Skip to content
Post Views: 15,073
“அத்த நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன், என் புருஷன் உயிரை மட்டும் காப்பாத்தி குடுங்க” என்று காலில் விழுந்த மருமகளை ஏளனமாகப் பார்த்தவர் “என்ன சொன்னாலும் செய்வியா?” என்க.
“செய்றேன் அத்த” என்றாள் விழிகள் நிறைய, அவர் என்ன செய்யச் சொல்வார் என்பது தெரிந்தே இருந்தது அவளுக்கு.
Advertisement
“ஹ்ம்ம்… கீழ கார் நிக்குது எம். எல்.எ கூட நாலுநாள் அவருக்குப் புடிச்ச மாதிரி நடந்துக்கணும், நீ அங்க ஒழுங்கா இருந்தா இங்க உன் புருஷன் உயிர் பிழைப்பான்” என்ற மாமியாரை பார்த்தவள் அழுந்துகொண்டே லிப்ட் நோக்கி நடந்தாள்.
“தொடரும்” என்ற வாசக்கத்தொடு தொலைக்காட்சியில் பாடல் ஒலித்தது.
Advertisement
Advertisement
“ச்சீ ச்சீ நாடகமா எடுக்குறானுங்க கண்றாவி இப்படி போய்ப் புருஷன் உயிரைக் காப்பாத்தணுமா, அவன் எழுந்து வந்து அப்படியே பூரிச்சு போயிடுவான் அறிவுகெட்ட கழுத, கழுத்துல கைல கெடக்குறத வித்துட்டு கடன் வாங்கி காப்பாத்த வேண்டியதுதானே, எடுபட்ட பயலுக என்னத்த எடுக்குறானுங்க படமும் சரி இல்ல நாடகமும் சரி இல்ல” என்று புலம்பிக்கொண்டு இருந்த மாமியாரை பார்த்துச் சிரித்துக்கொண்டே உணவை எடுத்து வந்து கூடத்தில் வைத்தனர் இரண்டு மருமகள்களும்.
“அத்த வாங்க சாப்பிடலாம்” என்றார் மூத்த மருமகள் பவுனு.
Advertisement
“வரேன்த்தா…” என்ற கோசலை தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு வாசலை எட்டி பார்த்தார்.
“ஏத்தா கனகம் சோறு கொண்டுபோனவளை இன்னும் காணும் எங்க பராக்கு பாக்குறாளோ நேரத்தோட வீட்டுக்கு வருவோம்னு இருக்கா இந்தச் சிங்காரிக்கு” என்று புலம்பிக்கொண்டே நின்றார்.
“அவ வந்துடுவா அத்த நீங்க வாங்க நேரத்தோடு சாப்பிடுங்க” என்ற பவுனு அவருக்கான தட்டை எடுத்துவைத்தார்.
“இருத்தா கொஞ்ச நேரம், அவ வரட்டும் மத்த நாளு தான் பள்ளிக்கூடத்துல சாப்பிடுறா இப்போதான் வீட்டில இருக்காளே எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்” என்று வாசலில் அமர்ந்துகொண்டார்.
“சரிதான்” என்று மருமகள்களும் அவருடன் அமர்ந்துகொண்டனர்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள் அந்த வீட்டின் கடைக்குட்டி வேல்விழி “ஏண்டி போனோமோ வந்தோமான்னு இல்லாம எவ்ளோ நேரம்” என்ற பாட்டியைப் பார்த்துச் சிரித்தவள்.
“உன் புள்ளைங்க ரெண்டு பேரும் வயிறு நெறய சாப்பிடுறாங்களா இல்லையான்னு பக்கத்துல நின்னு பாக்க வேணாமா” என்றாள் பக்கவாட்டில் இருந்த குழாயில் கால் கையைக் கழுவிக்கொண்டு.
