Skip to content
Post Views: 1,637
“மாமா, இத்தன பேருக்கு திடீர்ன்னு சமைக்க சமையல் ஆள் தேடறதுக்கு பதிலா ஹோட்டல்ல சொல்லிடலாமா..?” என தீனா சக்தியிடம் கேட்க,
அங்கு நின்றிருந்த வாணி, “தீனா வதம்பச்சேரில ஒரு க்ரூப் இருக்காங்கடா. நாம இலைக்கு இவ்வளவுன்னு பேசிட்டா அவங்களே மளிகை ஜாமானத்துல இருந்து எல்லாத்தையும் கொண்டு வந்து சமச்சு கொடுத்திடுவாங்க.
Advertisement
கறி மட்டும் எது எதுல எத்தன கிலோன்னு கேட்டு வாங்கி கொடுத்தா போதும்.. நாம கேட்கற ஐட்டத்தை நல்லபடியா செஞ்சு கொடுத்திடுவாங்க..” என்றதும் அவர்களுக்கும் அழைத்து பேசியதில் அவர்களும் சம்மதம் சொல்ல மதியத்திற்குள்ளாக அனைத்து ஏற்பாடும் சுபமாய் முடிந்தது.
சகுந்தலாவுக்கும் யமுனாவின் செய்கையால் கட்டிலில் இருந்து விழுந்ததில், லேசான பிசகல் மட்டும் தான் என்பதால்.. வாணி எண்ணெய் வைத்து தடவி விடவே ஓரளவு வலி குறைந்திருந்தது. அதனால் மருத்துவமனை செல்லும் அவசியமின்றி போனது.
Advertisement
Advertisement
ஆனாலும் யமுனாவை பார்க்கும் போதெல்லாம் அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அதற்கு நேரெதிராய் நக்கலாய் புன்னகை பூத்து சென்றாள் யமுனா.
இதை பார்க்காமல் பார்த்திருந்த உடன்பிறப்புக்களுக்கு அத்தனை சிரிப்பு.
Advertisement
“ஏன்டா தம்பி.. இவ எதுக்குடா இப்படி பண்ணா..? சித்தி எதாவது ஏடாகூடமா பண்ணுச்சோ நைட்டு..?” என வாணி தனியாக தம்பி சிக்கும் போது கேட்க,
“அக்கா.. அவ நிஜமா விழுவாங்கன்னு எதிர்பார்க்காம செஞ்சிருப்பா..” என சப்பை கட்டை கட்டுவதை தவிர வேறு வழியின்றி போனது அவனுக்கு.
‘அவள் செய்தது ஏன்..?’ என சொல்லப்போனால் இரவு அவர் செய்ததை சொல்ல வேண்டுமே அவன்.
அதைக்கொண்டே சமாளித்திருக்க, ‘வந்த உடனே, மாமியாரா..? மருமகளா..? ன்னு ஊடல் போல..’ என நினைத்து வாணி சிரிக்க,
‘அடங்கறாளா பாரு..’ என அவளை ரசித்து சிரித்தான் அவளின் கண்ணாளன்.
மதிய உணவு வந்து சேர்ந்திருக்க காலை பசியினால் உடனே அமர்ந்துவிட்ட யமுனா இப்போது வாணியோட பரிமாற நிற்க தீனாவும் உடன் சேர்ந்தால் சும்மா இருப்பானா மருமகன்.
பாலமுரளியும், “நானூ..” என தண்ணீர் டம்ளரை வைக்க யமுனா பின்னால் செல்ல.. பார்த்திருந்த அத்தனை பேருக்கும் அவ்வளவு சிரிப்பு.
“பாப்பா.. நீ அவனுக்கு பொண்ணு பெத்து கொடுப்பேன்னு தான் இத்தன ஐஸ் வைக்கிறான்.
அவன் ஏதோ பாசத்துல கூட சுத்தறான்னு நம்பிடாதே..” என சந்தடி சாக்கில் தீனா யமுனா காதில் சொல்லி செல்ல,
மறுமுறை இருவரும் ஒருவரை மற்றவர் கடக்கும் போது, “உன்னோட தாத்தாக்கு ஒரு பாயாசத்தை போட்டா.. எண்ணி பத்தாவது மாசம் வந்திடும் மருமவனேன்னு சொல்லிடவா கண்ணழகா..?” என
முகத்தில் எந்த பாவனையும் இல்லாது மொத்த குறும்பையும் கண்ணில் தேக்கி சொன்னவளை கண்டு, “ஞே..!!” என விழித்த தீனா,
‘ஆத்தே..! இவகிட்ட வாய விடாம இருந்தாலே அமைதியா இருப்பா போல..’ என நினைத்து அதன் பிறகு வாய்க்கு கம் தடவாத குறையாய் அமைதியாகி போனான்.
காலையும் சரி.. இப்போதும், சகுந்தலா உள் அறையில் இருந்ததாலோ.. என்னவோ.. தனியாக சாப்பிட வந்து அமர்ந்திருந்தான் ஜெகதீஷ்.
