன்று வாய் விட்டு சிரித்தவளின் அன்பான பேச்சு, அவளது பாரமான மனதை சற்றே லேசாக்கியது என்பதும் உண்மையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!