அவளை முறைத்து பார்த்த கனகம் “வயசுக்கு மரியாதை இல்லாம என்னடி பழக்கம் இது தோலை உறிச்சுப்புடுவேன்” என்க, தாயை நிமிர்ந்தும் பார்க்காமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள் வேல்விழி.
“விடு கனகம் சின்னப் புள்ளதான” என்றார் பவுனு.
“இல்லக்கா காலேஜ் போகப்போறா இன்னும் இப்படியே இருந்தா நாளைக்கு போற வீட்டில நம்மலத்தான பேசுவாங்க” என்றார் விளையாட்டுபேச்சுக்கள் கூடப் பெண்பிள்ளைகளின் ஒழுக்கத்தை குறைகூறும் என்ற சிந்தனை உடைய சராசரி குடும்ப பெண்மணியாக.
அனைவரும் சாப்பிட அமரத் தட்டை எடுத்து வைத்த பவுனு மண்சட்டியின் மூடியை திறக்கக் கத்தரிக்காய் போட்டு வைத்த கருவாட்டு குழம்பு வாசம் நாசியில் நுழைந்து பசியின் அளவை தூண்டியது.
“பெரிம்மா வாசம் அப்படியே தூக்குது சீக்கிரம் போடுங்க அங்க பெரியப்பாகிட்டயும் அப்பாகிட்டயும் ஒரு ஒரு வாய் வாங்கிக்கிட்டேன் செமயா இருந்துச்சு” என்றவளை ஆதுரமாகப் பார்த்தவர் “மொதல்ல உனக்குத்தான்” என்க.
“பவுனு என் ராசாவுக்கு குழம்பு எடுத்து வெச்சுருக்கியா இன்னைக்கு வந்துருமா” என்றார் கோசலை மூத்த மருமகளை பார்த்து.
“வெச்சுட்டேன்த்த ராத்திரிக்கு வந்துருவேன்னு தம்பி சொல்லுச்சு” என்றவர் சோத்துப்பானைக்குள் கரண்டியை போட்ட நொடி வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது, எட்டி பார்க்காமலே தெரிந்தது யார் என்று.
அப்படியே அனைவரும் எழுந்து நிற்கக் கையில் ஒரு பிள்ளையையும் இடுப்பில் ஒரு பிள்ளையையும் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அந்த வீட்டின் மூத்த வாரிசு கார்த்திகா.
“இப்போ எதுக்குடி வந்திருக்கா?” என்று சின்னக் குட்டியின் காதைக் கடித்தார் கோசலை.
“எதுக்கு வந்திருப்பாங்க அடுத்த வர்ஷம் தொடங்கிருச்சுல வசூல் பண்ண வந்திருப்பாங்க” என்று தானும் பாட்டியின் காதில் ரகசியம் பேசினாள், கார்த்திகாவின் பின்னாலே வீட்டிற்குள் நுழைந்து வாயிலை அடைத்துக்கொண்டு நின்றான் அவளின் கணவன் பிரபு.
‘இந்தா வந்துட்டான்ல கடன்காரன் எப்போ பாத்தாலும் சோத்துல கை வைக்கும்போதுதான் இவனுக்கு மூக்கு வேர்க்கும்’என்று நொடித்துக்கொண்டார் கோசலை.
வேல்விழிக்கு ஆற்றாமையாக இருந்தது கருவாட்டு குழம்போடு சாப்பாடு என்று நாக்கில் எச்சில் ஊற காத்திருக்க முன்னில் நிர்ப்பவனை பார்க்கப் பார்க்கக் கொலைவெறியானது.
அவனுக்குப் பின்னால் தலை குனிந்து நிற்கும் அக்காளை கன்னம் கன்னமாக அறைய தூண்டிய மனதை அடக்கிவைத்தவள் அவள் இடுப்பில் இருந்த மூன்று வயது மாணாசியை தூக்கிக்கொண்டு அருகில் நின்ற ஐந்து வயது ஷர்மியின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள்.
