Skip to content
Post Views: 1,665
நதி 31
பொள்ளாச்சியில் அமைந்திருக்கும் அந்த பெரிய மருத்துவமனை ஐசியூ முன் கூடியிருந்தனர் தீனதயாளனின் மொத்த குடும்பமும்.
Advertisement
ஜெயசீலனை தவிர..
தீனாவிற்கோ யமுனாவை தூக்கி வரும் போது இருந்த அவளின் நிலை அப்படி ஒரு பதட்டத்தையும் தாண்டிய பயத்தை கொடுத்திருக்க கைகளில் இன்னும் லேசான நடுக்கம்.
Advertisement
Advertisement
அவனின் இதழ்களோ, “சாரி பாப்பா.. என்ன தனியா விட்டுடாதேடீ.. ப்ளீஸ்..” என ஓயாது முணுமுணுத்து கொண்டிருந்தது.
சற்று தள்ளி நடந்த அனைத்தையும் வாணி மற்றும் சகுந்தலாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் சக்தி.
Advertisement
காலை நடந்ததை பெரும் சங்கடத்தோடு சகுந்தலா சொல்ல, சக்திக்கு அவ்வளவு ஆத்திரம் சகுந்தலாவின் மீதே.
அதை காட்ட முற்படாமல்.. மேலும் விசயத்தை வாங்கும் விதமாய் பார்வையை மட்டும் அவரிடம் வைத்து காத்திருந்தான் நடந்ததை முழுதாய் அறிய வேண்டி.
“ஜெகா அண்ணின்னு கத்துனதுல தா நா ரூம விட்டே வந்தேன்.. அவெ முகமெல்லா வெளிரி அவுங்க ரூமு கதவுகிட்ட நிக்கறத பாத்துட்டு..
எதுக்குடா கத்துனேன்னு கேட்டதுக்கு,
அண்ணி ட்ரஸ்ல ரத்தமுன்னு சொன்னான். யமுனாக்கு அப்போ தலைக்கு ஊத்தற நாளுன்னு எனக்கு தெரியுமே. அது ஏதாவது அவ துணியில ஆயி இந்த பய பாத்துட்டானோன்னு நினைச்சு,
நீ போய் உடுப்ப மாத்து நா என்னன்னு பாக்கறேன்னு சொல்ல, அவெ தயங்கி நின்னான்.
நாந்தா அதட்டி நீ போய் ட்ரஸ் மாத்துன்னு அனுப்பிட்டு அவுங்க ரூமுக்கு போனேன்.
ஆனா சத்தியமா அவ அப்படி ஒரு நிலையில கிடப்பான்னு நினைக்கலடா சக்தி..” என்றவருக்கு தொண்டை அடைத்தது அழுகையில்.
***
கட்டிலுக்கு அருகே நிலத்தில் ஒழுங்கின்றி கிடந்த யமுனாவையும் அவளின் பாதத்திலிருந்து வழிந்திருந்த ரத்தத்தையும் கண்டு சகுந்தலா பதறி, “ஆத்தே… யமுனா..!!!” என்றபடியே அவளிடம் ஓடியிருந்தார் வேகமாய்.
அருகே அமர்ந்து அவளின் உடையை ஓரளவு சீர் செய்து அவளை உசுப்ப அவளிடம் துளியளவும் அசைவே இல்லை.
அவளின் உடலோ நெருப்பென காய்ந்து கொண்டிருந்தது.
லேசான பயம் தொற்றிக்கொள்ள, “இந்தா யமுனா.. இங்கன பாரு.. அய்யோ.. நா என்ன பண்ணுவேன்..?” என பதறியவருக்கு, ‘என்ன செய்வது..?’ என்பதே தெரியவில்லை.
சகுந்தலாவின் அதட்டலுக்கு உட்பட்டு ‘அண்ணிக்கு என்னவாகியிருக்கும்..? எதனால் இப்படி..?’ என்ற யோசனையோடே உடை மாற்ற சென்ற ஜெகதீஷ்..
அவரின் பதட்டமான குரலில் மேல் சட்டையை கழட்டி விட்டு, பேன்ட்டை மாற்ற முயன்று கொண்டிருந்ததை விட்டுட்டு, “என்னாச்சு ம்மா..? அண்ணிக்கு என்ன..?” என கேட்டுக்கொண்டே ஓடி வந்தான்.
“ஜெகா.. சீக்கிரமா ஓடிப்போய் தண்ணீ கொண்டாடா..” என சொல்ல,
யமுனாவின் முகம் பார்த்தவனுக்கு அவள் நிலை புரிய வேகமாய் கிச்சனை நோக்கி ஓடினான்.
சகுந்தலாவுக்கு யமுனாவின் நிலை அதீத பயத்தை கொடுக்க, ‘வாணிக்கு அழைத்து விசயத்தை சொல்லி விடலாம்..’ என நினைத்து, வேகமாக தனது அறைக்கு சென்றவருக்கு பதட்டத்தில், ‘போன் எங்கே வைத்தோம்..’ என்பதே மறந்து போனது.
அவர் அதை தேடிக்கொண்டிருக்க, தண்ணீரோடு வந்த ஜெகதீஷ் அம்மா அங்கு இல்லாததை கண்டுவிட்டு, அவனே உள்ளே சென்று அவளருகே மண்டியிட்டு அமர்ந்து கையில் சிறிது நீரை ஊற்றி யமுனாவின் முகத்தில் அடித்தான்.
