Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 19.1

நதி 19
விடியலை நெருங்கும் நேரத்தில் தீனா கண் அசந்திருக்க துளியும் தூக்கம் அண்டாமல் அதே சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த யமுனாவின் கரம் மட்டும் இன்னமும் ஆதூரமாய் தலையை கோதிக்கொண்டிருந்தது.


Advertisement

‘தந்தை என்ற சொல்லுக்கு தகுதியே இல்லாத ஒருவருக்காக தன் வாழ்க்கை மொத்ததையும் தொலைக்க இருந்தானே.. இந்த முட்டாள்..’ என்ற சிறு கோபமும் எழுந்தது தீனாவின் மீது யமுனாவிற்கு.
அவனின் தலையை கோதியபடி இருந்தவள் தன்னை மறந்து மெல்ல தூக்கத்துக்குள் ஆளும் நேரம், “யமுனா..” என்ற வாணியின் குரல் அறையின் வாயிலில் இருந்து கேட்டது.

Advertisement

Advertisement

அந்த குரலில் வந்த தூக்கம் தொலைந்து போக விழி திறந்தவள் மடியில் ஆழ்ந்த துயிலில் இருக்கும் தீனாவை மனதில் கொண்டு கத்தி பதில் சொல்ல முடியாமல், “வர்றேன் அண்ணி..” என்றாள் மெல்லிய குரலில்.
அறையின் கதவு நன்றாக மூடியிருந்தால் கேட்டிருக்காதோ என்னவோ, சகுந்தலா செய்த வேலையின் பலனாய் ஒரு புறம் திறந்து கிடந்த கதவுக்கு மறுபுறம் யோசனையோடு நின்றிருந்த வாணிக்கு அந்த குரல் நன்றாகவே கேட்டது.