தடுமாறி நின்ற பெண்கள் சுதாரித்து வீட்டின் மாப்பிளையை மரியாதையோடு வரவேற்றனர் “ஹ்ம்ம்” என்ற உறுமலோடு சோபாவில் சென்று அமர்ந்தவன் விழிகள் மனைவியில் அழுத்தமாகப் பதிய “இன்னும் சாப்பிடலாமா” என்றாள் கார்திகா.
“வாங்க மாப்ள சாப்பிடலாம்” என்ற கனகம் மகளுக்குக் கண் காண்பித்து விட்டுச் சமயல்கட்டிற்குள் செல்ல அவர் பின்னே சென்றார் பவுனு, கணவனைக் கைகால் கழுக அழைத்துச்சென்றாள் கார்திகா.
அடுப்படியில் பவுனு அவசரமாக முட்டை உடைத்து பொரியல் செய்யத் தயார் செய்ய அரிசியை கழுகி குக்கரில் போட்ட கனகம் ரசத்துக்கு தயார் செய்தார் இருந்த மாம்பழத்தையம் அறிந்து எடுத்துவந்து மருமகனுக்கு விருந்து வைத்தனர்.
நான்கு பேர் சாப்பிடும் சோற்றை ஒருவனாக அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தான் அவன், கருவாட்டு குழம்பு சட்டியில் சத்தம் மட்டுமே வந்தது குழம்பு தீர்ந்ததை அறிவிக்கும் விதமாக, மகனுக்கென்று எடுத்துவைத்திருந்த குழம்பை அப்படியே கொண்டுவந்து அவன் முன்பு வைத்துவிட்டு தள்ளி நின்றார் பவுனு.
பெண்களுக்கு முகமே செத்துவிட்டது, வேல்விழி தாயின் அலைபேசியிலிருந்து பெரியதந்தைக்கும் தந்தைக்கும் அழைத்துக் கூறிவிட்டாள், இருவரும் போட்டதை போட்டபடி அப்படியே புறப்பட்டுவிட்டனர்.
இவர்களாக எதையும் கேட்பதாகவும் இல்லை அவனாக எதையும் சொல்லவும் இல்லை, அரக்க பறக்க வீட்டிற்குள் நுழைந்த ஆண்களைப் பார்த்தும் அசையாமல் அமர்ந்திருந்தான் பிரபு.
“வாங்க மாப்ள” என்றார் அந்த வீட்டின் மூத்தவர் கந்தசாமி கையில் இருந்த பார்சலை மனைவி பவுனின் கையில் கொடுத்தவர் சோபாவில் அமர, வண்டியை நிறுத்திவிட்டு பின்னே வந்த அவரின் தம்பி செந்தில் அண்ணனின் அருகில் அமர்ந்துகொண்டார்.
“அப்புறம் மாமா எங்க மச்சானை காணும் அவன் இருப்பான்னு நெனச்சுதான் வந்தேன்” என்றான் ஏதோ கொடுத்து வைத்த பொருளைத் திரும்ப வாங்கி செல்ல வந்தவனை போல.
‘எங்க அண்ணா என்ன உன்னமாதிரி ஊரான் வீட்டு காசுல ஒக்காந்து சாப்பிடுதா பொழுதனைக்கும் வீட்டுக்குள்ளேயே கிடக்க’ என்று முணுமுணுத்த தங்கையை முறைத்து பார்த்தாள் கார்த்திகா.
“அவங்க வேல விஷயமா ஓசூர் வரைக்கும் போயிருக்காங்க மாப்ள இன்னைக்கு ராத்திரிக்கு வந்துடுவாங்க” என்றார் கந்தசாமி.
“சரி அப்போ சேதி சொல்லுங்க அதுக்கு அப்புறம் வந்து கூட்டிட்டு போறேன்” என்றவன் எழுந்துகொண்டு தன் மாமனாரை பார்த்து “என்ன மாமா வாங்க மாப்பிளைனு சொன்னதோட பேச்சை நிறுத்திப்புடீங்க, இவன்கிட்ட என்ன பேசறதுனு நெனச்சுடீங்களா” என்க.