முதல் இருமுறை எந்த அசைவும் காட்டாத யமுனா.. மூன்றாம் முறை லேசான முனங்கலை காட்ட,
“அண்ணீ.. இங்க பாருங்க.. நா தா ஜெகா.. கண்ண முழிச்சு பாருங்க..” என யமுனாவின் கன்னத்தில் லேசாக தட்டி ஜெகதீஷ் சொல்ல,
“ம்ம்..” என்ற முனங்கலே பதிலானது.
அவள் உதடுகள் வரண்டு போயிருப்பதை கண்டு, “தண்ணீ குடிக்கறீங்களா..?” என்றவன் அவளின் லேசான தலையாட்டலில் தண்ணீரை புகட்ட முனைய, யமுனா தலையை நிமிர்த்தாததால் தண்ணீர் மூக்கிற்குள் செல்வது போல ஆனது.
தண்ணீரை கொடுப்பதை அவன் நிறுத்தியதும் உதட்டில் பட்ட சில துளி நீருக்கு அவளின் நாக்கு வெளி வந்து நீரை துழாவதை கண்டவன்,
“அண்ணி இருங்க.. இப்படியே கொடுக்க முடியாது..” என்றவன் ஒரு கரத்தில் நீர் நிறைந்த சொம்பு இருந்ததால், அவளின் தலையை தன் வயிறோடு சேர்த்து பிடித்து தூக்கி மடியில் வைத்து தண்ணீரை மெல்ல அவளின் வாயில் ஊற்றினான்.
கஷ்டப்பட்டு இரு மடக்கு குடித்தவளுக்கு அப்போது தான் சுற்றமே உணர முடிந்தது. உணர மட்டுமே முடிந்ததே அன்றி அவளால் சுயமாய் செயலாற்ற முடியவில்லை.
இரண்டு வாய் உள்ளே சென்றதும் மீண்டும் வாந்தியாய் அது வெளியே வரமுயல, அவளை பிடித்திருந்த ஜெகதீஷிக்கு அவளின் ஓக்கரிப்புக்கு என்ன செய்வது..? என்பதே புரியாத நிலை.
பாவம் அவனும் சிறு பிள்ளை தானே.. பாலமுரளி ஒரு முறை சாப்பிட்டதும் இவ்வாறு செய்ய வாணி அவன் நெஞ்சையும், முதுகையும் தடவி ஆறுதல் செய்தது மனதில் எழ,
“ஒண்ணுமில்ல அண்ணி.. சரியாகிடும்..” என்றவன் கரம் அவளின் நெஞ்சுக்கு செல்லும் முன், அவனின் முதுகில் விழுந்தது பலமான அடி ஒன்று.
“எடுபட்ட பயலே.. என்ன வேலடா பாக்கறே..?!!” என்ற கர்ஜனையான குரல் குழறலோடு வெளி வந்தது.
வெளியே சென்ற ஜெயசீலன் யமுனாவின் பேச்சில் விளைந்த எரிச்சலில், மதுப்பிரியராய் மாறி வந்து நிற்க.. அவர் கண்டது எல்லாமே தவறான கோணமாய் போனது யார் செய்த பிழை..?
இத்தனை நாள் அடிக்கு தப்பிய பிள்ளை.. அவர் அடித்த ஒற்றை அடியில் நடுங்கி போய் அந்த அறையின் மூலையில் போய் விழுந்திருந்தான் அழுகையோடு.
அவன் வைத்திருந்த நீரோ மொத்தமாய் கவிழ்ந்து போயிருந்தது யமுனா அருகே.
அவன் தாங்கி பிடித்திருந்தது நழுவியதும், நிலத்தில் யமுனாவின் தலை நங்கென வீழ.. ஏற்கனவே சுழன்றி கொண்டிருந்த தலை.. மேலும் சுழன்று மீண்டும் மயக்கத்திற்குள் கொண்டு செல்ல ஆரம்பித்தது.
“ச்சை.. இந்த வயசுல இப்புடி ஒரு கருமத்தை எல்லா கண்ணால பாக்கோனுமுன்னு என்ற தலையெழுத்து.
வயசு வித்தியாசோ பாக்காம.. ஒட்டிட்டு ஒரசின்னு திரியும் போதே நினச்சேன்.. இப்படி ஒரு காருமாந்திரம் சீக்கிரமே நடக்குமுன்னு..
ஏன்டா உன்ற வயசென்ன.. நீ செய்யற காரியமென்ன..?” என்ற படி ஜெகதீஷை இழுத்து மறுபடியும் ஒரு அடி அடித்தார் யமுனாவை கண்டு காறி உமிழ்ந்த படி.
“காலைல பெரிய உத்தமி மாதிரி பேசினே.. இதான் உங்க ஊட்டு உத்தமி தனமோ.. த்தூ..
பகலுக்கு சின்னவன்.. இராவுக்கு பெரியவன்னு ரெட்ட மாட்ட கட்டு மேய்க்கற அளவு போச்சோ..
அதான கம்பெனியில இஷ்டம் போல ஆளு கிடச்சிருக்கும்.. இங்கே அதுக்கு வழியில்ல..” என்றவரின் வாயிலிருந்து அடுத்த நிமிடம் கடைவாய் பல் கழண்டு தூரம் சென்று விழுந்திருந்தது.
வாயிலிருந்து ரத்தம் ஊற்றெடுக்க.. ஒரு கணம் இருண்டு பின் மீண்ட பார்வையை சரி படுத்தி நிமிர்ந்து பார்க்க..
காளியின் சொரூபமாய் நின்றிருந்தார் சகுந்தலா.
error: Content is protected !!