Advertisement

‘கதவ தெறந்து போட்டுட்டு உள்ள என்ன பண்ணறாங்க..?’ என நினைத்த போதும்,
நாகரீகம் கருதி வெளியிலேயே நின்றவள், “தண்ணி காய வச்சிட்டேன் யமுனா. நீங்க ரெண்டு பேரும் எல்லாரும் எழுந்து வரும் முன்னே குளிக்கனுமே.. அதான்..” என்றாள் தயங்கி.
“இதோ வர்றேன் அண்ணி..” என மீண்டும் அதே போல பதில் வர,
‘இதற்கு மேல் இங்கு நிற்பது சரியில்லை..’ என நினைத்து சமையலறைக்கு சென்ற வாணி கையோடு வாங்கி வந்திருந்த பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.
வாணி விலகி சென்றது தெரிந்ததும் தீனாவின் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தபடி மெதுவாக எக்கி கட்டிலில் இருந்து ஒரு தலையணையை எடுத்து, அதை தீனாவிற்கு வைக்க தன் காலை நகர்த்தினாள்.
அவள் அவனின் தலையை தாங்கி பிடித்த அசைவிலேயே கலைய தொடங்கிய தூக்கம் அவளின் இந்த செய்கையில் முற்றும் விலகிப்போனது தீனாவிற்கு.
அவள் அவன் தலையை தாங்கியிருக்கும் போதே விழி திறந்தவன் கண்டது தன் முகத்திற்கு வெகு அருகே இருந்த பூமுகத்தையே..
அதிலும் அவனை அவள் தாங்கி பிடித்திருந்த விதம் அவனுள் இருந்த காதலனை உயிர்ப்பிக்க அவனின் முகமெல்லாம் கள்ளத்தனம்.
இரவில் மனதிலிருந்த அத்தனை கசடையும் அள்ளிக்கொட்டிவிட்டதாலோ என்னவோ.. அவனின் மன அழுத்தம் மொத்தமாய் நீங்கி போக, அதுவும் சேர்ந்து  அவன் கண்ணில் அழகாய் பிரதிபலித்தது.
“யோவ் கண்ணழகா.. என்ன பார்வையிது..?” என அவனின் பார்வையில் கூசிய போதும் துணிந்தே யமுனா கேட்டிட,
நேற்றைய இரவைப்போலவே தன் பார்வைக்கு முன் இருந்த தாலியோடு அவன் இதழ்கள் உறவாட யமுனாவிற்குள் அத்தனை உணர்வு போராட்டம்.
அவனை விலக்க நினைத்தாலும் முடியாத நிலை. அவனுள் தன்னை தொலைக்க ஆசை பொங்கி வழிந்தது.
அதை அவளின் முகம் அப்பட்டமாய் காட்டிக்கொடுக்க அவளின் பின்னந்தலையில் கை கோர்த்தவன் தன் முகத்தோடு அவளை இழைய வைக்க பாகாய் உருகிப்போனாள் பாவை.
அடுத்து அவனின் முகமோ அவளின் வயிறோடு உறவாட குண்டூசியாய் தன் மேனியை துளைக்கும் மீசையின் உராய்வில் மெல்ல சொக்கி போனவளிடமிருந்து நிமிர்ந்து அவளின் முகத்தை கண்டவனுக்குள் அத்தனை ஆர்ப்பரிப்பு.
அவனாய் விலகிய பின்னும் மோன நிலையில் விழி மூடி இருந்தவளை கண்டு, அடுத்த நிலைக்கு செல்ல தீனாவின் உடலும் கெஞ்சலை தொடங்க ஆசையாய் அவளின் முகத்தை நெருங்கியவனை,
“யமுனா..” என்ற வாணியின் குரல் தடுக்க பதறி அவளிலிருந்து விலகி எழுந்து அமர்ந்தான். 
யமுனாவும் தன் உணர்விலிருந்து விடுபட முயன்ற படி விழி திறக்க, அவளை நேற்றிலிருந்து இதே நிலையில் நிறுத்தும் தன்னையே நொந்து கொண்டு பிடரி முடியை கையால் கோதியபடி, 
“அறிவு கெட்டவனே.. என்ன வேலடா பாத்து வைக்கறே..?” என முணுமுணுக்கும் போது மீண்டும் வாணியின் மீண்டும் அழைக்க, அவசரமாய் எழுந்து கதவருகே சென்றிருந்தான் யமுனாவின் முகம் பார்க்க தயங்கி.
தீனாவின் முகத்திலிருந்த சோர்வும் சற்றுமுன் அவனிருந்த நிலையின் விளைவால் வாணியின் முகத்தையும் பார்க்க முடியாது தவிர்த்து, 
“என்ன க்கா..?” என்று கேட்டு பார்வையை வேறு புறம் சுழற்றிய விதத்தையும் தாண்டி,
அவனின், ‘அக்கா..’ என்ற அழைப்பே அவனின் நிலையை உணர்த்த போதுமானதாக இருந்தது வாணிக்கு.
“இந்தா இத பிடி. யமுனாக்கு கொடுத்து ரெண்டு பேரும் குடுச்சிட்டு வந்து சீக்கிரம் குளிங்க ஆளுங்க வரும் முன்னே..” என்றுவிட்டு சிறு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள்.