பதறிய செந்தில் “ஐயோ… அப்படி இல்ல மாப்ள அண்ணன்தான் பேசுறாரே அதான்…” என்று முடிக்கும் முன்னே “உங்க பொண்ணத்தானே கட்டியிருக்கேன் உங்க அண்ணன் பொண்ண இல்லையே” என்றவனை பார்த்து நெஞ்சில் கைவைத்துவிட்டார் கோசலை.
“இவன் நாக்குல வசம்பை வெச்சு தேக்க குடும்பத்தைப் பிரிச்சு பேசுறானே பாவி பாவி” என்று மனதில் புலம்பிக்கொண்டார்.
அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாத கந்தசாமி “அவன் அப்படியே வளந்துட்டான் மாப்ள வேற ஒன்னும் இல்ல” என்று முடித்துக்கொண்டார்.
அமர்த்தலாக அனைவரையும் ஒரு முறை பார்த்தவன் “பொறந்தவீட்டுக்கு சீராட வரல அத புரிஞ்சுகிட்டு சீக்கிரம் வீடு வந்து சேறு” என்ற கட்டளையோடு வெளியேறினான்.
சூறாவளி வீசி ஓய்ந்ததை போல ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கினர் “பவுனு” என்று மனைவியை அழைத்தார் கந்தசாமி.
“என்னங்க” என்று எழுந்துவந்தவரிடம் “எல்லார்க்கும் சாப்பாடு எடுத்து வை புள்ளைங்களுக்கு பசிக்குது போல” என்றார் பேரப்பிள்ளைகளை காண்பித்து.
சாப்பிடும் மனநிலை இல்லை என்றாலும் ரசம் வைத்து அனைவரும் பேருக்கு உண்டுமுடித்தனர் “சாப்பிட்டு வேலையைப் பாருங்க தம்பி வந்தப்புறம் பேசிக்கலாம்” என்ற கந்தசாமி செந்திலுடன் மீண்டும் கடைக்கே சென்றுவிட்டார்.
“மா… என்ன ஏதுன்னு யாருமே ஒரு வார்த்தை கூடக் கேக்க மாட்ரீங்க” என்ற மகளை நிமிர்ந்துகூட பார்க்காமல் குண்டுமல்லிகளை நெருக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தார் கனகம்.
“மா நா சொல்றத கேக்குறிய இல்லையா?” என்று குரலை உயர்த்தினாள் கார்த்திகா.
“ஏதாவது புதுசா இருந்தா கேப்பாங்க புளிச்சுப்போனத யார் கேக்குறது” என்ற தங்கையை முறைத்தவள் “என்னடி வந்ததுல இருந்து நானும் பாக்குறேன் மூஞ்சிய காட்டுற, எனக்கு ஒரு பிரச்சனைனா நான் எங்க போக? வீட்ல பாத்துவெச்ச ஆளைத்தானே கட்டிகிட்டேன் அப்போ நம்ம வீட்ல தானே பாக்கணும்” என்றாள் புத்திசாலி தனமாக.
“ஆமா வீட்லதான் கட்டிவெச்சாங்க முதல் தடவ வந்து நின்ன சரின்னு செஞ்சாங்க, ரெண்டாவது தடவை வந்த அப்பவும் செஞ்சாங்க மூணாவது தடவ வந்தப்போ அண்ணா என்ன சொன்னுச்சு… இப்படியே போனா சரியாவராது அவர் வரட்டும் பேசிட்டு முடிவு பண்ணலாம் அப்படினு சொன்னுச்சில்ல”.
“அதுக்கே பூச்சிமருந்து குடிச்சு எல்லாரையும் பயமுறுத்தினவ தானே நீ” என்றாள் வேல்விழி.
“விழி சும்மா இரு” என்ற கனகம் “நாங்க சொல்றதுக்கு எதுவும் இல்ல அண்ணா வந்தப்புறம் பேசிக்கலாம்” என்றவர் எழுந்து உள்ளே சென்றார்.