அவனின் நடவடிக்கையை பாராமல் பார்த்திருந்த யமுனாவிற்கு அவன் மெது வடையை எதிர் வரிசைக்கு வைக்கும் போதிருந்து அதை ஆவலாக எதிர்பார்த்திருப்பது அவனின் பாவனை காட்டிக்கொடுக்க,
வேண்டுமென்றே அந்த பாத்திரத்தை தன்னிடம் மாற்றிக்கொண்டு அவனிருந்த வரிசைக்கு வைத்தவள் இறுதியாய் அமர்ந்திருந்தவனுக்கு வைக்காமல் கடந்து சென்று விட மொத்தமாய் கலையிழந்து போனது அந்த பிள்ளை முகம்.
அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவரோ அவருக்கு அடுத்து இருந்தவரிடம் பேசும் மும்முரத்தில் இருக்க இவனை கண்டு கொள்ளத்தான் ஆளில்லை.
அவர்கள் உண்டு எழுந்த பின்னும்
லேசாக கண்கள் கலங்க இலையில் இருந்த சாதத்தில் விரல்களை துழாவ விட்டு அமர்ந்திருந்தவனின் கண்ணில் ஒரு கை தெரிய லேசாக நிமிர்ந்து பார்க்க, ஒன்றுக்கு இரண்டாய் அவன் இலையில் இருந்தது அவன் விரும்பியது.
பளிச்சென மின்னிய கண்ணுடன், ‘யார் வைத்தது..?’ என நிமிர்ந்து பார்த்தவன் எதிரில் புன்னகையோடு யமுனா நிற்க எப்போதும் போல தலையை குனிந்து கொள்ளாமல் பளிச்சென்ற புன்னகையை சிந்தினான் அந்த பாலகன்.
“இப்ப ஹேப்பியா..?” என யமுனா கேட்க,
“ம்ம்..” என வேகமாக தலையாட்டியவன் உடனே பயத்தோடு பந்தியில் யாரையோ தேட,
“நீ தேடற ஆள் சாப்பிட்டு போயாச்சு..” என்ற பின்னரே அவன் முகம் தெளிந்தது.
ஆசையாய் அந்த வடையை பிய்த்து வாயில் வைத்தவன், “தேங்க்ஸ்..” என்றிட,
“நா உனக்கு அண்ணி.. அண்ணின்னா உனக்கு அம்மா மாதிரி.. அம்மாக்கு யாராவது தேங்க்ஸ் சொல்வாங்களா..? வேணுமுன்னா ஒண்ணு பண்ணலாம் இனி நீயும் நானும் ப்ரண்ட்ஸ்.. ஓகே வா..?” என்றிட,
சரியென்பதான தலையசைப்பை தந்தவன் முகம் உடனே யோசனைக்கு தாவியது.
பின் சுற்றிலும் பார்த்துவிட்டு, “கொஞ்சம் குனிங்களே..” என்றவன் மெல்லிய குரலில்..
“உங்ககிட்ட பேசினா அப்பா அடிப்பாங்களே.. நா என்ன செய்ய..?” என்றான் பயத்தோடு.
அவனின் பயத்தை கண்ட யமுனா, “முதல்ல சாப்பிட்டு அதோ அங்கே வா நாம பேசலாம்..” என அந்த வீட்டிற்கு எதிரே சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தை காட்டி சொல்ல,
‘தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும்..’ என்ற உந்துதலாலோ.. இல்லை, ‘பாலமுரளி போல தானும் அவர்களுடன் இருக்க வேண்டும்..’ என்ற ஆசையாலோ.. சரியென்றவன் அதே போல சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
மதிய உணவோடு சிலர் நாளை விருந்துக்கு வருவதாக சொல்லி கிளம்பியிருக்க, ஒரு சில வயதானவர்கள் உறக்கத்தில் மூழ்க, ஜெயசீலன் உள்ளூரில் தனக்கு தேவையானவர்களுக்கு நேரில் சென்று அழைக்கவென வெளியே சென்றிருந்தார்.
வாணியும் சாப்பிட்டுவிட்டு தன் வீடு வரை சென்று வர சக்தியோடு கிளம்பிவிட, இவர்கள் பேசவென சென்றதை கவனிக்கும் அளவு அங்கு ஆளில்லாமல் இருந்தது வசதியாகி போனது.
பயத்தோடு வீதியை பார்த்தபடி வந்தவனின் கையை ஆதூரமாய் பற்றி அங்கிருந்த திட்டில் அமர வைத்த யமுனா,
“இப்ப சொல்லு உனக்கு உன்னோட அண்ணாவ பிடிக்காதா..? ஏன் அவர்கிட்ட பேச மாட்டிங்கறே..?
நேத்து நா வந்ததுல இருந்து பார்க்கறேன் உன்னோட அம்மாகிட்ட மட்டும் தான் இருக்கே..
நீ பாலாவ விட கொஞ்சம் பெரிய பையன் தானே. அவன பாத்தியா நா வந்ததும் என்கிட்ட பேசினான் தானே.. நீ ஏன் அதை செய்யல..? அப்போ நா இங்கே வந்தது உனக்கு பிடிக்கலையா..?” என வரிசையாய் கேள்விகளை யமுனா அடுக்க,
அவளையும் வீதியையும் பார்த்திருந்தவன் வாய் தன்னால் திறந்தது. வாய் மட்டுமல்ல அந்த பிஞ்சின் மனமும்..
“பாலாகிட்ட இது உன்னோட அத்தே ன்னு சொன்ன அண்ணா என்கிட்ட ஏன் எதுவும் சொல்லல..?” என்றவனின் முதல் கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் யமுனா.
error: Content is protected !!