“அய்யோ.. மறுபடியும் அவள பார்க்கனுமா..? தீனா ஸ்டெடிடா திரும்ப எதாவது ஏடாகூடமா நடந்திடாம பாத்துக்கோ..” என மனதில் உருப்போட்டபடி யமுனாவிடம் வந்தான். 
யமுனாவும் வாணி சொன்னதை கேட்டிருந்ததால் குளிப்பதற்கான தனது உடைகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.
அவளருகே வந்தவன், “பாப்பா.. இந்தா டீ..” என டம்ளாரை நீட்ட,
“ஊத்த வாயோட டீய்யா..? நீங்களே குடிங்க..” என்று உதட்டை சுழித்து சொன்னவளை கண்டு நக்கலாய் ஒரு சிரிப்பு அதனிதழில்.
அவனின் விழியில் அந்த நக்கல் வெளிப்படையாய் தெரிய அதை கண்டு கொண்டவள் ஒரு கணம் யோசிக்க.. சற்று முன் அவனின் செயலில் மயங்கி அவனிதழளுக்கு தான் பதில் கொடுத்தது நினைவில் எழுந்தது.
அதனால் எழுந்த கூச்சத்தில், “அது… அது வேற..” என தடுமாறிக்கொண்டு சொன்னவள், “நா குளிக்க போறேன்..‌” என்று விட்டு விரைந்தாள் அங்கிருந்து.
அவளின்‌ ஓட்டத்தில் புன்னகை எழ சிரித்த முகமாய் வெளியே வந்தவன் வாணியிடம் ஒன்றை கொடுத்து, 
“யமுனா குளிச்சிட்டு குடிக்கிறாளாம்.. வந்தா கொடுத்துடு வாணி..” என்றுவிட்டு கூடத்திலிருந்து வெளியேறினான்.
அவர்களின் மனம் இருந்த நிலையில் அந்த அறையின் கோலத்தை மறந்தே போயினர் மொத்தமாய்.
‘இருவரும் அறையில் இல்லை..’ என்பதால் அதை சுத்தம் செய்துவிடும் நோக்கில் உள்ளே வந்த வாணி, மெத்தை கலைந்து பூக்கள் சிதறி கிடந்த நிலை கண்டு மகிழ்ந்தவள் மெத்தையில் தான் விரித்த போர்வை இல்லாது இருப்பது கண்டு குழம்பிப்போனாள்.
‘என்ன அதையும் அலசிப்போட யமுனா எடுத்துட்டு போயிட்டாளா..?’ என நினைத்தவள், 
அறையை கூட்டி விட்டு வெளியே வர அவள் கண்ணில் இரவு வாணி விரித்த போர்வையை போர்த்தி படுத்திருந்த ஜெகதீஷ் விழுந்தான்.
‘அதே மாதிரி இன்னொன்றோ..?’ என நினைத்தவளுக்கு, ‘அதே என்றால்..!!’ என்ற எண்ணமே அதிர்வை கொடுத்தது.
‘உள்ள விரிச்சது வெளிய வந்திருக்குன்னா.. அது எப்படி..?’ என யோசித்தவளுக்கு தான் வரும் போதே கதவு திறந்து இருந்த நிலை கண்முன் வர அதுவரை மலர்ந்திருந்த முகம் மொத்தமாய் சோர்ந்து போனது.
அவள் அந்த யோசனையோடு நின்றிருக்க யமுனாவிற்கோ குளிக்க உள்ளே போன பிறகே அறையின் கோலம் நினைவில் எழுந்தது. 
அதனால் அவசரமாக குளித்து முடித்து வந்தவளின் பார்வையில் வாணி ஜெகதீஷை பார்த்து பின் யோசனையில் மூழ்கி போனது அப்பட்டமாய் விழுந்தது.
அதில், “போச்சு..” என மெல்ல முணுமுணுத்தவள் அவரின் அருகே வந்ததும், “என்ன யோசனை அண்ணி..?” என்றாள் இயல்பான குரலில்.
அதில் யமுனாவை பார்த்த வாணிக்கு, ‘எப்படி கேட்க..?’ என்ற குழப்பம் எழ, அதை கண்டுகொள்ளாதவள் போன்ற பாவனை காட்டி, 
“பாவம் ஜெகதீஷ் அண்ணி. நைட் பாத்ரூம் போலான்னு எழுந்து வந்தோம். மழ வேற. அந்த குளிர்ல நடுங்கிட்டு படுத்திருந்தான். 
அவரு தான் பாத்துட்டு உள்ள இருந்த பெட்ஷீட்ட எடுத்து வந்து போர்த்தி விட்டாரு..” என சரளமாய் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டாள்.
அவளின் பேச்சை கேட்ட பிறகே வாணியின் முகத்தில் இருந்த சிந்தனை கோடு மறைந்தது. ஆனாலும் திறந்திருந்த கதவு அவரை முற்றும் முழுதாய் தெளிவாக்காமல் இருக்க அவர் மேலும் கேட்கும் முன்,
“அண்ணி டீ கிடைக்குமா..? நைட்டெல்லாம் தூங்காம இருந்ததுல பசி வயித்த கிள்ளுது..” என்றாள் புன்னகையோடு.
அவளின் வார்த்தையில் அவளை பார்த்த வாணியின் விழி இப்போது ஆராய்ச்சியாய் அவளை அளவிட,