வெண்பஞ்சு மேகங்களால் மூடிய மலைத்தொடர்கள் நிறைந்த சாலை ஏற்கனவே குளிர்ந்துகிடக்கும் பூமியில் பனித்துளிகள் மழைத்துளிகளாய் பெய்திறங்க அது ஊசி முனையாய் உடலைக் குத்தியது.
சுற்றுலா வந்தவர்கள் ஸ்வட்டருக்குள் ஒளிந்துகொண்டு ஹோட்டல்களில் முடங்கிக் கிடக்க ஊர்க்காரர்கள் இதெல்லாம் ஒரு விஷயமா என்பதாக வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நேரம் இரவு எட்டுமணியை தொட்டு நிற்க, குன்னூரில் இருக்கும் மேலூர் கிராமத்தை நோக்கி அவன் கைகளில் ஜீப் மிதமான வேகத்தில் மிதந்துகொண்டு இருந்தது, வலக்கை ஸ்டியரிங்கில் தாளமிட அடங்காமல் அலைபாயும் முன்நெற்றி முடிகளை இடக்கையால் மெலிதாக ஒதுக்கிக்கொண்டே இதழில் குறுநகையோடு இரவை ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தான் தேவசேனாபதி.
இந்த வெள்ளை மல்லிகை
தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை
தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்…
பாடல் மெல்லிய சத்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது அவனுடைய பயணங்கள் அனைத்தும் இளையராஜாவோடுதான், ஜீப்பின் பின்னில் அட்டைப்பெட்டிகளில் நிறைந்து கிடந்த ஃப்ரீசியா மலர்கள் மற்றும் எலுமிச்சை புல்லின் வாசனையும் ஒன்றாகக் கலந்து புதுவித சுகந்தத்தை பரப்பியது.
வீட்டை அவன் நெருங்கிய சமயம் வேல்விழி வேகமாக வந்து கேட்டைத் திறந்து வைத்தாள் தங்கையின் முகத்தை ஊன்றிக் கவனித்தான் தேவசேனாபதி.
எப்பொழுதும் இருக்கும் மலர்ச்சி இல்லை அந்த வீட்டில் முட்டிக்கொள்வதென்னவோ அவளும் அவள் பாட்டியுமே, அனால் அடுத்த ஐந்தே நிமிடத்தில் அதை மறந்துவிட்டு கொஞ்சிக்கொள்வார்கள் இருவரும்.
உடம்பு எதுவும் சரியில்லையா என்ற எண்ணத்தோடு ஜீப்பிலிருந்து இறங்கினான், கேட்டைப் பூட்டிவிட்டு அவன் அருகில் வந்தவள் ஜீப்பின் பின்னிலிருந்து அட்டைப்பெட்டிகளை எடுக்க “விழி அதை வெச்சுடு முன்னாடி சீட்ல பிரியாணி இருக்கு எடுத்துட்டு போ” என்க.
“சரிண்ணா” என்றவள் அதை எடுத்துக்கொண்டு வீட்டின் உள் சென்றாள்.
கந்தசாமியும் செந்திலும் வந்தவர்கள் “என்னப்பா போன வேலை எல்லாம் முடிஞ்சுதா” என்க “ஹ்ம்ம் முடிஞ்சுதுப்பா” என்றவன் அட்டை பெட்டிகளை எடுத்துச்செல்ல அவர்களும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டனர்.
வீட்டின் முன் வராண்டாவில் இருக்கும் சிறிய அறையிலே வேலை சம்பந்தமான பொருட்கள் வைப்பது, அதைத் திறந்து அனைத்தையும் அறைக்குள் வைத்தவனுக்கு வீட்டின் உள்ளிலிருந்து கேட்ட கார்ட்டூன் சேனல் சத்தம் தமக்கை வந்திருப்பதையும் தங்கையின் முகவாட்டத்தின் காரணத்தையும் தெளிவாகச் சொல்லியது.
கதவைப் பூட்டிவிட்டு திரும்ப அவன் முன்னில் நின்றிருந்தாள் கார்த்திகா “வாக்கா… எப்போ வந்த” என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் சூடான பருத்திப்பாலை அவன் அப்பத்தாவிடம் கொண்டு சென்று நீட்டினான்.
“ஏ ராசா” என்று அவன் கையைப் பிடித்து முத்தம் வைத்த கோசலை “வந்து சாப்பிடுயா நேரம் ஆச்சு” என்றார்.
“குளிச்சுட்டுவரேன் அப்பத்தா” என்றவன் “மா பிரியாணி எல்லார்க்கும் குடுங்க நா வரேன்” என்றதுடன் அக்காளின் பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அவன் எப்பொழுது கதவைத் திறப்பான் என்று கையைப் பிசைந்துகொண்டு அங்கேயே பார்வை பதித்து நின்றிருந்தாள் கார்த்திகா.
“இங்கபாருடி மூணு நாள் கழிச்சு இன்னைக்குத்தான் பிள்ளை வீடு வந்திருக்கு, உன் திருவாய மூடிட்டு இரு செத்தநேரம் உன் பெரியப்பனும் அப்பனும் இங்கதான் இருக்காங்க அவங்க பேசிப்பாங்க துடுக்குத்தனமா ஏதாவது பேசின செவுலு பேந்துரும்” என்றார் கோசலை அவளிடம்.
குளித்து வந்தவன் தொழில் சம்பந்தமாக ஆண்கள் இருவரிடமும் பேசினான், அனைவரும் உண்டுமுடிக்கவும் வேல்விழி அக்காளின் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு அவளுடைய ரூமுக்கு சென்றுவிட்டாள்.
அவன் பார்வையே சொல்லிவிடும் அவள் அங்கு இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதை அண்ணன் பார்த்த பார்வையிலே புரிந்துகொண்டவள் சென்றுவிட்டாள்.
“சொல்லுங்க என்ன விஷயம்” என்றான் எந்த முகவுரையும் இல்லாமல்.
“எங்களைக் கூட்டிட்டுப்போக நாளைக்கு அவர் வந்துடுவார் சேனா” என்றவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் “ரொம்ப நல்லது எங்களுக்கும் நாளைக்கு தலைக்குமேலே வேலை கிடக்கு, அப்போ நான் கொண்டுபோய் விட வேண்டாம்” என்றவன் எழுந்து கொள்ள.
“என்ன பேசுற நீ? நான் அதைச் சொல்லல” என்றாள் அவள்.
“சொல்லவந்ததை தெளிவா சொல்லு, ரொம்ப டைர்ட் தூங்கணும்” என்றவனை முறைக்கக்கூட முடியாத அவஸ்த்தையில் “இல்ல இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல் தொறக்குறாங்க இந்தத் தடவ ரெண்டு லச்சம் வேணும்” என்றாள் மெல்ல.
“ஆத்தி…” என்று அலறிவிட்டார் கனகம்.
விழிகளை ஒருமுறை இறுக மூடித் திறந்தவன் “காசில்ல” என்றதோடு திரும்பி நடந்து அரை வாயிலை அடைய அவன் பின்னே வந்தவள் “அவர் வந்து கேட்டா நான் என்ன சொல்றது” என்றாள் ரோஷத்தோடு.
அனல் தெறிக்கும் விழிகளோடு அவளைத் திரும்பிப் பார்த்தவன் “பொண்டாட்டி புள்ளைங்க செலவுக்கு மாமனார் வீட்ல கையேந்துறவன் ஆம்பளைன்னு சொல்லிக்கவே அருகதை இல்லாதவன்னு சொல்லு” என்று அறைக்கதவை அறைந்து சாற்ற அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் கார்த்திகா.
error: Content is protected !!