தீனாவின் கைங்கரியத்தால் லேசாக வீங்கிய உதடும், இரவில் உறங்காத இமைகளின் வீக்கமும் வாணியை குழப்பிவிட்டது.
அவரின் ஆராய்ச்சியும், குழப்பமும் யமுனாவிற்கு புரிய, “அண்ணி ஆராய்ச்சி பண்ணி முடுஞ்சா தான் டீ வருமா..? அதுக்கு லேட் ஆகுதே. நீங்க நேரடியாவே கேட்டுட்டு போயிடலாம்..” என்றாள் பட்டென.
அதில் வாயை பிளந்த வாணியை கண்டு மலர்ந்த சிரிப்பை சிந்திய யமுனா, “அண்ணி.. அதெல்லாம் உங்க தம்பிய சந்தோஷமா தான் வச்சிருந்தேன்.. போதுமா..?” என அவருக்காக சொன்னவள்,
மனதோடு, ‘இனி வரும் காலத்துல.. இன்னும் நிறைவா..’ என சொல்லிக்கொண்டாள்.
அதன் பின்னரே வாணியின் குழப்பம் நீங்க யமுனா கேட்டதை செய்யச்சென்றாள்.
வாணி உள்ளே சென்றதை உறுதி செய்த பின், “உஸ்..ஸ்..” என்ற பெருமூச்சை வெளிவிட்டவள் கண்ணில் பட்டார் கூடத்தில் படுத்திருந்த சகுந்தலா.
“என் தயா நிம்மதிய கெடுத்துட்டு இவங்க நிம்மதியா தூங்கலாமா..? தப்பாச்சே.. எதாவது பண்ணனுமே..” என யோசித்தவளுக்கு வந்த ஐடியாவை அவள் செயல் படுத்த,
அடுத்த நொடி, “ஆ… அம்மா…!!” என அலறினார் சகுந்தலா.
‘என்ன நடந்தது..?’ என யூகிக்க கூட முடியாமல் திருதிருவென விழித்தவரை கண்டு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் அதை காட்டிவிட்டாள் அது யமுனா இல்லையே..!!
அவரின் சத்தத்தில் வெளியிலிருந்து ஓடி வந்த தீனாவும், சமையலறையிலிருந்து வந்த வாணியும் அவர் இருந்த நிலை கண்டு பதறி ஓடி வந்து தூக்க,
அவரோ இடுப்பைப் பிடித்துக்கொண்டு, “அய்யோ.. வலிக்குதே..” எனத்துடித்தார்.
“என்னாச்சு யமுனா..?” என வாணி அங்கு நின்றிருந்த யமுனாவிடம் கேட்க,
“அதுங்க அண்ணி.. நேத்து ராத்திரி.. முறையா எப்படி நடக்கனுமுன்னு உங்க சித்தி எனக்கு நீங்க போன பின்னாடி பாடம் எடுத்தாங்களா.. 
அதான் அவங்க சொன்ன முறைப்படி.. காலைல குளுச்சதும் அவங்க கால்ல விழுந்து.. கும்பிடலாமுன்னு வந்து பாத்தா தூங்கிட்டு இருந்தாங்களா..
நானும் அவங்கள எழுப்பி.. ஏன் தொந்தரவு தரனும். அமைதியா அவங்க காலை தொட்டு கும்பிட்டு போயிடலாமுன்னு பாத்தேனா..
அவங்க காலை குறுக்கியிருக்க.. வேற வழியில்லாம கொஞ்சமா இழுத்து.. நேராக்கி படுக்க வச்சு கும்பிடலாமேன்னு.. லேசா.. ரொம்ப லேசா இழுத்தா… இப்படி விழுந்துட்டாங்க..” என,  
கண்களை சிமிட்டி சிமிட்டி பாட்டு போல இழுத்து.. அவள் சொன்ன பாவனையில் சகுந்தலாவின் நிலையை மறந்து அக்கா, தம்பி இருவருக்கும் புன்னகை அரும்பப்பார்த்தது.
சகுந்தலா இன்னும், ‘வலிக்குதே..’ பாட்டை பாட கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணால் பேசிக்கொண்டு சகுந்தலாவை படுக்கையில் அமர்த்த அவருக்கோ வலியில் உயிர் போனது. 
இதுவரை சொகுசாய் இருந்த உடலாயிற்றே..? 
அவரின் வலி அப்பட்டமாய் முகத்தில் தெரிய, “சித்தி, கொஞ்சம் படுத்திருங்க. நா போய்‌ எண்ணெய்ய சூடு பண்ணி எடுத்துட்டு வந்து தேய்ச்சு விடறேன்.
கொஞ்ச நேரம் பாத்துட்டு வலி குறையலன்னா ஆசுப்பத்திரிக்கு போறதுன்னா போலாம்..” என்று விட்டு வாணி நகர, தீனாவும் யமுனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான்.
இருவரும் சென்ற பின் கெத்தான பார்வையை வீசி நின்ற யமுனாவை கண்டு பல்லைக்கடித்த சகுந்தலா,
“ஏய்..! எவ்வளவு திமிர்டீ உனக்கு..? என்னையவே தள்ளி விடறே நீ..” என சகுந்தலா வலியையும் மீறி கோபம் பொங்க கேட்க,
“கிரீஷ் டப்பாவ எப்படி உதச்சே..?” என்றாள் பாவனையாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!